பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குத் தேவைப்படுவது என்ன?
ஒரு பிள்ளையினுடைய கல்வியின் வெற்றி, அவன் பெற்றுக் கொள்ளும் மதிப்பெண்களால் மட்டுமே அளக்கப்படக்கூடாது. அதிக முக்கியத்துவமுடையதாயிருப்பது, அவன் வளர்த்துக் கொள்ளும் மதிப்பீடுகளும், அவனுடைய ஒழுக்க தராதரங்களும் அவனுடைய நடத்தையும் அவனுடைய சிந்தனையுமே ஆகும். ஆனால் இந்த விஷயங்களில் பிள்ளையின் வளர்ச்சிக்கு யார் முக்கிய உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்?
“பெற்றோர்” என்பதாக அனுபவமுள்ள பள்ளி ஆலோசகர் ஒருவர் பதிலளிக்கிறார். “அறிவிலும், சரீரத்திலும் உணர்ச்சிகளிலும் நன்றாக முதிர்ச்சியுற்ற பொறுப்புள்ள இளம் மனிதர்களை உண்டுபண்ணுவதில் பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பதே முறைப்படியான கல்வியின் முக்கிய நோக்கமாகும்.”
நல்ல ஒழுங்குள்ள இளம் மனிதர்களை உருவாக்குவது என்ற காரியத்துக்கு வருகையில் எது செல்லும் எது செல்லாது என்பதை இப்படிப்பட்ட பள்ளி ஆலோசகர்கள் பொதுவாக அறிந்தவர்களாக இருக்கிறார்கள். மற்றொரு ஆலோசகரான ராடி கேமரான், பல ஆண்டுகளினூடே நூற்றுக்கணக்கானவர்களோடு செயல் தொடர்பு கொண்டிருந்திருக்கிறார். “வெற்றிப் பெற பிள்ளைகளுக்கு உண்மையில் அதிகமாக தேவைப்படுவது என்ன?” என்பதாக விழித்தெழு! நிருபர் அவரைக் கேட்டார்.
ஒரு கணம் யோசித்துவிட்டு, அவர் கூறிய பதில்: “பிரச்னையுள்ள ஒரு பிள்ளையை நீங்கள் காட்டுங்கள். பிரச்னையுள்ள பெற்றோர்களை நான் உங்களுக்கு காட்டுவதற்கான சாத்தியம் மிகமிக அதிகமாகும்.” இப்படிப்பட்ட பெற்றோர்களோடு பேசிய அனுபவங்களை நினைவுக்குக் கொண்டுவருகையில் அவர் சொன்னதாவது: “அவர்கள் ஏன் அத்தனை கடினமாக உழைக்கிறார்கள், ஏன் வீட்டுக்கு வெளியே அவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதை என்னிடம் விளக்க முயற்சி செய்கையில், அவர்கள் தாமே கொண்டில்லாத காரியங்களைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் கொடுக்க விரும்புவதாக எப்பொழுதும் சொல்கிறார்கள்.”
என்றபோதிலும், இத்தனை அநேகப் பெற்றோர்கள் அவர்கள் இளைஞர்களாயிருந்தபோது அனுபவித்திராத பொருளாதார வசதிகள்தானே பிள்ளைகளுக்கு உண்மையில் தேவைப்படுகிறதா? வெற்றிகரமான அனுசரணையுடன் நடந்துக் கொள்ளும் மாணவர்களாக ஆவதற்கு விலையுயர்ந்த கார்களும், நேர்த்தியான உடைகளும் ஆடம்பரமான விடுமுறையும் முக்கியமாக இருக்கின்றனவா? “ஓர் அணைப்பு, ஒரு முத்தம், அன்பு, அக்கறை—இவற்றில் என்ன தவறு இருக்கிறது?” என்பதாக கேமரான் மேடை சொற்பொழிவு பாணியில் கேட்கிறார். “இவைகளுக்கு ஒன்றும் செலவாகிறதில்லை, ஆனால் இந்தக் காரியங்களே பிள்ளைகளுக்கு வெகுவாக தேவைப்படுகின்றவையாகும்.”
நேரம், அன்பு, அக்கறை
கனிவுள்ள அன்பான அக்கறையே பிள்ளைகளின் அடிப்படை தேவையாகும். இதைப் பெற்றோர்கள் கொடுப்பதற்குரிய அதிக திறம்பட்ட வழி, தங்களையே கொடுப்பவர்களாக, தங்களின் நேரத்தைக் கொடுப்பவர்களாக, உண்மையான கட்டுப்படுத்தப்படாத அன்பையும் ஆழ்ந்த அக்கறையையும் காண்பிக்க வெட்கப்படாதவர்களாக இருப்பதாகும். ஒரு நபர் மற்றொருவருக்குக் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு “அங்கே இருப்பதாகும்” என்பதாக ஓர் எழுத்தாளர் குறிப்பிட்டார்.
பிள்ளைகளை வளர்ப்பது பற்றி நேரடியான உரையாடல் (Plain Talk About Raising Children) என்ற அதன் சிற்றேட்டில் அமெரிக்க தேசீய மனநல நிறுவனம், வெற்றிகரமான பெற்றோர்களை ஆய்வு செய்து அதன் விளைவுகளைக் குறித்து அறிவிப்பு செய்திருந்தது. அவர்கள் 21 வயதுக்கு மேற்பட்ட “நம்முடைய சமுதாயத்துக்கு ஏற்ற நல்ல ஒழுங்குள்ள ஆக்கத்திறமுள்ள பெரியவர்களாக” வளர்ந்திருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். நல்ல ஒழுங்குள்ள இந்த இளம் மனிதர்களின் பெற்றோரிடம், ‘தனிப்பட்ட உங்கள் அனுபவத்தை வைத்துப் பார்க்கையில், மற்ற பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன மிகச் சிறந்த ஆலோசனையைக் கொடுப்பீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. பலமுறை சொல்லப்பட்ட பதில்கள் இவையாகும்: ‘தாராளமாக அன்பு செலுத்துங்கள்,’ ‘ஆக்கப்பூர்வமான சிட்சையைக் கொடுங்கள்,’ ‘ஒன்றாகச் சேர்ந்து நேரத்தைச் செலவிடுங்கள்,’ ‘தவறானதிலிருந்து சரியானதை உங்கள் பிள்ளைக்கு கற்பியுங்கள்,’ ‘பரஸ்பர மரியாதையை வளர்த்துக் கொள்ளுங்கள்,’ ‘உண்மையாக அவர்களுக்குச் செவி கொடுங்கள்,’ ‘சொற்பொழிவாற்றுவதற்குப் பதிலாக அறிவுரைகளைக் கொடுங்கள்,’ ‘நிஜங்களை எதிர்ப்படுகிறவர்களாக இருங்கள்.’
இது கேட்பதற்கு சாதாரணமானதாக, பழம்பாணியானதாக இருக்கிறதா? என்றபோதிலும் பெற்றோர், தங்களைத் தாங்களே பின்வருமாறு கேட்டுக் கொள்வது நல்லது: ‘ஏதாவது ஒன்று பிரயோஜனமாக இருக்கிறதென்றால் பிரயோஜனமாயிராத ஒன்றிற்காக இதை ஏன் உதறித் தள்ள வேண்டும்?’ ஆம், நேரமும் அன்பும் அக்கறையும் குடும்பங்களை ஒன்றாகச் சேர்த்துப் பிடித்திருக்கும் பசையை உண்டுபண்ணுகின்றன. தங்களுடைய பிள்ளைகளின் இந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே பெற்றோரின் வீட்டுப்பாடமாக இருக்கிறது. அவர்களுடைய வேலையை நிறைவேற்றுவது, அவர்களுடைய பிள்ளைகள் வெற்றிகரமான மாணவர்களாகவும், பின்னர் வெற்றிகரமான பெரியவர்களாகவும் வளருவதற்கு உதவி செய்யும். பொருள் சம்பந்தமான காரியங்கள் வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும் என்பதாக நினைத்துக் கொண்டு இவைகளைக் கொடுப்பது போன்ற குறுக்கு வழிகளோ அல்லது மாற்றீடுகளோ கிடையாது.
செடிகளுக்கு ஒப்பாக இருக்கிறது
அநேக விதங்களில் பிள்ளைகள் செடிகளைப் போலவே வளர்ந்து முதிர்ச்சியடைகிறார்கள். ஒரு நல்ல பயிரை அறுவடைச் செய்ய என்ன தேவைப்படுகிறது என்பதை வெற்றிகரமான ஒரு விவசாயி அறிந்திருக்கிறான்—வளமான, பண்படுத்தப்பட்ட மண்; வெதுவெதுப்பான சூரிய ஒளி; தண்ணீர்; களையெடுத்தல்; பாதுகாப்பு செய்கிற கவனிப்பு. அநேகமாக வழிநெடுகிலும் அறுவடை வரையாக கடினமான காலங்களும் மனவேதனைகளுமே இருக்கின்றன. ஆனால் வெற்றிகரமான விவசாயிகள் கடினமான உழைப்பினால் பெற்றுக் கொண்ட பலன்களைக் காண்கையில் எவ்வளவு பெருமையாக இருக்கிறார்கள்!
நிச்சயமாகவே ஒரு மனித உயிர் விவசாயினுடைய அறுவடையைக் காட்டிலும் அதிக விலையேறப்பெற்றதாகும். ஆகவே விரும்பப்படும் பலனை குறைந்த அளவு முயற்சியிலேயே பெற்றுக் கொள்ள எதிர்பார்க்க வேண்டுமா? தேசீய மனநல நிறுவனம் சுற்றாய்வு செய்த பெற்றோர் கருத்துப்படியோ அல்லது கடந்த இரண்டு ஆண்டுகளாக விழித்தெழு! பேட்டி கண்ட அநேக பல பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்களின் கருத்துப்படியோ இது அப்படியில்லை.
ஒரு பிள்ளையை வளர்ப்பது பொறுப்பேற்றுக் கொள்வதை அர்த்தப்படுத்துகிறது என்பதை வெற்றிகரமான பெற்றோர் அறிந்திருக்கின்றனர். இல்லத்தின் சூழ்நிலைமை சரியானதாக, அன்பும் புரிந்து கொள்ளுதலும் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும். மென்மையாகவும் இடைவிடாமலும் பெற்றோர்கள் கற்பதற்கும் வாழ்வதற்கும் போற்றுதலை தங்கள் பிள்ளைகளில் வளர்ப்பது அவசியமாகும். பொறுமையாக அவர்கள் அனுசரணையோடு நடந்து கொண்டு விழிப்புள்ளவர்களாயிருந்து ஒவ்வொரு வாழ்க்கைப் பாதையையும் பாழாக்கும் கடினமான காலங்களையும் மனவேதனைகளையும் பயனுள்ள வகையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் இந்தக் காரியங்களைச் செய்வார்களேயானால் வெற்றிகரமான ஓர் இளம் மனிதனை அறுவடைச் செய்யும் வாய்ப்புகள் மிகவும் உறுதியாக இருக்கும். (g88 9⁄8)
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
‘பிரச்னையுள்ள ஒரு பிள்ளையை நீங்கள் காட்டுங்கள், பிரச்னையுள்ள பெற்றோர்களை நான் உங்களுக்குக் காட்டுவதற்கான சாத்தியம் மிகமிக அதிகம்’
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
நேரமும் அன்பும் அக்கறையும் குடும்பங்களை ஒன்றாகச் சேர்த்து பிடித்திருக்கும் பசையை உண்டுபண்ணுகின்றன