இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் ஏன் என்னுடைய தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டும்?
டேரில் குடும்பத்தில் மூத்தப் பிள்ளை. குறிப்பாக கடினமாக இருந்த ஒரு காலப்பகுதியின் போது அவன் குறைவான மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். அவனுடைய பெற்றோர் விரைவாக செயல்பட்டனர். டேரில் நினைவுபடுத்தி சொல்கிறான்: “எனக்காக மட்டுமல்லாமல், நல்ல மதிப்பெண்கள் முக்கியமானவை என்பதை என் தங்கைகளுக்கு காண்பிக்கும் வகையில் என் பள்ளி பாடங்களில் முன்னேறும்படியாக என்னை அவர்கள் உற்சாகப்படுத்தினர்.”
நீங்கள் உங்கள் குடும்பத்தில் மூத்த பிள்ளையாக இருந்தால், ‘உன் தம்பி தங்கைகளுக்கு நல்ல முன்மாதிரியை வை!’ என்பதாகச் சொல்லப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அடிக்கடி இது வன்மத்தை உண்டுபண்ணுகிறது. உடன்பிறப்புக்களை வளர்த்தல் என்ற தங்களுடைய புத்தகத்தில் கேரல் மற்றும் ஆண்ரூ காலடீன் சொல்கிறார்கள்: “தலைச்சன் பிள்ளைகளும்கூட தங்கள் உடன்பிறப்புக்களோடு ஒப்பிட, தங்கள் பெற்றோரின் உயர்ந்த எதிர்பார்ப்புகள் குறித்து குறைகூறுகிறார்கள். முதன்மைநிலை பெற, சாதனைப் புரிய பெற்றோருடைய அழுத்தத்தை அவர்கள் உணருகின்றனர். ‘இந்த வயதில் இதை நீ செய்யக்கூடாது,’ ‘உனக்குத் தெரிந்திருக்கவேண்டும்’ என்பவை தலைச்சன் பிள்ளைகளுக்குப் பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரைகளாகும்.”
ஆனால் மூத்தப்பிள்ளையிடமிருந்து பெற்றோர் ஏன் இவ்வளவு எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் ஒருவேளை அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கிறார்களா?
ஏன் நீங்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும்
பூர்வ காலங்கள் முதற்கொண்டு, தலைச்சன் பிள்ளைகள்—விசேஷமாக மகன்கள்—பெற்றோரின் உயர்வான எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டவர்களாய் இருந்திருக்கிறார்கள். தங்கள் தகப்பன்மார்களின் இனப்பெருக்க சக்திகளின் தொடக்கமாக இருப்பதன் காரணமாக பைபிள் காலங்களில் முதற்பேறான மகன்களாக அவர்கள் விசேஷமாக நேசிக்கப்பட்டார்கள். (ஆதியாகமம் 49:3; உபாகமம் 21:17) ஏன், யெகோவா தாமேயும், இஸ்ரவேல் ஜனங்களிடமாக தம்முடைய ஆழமான அன்பை வெளிப்படுத்துவதற்கு அவர்களைத் தம்முடைய “சேஷ்ட புத்திரன்” என்பதாக அழைத்தார். (யாத்திராகமம் 4:22) ஆனால் குடும்பத்தின் தலைவனாக கடைசியாக தன் தகப்பனுக்கு அடுத்து அவன் வர இருந்ததன் காரணமாக சேஷ்ட புத்திரனிடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
அப்படியென்றால், பெற்றோர்—நல்ல காரணத்தோடு—இன்னும் தங்கள் மூத்த பிள்ளையிடம் உயர்வான எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கும் மனச்சாய்வுடையவர்களாக இருப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடாது. ஒரு காரியமானது, நீங்கள் மூத்த பிள்ளையாக இருந்தால், உங்கள் உடன்பிறப்புக்களைவிட (தம்பி, தங்கைகள்) வீட்டு வேலைகளில், தார்மீக மதிப்பீடுகளில் மற்றும் பைபிள் நியமங்களில் ஒருவேளை அதிகமான பயிற்றுவிப்பை பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் கற்ற காரியங்களை அவர்களுக்கு கடத்த நீங்கள் எதிர்பார்க்கப்படக் கூடாதா?
இவ்விதமாக 14 வயது பையன் ஒருவன், வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்ள தன்னுடைய தங்கைகளுக்கு உதவி செய்யும்படியாக தன்னுடைய பெற்றோரால் சொல்லப்பட்டான். அவன் நினைவுகூர்ந்து சொல்வதாவது: “நான் மூத்தவனாக இருப்பதன் காரணமாக, என் தங்கைகளைவிட எனக்கு அதிகமான பயிற்றுவிப்பும் அனுபவமும் இருந்தது என்பதாக என் பெற்றோர் விளக்கினார்கள்.”
அநேக பெற்றோர் இப்பொழுது எதிர்ப்படும் பொருளாதார அழுத்தங்களின் காரணமாக தம்பிகளையும் தங்கைகளையும் பயிற்றுவிப்பதில் உங்கள் உதவி குறிப்பாகத் தேவைப்படும். அநேகமாக தாய்மார்களும் தகப்பன்மார்களும் உலகப்பிரகாரமான வேலைகளை செய்ய வேண்டியிருப்பதால் வீட்டில் குறைந்தளவு நேரமே அவர்களுக்கிருக்கிறது. ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் நீங்கள் வாழ்ந்து வந்தால், உங்கள் பெற்றோர், இரண்டு பெற்றோருக்குரிய கடமைகளை நிறைவேற்ற முயற்சி செய்யும் அழுத்தத்தின் கீழ் பாடுபட்டுக் கொண்டிருக்கலாம். வீட்டில் இளையவர்களுக்கு ஒரு முன்மாதிரியை நீங்கள் வைப்பது, சுமையைக் குறைக்க அதிகத்தைச் செய்யக்கூடும். கூடுதலாக, உங்கள் தம்பி தங்கைகளுக்கு நல்ல முன்மாதிரியை வைப்பது நீங்கள் பொறுப்புள்ள பெரியவராக ஆவதற்கு உங்களுக்கு உதவிசெய்யும் என்பதை உங்கள் பெற்றோர் அறிவர்.
அவர்களிடம் பொறுப்புள்ளவர்களாக இருத்தல்
உண்மைதான், ஒரு முன்மாதிரியாக இருப்பதில் நீங்கள் ஒருவேளை செளகரியமாக உணராமல் இருக்கலாம். ஓர் இளம் பெண் சொன்னவிதமாகவே, “மூத்தப் பிள்ளையாக இருப்பது மிகவும் கடினமாகும், ஏனென்றால் எனக்கு அதிகமான சிலாக்கியங்களும் பொறுப்புகளும் கிடைக்கின்றன.” ஆனால் உங்கள் நடத்தை உங்கள் உடன்பிறப்புக்கள் மீது செல்வாக்கைச் செலுத்துகிறது என்பது உண்மையாக இருக்கிறது. அநேகமாக அவர்கள் உங்கள் பேச்சையும், உடையையும், நடத்தையையும் பின்பற்றுவார்கள். தன் மூத்த சகோதரனைப் பற்றி ஓர் இளைஞன் சொன்னவிதமாகவே: “முதலில் அவன் காரியங்களைச் செய்வதை நான் விரும்புகிறேன். அப்பொழுது அவை எவ்விதமாக செய்யப்பட வேண்டும் என்பதை நான் பார்த்துக்கொள்ளலாம்.” ஆகவே, நீங்கள் என்ன செய்கிறீர்கள், சொல்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும்! உடன்பிறப்புகளை வளர்த்தல் புத்தகத்தின் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டும் வண்ணமாக: “பொறுப்புள்ளவர்களாக இருப்பது என்பது சேஷ்ட புத்திரர்களுக்கு பெற்றோரின் அடையாளச் சொல்லாக இருக்கிறது.”
மோசேயின் மூத்த சகோதரியான மிரியாம், தன் உடன்பிறந்தானிடமாக பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் நல்ல உதாரணமாக இருந்தாள். புதிதாகப் பிறந்த எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுவிட வேண்டும் என்ற ராஜாவின் கட்டளையை மீறி, குழந்தை மோசயை நாணற்பெட்டியில் அல்லது பேழையில் ஒளித்துவைத்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்தப் பேழை நைல் நதி வழியாக மிதந்து வருகையில் மிரியாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்து பார்வோனுடைய குமாரத்தியினால் அது பாதுகாப்பாக கண்டெடுக்கப்படுவதை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். தைரியமாக மிரியாம் அவளை அணுகி, குழந்தையின் சொந்த தாயே அதற்கு பால் கொடுக்க ஏற்பாடு செய்தாள். தன்னுடைய தம்பிப் பாப்பாவின் சார்பாக அவளுடைய தைரியமான நடவடிக்கையின் காரணமாக மோச உயிர் பிழைத்தது மட்டுமல்லாமல், இஸ்ரவேலின் மீட்பராகவும் வளர்ந்தான்!—யாத்திராகமம் 2:1–10.
உங்கள் தம்பி தங்கைகளிடமாக அதேவிதமான பொறுப்புணர்ச்சி உங்களுக்கிருக்கிறதா? அவர்கள் மீது வன்மம் கொள்வதற்கு பதிலாக, அவர்களுடைய நெருங்கிய தோழராகவும் நண்பராகவும் இருக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? (நீதிமொழிகள் 17:17) உதாரணமாக பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்கு உதவியையும் ஆலோசனையையும் கொடுக்கும் வகையில் நீங்கள் அதிகத்தைச் செய்யமுடியும். ஒருவேளை உடன்பிறந்தாரில் ஒருவரால் பள்ளியில் எவருடனாவது அனுசரித்துப் போக இயலாமல் இருக்கலாம். மற்றொருவர் ஒருவேளை விரைவில் வர இருக்கும் ஒரு நிகழ்ச்சி—புதிய ஓரிடத்துக்கு இடம் மாறிச் செல்லுதல், பள்ளியில் முதல் நாள், மருத்துவரிடம் செல்வது—குறித்து கவலையாக இருக்கலாம், கொஞ்சம் ஊக்குவிப்பும் ஆதரவும் தேவைப்படலாம். அநேகமாக, நீங்கள் ஏற்கெனவே இப்படிப்பட்ட ஒரு நிலையை அனுபவித்தவர்களாக, உங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறீர்கள். ஒரு பருவ வயது பெண் தன் அக்காவைப் பற்றி சொன்னது போல: “அவள் எனக்கு ஒரு வழிகாட்டி போல இருக்கிறாள். நான் அனுபவிக்கும் காரியங்களை புரிந்து கொள்கிறாள், ஏனென்றால் அவள்தானே அந்தக் காரியங்களை ஏற்கெனவே அனுபவித்திருக்கிறாள்.”
ஆனால் காரியங்களை வெகுதூரம் எடுத்துச் செல்வதில் ஆபத்து இருக்கிறது.
உங்கள் வரம்புகளை அறிந்திருங்கள்!
“அவன் தன்னை அதிகார உருவம் என்பதாக நினைத்துக்கொள்கிறான்” என்பதாக தன் அண்ணனைப் பற்றி 15 வயது பையன் சொல்கிறான். “நான் அவனோடு தர்க்கம் செய்வேன், மேசையை தாண்டி என்னை கைநீட்டி அறைந்துவிடுவான். நாங்கள் எப்போதுமே ஒத்திணங்கிப் போவதில்லை.” ஒரு பருவ வயது பெண், தன் தங்கைகளோடு இதேவிதமான பிரச்னை இருப்பதாகத் தெரிவிக்கிறாள். “நான் அவர்களோடு உட்கார்ந்து ஒருசில வேதவசனங்களை அவர்களுக்குக் காண்பித்தேன்” என்று அவள் சொல்லுகிறாள். “ஆனால் அவர்கள் கோபமடைகிறார்கள்! சில சமயங்களில் எங்களுடைய தர்க்கம் அத்தனை மூர்க்கமாகிவிடுவதால், குத்துச்சண்டையில் அது கொண்டுவிடுகிறது.”
துரதிர்ஷ்டவசமாக, இளைஞர், சில சமயங்களில் முன்மாதிரியாக இருப்பதை தலைவராக இருப்பதோடு குழப்பிவிடுகிறார்கள். உங்கள் தம்பி தங்கைகளுக்கு ஒரு நண்பராகவும் ஆலோசகராகவும் நீங்கள் இருக்கக்கூடும், அவர்களுடைய பெற்றோராக ஒருபோதும் இருக்கமுடியாது! அவர்களை சிட்சித்து அல்லது புத்திமதி சொல்வதன் மூலம் அவ்விதமாக அவர்களோடு நடந்துகொள்ள உங்கள் பங்கில் எந்த முயற்சியிலும் அவர்கள் கோபங்கொள்வார்கள் என்பது நிச்சயமாகும். ‘யெகோவாவின் சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும் அவர்களை வளர்ப்பது,’ உங்களுடைய பெற்றோரின் வேலையாக இருக்கிறது—உங்களுடையதல்ல! (எபேசியர் 6:4) ஆகவே ஓர் ஆலோசனை சிறந்ததாக இருக்கையில், அவர்கள் அதை ஏற்க மறுக்கையில், நீங்கள் ஒதுங்கிக்கொண்டு காரியத்தை உங்கள் பெற்றோர் கையாள அனுமதியுங்கள்.
இந்த விஷயத்தில் உங்கள் வரம்புகளை அறிந்திருப்பது, உங்கள் பெற்றோரோடு மோதுவதை தவிர்க்கும்படியும்கூட செய்யும். ஒரு தம்பியோ அல்லது தங்கையோ உங்கள் அனுபவம் கையாளுவதற்கு வெகுவாக அப்பாற்பட்ட ஒரு விஷயத்தின்பேரில் உங்கள் ஆலோசனையைக் கேட்கலாம். அல்லது உங்கள் பெற்றோர் அறிவதற்கு உரிமையுள்ள ஒரு தவறை அவனோ அல்லது அவளோ உங்களிடம் அறிக்கையிடலாம். நீங்கள் தாமே விஷயங்களை கையாள முயற்சி செய்வதற்கு பதிலாக நீதிமொழிகள் 11:2-லுள்ள வார்த்தைகளை நினைவுபடுத்திப் பாருங்கள்: “அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.” அடக்கத்தோடு உங்கள் பெற்றோர் நிலைமையைக் குறித்து எச்சரிப்பூட்டப்படுவதைப் பார்த்துக்கொள்ளுங்கள்; ஆம், அவனையே அவர்களை அணுகும்படியாக உங்கள் உடன்பிறந்தானை உற்சாகப்படுத்துவது நல்லது.
நீங்கள் உங்கள் வரம்புகளை நினைவில் வைக்க வேண்டிய மற்றொரு பகுதியை ஓர் இளைஞன் இவ்விதமாகச் சொல்லி சுட்டிக்காண்பிக்கிறான்: “மூத்தவனாக இருப்பதை நான் விரும்புகிறேன், ஆனால் சில சமயங்களில் எல்லாவற்றையும் சரியாகச் செய்வது கடினமாக இருக்கிறது.” பெருஞ்சுமையாயுள்ள பளுவின் கீழிருப்பதாக உணருவதற்குப் பதிலாக, “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்” என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். (யாக்கோபு 3:2) இயேசு கிறிஸ்து மாத்திரமே பரிபூரண முன்மாதிரியாக இருக்கிறார்! (1 பேதுரு 2:21) ஆகவே உங்களை அளவுக்கு அதிகமாக முக்கியமானவராக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
நன்மைகள்
உங்கள் தம்பி தங்கைகளுக்கு நல்ல முன்மாதிரியை வைக்க பாடுபடுவது பிரச்னைகளையும் ஆனால் வெகுமதிகளையும்கூட கொண்டிருக்கிறது. ஒரு காரியமானது, உங்களைப் பொறுப்புள்ளவராக காண்பிப்பதன் மூலம், நீங்கள் வெகு விரைவாக முதிர்ச்சியுள்ளவர்களாவீர்கள், சந்தேகமில்லாமல் இன்னும் கூடுதலான சிலாக்கியங்களைச் சம்பாதித்துக் கொள்வீர்கள். (லூக்கா 16:10) பின்னால் உங்களுக்கென்று சொந்தமாக பிள்ளைகள் இருக்குமானால், அப்போது விலைமதிக்கமுடியாததாக நிரூபிக்கும் திறமைகளையும் தனியாற்றல்களையும் நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் முன்மாதிரி உங்களுடைய தம்பி தங்கைகளை பொறுப்புள்ளவர்களாவதற்கு கடவுள் பயமுள்ள பெரியவர்களாக வளர்வதற்கு தூண்டும் வகையில் அவர்கள் மீது கொண்டிருக்கும் பாதிப்பும்கூட கவனியாமல் விடப்படக்கூடாது.
உங்கள் உடன்பிறந்தாரில் அனலான, அன்புள்ள அக்கறையைக் காண்பிப்பதன் மூலம், நீங்கள் அவர்களுடைய நிலையான அன்பையும் மரியாதையையும் பெற்றுக்கொள்ளலாம். உண்மைதான், அவ்வப்போது அவர்கள் உங்களை கோபப்படுத்தக்கூடும். ஆனால் ஒரு பருவ வயது பெண் ஒப்புக்கொள்கிற வண்ணமாக: “நான் ஒரு காரியத்துக்காக உண்மையில் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றி என்னிடம் பேசுகிறவர்களும் எனக்குத் தேவையானபோது என்னை அணைத்துக்கொள்கிறவர்களுமான இரண்டு சகோதரிகளைக் கொண்டிருப்பதற்காக.” இந்த அன்பின் கட்டு, ஒரு முறை ஏற்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கக்கூடும். ஒரு நல்ல முன்மாதிரியை வைக்க முயற்சி எடுப்பது தகுதியுள்ளதே. (g89 10/22)
[பக்கம் 19-ன் படம்]
காரியங்களைச் செய்யக் கற்றுக்கொள்ள உங்கள் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் உதவிசெய்யுங்கள்
[பக்கம் 20-ன் படம்]
வயதில் மூத்த அக்கா, ஒரு தலைவியைப் போல நடந்துகொண்டால் அவள் மீது வெறுப்பு ஏற்படலாம்