களைப்பு—லாரி ஓட்டுநர்கள் உணராத ஒரு கண்ணி
ஜெர்மனியிலிருந்து விழித்தெழு! நிருபர்
மணிக்கணக்காய் ஓட்டிய பிறகு, சக்திவாய்ந்த அந்த எஞ்ஜினின் கர். . .கர். . . என்ற சத்தமும், சாலையில் ஓடும் 14 சக்கரங்களின் க்ரீச் என்ற ஓசையும் சேர்ந்து, களைப்பால் அவதிப்படும் ஓட்டுநரை தொல்லைபடுத்துகின்றன. ஹெட்லைட்டுகளின் ஒளியில், சாலையில் போடப்பட்டுள்ள கோடுகள் மெல்லமெல்ல கடந்து செல்கின்றன. திடீரென்று, அந்த லாரியின் டிரெய்லர் இங்கும் அங்குமாய் ஆட்டம் போடுகிறது; அது சாலையிலிருந்து விலகிச்செல்ல ஆரம்பித்திருக்கிறது.
தன் பலத்தையெல்லாம் கொட்டி, ஸ்டீயரிங்கை இங்குமங்குமாய் திருப்பும் அந்த ஓட்டுநர், 40 டன் எடையுள்ள தன் வாகனத்தை சாமர்த்தியமாய் மறுபடியும் சாலைக்குக் கொண்டுவருகிறார். அவர் தன் உணர்வுக்குத் திரும்புகையில், கடந்த சில நொடிகளில் என்ன நடந்ததென்றே அவருக்குத் தெரியவில்லை. அவர் களைப்பால் அவதிப்படுகிறார். a
ஓட்டுகையில் களைப்பால் அவதிப்படும் எவருமே எளிதில் கணப்பொழுது உறங்கிவிடலாம். இன்றைய நெரிசல் நிறைந்த சாலைகளைக் கருத்தில் கொள்ளுகையில், அவ்வாறு உறங்குவது—சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும்கூட—பெரிய ஆபத்தாய் இருக்கலாம். உதாரணமாக, தென்னாப்பிரிக்காவில், ஜனவரி 1989-க்கும் மார்ச் 1994-க்கும் இடையில், கனரக வாகனங்களால் ஏற்பட்ட எல்லா விபத்துக்களிலும், 35 சதவீதத்துக்கும் மேற்பட்டவை, வாகனத்தை ஓட்டிச்சென்றுகொண்டிருக்கும்போதே உறங்கிவிட்ட ஓட்டுநர்களால் ஏற்பட்டவை.
அதிகரிக்கும் களைப்பு, தூக்கத்துக்கு வழிநடத்துகிறது; மதுபானம் ஏற்படுத்துவதைப் போன்ற விளைவுகளையே அதுவும் ஏற்படுத்துகிறது என்பதாக ஓட்டுநர் நடத்தை பற்றிய ஓர் ஆய்வாளரான பேராசிரியர் ஜி. ஸ்டாக்கர், ஃபார்ஷூல என்ற ஜெர்மன் பத்திரிகையில் தெரிவித்தார். சந்தேகமின்றி, லாரி மட்டுமல்லாமல் எல்லா விதமான வாகன ஓட்டுநர்களுக்குமே அவருடைய கூற்று பொருந்துகிறது.
களைப்புக்கான காரணங்கள்
பல நாடுகளில், ஒரு லாரி ஓட்டுநர் இவ்வளவு நேரம் தான் அதிகபட்சமாய் ஓட்ட வேண்டும் என்று சட்டம் சிபாரிசு செய்யும், அல்லது நிபந்தனையும் செய்யும் நிலை இருக்கையில், களைப்புடன் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் ஏன் அவ்வளவு அடிக்கடி நேரிடுகின்றன? முதலில், லாரி ஓட்டுநர்களின் மொத்த வேலை நேரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்; இது ஓட்டுவதில் மட்டுமல்லாமல் மற்ற கடின வேலைகளைச் செய்வதிலும் செலவிடும் நேரத்தை உட்படுத்துகிறது. இந்த வேலை நேரம் பொதுவாக நீண்டதாயும் ஒழுங்கற்றதாயும் இருக்கிறது.
பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள், அந்தக் கடின வேலை முழுவதையும் முடித்து விடும்போது சந்தோஷப்படுகின்றனர்; இது, வானிலை எப்படி இருந்தாலும் சரக்குகளை உரிய இடத்துக்குக் கொண்டுபோய் சேர்ப்பதைக் குறிக்கிறது. அவர் ஓட்டிச்செல்லும் தூரம், கொண்டுபோய் சேர்க்கும் சரக்கு ஆகியவற்றின் அடிப்படையில் அவருடைய திறமை கணக்கிடப்படுகிறது. வேலை நேரம், சராசரி நேரத்தைவிட மிக அதிகமாகவும் இருக்கலாம். ஜெர்மனியில் பெரும்பாலான மக்கள், வாரத்திற்கு 40 மணிநேரத்திற்கும் குறைவாகவே வேலை செய்கின்றனர்; ஆனால் லாரி ஓட்டும் பலர் அதைப் போல் இரண்டு மடங்கு வேலை செய்கின்றனர்.
மற்ற நாடுகளிலும் அதைப் போன்ற நிலைமைகள்தான் இருக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் கொடுக்கப்படும் கூலி குறைவு; ஆகவே, தங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்காக ஓட்டுநர்கள் நீண்ட நேரம் ஓட்ட முயலுகின்றனர். ஓட்டுநர்கள் தங்கள் பயணத்தை முடிக்க போதியளவு நேரத்தை போக்குவரத்து நிறுவனங்கள் அளித்தாலும், பல இடங்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கான கூடுதல் சரக்குகளை ஏற்றிக்கொள்வதன் மூலம், லாரி ஓட்டுநர்கள் பலர் தங்கள் வருவாயைக் கூட்டிக்கொள்கின்றனர்; இவ்வாறு செய்வது, ஓட்டுநர்களை நீண்ட நேரம் ஓட்டச் செய்கிறது என்பதாக இந்தியாவிலிருந்து வரும் அறிக்கைகள் காட்டுகின்றன. நிறுவனத்துக்கு உரிய நேரத்தில் திரும்பிச் செல்ல வேண்டுமென்றால், அவர்கள் தங்கள் உறக்க நேரத்தைத்தான் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.
ஐரோப்பிய சங்கங்களில், சட்டத்தால் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், ஒரு லாரி ஓட்டுநர், வாரத்துக்கு 56 மணிநேரத்தைச் செலவிடலாம். ஆனால், அதைத் தொடர்ந்து வரும் வாரத்தில், அவர் ஓட்டும் அதிகபட்ச நேரம் 34 மணிநேரமாகக் குறைக்கப்படுகிறது. சரக்கை ஏற்றி இறக்குவது உள்ளிட்ட அவருடைய வேலை நேரம் ஒரு கருவியால் பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பதிவு, ஒவ்வொரு ஓட்டுநரும் விதிகளுக்கு உட்பட்டுச் செல்கிறாரா என்பதைச் சோதனையிட உதவுகிறது.
ஓட்டுவதில் செலவிடும் நேரத்தைப் பாதிக்கும் மற்றொரு அம்சம், அந்த லாரி உரிமையாளரின் நோக்குநிலை. அவருடைய லாரிக்காக அவர் அதிக பணத்தை முதலீடு செய்திருப்பதால், அதை லாபகரமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும், முடிந்தால் 24 மணிநேரமும் சரக்கை ஏற்றி இறக்குவதில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுமே அவருடைய நோக்குநிலை. போக்குவரத்து நிறுவனங்களுக்கு மத்தியில் இருக்கும் போட்டி அதிகரித்து வருகிறது; கூலியை அதிகரிக்காமலேயே, கூடுதலான நேரம் வேலை செய்யும்படி மேலாளர்கள் ஓட்டுநர்களை நெருக்குகின்றனர்.
வேலை நேரம் நீண்டதாய் இருக்கும்போது களைப்பு ஏற்படுகிறது; ஆனால், அசாதாரணமான நேரங்களில் வேலை ஆரம்பிக்கும்போதும் களைப்பு ஏற்படுகிறது. உதாரணமாக, காலை ஒரு மணிக்கும் நான்கு மணிக்கும் இடையில் வேலை பொதுவாக ஆரம்பிக்கிறது. அதுவே பல ஓட்டுநர்கள் அசந்து இருக்கும் நேரம்; அப்போது அவர்கள் மிகக் குறைவாகவே வேலையில் தங்கள் கவனத்தைச் செலுத்த முடியும். நிறுவனங்களிடம் சரக்கின் இருப்பு மிகக் குறைவாய் இருக்கும்போது, விநியோகங்களை ‘உரிய நேரத்தில்’ சேர்க்கும்படி வற்புறுத்துகையில் ஓட்டுநர்கள் மிகவும் நெருக்கப்படுகின்றனர். ஓட்டுநர் சரக்கை வாடிக்கையாளர்களின் வளாகத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டியதை இது குறிக்கிறது. போக்குவரத்து நெரிசல், சாதகமல்லாத வானிலை, சாலை பழுதுபார்த்தல் ஆகியவை, பிந்திச் செல்வதற்குக் காரணங்களாய் இருக்கலாம்; இவற்றையெல்லாம் எப்படியாவது மேற்கொண்டு அந்த ஓட்டுநர் ஓட்டிச்செல்ல வேண்டும்.
ஓட்டிச்செல்லும் அதிகபட்ச நேரத்தில் தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், சட்ட மீறுதல்கள் இருப்பதை போலீஸாரால் செய்யப்படும் திடீர் சோதனைகள் காட்டுகின்றன. போலிஸி ஃபெர்க்கேர் உண்ட் டெக்னிக் (ஜெர்மன்) என்ற பத்திரிகையின்படி, “லாரிகள், பேருந்துகள், ஆபத்தான சரக்கு வாகனங்கள் ஆகிய அனைத்திலும் கிட்டத்தட்ட 8-க்கு 1 ஓட்டுநர், ஓட்டுவது மற்றும் ஓய்வெடுப்பதற்கான குறிக்கப்பட்ட மணிநேரத்தைக் கடைப்பிடிப்பதில்லை.” ஹேம்பர்க்கில் நடத்தப்பட்ட போக்குவரத்து சோதனை ஒன்றின்போது, ஒரு லாரி ஓட்டுநர், ஓய்வெடுக்காமல் தன் லாரியை ஓட்டிச்செல்லுவதில் 32 மணிநேரத்தைச் செலவிட்டிருந்ததாக போலீஸார் கண்டறிந்தனர்.
ஆபத்தைப் புரிந்துகொள்ளுதல்
30 ஆண்டுகளாக சர்வதேசீய சரக்கை ஏற்றி இறக்கிய ஒரு நீண்ட தூர ஓட்டுநரிடம், களைப்படையும் பிரச்சினை பற்றி கேட்கப்பட்டது. அவர் குறிப்பிட்டதாவது: “பெருமையும் மீறிய தன்னம்பிக்கையும், ஓர் ஓட்டுநருடைய களைப்பை அசட்டை செய்துவிடச் செய்யலாம். அப்படித்தான் விபத்துக்கள் நேரிடுகின்றன.” களைப்புக்கான அறிகுறிகள் பக்கம் 22-ல் காணப்படும் பெட்டியில் பட்டியலிடப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை அறிகுறிகளைப் புரிந்துகொள்வது எண்ணற்ற உயிர்களைக் காக்கக்கூடும். ஐக்கிய மாகாணங்களில் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கழகத்தால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, பின்வரும் எச்சரிப்பூட்டும் புள்ளிவிவரத்தைக் காட்டியது: சம்பவித்திருக்கும் 107 தனி லாரி விபத்துக்களில், 62 விபத்துக்கள் களைப்புடன் சம்பந்தப்பட்டவையாய் இருந்தன. ஆகவே, ஓட்டுநர் உறங்கிவிடும்போதெல்லாம், அவரை எச்சரிக்கும் வகையிலான தொழில்நுட்பக் கருவிகளைக் கண்டுபிடிப்பதற்கு லாரி நிறுவனம் முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஓட்டுநரின் கண்கள் எப்பொழுதெல்லாம் சொக்குகின்றன என்பதைக் குறிப்பிடும் ஒரு வீடியோ கேமராவைப் பயன்படுத்தும் ஓர் எலக்ட்ரானிக் அமைப்பைக் கண்டுபிடிக்கும் வேலையில் ஒரு ஜப்பானிய நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தூக்கம் சொக்குவதால் தொடர்ந்து கண்ணை மெதுவாக மூடிமூடித் திறக்கும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஒலி, அவருடைய ஆபத்தான சூழ்நிலையைக் குறித்து அவரை எச்சரிக்கிறது. ஓர் ஐரோப்பிய கம்பெனி, அந்த வாகனத்தின் ஸ்டீயரிங் எந்தளவுக்கு மென்மையாக பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கணக்கிடும் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டு வருகிறது. அந்த லாரி ஆட்டம் கண்டால், ஓர் எச்சரிப்பு ஒலி கேபினில் ஒலிக்கிறது. என்றபோதிலும், இவை நடைமுறைக்கு ஏற்றாற்போல் வேலை செய்யும் கருவிகளாகக் கையில் கிடைப்பதற்கு சற்று காலம் எடுக்கும்.
ஆபத்தை வெல்லுதல்
கிட்டத்தட்ட எல்லா வாகனத்திலுமே, களைப்பு என்பது வரவேற்கப்படாத, விரும்பப்படாத பயணியாய் இருந்திருக்கிறது. அதை எப்படி விரட்டுவது என்பதே கேள்வி. சில ஓட்டுநர்கள் காஃபீன் கலந்த பானங்களை ஏராளமாய் பருகுகின்றனர்; அப்படியிருந்தும் களைப்பு விடாமல் தொடருவதாகவே அவர்கள் கண்டிருக்கின்றனர். மற்றவர்கள் வேறு வகையான ஊக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். இவை உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பதையும் உட்படுத்துகின்றன என்பதை சொல்லத் தேவையில்லை. தூங்காமல் விழித்திருப்பதற்காக, மெக்ஸிகோவில் சில ஓட்டுநர்கள் மிளகாயை (மிகவும் காட்டமான மிளகாய்) கடித்துத் தின்னுகின்றனர்.
சீக்கிரமாய் ஆரம்பிப்பதற்கு முன்பு, போதியளவு உறங்குவது நல்லது. மேலும், நியதியின்படி, குறிப்பிட்ட அதிகபட்ச நேரம் மட்டுமே ஓட்டுவதை ஒருவர் மனதில் கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவில், ஐந்து மணிநேரம் ஓட்டியதற்குப் பின்பு, ஒரு நிறுத்தம் இருக்க வேண்டும் என்று அனுபவசாலிகள் சிபாரிசு செய்கின்றனர். சலிப்பூட்டும் வகையில் நீண்டுகொண்டே போகும் சாலையில், ஓட்டுநர் தன்னுடைய மனதை சுறுசுறுப்பாகவும் கவனத்தை ஒருமுகப்படுத்தியும் வைத்துக்கொள்ள வேண்டும். சில ஓட்டுநர்கள் ரேடியோவைப் போட்டுக் கேட்கின்றனர்; அல்லது மற்ற ஓட்டுநர்களுடன் CB ரேடியோ தொடர்பு கொள்ளுகின்றனர். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராய் இருக்கும் ஓட்டுநர் ஒருவர், காவற்கோபுரம், விழித்தெழு!, அதோடு பைபிளிலிருந்து சில பகுதிகள் ஆகியவற்றைப் போன்ற பைபிள் சம்பந்தமான தலைப்புகளையுடைய கேஸட்டுகளைப் போட்டுக் கேட்கிறார். மற்ற ஆலோசனைக் குறிப்புகள் இந்தப் பக்கத்தில் உள்ள பெட்டியில் காணப்படலாம்.
விலைவாசியை சமாளிப்பதற்காக போதியளவு பணம் சம்பாதிப்பது அதிகக் கடினமாகிக்கொண்டே வருகிறது; ஆகவே, சமநிலையுடன் இருப்பது எளிதல்ல. சில நிறுவனங்களோ, மேலாளர்களோ இந்தக் களைப்பாகிய கண்ணியினால் ஓட்டுநர்களுக்கு இருக்கும் ஆபத்தைக் குறைவாய் மதிப்பிடுகின்றனர். ஆகவே, போக்குவரத்துத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட எல்லாரும், களைப்பைப் பற்றி இதுவரை கற்றறிந்துள்ள விஷயங்களை மனதில் நன்றாக பதிய வைத்துக்கொள்வர். கூடுதலாக, ஓட்டுநர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த அனுபவத்திலிருந்தே பயனுள்ள குறிப்புகளைச் சொல்கின்றனர். இது, தூக்கக் கலக்கத்தை சமாளிக்க மற்றவர்களுக்கு உதவலாம்.
சந்தேகமின்றி, சுறுசுறுப்பாய் வைத்துக்கொள்வதற்கு மிகச் சிறந்த வழியானது, ஒருவரது உடல் வற்புறுத்திக் கேட்பதைக் கொடுத்து விடுவதே: ஏதாவது எச்சரிப்பு அறிகுறிகளை நீங்கள் கண்டுபிடித்தால், ஒருவேளை அடுத்து வரவிருக்கும், ஓய்வு எடுக்க வசதியான நிறுத்தத்தில் சற்று உறங்கிச் செல்வதற்காக வாகனத்தை நிறுத்துங்கள். பிறகு, ஓட்டும் சவாலை மறுபடியும் மேற்கொள்ளுங்கள். களைப்பு என்ற புரியாத கண்ணியில் விழுந்து விடாதீர்கள்!
[அடிக்குறிப்பு]
a ஜெர்மனியில் லாரி ஓட்டும் பெண்கள் குறைவாய் இருப்பதால் இந்தக் கட்டுரையில் ஆண்பால் பயன்படுத்தப்படுகிறது.
[பக்கம் 10-ன் பெட்டி]
உடனடி நடவடிக்கையைத் தேவைப்படுத்தும் எச்சரிப்பு அறிகுறிகள்
• உங்களுக்குக் கண் எரிச்சலோ கண் சொக்குவது போன்றோ இருக்கின்றனவா?
• கற்பனையில் மிதப்பது போன்றும், பகற்கனவு காண்பது போன்றும் உணருகிறீர்களா?
• உங்களை நடுரோட்டில் ஓட்டிச்செல்ல வைக்குமளவுக்கு சாலை குறுகலாகத் தெரிகிறதா?
• நீங்கள் பயணித்த சில இடங்களைப் பற்றி மறுபடியும் நினைத்துப் பார்க்க முடியவில்லையா?
• ஸ்டீயரிங்கையும் பிரேக்குகளையும் நீங்கள் பயன்படுத்தும்போது வழக்கத்துக்கு அதிகமாக உதறல் எடுக்கிறதா?
மேற்கூறப்பட்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஆம் என்று விடையளித்தாலும், உங்களுக்கு உடனடி ஓய்வு தேவை என்பதை அது அர்த்தப்படுத்துகிறது
[பக்கம் 10-ன் பெட்டி]
நீண்ட தூர பயணங்களில்
• போதியளவு உறங்குங்கள்
• ஊக்கிகளின்மீது சார்ந்து இராதேயுங்கள்
• ஒழுங்கான ரீதியில் ஓய்வு பெறுங்கள்; உடல் உறுப்புகள் வளைந்து கொடுக்கும் தன்மை உடையவையாய் இருக்க உடற்பயிற்சி செய்யுங்கள்
• சலிப்பூட்டும் வகையிலான நெடுந்தூர சாலைப் பயணம், குறிப்பாக ஆபத்தானது என்பதை மனதில் கொள்ளுங்கள்
• பசியுடன் ஒரு பயணத்தைத் தொடங்காதீர்கள். நல்ல உணவு—எளிய, ஆரோக்கியமான உணவு—உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்
• பெருமளவில் தண்ணீர் ஆகாரங்களைப் பருகுங்கள்; ஆனால் மதுபானத்தைத் தவிருங்கள்