நீங்கள் அதிக ஆபத்தான ஓர் ஓட்டுனரா?
ஜப்பான் விழித்தெழு! நிருபர்
“விபத்துக்குள்ளாகும் வகையினரை நாங்கள் அறிந்திருக்கிறோம்,” என்றார் ஜப்பானின் தேசிய காவல் துறை அறிவியல் நிறுவனத்தில் போக்குவரவு பாதுகாப்பு தலைமை அதிகாரி ஹிரோயாஸு ஓஹ்ட்ஸுக்கா. “அப்படி இருந்தும் அவர்களுக்கு ஓர் ஓட்டுனர் உரிமம் வழங்கிட நாங்கள் மறுப்பதில்லை, ஆனால் மக்கள் தங்களுடைய ஆளுமையின் குறைகளை கண்டுணர்ந்து அவற்றை மேற்கொள்ள உழைக்கும்படி நாங்கள் விரும்புகிறோம்.”
அதிக ஆபத்தான ஓட்டுனர்கள் பொதுவாக தங்களை அவ்விதம் காண்பதில்லை. ஆனால் ஒருவர் வாகனத்தின் இயக்குப்பிடியின் முன்னால் உட்காரும்போது மிகவும் எளிதில் வெளிப்படும் ஆறு வகை ஆளுமைக் குறைகளை நிபுணர்கள் கண்டுணர முடிந்திருக்கிறது. ஒவ்வொரு வகை குறையையும் நீங்கள் சிந்தித்துப்பார்க்கையில், உங்களையே நீங்கள் பரிசோதித்துப் பார்க்க முயன்று, நீங்கள் எந்தளவுக்கு ஒரு பாதுகாப்பான ஓட்டுனராக இருக்கிறீர்கள் என்பதைக் காணுங்கள்.
சமூகத்துக்குத் தகுதியாயிராத காரியங்கள்
அதிக ஆபத்தான வகையினரில் சமுதாயத்திற்குப் பொருந்தாதவர்கள், மற்றவர்கள் சம்பந்தமாக பிரச்னைகள் உள்ளவர்கள். அவர்கள்:
தன்னலப் பிரியர் இந்த நபர் எல்லாவற்றையும் தன்னுடைய சொந்த வழியில் செய்வதை வற்புறுத்துகிறவர். இயக்குப்பிடியின் முன்னே உட்கார்ந்தவராய்த், தானே “சாலைக்கு ராஜா” என்று நினைத்துக்கொள்கிறார். தன்னுடைய சொந்த வேகத்தை அமைத்துக்கொள்வதில் சுயாதீனம் கொள்கிறார், தேவையற்றதாய்த் தான் கருதும் சாலை விதிகளை அசட்டை செய்கிறார், வேண்டும்போது பிறர் பார்வைக்குத் தன் திறமைகளைக் காட்டுகிறார். சாலையை மற்ற ஓட்டுனர்களுடனும் தான் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை அவர் மறந்துவிடுகிறார். மனம்போனப் போக்கில் சாலைவிதிகளை மீறுவதன் மூலம், அவர் விபத்துகளுக்குக் காரணமாகிறார், காரணம், சாலையில் அவ்வப்போது மாறக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பிரதிபலிக்கத் தவறுகிறார் மற்றும் அவற்றிற்குத் தக்கவாறு தன்னை அமைத்துக்கொள்ளத் தவறுகிறார்.
ஒத்துழையாதவர் ஒத்துழையாத ஓட்டுனர் மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுப்பதில்லை, அவர்கள் எவ்விதம் யோசிக்கிறார்கள், உணருகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வதில்லை. மற்றவர்களோடு ஒத்துப்போவது அவருக்குக் கடினமாக இருப்பதால், அவர்களைத் தவிர்க்கும் மனச்சாய்வைக் கொண்டிருக்கிறார். இது சாலையில் அவர் சரியான விதத்தில் நடந்துகொள்ளாத காரியத்திலும், மற்ற ஓட்டுனர்களை மதியாததிலும் விளங்குகிறது—இரண்டுமே அதிக ஆபத்தான அம்சங்கள். ஆட்களோடு எவ்விதம் பழகி ஒத்துப்போவது என்பதைக் கற்றுக்கொள்வது சிலருக்கு பல வருடங்கள் எடுக்கலாம், இளைஞர் மத்தியில் விபத்துகள் எண்ணிக்கை உயர்வாக இருப்பதற்கு இது ஒரு காரணம்.
மூர்க்கமானவர் ஒருவருடைய போக்குக்கேற்ப ஓட்டுனருக்கு ஆலோசனைகள் என்ற புத்தகத்தின் பிரகாரம், மூர்க்கமான ஓட்டுனரில் காணப்படும் ஓர் அறிகுறி, “முன்செல்வதற்கு உரிமை தனக்கு மட்டுமே இருக்கிறது என்று நம்பும்போது மற்றவர்களுக்கு வழிவிட முற்றிலும் மறுத்தலாகும். மற்ற ஓட்டுனர்கள் அல்லது பாதசாரிகளின் சிறுதவறுகளை மன்னிக்கமாட்டார், இது கூச்சலுக்கும், மற்றவர்களுடைய செயல்களில் குறுக்கிடுதலுக்கும், . . . ஒலி கொடுத்தலுக்கும், . . . தனக்கு என்ன நேர்ந்தாலும் சரி என்று தன் உரிமைகளைக் கடைசிவரைக் காத்துக்கொள்வதற்கும் வழிநடத்துகிறது.” தான் தவறு என கற்பனை செய்துகொள்ளும் காரியங்களுங்கூட அவனைக் கோபப்படுத்தக்கூடும். அவன் ஒரு முன்கோபியாகவும் இருந்தால், அவன் வாகனத்தை ஓட்டுவது அநேக சமயங்களில் நல்லறிவின் எல்லைகளையும் தாண்டிவிடும்.
தகுதியாயிராத உணர்ச்சிகள்
பின்னர் உணர்ச்சி சார்ந்த பிரச்னைகள் உள்ளவரும் இருக்கின்றனர். இவற்றில் உட்படுபவை:
நிலையற்றவர் உணர்ச்சி சம்பந்தமாகக் கோடிகளில் இருப்பவர்தான் நிலையில்லாதவர். அவரில் எதைப்பற்றியும் கவலையில்லாதிருத்தல், உணர்ச்சிவசப்படுதல், மனச்சோர்வடைதல் ஆகிய தன்மைகள் மாறிமாறிக் காணப்படும். மனச்சோர்வுடையவராய் ஓட்டினால், எதிரில் இருக்கும் ஆபத்துகளைப் பார்க்கத் தவறுவார், பாதுகாப்பாக ஓட்டுவதற்குத் தேவையான அவருடைய பிரதிபலிப்புகளில் மிகவும் தாமதமாக இருப்பார். உணர்ச்சிகளில் உச்சமாய் இருக்கும்போது ஓட்டினால், அவர் அஜாக்கிரதையாய் ஓட்டுவார். இந்த மனநிலையில் இருக்கும்போது அவருக்குக் கொடுக்கப்படும் எச்சரிப்புகள் அவரில் ஒரு கலகத்தனத்தை மூட்டிவிடும். தன்னுடைய மனச்சோர்வு அசாதாரணமானவையே என்று அவர் காணக்கூடும்.
அளவுக்கு மிஞ்சி பயப்படுகிறவர் பெரும்பாலும் இவர் தன்னுடைய சொந்த சிந்தனைகளில் ஆழ்ந்துவிடுகிறவரும், எல்லாக் காரியத்திலும் கவலைப்படுகிறவருமாக இருக்கும் அமைதலான சுபாவமுடையவர். ஓட்டும்போது, அவருடைய மனது “ஓட்டுனருக்கு அல்லாத தகவல்களால் அமைதியை இழந்துவிடுகிறது.” இதனால் அவர் “முக்கியமான தகவலைத் தவறவிடும் அல்லது தவறாக விளங்கிக்கொள்ளும் சாத்தியம் இருக்கிறது” என்று அதிக ஆபத்தான ஓட்டுனர்கள் பற்றிய ஓர் ஆய்வில் ஆய்வாளர்கள் ரிச்சர்டு E. மேயர் மற்றும் ஜான் R. டிரீட் கூறினார்கள். அதிக ஒரு பயந்த ஓட்டுனர் ஒரு லாரி தன் பக்கமாகக் கடந்து செல்லுதல் போன்ற இக்கட்டாக இல்லாத சூழ்நிலைகளிலுங்கூட மனம்நொந்து போவார். அவர் மிகவும் மோசமான காரியத்தை எதிர்பார்க்கிறார்.
திடீர் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுப்பவர் இப்படிப்பட்டவர் மிக வேகமாகச் செயல்படுகிறார். உண்மைகளை நிச்சயப்படுத்தி, ஒரு சரியான தீர்மானத்தைச் செய்வதற்குப் பதிலாக, தன்னுடைய உள்ளுணர்வில் சார்ந்திருக்கப் பார்க்கிறார். இவருக்குச் சாலை விளக்குகளுக்கும் பாதசாரிகளுக்கும் காத்திருப்பதற்கான நேரம், சாதாரண ஒருவருக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக நீண்டதாகத் தெரிகிறது. எனவே அவர் வெறுப்படைந்து தன் பொறுமையை வேகமாக இழந்துவிடுகிறார். செயல்படுவதற்கு முன்பு ஒரு நல்ல தீர்மானத்தை எடுப்பதற்குத் தவறுவதுதானே அவரை ஓர் ஆபத்தான ஓட்டுனராக ஆக்குகிறது.
இந்த வகையினரில் எதிலாவது நீங்கள் உங்களைக் காண்கிறீர்களா? கரிசனையற்ற ஓர் ஓட்டுனர் உங்கள் பொறுமையைச் சோதிக்கிறார் என்றால், உங்களுடைய பிரதிபலிப்பு என்ன? காலணி உங்களுக்குச் சரியாக அமைந்தால், அதை அணிந்துகொள் என்பது ஆங்கில பழமொழி. உங்களுடைய சொந்த பாதுகாப்புக்காக, எச்சரிப்புக்குச் செவிகொடுங்கள், பலவீனங்களைப் போக்க உழைத்திடுங்கள். ஒரு நல்ல ஓட்டுனராக இருப்பதற்கு உங்கள் உணர்ச்சிகளையும் மனநிலைகளையும் கட்டுப்பாட்டில் கொண்டிருங்கள்.
நன்கு பக்குவப்பட்ட ஓட்டுனர்
ஆனால் ஒருவரை நல்ல ஓட்டுனராக்குவது என்ன? விழித்தெழு! பேட்டிகளில், ஜப்பான் காவல்துறையைச் சார்ந்த உயர் ஆய்வாளர்கள் மற்றவர்கள் பேரில் கரிசனை, சிந்தித்து செயல்படுதல், முழு நிலைமையையும் புரிந்துகொள்ளும் திறமை, சரியாக நிதானிப்பதற்கு வேண்டிய ஞானம், விவேகம், சாந்தம், தன்னடக்கம், சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களைப் பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்ளுதல் போன்றவற்றை வலியுறுத்திக் காட்டினர்.
அதுபோல, ஒசாக்கா ஆட்சியரங்கத்தலைவர் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த ஓர் அறிக்கை, நல்ல ஓட்டுனர்கள் “உணர்ச்சிசார்ந்த நிலையான தன்மையில் உயர்ந்து விளங்குகிறவர்கள்; பகுத்துணர்ந்து தீர்மானிக்கும் அவர்களுடைய மன இயக்கம் உடலின் பிரதிபலிப்புகளைவிட வேகமாக செயல்படுகிறது; அவர்களுடைய தீர்மானம் சரியானது; தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளக்கூடியவர்கள்,” என்று விவரிக்கிறது. இந்த விளக்கம் உங்களுக்குப் பொருந்துகிறதா?
ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் விவேகத்தையும் எவ்விதம் விருத்தி செய்வது என்று பைபிள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களுக்குக் கற்பித்து வருகிறது. (நீதிமொழிகள் 2:1-6) அபூரண மனிதர் ‘கோபம், மூர்க்கம், துர்க்குணம், தூஷணம், வம்பு வார்த்தை’ ஆகிய தன்மைகளை எவ்விதம் “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய தன்மைகளைக் கொண்டு மாற்றிடலாம் என்று அது காண்பிக்கிறது. ஆம், ஒரு மேம்பட்ட ஓட்டுனராக இருப்பதற்குங்கூட பைபிள் உங்களுக்கு உதவக்கூடும்!—கொலோசெயர் 3:8-10; கலாத்தியர் 5:22, 23. (g90 6/8)