துர்ப்பிரயோகிக்கும் பெற்றோர்—உச்சளவு அழுத்தத்தைக் கொடுப்பவர்கள்
“குடும்பத்திற்கு வெளியே [பிள்ளைகளுக்கு] கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் குறைவாக இருப்பதால், தங்களைப்பற்றியும் மற்றவர்களைப்பற்றியும் வீட்டில் கற்றுக்கொள்பவை, எல்லாவற்றையும் உள்ளடக்கிய உண்மைகளாகி, அவர்களுடைய மனங்களில் ஆழப்பதிக்கப்படுகின்றன.” —டாக்டர் சூசன் ஃபார்வர்ட்.
குயவன் வடிவமற்ற ஒரு களிமண் கட்டியை எடுத்து, தகுந்த அளவில் அதோடு தண்ணீரைச் சேர்த்து, அதை அழகிய ஒரு பாத்திரமாக உருவமைக்கமுடியும். அதேபோல, ஒரு பிள்ளைக்குத் தன்பேரிலும் உலகத்தின்பேரிலும் உள்ள கருத்தைப் பெற்றோர் உருவமைக்கமுடியும். அன்பு, வழிநடத்துதல், மற்றும் சிட்சை போன்றவற்றால் அந்தப் பிள்ளை ஓர் உறுதிவாய்ந்த ஆளாக வளர்கிறது.
இருப்பினும், மிகவும் அடிக்கடி ஒரு பிள்ளையின் மனதிலும் இருதயத்திலும் ஏற்படும் எண்ணப்பதிவுகள் துர்ப்பிரயோகிக்கும் பெற்றோரால் ஏற்படுத்தப்படுகின்றன. உணர்ச்சிசம்பந்தமான, சரீரப்பிரகாரமான, மற்றும் பாலின துர்ப்பிரயோகம் தவறான எண்ண மாதிரிப்படிவங்களை (thinking patterns) உண்டாக்குகின்றன. இவை மிகவும் ஆழப்பதிக்கப்பட்டதால் மாற்றியமைப்பது கடினமாக இருக்கின்றன.
உணர்ச்சிசம்பந்தமான துர்ப்பிரயோகம்
கைமுட்டிகளைவிட வார்த்தைகள் பலமாகத் தாக்கலாம். “நான் பிறவாதிருந்தால் நலமாக இருந்திருக்கும் என்று [என் தாய்] என்னிடம் சொல்லாத ஒரு நாளையும் என்னால் நினைவுபடுத்திப்பார்க்க முடியவில்லை,” என்று ஜேஸன் கூறுகிறான். “நான் மோசமானவள் அல்லது அவ்வளவு நல்லவள் அல்ல என்றே எப்போதும் புரிந்துகொள்ள வைக்கப்பட்டேன்,” என்று கேரன் பிரதிபலிக்கிறாள்.
பிள்ளைகள் வழக்கமாகவே தங்களுக்கெதிராக என்ன சொல்லப்படுகிறதோ அதையே நம்புவார்கள். ஒரு பையன் இடைவிடாமல் முட்டாள் என்றழைக்கப்படுவானேயாகில், இறுதியில் அவன் தான் முட்டாளாகவே உணரலாம். ஒரு பெண்ணைப் பிரயோஜனமற்றவள் என்றழைத்தால், தன்னைப் பிரயோஜனமற்றவளாகவே அவள் நம்பலாம். பிள்ளைகளுக்கு யோசிக்கும் திறமை குறைவு; மேலும் தங்களைத் திட்டுவதற்காக மிகைப்படுத்தி கூறப்படுவதிலிருந்து அல்லது பொய்யிலிருந்து சரியானதைப் பகுத்துணருவது அடிக்கடி அவர்களுக்கு முடியாது.
சரீரப்பிரகாரமான துர்ப்பிரயோகம்
“என்னால் தாங்கமுடியாமல் சுவற்றில் சாய்ந்துகொள்ளும் அளவுக்கு அவர் என்னைக் குத்திக்கொண்டேயிருப்பார். நான் உணர்ச்சியிழந்துபோகும் வரை அவர் செம்மையாக அடித்துக்கொண்டேயிருப்பார் . . . அதில் மிகவும் பயந்தரக்கூடியது என்னவென்றால் அவர் இவ்வாறு வெடித்தெழுவதைத் தூண்டுவதெது என்பது எப்போதும் தெரியாததுதான்!” என்று தன்னைச் சரீரப்பிரகாரமாகத் துர்ப்பிரயோகிக்கும் தகப்பனைப்பற்றி ஞாபகப்படுத்திப் பார்க்கிறான் ஜோ.
ஜேக் தன் தகப்பனால் வழக்கமாக அடிக்கப்பட்டான். ஜேக் ஆறே வயதுள்ளவனாய் இருந்த சமயம், ஒருமுறை அவன் அவ்வாறு அடிக்கப்பட்டபோது, அவன் கை முறிந்து விட்டது. ஜேக் நினைத்துப் பார்க்கிறான்: “என் தகப்பனோ சகோதரிகளோ தாயோ பார்க்கும்படி நான் அழுவதில்லை. எனக்கிருந்த பெருமைக்குரிய ஒரே ஒரு காரியம் அதுதான்.”
பிள்ளைப்பருவ சரீரப்பிரகாரமான துர்ப்பிரயோகத்தை, “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமும் ஒரு கார் விபத்திற்குள்ளாவதற்கு” ஒப்பிடப்படலாம் என ஸ்ட்ராங் அட் தி ப்ரோக்கன் ப்ளேஸஸ் புத்தகம் கூறுகிறது. அப்படிப்பட்ட துர்ப்பிரயோகம் இந்த உலகம் பாதுகாப்பற்றது, யாரையும் நம்பமுடியாது என்றெல்லாம் ஒரு பிள்ளைக்குப் போதிக்கிறது. கூடுதலாக, பெரும்பாலும் வன்முறை வன்முறையையே தோற்றுவிக்கிறது. “பிள்ளைகள் அவர்களைத் துர்ப்பிரயோகிப்பவர்களிடமிருந்து பாதுகாக்கப்படவில்லையென்றால், ஒரு நாள் பொது ஜனங்கள் பிள்ளைகளிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டிவரும்,” என்று எச்சரிக்கிறது டைம் பத்திரிகை.
பாலின துர்ப்பிரயோகம்
ஒரு கணக்கெடுப்பின்படி, 3 பெண்களில் ஒருத்தியும் 7 பையன்களில் ஒருவனும், அவர்கள் 18 வயதாகும்போது ஒரு பாலின அனுபவத்தில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இப்பிள்ளைகளில் பெரும்பாலானோர் மெளனமாகவே துன்புறுகின்றனர். “யுத்தத்தில் போன இடம் தெரியாமல் காணாமற்போன போர் வீரர்களைப்போல, அவர்கள் வருஷக்கணக்கில் பயம் மற்றும் குற்றவுணர்ச்சியின் தனிப்பட்ட ஓர் அடர்காட்டில் இழக்கப்படுகின்றனர்,” என்று நெருக்கடியில் பிள்ளை புத்தகம் குறிப்பிடுகிறது.
“என்னைத் துர்ப்பிரயோகித்ததற்காக நான் என் தகப்பனை எவ்வாறு வெறுத்தேன், மேலும் அவரை வெறுத்ததற்காக எவ்வளவு குற்றமுடையவளாய் உணர்ந்தேன்,” என்று லவிஸ் கூறுகிறாள். “ஒரு பிள்ளை அவளுடைய பெற்றோரை நேசிக்கவேண்டும். ஆனால் நான் என் பெற்றோரை எப்போதுமே அவ்வாறு நேசித்தது கிடையாது. அதற்கு நான் எவ்வளவு வெட்கப்படுகிறேன்.” ஒரு பிள்ளையின் முக்கிய பாதுகாவலன் குற்றமிழைப்பவனாக மாறும்போது ஏற்படும் இத்தகைய குழப்பமூட்டும் உணர்ச்சிகள் புரிந்துகொள்ளப்படக்கூடியவையே. “நம்மை நேசித்து நம்மீது அக்கறை கொள்ளவேண்டிய, நம் சொந்த பெற்றோர் நம்மீது அந்தளவுக்கு அக்கறையே இல்லாது இருக்கமுடியும் என்பதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று குற்றமற்றிருப்பதற்கான உரிமை (The Right to Innocence) புத்தகத்தில் கேட்கிறார் பேவர்லி எஞ்சல்.
பாலின துர்ப்பிரயோகம் வாழ்க்கையைப்பற்றிய ஒரு பிள்ளையின் நோக்குநிலை முழுவதையுமே கோணலாக்கிவிடலாம். “குழந்தையாக இருக்கும்போது பாலுறவுக்காகத் தாக்கப்பட்ட வயதுவந்த ஒவ்வொருவரும் அவனுடைய அல்லது அவளுடைய பிள்ளைப்பருவத்திலிருந்து தாங்கள் நம்பிக்கையிழக்குமளவுக்குக் குறையுள்ளவர்கள், பிரயோஜனமற்றவர்கள், உண்மையிலேயே மோசமானவர்கள் என்ற, விரைவில் ஊடுருவிப் பரவும் உணர்ச்சிகளையே கொண்டுவருகின்றனர்,” என்று டாக்டர் சூசன் ஃபார்வர்ட் எழுதுகிறார்.
அது மறைந்துபோவதில்லை
“துர்ப்பிரயோகிக்கப்படுவது அல்லது அசட்டை செய்யப்படுவது பிள்ளையின் சரீரம் மட்டுமல்ல. துன்பத்திற்குள்ளான குடும்பங்கள் ஒரு பிள்ளையின் மனதைத் துர்ப்பிரயோகிக்கின்றன,” என்று எழுதுகிறார் ஆராய்ச்சியாளர் லின்டா T. ஸேன்ஃபர்ட். ஒரு பிள்ளை உணர்ச்சிசம்பந்தமாகவோ சரீரப்பிரகாரமாகவோ பாலின வகையிலோ துர்ப்பிரயோகிக்கப்படும்போது, அவளோ அவனோ நேசிக்கப்படாதவர்கள் மற்றும் பிரயோஜனமற்றவர்கள் என்ற உணர்ச்சிகளோடு வளரலாம்.
முன்பு குறிப்பிடப்பட்ட ஜேஸன், தற்கொலை செய்துகொள்ளும் அபாயத்திலுள்ளவன் என்று அறிவிக்கப்படும் அளவுக்கு வளர்ந்த பருவத்தில் தாழ்ந்த சுய-மதிப்பைக் கொண்டிருந்தான். அனாவசியமாக உயிரை அபாயத்திற்குள்ளாக்கும் நிலைமைகளில் தன்னைத்தானே வைத்துக்கொண்டு, ‘நீ ஒருபோதும் பிறந்திருக்கவே கூடாது,’ என்று தனது தாய் கற்பித்ததுபோலவே தன் உயிரை மதிப்பிட்டான்.
ஒரு குழந்தையாய் இருக்கும்போது சரீரப்பிரகாரமாகத் துர்ப்பிரயோகிக்கப்பட்டதன் விளைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், ஜோ சொன்னான்: “நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதாலோ திருமணம் செய்துகொள்வதாலோ அந்த விளைவுகள் மறைந்துபோவதில்லை. நான் எப்போதும் எதைப்பற்றியாவது பயந்துகொண்டிருக்கிறேன்; அதற்காக என்னையே நான் வெறுக்கிறேன்.” சரீரப்பிரகாரமாகத் துர்ப்பிரயோகித்த குடும்பத்தில் நிலவியிருந்த அழுத்தம், அநேக பிள்ளைகள் எதிர்மறையான எதிர்பார்ப்புகளோடும், பாதுகாப்பதைவிட சிறைப்படுத்தும் மட்டுமீறிய பாதுகாப்போடும் வளரும்படி செய்கிறது.
முறைதகாப்புணர்ச்சி, கானியின் வயதுவந்த பருவத்தில் தன்னைப்பற்றி அழியாத ஒரு தவறான அபிப்பிராயத்தையே உருவாக்கியது: “ஜனங்கள் என் உட்புறத்தை நோக்கி நான் எவ்வளவு வெறுக்கத்தக்கவளாக இருக்கிறேன் என்று பார்க்கமுடியுமென அநேக சமயங்களில் நான் இன்னும் நினைத்துப் பார்க்கிறேன்.”
எல்லா வகை துர்ப்பிரயோகங்களும் வயதுவந்த பருவத்தை அடையும்போது ஆழப்பதியத்தக்க விஷ பாடங்களைக் கற்பிக்கின்றன. கற்றவற்றை மனதிலிருந்து நீக்கமுடியும் என்பது உண்மையே. பிள்ளைப்பருவ துர்ப்பிரயோகத்திலிருந்து தப்பிப்பிழைத்துப் பழைய நிலைக்குத் திரும்பிவந்த எண்ணற்ற ஆட்கள் இந்த உண்மைக்குச் சாட்சி பகர்கின்றனர். ஆனால் பெற்றோர் தங்கள் பிள்ளையின் பிறப்பிலிருந்தே, அவனைப்பற்றியும் உலகைப்பற்றியும் அவன் கருத்தின் பெரும்பாகத்தை உருவாக்கி வருகின்றனர் என்று உணர்ந்தால் எவ்வளவு நலமாயிருக்கும். ஒரு பிள்ளையின் சரீரப்பிரகார மற்றும் உணர்ச்சிசம்பந்தமான நலன் பெரும்பாலும் அவனுடைய பெற்றோர் கைகளிலிருக்கிறது.
[பக்கம் 7-ன் படம்]
கைமுட்டிகளைவிட வார்த்தைகள் பலமாகத் தாக்கலாம்