போட்டி விளையாட்டுகளில் வன்முறை ஏன் இந்த அதிகரிப்பு?
“போட்டி விளையாட்டின் பொருள் ஆரோக்கியம்” என்பது ஒரு முதுமொழி. அளவான போட்டி விளையாட்டுகள் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும் என்பதாகப் பூர்வ காலங்களில் கிரேக்க மருத்துவர்கள் நம்பினர்.
என்றபோதிலும் இன்று போட்டி விளையாட்டு நிகழ்ச்சிகள் அவற்றில் பங்குபெறுகிறவர்களுக்கும் அல்லது பார்வையாளர்களுக்கும் ஆரோக்கியமாக இல்லை. போட்டி விளையாட்டுகளில் வன்முறையின் இடம் இந்தளவுக்குப் போய்விட்டிருப்பதால், அதிகாரப்பூர்வமான நிறுவனம் ஒன்று, ஐரோப்பிய பாராளுமன்றம், “போட்டி விளையாட்டில் மூர்க்கத்தனம் மற்றும் வன்முறை” பேரில் ஒரு நீண்ட தீர்மானத்தை அங்கீகரித்திருக்கிறது. போட்டி விளையாட்டு நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னுமாக எதிர்த்து விளையாடும் அணிகள் மற்றும் ரசிகர்களுக்கு இடையில் உண்டாகும் பயங்கரமான மூர்க்கத்தனத்தைக் கண்டு அச்சம் தெரிவிப்பவர்களாய், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சம்பவங்கள் ஏற்படுவதற்கான பல்வேறு அம்சங்களையும், காரணங்களையும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்தனர். அவர்கள் கண்டது என்ன? போட்டி விளையாட்டுகளில் வன்முறைகள் என்ன வகைகளில் காணப்படுகின்றன?
‘எங்கும் பரவியுள்ள ஒரு நிலை’
உலகில் மிகப் பிரபல விளையாட்டாக இருக்கும் கால் பந்தாட்டம் தானே அதிகமாகக் குறைகூறப்படுகிறது, ஆனால் இந்தப் பிரச்னையில் எல்லாவிதமான விளையாட்டுகளும் உட்படுகின்றன. 1988-ல் ஐரோப்பிய சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி ஜெர்மனியில் நடந்தபோது வன்முறை மூண்டது. தங்களுடைய தேசிய அணியை உட்படுத்திய ஒரு விளையாட்டிற்குப் பின்பு பிரிட்டிஷ் விளையாட்டு ரசிகர்கள் ஒரு மூர்க்கத்தனமான போரட்டத்தை ஆரம்பித்தனர், இது காவல்துறையினர் காயமடைவதிலும், உடைமைகள் சேதமடைவதிலும், 300 பேர் கைதுசெய்யப்படுவதிலும் விளைவடைந்தது. அதே போட்டி சம்பந்தமாக இத்தாலிய அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து உற்சாகத்தின் வெறியில் மூவர் மரித்தனர்.
பிரிட்டனில் பேர்பெற்ற போக்கிரிகள் தாங்கள் போகும் இடமெல்லாம் கலவரத்தை ஏற்படுத்துகின்றனர், “ஆங்கிலேயரின் கால்பந்தாட்டத்தின் மதிப்பை உள்ளூரிலும் வெளியூரிலும் கெடுப்பதற்கு உறுதுணையாய் இருக்கின்றனர்” என்று தி கார்டியன் கூறியது. இந்தப் போட்டி விளையாட்டுக் காலம் ஒன்றில் பல தடவைகள் இத்தாலிய போட்டி விளையாட்டுகளைப் பற்றிப் பேசும் தினசரிகளின் திங்கள் பதிப்பு “இருண்ட ஞாயிற்றுக் கிழமைகளைப் பற்றி—உயிரிழப்பு, காயமுறுதல் மற்றும் ஊனத்துக்கு வழிநடத்தும் போட்டி விளையாட்டு நிகழ்ச்சிகள் பற்றி பேசியது. போட்டி விளையாட்டுகள் நடைபெறும் இடங்கள், ஒரு தினசரி குறிப்பிட்டதுபோல, “கொரில்லா சண்டைத் திடல்களாக” ஆகியிருக்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட நிலைமைகள் பிரிட்டனுக்கும் இத்தாலிக்கும் மட்டுப்பட்டதாயில்லை. நெதர்லாந்து, ஜெர்மனி, சோவியத் யூனியன், ஸ்பய்ன், மற்றும் பல நாடுகள் இதேப் பிரச்னையைக் கையாளவேண்டியிருக்கிறது.
“விளையாட்டு ரசிகர்களின் போர்”
சில விளையாட்டு ரசிகர்களின் மூர்க்கத்தனம் செய்தி சாதனங்களால் தூண்டுவிக்கப்பட, அவர்கள் தங்களுடைய கீழ்த்தரமான உள்ளுணர்ச்சிகளுக்கு இடங்கொடுத்து அவற்றை வெளிப்படுத்துகின்றனர். கால்பந்தாட்டங்களில் இத்தாலிய அல்ட்ரா அல்லது பிரிட்டிஷ் போக்கிரிகள் “செஞ்சேனை” அல்லது “புலிப் படை” போன்ற பெயர்களுக்குப் பின்னிருந்து செயல்படுகின்றனர். கால் பந்தாட்ட ரசிகன் “எதிரணியினரின் பிராந்தியத்தை வெற்றிக்கொள்ள போரிட விரும்புகிறான்,” என்று அவர்களில் ஒருவன் கூறுகிறான். விளையாட்டு மைதானங்களின் பார்வையாளர் அரங்குகளின் நிலை பூர்வ ரோமரின் அரங்குகளில் இருந்தது போன்றதாயிருக்கிறது, அதாவது அந்தப் பார்வையாளர்கள் காட்சியரங்கில் இருந்த வீரர்களைக் கொல்லும்படி ஊக்குவித்தனர். அவர்களை ஊக்குவிக்க விளையாட்டு ரசிகர்கள் பயன்படுத்திய சுலோகங்களின் இடையே கீழ்த்தரமான வார்த்தைகளும் இனக்கூற்றுகளும் பயன்படுத்தப்பட்டன.
விளையாட்டு ரசிகர்கள் பெரும்பாலும் ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச்செல்கின்றனர். சில போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பு காவல் துறையினர் செய்த சோதனைகளில் முழு அளவான ஆயுதங்கள்—கத்திகள், கைத் துப்பாக்கிகள் மற்றும் மேசைக்கோற் பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்துகள்—கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பிரிட்டிஷ் விளையாட்டு மைதானங்களில் இரும்பு முனை கொண்ட அம்பு மழை பொழிந்திருக்கின்றன!
அரசாங்கம் தலையிடுதல்
போட்டி விளையாட்டுகளில் வன்முறையைக் கட்டுப்படுத்திட பலமான நடவடிக்கைகளை எடுக்கும்படி ஐரோப்பிய பாராளுமன்ற தீர்மானம் அரசாங்கங்களைக் கேட்டுக்கொண்டது. உதாரணமாக, பிரிட்டிஷ் அரசு அதன் பிரதமராயிருந்த மார்கரெட் தாட்சர் தலைமையில் அப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டது. அரங்குகளுக்குச் செல்வோர் கண்டிப்பாக அடையாள அட்டையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது போன்ற மிகவும் கடுமையான சட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்று திருமதி தாட்சர் வற்புறுத்தினார். அந்த அடையாள அட்டைகளைக் கொண்டிருப்பவர்கள் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளாகக் காணப்பட்டால், அந்த அடையாள அட்டைகள் அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டுவிடும். மேலும், விளையாட்டு ரசிகர்களைக் கண்காணிப்பதற்காக தொலைக்காட்சிக் கருவிகளைக் கொண்டிருக்கும் வகையில் விளையாட்டு அரங்குகளைப் புதுப்பிக்கவும், அல்லது புதிதாய்க் கட்டவும், எதிர் அணியினரின் ஆதரவாளர்களைப் பிரித்திட இடைத் தடைகளை அமைக்கவும், எரிக்கும் தன்மைவாய்ந்த எந்தப் பொருட்களையும் அப்புறப்படுத்தவும் பிரிட்டன் திட்டங்களைக் கொண்டிருக்கிறது. வன்முறை மிகுந்த ரசிகர்களடங்கிய போக்கிரிக் கும்பல்களின் தலைவர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்வதற்காக காவல் துறையினர் அவர்களைக் கவனமாகக் கண்காணித்து வந்திருக்கின்றனர்.
மற்ற நாடுகளிலுங்கூட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இத்தாலிய விளையாட்டு அதிகாரிகள் அரசின் உள்விவகாரத் துறையுடன் சேர்ந்து விளையாட்டு மைதானங்களில் முள் கம்பி வேலிகளை அமைத்திடவும், வலைக் கம்பிகளைக் கொண்டிருக்கவும், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தவும், காவல் துறையினரை ஏராளமாகப் பயன்படுத்தவும் தொலைக்காட்சி கருவிகளைப் பயன்படுத்தவும் தீர்மானித்திருக்கிறது. விளையாட்டு மைதானங்களை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது குறித்தும் ஒரு யோசனை இருக்கிறது. 1988-ல் கொரியாவில் சீயோல் ஒலிம்பிக் விளையாட்டுக்கு ஆயத்தம் செய்யும்வகையில் காவல் துறையினருக்கு பயங்கரவாதிகளின் தாக்குதல்களை மேற்கொள்வதற்குரிய பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்பு நடுவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களும் உண்டு. அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற கால்பந்தாட்ட காலப்பகுதியில் 690 நடுவர்கள் தாக்குதலுக்குள்ளானார்கள். சீயோல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒரு குத்துச் சண்டைப் போட்டியின் போது நடுவரின் தீர்ப்புக்கு இணங்காத பயிற்சியாளர்களாலும் காவல் துறையினராலுங்கூட ஒரு நடுவர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டார்.
மக்களுடைய உயிருக்கு ஏற்படும் ஆபத்துகள் தவிர, போட்டி விளையாட்டு வன்முறைக்குப் பொருள் செலவும் கூட இருக்கிறது. இது திருட்டு, கொள்ளை, மற்றும் நாச வேலைகளால் உண்டாகும் ஆயிரக்கணக்கான டாலர் நஷ்டத்துடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, ஆனால் அவை ஏற்படாமலிருக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கான செலவும் உட்படுகிறது. பிரிட்டிஷ் கால்பந்தாட்ட நாள்காட்டியில் சாதாரணமான ஒரு நாளில், காவல் துறையினர் அளித்திடும் பாதுகாப்புக்காக மட்டும் ஏறக்குறைய 7,00,000 டாலர் செலவுசெய்யப்படுகிறது.
ஏன் இப்படிப்பட்ட மிருகத்தனமான செயல்கள்?
வன்முறை—இன்று போட்டி விளையாட்டுகள் விளையாடப்படும் விதத்தின் “உயிர்க்கூறு”
இன்று, வன்முறையான மூர்க்கத்தனம் போட்டி விளையாட்டுகளுடன் இணைந்துவிட்டிருக்கிறது. அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், ஐரோப்பிய பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆயத்தப்படுத்திய அதே குழு குறிப்பிட்டதாவது, “வன்முறை போட்டி விளையாட்டின் ஓர் அத்தியாவசிய பாகம் அல்ல, ஆனால் அவை விளையாடப்படும் நிலைமைகள் மற்றும் விளையாட்டு விதிகள் என்று அழைக்கப்படும் காரியங்கள் அவற்றைப் போதியளவுக்குத் தடைசெய்யமுடியவில்லை என்ற உண்மையின் உயிர்க்கூறாக இருக்கிறது.” இதற்குக் காரணம் என்ன?
சரி, விளையாட்டு ரசிகர்களின் வன்முறைச் செயல்கள் தவிர, போட்டி விளையாட்டுகள் விளையாடப்படும் முறையும் மாறிவிட்டிருக்கிறது. ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புக்கொண்டது போன்று, சமுதாயத்தில்தானே “வன்முறை வளர்ந்துகொண்டிருக்கிறது.” மேலும், போட்டி விளையாட்டு உலகம் உடல் சார்ந்த செயலை இனிமேலும் வற்புறுத்துவதாயில்லை. உதாரணமாக, ஏதென்ஸ் நகரில் 1896-ல் நடைபெற்ற நவீன காலத்திய முதல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் பிரிட்டிஷ் விளையாட்டு வீரர்கள் தகுதியற்றவர்கள் என்று விளையாட்டில் கலந்துகொள்வதிலிருந்து நீக்கப்பட்டனர், காரணம் அவர்கள் விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்னரே பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு பயிற்சி பெறும் செயலே அந்தச் சமயங்களில் முக்கியத்துவமளிக்கப்பட்ட அருங்கலை ஆவிக்கு முரணாயிருப்பதாகக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு காரியம் இப்பொழுது பெரும்பாலரின் முகங்களில் புன்முறுவலைத் தோற்றுவித்திடும்.
முதல் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர், மிக முக்கியமாக இரண்டாவது உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து, வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளிலுள்ள மக்களுக்குக் கூடுதல் ஓய்வு நேரம் கிடைக்கப்பெற்றிருக்கிறது. பொழுதுபோக்கு வர்த்தக உலகிற்கு ஆதாயமளிக்கும் ஒன்றாய் ஆகியிருக்கிறது. தேசிய மற்றும் சமுதாய அக்கறைகளுடன் பொருளாதார அக்கறையும் இடம் காண்கிறது. இன்றைய போட்டி விளையாட்டுகள் “நிதி, அரசியல் மற்றும் சமுதாய அம்சங்கள் மேலோங்கி நிற்கும் ஒரு காட்சிக் குறிப்பேடாக” இருக்கிறது. மறுவார்த்தையில் குறிப்பிட வேண்டுமானால், போட்டி விளையாட்டு “மக்கள் திரளின் ஓர் இயற்காட்சியாகிவிட்டிருக்கிறது.” வெற்றி பெறுவது பெரும்பாலும் வெற்றி வீரருக்கு லட்சக்கணக்கான டாலர்களைக் குறிக்கிறது! தொலைக்காட்சியுங்கூட போட்டி விளையாட்டுகள் பிரபலமடைவதற்குக் காரணமாயிருந்து, போட்டி விளையாட்டின் மூர்க்கத்தனத்தையும் கூட்டியிருக்கும். பெரும்பாலும் தொலைக்காட்சி படம்பிடிக்கும் கருவிகள் நிதானமான காரியங்களிடமாகத் திரும்புவதற்குப் பதிலாக, வன்முறையான விளையாட்டுப் பகுதிகளிடமாகவே ஒருமுகப்படுத்தி, அப்பகுதிகளை உடனடியாகத் திரும்ப காட்டும் முறையைப் பயன்படுத்தி அவற்றை மீண்டும் மீண்டும் காண்பிக்கின்றன. இப்படியாக தொலைக்காட்சி எதிர்கால ரசிகர்கள் மற்றும் ஆட்டக்காரர்கள் மனதில் போட்டி விளையாட்டின் வன்முறைப் பாதிப்புகளை எவ்வித நோக்கமுமின்றி பெரிது படுத்துகின்றது. அருங்கலைப் போட்டி விளையாட்டு என்பது இப்பொழுது இல்லை, அதன் இடத்தில், 1988 சீயோல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களால் சம்பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான டாலர்களைக் குறித்து பேசிய ஒரு செய்திப் பத்திரிகை குறிப்பிட்டது போன்று “வாழ்க்கைத் தொழிலுக்குரிய அருங்கலையாக” இருக்கிறது.
தேசப்பற்று விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள், மற்றும் பார்வையாளர்கள் வெற்றிக்கு அளவுகடந்த முக்கியத்துவமளிக்கச் செய்கிறது. பூர்வக்காலங்களில் போரில் வெற்றிப்பெற்று வீடு திரும்பும் தளபதிகளுக்குச் செய்ததுபோல, ஒரு சர்வதேச போட்டி விளையாட்டைத் தொடர்ந்து வெற்றிப்பெற்ற அணிக்குப் புகழ் மாலை சூட்டப்படுகிறது. இந்தக் காரியம் அண்மையில் இத்தாலி, அர்ஜன்டீனா, மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் காணப்பட்டது, விளையாட்டு வீரர்கள் கடைசி மூச்சு வரை அஞ்சாது போரடுகின்றனர். அவ்வீரர்களின் ரசிகர்கள் அவர்களை அப்படியே பார்த்து பின்பற்றுகின்றனர், தங்களுடைய அணிகளுக்கு அல்லது தேசத்திற்குத் தங்கள் உத்தமத்தைக் காண்பிப்பதில் அளவுக்கு மிஞ்சி சென்று விடுகிறார்கள், போட்டிக்கு முன்பும், போட்டியின்போதும், போட்டிக்குப் பின்பும் மூர்க்கமான சண்டைகளை உண்டுபண்ணுகின்றனர்.
1988-ல் நடைபெற்ற ஐரோப்பிய சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு, ஜெர்மனியின் வாராந்தர பத்திரிகை டெர் ஸ்பீகல் கூறியதாவது, இந்த நிகழ்ச்சி “மூர்க்கத்தனம், தேசப் பற்று மற்றும் பாசிச மறுமலர்ச்சி கலந்த மிகவும் வன்மையான வெடிக் கலவை செயலுக்கான தகுந்த இடமாக” அமையும் என்ற அச்சத்தைத் தெரிவித்தது.
இன்னொரு வகையான வன்முறை
ஆனால் போட்டி விளையாட்டுகளில் வன்முறை இடம்பெறும் காரியத்தில் இவை மட்டும் உட்பட்டில்லை. 1988 சீயோல் ஒலிம்பிக் விளையாட்டில் “போதைப் பழிப்பு” ஏற்பட்டது. போட்டியில் ஈடுபட்டிருப்பவர்களின் ஆற்றல் அளவைக் கூட்டி, அவர்களுடைய சாதாரண உடல் திறமைகளுக்கும் மேலாகக் காரியங்களைச் செய்திட அனுமதிக்கும், சட்டத்துக்கு முரணான போதப் பொருட்களைப் பயன்படுத்துவது போட்டி விளையாட்டு ஆவிக்கும் விளையாட்டு வீரரின் ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கிறது.
இந்தச் செயல் எந்தளவுக்குப் பரவியிருக்கிறது? (g89 11/8)
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
பெரும்பாலும் தொலைக்காட்சி படப்பிடிப்புக் கருவிகள் வன்முறையான விளையாட்டுப் பகுதிகளில்தானே ஒருமுகப்படுத்தப்படுகின்றன, அப்பகுதிகளை உடனடியாகத் திரும்ப காட்டும் முறையில் அவற்றை மீண்டும் மீண்டும் காட்டுகின்றன
[பக்கம் 7-ன் படம்]
தேசப்பற்று வெற்றிக்கு அளவுகடந்த முக்கியத்துவமளிக்கச் செய்கிறது