இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் வசைமொழியை எவ்வாறு கையாளக்கூடும்?
“என் தந்தை என்னைக் கையெடுத்து அடிப்பதில்லை. ஆனால், அவருடைய வார்த்தைகளால் கையெடுத்து அடிப்பதைக் காட்டிலும் ஆழமாகப் புண்படக்கூடிய அதிக பீதியை உண்டாக்கும் காரியங்களை அவர் எனக்குச் சொல்கிறார்.”—ஆன்.
“வசைமொழித்தாக்குதல்கள் என்னைத் தகுதியற்றவனான உணரச் செய்தன. நாட்கணக்கில், வாரக்கணக்கில் அந்த உணர்வுகள் என்னைவிட்டு அகலவில்லை. அவைகள் மனதைப் புண்படுத்தின. அவைக் காலப்போக்கில் குணமடைந்தாலும் வடுக்களை விட்டுச் சென்றன.”—கென்.
ஆன், கென் என்பவர்கள் ஆயிரக்கணக்கான மற்ற பருவ வயது இளைஞரைப் போலவே, இளைஞரின் சுய மரியாதையைப் படிப்படியாகத் திட்டமிட்டு அழித்தல் என்று வல்லுநரால் அழைக்கப்படும் வசைமொழிக்குப் பலியாகியிருக்கிறார்கள். எலும்புகள் முறிக்கப்படுவதில்லை என்றாலும், காயங்கள் தோன்றுவதில்லையென்றாலும், பெற்றோரால் செய்யப்படுகின்ற வசைமொழித் தாக்குதல்கள், குழந்தைகளைத் தகாவகையில் நடத்துவதின் ஓர் அழிவுக்கேதுவான வடிவாகும் என்று சிலரால் கருதப்படுகிறது.
தன்னுடைய தாயால் வசைமொழியை அனுபவித்த மார்லீன், “வாழ்வதில் ஒன்றும் அர்த்தமில்லை என்று உணர்ந்தேன்” என்று நினைவுகூருகிறாள். திரும்பத் திரும்ப முட்டாள்கள், தகுதியற்றவர்கள், என்று அழைக்கப்படுவதும் வன்முறையால் பயமுறுத்தப்படுவதும் தோல் விகண்டவர்களாக உணரச் செய்வதும் (“நீ என்னை எப்போதும் தலைகுனியச் செய்கிறாய்!”), அல்லது சிறு தவறுகளுக்கு எப்பொழுதும் குற்றஞ்சாட்டப்படுவதும் (“எல்லாம் உன்னுடைய தவறுதான்!”) இளைஞர்களிடையே சுயமரியாதையை மிகவும் குறைப்பது அசாதாரணமாக இல்லை. மெதுவான மன அல்லது உணர்ச்சிப்பூர்வமான வளர்ச்சி மற்றும் கேடுவிளைவிக்கும் அல்லது ஒதுங்கிப்போகும் நடத்தை போன்றவையும் வசைமொழியினால் உண்டாகும் மேலுமான தீயபாதிப்புகள் என்பதாக சிலர் கருதுகின்றனர். எனவே, புண்படுத்தும் பேச்சை “பட்டயக் குத்துகள்” என்று பைபிள் ஒப்பிட்டுப் பேசுவது மிகவும் சரியானதே.—நீதிமொழிகள் 12:18.
இளைஞர் சிலர் வசைமொழி என்று அழைப்பது பெற்றோரின் சிட்சித்தலே என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது. (எபேசியர் 6:4) அத்தகைய சிட்சையானது, பிடிக்காத முறையில் கொடுக்கப்பட்டாலும் உங்களுக்கு அது பிரயோஜனமுள்ளதாக இருக்கக்கூடும். (நீதிமொழிகள் 4:13) மேலும், பெற்றோர்களும்கூட, ‘அநேக விஷயங்களில் தவறுகிறார்கள்.’ ‘ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷன்.’ (யாக்கோபு 3:2) ஆகவே கோபவேசத்திலே, சிறந்த பெற்றோரும்கூட சில சமயங்களில் தாங்கள் வருந்தக்கூடிய சில காரியங்களைச் சொல்கிறார்கள். ஆனால் கடுமையான கொடிய வார்த்தைகள் வாழ்க்கையின் பாகமாக ஆகிவிட்டால், தொடர்ந்து நடக்கும் அழிவுக்கேதுவான மாதிரியாக இருந்துவிட்டால், அத்தகைய பேச்சு, வினைமையான உணர்ச்சிப் பிரகாரமான துர்ப்பிரயோகமாக மாறக்கூடும்.a
இத்தகைய சூழ்நிலைமையில் இளைஞன் என்ன செய்யக்கூடும்? முதலாவதாக, ஏன் இந்தத் துர்ப்பிரயோகம் நிலவுகிறது என்பதை புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்வோமாக.
ஏன் அவர்கள் துர்ப்பிரயோகிக்கின்றனர்
“பிள்ளைகளைத் துர்ப்பிரயோகிக்கும் பெற்றோர் பித்துப் பிடித்தக் கொடியர் அல்லர்,” என்றும் “தங்களுடைய பிள்ளைகளுக்கு அன்பு காட்டாதவர்கள் அல்லர்” என்றும் ப்ளேர் மற்றும் ரீட்டா ஜஸ்டின் என்பவர்கள் உரிமைபாராட்டுகின்றனர். துர்ப்பிரயோகம் செய்யும் பெற்றோரைக் குறித்த அவர்களுடைய ஆய்வு 85 விழுக்காட்டினர் தாங்கள் சிறுபிள்ளைகளாக இருக்கையில் உடல் பிரகாரமான துர்ப்பிரயோகத்தை அனுபவிக்காவிட்டாலும், பிள்ளை வளர்ப்பின் நல்ல சூழ்நிலைகளை இழந்தவர்களாக இருந்த அனுபவத்தைக் கொண்டிருந்தனர் என்று வெளிக்காட்டுகிறது! ஆகவே, பெற்றோர்களின் மூலம் நிகழும் பெரும்பாலான துர்ப்பிரயோகம் இளைஞரின் தவறான நடத்தை மூலமாக அல்ல, மாறாக, பெற்றோரின் பாதுகாப்பற்ற தீவிர உணர்வுகளிலிருந்தே தோன்றுகிறது என்பதாக அநேக வல்லுநர்கள் நம்புகின்றனர்.
சில பெற்றோர்கள், தங்களுடைய சொந்த தாய்-தந்தையரிடமிருந்து போதிய அளவு அன்பும் பராமரிப்பும் பெற்றிறாததன் காரணமாக, தங்களுடைய பிள்ளைகளிடமாக அன்பாக நடந்துகொள்வதைக் கடினமாகக் காண்கின்றனர். (1 யோவான் 4:19-ஐ ஒப்பிடவும்.) தங்களுடைய பிள்ளைகள் பங்கில் சிறிய தவறுகள் தங்களுடைய மரியாதை குறைவுக்குக் காரணமாக எடுத்துக்கொள்ளப்படுவதால், பேரளவான குற்றங் கண்டுபிடித்தல்களையும், சுய மரியாதையைக் கெடுக்கும் நிந்தைகளையும் கட்டவிழ்க்கின்றனர்.
மேலும், இந்தக் “கையாள முடியாத நெருக்கடியான காலங்களில்” வாழ்க்கையை நடத்துவது மற்றும் குழந்தையை வளர்ப்பது போன்றவற்றின் அழுத்தங்கள் ஒருவரை நெருக்கிவிடும் என்பதையும் நினைவில் வையுங்கள். (2 தீமோத்தேயு 3:1, புதிய உலக மொழிபெயர்ப்பு) அத்தகைய அழுத்தங்களைச் சுமக்கிறவர்களாய் தங்களுடைய மகன் அல்லது மகளின் பங்கில் கலகத்தனமாக தோன்றும் அறிகுறிக்குச் சில பெற்றோர் மட்டுக்கு மீறிய விதத்தில் பிரதிபலிக்கிறார்கள்.
வசைமொழிக்கு எந்த ஒரு சாக்குபோக்கும் இல்லை, உண்மைதான். (கொலோசெயர் 3:8) “[உங்கள்] பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்” என்று பெற்றோர் கட்டளையிடப்படுகிறார்கள். (கொலோசெயர் 3:21) இருப்பினும், ஒரு வசைகூறும் பெற்றோர் ஆழ்ந்த கலக்கமுற்றிருக்கலாம் அல்லது அழுத்தத்தின்கீழ் இருக்கலாம் என்று உணர்ந்திருப்பது புண்படுத்தும் பேச்சை சரியான நோக்குநிலையில் வைக்க ஓர் இளைஞனுக்கு உதவும். இந்த உட்பார்வையைக் கொண்டிருப்பது, வசைமொழிக்குட்பட்ட இளைஞன் பங்கில் ‘கோபத்தை அடக்க’வும் உதவலாம்.—நீதிமொழிகள் 19:11.
வசைமொழியைக் கையாளுதல்
உங்கள் பெற்றோர் ஏதோ சில உணர்ச்சிப் பிரகாரமான பிரச்னைகளால் அவதியுற்றுக்கொண்டிருந்தால், பொதுவாக, நீங்கள் அதற்குப் பொறுப்பல்ல. அவர்கள் அத்தகைய பிரச்னைகளை மேற்கொள்ள உதவுவதற்கு தேவையானதைச் செய்யும் நிலையில் நீங்கள் உண்மையில் இல்லை. சில சமயங்களில் வசைமொழியானது, கடுமையானதாக இருக்கையில் வெளியில் உதவியைத் தேடுவது, ஒருவேளை அவனுடைய உள்ளூர் சபையின் கிறிஸ்தவ மூப்பர் ஒருவரை அணுகுவது ஓர் இளைஞனுக்கு ஞானமானதாக இருக்கும்.—ஏசாயா 32:1, 2.
இருப்பினும், சூழ்நிலைமையைச் சகிக்கத்தக்க ஒன்றாக ஆக்குவதற்கு நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அடிக்கடி இருக்கின்றன. ஒரு காரியமானது உங்களுடைய பெற்றோரின் நடத்தை சகிக்க முடியாததாகத் தோன்றினாலும்கூட, நீங்கள் ‘உங்கள் பெற்றோரைக் கனம்பண்ண’ எப்பொழுதும் கடினமாக முயற்சி செய்யக்கூடும். (எபேசியர் 6:2) பதிலுக்கு பதில் பேசுவது அல்லது இன்னும் மோசமாக, அவர்களை எதிர்த்துச் சீறுவது கடவுளுக்குப் பிரியமானதல்ல. மேலும், பொதுவாக பிரச்னையை அதிகமாக்குவதிலேயே அது விளைவடையும்.
இருப்பினும் “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்.” (நீதிமொழிகள் 15:1) என்னுடைய பெற்றோர் என்னைப் பித்துப்பிடிக்கச் செய்கின்றனர் என்ற அவருடைய புத்தகத்தில் ஜாய்ஸ் வெட்ரால் “நீ பிறந்த நாளை நான் சபிக்கிறேன்” என்று கோபத்தில் பேசும் ஒரு தாயை உட்படுத்திய சந்தர்ப்பத்தை முன்வைக்கிறார். “நீ எனக்குத் தாயாக வாய்த்து நான் உன்னோடே சிக்கிக்கொண்ட அந்த நாளை நான் சபிக்கிறேன்,” என்று ஒரு பதிலை ஆத்திரமாகச் சொல்வது வெறுமென தர்க்கத்தை நீடிக்கச் செய்யும். வெட்ரால் இதுபோன்ற ஒரு பதிலை ஆலோசனையாகக் கூறுகிறார்: “நான் உங்களுக்குச் சில சமயங்களில் கடினமான சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறேன் என்பதை அறிவேன். ஒரு பெற்றோராக இருப்பது கடினம்தான்.” கோபவேசத்திற்கு இரக்கமாகப் பிரதிபலிப்பது எளிதல்ல, ஆனால், அது வாய்ச் சண்டையின் நெருப்பை அவிக்க உதவக்கூடும்.—நீதிமொழிகள் 26:20-ஐ ஒப்பிடவும்.
சில சமயங்களில் தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கவும் முடியும். ஓர் இளைஞராக இருக்கையில் அவளுடைய பெற்றோருடன் கொண்டிருந்த சில சச்சரவுகளின் மீது பிரதிபலிக்கிறவளாய் பார்பரா என்ற ஓர் இளம்பெண் ஒப்புக்கொள்வதாவது: “பேசுவதற்கு முன்பு நான் அதிகமாக சிந்தித்திருக்கக்கூடும். நான் அதிக பகுத்துணர்வைக் காட்டுவது அவசியமாக இருந்தது. உங்களுடைய பெற்றோர் ஏற்கெனவே ஏதோ ஒன்றைக் குறித்து கோப உணர்வுள்ளவராய் இருந்தால், பிற்பட்ட சமயம் ஒன்றுக்குக் காத்திருங்கள். எந்த ஒன்றும் எரிகிற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போன்றே இருக்கும்.”
இன்னொரு இளைஞர் சொல்வது: “நான் செய்ய வேண்டிய ஒன்றை செய்யாதிருந்ததே, பொதுவாக கோபவேசத்தைத் தூண்டியது என்று இப்பொழுது உணருகிறேன். பாத்திரங்களைக் கழுவுவது, குப்பைகளை அகற்றுவது போன்ற என்னுடைய வீட்டுவேலைகளைச் சரியாக நிறைவேற்றும் காரியத்தில் அதிக உணர்வுள்ள ஒருவராக மாறினேன்.” விளைவு? மோதல்கள் குறைந்தன.
உங்கள் சுய-மரியாதையைத் திரும்ப நிலைநாட்டுதல்
இருந்தபோதிலும், வசைமொழி, ஒருவருடைய சுய-மரியாதையை தகர்த்தெரிகிறது. ஆன் (ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவள்) ஒப்புக்கொள்கிறாள்: “சில சமயங்களில், நான் முட்டாளாக இருப்பதாகவும், நாம் போதிய அளவு தகுதியில்லாதவளாக இருப்பதாகவும், நான் ஒரு சுமையாக இருப்பதாகவும்கூட நம்ப ஆரம்பிக்கிறேன்.” அத்தகைய எதிர்மறையான உணர்வுகளை நீங்கள் எப்படி அகற்றக்கூடும்?
அநேக இளைஞர்கள், தங்களுடைய கடினமான வீட்டுச் சூழ்நிலைமையைத் திறமையோடு சமாளித்து வெற்றிக்கொள்கின்றனர். மேலும் உணர்ச்சிப் பிரகாரமாக முற்றிலும் பழுதற்றவர்களாய் இருக்கின்றனர். அத்தகைய இளைஞர்கள் “பொதுவாக, தங்கள் வாழ்க்கையில் தங்களை ஆவலோடு தேடும் ஏதோ ஒருவரையாவது கொண்டிருக்கின்றனர்” என்று ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன. ஜானட் ட்ரோப்ஸ் என்ற ஒரு மனோதத்துவ சமூக சேவகர் விளக்குவதாவது: “இளைஞர்கள் உடன்பாடான சிந்தனையுள்ள மற்றும் அவர்களை அருமையாகக் கருதும் மனிதரோடு காலத்தைக் கழிப்பது அவசியம்.” ஒருவேளை நீங்கள் இன்னும் உங்கள் பெற்றோரில் ஒருவருடனாவது நல்ல உறவில் இருக்கலாம், மற்றும் அவருடன் நெருங்கி வரக்கூடும். கிறிஸ்தவ சபையும்கூட உங்களுக்கு உண்மையில் உதவியாகவும் ஆதரவாகவும் இருக்கும் அக்கறையுள்ள அநேக நபர்களை கொண்டிருக்கிறது.—நீதிமொழிகள் 13:20.
ஓர் இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வது அல்லது ஓர் அயல்நாட்டு மொழியில் புலமைப்பெறுவது போன்ற பலன்தரும் பொழுதுபோக்கு ஒன்றில் ஈடுபடுவதும் உங்களுடைய சுய-மரியாதையை அதிகரிக்க உதவக்கூடும். கடவுளுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவதும் ஒரு மனநிறைவளிக்கும் குறிப்பிடத்தக்க செயல் நடவடிக்கையாகும். கடவுள் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பதைக் காண்பதில் அது குறிப்பாக அப்படி இருக்கும்! (1 கொரிந்தியர் 3:6-9ஐ ஒப்பிடவும்.) ஆன் சொல்கிறாள்: “யெகோவா என்னை பங்குகொள்ளுமாறு அன்புடன் அனுமதித்த [முழு நேர] ஊழியத்தின் மூலம் என்னுடைய தந்தை நினைக்க விரும்புவது போன்று நான் அவ்வளவு முட்டாளாக இல்லை என்பதை உணர வந்திருக்கிறேன்.”
அதிர்ஷ்டவசமாக, மிகமோசமான சூழ்நிலைமைகளும்கூட என்றுமாக நிலைத்திருப்பதில்லை. உங்கள் பெற்றோரின் நடவடிக்கைகள் நீங்கள் ஏதோ ஒரு நாள் ஒரு மோசமான பெற்றோராக இருப்பதை எவ்விதத்திலும் முன்தீர்மானிப்பதில்லை. நீங்கள் எப்படிப்பட்ட பெற்றோராக இருப்பீர்கள் என்பதன் பேரில் உங்கள் பெற்றோரால் வைக்கப்பட்ட மோசமான முன்மாதிரியைக் காட்டிலும் கடவுளுடைய வார்த்தை மிக அதிகமான செல்வாக்கைக் கொண்டிருக்கக்கூடும். இடைப்பட்ட காலத்தில், சகித்திருப்பதற்கு, உதவிக்காக யெகோவா தேவனிடம் நோக்கியிருங்கள். வசைமொழியை எதிர்ப்படுகையில் உங்களை சரியாக நடத்திக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அவருடைய இருதயத்துக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.—நீதிமொழிகள் 27:11.
உங்களுடைய காரியங்களை முதிர்ச்சியுடன் கையாளும் முறையானது, உங்கள் பெற்றோர் தங்களை மாற்றிக்கொள்ள தூண்டப்படுவதைக் கூடியதாக்கக்கூடும். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட, முன்னர் கலங்கிய பெண்ணாக இருந்த, மார்லீன் சொல்வதாவது: “என் வாழ்நாள் எல்லாம் என் தாய் கூக்கூரல் இடுவதும் நான் அவளுக்கு பதிலடி கொடுப்பதுமாக இருந்தது. ஆனால் இப்போதோ கடவுளுடைய வார்த்தை சொல்வதை பழக்கமாய் அனுசரிக்க முயற்சி செய்கிறேன். அது பலன் தருகிறது. அம்மாவின் மனப்போக்கு மாற ஆரம்பித்திருக்கிறது. பைபிளைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம் நான் அவளை மேம்பட்ட முறையில் புரிந்துகொண்டேன். எங்களுடைய உறவு விருத்தியடைந்தது.” நீங்கள் முதல்படியை எடுப்பதன் மூலம் உங்களுடையதும் அப்படி ஆகக்கூடும். (g89 6⁄8)
[அடிக்குறிப்புகள்]
a பிள்ளைகள் துர்ப்பிரயோகத்தைத் தடுத்தலுக்கான தேசீயக் குழுவால் (ஐக்கிய மாகாணங்கள்) பிரசுரிக்கப்பட்ட ஓர் உண்மை அறிக்கை சொல்கிறது: “உணர்ச்சிப் பிரகாரமான துர்ப்பிரயோகமானது வெறுமென தனிப்பட்ட சம்பவங்கள் அல்லது பெற்றோரின் இயல்பான ஏற்றத்தாழ்வான உணர்ச்சி வேகங்களால் அல்ல, மாறாக பெற்றோரின் உடன்பாடற்ற நடத்தைகளின் எங்கும் வியாபித்திருக்கும் மாதிரியால் சிறப்பித்துக் காட்டப்படுகிறது.”—சாய்வெழுத்துக்கள் எங்களுடையவை.
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
துர்ப்பிரயோகத்தில் ஈடுபடும் பெற்றோரில் 85 விழுக்காட்டினர் தாங்கள் சிறுபிள்ளைகளாயிருக்கையில் துர்ப்பிரயோகிக்கப்பட்ட அனுபவத்தை உடையவர்களாயிருந்தனர் என்று ஓர் ஆய்வு வெளிப்படுத்தியது
[பக்கம் 13-ன் படம்]
ஓர் இசைக்கருவியை வாசிக்கக்கற்றுக்கொள்வது போன்ற பலன்தரும் பொழுதுபோக்கு ஒன்றில் ஈடுபடுவது உங்கள் சுயமரியாதையை அதிகரிக்க உதவக்கூடும்