இதெல்லாம் எப்பொழுது முடிவுக்கு வரும்?
புத்துணர்வு அளிக்கும் உடல் சார்ந்த செயல்களில் ஈடுபடுவது இன்பமும் ஆரோக்கியமும் அளித்திடும். ஆனால் எதிர்பாராத காரியம் என்னவெனில், ஒரு போட்டி விளையாட்டில் பங்குகொள்கிறவர்களாக அல்லது வெறும் பார்வையாளர்களாக இருப்பதும்கூட அநேக சமயங்களில் வன்முறை மிகுந்ததும் போதப் பொருள் இடம்பெறக்கூடியதுமான உலகிற்குள் ஈர்க்கப்படுவதைக் குறிக்கிறது.
நவீன நாளைய போட்டி விளையாட்டு அவ்வன்முறை உலகின் ஒரு தோற்றமாகவே இருக்கிறது. 1985-ல் பெல்ஜியத்தில் கால்பந்தாட்ட மைதானத்தில் 39 பார்வையாளர்களின் மரணத்துக்குக் காரணமாயிருந்த சம்பவத்தைக் குறித்து பேசுகையில் தத்துவஞானி இம்மானுவேல் செவெரினோ கூறினதாவது: “புரசல்ஸில் நிகழ்ந்த காரியங்களைப் போன்ற சம்பவங்கள் ஏற்படுவதற்குக் காரணம் நம்முடைய சமுதாயத்தின் ஒரு சில அடிப்படை மதிப்பீடுகளில் நம்பிக்கை இல்லாமைக் குறைந்துகொண்டுபோவதே என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.” பின்பு அவர் தொடர்ந்து கூறினார்: “நம்முடைய நாளைய வன்முறை, மதிப்பீடுகள் இல்லாதிருப்பதில் தோற்றமுடையதாயில்லை, ஆனால் புதிய மதிப்பீடுகள் இருப்பதில் தோற்றமுடையதாயிருக்கிறது.”
போட்டி விளையாட்டுகளில் புதிய மதிப்பீடுகள்
பேராசிரியர் செவெரினோ குறிப்பிட்ட இந்தப் புதிய மதிப்பீடுகள் யாவை? ஒன்று வெற்றிபெற்ற விளையாட்டு வீரரை “இடைத் தெய்வங்களாக” ஆக்கிடும் தற்பூசனை.
அடுத்து தேசப்பற்றும் அதன் விளைவாயமையும் அரசியல் ஈடுபாடுகளும். எல்எஸ்ப்ரெசோ பத்திரிகை கூறுகிறது: “போட்டி விளையாட்டு சமூக மேம்பாட்டுக்கு வாகனமாகியிருக்கிறது. எவ்வளவுக்கு அதிகமாக வெற்றிகளைப் பெறுகின்றதோ, அந்தளவுக்குத் தேசம் கருத்திற்கொள்ளப்படுகிறது.”
போட்டி விளையாட்டு உலகின் ஒரு பாகமாகியிருக்கும் புதிய மதிப்பீடுகளில் பணமும் ஒன்றாக இருக்கிறது. பேரளவான பொருளாதார மற்றும் வர்த்தக அக்கறைகள்—தொலைக்காட்சி உரிமைகள், விளம்பரம், பரிசுச்சீட்டுகள் மற்றும் ஊக்க ஆதரவுகள்—“கொள்கையில்லா போட்டியை” விளையாட்டு வீரர் மத்தியிலும் உறுதிப்படுத்துகிறது. முன்னாள் கால் பந்தாட்டக்காரர் ஒருவர் சொன்னதாவது, கால்பந்தாட்டம் “இனிமேலும் ஒரு விளையாட்டாக இல்லை. அது ஒரு வியாபாரமாக இருக்கிறது.”
எப்படியாகிலும் வெற்றி என்பதுதான் இப்பொழுது இருந்துவரும் நியமம்; இன்றைய புதிய மதிப்பீடுகளின்படி, இது எல்லாவற்றையும் குறிக்கிறது—விளையாட்டு மைதானத்திலும் பார்வையாளர் பகுதியிலும் வன்முறை முதல் விளையாட்டிற்கு முன்பும் பின்பும் விளையாட்டு ரசிகர்கள் உண்டாக்கும் வன்முறை வரை, வெற்றி பெறுவதற்கான ஆற்றல் பெருக்கும் மருந்துகளும் அவற்றின் நச்சுப் பாதிப்புகள் முதல் நேர்மையின்மை மற்றும் கொள்கையின்மை வரையான எல்லாவற்றையும் குறிக்கிறது. விளையாட்டு ஆவி, நேர்மையான விளையாட்டு என்று சொல்லப்படும் காரியம் கடந்த கால காரியமாகிவிட்டது. அது எப்பொழுதாவது திரும்ப வருமா? சொல்லப்படும் காரியங்களை வைத்து நிதானிக்கையில், மக்கள் அந்நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர், ஆனால் உண்மைகள் ஊக்கமளிப்பவையாயில்லை.
போதை மருந்துகளும் வன்முறையும்—அது எப்பொழுதாவது முடிவுக்கு வருமா?
பேராசிரியர் செவெரினோ ஒப்புக்கொள்வதுபோல், போட்டி விளையாட்டுகளில் வன்முறை என்பது நவீன சமுதாயத்தை வாதித்திடும் பொதுவான வன்முறையின் ஓர் அம்சமாகவே இருக்கிறது. இந்தளவான வன்முறைக்குக் காரணம் என்ன? ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் இந்தப் பிரச்னையை நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களைப் பற்றிப் பேசுகையில், அப்போஸ்தலனாகிய பவுல் பின்வரும் குணாதிசயங்களைப் பட்டியலிடுகிறான்: ‘மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், நன்றியறியாதவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும் இறுமாப்புள்ளவர்களாயும், சுகபோகப்பிரியராயும் இருப்பார்கள்.’ அவன் மேலும் கூட்டினான்: “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.”—2 தீமோத்தேயு 3:1–5, 13.
தற்போதைய உலகம், “பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது,” என்று பைபிள் விளக்குகிறது. (1 யோவான் 5:19) ஆரோக்கியமான விளையாட்டுகள் போன்ற நல்ல காரியங்களைக் கெடுக்கும் அந்தப் “பொல்லாங்கன்” பிசாசாகிய சாத்தான். இந்த வன்முறை ஆவிக்கு அவன்தானே காரணமாயிருக்கிறான். சமுதாயத்தையும் விளையாட்டுகளையும் கெடுத்திருக்கும் தேச பற்று, தன்னலம் மற்றும் பேராசை ஆகியவற்றையும் அவன் வளர்த்திருக்கிறான்.
ஆனால் தனி நபர்களாக நாம் அந்தப் பேய்த்தன ஆவிக்கு இடங்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம் நாம் வன்முறையான நடத்தைகள் உட்பட தவறான பழக்கங்களுடன்கூடிய நம்முடைய பழைய மனுஷத்தன்மையைக் “களைந்துபோட்டு” சமாதான கனியை உண்டாக்கும் “புதிய மனுஷத்தன்மையைத்” தரித்துக்கொள்ளலாம்.—கொலோசெயர் 3:9, 10; கலாத்தியர் 5:22, 23.
என்றபோதிலும் வன்முறைக்கும் விளையாட்டுகளில் ஆற்றலைப் பெருக்க மருந்துகளைத் துர்ப்பிரயோகம் செய்வதற்கும் எப்பொழுதாவது முடிவு வருமா? நிச்சயமாகவே வரும்! எப்பொழுது வரும்? சமுதாயத்தில் வன்முறையும் போதப் பொருட்களின் துர்ப்பிரயோகமும் முடிவுக்கு வரும்போது. துன்மார்க்கம் இன்று பெருகியிருப்பதுதானே அந்தச் சமயம் சமீபமாயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது!—சங்கீதம் 92:7. (g89 11/8)