உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g89 2/8 பக். 12-15
  • மதம் காட்சியிலிருந்து மறைகிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மதம் காட்சியிலிருந்து மறைகிறதா?
  • விழித்தெழு!—1989
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • முன்னாள் சர்ச்சுகள் இப்பொழுது உணவுவிடுதிகள், கடைகள்
  • குறையும் குருவர்க்கமும் பிளவுபட்டிருக்கும் மந்தைகளும்
  • மதம் ஏன் மறைகிறது?
  • ஐரோப்பாவில் மதத்திற்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
  • பாதுகாப்பைக் கண்டடைய நீங்கள் என்ன செய்யலாம்?
  • சர்ச்சுகளின் கதி என்ன?
    விழித்தெழு!—2007
  • மதம் ஏதாவது நன்மை உண்டா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • பகுதி 22: 1900 முதல்பொய் மதம்—அதன் கடந்த காலத்தால் மேற்கொள்ளப்படுகிறது!
    விழித்தெழு!—1991
விழித்தெழு!—1989
g89 2/8 பக். 12-15

மதம் காட்சியிலிருந்து மறைகிறதா?

நெதர்லாந்து விழித்தெழு! நிருபர்

ஐரோப்பாவிலுள்ள அனேகர் அந்தக் கேள்வியை எதிர்ப்படுகின்றனர், அது டெ டிஜ்ட் (De Tijd) என்ற டச் வார இதழில் தோன்றியது. அந்தப் பத்திரிகை மேலும் சில கேள்விகளை எழுப்பியது: ஐரோப்பாவில் மதம் மரிக்கிறது என்பது உண்மைதானா? மதத்தின் எதிர்காலம் என்ன என்பது குறித்து சராசரி மனிதன் என்ன நினைக்கிறான்?

மதத்தின் இன்றைய நிலை குறித்து உங்களுக்கும் கேள்விகள் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பாரம்பரியமாக வந்த மதம் பலமான பிடியைக் கொண்டிருக்கும் ஐக்கிய மாகாணங்களிலுங்கூட தொலைக்காட்சி சுவிசேஷகர்களைப்பற்றிய ஊழல்களும் கத்தோலிக்க மதத்திலுள்ள பிளவுகளும் மக்கள் மதத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கையை அசைத்துவிட்டிருக்கிறது. அனேக கத்தோலிக்க நாடுகளில், கடந்த இருபது ஆண்டுகளில், சர்ச் ஆராதனைக்கு ஆஜராயிருப்பவர்களின் எண்ணிக்கையில் சரிவு கவனிக்கப்பட்டிருக்கிறது.

இங்கு நெதர்லாந்தில், ஞாயிறன்று எவரையும் பாதிக்காதளவுக்கு தெருவில் ஒரு பீரங்கியை முழக்கலாம்—அனைவரும் சர்ச்சில் இருந்தனர்—அப்படிப்பட்டக் காலமும் இருந்தது! இப்பொழுது வெகு சிலரே சர்ச்சுக்குச் செல்லுகின்றனர். என்ன ஏற்பட்டுவிட்டது?

முன்னாள் சர்ச்சுகள் இப்பொழுது உணவுவிடுதிகள், கடைகள்

கடந்த பத்து ஆண்டுகளில், நெதர்லாந்திலுள்ள இரு பெரிய மதத் தொகுதிகள், ரோமன் கத்தோலிக்க சர்ச்சும் டச் சீர்திருத்த சர்ச்சும் அனேக அங்கத்தினர்களையும் சர்ச்சுக்குச் செல்பவர்களையும் இழந்துவிட்டிருக்கிறது. இந்தச் சர்ச்சுகளுக்கு 19 சதவிகித விசுவாசிகள்தான் செல்கின்றனர். இது கத்தோலிக்க சர்ச்சுக்கு 1967-லிருந்த ஆஜர் எண்ணிக்கையாகிய 85 சதவிகிதத்தில் சரிவைக் குறிக்கிறது!

இதன் விளைவாக அனேக சர்ச்சுகள் தேவைப்படாதவையாகிவிட்டிருக்கின்றன. சில சர்ச்சுகள் இடிக்கப்பட்டுமிருக்கின்றன, மற்றவை வேறு உபயோகத்திற்காக விற்கப்பட்டிருக்கின்றன. எனவே ரோட்டர்டாமில் அல்லது ஆம்ஸ்டர்டாமிலுள்ள முன்னாள் சர்ச் கட்டிடத்திற்குள் நீங்கள் நடந்து செல்லுகையில், அது இப்பொழுது ஒரு பல்பொருள் சிறப்பங்காடியாக, ஒரு பூக் கடையாக, ஒரு ஜவுளிக் கடையாக, ஓர் உணவுவிடுதியாக, ஒரு சைக்கிள் கடையாக, ஒரு விளையாட்டு அரங்காக, அல்லது ஒரு நடன மகிழ்மன்றமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம். இது அனேகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சர்ச்சுகளுக்குள்ளிருக்கும் இந்த மந்தநிலையின் பாதிப்பு அதன் பாதிரிகளையும் பிரசங்கிகளையும் விட்டுவைக்கவில்லை.

குறையும் குருவர்க்கமும் பிளவுபட்டிருக்கும் மந்தைகளும்

அனேக அங்கத்தினர்கள் சர்ச்சுகளை விட்டுவிட்டதுபோல அனேக பாதிரிகளும் பிரசங்கிகளுங்கூட தாங்கள் பெற்ற அழைப்பை நிராகரித்துவிட்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் கத்தோலிக்கப் பாதிரிகளின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 900 குறைந்துவிட்டது. அதே சமயத்தில், இந்த “வாழ்க்கைப்பணியின்” வாய்ப்பு குறைந்துவிட்டிருப்பதால் வெகு சிலரே கூட்டப்பட்டிருக்கின்றனர். உதாரணமாக, நெதர்லாந்து கன்னியாஸ்திரிகளில் 89 சதவிகிதத்தினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

சர்ச்சுக்குள் எதிர்ப்படும் பிரச்னைகள் இனிமேலும் மேற்கொள்ளமுடியாத நிலையிலிருப்பதை குருவர்க்கம் பார்க்கிறது. சிலர் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மனநல மருத்துவ சிகிச்சைப் பெறவேண்டியதாயிருக்கிறது. அப்பெல்டூர்ன்ஸ் கூரன்ட் (Apeldoornse Courant) என்ற தினசரி இப்படியாகக் கூறுகிறது: “அவர்கள் தங்களுடைய பிரசங்கத்தில் எப்பொழுதும் இருந்தது போலவே இருக்க முற்படும்போது, சபையிலிருக்கும் முன்னேற விரும்பும் அங்கத்தினர் இடறலடைகின்றனர். தங்களை முன்னேற்றப் பாதையில் அமைத்துக்கொள்வார்களானால், இந்தக் காரியம் பைபிளுக்கு அதிக நெருக்கமாக இருக்கும் அங்கத்தினர்களின் குறைகண்டுபிடிப்புக்கு வழிவகுக்கிறது. ஒரு பிரசங்கியோ அல்லது பாதிரியோ இடைநிலையைத் தெரிந்துகொள்ளும்போது, முழு சபையாலும் புறக்கணிக்கப்படும் ஆபத்தை எதிர்ப்படுகிறார்.”

இந்தச் சம்பவங்கள் டச் சமுதாயத்தின்பேரில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான். 1985-ல் டச் சமுதாய கலாச்சார திட்ட அலுவலகம் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பு காண்பிப்பதாவது, மக்கள் தொகையில் பாதிக்குமேற்பட்டவர்கள் தங்களை மதசார்பற்றவர்களாகக் கருதுவது இதுதான் முதல்முறை.

சர்ச்சுக்குள் பிளவுகள், பெரும்பாலும் அரசியல் பிரச்னைகளின்பேரில் அமைந்த பிளவுகள், பலரை சந்தேகத்திற்கு வழிநடத்தியிருக்கிறது. வித்தியாசமான தென் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் “விடுதலை இயக்கங்களுக்கு” சர்ச்சின் ஆதரவு இருப்பது ஏராளமான உட்பூசலுக்கு வழிநடத்தியிருக்கிறது. ஆயுத வன்முறைக்கு சர்ச் பணம் பயன்படுத்தப்படக்கூடாது என்ற குறிக்கோளின் கீழ் ஒரு தேசிய விளம்பரத் திட்டமும் இருந்தது.

காரியங்கள் அவ்விதமாக நடக்கும்போது நீங்கள் எப்படி பிரதிபலிக்கிறீர்கள்? இந்த இக்கட்டான காலகட்டத்திலிருந்து சர்ச்சுகள் எந்தவிதமான பாதிப்புமின்றி வெளிவரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதற்கு விடை காண, இன்றைய மத குழப்பத்துக்கான அடிப்படைக் காரணத்தை ஆழத் தோண்டிப் பார்க்க வேண்டும்.

மதம் ஏன் மறைகிறது?

சரித்திராசிரியர்கள், சமுதாய வளர்ச்சி, இயல்பு, சட்டங்களின் ஆய்வாளர்கள், இறைமையியல் வல்லுநர்கள் ஆகியவர்கள் சர்ச்சுகளின் தற்போதைய நிலைமைக்கான காரணங்கள் குறித்து கருத்து வேற்றுமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் இந்தப் பொருளாசை மிகுந்த சமுதாயத்தின் சுகபோகத்தையும் அதிகரித்துக்கொண்டிருக்கும் மக்கள்தொகையையும் காரணம் காட்டுகின்றனர். இது 2 தீமோத்தேயு 3:1, 2, 4-லுள்ள பவுல் அப்போஸ்தலனின் வார்த்தைகளை நினைவுக்குக் கொண்டுவருகிறது: “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில் மனுஷர்கள் தற்பிரியராயும் பணப்பிரியராயும், . . . தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் இருப்பார்கள்.”

மற்றவர்கள் ஐரோப்பிய சரித்திரத்தின் அடிப்படயில் காரியங்களை விளக்க முற்படுகின்றனர். 16-வது நூற்றாண்டு மதப் போர்கள் முதல் மதம் உட்பட்ட 20-வது நூற்றாண்டு உலக மகா யுத்தங்கள் வரையுமான சரித்திரம் இரத்த வெள்ளத்திலும் கண்ணீர் கடலிலும் மூழ்கியிருக்கிறது. இவையனைத்துமே எல்லாவித தத்துவத்திலும், இறைமையியலிலும் கருத்துகளிலும் ஆழ்ந்த ஐயப்பாட்டை விட்டுச்சென்றிருக்கிறது. ஏன், இவைதானே போர்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் வன்முறைச் செயல்களுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.

இன்றைய சர்ச்சுகளில் எதிர்காலத்தின் பேரில் நம்பிக்கையான ஒரு மனநிலை குறைவுபடுவதைப் பலர் காண்கின்றனர். ஜெர்மனியைச் சேர்ந்த மன்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் ரோமன் கத்தோலிக்க இறைமையியல் வல்லுநராகிய பேராசிரியர் J.B. மெட்ஸ் கூறினார்: “நம்முடைய மேற்கத்திய மதபக்தி அடிப்படைவரை மதச்சார்பற்றதாகிவிட்டிருக்கிறது. மேசியானிய தடயத்தைச் சற்றேனும் காண்பதற்கில்லை. கடவுளுடைய ஆட்சி அதிலிருந்து மறைந்துவிட்டது. அவர் நம்முடைய சர்ச்சுகளில் அல்லது இறைமையியல், சமூகம் மற்றும் அரசியல் பிரச்னைகளில் எவ்வித பங்கையும் கொண்டில்லை.”

கூடுதலாக, இந்த நூற்றாண்டில் ஆரம்பித்த இரண்டு உலக மகா யுத்தங்களின் செல்வாக்கும் உட்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது இயங்கிய கான்சன்ட்ரேஷன் முகாம்களின் அடையாளச் சின்னமாக இருக்கும் ஆஷ்விட்ஸ், சர்ச்சுகளைக் குறைகூறுவதற்கான காரணத்தைக் கூட்டியிருக்கிறது. ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் தலைவராக போப் பயஸ் XII சிக்கலான சமயங்களில் அமைதலாக இருந்ததை அனேகரால் ஜீரணிக்க முடியவில்லை.

இதைக் கவனிக்குமிடத்து, பெரும்பான்மையான மக்கள் சர்ச்சிலும் அதன் தலைவர்களிலும் நம்பிக்கை இழந்துவிட்டிருக்கின்றனர். இந்தளவுக்குக் காரியங்கள் சென்றுவிட்டிருப்பதைக் காணும் நீங்கள் தனிப்பட்டவர்களாய் எவ்விதம் நோக்குகிறீர்கள்? அவை உங்களை வித்தியாசமாக நடந்துகொள்ளச் செய்திருக்கின்றனவா, அல்லது பலர் சொல்லுவது போல், ‘நான் இந்த நிலைமையைக் கடந்துவிடுவேன்,’ என்று விவாதிக்கிறீர்களா? இருந்தாலும், மற்றொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, ஓர் அணுஆயுத பேரழிவும் உயிரின வாழ்க்கைச் சூழலில் நெருக்கடி நிலையும் உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருப்பதை நீங்கள் காண முடிகிறது என்பதில் ஐயமில்லை. இக்காரணத்தினிமித்தம் பின்வரும் கேள்விகளின் பேரில் நீங்கள் சிந்தனை செலுத்துகிறீர்கள் என்பதிலும் ஐயமில்லை: ‘எனக்கும் என்னுடைய பிள்ளைகளுக்கும் உண்மையில் எப்படிப்பட்ட எதிர்காலம் வைக்கப்பட்டிருக்கிறது?’ ‘எதிர்காலத்தைக் குறித்ததில், நமக்கு அளித்திட மதத்திடம் ஏதாவது உண்டா?’

ஐரோப்பாவில் மதத்திற்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?

யூத-கிறிஸ்தவ பாரம்பரியம் ஒரு சிறு காலப்பகுதிக்குள் இல்லாமற்போய்விடக்கூடும் என்று பலர் கருதக்கூடும். ஐரோப்பா ஏற்கெனவே கடந்துபோன கிறிஸ்தவ சமுதாயமாக ஆகிவிட்டிருக்கிறது என்று சில இறைமையியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இயேசு கிறிஸ்து கற்பித்த விசுவாசத்தின் ஊற்றுமூலமாக விளங்கும் பைபிளைப் பற்றியதென்ன? இந்தப் பொருளின் பேரில் ஏதாவது குறிப்பிடத்தக்க விதத்தில் சொல்வதற்கு ஒருவர் இருக்கிறாரென்றால், அவர் கிறிஸ்தவ மதத்தைத் தொடங்கி வைத்தவராகிய இயேசு கிறிஸ்தவாக மட்டுமே இருக்கமுடியும்.

ஒருவர் பைபிளைப் படிக்கும் போது, அதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு 1 பேதுரு 1:24, 25-ல் சொன்ன காரியந்தானே நினைவுக்கு வருகிறது: “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிரிந்தது. கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.” பைபிள் எப்பொழுதுமே நிலைத்திருக்கும், அதை அழிப்பதற்காக அதன் விரோதிகள் எடுத்துக்கொண்ட முயற்சி எதுவாயிருந்தபோதிலும், அதில் அவர்கள் வெற்றிபெறவில்லை என்பதற்குச் சரித்திரம் சான்றளிக்கிறது. 19 நூற்றாண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்த இயேசு கிறிஸ்து கற்பித்த போதனைகளுக்கு என்ன ஏற்பட்டிருக்கிறது? இந்தப் போதனைகளில் எத்தனைப் போதனைகளை ஒருவர் பல்வேறு மதங்களில் காணக்கூடும்?

ஒரு கிணற்றருகே சமாரிய பெண் ஒருத்தியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, தூய வணக்கத்திற்கான தகுதிகள் என்ன என்பது குறித்து இயேசு விளக்கினார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வத்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.” “ஆவியோடும் உண்மையோடும்” செய்யப்படும் இந்த வணக்கம் எப்பொழுதுமே நிலைத்திருக்கும்.—யோவான் 4:23, 24.

ஆனால் மறையப்போவது என்ன? பிளவுபட்டிருக்கும் கிறிஸ்தவமண்டலம், அரசியல் உலகின் நண்பன். அது ஏன் மறைந்திடவேண்டும்? ஏனென்றால் அது பின்வரும் இந்த எச்சரிப்பை அசட்டை செய்திருக்கிறது: “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.”—யாக்கோபு 4:4.

பைபிளின் கடைசி புத்தகத்தில், வெளிப்படுத்துதல் 17, 18 அதிகாரங்களில், பொய்மத உலகப் பேரரசு ஒரு வேசியாக, “மகா பாபிலோனாக” அடையாள அர்த்தத்தில் விவரிக்கப்படுகிறது. வெளிப்படுத்துதல் 17:16 மற்றும் 18:8, அரசியல் கூறுகள் அவளை எப்படி அழிக்கப்போகின்றன, அவளுடைய பாவங்களில் பங்குகொண்ட அனைவரும் எப்படி அவளுக்கு வரும் வாதைகளிலும் பங்குபெற போகின்றனர் என்று விளக்குகிறது. எனவேதான் 18-ம் அதிகாரத்தின் 4-ம் வசனத்தில் பின்வரும் புத்திமதி கொடுக்கப்படுகிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.” அந்தச் சமயத்தில் செப்பனியா தீர்க்கதரிசனமும் நிறைவேறும்: “அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.”—செப்பனியா 3:9.

அக்காட்சியில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதைக் காண முடிகிறதா? நீங்கள் யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளும் மக்களுடன் சேர்ந்து சேவிக்கிறீர்களா? இதைச் செய்யக்கூடிய நிலையிலிருப்பதற்கு என்ன தேவைப்படுகிறது?

பாதுகாப்பைக் கண்டடைய நீங்கள் என்ன செய்யலாம்?

கிறிஸ்தவமண்டலமும் அத்துடன் அனைத்து பொய் மதங்களும் ஐரோப்பாவிலிருந்தும் உலகத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் நிர்மூலமாகப்போகிறது என்றாலும், உண்மைக் கிறிஸ்தவம் என்றென்றும் நிலைநிற்கும். தீர்வான கேள்வி என்னவென்றால், கிறிஸ்தவமண்டலம் அழிக்கப்படும்போது, நீங்கள் தப்பிப்பிழைப்பதற்கேதுவாக உங்களுடைய விசுவாசம் தகர்ந்து போகுமா அல்லது அசையாது பலமாக நிற்குமா? தப்பிப்பிழைப்பதற்கு என்ன அவசியம்? நீங்கள் ‘பிதாவை ஆவியோடும் உண்மயோடும் தொழுதுகொள்ள வேண்டும்.’ சிருஷ்டிகரை அவருடைய வார்த்தையாகிய பைபிள் மூலம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் அவர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். “உம்முடைய வசனமே சத்தியம்,” என்று அந்த வார்த்தையைக் குறித்து இயேசு கூறினார். (யோவான் 17:17) பூமியில் நீங்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலுஞ்சரி, தப்பிப்பிழைப்பதைக் கூடிய காரியமாக்கும் வழி பைபிளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (g88 2⁄8)

[பக்கம் 15-ன் படம்]

ஹுர்னிலுள்ள சர்ச், இப்பொழுது குடியிருப்புகளையும் ஒரு துணிக்கடையையும் கொண்டிருக்கிறது

[பக்கம் 15-ன் படம்]

ஆர்ன்ஹெம்மிலுள்ள லுத்தரன் சர்ச், இப்பொழுது சரக்குக் கிடங்காகவும், திரையரங்காகவும், நடன மகிழ்மன்றமாகவும் பயன்படுத்தப்படுகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்