போலந்து யெகோவாவின் சாட்சிகளை உபசரிக்கிறது
ஆகஸ்ட் 1989-ன் போது, சர்வதேச சமாதானமும் ஐக்கியமும் குறிப்பிடத்தக்க விதத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு சம்பவம் போலந்து தேசத்தில் நடந்தது. இது போலந்து பட்டணங்களாகிய போஸ்னான் மற்றும் கேட்டோவிஸ் நகரங்களில் ஆகஸ்ட் 2–4, மற்றும் வார்சா நகரில் ஆகஸ்ட் 9–11-ல் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளின் “தேவ பக்தி” மாவட்ட மாநாடுகளாகும்.
இந்த மாநாடுகளை அந்தளவுக்கு விசேஷமானவையாக்கியது எது? நவீன காலங்களில் யெகோவாவின் சாட்சிகள் பெரியதும், அதிக நாட்கள் நடை பெற்றதும், அநேக தேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுமான மாநாடுகளைக் கொண்டிருந்திருக்கின்றனர். ஆனால் அதிகமான உற்சாகத்தையும், அப்படிப்பட்ட கிறிஸ்தவ ஐக்கியத்தையும் வெளிக்காட்டிய, அல்லது கிறிஸ்தவ அன்பின் உள்ளார்ந்த வெளிக்காட்டுதல் அத்தனை அநேகமாகக் காணப்பட்டதில் இது அரியதொன்று என்று 1,66,000-ற்கும் அதிகமான ஆட்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.
‘புதிய உலகம் மட்டுமே மேலானது’
குறைந்தபட்சம் 37 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தார்கள், இவர்களோடுகூட மற்ற நாடுகளிலிருந்து வந்த தனிநபர்களும் இருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழுவிலிருந்து ஐந்து அங்கத்தினர்கள் நிகழ்ச்சி நிரலில் பங்கு கொண்டனர். மேற்கு ஐரோப்பா, ஐக்கிய மாகாணங்கள், ஜப்பான் ஆகிய பிரதேசங்களிலிருந்து 12,000-ற்கும் அதிகமான விருந்தினர் வந்திருந்தனர். இப்படியாக போலந்து இதுவரையில் கையாண்டிராத மிகப் பெரிய சர்வதேச பயணிகளைக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியாக இது இருந்தது.
சோவியத் யூனியன், செக்கஸ்லோவேக்கியா, மற்றும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்தப் பிரதிநிதிகளில் பலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாட்சிகளாயிருந்த போதிலும், இது இவர்கள் கலந்துகொண்ட முதல் மாநாடாக இருந்தது. இப்படிப்பட்டவர்கள் தங்கள் கிறிஸ்தவ சகோதரர்களுடன் முதல் முறையாகக் கூடிவரமுடிந்ததில் இவர்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகளை சோவியத் யூனியனிலிருந்து வந்த கஷாக்ஸ்டான் என்பவருடைய வார்த்தைகள் சிறப்பாகத் தெரிவிக்கின்றன. அவர் சொன்னார்:
“இந்த நாளுக்காக நாங்கள் பல வருடங்களாகக் காத்துக்கொண்டிருந்தோம். இதோ, இப்பொழுது இங்கே இந்தச் சர்வதேச மாநாட்டில் இருக்கிறோம். எங்களால் இந்த எல்லாக் காரியங்களையும் கிரகித்துக்கொள்ளவும் பதித்துக்கொள்ளவும் முடியவில்லை. இது ஒரு கனவு போன்றிருக்கிறது. நாங்கள் பார்த்த மற்றும் கேட்ட எல்லாவற்றையும் வார்த்தைகளில் தெரிவிப்பது என்பது கூடாத காரியம். இந்தப் பிரமாண்டமான கோப்பை வடிவ அரங்கம் மக்களால் நிரம்பியிருப்பதைப் பார்த்த போதும் இசையைக் கேட்ட போதும் எங்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஜெபம்—நாங்கள் எல்லாரும் அசையாது ஐக்கியமாய் நின்றபோது—உடல் சிலிர்த்து நின்றோம். அது அந்தளவுக்குப் பயபக்தியும் ஐக்கியமும் ஒருங்கிணைந்ததாயிருந்தது. புதிய உலகம் மட்டுமே மேலானதாக இருக்க முடியுமென்ற அளவுக்கு வார்சாவில் நடைபெறும் இந்த மாநாடு மிகச் சிறந்ததும் மகத்துவமும் கொண்ட ஒரு நிகழ்ச்சியாயிருந்தது. இந்த அற்புதமான நாட்களை நாங்கள் எப்பொழுதுமே நினைத்துக்கொண்டிருப்போம்.”
ஆயிரக்கணக்கான உடன் சாட்சிகளை முதல் முறையாக பார்த்தபோது, இந்த விருந்தினரில் பலருடைய உணர்ச்சிகள் வெளிப்படையாகவே பொங்கியெழுந்தன. வார்சாவில் அவர்கள் கைதட்டிய ஆரவாரத்தின் அலை அரங்கத்தை ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிரப்பியது. மேற்கு ஐரோப்பிய பிரதிநிதி ஒருவர் கூறினார்: “அந்தச் சமயத்தில் உஷ்ணத்தையும் அல்லது கடினமான இருக்கைகளையும் அல்லது சொகுசாக உட்காருவதற்காக வீட்டிற்குச் செல்வதையும் குறித்து எவருமே நினைத்துக்கொண்டில்லை. அவர்கள் அதிகமான போதனைகளையும் அன்பான கூட்டுறவையுமே விரும்பினார்கள்.”
ஒவ்வொரு நாளும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிரநிதிகளின் அறிக்கைகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் தங்களுடைய சொந்த தேசத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். வார்சாவில் கொடுக்கப்பட்ட அந்த 24 அறிக்கைகளில் கடைசி அறிக்கை சோவியத் யூனியனிலிருந்து வந்த ஒரு பிரதிநிதிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. “உங்கள் மத்தியில் இருக்க முடிந்ததற்கான எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்க எங்களுக்கு வார்த்தைகள் போதது,” என்று அவர் ஆரம்பித்தார். “நாங்கள் இவ்வளவு பேர் இங்கு வர முடிந்ததற்காகவும், இவ்வளவு உபசரிப்புடன் நாங்கள் வரவேற்கப்பட்டிருக்கிறோம் என்பதற்காகவும் நாங்கள் மிகுந்த போற்றுதலைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம். சகோதரர்களாகிய உங்களில் அநேகருடன் தனிப்பட்ட விதத்தில் நேரடியாக தொடர்பு கொள்ள முடிந்ததற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களில் பலர் பசிபிக் கடலோரப் பகுதியில் அமைந்த வலாடிவோஸ்டாக் போன்ற தூர இடங்களிலிருந்து ஆறு நாள் இரயில் பயணத்தை மேற்கொண்டு இங்கே வந்திருக்கிறோம். எங்களில் சிலருக்கு பயணச்சீட்டு கிடைப்பது கடினமாக இருந்தது, ஏனென்றால் அவ்வளவு பேரும் ஒரே சமயத்தில் வர விரும்பினார்கள், இருக்கைகளோ குறிப்பிட்ட எண்ணிக்கையாக இருந்தன. ஆனால் யெகோவாவின் உதவியால் நாங்கள் வந்து சேர்ந்துவிட்டோம்.”
பொருத்தமாகவே, ஆளும் குழுவின் அங்கத்தினரில் ஒருவர் ஞாயிறு அன்று கொடுத்த தன்னுடைய நிறைவு பேச்சில், இத்தனை அநேக யெகோவாவின் சாட்சிகள் இந்த மாநாட்டில் ஆஜராயிருப்பதற்காக அவர்களை அனுமதித்த கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
ஓர் ஐக்கியப்பட்ட சகோதரத்துவம்
போலந்து மாநாடுகளில் தனக்கிருந்த அனுபவங்களை விவரிப்பவராக ஒரு சாட்சி இப்படியாகச் சொன்னார்: “இது, பாபேல் தலைகீழாக இருந்தது போன்று இருந்தது.” பாபேல் கோபுரத்தில் மக்கள் வித்தியாசமான மொழிகளைப் பேச ஆரம்பித்த போது குழப்பமும் ஐக்கியமின்மையுமே நிலவியது, ஆனால் இங்கே மொழி பிரச்னையின் மத்தியிலும் சிந்தை, நடத்தை, செயல் ஆகியவற்றில் ஐக்கியத்தின் அற்புத வெளிக்காட்டு இருந்தது.—ஆதியாகமம் 11:1–9.
வித்தியாசமான தேசத்தவராயிருந்த உடன் விசுவாசிகளின் மத்தியில் காணப்பட்ட இந்த ஐக்கியம் வெளியாட்களால் கவனிக்கப்படாமல் இருக்கவில்லை. ஸ்டன்டார் மடோடிச் (Sztandar Mtodych) என்ற பிரசுரம் குறிப்பிட்டதாவது: “வார்சா விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்த விமானப் பயணிகளில் குழப்பமும் கூட்டத்தில் காணாமற்போவதுமாக இல்லாதிருந்த பயணிகள் யெகோவாவின் சாட்சிகளே. உடன் விசுவாசிகள் அறிவிப்புகளைப் பல மொழிகளில் தயாரித்திருந்தனர், தகவல் மேசைகளையும், இடக்குறி பலகைகளையும் கொண்டிருந்தனர், மேலும் செல்லவேண்டிய இடத்துக்குப் போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
மாநாட்டில் பாட்டுகள் பாடியது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கானவர்கள் அன்பின் ஆவியிலே ஒரே கருத்துகளை 20 வித்தியாசமான மொழிகளில் ஏகமாய்த் தெரிவித்தார்கள். மேலும், நிகழ்ச்சி நிரலின் சில பகுதிகள் வார்சாவில் 16 மொழிகளில் (போஸ்னானில் 13 மொழிகளில் மற்றும் கேட்டோவிஸில் 15 மொழிகளில்) மொழிபெயர்க்கப்பட்டன. இதுவரையிலும் போலந்தில் இவ்வாறு செய்யப்பட்டதில்லை.
அந்த 16 மொழிபெயர்ப்பாளர்களும் மைதானத்தில் தங்கள் தங்கள் மொழியைப் பேசும் கூட்டத்துக்கு எதிரில் நின்றார்கள். பேச்சாளர் மேடையிலிருந்து பேச, ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் அரங்கத்தின் அந்தந்த மொழி தொகுதியினரின் மொழிக்கு அதை மொழிபெயர்த்தார். ஒரு மொழி தொகுதியிலுள்ளவர்கள் மற்ற மொழிதொகுதிகளிலுள்ளவர்களுக்கு மொழிபெயர்க்கப்படுவதால் கவனம் அனாவசியமாகக் கலைக்கப்படாதிருக்கும் வகையில் ஒலிப்பெருக்கிப் பெட்டிகள் அந்தந்த மொழிதொகுதியினருக்கு நேர் எதிரே வைக்கப்பட்டிருந்தன.
போலந்தில் பொருளாதார பிரச்னைகள் கடுமையாக இருந்த போதிலும், தங்களுடைய போலந்து சகோதரர்கள் ஆயிரக்கணக்கான விருந்தினருக்குத் தங்குவதற்கான தனிப்பட்ட இடவசதியை அளித்தனர். போஸ்னானிலுள்ள சகோதரர்கள் பதினாராயிரம் பேருக்கும் வார்சாவிலுள்ளவர்கள் 21,000 பேருக்கும் கேட்டோவிஸிலுள்ளவர்கள் 30,000 பேருக்கும் இடவசதி அளித்தனர். ஒரு குடும்பம் 18 பேருக்கு இடம் தந்து 21 பேருக்கு உணவளித்தது. 146 சாட்சிகளைக் கொண்ட ஒரு சபை 1,276 பேருக்கு இடவசதி அளித்தது!
செய்திகள் நல்லவிதத்தில் கொடுக்கப்பட்டன
தொலைக்காட்சி, வானொலி, மற்றும் செய்தித்தாள் அறிக்கைகள் பெரும்பாலும் உண்மைகளாகவும் பாரபட்சமில்லாத வகையிலும் அமைந்திருந்தன. “யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மதத்தை 212 நாடுகளில் கைக்கொள்கின்றனர்” என்ற தலையங்கச் செய்தியின் கீழ் போலந்து பத்திரிகை ஸ்டன்டார் மடோடிச் அதன் கட்டுரையில் “இணக்கம்,” “ஒழுங்கு,” “அடக்கம்,” மற்றும் “சுறுசுறுப்பான உழைப்பாளிகள்” போன்ற உபதலைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களைப் போற்றினது. வார்சாவிலுள்ள மாநாட்டு அரங்கத்தைக் குறித்து அது சொன்னதாவது: “ஒரு சிகரெட் துண்டோ அல்லது கீழ்ப்படியாத சிறுபிள்ளைகளால் காகிதத் துண்டுகளோ எறியப்பட்டில்லை. யெகோவாவின் சாட்சிகள் புகைப்பதில்லை, அவர்களுடைய பிள்ளைகளும் கீழ்ப்படியாதவர்கள் அல்லர்.”
மாநாட்டுக்கான ஆயத்தங்கள் ஒரு முழு வருடம் எடுத்தன என்று குறிப்பிட்ட ஜிஸி வார்சாயி (Zycie Warszawy) என்ற செய்தித்தாள் மேலும் கூறியதாவது: “மற்ற காரியங்களுடன்கூட மாநாடுகள் நடைபெற்ற அரங்கங்கள் சீர்செய்யப்பட்டன.”
எக்ஸ்பிரஸ் வீக்ஸார்னி (Express Wieczorny) அறிக்கையிட்டதாவது: “வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது என்னவென்றால், அரங்கத்தில் காணப்பட்ட ஒழுங்கு. குப்பைக் கழிவை அதற்கான இடத்தில் போடுதல், தற்காலிகமான ஆனால் சுத்தமான கழிவறைகள், அநேக தகவல் இலாக்காப் பிரிவுகள்—எல்லாமே பிரமிக்கச் செய்தது.” இதை நிறைவேற்றுவதற்காக, வார்சா விளையாட்டு அரங்கத்தை மாநாட்டுக்கு ஆயத்தப்படுத்துவதற்கும் அதை அலங்கரிப்பதற்கும் 3,500 சாட்சிகள் தங்களுடைய நேரத்தைச் செலவழித்தனர்.
இந்தச் செய்தித்தாள் சில மாநாட்டுப் பிரதிநிதிகளையும் பேட்டி கண்டது. “வார்சா மாநாடு உங்களுக்கு எதை அர்த்தப்படுத்தியது?” போலந்து சாட்சி ஒருவர் சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகள் ஒரு மதத் தொகுதி என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத நாடுகளாகிய செக்கஸ்லோவேக்கியா மற்றும் சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்திருக்கும் எங்களுடைய சகோதரரை நான் சந்திக்க முடிந்தது என்ற உண்மைதானே என்னை உந்துவித்தது.”
சோவியத் யூனியனிலிருந்து வந்த ஒரு சாட்சி இப்படியாகச் சொன்னதாக மேற்கோள் காண்பிக்கப்பட்டது: “என்னுடைய வாழ்க்கையிலேயே இதுதான் மிகப் பெரிய அனுபவமாக இருக்கிறது. . . . என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக நான் உலகமெங்கிலுமுள்ள என் சகோதரர்களைச் சந்திக்க முடிந்தது. மேலும் இந்தக் கூட்டம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; பேச்சுகள் 16 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. எங்களுடைய போலந்து சகோதரர்கள் எங்களை உபசரித்தனர்—உண்மையில் எல்லாமே அற்புதமாயிருந்தது.”
ஜிஸி வார்சாயி குறிப்பிட்டதாவது: “வார்சாவில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளின் உலக மாநாடு இப்பொழுது முடிவுபெற்றது. . . . நமக்கு நினைவிருக்கலாம், போலந்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் மதச்சங்கம்—இப்பொழுது 80,000a விசுவாசிகளைக் கொண்டது—ஒரு சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதுதானே இப்படிப்பட்ட மாநாடுகள் ஒழுங்குப்படுத்தப்படுவதைக் கூடிய காரியமாக்கியது. முன்பு சட்டத்துக்குப் புறம்பானதாகக் கருதப்பட்டுவந்த இந்த மதத் தொகுதி மே 12 முதல் சட்டப்பூர்வமான அந்தஸ்தை அனுபவித்துவருகிறது.”
யெகோவாவின் சாட்சிகளின் இந்த மாநாடுகளை “ஐக்கியத்தின் ஒரு வெளிக்காட்டு” என்று அழைத்த இந்தச் செய்தித்தாள் கூறியதாவது, “ஒழுங்கு, அமைதி மற்றும் சுத்தம் குறித்ததில் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பின்பற்றுவதற்கேற்ற முன்மாதிரிகள்.”
முழுக்காட்டுதல்
போலந்து மொழி பேசத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களுமாகிய எல்லாருமே முழுக்காட்டுதல் காட்சியைப் பார்த்து கிளர்ச்சியடைந்தனர். வார்சாவில் முழுக்காட்டுதல் பெறுகிறவர்கள் உட்காருவதற்காக அந்த விளையாட்டு மைதானத்தில் மேடைக்கு முன்பாக ஏராளமான நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் காலை நிகழ்ச்சியின் போது, முழுக்காட்டுதல் பெறுவதற்கு ஆஜராகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்க, அட்டண்டன்டுகள் கூடுதலான நாற்காலிகளை அடுக்கிக் கொண்டிருந்ததைப் பார்ப்பது கிளர்ச்சியூட்டுவதாயிருந்தது. அப்பொழுது, முழுக்காட்டுதல் பேச்சு ஆரம்பிப்பதற்கு நேரமான போது, சபையார் அனைவர் மத்தியிலும் அமைதி காணப்பட்டது. தாங்கள் என்றும் மறக்க முடியாத ஒன்றை எதிர்நோக்கிக்கொண்டிருந்தார்கள். பேச்சாளர் முழுக்காட்டுதலுக்கு ஆஜராயிருந்தவர்களுக்கு வரவேற்பு அளித்தபோது, அந்த அரங்கம் முழுவதுமே கைதட்டும் ஆரவாரத்தால் நிரம்பியது. அதற்குப் பின், ஏற்கெனவே சொல்லப்பட்டது போல், ஆனால் உண்மையில் கடவுளுடைய ஆவியால் உந்துவிக்கப்பட்ட மகிழ்ச்சி பொங்கிய இருதயத்தால் தூண்டப்பட்ட அவர்கள் தங்களுடைய கைகளை அசைத்து தங்களைச் சுற்றி நிரம்பி வழிந்த கூட்டத்தினரை வாழ்த்துகிறவர்களாயிருந்தனர்.
முழுக்காட்டுதல் பெறும் நபர்கள் பொதுவாகக் கேட்கப்படும் இரண்டு கேள்விக்கு விடையாக அவர்களுடைய விசுவாசத்தின் வெளியரங்கமான அறிக்கை தெளிவாகவும் தீர்மானமாகவும் இருந்தது—ஆம், அவர்களில் அநேகர் ஒப்புக்கொடுத்தல் என்ற இந்தப் படிக்குப் பல கஷ்டங்கள் மற்றும் சோதனைகளினூடே வந்திருக்கின்றனர். ஜெபத்தைத் தொடர்ந்து சபையார் “கடவுளுக்கு நாங்கள் ஒப்புக்கொடுத்திருக்கிறோம்,” என்ற பாடலைப் பாட, முழுக்காட்டுதல் பெறவிருப்பவர்கள் இரண்டு தொகுதியினராகப் பிரிந்து அரங்கத்திலிருந்து சென்றனர். உடை மாற்றும் அறைகளுக்கு வழிநடத்திய ஒரு சுரங்கப் பாதை வழியாக சகோதரர்களும் மற்றொரு பாதை வழியாக சகோதரிகளும் தங்களுடைய அறைகளுக்கும் சென்றனர். அட்டண்டன்டுகளும் முழுக்காட்டுதல் கொடுப்பவர்களும் வெள்ளை நிற உடை அணிந்தவர்களாய்த் தங்கள் நிலைகளுக்குச் சென்றனர். உடனடியாக, முழுக்காட்டுதல் பெறும் நபர்கள் அடக்கமான நீச்சல் உடை அணிந்தவர்களாக மீண்டும் மைதானத்திற்குள் வர ஆரம்பித்தனர். அங்கு 12 முழுக்காட்டுதல் குளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மைதானத்தின் ஒரு முனையில் சகோதரிகளுக்கு ஆறும், மறு முனையில் சகோதரர்களுக்கு ஆறும் அமைக்கப்பட்டிருந்தன.
வார்சாவில் 1,905 பேர் முழுக்காட்டுதல் பெற்ற அந்த 45 நிமிடங்களும் சகோதரர்கள் உற்சாகத்தோடு கைதட்டினார்கள். (இதற்கு முன்னான வாரம் போஸ்னானில் 1,525 பேரும் கேட்டோவிஸில் 2,663 பேரும் சேர்ந்து மொத்தமாக 6,093 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர், அல்லது மாநாடுகளுக்கு வருகைதந்தவர்களின் உச்சநிலை எண்ணிக்கையில் 3.7 சதவிகிதத்தினர் முழுக்காட்டுதல் பெற்றனர்.) முழுக்காட்டுதல் பெறுவதற்காக ஊனமுற்ற இரண்டு சகோதரர்கள் அவர்களுடைய சக்கர நாற்காலிகளிலிருந்து அன்போடு தூக்கிச்செல்லப்பட்டார்கள். இவர்களில் முழுக்காட்டுதல் பேச்சைக் கேட்பதற்காக ஒருவர் படுத்தப் படுக்கையாகிவிட்டிருக்க, அதோடு கொண்டுவரப்பட்டார்.
“முழு அளவான உச்சக்கட்டம்”
‘இது உணர்ச்சிவசப்பட்டதாகத் தொனிக்கிறது,’ என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆம், அப்படித்தான் இருந்தது! ஆனால் இது கிறிஸ்தவமண்டலத்தின் மத எழுப்புதல் கூட்டங்களில் நீங்கள் பார்க்கும் உணர்ச்சிவசப்படும் காரியமல்ல. போலந்து மாநாட்டுக்கு வருகை தந்தவர்களின் உணர்ச்சிகள் கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவின் பேரில் சார்ந்திருந்தது, எனவே வந்திருந்தவர்கள் மாநாட்டுக்குப் பின்னர் கடவுளை இன்னும் மேன்மையான விதத்தில் சேவிக்கத் தகுதிபெற்றவர்களாய் இருப்பார்கள். இது, பல பத்தாண்டுகளின் எதிப்புக்குப்பின், போலத்திலுள்ள இந்தச் சாட்சிகள் கடைசியாகத் தங்கள் அண்டை நாடுகளிலிருந்துவரும் உடன் விசுவாசிகளுடன் தடங்கலில்லாமல் ஒன்றுகூடிவர முடிந்ததன் அறிவால் உள்ள ஆழத்திலிருந்து வெளிப்படுத்திய உணர்ச்சியாகும். உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாநாட்டுப் பிரதிநிதி ஒருவேளை இதற்கு முன்பு ஒருபோதும் மாநாட்டில் கலந்துகொண்டிருக்க மாட்டார் அல்லது இந்தளவான ஒரு மாநாட்டிற்குச் சென்றிக்க மாட்டார் என்பதை அறிந்து வெளிப்படும் மகிழ்ச்சியிலிருந்து பிறக்கும் உணர்ச்சியாக இது இருந்தது. யெகோவாவின் சாட்சிகள் சத்தியத்தின் உயிருள்ள கடவுளை சேவிக்கும் ஒரே ஐக்கியப்பட்ட, சர்வதேச சகோதரத்துவமாயிருக்கிறார்கள் என்பதற்கான வெளிப்படையான அத்தாட்சியிலிருந்து புறப்படும் உணர்ச்சியாக இது இருந்தது.
மேற்கு ஐரோப்பாவிலிருந்து மாநாட்டுக்கு வந்திருந்த ஒரு பிரதிநிதி இதைச் சுருக்கமாகத் தொகுத்து இவ்வாறுரைத்தார்: “1952 முதல் ஒரு மாநாடும் விடாது தவறாமல் சென்றிருந்தபோதிலும், சூழ்நிலை, உற்சாகம், மகிழ்ச்சி, அன்பு, போற்றுதல் மற்றும் நன்றியுணர்வு ஆகிய காரியங்களைக் குறித்ததில் இது முழுமையான உச்சக்கட்டமாக இருந்தது.”
வார்சா மாநாட்டில் ஞாயிறு அன்று செய்யப்பட்ட கடைசி ஜெபத்தின் போது உணர்ச்சிகள் ஓர் உச்சக்கட்டத்தை எட்டினவென்பதில் சந்தேகமில்லை. ஆயிரக்கணக்கானவர்கள் அந்த ஜெபத்தைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், எல்லாருமே அது வெளிப்படுத்திய ஆவியை, அன்பை, அர்ப்பணத்தை, மகிழ்ச்சியை, பேரரசராக யெகோவாவை இருதயப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுதலை, யெகோவாவின் வேலையில் தொடர்வதற்குத் தீர்மானமாயிருத்தலை உணர முடிந்தது. தங்களுடைய கடவுளிடம் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தின்போது ஏறக்குறைய 60,000 பேர் தலைகுனிந்திருந்தபோது நிலவிய பிரமிக்கத்தகுந்த அமைதி போற்றுதலின் ஆனந்த கண்ணீர் வடியும் விம்மல்களால்தானே கலைக்கப்பெற்றது. ஜெபம் முடிந்த போது, தங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து “ஆமென்” சொல்வதில் எவருக்கும் தடங்கல் இருக்கவில்லை. பொங்கியெழும் மகிழ்ச்சியால் கைதட்டும் ஆரவார சப்தம் அந்த அரங்கத்தில் 11 நிமிடங்களுக்கு மேல் எதிரொலித்தது.
போலந்தில் தேவராஜ்ய சரித்திரம் படைக்கப்பட்டதற்கு 1,66,000 ஆட்களுக்கு மேல் கண்கண்ட சாட்சிகளாக இருந்தனர். சாத்தானின் துன்மார்க்க ஒழுங்குமுறை கடைசியாக அழிவதற்கு முன் இன்னும் அநேக சரித்திரம் படைக்கப்படவேண்டும்—யெகோவாவின் அரசுரிமை மகிமைப்படுத்தப்படும் உச்சக்கட்டத்தில் விளைவடையும் கிளர்ச்சியூட்டும், அதிர்ச்சியுண்டாக்கும், சிலிர்க்கவைக்கும் சரித்திரம் படைக்கப்படும். நீங்கள் அதைத் தெரிந்துகொண்டால், அந்தச் சரித்திரத்தின் ஒரு பாகமாக நீங்களும் தப்பிப்பிழைக்கலாம். நீங்கள் அதைத் தெரிந்துகொள்வீர்களா? (g89 12/22)
[அடிக்குறிப்புகள்]
a செய்தித்தாளின் கணிப்பு.
[பக்கம் 14-ன் பெட்டி]
சரித்திரம் சம்பந்தமான மைல்கற்கள்
1928 போலந்தின் 300 சாட்சிகள் தங்களுடைய முதல் சிறிய அசெம்பிளிகளை நடத்தினார்கள்.
1939 இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பிக்கையில், 1,100 சாட்சிகள் பிரசங்கிக்கிறார்கள்; அநேகர் சிறைப்படுத்தப்படுகின்றனர், சிலர் ஜெர்மனியின் கான்சன்ட்ரேஷன் முகாம்களில் மரிக்கின்றனர்.
1945 இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவுக்குள்ளாக, சாட்சிகளின் எண்ணிக்கை 2,500-ஆக இருமடங்குக்கும் அதிகமாகிறது.
1946 ஜுன் மாதத்தில் லப்லின் அருகே நடந்த அசெம்பிளிக்கு 1,500 பேர் வருகின்றனர்; 298 பேர் முழுக்காட்டுதல் பெறுகின்றனர். செப்டம்பர் மாதத்தில் கேட்டோவிஸில் 5,600 பேர் கூடிவருகின்றனர்.
1947 கிராக்கோவில் நடந்த அசெம்பிளிக்கு 7,000 பேர் வருகின்றனர். 476 பேர் முழுக்காட்டுதல் பெறுகின்றனர். பிரசங்க வேலையை ஒழுங்குபடுத்தி அமைப்பதில் உதவிசெய்ய இரண்டு கிலியட் பட்டதாரிகள் வருகிறார்கள்.
1950 மார்ச் மாதத்தில் 18,000 சாட்சிகள் என்று உச்சநிலை எட்டப்பட்டது. ஞாபகார்த்தத்துக்கு 24,000 பேர் வந்திருந்தனர். ஜூலை மாதத்தில் வேலை தடை செய்யப்படுகிறது, இது தனியார் வீடுகளில் சிறிய கூட்டங்களை நடத்துவதை அவசியமாக்குகிறது.
1968 காடுகளில் 100 அல்லது 200 பேர் ஆஜராயிருக்கும் ஒரு-நாள் மாவட்ட மாநாடுகள் நடத்தப்படுகின்றன; பின்னால் 1,000 பேர் வரையிலும் ஆஜராகிறார்கள்.
1980 மாவட்ட மாநாடுகளுக்கு ஏறக்குறைய 2,000 சாட்சிகள் போலந்திலிருந்து ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவுக்குச் செல்கின்றனர்.
1981 போலந்து சகோதரர்களுக்காக 1980-ல் நடந்ததைவிட பெரிய மாநாடு வியன்னாவில் நடைபெறுகிறது.
1982 ஒரு நாள் மாநாடுகள் நடத்துவதற்கு மன்றங்களையும் விளையாட்டு அரங்கங்களையும் வாடகைக்கு எடுப்பதற்கான அனுமதியை போலந்து அரசு சாட்சிகளுக்கு வழங்குகிறது.
1985 போலந்தில் 94,000 ஆட்களுக்கு மேல் ஆஜராயிருந்த மூன்று நாள் மாவட்ட மாநாடுகள் நடைபெறுகின்றன. ஆளும் குழுவின் 4 அங்கத்தினர்கள் உட்பட 16 நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான விருந்தினர் வந்திருக்கின்றனர்.
1989 “தேவ பக்தி” மாவட்ட மாநாடுகள் மூன்று விளையாட்டு அரங்கங்களையும் நிரம்பிவழியச் செய்கிறது; ஆளும் குழுவின் ஐந்து அங்கத்தினர்கள் வந்திருக்கின்றனர்; வருகைதந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,518, முழுக்காட்டுதல் பெற்றவர்கள் 6,093. போலந்து மொழியில் இரண்டு துண்டுப்பிரதிகள் வெளியிடப்பட்டன, யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன? மற்றும் நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் இவற்றுடன் நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா? என்று 32 பக்கங்களடங்கிய புரோஷுரும் வெளியிடப்பட்டது.
[பக்கம் 16-ன் படங்கள்]
வார்சாவில் முழுக்காட்டுதல் பெறவிருப்பவர்கள் மேடைக்கு முன் அமர்ந்திருக்கிறார்கள், கூட்டம் அவர்கள் முழுக்காட்டுதல் பெறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது
[பக்கம் 18-ன் படங்கள்]
சோவியத் யூனியனிலிருந்து வந்திருக்கும் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்காக கேட்டோவிஸ்ஸில் ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியின் ஒரு பிரிவு, ரஷ்ய சாட்சிகளைப் போஸ்னானுக்குக் கொண்டுவந்த சில பேருந்துகள்