அணு ஆயுதங்களுக்கு ஒரு முடிவு எப்படி?
நமது சகாப்தம் கவலைகள் நிறைந்த ஒன்றாயிருக்கிறது. யுத்தத்தோடு விஞ்ஞானம் திருமணம் செய்திருப்பது, நினைத்துப்பார்க்க முடியாத அழிக்கும் ஆற்றலுள்ள, மற்றும் முழு மனிதவர்க்கத்தையும் அழித்துவிடும் சக்தி படைத்த கண்மூடித்தனமான கொலையாளியுமாகிய ஆயிரக்கணக்கான ஆயுதங்களை உண்டாக்கியிருக்கிறது.
மனிதன் உடன் மனிதனைக் கொல்வதற்கு அவ்வளவு விருப்பம் கொண்டிருப்பது என்பது அமைதியை இழக்கச் செய்கிறது. என்றபோதிலும், மனிதனின் கொலை செய்யும் நோக்குநிலை பெரும்பாலும் ஆரம்பத்திலிருந்தே வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. பைபிள் அறிக்கையிடுகிறது: “அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி அவனைக் கொலை செய்தான்.” (ஆதியாகமம் 4:8) அதிலிருந்து மனிதன் மனிதனைக் கொன்று கொண்டிருக்கிறான். 1945-ம் ஆண்டிலிருந்து மனிதன் அணு ஆயுதங்களை யுத்தத்தில் பயன்படுத்துவதிலிருந்து தன் கையை விலக்கியிருக்கிற போதிலும், நமது நூற்றாண்டு மிகப் படுகொலை நூற்றாண்டாக சரித்திரத்தில் இருக்கிறது. தெளிவாகவே, பிரச்னை ஆயுதங்களால் மட்டுமன்று.
காரணங்களும் பரிகாரங்களும்
போரிடுவது மனிதனாக இருப்பதனால் மனித இயல்பில் தான் அதற்கான கார ணம் கண்டுபிடிக்கப்படக்கூடும் என்று சில கல்விமான்கள் உணருகின்றனர். இந்நோக்குநிலையில். மனிதர் சுயநலத்தாலும், முட்டாள்தனத்தாலும், தவறாக வழிநடத்தப்பட்ட ஆக்கிரமிப்புக்குரிய உந்தும் சக்தியாலும் போரிடுகின்றனர். அளவீடுகள் மாறுபடலாம், ஆனால் மனிதனின் பழக்க வழக்கங்களையும், காரியங்களை நோக்கும் விதத்தையும் மாற்றுவதன் மூலமாக மட்டுமே சமாதானம் வரக்கூடும் என்று பலர் உணருகின்றனர்.
யுத்தங்கள் நாடுகளுக்கிடையில் நடப்பதனால், யுத்தத்தின் காரணங்கள், சர்வதேச அரசியல் ஒழுங்கு முறையின் அமைப்பில் சார்ந்திருக்கின்றன என்று பிறர் கூறுகின்றனர். ஆட்சிசெய்யும் ஒவ்வொரு மாநிலமும் அதனதன் சொந்த நோக்கங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப நடப்பதனால், தவிர்க்க முடியாத அளவில் சண்டைகள் நிகழ்கின்றன. வேறுபாடுகளை ஒன்று சேர்க்கும் ஒத்த, நம்பிக்கையான வழி இல்லாததால் போர் மூளுகிறது.
யுத்தத்திற்கான காரணங்களைப் பற்றிய தமது ஆராய்ச்சியில் கல்விமானாகிய கென்னத் வால்ட்ஸ், “உலகப் போருக்குப் பரிகாரம் ஓர் உலக அரசாங்கமே” என்று கவனித்திருக்கிறார். ஆனால் அவர் மேலும் கூறுகிறார்: “அப்பரிகாரம் தர்க்கரீதியில் தாக்கப்பட முடியாததாக இருந்தபோதிலும், நடைமுறையில் பெற முடியாததாய் இருக்கிறது.” மற்றவர்களும் ஒத்துக் கொள்கின்றனர். ஆம்னி பத்திரிகையில் ஆசிரியர் பென் போவா கூறினார்: “ஆயுதங்களைக் கட்டுப்படுத்தவும், போரை வராதபடி தடுக்கவும் கூடிய ஒரே ஓர் அரசாங்கமான நாடுகள் ஒன்றுபட வேண்டும்.” அப்படியிருந்தபோதிலும், அவர் மேலும் கூறுகிறார்: “அநேக மக்கள் அத்தகைய உலக அரசாங்கத்தை, போலியான ஓர் எதிர்பார்ப்பாகவும், ஒருபோதும் மெய்யாகாத விஞ்ஞானக் கதை போன்ற கனவாகவுமே கருதுகின்றனர்.” இந்தச் சோகமான முடிவை ஐக்கிய நாடுகளின் தோல்வியும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நாடுகள் தங்கள் ஆட்சி செய்யும் உரிமையை இந்த அமைப்பிற்கோ அல்லது இதுபோன்ற வேறொரு அமைப்பிற்கோ விட்டுக் கொடுக்க விரும்பாதிருந்திருக்கின்றன!
உலக அரசாங்கம்—மெய்யான ஒன்று!
என்றபோதிலும், கடவுள் தாமே ஒரு மெய்யான உலக அரசாங்கத்திற்காக நோக்கம் கொண்டுள்ளதை பைபிள் நிச்சயமாய்க் கூறுகிறது. இலட்சக்கணக்கானோர் கர்த்தருடைய ஜெபத்தை சொல்கையில் தங்களை அறியாமலேயே இந்த அரசாங்கத்திற்காக ஜெபித்திருக்கின்றனர்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டங்களில் செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) அந்த ராஜ்ய அரசாங்கத்தின் தலைவர் சமாதானப் பிரபுவாகிய இயேசுகிறிஸ்து ஆவார். அந்த அரசாங்கத்தைக் குறித்து பைபிள் வாக்குத்தத்தம் அளிக்கிறது, “அது அந்த ராஜ்யங்களையெல்லாம் (அல்லது மனித அரசாங்கங்களை) நொறுக்கி நிர்மூலமாக்கும்.”—தானியேல் 2:44.
இந்த உலக அரசாங்கம் மெய்ச் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வருவது ஆயுதப் பரிகரணத்தால் அல்ல, அல்லது ஒரு நவீன முறையில் அமைந்த உயர்ந்த தொழில்நுட்ப இராணுவ ஆயுதங்களாலோ அல்லது ஆட்டங்கொள்ளும் அரசியல் உடன்படிக்கைகளினாலோ அல்ல. சங்கீதம் 46:9 தீர்க்கதரிசனமாகக் கூறுவது யாதெனில், யெகோவா தேவன் “பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; விலை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.” இது அணு ஆயுதங்கள் உட்பட எல்லா ஆயுதங்களின் அழிவையும் குறிக்கும்.
ஆனால் போர்த்தன்மை கொண்டுள்ள மனிதனைப் பற்றி என்ன? கடவுளின் பரலோக அரசாங்கத்தின் கீழ் பூமியின் குடிகள் “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” (ஏசாயா 2:4) 30 இலட்சம் ஜனங்கள் இன்று ஏற்கெனவே இந்தப் பைபிள் வாக்கியத்தின்படி வாழ்கின்றனர். அவர்களே யெகோவாவின் சாட்சிகள்.
இச்சாட்சிகள் 200-க்கும் மேலான நாடுகளில் வாழ்ந்து வரும் வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாவர். மெய்க் கிறிஸ்தவர்களாவதற்கு முன்னால் அவர்களில் சிலர் போர்த் தன்மையுடன், ஒருவேளை கெட்டவர்களாகவும் இருந்தனர். ஆனால் கடவுளைப் பற்றிய அறிவை எடுத்துக் கொண்டிருப்பதன் விளைவாக, அவர்கள் இப்போது ஒருவருக்கொருவர் விரோதமாக அல்லது எவரொருவருக்கும் விரோதமாக ஆயுதங்களை எடுக்க மறுக்கின்றனர். அரசியல் சண்டைகளை எதிர்ப்படுகையில், அவர்களது நடுநிலைத்தன்மை, வரலாற்றுப் பதிவுக்குரிய விஷயமாயிருக்கிறது. சர்வதேச அளவில் யெகோவாவின் சாட்சிகள் எடுத்திருக்கும் சமாதான நிலைநிற்கையானது, யுத்தத்திலிருந்தும், அணு ஆயுதங்களிலிருந்தும் விடுபட்ட ஓர் உலகம் கூடிய காரியம் என்ற உண்மைக்குச் சாட்சிபகருகிறது.
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான மக்கள் அணு சகாப்தத்தில் பிறந்தவர்களாய், அணு யுத்தத்தால் மரிக்காவிட்டாலும், அணு சகாப்தத்தில் மரிப்பதை எதிர்பார்த்திருக்கின்றனர். அத்தகைய விசனமான நோக்குநிலையை யெகோவாவின் சாட்சிகள் பகிர்ந்து கொள்கிறதில்லை. அவர்களது நம்பிக்கை, பொருத்தமாகவே கடவுளாகிய யெகோவா தேவனிலும், அவருடைய ராஜ்யத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது. அவரால் “கூடாத காரியம் ஒன்றுமில்லை.”—லூக்கா 1:37. (g88 8⁄22)
[பக்கம் 9-ன் படம்]
போராயுதங்களை கடவுள் தாமே முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பைபிள் தீர்க்கதரிசனம் கூறுகிறது
[பக்கம் 10-ன் படம்]
கடவுளின் பரலோக அரசாங்கத்தின் கீழ் பூமியானது போரிலிருந்தும், அழிக்கும் தன்மையுள்ள ஆயுதங்களிலிருந்தும் விடுவிக்கப்படும்