இளஞ்சிவப்பில் ஓர் அதிசயம்
கொழுந்துவிட்டெரிகிற ஒரு பறவை! தீக்கொழுந்தில் தன் உயிரை மாய்த்துக்கொண்டு பின்னர் அந்தச் சாம்பலிலிருந்து மீண்டும் எழுந்துவந்த ஃபீனிக்ஸ் (phoenix) பறவையைப் பூர்வ கிரேக்கர் இப்படித்தான் விவரித்தனர். நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஃபீனிக்ஸ் பறவையின் பெயர் ஓர் உண்மையான பறவைக்கு மாற்றப்பட்டது, அதுதான் மராளம் (flamingo). ஒரு புராணக்கதைப்போல் இல்லாமல் இது தன் பெயருக்கேற்ப இருக்கிறது. இப்பறவைக் கூட்டம் பறப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சி—வானில் ‘விர்’ என்று பறக்கிற ஒலியும், கரையும் சப்தமும், இளஞ்சிவப்பும் கருமையும் செந்நிறமும் கலந்த “தீப்புயலும்” விண்ணை நிரப்புகிறது.
ஒரு தனி மராளம் தலையிலிருந்து கால்வரை வடிவமைப்பில் ஓர் அதிசயம். அலகைக் கவனியுங்கள், நீள்வட்ட மூடியிட்ட ஒரு பெட்டி, முனையில் கீழ்நோக்கியவண்ணம் திரும்பியிருக்க, ஆழமற்ற நீர்நிலையில் உணவு தேடி தலையை முன்னும் பின்னுமாக அசைத்திடும்போது குளத்தின் தரை மட்டத்திற்கு இணைக்கோட்டு நிலையில் காணப்படுகின்றது. அலகுக்குள் வரிசையாகச் சிலிர்ப்புகள், இவை பெரிய பொருட்களை வெளியிலும் சிறிய, உண்ணத்தக்க பாசிவகைகளை உள்ளேயும் பிடித்துவைக்கிறது, நாவு தண்ணீரை உள்ளும் புறம்புமாக அனுப்புகிறது. திமிங்கிலங்கள் மட்டுமே இவ்வாறு உணவருந்துகின்றன, தங்களுடைய மேல்வாய்த் தகட்டெலும்புகளினூடே சிறிய இறால்களை ஈர்த்துவிடுகிறது.
மராளத்தின் கழுத்தும் கால்களும் இணையாக இருக்கின்றன, பறவைகளிலேயே மிக நீளமானவை. மராளம் நிற்கும்போது ஆறு அடிக்கும் அதிக உயரமாயிருக்கக்கூடும். இவற்றின் நெடுங்கால்கள் ஆழமற்ற, உப்புத் தண்ணீர் ஏரிகளுக்குப் பொருத்தமானவை. நீரில் நிற்கும்போதே ஓய்வெடுக்கிறது, அதன் எதிரிகளிலிருந்து பாதுகாப்பாக, அசாதாரண நிலைகளில்—ஒற்றைக் காலில் நிற்கிறது! மற்ற காலுக்கு ஓய்வு கொடுக்கவே ஒற்றைக்காலில் நிற்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு விசேஷ தசைத்தளை காலை அதன் இடத்தில் ஒரு கோலைப் போல் உறுதியாகப் பூட்டிக்கொள்ளச் செய்கிறது. ஓர் உயர்ந்த சமநிலைக் காக்கும் உணர்வும் அதற்கு உதவுகிறது.
மராளத்தின் ஆரம்பம் குறித்து பரிணாம வாதத்தினர் சிக்கலிலிருக்கின்றனர். அவர்களுக்கு இது ஒருசில வழிகளில் வாத்து போன்றும், மற்ற வழிகளில் ஒரு நாரையைப் போன்றும் மற்றும் சில வழிகளில் கொக்கு போன்றும் இருக்கிறது. அது திமிங்கிலம் போன்று உணவருந்துகிறது, நிற்கும் விளக்கு போன்று நித்திரை செய்கிறது என்று நாம் கூட்டிச் சொல்லலாம். ஆனால் அது எங்கே இருந்து வந்தது என்று நம்மைக் குழப்பிக்கொள்ள அவசியம் இல்லை. ஒரு புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பாளர் மட்டுமே இப்படிப்பட்ட ஓர் அதிசயத்தை அமைத்திருக்கமுடியும். (g90 3/22)