எப்படியாகிலும் வெற்றி ஒலிம்பிக் ஆவி?
கொரியா நாட்டவர் உறுதியாக இருந்தனர். ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கான டெலிவிஷன் பார்வையாளர்களின் இருதயத்தைக் கொள்ளைக் கொள்வதற்கு இருக்கும் இந்த வாய்ப்பை அவர்கள் இழக்கப்போவதில்லை.
1988 சியோல் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக்க அவர்கள் தங்கள் இருதயத்தையும் ஆன்மாவையும் அதில் ஊற்றினர். 26,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் உதவி செய்ய முன்வந்தனர். 2,40,000-க்கும் மேற்பட்ட சாதாரண குடிமக்கள் தெருக்களைச் சுத்தம் செய்தனர். புகைபோக்கியிலிருந்து வரும் புகை நீண்டதூர பந்தய ஓட்டக்காரர்களைப் பாதிக்காதபடிக்கு அவர்கள் 2,200 பொது குளியல் தொட்டிகளை மூடிவிட்டனர். ஆம், 160 தேசங்களிலிருந்து வந்து கலந்து கொண்ட 9,500-க்கும் மேற்பட்ட விளையாட்டுவீரர்களை வைத்து சரித்திரத்திலேயே மிகப்பெரிய இந்த ஒலிம்பிக்கை நடத்த அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை அலுவல்களை மாற்றிக் கொள்ள மனமுள்ளவர்களாக இருந்தனர். இதன் விளைவாக அவர்கள் விளையாட்டுகளை நடத்துவதற்கு திறமையுடைய வளர்ந்துவரும் தொழில்துறை வல்லரசு என்ற அந்தஸ்தைப் பெற்றனர்.
வர்த்தக டி.வி. ஒலிம்பிக்கை தன்வயமாக்குகிறது
விளையாட்டுகள், பெரிய அளவில், உலகம் முழுவதிலுமிருந்து தங்கள் வாடிக்கையாளர்களை அழைத்திருந்த கொரியா நாட்டு வியாபாரிகளுக்கு மிகப்பெரிய வெற்றியை அர்த்தப்படுத்தியது. அவர்கள் திறப்புவிழா நுழைவுச் சீட்டான “ப்ளாட்டினம் தாளுக்காக” ஒருவித வெறியோடு தேடிக்கொண்டிருக்க, உண்மை விலைக்கு மேல் இருபது மடங்கு கூடுதலான விலைக்கு முதல்-வகுப்பு நுழைவுச் சீட்டை விற்றுக்கொண்டிருந்தவர்களுக்குச் சுலபமாக பணம் சம்பாதிக்கும் வழியாக இது அமைந்துவிட்டது. ஒலிம்பிக் விளையாட்டுகள் கிழக்ணகத்திய ஐரோப்பிய தேசங்களோடு புதிய வியாபாரத் தொடர்புகளையும்கூட திறந்துவைத்தது. ஒலிம்பிக் விளையாட்டுகளால் புதிதாக தொழில் மயமாக்கப்பட்ட தேசங்களில் முதன்மைவாய்ந்த வல்லரசாக கொரியாவுக்குக் கிடைத்த விளம்பரம் அற்பமாகக் கருதப்படமுடியாது. லாஸ் ஆன்ஜலஸ் டைம்ஸ்படி “நூற்று எண்பது மணிநேர (NBC) தொலைக்காட்சி நிகழ்ச்சி” என்பதாக கொரியா நாட்டு வியாபாரி ஒருவர் குறிப்பிடுகிறார். “கொரியாவுக்கு இவ்வளவு விளம்பரத்தை வாங்க எவ்வளவு செலவாகும் என்பதை நினைத்துப் பார்க்க இயலாது.” அமெரிக்க தேசீய ஒளிப்பரப்புக் கம்பெனி (NBC) அந்தச் சலுகையைப் பெற்றுக் கொள்ள 480 கோடி ரூபாய் செலுத்தியதாகத் தெரிகிறது.
அந்தத் தொகயினால் அமெரிக்க இணைத்திட்ட ஒளிபரப்பு நிலையம் ஒலிம்பிக் விளையாட்டுகளில் செல்வாக்குப் பெற்றது. கொரியா ஒளிபரப்பு அமைப்பு செயலாட்சித் தலைவர் விழித்தெழு!விடம் சொன்னார்: “ஐக்கிய மாகாணங்களில் பிரபலமாக இருக்கும் முக்கிய விளையாட்டுகளில், இறுதியாட்ட அட்டவணைகளிலும் ஐக்கிய மாகாண விளையாட்டுவீரர்கள் பங்கேற்றப் போட்டிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. நியு யார்க்கில் காலைநேரத்தோடு ஒத்திருக்க, இப்படிப்பட்ட போட்டிகள் சியோல் நேரப்படி காலை 9-லிருந்து பிற்பகல் 2-க்கு மாற்றப்பட்டன.” இவையனைத்தும் விளையாட்டுகளில் பங்கேற்றவர்களுக்குப் பெருத்த அசெளகரியத்தைக் கொடுத்தன. இப்படியாக அதிகாலை விளையாட்டுகளுக்காக தயாராக, சிலர் காலை 5 மணிக்கெல்லாம் எழும்பவேண்டியிருந்தது. “ஒலிம்பிக் விளையாட்டுகள், முக்கியமாக டெலிவிஷன் உரிமைகளிலிருந்து வரும் கட்டணத்தினால் நடத்தப்படுவதாலும், இந்த நன்கொடையில் 75 சதவீதம் ஐ.மா. இணைத்திட்ட ஒளிபரப்பிலிருந்து வருவதாலும், இது புரிந்துகொள்ளப்படத்தக்கதே” என்பதாக செயலாட்சித் தலைவர் விளக்கினார். ஆனால் சராசரி பார்வையாளர் வீதம் எதிர்பார்த்ததற்கும் குறைவாகவே இருந்தது. விளம்பரதாரர்களுக்கு அவர்கள் கொடுக்கும் உத்தரவாதத்தின் காரணமாக தேசீய ஒளிபரப்பு கம்பெனிக்கு இது நஷ்டத்தை அர்த்தப்படுத்தியது.
வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும்
கானடாவைச் சேர்ந்த பென் ஜான்சன் ஆண்களின் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற அன்று “சந்தேகத்திற்கிடமேயில்லை!” என்பதே ஜப்பானின் மேனிச்சி டேய்லி நியுஸின் தலைப்புச் செய்தியாக இருந்தது. ஒருசில நாட்களுக்குப் பின்பு அதே செய்தித்தாள் பின்வரும் தலைப்புச் செய்தியை வெளியிட்டு ஏற்கெனவே கூறியதை பொய்யென ஒப்புக்கொண்டது: “உலகின் விரைவு ஓட்டக்காரர் புகழ்ச்சியிலிருந்து வெட்கக்கேட்டுக்கு.” சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஸ்டிராய்டு பயன்படுத்தியது, சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட போது ஜான்சன் எதற்காகக் கடினமாக உழைத்து பயிற்சி செய்தானோ அந்தத் தங்கப் பதக்கம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டது.
100 மீட்டர் ஓட்டத்தில், உலகின் அதிவேக ஓட்டக்காரன் போதப் பொருள் எடுக்கும் சோதனைக்கு அடிபணிந்துவிட்டான். அது “ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஓர் அடியாகவும் ஒலிம்பிக் இயக்கத்துக்கு ஓர் அடியாகவும் இருந்தது” என்பதாக சர்வதேசீய ஒலிம்பிக் குழு தலைவர் குறிப்பிட்டார். ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள இவ்விதமாகச் செய்பவர்கள் பிடிபடுகையில், எப்படியாகிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சி, பதக்கங்கள் பறிக்கப்படுவதையும் உட்படுத்துகிறது. மொத்தம் 10 போத வஸ்து வழக்குகள் 1988 ஒலிம்பிக் விளையாட்டுகளைக் கறைப்படுத்தியது.
என்றபோதிலும் நியூஸ் வீக் பத்திரிகையில் அறிவிக்கப்பட்டபடி, “விஷயமறியாதவர்களே பிடிபடுகிறார்கள்” என்பதாக ஐ.மா. குண்டு வீச்சு வீரர் ஆகி உல்ஃப் சொல்கிறார். “பென் ஜான்சனுக்காக நான் வருந்துகிறேன்” என்பதாக சோவியத் பயிற்சியாளர் ஒருவர் சொன்னார். “ஆனால் ஒருவேளை 90 சதவிகிதம் . . . போத வஸ்துக்களை பயன்படுத்துகிறார்கள். பென் ஜான்சனுடைய தவறு பிடிபட்டதுதான்.” மறுபக்கத்தில், ஐ.மா. இடர் இடையீட்டு ஓட்டப்பந்தயக்காரர் எட்வின் மோசஸ், போத வஸ்து சோதனைகளில் ஏமாற்றாமல் மட்டுமிருந்தால் உயர்-சாதனை விளையாட்டுகளில் குறைந்தபட்சம் 50 சதவிகித விளையாட்டுவீரர்களாவது தகுதி இழந்திருப்பார்கள் என்பதாக விஷயமறிந்து சொல்கிறார். போத வஸ்துவினால் சக்தியைப் பெருக்கிக்கொள்வது பிரயோஜனமாயிருப்பதாக இத்தனை அநேக விளையாட்டுவீரர்கள் நம்புகையில், ஏன் போத வஸ்துக்களை தடை செய்ய வேண்டும்?
முதலாவதாக, ஒலிம்பிக்கின் கண்ணியத்தைக் காத்துக்கொள்வதற்காக இது செய்யப்படுகிறது. பின்னர் விளையாட்டுவீரர்களைப் பாதுகாக்கும் விஷயம் வருகிறது. டென்மார்க்கைச் சேர்ந்த மிதிவண்டி ஓட்டுநர் 1960-ல் ரோமில் நடைபெற்ற விளையாட்டுகளில் போத மருந்து துர்ப்பிரயோகத்தால் உயிரிழந்தபோது விளையாட்டில் போத வஸ்துக்கள் கவலைக்குரிய விஷயமாக ஆனது. சமீபத்தில் 1987-ல் பதக்க நம்பிக்கையுடையவளாயிருந்த, மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பெர்ஜிட் டிரஸல், குறிப்பிட்ட ஏழு போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வெல்லும் போரட்டத்தில் சுமார் நூறு வித்தியாசமான போத வஸ்துக்களை உபயோகித்ததால் உயிரிழந்தார். தசைகளை முறுக்கேற்ற பயன்படுத்தப்படும் “அற்புத மருந்தாகிய” ஸ்டிராய்டு, அதைப் பயன்படுத்துகிறவர்களின் அமைப்பில் பிரச்னைகளையும்கூட உண்டுபண்ணக்கூடும்—ஒருசிலவற்றைக் குறிப்பிட, கல்லீரல் புற்றுநோய், மலட்டுத்தன்மை, சிறுநீரகச் சேதம், இருதயக் கோளாறு ஆகும்.
அப்படியென்றால் விளையாட்டுவீரர்கள் போதவஸ்துக்களை ஏன் எடுத்துக்கொள்கிறார்கள்? “பதக்கங்களுக்கான அளவுக்கு மீறிய ஆசையின் காரணமாக, ஆற்றலைப் பெருக்க போத வஸ்துக்களை பயன்படுத்துவது ஒலிம்பிக்கில் மிகப்பெரிய பிரச்னையாகிவிட்டிருக்கிறது” என்பதாக சர்வ தேசீய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர் லார்ட் கில்லானின் தெரிவிக்கிறார். ஆம், எப்படியாகிலும் வெற்றிப்பெற வேண்டும் என்ற மனநிலையே விளையாட்டுவீரர்களைப் போத வஸ்துக்களுக்குத் துரத்துகிறது. இவை அனைத்துக்கும் பின்னாலுள்ள தூண்டுதலளிக்கும் சக்தி பணமாகும்.
எப்படியாகிலும் பணம்
“உண்மையில், விளையாட்டு உலகில் பணத்துக்காகவும் புகழுக்காகவும் அடங்காத ஆசை அளவுக்கு அதிகமாகச் சென்றபோதுதானே ஜான்சன் மோசடி நிகழ்ந்தது” என்பதாக ஜப்பானின் மேனிச்சி ஷிம்பன் செய்தித்தாள் தலையங்கக் கட்டுரை குறிப்பிட்டது. ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் பெறுவது, விளையாட்டுவீரரின் வர்த்தக மதிப்பை உயர்த்துகிறது, இவ்விதமாக வெளிப்பகட்டுப் பணத்தை உயர்த்துவதன் மூலம் அவன் எதிர்கால விளையாட்டுப் போட்டிகளில் அதிகாரம் செலுத்தி அதிகமான ஆதரவையும் பெறலாம். சிலர் தங்கப்பதக்கத்தைப் பெற்றதால், அரசாங்க ஓய்வூதியத்தையும் ஊக்க ஊதியத்தையும்கூட பெற்றுக் கொண்டிருக்கின்றனர். தங்கப்பதக்க வீரர்களுக்கு ஒரு தேசம் சராசரி தொழிலாளியின் மாதாந்தர ஊதியத்தைக்காட்டிலும் 60 மடங்கு அதிகமான பணத்தை ஊக்க ஊதியமாகத் தர முன்வந்தது.
ஒலிம்பிக் விளையாட்டுகள் கவர்ச்சியான வியாபாரமாகும். கொரியா நாட்டில், இதன் அமைப்பாளர்கள் அப்போதைக்கு 560 கோடி ரூபாய் பணம் சம்பாதித்தனர். விளையாட்டுகளை வியாபாரமாக்குவதற்கு யார் பொறுப்பு? “நிச்சயமாகவே சர்வ தேசீய ஒலிம்பிக் குழு” என்பதாக டோக்கியோ செய்தித்தாள் அஷாகி ஈவினிங் நியூஸ் குற்றஞ்சாட்டியது. “ஒலிம்பிக் ஆவியை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டிய ஆட்களே விளையாட்டுகளை ஒரு வியாபார கண்காட்சியாக மாற்றிவிட்டிருக்கிறார்கள்.”
விளையாட்டில் உலகின் மிக உயர்ந்த தராதரத்தைக் காத்துக்கொள்ள முயற்சி செய்கையில் சர்வ தேசீய ஒலிம்பிக் குழு விளையாட்டைத் தொழிலாக்குவதைக் கண்டும் காணாதது போலிருந்தது. மீண்டும் துவங்கப்பட்ட டென்னிஸ் ஒலிம்பிக் விளையாட்டில், அது “அவசரக் கற்றுக்குட்டிகளுக்கு” இடங்கொடுத்திருக்கிறது. இலட்சாதிபதி வாழ்க்கைத் தொழிலர்கள், வியாபார ஒப்பந்தங்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைத்து, ஆடம்பர விடுதிகளுக்குப் பதிலாக ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இலவசமாக ஆடும்வரை அவர்கள் கற்றுக்குட்டிகளாகக் கருதப்படுகிறார்கள்.
ஒலிம்பிக் கொள்கையின் இந்த மாற்றத்தை அனைவரும் வரவேற்பதில்லை. தி கொரியா டைம்ஸ் அறிவித்தபடி “இது நியாயமில்லை” என்பதாக குவேட்டின் சர்வதேசீய ஒலிம்பிக் குழு பிரதிநிதி குறிப்பிட்டார். “இது எல்லா விளையாட்டு நிகழ்ச்சிகளையும் வியாபாரத்துக்குள் கொண்டு சென்றுவிடும்.”
இறுதிக்கட்டம் முன்னால்?
நிச்சயமாகவே விளையாட்டுவீரர்கள் அனைவருக்குமே, எப்படியாகிலும் வெற்றி என்ற மனநிலையோ அல்லது அனைவரும் பணத்துக்காகவே போட்டியிட்டுக்கொண்டோ இல்லை. படகு பந்தயக்காரர் ஒருவர் அதில் பங்கேற்ற மற்றொரு படகோட்டி மூழ்கிப்போவதைக் கண்டு பந்தயத்தை விட்டுவிட்டு அவரைக் காப்பாற்றி 21-வது இடத்தைப் பெற்றார். அநேகர் விளையாட்டுகளில் பங்கேற்றதற்காக மட்டுமே திருப்தியுள்ளவர்களாயிருந்தனர். என்றபோதிலும் அனைத்தையும் உள்ளிட்ட முக்கியத்துவம் நேர்மையாக விளையாடுவதிலும் “ஒலிம்பிக் ஆவி”யிலும் இல்லாமல், போத வஸ்துக்களின் உபயோகத்தினாலும்கூட எப்படியாகிலும் வெற்றிப்பெறுவதிலேயே இருந்தது. போத வஸ்து பிரச்னையைப் பற்றிப் பேசுகையில் ஐ.மா. விளையாட்டுவீரர் எட்வின் மோசஸ் குறிப்பிட்டதாவது: “விளையாட்டும் ஒருவேளை ஒலிம்பிக் இயக்கமும் அடிகீழ் மட்டத்தை சென்றடைந்துவிட்டது.”
பூர்வ ஒலிம்பிக் விளையாட்டுகள் ஏன் நிறுத்தப்பட்டன என்பதைக் கவனிப்பது அக்கறைக்குரியதாக இருக்கிறது. “நம்முடைய பொது சகாப்தம் நான்காவது நூற்றாண்டுக்குள் அரசியல்வாதிகள் மற்றும் தன்னலநாட்டம் கொண்ட பணக்காரர்களின் செல்வாக்கு விளையாட்டுகளைக் கறைப்படுத்தியதால், அவை [பேரரசர்] முதலாம் தியோடிசியஸால் ஒழித்துக்கட்டப்பட்டன” என்பதாக சியோல் ஒலிம்பிக் திட்டக்குழு விளக்குகிறது. அரசியலும் பணமுமாகிய இவ்விரண்டு காரியங்களே, நவீன ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதல் முக்கியத்துவத்தை மீண்டும் பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆம், இந்தக் காரியங்களால் தீவிரமாக்கப்படும் எப்படியாகிலும் வெற்றி என்ற ஆவி, தற்போதைய மனித சமுதாயத்தைக் கண்ணாடிப் போல் நிழலிட்டுக் காட்டுகிறது. ஆகவே 1992-ல் ஸ்பய்னிலுள்ள பார்செலோனாவில் விளையாட்டுகள் நடத்தப்படுகையில், உண்மையான “ஒலிம்பிக் ஆவி” திரும்புமா அல்லது அது இன்னும் எப்படியாகிலும் வெற்றி என்பதாக இருக்குமா? என்று நாம் கேட்பது பொருத்தமாகவே இருக்கும். (g89 5/8)
[பக்கம் 16, 17-ன் படம்]
விளையாட்டின் துவக்க விழாவில் கொரியா நாட்டுப் பிரதிநிதிகள் குழு
[பக்கம் 17-ன் படம்]
ஒருசில விளையாட்டுவீரர்கள் ஸ்டிராய்டு பயன்படுத்தியது ஒலிம்பிக் விளையாட்டுகளைக் கறைப்படுத்தியது