மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 9: பொ.ச.மு. 551 முதல் மெய்யான வழியைக் கண்டடைய கீழைநாடுகளின் முயற்சி
“சத்தியத்தின் வழி பரந்து அகன்ற ஒரு பெருஞ்சாலையைப் போல் இருக்கிறது.”—மெங்-டிசு, பொ.ச.மு. 4-வது நூற்றாண்டு சீன சாது.
எத்தனையோ மதங்கள் இரட்சிப்புக்கு வழிநடத்தும் சத்திய வழியாக இருப்பதாய் உரிமைப்பாராட்டிக் கொள்கின்றன. உதாரணமாக கன்ஃபூசியஸின் நெறி, தாவ் நெறி மற்றும் புத்த சமயம் ஆகியவை சீனாவின் “மூன்று வழிகள்” என அழைக்கப்படுகின்றன. ஜப்பானிய மற்றும் கொரியா நாட்டு மதங்கள் இதேப்போன்ற சொற்களை பயன்படுத்துகின்றன. அப்படி இருந்தால், இந்தப் பல்வேறு “வழிகளும்” எவ்விதமாக வித்தியாசமாக இருக்கின்றன?
கன்ஃபூசியஸின் நெறி—மனிதனின் வழி
கன்ஃபூஸியசைப் பற்றி நிச்சயமாக எதுவும் அறியப்படாதபோதிலும் அவர் “உலக சரித்திரத்தில் அதிக செல்வாக்குச் செலுத்தின ஆட்களில் ஒருவராகக் கருதப்பட வேண்டும்” என்பதாக பெயர்பெற்ற ஒரு குறிப்புரை ஏடு சொல்லுகிறது. ஓர் ஆசிரியரும், தத்துவ ஞானியும், அரசியல் தத்துவ அறிஞராகவும் இருந்த இவர் பொ.ச.மு. 551-க்கும் 497-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்துவந்தார். அவருடைய குடும்பப் பெயர் குங்காகும், ஆகவே அவர் பின்னால் “தலைவன் குங்” என்று பொருள்படும் குங்-ஃபு-டிசு என்றழைக்கப்படலானார். இச்சொல்லின் லத்தீன் வடிவம் கன்ஃபூசியஸ் ஆகும்.
கன்ஃபூசியஸ் புதிய ஒரு மதத்தைத் தோற்றுவிக்கவில்லை. தி வைக்கிங் போர்ட்டபிள் லைப்ரரி உவர்ல்டு பைபிள் (The Viking Portable Library World Bible) அவர் வெறுமென “தொன்று தொட்ட காலம் முதற்கொண்டு தன் தாய் நாட்டில் ஏற்கெனவே இருந்துவந்த ஒன்றை ஒழுங்குபடுத்தி அமைத்து, அதன் புத்தகங்களுக்கு வடிவங்கொடுத்து, அதன் சடங்குகளுக்கு உண்மையான மதிப்பையும் அதன் நல்லொழுக்கப் போதனைகளுக்கு முக்கியத்துவத்தையும் அளித்தார்” என்றே விளக்குகிறது. இறையியல் அல்ல, மனித நடத்தையே அவருடைய முக்கிய அக்கறையாக இருந்தது. அவருடைய போதனை, அடிப்படையில் சமூக நன்னெறியாக இருந்தது. ஆட்சி பொறுப்பை அடைய அவர் செய்த முயற்சிகள் தன்னுடைய மக்களின் துயரங்களைப் போக்க வேண்டும் என்ற தணியாத ஆசையினால் உந்துவிக்கப்பட்டிருந்தது. அப்படியென்றால், மதத்தலைவராவதில் நாட்டம் கொண்டவர் என்பதைவிட ஏமாற்றமடைந்த அரசியல்வாதியான இந்த மனிதனின் தத்துவம் பொருத்தமாகவே “மனிதனின் கன்ஃபூசிய வழி” என்றழைக்கப்பட்டிருக்கிறது.
கன்ஃபூசியஸ், அவருடைய நாளிலிருந்த மதத்தை உயர்வாக எண்ணவில்லை. அவைகளில் பெரும்பகுதி வெறும் மூடநம்பிக்கையே என்று அவர் சொன்னார். அவர் கடவுளை நம்புகிறாரா என்பதாகக் கேட்கப்பட்டபோது அவர் “நான் பேசாமலிருக்கவே விரும்புகிறேன்” என்று பதிலளித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் “விண்ணுலகம்” என்று பொருள்படும் டயன் (Tien) என்பதை அவர் பலமுறை குறிப்பிட்டிருப்பது வெறுமென ஏதோ பொதுவான மேலான ஒரு சக்தி என்பதைக்காட்டிலும் அதிகமான ஏதோ ஒன்றை நிச்சயமாகவே நம்பினார் என்பதாகப் பொருள்படுவதாகச் சிலர் இதற்கு அர்த்தம் கற்பிக்கின்றனர்.
கன்ஃபூசியஸ் குடும்ப மதிப்பீடுகளையும் அதிகாரத்துக்கு மரியாதையையும் சமூக ஒத்திசைவையும் வலியுறுத்திப் பேசினார். திறமைகளை வளர்த்துக்கொள்வதிலும் மற்றவர்களுக்குச் சேவை செய்ய தனிப்பட்ட குணாதிசயங்களைப் பலப்படுத்துவதிலும் கல்வியின் அவசியத்தின் பேரில் அவர் கவனத்தைத் திருப்பினார். அவர் பொதுவாக மனிதவர்க்கத்திடமாக இரக்க மனப்பான்மையை அர்த்தப்படுத்தும் வார்த்தையாகிய ஜென்-க்கு (Jen) முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கடமை உணர்ச்சிக்கும் சகோதர மரியாதைக்கும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்தார். அவர் மூதாதையர் வணக்கத்தை உற்சாகப்படுத்தினார்.
இந்த அசல் கன்ஃபூசிய பண்புகள் இன்னும், கன்ஃபூசிய பாணியில் வளர்க்கப்பட்ட ஆசியா கண்டத்தவரின் விசேஷ குணங்களாக இருக்கின்றன. சிக்காகோவில் இல்லினாஸிஸ் பல்கலைக்கழகத்தின் மன்னாயத்துறையின் வில்லியம் லியு “கன்ஃபூசிய நன்னெறி மக்களை வேலைசெய்யவும், சிறப்புறவும் தங்கள் பெற்றோருக்குச் செய்யவேண்டிய தங்கள் கடமையைத் திரும்பச் செய்யவும் தூண்டுகிறது.” இதன்காரணமாக கன்ஃபூசியஸ் செல்வாக்கு மிகுந்த தேசங்களிலிருந்து வந்து ஐக்கிய மாகாணங்களில் குடியேறியவர்கள் கல்வியில் சிறப்பான உயர்மதிப்பெண்களுக்கு பெயர்பெற்றவர்களாயிருக்கின்றனர்.
கன்ஃபூசிய கோட்பாட்டின் ஆதாரம் வு சிங் (Wu Ching) என்றறியப்படும் ஒரு தொகுப்பு ஆகும். (“ஐந்து ஏடுகள்”) 12-ம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்ட “நான்கு புத்தகங்கள்” அல்லது சு ஷு (Ssu shu) கன்ஃபூசிய கோட்பாட்டுக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. சுருக்கத்தையும் நெருக்கத்தையும் தனிச்சிறப்பாகக் கொண்டுள்ள அவைகளின் பாணி புரிந்துகொள்வதைக் கடினமாக்குகின்றது.
பொ.ச. நான்காவது நூற்றாண்டில், கன்ஃபூசிய நல்லொழுக்கப் போதனை வட கொரியாவிலுள்ள கொக்குரியோ ராஜ்யத்தில் கற்பிக்கப்பட்டு வந்தது. கன்ஃபூசிய நெறி ஜப்பானுக்கு ஒருவேளை பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பரவியிருக்கக்கூடும். இதற்கிடையில் சீனாவில் மற்றொரு “வழி” வளர்ந்து வந்தது.
தாவ் நெறி—இயற்கை வழி
பல ஆயிரமாண்டு காலங்களாக சீனர்களுடைய சிந்தனையின் மையமாக இருக்கும் தாவ், “வழி” அல்லது “பாதை” என்று பொருள்படுகிறது. இது பிரபஞ்சம் இயங்கும் இயற்கையான வழியோடு ஒத்திசைவாகக் காரியங்களைச் செய்யும் சரியான வழியைக் குறித்துக் காட்டுவதாயிற்று. இதன் ஸ்தபகர், கன்பூசியஸ் வாழ்ந்த அதேக் காலப்பகுதியில் வாழ்ந்தவர் என்றும் “வயதான பையன்” அல்லது “வயதான (வணங்குவதற்குரிய) தத்துவ ஞானி” என்றோ பொருள்படும் லாவோ டிஸ்ஸி என்ற பட்டப்பெயரை தாங்கியிருந்தவர் என்றும் பாரம்பரியம் சொல்லுகிறது. அற்புதமான கருத்தரித்தலுக்கும் பல பத்தாண்டுகள் நீடித்த கருவுற்ற நிலைக்கும் பின்பு வயதின் காரணமாக தலைமுடி ஏற்கெனவே நரைத்துவிட்டப் பின்பும் அவர் பிறந்ததன் காரணமாக அவர் லாவோ டிஸ்ஸி என்று அழைக்கப்பட்டதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். மற்றவர்கள் ஞானமான அவருடைய போதனைகளுக்கு மதிப்புத் தரும் வகையில் அவருக்கு இந்தப் பட்டப் பெயர் வழங்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.
பிறப்பின்போது ஒரு குழந்தைக்கு ஓரளவு “அடிப்படை மூச்சு” அல்லது உயிர்சக்தி வழங்கப்பட்டிருக்கிறது என்று தாவ் நெறி கற்பிக்கிறது. தியானம், உணவு சம்பந்தப்பட்ட பத்தியம், சுவாசம் மற்றும் பாலுணர்ச்சி கட்டுப்பாடு போன்ற பல்வேறு வழிகளின் மூலமாக “ஆதியிலிருந்தேயுள்ள மூச்சு” அனாவசியமாகக் குறைவதை தவிர்க்க முடியும். இவ்விதமாக நீடித்த வாழ்வும் துறவு வாழ்வும் ஒரே பொருளுடைய சொற்களாகும்.
மனித சரீரமானது, இயற்கையோடு சரியான ஒத்திசைவில் வைக்கப்பட வேண்டிய சிறு உருவப் பிரபஞ்சமாகக் கருதப்படுகிறது. இது சொல்லர்த்தமாகவே சீனர்கள் இன் மற்றும் யாங் என்று அழைக்கும் ஒரு குன்றின் நிழலும் கதிரவனின் ஒளியும் படர்ந்த பக்கங்களோடு சம்பந்தப்பட்டதாயிற்று. இன்னும் யாங்கும் ஒன்றையொன்று எதிர்க்கின்ற, என்றாலும் இணைந்து நிறைவு செய்கின்ற மூலப்பொருட்களாகும். இயற்கையில் அனைத்துமே இவற்றால் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதே எல்லாச் சீனத் தத்துவங்களுக்கும் அடிப்படையாகும். மத என்சைக்ளோப்பீடியா (The Encyclopedia of Religion) விளக்கமளிக்கிறது: இன் கருமையான, நிழலான, குளிர்ச்சியான, ஈரமான, தேய்கின்ற, வளைகின்ற, மண்ணுக்குரிய மற்றும் பெண்மைக்குரிய அனைத்திலும் மேம்பட்டிருக்கையில், யாங் பிரகாசமான, உஷ்ணமான, வறண்ட, மெழுகுபோன்ற, பிடிவாதமான, ஆக்கிரமிப்பு செய்கிற விண்ணுக்குரிய மற்றும் ஆண்மையில் மேம்பட்டிருக்கிறது. இந்த நியமத்தின் பொருத்தம் பெஃங் ஷுய் என்ற ஒருவகையான சீன குறிசொல்லுதலில் காணப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ஜியோமான்சி என்றழைக்கப்படுகிறது. இது நகரங்களுக்கும் வீடுகளுக்கும் விசேஷமாக கல்லறைகளுக்கு நன்னிமித்தமான இடங்களை காண திட்டமிடப்பட்டது. கைக்கூடி வரக்கூடிய ஓர் இடத்தின் இன்–யாங் சக்திகளை அதில் குடியிருப்பவர்களுடையதோடு பொருந்தச் செய்தல், பின்னவரின் நலனை உறுதி செய்யும் என்பதாகச் சொல்லப்படுகிறது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹெலன் ஹடாக்கர், “பொருத்தமான மின்காந்த சக்திகளின் கூட்டிணைப்பு மரித்தவர்களுக்கு நன்மைப் பயக்கிறது, அடுத்த உலகத்தில் அவர்களுடைய முன்னேற்றத்துக்கு உதவுகிறது” என்பதாக விளக்குகிறார்.
இன்–யாங் சக்திகளைச் சமநிலையில் வைத்துக்கொள்ள முயற்சி செய்கையில் பலவந்தமாக அவைகளுடைய இயல்நிலையை மாற்ற எந்த முயற்சியும் செய்யப்படக்கூடது. இது சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் ஒரு நம்பிக்கையாக, உழைப்புக்கு எதிராக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 1986-ல் வயதான ஒரு துறவி இதை இவ்விதமாக விளக்கினார்: “அமைதியாக இருந்து எதையும் செய்யாதிருப்பதே தாவ் நெறியின் போதனையாகும். அனைத்தையும் செய்வது எதையும் செய்யாதிருப்பதைச் சார்ந்திருக்கிறது.” ஆகவே தாவ் நெறியின் பலம், மென்மையாக இருந்தபோதிலும் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை உண்டுபண்ணும் தண்ணீருக்கு ஒப்பிடப்படுகிறது.
முன்னர், தாவ் தத்துவத்துக்கும் (பொ.ச.மு. 4-வது/3-வது நூற்றாண்டுகள்) தாவ் மதத்துக்குமிடையே (பொ.ச. 2-வது/மூன்றாவது நூற்றாண்டுகள்) வேறுபடுத்திப் பார்ப்பது வழக்கமாக இருந்தது. இந்த வேறுபட்ட நிலை இனிமேலும் அத்தனை தெளிவாக இல்லை. ஏனென்றால் தாவ் மதமானது அதற்கு முன்னாலிருந்த தாவ் தத்துவங்களிலிருந்து தோன்றியது என்பது தெளிவாக இருக்கிறது. மதப் பேராசிரியர் ஹான்ஸ் ஜாகிம் ஷுபெஸ், ஒரு மதமாக தாவ் நெறி, “பூர்வ சீன பழங்குடி மக்களுடைய மதத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. அதன் மையக்கரு ஆவியுலகத் தொடர்பாக இருக்கிறது. . . . [ஆவிகள்] எல்லா இடங்களிலும் தங்கி, எப்போதும் மனித உயிருக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் ஆபத்தாக இருக்கின்றன. . . . இன்றைய சீனாவில் தாவ் நெறி, பொது மக்களுக்கு மூட நம்பிக்கையின் மத உருவாகப் படிப்படியாகத் தரங்குறைந்ததாகிவிட்டிருக்கிறது” என்று சொல்லுகிறார்.
ஷின்டோ—காமியின் வழி
ஜப்பானும்கூட பூர்வ பழங்குடி மக்கள் மதத்துக்குப் பேர்போனதாகும். ஆசிரியர் ஒருவரின் விளக்கத்தின்படி அது “பலதெய்வ வழிபாட்டு இயல்பும் மூதாதையர் வணக்கமும்” கலந்த ஒன்றாகும். முதலில் இந்த மனித இன மதம் பெயரில்லாமலிருந்தது. ஆனால் பொ.ச. ஆறாவது நூற்றாண்டின்போது ஜப்பானில் புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, புத்தமதத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் ஒன்று புட்சுடோ, “புத்தரின் வழி” என்பதாகும். ஆகவே இதற்கும் அவ்விடத்தே இருந்த மதத்தையும் வித்தியாசப்படுத்த பின்னது ஷின்டோ, “காமின் வழி” என்று அறியப்படலாயிற்று.
காமி, மெய்யாகவே (பல்வேறு கடவுட்கள் அல்லது தெய்வங்கள்) ஷின்டோவின் மையக்கருவாகும். இயற்கை தெய்வங்கள், முதன்மையான மனிதர்கள், தெய்வமாக்கப்பட்ட முன்னோர்கள், அல்லது “ஓர் இலட்சியத்தை சேவிக்கும் அல்லது புலனாகாத சக்திக்கு அடையாளமாயிருக்கும் தெய்வங்களும்கூட” உட்பட எந்த ஒரு மீமானிட சக்தியை கடவுளை காமி குறிப்பிடுவதாயிற்று. (மத என்சைக்ளோப்பீடியா) யயோரோழு-நோ-காமி என்ற பதம் எண்பது இலட்சம் கடவுட்களை அர்த்தப்படுத்தியபோதிலும் இச்சொற்றொடர் “அநேக கடவுட்களைக்” குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் ஷின்டோ மத தெய்வங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. மனிதர்கள் காமின் பிள்ளைகளாக இருப்பதால் அடிப்படையில் தெய்வீகத் தன்மையுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆகவே, காமியோடு ஒத்திசைவாக வாழ்ந்திரு, அப்போது அவைகளின் பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் அனுபவிப்பாய் என்பதே உட்கருத்தாகும்.
ஷின்டோ, சமயக் கொள்கையில் அல்லது இறையியலில் உறுதியாக இல்லாதபோதிலும் அது ஜப்பானியர்களுக்கு மதிப்பீடுகளின் ஒரு தொகுப்பேட்டை அளித்து, அவர்கள் நடத்தையை உருப்படுத்தி அவர்கள் யோசிக்கும் முறையை தீர்மானித்திருக்கிறது. அது அவர்களுக்கு கோவில்களை அளித்திருக்கிறது. இங்கே இவர்கள் தேவையை உணரும்போது வந்து வணங்கலாம்.
ஷின்டோவின் முக்கிய வகைகள் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவையாக உள்ளன. ஷ்ரைன் ஷின்டோவுக்கும் ஃபலாக் ஷின்டோவுக்கும் ஒரு சில குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உண்டு. செக்ட் ஷின்டோ மறுபட்சத்தில் கன்ஃபூசிய, புத்த மற்றும் தாவ் நெறிகளின் அடிப்படைக்கூறுகளை பல்வேறு அளவுகளில் கொண்ட, 19-வது நூற்றாண்டின்போது தோன்றிய 13 பிரிவுகளாலானது.
ஷின்டோவின் மீது புத்த செல்வாக்கு விசேஷமாக பலமாக இருந்திருக்கிறது. அநேக ஜப்பானியர்கள் ஏன் ஒரே சமயத்தில் புத்த மதத்தினராகவும் ஷின்டோ மதத்தினராகவும் இருக்கிறார்கள் என்பதை இது விளக்குகிறது. பழங்காலத்திய ஜப்பானிய இல்லத்தில், காமியை கனப்படுத்த ஷின்டோ பலிபீடமும், ஒருவருடைய முன்னோர்களை கனப்படுத்த புத்த பலிபீடமும் உண்டு. ஓர் இளம் ஜப்பானிய பெண் கேய்கோ விளக்குகிறாள்: “நான் என்னுடைய முன்னோர்களுக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். அதைப் புத்த மதம் மூலமாகக் காண்பிக்கிறேன். . . . நான் ஒரு ஜப்பானியப் பெண்ணாக இருப்பதால், எல்லாச் சிறிய ஷின்டோ சடங்குகளையும் செய்கிறேன்.” பின்னர் அவள் சொல்லுகிறாள்: “கிறிஸ்தவ விவாகம் உண்மையில் கண்ணுக்கினியதாக இருக்குமென்று நான் நினைத்தேன். இது முரணாக இருக்கிறது, ஆனால் அதனால் என்ன?”
சான்டோகியோ—மோட்ச வழியின் கொரியா மதம்
தாவ் நெறியாலும் கன்ஃபூசிய கோட்பாட்டினாலும் வளப்படுத்தப்பட்ட புத்த மதம், கொரியாவின் கிறிஸ்தவமல்லாத முக்கிய மதங்களில் இடம்பெறுகிறது. சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, அவை கொரியாவின் பழங்குடி மக்கள் மதமாகிய ஷாமான் நெறியின் செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டது. மத என்சைக்ளோப்பீடியாவின் பிரகாரம், அவை “கொரியா தீபகற்பத்தில் நிலவி வரும் சமுதாய மற்றும் அறிவாற்றலின் நிலைமைகளுக்கு ஏற்ப தெரிந்தெடுக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டு வித்தியாசமான அளவுகளில் பின்பற்றப்படுகின்றன.”a
கொரியாவிலுள்ள மற்றொரு மதம் சான்டோகியோ, “மோட்ச வழியின் மதம்,” 1905 முதற்கொண்டு இவ்விதமாக அழைக்கப்படுகிறது. 1860-ல் சோ சுன்னினால் தோற்றுவிக்கப்பட்ட இது ஆரம்பத்தில் டாங்ஹாக், “கிழக்கத்தியக் கல்வி” என்றழைக்கப்பட்டது. இது கிறிஸ்தவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட “மேற்கத்திய கல்வி” என்று பொருள்படும் சோஹக்குக்கு எதிர்மாறானது. இதை எதிர்த்து தடைசெய்ய வேண்டும் என்பதே சான்டோகியோ தோன்றுவதற்கு ஓரளவு காரணமாயிருந்தது. ஜெர்மன் எழுத்தாளர் கெர்ஹார்ட் பெலிங்கரின்படி, சான்டோகியோ “மனித தயவு மற்றும் நீதியாகிய கன்ஃபூசிய இலட்சியங்களையும், தாவ் நெறியின் சாத்வீக குணத்தையும்” அதன் ஸ்தபகரின் நோக்கமாயிருந்த “புத்தமதத்தின் இரக்க உணர்வையும்” ஒன்றாக இணைக்க முயற்சி செய்கிறது. சான்டோகியோ கொரியாவின் ஷாமான் நெறி மற்றும் ரோம கத்தோலிக்க சமயம் ஆகியவற்றின் மூலக்கூறுகளையும்கூட கொண்டுள்ள மதசம்பந்தமான ஐக்கியத்தை முன்னேற்றுவிப்பதாக அது உரிமைப் பாராட்டிய போதும் 1935-க்குள் அது குறைந்தபட்சம் 17 பிரிவுகளையாவது பிறப்பித்திருந்தது.
மனிதன் கட்டாயமாகவே தெய்வீகமாக, கடவுளின் பாகமாக இருக்கிறான் என்பது “மோட்ச வழி மதத்தின்” நம்பிக்கையில் முக்கியமாக இருக்கிறது. ஆகவே சேய்ன் யோக் ஆன், (“மனிதனை கடவுளைப் போல் நடத்து”) என்பது முக்கிய நன்னெறி கோட்பாடாகும், உடன் மானிடரை “இயன்ற அளவு அக்கறை, மரியாதை, நேர்மை, கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதியாக நடத்துவதை” இது தேவைப்படுத்தியது என்பதாக ரோட் ஐலண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யாங்-சோன் கிம் விளக்குகிறார்.
இந்த உயர்ந்த கொள்கைகளைக் கடைப்பிடித்து சமுதாய ஒழுங்குமுறையை மாற்றுவதற்கு அதன் ஸ்தபகரான சூன் செய்த முயற்சி அரசாங்கத்தோடு அவரை மோதவைத்தது. அரசியல் குறுக்கீடு, அவரும் அவருடைய வாரிசும் தூக்கிலிடப்படுவதற்கு வழிநடத்தியது. அது 1894-ல் சைனோ-ஜப்பானிய போரத் தூண்டிவிடவும்கூட உதவியது. உண்மையில் அரசியல் ஈடுபாடு புதிய கொரியா மதங்களின் தனித்தன்மையாக இருக்கின்றது. இதில் முதலாவது டாங்ஹாக் இயக்கமாகும். கொரியா எதிர்காலத்தில் உலகில் முதன்மையான இடத்தைப் பெறவிருக்கிறது என்ற எண்ணத்தோடு அநேகமாக தேசப்பற்று முக்கியப் பொருளாக இருக்கிறது.
எந்த “வழி” ஜீவனுக்கு வழிநடத்துகிறது?
நிச்சயமாகவே பெரும்பாலான ஆசியா கண்டத்தவர், ஒருவர் எந்த மத “வழி”யைப் பின்பற்றுகிறார் என்பது மொத்தத்தில் முக்கியத்துவம் அற்றது என்பதாக நினைக்கின்றனர். ஆனால் முதல் நூற்றாண்டில் “இந்த மார்க்கம்” (“இந்த வழி,” NW) என்பதாக அழைக்கப்பட்ட மதத்தைச் சேர்ந்தவரான இயேசு கிறிஸ்து எல்லா மத “வழி”களும் கடவுளுக்கு ஏற்கத்தகுந்தது என்ற கருத்தை நிராகரித்தார். அவர் எச்சரித்ததாவது: “கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, . . . ஜீவனுக்குப் போகிற வாசல் இறுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”—அப்போஸ்தலர் 9:2; 19:9; மத்தேயு 7:13, 14, தி நியு இங்கிலீஷ் பைபிள், அடிக்குறிப்பு; நீதிமொழிகள் 16:25 ஒப்பிடவும்.
நிச்சயமாகவே பெரும்பாலான முதல் நூற்றாண்டு யூதர்கள் அவருடைய வார்த்தைகளை அசட்டைச் செய்தார்கள். அவர்கள் இயேசுவில், தங்கள் மெய்யான மேசியாவையோ அல்லது அவருடைய மதத்தில் சரியான “வழி”யையோ கண்டுபிடித்துவிட்டதாக நினைக்கவில்லை. இன்று 19 நூற்றாண்டுகளுக்குப் பின்னர், அவர்களுடைய சந்ததியார் இன்னும் தங்கள் மேசியாவுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏன் என்பதற்கு எமது அடுத்த இதழ் விளக்கமளிக்கும். (g89 5/8)
[அடிக்குறிப்புகள்]
a ஆவியுலகத்தோடு தொடர்பு கொண்டு மாய மந்திரங்களின் மூலம் சுகப்படுத்துதலைச் செய்த, மதவாதி ஷாமானைச் சுற்றி அமையப்பெற்றதுதான் ஷாமான் நெறி ஆகும்.
[பக்கம் 23-ன் படங்கள்]
தளபதி குவான் யூ, சீன பழங்குடி மதத்தில் ஒரு போர்க் கடவுளும், இராணுவம் மற்றும் வியாபார இனத்தின் பாதுகாவலன்▸
▼இடது பக்கத்திலிருந்து, ஹான் சையாங்சி, லுடாங்பின் மற்றும் லி டைகுயாய்—தாவ் நெறியின் எட்டு தேவர்களில் மூவரும் ஷுலோ, நீடித்த வாழ்வின் ஸ்டெல்லார் தெய்வமும்
[படத்திற்கான நன்றி]
Courtesy of the British Museum
[பக்கம் 25-ன் படங்கள்]
ஒரு ஷின்டோ கோவிலின், சுற்றுப்புற இடங்களில் பல்வேறு சிலைகள் காணப்படுகின்றன. இடது பக்கத்திலுள்ள காவல் நாய், பேய்களை விரட்டிவிடுவதாகக் கருதப்படுகிறது
டோக்கியோவிலுள்ள யூஷிமா டென்ஜின் ஷின்டோ கோவிலில் மாணவர்கள் பெற்றோருடன் சேர்ந்து தேர்வில் வெற்றிக்காக வேண்டுதல் செய்கிறார்கள்