நார்வே தேசத்து ஒலிம்பிக் விளையாட்டுக்கள்—அதன் இலட்சியங்கள் போதுமானவையாக இருந்தனவா?
நார்வேயில் உள்ள விழித்தெழு! நிருபர்
நூறு வருடங்களுக்கு முன்பு சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) நிறுவப்பட்ட போது, அது பெரும் கனவுகளைக் கண்டது. உலகமுழுவதிலுமுள்ள இளைஞரை நான்கு வருடத்துக்கு ஒருமுறை பண சம்பந்தமான ஆதாயமின்றி விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடிவரச் செய்து சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் முன்னேற்றுவிப்பதுதான் அதன் குறிக்கோளாக இருந்தது. நியாயமான போட்டி ஜனங்களின் மத்தியில் ஒருமைப்பாட்டையும் சமரசத்தையும் உண்டுபண்ணும் என்று நம்பப்பட்டது. இதன் அடிப்படையில் பண்டையக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நவீன காலங்களில் மறுபடியும் கொண்டு வரப்பட்டன.
கிரீஸ் தேசத்தில் உள்ள ஆதென்ஸ் என்ற இடத்தில் 1896-ஆம் ஆண்டு ஓர் எளிய துவக்கத்தைக் கொண்டிருந்த கோடைக்கால விளையாட்டுக்கள், உலகில் மிகப்பெரிய விளையாட்டு விழாவாக வளர்ச்சியடைந்தது. அதில் 170-க்கும் மேற்பட்ட தேசங்களிலிருந்து, உச்சநிலை எண்ணிக்கையான 11,000 பேர் பங்குபெற்றனர். முதல் குளிர் கால விளையாட்டுக்கள் பிரான்ஸில் உள்ள சமோனிக்ஸ் என்ற இடத்தில் 1924-ஆம் ஆண்டு நடத்தப்பட்டன, அவை எப்போதும் கோடைக்கால விளையாட்டுக்களைக் காட்டிலும் “குறைந்த முக்கியத்துவமுடையதாகவே” இருந்தன. இருப்பினும், பிப்ரவரி 12-27, 1994 வரை நார்வேயில் லில்லஹாமர் என்ற இடத்தில் நடந்த குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு ஏறக்குறைய 70 தேசங்களிலிருந்து சுமார் 2,000 போட்டியாளர்கள் ஒன்றுசேர்ந்தனர்.a
பிரபலமான ஒலிம்பிக் வட்டங்களை அடையாளப்படுத்திய சகோதரத்துவம், தோழமை என்ற கருத்தும், “ஆரோக்கியமான ஓர் உடலில் ஆரோக்கியமான ஓர் மனம்” என்ற கருத்தும் எப்போதும் இருந்ததைக் காட்டிலும் அதிக தேவையானதாக இருந்ததாக தோன்றியது. லில்லஹாமரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இந்த இலட்சியங்கள் என்ன பங்கை வகித்தன?
ஒலிம்பிக் விளையாட்டுக்களும் பெரிய வியாபாரமும்
மிகவும் விரிவாக பரப்பப்பட்ட செய்திகள், ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பொதுமக்களின் ஆர்வத்தை பெருமளவில் தூண்டின. போட்டியிடுபவர்களைவிட நான்கு மடங்கு அதிகமான செய்தி பரப்பும் ஆட்கள் லில்லஹாமருக்கு வந்திருந்தனர், கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் ஆட்கள் டிவியில் குளிர் கால விளையாட்டுக்களை பார்த்தனர். ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பெருஞ் செல்வாக்குடைய வியாபார அக்கறைகளுக்கு அதிக ஆதாயம் அளிக்கின்றதாக ஆகிவிட்டன, டிவி இணைப்புகளும் பணம் செலுத்தி ஒளிபரப்புபவர்களும் விசேஷ சிலாக்கியங்களுக்காகவும் ஒப்பந்தங்களுக்காகவும் போட்டியிடுகின்றனர்.
உலகமுழுவதிலுமிருந்து வந்த வாணிக மற்றும் தொழிற்சாலை பிரதிநிதிகள் லில்லஹாமரில் நடந்த விளையாட்டுக்களுக்கு ஆஜராயிருந்தனர், வியாபார உறவுகளை வளர்ப்பதற்கும், கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் ஏற்பாடு செய்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாக அவர்களில் அநேகர் இந்த சர்வதேச பெருங் கூட்டத்தை நோக்கினர். சிறிய மற்றும் பெரிய வியாபாரங்கள், எண்ணற்ற வித்தியாசமான ஒலிம்பிக் பொருட்களை விற்பதன் மூலம், புதிய பொருட்களை உண்டாக்குவதில் முடிவற்றது போல் தோன்றிய திறமைகளை வெளிக்காட்டினர்—குண்டூசிகள், அஞ்சல் அட்டைகளிலிருந்து சமையல் பாத்திரங்கள், துணிமணிகள் வரை.
இயற்கையாகவே, விளையாட்டுக்களின்போது உள்ளூர் மக்களுக்கு அன்றாடக வாழ்க்கை முழுவதுமாக தடைபட்டது. ஒலிம்பிக் பணியாளர்கள், பங்கு பெற்றவர்கள், தலைவர்கள் ஆகியோர் பெருமளவில் குவிந்ததானது லில்லஹாமரின் ஜனத்தொகையை இரட்டிப்பாக்கியது, அது சாதாரணமாக 20,000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையை உடையதாயிருக்கும். கூடுதலாக, ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களின் “படையெடுப்பு” 1,00,000 ஆக இருந்தது. உள்ளூர்வாசிகளில் சிலர் அந்தச் சந்தடியிலிருந்து விலகிச் செல்வதற்காக விடுமுறை எடுத்துக்கொள்ள விரும்பினர். அவர்கள் “விளையாட்டு அகதிகள்” என்று சிரிப்பூட்டும் விதத்தில் அழைக்கப்பட்டனர்.
விளையாட்டுக்களின் போட்டித்தன்மை மற்றும் ஒலிம்பிக் இலட்சியங்கள் ஆகியவற்றைப் பற்றியதென்ன?
கிட்டியுஸ், ஆல்ட்டியுஸ், ஃபார்ட்டியுஸ்
கிட்டியுஸ், ஆல்ட்டியுஸ், ஃபார்ட்டியுஸ் (அதி விரைவாக, அதி உயர்வாக, அதி பலமாக) என்ற ஒலிம்பிக் குறிக்கோளுக்கு இசைவாக ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கு பெறுபவன் பழைய சாதனைகளை விஞ்ச முயலுகிறான், தன்னோடு போட்டியிடுபவர்களையும் விஞ்ச முயலுகிறான். இன்றைய நாட்களில் இதை முயன்று அடைவதற்கு, விளையாட்டுக்களை வெறுமனே ஓய்வு-நேர வேலையாக மட்டும் ஆக்கிக் கொள்வது போதுமானதல்ல என்று ஒலிம்பியர்கள் காண்கின்றனர். அநேக ஒலிம்பியர்களுக்கு அது முழு-நேர வேலையாகவும் வாழ்க்கைத் தொழிலாகவும் உள்ளது, அவர்களுடைய வருமானம் விளம்பரதாரர்களின் ஆதரவுகளிலிருந்து வருகிறது. அது அவர்கள் அடையப்பெறும் வெற்றிகளின் பேரில் பெருமளவு சார்ந்துள்ளது. பண ஆதாயமின்றி பொழுதுபோக்குக்காக விளையாடுபவர்களை முன்னேற்றுவிக்க வேண்டும் என்ற ஆரம்ப இலட்சியம், பணத்துக்கும் வாழ்க்கைத் தொழிலுக்கும் அடிபணிய வேண்டியிருந்தது.
இதன் விளைவாக, பொது மக்கள் தங்களுக்கு விருப்பமான எல்லா கிளர்ச்சியையும் பொழுதுபோக்கையும் பெற்றுக் கொள்கின்றனர். சமீபத்திய ஒலிம்பிக் விளையாட்டுக்களில் அடையப் பெற்ற அநேக சாதனைகள் சில பத்தாண்டுகளுக்கு முன்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத வெற்றிகளை தெரியப்படுத்துகின்றன. இதற்குக் காரணம் அதிகரிக்கப்பட்ட பயிற்சி, மிகப் பெரிய அளவில் விசேஷ கவனம் ஆகியவை மட்டுமல்லாமல், மேம்பட்ட சாதனங்களும், வசதிகளும் ஆகும். உதாரணமாக, லில்லஹாமர் விளையாட்டுக்களில், ஆண்களுக்கென்று வைக்கப்பட்ட அதிவேகமான ஐந்து பனிச்சறுக்கு போட்டிகளின் போது, நான்கு உலக சாதனைகளும், ஐந்து ஒலிம்பிக் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன. அதற்கான மதிப்பு புதிய பனிச்சறுக்கு மன்றத்துக்கு கொடுக்கப்பட்டது, பனிச்சறுக்கு விளையாட்டை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு பனிக்கட்டிகளை தகுதியானதாக ஆக்குவதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
விசனகரமாக, “போட்டி விளையாட்டுக்கு ஏற்ற மெய்யான மனநிலையில், விளையாட்டின் மகிமைக்காக” என்று ஒலிம்பிக் உறுதிமொழியில் வாக்குக் கொடுக்கிறபடி சில போட்டியாளர்கள் போட்டியிடாமல் தனித்து நின்றனர். இந்த வருட குளிர் கால விளையாட்டுக்களில் வெற்றி பெறாதவர்கள் கெட்ட மனநிலையைக் கொண்டிருந்தனர், சில விளையாட்டு வீரர்கள் உடன் போட்டியாளர்களை வீழ்த்த சூழ்ச்சியில் ஈடுபட்டனர். சமீப வருடங்களில் போதைப் பொருட்கள், ஸ்டெராய்டுகள் போன்றவற்றுக்கு எதிராக போராட வேண்டிய தேவை இருந்தது. லில்லஹாமரில், மயக்க மருந்து எடுத்துக் கொண்டதன் காரணமாக போட்டியாளர் ஒருவர் முதல் நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். என்றபோதிலும், விளையாட்டுக்களின்போது போட்டியாளர்கள் எவரும் போதை மருந்துகளை எடுத்திருந்ததாக சோதனைகள் காண்பிக்கவில்லை.
லில்லஹாமர் விளையாட்டுக்களின் சம்பந்தமாக ஒலிம்பிக் இலட்சியங்களுக்கு சில புதிய அணுகுமுறைகள் இருந்தன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிவாரண வேலை, சமாதான முயற்சிகள்
மிக விரிவான ஏற்பாடுகளையும், மிகப்பெரிய அளவிலான கழிவுப்பொருட்களையும் உண்டாக்கிய ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் போன்ற ஒரு பிரம்மாண்டமான ஏற்பாட்டை செயல்படுத்துவது, “வள ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்வதில் சிக்கனமாயும், சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்காதபடியும் இல்லை.” (மிலியோஸ்பெசியல், லில்லஹாமர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கான சுற்றுச்சூழல் செய்தி வெளியீடு) ஒலிம்பிக் மனநிலையோடு இது ஓவ்வாததாக அநேகர் உணர்ந்து, 1994 குளிர் கால விளையாட்டுக்களை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக ஆக்க வேண்டும் என ஆலோசனை கூறினர். இந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது, “‘பசுமை’ தோற்றமுடைய முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்” என்று லில்லஹாமர் விளையாட்டுக்கள் சர்வதேசங்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்தன. இது எதை அர்த்தப்படுத்தியது?
சுற்றுப்புறத்தின் மீது கேடு விளைவிக்கும் பாதிப்புகளை குறைப்பதற்கு இடம், உருவமைத்தல், புதிய விளையாட்டு இடங்களை நீண்ட-காலம் உபயோகித்தல் போன்றவை சிந்திக்கப்பட்டன. மரம், கல், காகித அட்டை போன்ற மறுபடியும் பயன்படுத்தக்கூடியதும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததுமான பொருட்கள் எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன. எல்லா அமைப்பாளர்களுக்கும் தேவைகளை வழங்குபவர்களுக்கும் மிக உயர்வான சுற்றுப்புறச்சூழல் தராதரங்கள் வைக்கப்பட்டன. அங்கு புகைபிடிப்பது முழுவதுமாக தடைசெய்யப்பட்டிருந்தது.
ஒலிம்பிக் இலட்சியங்களை ஆராய்ச்சி செய்ததானது, லில்லஹாமர் ஒலிம்பிக் உதவி என்ற பெயரையுடைய உதவியளிக்கும் இயக்கம் ஸ்தாபிக்கப்படுவதற்கும்கூட வழிநடத்தியது. முன்னாள் ஒலிம்பிக் நகரமாகிய பாஸ்னியாவில் உள்ள சரஜெவோ மற்றும் ஹெர்ஸகோவினாவில் உள்ள பிள்ளைகளுக்கு உதவி செய்வதற்காக பணம் சேகரிக்க ஆரம்பித்து, பின்னர் அது உலகமுழுவதிலும் போருக்கு பலியான இளம் நபர்களுக்கு உதவி செய்ய விஸ்தரிக்கப்பட்டது. நிகழ்ச்சிகள் ஒன்றில் தங்கப் பதக்கம் பெற்ற ஒருவர் தான் வெற்றி பெற்ற இனாம் பணம் எல்லாவற்றையும் (ஏறக்குறைய 30,000 டாலர்கள்) நன்கொடையாக அளித்த பின்னர், உதவியளிக்கும் அத்திட்டத்திற்கு பெரும் ஊக்கம் கொடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் நடைபெறப் போகும் விளையாட்டுக்களின் போதும்கூட ஒலிம்பிக் உதவி தொடர்ந்து கொடுக்கப்படும் என்று அதை ஆரம்பித்து வைத்தவர்கள் நம்புகின்றனர்.
ஒலிம்பிக் விளையாட்டுக்களின் ஆரம்ப விழாவில் புறாக்களை விடுவிப்பது வழக்கமாக செய்ய வேண்டிய ஒன்றாக இருந்தது, அது உலகத்துக்கு மெளனமான சமாதான செய்தியை அனுப்பியது. IOC-யின் தலைவர், காட்டலோனியாவைச் சேர்ந்த க்வான் அன்ட்டோனியோ சமராங்க், பூமியிலிருக்கும் அனைத்து ஜனங்களுக்கும் சமாதானம் என்பதைப் பற்றி அடிக்கடி பேசியதால், 1994 குளிர் கால விளையாட்டுக்கள் சம்பந்தமாக சமாதானம் என்ற இலட்சியம் இன்னும் கூடுதலாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றது.
நிறைவேற்றமடையப் போகும் இலட்சியங்கள்
எல்லா மானிடர்களிலும் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஓர் விருப்பத்தை ஒலிம்பிக் இலட்சியங்கள் பிரதிபலிக்கின்றன—சகோதரத்துவம், சமாதானம், நீதி, சந்தோஷம், ஆரோக்கியமான சரீரம் மற்றும் மனம் ஆகியவற்றுக்கான விருப்பம். ஒலிம்பிக்கின் ஆரம்ப கால இலக்குகளை முக்கியமான ஸ்தானத்துக்கு கொண்டு வந்ததற்காக இந்த வருட குளிர் கால விளையாட்டுக்கள் ஆரவாரம் செய்தன. “எப்போதும் இருந்ததைக் காட்டிலும் மிகச்சிறந்த குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்” என்றும் பேசப்பட்டது. இருப்பினும், ஒலிம்பிக் இயக்கம் மறுபடியும் அதன் இலட்சியங்களை கடைபிடிக்காமற் போனது.
விளையாட்டுக்களின் அடிப்படை இலட்சியங்களுக்கும் மேலாக கெளரவமும் வியாபாரமும் மேலோங்கி நின்றன. விளையாட்டுக்கள் அடிக்கடி கடும் போட்டியாக மாறி, சகோதரத்துவம், சமாதானம் ஆகியவற்றுக்கு பதிலாக தற்புகழ்ச்சியையும் நாட்டுப்பற்றையும் பிறப்பித்தன.
ஒலிம்பிக் ஆசைகள் நிறைவேற்றமடைவதற்கு வழி ஏதேனும் உண்டா? மிகச் சிறந்த உலகை பெறுவதற்கு மனிதர்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும் என்று பைபிள் காண்பிக்கிறது. என்றபோதிலும், பூமிக்கு பரிபூரணமான, பரதீஸிய நிலைமைகளைக் கொண்டுவருவதற்கு கடவுளுடைய ராஜ்யம் விரைவில் நடவடிக்கை எடுக்கும். (எரேமியா 10:23; 2 பேதுரு 3:13) அப்படிப்பட்ட ஓர் உலகம் போட்டி விளையாட்டுக்கள் சம்பந்தமான வளர்ச்சியிலோ, அல்லது ஒலிம்பிக் நியமங்களுக்கு உண்மைத் தவறாமல் இருப்பதன் அடிப்படையிலோ சார்ந்திராமல், சிருஷ்டிகரிடமாக மெய்யான பக்தியின் பேரில் சார்ந்துள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” ஆகையால் “தேவ பக்தியைக் குறிக்கோளாகக் கொண்டு” இன்று தங்களை பயிற்றுவித்துக் கொள்பவர்களுக்கு, ஆரோக்கியமான ஓர் உடலில் ஆரோக்கியமான ஓர் மனம் மெய்யாகவே இருப்பதில் விளைவடையும்.—1 தீமோத்தேயு 4:8.
[அடிக்குறிப்புகள்]
a ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1992-லும்கூட ஏற்பாடு செய்யப்பட்டன, ஆனால் அதே வருடத்தில் கோடைக்கால மற்றும் குளிர் கால விளையாட்டுக்கள் கடைசி முறையாக நடத்தப்பட்டன. இப்போதிலிருந்து அவை இரண்டு வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படப் போவதாக திட்டமிடப்பட்டுள்ளன.
[பக்கம் 26-ன் பெட்டி]
ஒலிம்பிக் மதம் கலப்பு
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கிரேக்க மதத்தில் வேரூன்றியிருக்கின்றன. கிரேக்க கடவுட்களில் அதிக பிரதானமான கடவுளாகிய சீயஸ் என்ற கடவுளை கனப்படுத்தும் ஒரு மதப் பண்டிகையாக அவை ஆரம்பித்தன. நவீன-நாளைய விளையாட்டுக்களின் பல்வேறு அம்சங்கள் மத ஈடுபாடுள்ள தன்மையைக் கொண்டிருக்கின்றன: ஒலிம்பிக் கொடிக்கு பயபக்தியுடன் கூடிய சடங்குகள், பரிசுத்தமான தீக்கொழுந்து, ஒலிம்பிக் பிரமாணம். விளையாட்டுக்களின் ஆரம்பத்தில் பாடிய ஏறக்குறைய 100-வயது பழமையான கிரேக்க பாடல், லில்லஹாமரில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் நார்வீஜிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. இந்த ஒலிம்பிக் பாடல் பலமான, மத சம்பந்தமான அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. அது சீயஸ் கடவுளுக்கு ஒரு பாடலாக அமைந்திருப்பதாக புரிந்துகொள்ளப்பட்டது. அப்பாடலின் வார்த்தைகள் பின்வரும் கூற்றுக்களை கொண்டிருக்கின்றன: “பழங்காலத்தைச் சேர்ந்த அழியாத ஆவி,/மெய்யான, அழகான, நன்மையானவற்றின் தந்தை,/இறங்கு, தோன்று, உம் வெளிச்சத்தை எங்கள் மீது பிரகாசிக்கச் செய்/ . . . அந்த புகழ்பெற்றுள்ள விளையாட்டுக்களுக்கு உயிரையும் ஊக்கத்தையும் அளி!/ . . . எல்லா தேசங்களும் உம்மை பூஜிக்க கூட்டமாய் செல்கின்றன,/ஓ பழங்காலத்தைச் சேர்ந்த அழியாத ஆவியே!”
நார்வீஜிய லுத்தரன் சர்ச், தன் சொந்த ஒலிம்பிக் குழுவின் மூலம், இசை மற்றும் மத நிகழ்ச்சிநிரல் ஒன்றை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்தது. மிகப்பெரிய கலப்புவிசுவாச ஏற்பாட்டில் எல்லா பெரிய சர்ச் அமைப்புகளும் பிரநிதித்துவம் செய்தன. அதிகாரப்பூர்வமான ஒரு ஒலிம்பிக் மதகுருவும், சர்வதேச கிறிஸ்தவ சர்ச்சை சேர்ந்த குருமார்களின் குழு ஒன்றும் லில்லஹாமரில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் இருந்தனர்.
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
மேலே: பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டியின் 10,000-மீட்டர் பந்தயத்தில் தங்கப்பதக்கத்துக்காக அதிவேகமாகச் செல்பவர்
நடுவே: தன்னிச்சையான வான்கம்பிப் போட்டிகள் ஒலிம்பிக்கில் புதிய நிகழ்ச்சியாக இடம்பெற்றன
கீழே: மலைச்சரிவில் போட்டி—மணிக்கு 120 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில்
[படத்திற்கான நன்றி]
Photos: NTB