கிழக்கு ஐரோப்பாவில் சமாதான தூதுவர்கள்
காது கேளாதோர் கேட்டுக்கொண்டிருந்தனர்! சிறையிலிருந்தவர்கள் விடுதலை பெற்றுக்கொண்டிருந்தனர்! காவல் துறைக்கு, சொல்லப்போனால் வேலையே இருக்கவில்லை! எதைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்? கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின்போது கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய சமீபத்திய சர்வதேச மாநாடுகளில் நடந்த விஷயங்களைப் பற்றிதான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.
“தேவ சமாதான தூதுவர்கள்” என்பது அந்த நிகழ்ச்சிநிரலின் தலைப்பு. ருமேனியாவில் மதத் தலைவர்களின் தூண்டுதலால் ஏற்பட்ட துன்பங்களின் மத்தியிலும், a கடவுளையும் கிறிஸ்து இயேசுவையும் அறிந்துகொள்வதனால் கிடைக்கும் சமாதானம் யெகோவாவின் சாட்சிகளிடம் இருக்கவே இருக்கிறது என்பதைப் பலர் கண்கூடாகக் கண்டனர்.—ஏசாயா 26:2, 3; பிலிப்பியர் 4:7.
செக் குடியரசில் ப்ராக் நகரிலும், ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரிலும், போலாந்தில் வார்ஸா, லோட்ஜ் ஆகிய நகர்களிலும், எஸ்டோனியாவில் டல்லின் நகரிலும், ருமேனியாவில் ப்ரசோவ், க்ளுஜ்-நாப்போக்கா ஆகிய நகர்களிலும் மாநாடுகள் நடத்தப்பட்டன.
பல வெளிநாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் இந்த மாநாடுகளுக்கு வந்திருந்து, அந்த நிகழ்ச்சிகளில் உண்மையிலேயே சர்வதேச மணம் கமழும்படி செய்தனர். ப்ராக் நகரில் நடைபெற்ற மாநாட்டுக்கு, ஐக்கிய மாகாணங்கள், போலாந்து, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் திரள்திரளாய் வந்திருந்தனர். உவாட்ச் டவர் சங்கத்தைச் சேர்ந்த செக்கியா கிளை அலுவலகத்திலிருந்து வந்த ஓர் அறிக்கை குறிப்பிட்டதாவது: “பிற தேசங்களிலிருந்து வந்திருந்த, யெகோவா தேவனின் வணக்கத்தாரான உத்தமத்தைக் காத்துவரும் இத்தனையதிகமானவர்களால் நாங்கள் வெகுவாய் உற்சாகப்படுத்தப்பட்டோம். உதாரணமாக, ஜப்பானிய பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் பயனியர்களாய் இருந்தனர், அவர்களுடைய நேர்த்தியான உடையும், அவர்களுடைய ஒழுங்கும், அவர்கள் அமர்ந்திருந்த அரங்கப் பகுதியைக் கண்கூடாகவே அலங்கரித்தன. போலாந்து நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகளின் இதயங்கனிந்த உணர்வையும், ஸ்லோவாக்கிய சகோதரர்களின் நன்றியுணர்வையும், ஜெர்மானியரின் கொடைத்தன்மையையும், அமெரிக்கர்களின் கனிவான பாசவுணர்வையும் நாங்கள் கவனித்தோம். அவை அனைத்தும் எங்களுக்குப் பாடம் புகட்டின.”
அந்த மாநாடுகளினால் புதியவர்கள் எவ்வாறு கவரப்பட்டனர்? நீரிழிவு நோயாலும், காலில் ஏற்பட்டிருந்த ஒருவித நோயாலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவரும், கல்விமானாயும் ஆசிரியராயும் இருந்தவரும், மொழிப்புலமை பெற்றவராயும் இருந்த 85 வயதான ஒருவர் ஆஜராகியிருந்தார். அவர் அறிவு புத்தகத்தின் உதவியுடன் சுமார் ஆறு மாதமாக பைபிளைப் படித்துக் கொண்டிருந்திருந்தார். அந்த மாநாட்டு நிகழ்ச்சிநிரலின்போது, கொடுக்கப்பட்ட பேச்சுக்களின் மொழி மற்றும் இலக்கண நடைகளுக்கு அவர் தன் கவனத்தைச் செலுத்தாமல், வேறு ஏதோவொன்றின்மீது தன் கவனத்தைச் செலுத்தினார். அவர் ஆச்சரியத்துடன் தெரிவித்ததாவது: “அது பிரமாதமாய் இருந்தது! அதை நிரூபிப்பதற்கு, உங்களுக்கு மத்தியில் நீங்கள் ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளும் அன்பும் கரிசனையுமே போதும், வேறெதுவும் வேண்டாம்.”—யோவான் 13:34, 35; 1 கொரிந்தியர் 13:1-8.
ப்ராக் நகருக்கு அயல்நாட்டிலிருந்து வந்திருந்தவர்களுக்கு, வரலாற்றுச் சிறப்புடைய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டதும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ஒரு சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததும் அனுபவிக்கத்தக்க சமயமாய் இருந்தன. ப்ராக் நகருக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு கோட்டையில், ஒரு வழக்கறிஞரின் மனைவியான அமெரிக்க சாட்சி ஒருவர், கோட்டைக் கோபுரத்தின் மேல்தளத்தில் நின்றுகொண்டு, படிக்கட்டில் ஏறி வருபவர்களுக்கெல்லாம் செக் மொழியில் துண்டுப்பிரதிகளை விநியோகிக்கும்படி காத்துக்கொண்டிருந்தார். மற்றவர்கள், பழைய யூதக் கல்லறைத் தோட்டத்தைச் சென்று பார்வையிட்ட பள்ளி மாணவிகளின் ஒரு தொகுதியைச் சந்தித்தபோது அவர்களிடம் துண்டுப்பிரதிகளைக் கொடுத்தனர். அது மட்டுமல்லாமல், தொழில்முறை சுற்றுலா வழிகாட்டிகளும் பஸ் ஓட்டுநர்களும் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டதில் எவ்வித சந்தேகமுமில்லை.—1 பேதுரு 3:15.
சாட்சிகளையும் அவர்களுடைய நடத்தையையும் போற்றிய ஒரு வழிகாட்டி எழுதினதாவது: “சிநேகப்பான்மையான, இதயங்கனிந்த இத்தனையநேக மக்களை என் வாழ்க்கையிலேயே இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. நான் கத்தோலிக்கராக இருந்தாலும், உங்களுடைய ஆன்மிக மனோபாவம் என்னை வசீகரித்தது. இந்த உலகத்துக்கு ஏதோ நல்ல காலம் ஒன்று வரப்போகிறது என்ற நம்பிக்கையை நீங்கள் எல்லாரும் சேர்ந்து எனக்குக் கொடுத்துவிட்டீர்கள். நீங்கள் காட்டின தயவுக்காக உங்களுக்கு என் நன்றி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!”
ப்ராக் நகரில் வெள்ளிக்கிழமை கடும் மழை பெய்தபோதும், அரங்குக்கு வெளியே பல குடும்பத்தினர் அமர்ந்துகொண்டு, உள்நாட்டு வெளிநாட்டு பேச்சாளர்களால் கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய உணவை ருசித்துக்கொண்டிருந்தனர். அங்குப் பல குழந்தைகள் இருந்ததால், அரங்கத்தின் உள்ளேயுள்ள பக்கப்பகுதியில் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக, குழந்தைகளை வைத்துத் தள்ளிக்கொண்டே செல்லும் சிறு வண்டி, அல்லது குழந்தையை ஏற்றிச்செல்லும் வண்டியை நிறுத்தும் பகுதியொன்று, அரங்கத்துக்கு வெளியே அமைக்கப்பட்டது.
ப்ராக் நகரில் நடந்த மாநாட்டுக்கு 22,000-க்கும் மேற்பட்டோர் ஆஜராகியிருந்தனர்; அவர்களில், சக்கர நாற்காலிகளில் இருந்த இரண்டு பேர், உடல் ஊனமுற்றவர்களாய் இருந்த ஐந்து பேர் உட்பட, புதிதாக ஒப்புக்கொடுத்திருந்த 432 சாட்சிகள் முழுக்காட்டப்பட்டனர்.
புடாபெஸ்ட்டில் காது கேளாதோர் “கேட்கின்றனர்”
டான்யூப் நதிக்கு இருபுறத்திலும் அமைந்திருப்பது, அழகிய புடாபெஸ்ட் நகர். இந்நகரில்தான் ஜூலையில் சர்வதேச மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. உச்சக்கட்டமாக, 23,893 பேர் ஆஜராயினர். வந்திருந்த 3,341 பிரதிநிதிகளில், ஹங்கேரி தவிர மற்ற 11 நாடுகளிலிருந்து வந்தவர்களும் இருந்தனர்.
மேடைக்குப் பக்கத்தில் போடப்பட்ட ஒரு கூடாரத்தில், காது கேளாதோருக்கென்று நிகழ்ச்சிநிரல் முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டது. அங்கு சுமார் 100 பேர் ஆஜராகியிருந்தனர். ஹங்கேரிய மொழியல்லாமல் வேறு மொழி பேசும் அனைத்துப் பிரதிநிதிகளையும் வரவேற்கும் பேச்சில், காது கேளாதோர் பின்வரும் வார்த்தைகளால் முக்கியமாய் வரவேற்கப்பட்டனர்: “சங்கேத மொழியில் நிகழ்ச்சிநிரல் முழுவதும் மொழிபெயர்க்கப்படும் என்பதை மறக்காமல் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். காது கேளாதோர் நம்மோடு சேர்ந்து ஆஜராகியிருப்பதற்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம்.”
பிறரோடு சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்
இந்த மாநாடுகளில், குடும்ப வாழ்க்கையின் இரகசியம் என்ற புத்தகம் உட்பட, பைபிள் சம்பந்தமான புதிய புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் பிரசுரத்தைப் பெற்ற பிறகு, பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகள் தங்கள் ஓட்டலுக்குத் திரும்பிச் செல்வதற்காக ஒரு பஸ்ஸில் ஏறினர். வழியில், ஒரு மணமகனையும் மணமகளையும், அவர்களோடு திருமணத்துக்கு வந்திருந்த விருந்தாளிகளையும் பார்த்தனர். அந்தச் சகோதரர்கள், ஓட்டுநர் பஸ்ஸை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். சாட்சிகளில் ஒருவர் சற்று எட்டிப்போய், ஹங்கேரியன் மொழியில் இருந்த புதிய புத்தகத்தின் ஒரு பிரதியை அந்தத் தம்பதியிடம் கொடுத்தார். அவர்கள் அதை நன்றியோடு ஏற்றுக்கொண்டு, உடனடியாக அந்தப் புத்தகத்தை அலசிப்பார்க்க ஆரம்பித்தனர். வெளியிடப்பட்டதற்குப் பிறகு அளிக்கப்பட்ட முதல் பிரதிகளில் அதுவும் ஒன்றாய் ஒருவேளை இருந்திருக்கலாம்!
கத்தோலிக்கராக இருந்ததிலிருந்து கம்யூனிஸ்ட் ஆகி, பிறகு சாட்சியாதல் வரை
இந்த மாநாட்டில் முழுக்காட்டப்பட்ட 510 பேர், ஆஜராகியிருந்தவர்களில் 2 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆவர். புதிய சாட்சிகளான இவர்களில் மூன்று பேர், பைபிள் சத்தியத்தைக் கற்பதற்கு முன்பு செய்த குற்றச்செயல்களுக்கான தண்டனைக் காலப்பகுதியைச் சிறையில் இன்னும் கழித்துவருகின்றனர். உள்ளூர் சகோதரர்கள் தவறாமல் அவர்களைச் சந்தித்து மற்றவர்களோடு பைபிள் படிப்புகளை நடத்துகின்றனர். புடாபெஸ்ட்டிலிருக்கும் ஒரு சிறையில், சுமார் 50 பைபிள் படிப்புகள் உடன் சிறைவாசிகளுடன் நடத்தப்பட்டு வருகின்றன.
பெனிடிக்டைன் கத்தோலிக்கப் பள்ளியில் பயின்ற ஒருவர் கத்தோலிக்க சர்ச்சின் பேரில் தனக்கிருந்த விசுவாசத்தை இழந்தார்; தனது 20-வது வயதில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் உறுப்பினரானார். பிறகு, ராணுவத்தில் சேர்ந்து, லெஃப்டெனன்ட் பதவி வரை உயர்த்தப்பட்டார். தொழிலாளர் அவசரப் படையின் ஓர் உறுப்பினராக, பல்கலைக்கழகத்தில் மார்க்ஸிய-லெனினிய கொள்கையை அவர் கற்பித்தார். “விடுதலை, சகோதரத்துவம், சமத்துவம்” என்ற கம்யூனிஸ்ட் வாசகம் அவருடைய ஆர்வத்தைத் தூண்டுவித்தது. என்றபோதிலும், ஆட்சிப் பொறுப்பில் இருந்த “மக்களின் அரசு,” அந்த வாசகத்தை சரியாக பயன்படுத்தவில்லை; அதுவே அவர் கம்யூனிஸ்ட் கொள்கையை மறுபரிசீலனை செய்யும்படி செய்வித்தது. ஏதோவொன்று குறைவுபடுவதாக அவர் உணர்ந்தார். காலப்போக்கில் அவர் ஓய்வுபெற்றார். சாட்சிகள் அவருடைய வீட்டுக் கதவைத் தட்டினபோது, அவர் மனக்கதவும் திறந்தது. அவர் அறிக்கை செய்வதாவது: “நான் முதல் தடவை ராஜ்ய மன்றத்துக்குச் சென்றிருந்தபோது, உண்மையான சகோதரத்துவம் கடைசியில் இங்குதான் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறவன் ஆனேன். கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றுவோரின் அன்பால் நான் சூழப்பட்டிருந்தேன். ஒரு கம்யூனிஸ்ட்டாய் இருந்ததிலிருந்து ஒரு சாட்சியாக நான் மாறுவதற்கு நான்கு வருடங்கள் பிடித்தன. ஆனால் நான் சத்தியத்தைத் தெரிந்தெடுத்திருக்கிறேன்.” அந்த மாநாட்டில் அவர் முழுக்காட்டப்பட்டார்.
காவல் துறைக்கு, மாநாடு நடக்கும் இடத்தில் வேலை பார்ப்பது பொதுவாக வித்தியாசப்பட்ட ஒரு வேலைச் சூழ்நிலையாய் இருக்கிறது. சாட்சிகளின் மாநாடுகளில் வேலை செய்வது மிகவும் கடினம் என்று அரங்கத்தின் வாயிலில் வேலை நியமிப்பைப் பெற்ற ஒரு போலீஸார் சொன்னார். ஏன்? ஏனெனில், எல்லாம் சுமுகமாய் நடந்துகொண்டிருந்ததால் விழித்திருப்பது அவருக்குப் பெரும்பாடாய் இருந்தது!
போலாந்தில் சாதகமான செய்தி அறிக்கைகள்
போலாந்தில் இரண்டு சர்வதேச மாநாடுகள் நடைபெற்றன; தலைநகரான வார்ஸாவில், 20,000-க்கும் மேற்பட்டோர் ஆஜராயினர்; இரண்டாவது பெரிய நகரான லோட்ஜில், கிட்டத்தட்ட 12,000 பேர் ஆஜராயினர்.
வார்ஸாவின் முக்கியச் செய்தித்தாளான ஸிச்ச வார்ஷாவா பின்வரும் பேச்சைப் பற்றிக் குறிப்பிட்டதாவது: “ ‘அறிவிக்கப்படுவதற்கென்று நற்செய்தி இருக்கிறது! அதுவே சமாதான, மெய்யான சமாதான செய்தி. யெகோவாவின் பேரிலும் நம் அயலவரின் பேரிலுமுள்ள நம் அன்பானது, வேலை முடிந்தது என்று கடவுள் சொல்லும்வரை இடைவிடாமல் தொடர்ந்து பிரசங்கிக்க நம்மைத் தூண்டுவிக்கிறது’ என்று யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் ஓர் உறுப்பினரான கேரீ பார்பர் குறிப்பிட்டார்.”
ஷ்டாண்டர் ம்வாட்டிக் செய்தித்தாளின் எழுத்தாளர் கூறினதாவது: “வார்ஸாவில், லெஜீயா அரங்கத்தில் நடைபெற்ற மதக் கூட்டத்தில் சுமார் 12,000 யெகோவாவின் சாட்சிகள் இரண்டு நாட்களுக்கு கூடிவந்திருந்தனர். போற்றத்தக்க ஒழுங்கு நிலவியது; நான் கவனமாய் தேடிப்பார்த்தபோதுகூட, போலீஸ் கார்களையோ, மேற்பார்வை செய்யும் குழுவினரையோ பார்க்கவில்லை.
“போலாந்தை கிட்டத்தட்ட ஒரு கத்தோலிக்க நாடாகவே பொதுவாகக் கருதுகின்றனர். ஆனால் நம் கத்தோலிக்க இளைஞர்கள் அதே அரங்கத்தில் கூடிவரும்போது, ஒரு மிகப்பெரிய காவல் படை தயார்நிலையில் எப்பொழுதும் அங்கிருக்கிறது.
“கத்தோலிக்க மதத்துக்கோ, கட்சிக்கோ துரோகம் இழைத்தவர்களாக, அல்லது வேறெப்படி நீங்கள் அவர்களை [யெகோவாவின் சாட்சிகளை] அழைத்தாலும், அவர்களால் பெரிய அளவில் கூட்டங்களை நடத்த முடிகிறது; அரசு விதித்துள்ள ஒழுங்குக்கும் பாதுகாப்புக்கும் எந்த ஆபத்தையும் அவர்கள் ஏற்படுத்துவதில்லை; ஆனால் நம் கத்தோலிக்க இளைஞரோ, ஒரு கூட்டமாய்க் கூடிவருகையில், ஆபத்தானவர்களாய் ஆகின்றனர்; இளைஞர் ரவுடித்தனத்துக்கு எதிராக போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இதைப் பற்றி நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது.”
இங்கும் புதியவர்களுக்கான முழுக்காட்டுதல் நடைபெற்றது. வார்ஸாவில் 462 பேரும் லோட்ஜில் 278 பேரும் முழுக்காட்டப்பட்டனர். இவர்களில் ஒருவர், 19 வயது சில்வியா. இவர் சாட்சிகளுக்கு எதிராக தப்பெண்ணம் உடையவராய் இருந்தார். மழை பெய்துகொண்டிருந்த ஒருநாள், தெருவில் அவரை ஒரு சாட்சி அணுகினார். “அவங்கள ஒருவழியா விரட்டியடிச்சிட்டு, நடக்க ஆரம்பிச்சேன். ஆனா, மழைல நனைஞ்சுகிட்டு இருந்த ஒரு பிள்ளைய என் குடைக்குள் கூப்பிட்டுக்கிட்டேன். பாத்தா, அவளும் ஒரு சாட்சியா இருந்திருக்கிறா! இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்த என்னிடம் கொண்டுவரப் போவதாகச் சொல்லிட்டுப் போனா. ஒரு மரியாதைக்காக என் அட்ரஸ அவகிட்ட குடுத்தேன், அதுக்கப்புறம், . . . இன்னிக்கு நான் முழுக்காட்டப்பட்டேன்!”
சிறிய எஸ்டோனியாவில் பெரியதொரு சாட்சி
எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவை சேர்ந்ததுதான் பால்டிக் மாகாணங்கள். எஸ்டோனியாவின் ஜனத்தொகை சுமார் 15 லட்சம் மட்டுமே. தலைநகரில் சுமார் 4,50,000 பேர் வசிக்கின்றனர். அங்கு ஆகஸ்ட் 1996-ல் இரண்டு மாநாடுகள் நடத்தப்பட்டன.
இந்த மிகப் பெரிய கூட்டங்கள் வெகுவாய்க் கவர்ந்ததால், ஒரு செய்தித்தாள் பின்வருமாறு சொன்னது: “டல்லின் உண்மையிலேயே யெகோவாவின் சாட்சிகளுடைய வழிபாட்டால் நிறைந்திருந்தது. லினஹலில் நடத்தப்பட்ட அவர்களுடைய மாநாடு, எஸ்டோனியாவில் இதுவரை நடத்தப்பட்டுள்ள எந்த மதக்கூட்டத்தையும்விட பெரிய கூட்டமாய் இருந்ததாக சொல்லப்படுகிறது.” ஓட்டல்கள் அனைத்தும் சாட்சிகளால் புக் செய்யப்பட்டிருந்தன.
சகோதரர் கேரீ பார்பர் பின்பு கொடுத்த ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது: “பின்லாந்து சகோதரர்களும் மற்றவர்களும் எஸ்டோனியாவில் இருக்க மிகவும் விரும்பினர் என்பதில் ஆச்சரியமில்லை. சிறியதாயிருந்தாலும் அழகிய இந்த நாடு, பெரிய தேசங்களால் வெல்லப்பட்டு கொடுமைக்கு உள்ளாகியும் அதிக துன்பத்தைப் பொறுத்துக்கொண்டும் இருந்திருக்கிறது. இப்போது எஸ்டோனியர்கள் . . . நிரந்தர சமாதானத்தையும் பாதுகாப்பையும் யெகோவாவிடமிருந்து பெறுவதற்கு வெகு ஆவலோடு எதிர்நோக்கி இருக்கின்றனர்.” 3,100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் எஸ்டோனியாவில் சுறுசுறுப்பாய் இயங்கிவருகின்றனர். அவர்களில் பாதிப்பேர் ரஷ்ய மொழி பேசுகின்றனர்.
எஸ்டோனியர்கள், ரஷ்ய மொழி பேசும் எஸ்டோனியர்கள் மற்றும் லாட்வியர்கள், லிதுவேனியர்கள், 15 நாடுகளிலிருந்து பார்வையிட வந்த பிரதிநிதிகள், மற்றும் பிரிட்டனிலிருந்து வந்த 155 பேர், பின்லாந்திலிருந்து வந்த 300 பேர் உட்பட அனைவருக்கும் இந்த மாநாடுகள் பிரயோஜனமாய் இருந்தன.
காது கேளாதோரும் எஸ்டோனியாவில் “கேட்கின்றனர்”
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்திலிருந்து எஸ்டோனியாவிலுள்ள டல்லின் நகருக்கு, காது கேளாத ஒரு மூப்பர் சென்றார். அவர், அந்த நாட்டிலிருக்கும் காது கேளாதோருக்காக தன்னால் எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பதைக் காணச் சென்றார். அங்கு, காது கேளாத ஒரு நபரைக்கூட அவருக்குத் தெரியவில்லை. ஆகவே டல்லினில் காது கேளாதோர் கூடிவரும் இல்லத்துக்கு, கட்டுக்கட்டாகக் காவற்கோபுர பத்திரிகைகளையும், மற்ற புத்தகங்களையும் கொண்டு சென்றார். எஸ்டோனிய காது கேளாதோர் அவரை வரவேற்றனர். அவர் வைத்திருந்ததையும் பார்க்கத் துடித்தனர். அவர் தன்னுடைய முதல் சந்திப்பின்போது அனைத்துப் புத்தகங்களையும் அளித்தார். பிறகு அக்கறை காட்டியவர்களின் பெயர்களையும் முகவரிகளையும் எழுதிக்கொண்டார். மொத்தம் 70 பெயர்கள் எழுதப்பட்டன.
பெரும்பாலும் எல்லாருமே தங்களுக்கு ஒரு பைபிள் படிப்பு வேண்டுமென்று விரும்பினர். அத்தனை படிப்புகளையும் தன்னால் நடத்த முடியாது என்று அந்தச் சகோதரர் உணர்ந்தார். ஆகவே மிக அதிக ஆர்வம் காட்டியவர்களை அவர் தெரிந்தெடுக்க வேண்டியிருந்தது. எஸ்டோனியாவுக்கு அவர் போய்வந்து கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே அவருக்கு 30 பைபிள் படிப்புகள் கிடைத்தன, அதோடு எதிர்காலத்தில் படிப்பு நடத்த 40 பேர் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்டனர்! டல்லினில் இப்போது காது கேளாதோருக்கென்று, சங்கேத மொழி மொழிபெயர்ப்பாளர்கள் நான்கு பேர் இருக்கின்றனர்.
‘புதிய ஏற்பாட்டுப் பதிவில் ஒரு புதிய பாகம்’
ஒரு சாட்சி, தோணித்துறையின் (ferry) நிறுத்தத்தில் மாநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்றுக் கொண்டிருந்தார். அவர் எஸ்டோனிய சுற்றுலா வழிகாட்டியை அணுகி, இந்தப் பெரிய மாநாட்டு நிகழ்ச்சியைப் பற்றிய அவர் கருத்தைக் கேட்டார். பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த சாட்சிகளடங்கிய பல தொகுதிகளைத் தான் வழிநடத்தியிருந்ததாகவும், சாட்சிகள் எப்பொழுதும் மெச்சத்தக்க முறையில் நடந்துகொள்ளும் நல்ல ஜனங்கள் என்பதைத் தான் கவனித்திருந்ததாகவும் அந்த வழிகாட்டி சொன்னார். அவர், பூஹாங்கூ தெருவிலிருந்த உவாட்ச் டவர் சங்கத்தின் அலுவலகத்தைப் போய்ப் பார்க்கும்படி அழைக்கப்பட்டிருந்தபோது, சிறந்த ஒழுங்கையும், தயவாயும் மகிழ்ச்சியாயும் இருந்த இளைஞரையும் பார்த்து ஆச்சரியப்பட்டார். சாட்சிகள் கடுமையான எதிர்ப்பை ஏன் எதிர்ப்படுகின்றனர் என்பதையும், குற்றச்சாட்டுகள் பொய்யானவையாய் நிரூபிக்கப்பட்டாலும் ஏன் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள் என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் கூறினதாவது: “என் மனதில், உங்கள் பணி, அதாவது உங்கள் சேவை, புதிய ஏற்பாட்டுப் பதிவில் ஒரு புதிய பாகமாக இருப்பதைப் போன்று உள்ளது.”
நிச்சயமாகவே, தேவ சமாதான தூதுவர்களாக, யெகோவாவின் சாட்சிகள், தங்களுடைய மரியாதையான நடத்தைக்காகவும், முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் அவர்கள் காட்டும் தயவுக்காகவும் உலகமுழுவதிலும் நற்பெயர் பெற்றிருப்பதை நிரூபிக்கும்படி எதிர்பார்க்கப்படுகின்றனர். (1 பேதுரு 3:16) மத விரோதிகளிடமிருந்தும் விசுவாசதுரோகிகளிடமிருந்தும் அவதூறான பேச்சுக்களும், எழுத்து வடிவில் பொய்க் குற்றச்சாட்டுகளும் வந்தபோதிலும், போரும் பகைமையும் நிரம்பிய உலகுக்கு மிகவும் தேவையான சமாதான செய்தியை அவர்கள் அறிவித்து வருகையில் யெகோவாவின் சாட்சிகளுக்கு கடவுளுடைய ஆசீர்வாதம் இருப்பதை கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்ற இந்த மாநாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.—ஏசாயா 2:2-4; மாற்கு 13:10.
[அடிக்குறிப்பு]
a ருமேனியாவில் நடைபெற்ற மாநாடுகளைப் பற்றிய விவரமான தகவலுக்கு, “எதிர்ப்பின் மத்தியில் நடத்தப்பட்ட ருமேனிய மாநாடுகள்” என்ற தலைப்பிலுள்ள பிப்ரவரி 22, 1997, விழித்தெழு! கட்டுரையைக் காண்க. அங்கு அளிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலைப் பற்றிய தகவலுக்கு, “தேவ சமாதான தூதுவர்கள் கூடுகின்றனர்” என்ற தலைப்பிலுள்ள, ஜனவரி 15, 1997 தேதியிட்ட காவற்கோபுர கட்டுரையைக் காண்க.
[பக்கம் 23-ன் படம்]
மழை பெய்தபோதிலும், குடும்பங்கள் நிகழ்ச்சிநிரலுக்கு கூர்ந்த கவனம் செலுத்தின
[பக்கம் 24-ன் படம்]
தங்களுடைய புதிய வெளியீடுகளுடன் மகிழ்ச்சியான போலாந்து சாட்சிகள்
[பக்கம் 25-ன் படம்]
சாதாரண கிராமிய உடையில், களிப்பான எஸ்டோனிய சாட்சிகள்