உலகத்தைக் கவனித்தல்
மதத்தை அப்பியாசிக்காத கத்தோலிக்கர்
“ஃபிரஞ்சு மக்களிடம் மத ஆராதனை தொடர்ந்து கட்டுப்பாடின்றி வீழ்ச்சியடைகிறது,” என்று அண்மை ஆய்வு ஒன்று வெளிப்படுத்துகிறது என்று லெ ஃபிகாரோ குறிப்பிடுகிறது. ஃபிரஞ்சு மக்களில் 82 சதவீதத்தினர் கத்தோலிக்கராயிருப்பதாக உரிமை பாராட்டினாலும், இந்த எண்ணிக்கையில் 12 சதவீதத்தினர் மட்டுமே, பெரும்பாலும் வயதான பெண்கள், சர்ச் ஆராதனைகளுக்குத் தவறாமல் செல்கிறார்கள். அத்துடன், கத்தோலிக்கர் என்று தங்களை உரிமைபாராட்டிக்கொள்ளும் 44 சதவீதத்தினர் தாங்கள் மதத்தை அப்பியாசிக்காத கத்தோலிக்கர் என்று சொல்லிக்கொள்கிறார்கள், 83 சதவீதத்தினர் “தங்கள் சர்ச்சில் அடியெடுத்து வைத்ததில்லை” என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஃபிரஞ்சு மக்கள் மதத்தை அப்பியாசிக்காத கத்தோலிக்கரடங்கிய ஒரு தேசமாகத் தெரிகிறது என்று லெ ஃபிகாரோ குறிப்பிடுகிறது. மதச் சார்புடைமை பெரும்பாலும் ஞானஸ்நானம், விவாகம், சவ அடக்க ஆராதனை போன்ற அவர்களுடைய நிலையற்ற சமுதாய பழக்கவழக்கங்களிலிருந்து தோன்றியிருப்பதாக தெரிகிறது. (g90 6/22)
ஓர் ஆண்புணர்ச்சிக்காரரின் வேற்றிட வாதம்
கற்பழிப்பு, ஒழுக்கமற்ற தாக்குதல், சாதாரண தாக்குதல் மற்றும் சட்டத்துக்கு விரோதமான கட்டுப்பாடு ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்ப்பட்ட ஓர் இளம் மனிதன், எதிர்பாராத ஒரு சாட்சி வேற்றிட வாதமாக அளித்த சான்றுரையின் அடிப்படையில் குற்றச்சாட்டிலிருந்து நீதிமுறைப்படி விடுதலை செய்யப்பட்டான். அந்தச் சாட்சி ஒரு கத்தோலிக்க பாதிரி, பென்சில்வேனியா, அ.ஐ.மா., பிட்ஸ்பர்க் நகர பிரிவுக்கு நியமிக்கப்பட்டவர். நேஷனல் கத்தோலிக் ரிப்போர்ட்டர் என்ற செய்தித்தாளின்படி, “தானும் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபரும் காதலர்கள் என்றும், அந்தக் கற்பழித்தல் சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் சமயத்தில் தாங்கள் ஒன்றாக இருந்தனர் என்றும் அந்தப் பாதிரி ஆதாரச்சான்று அளித்தார்.” ஆண்புணர்ச்சி குறித்து வெளியரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தப் பரபரப்பான காரியத்தின் அடிப்படையில் அந்தப் பாதிரி காலவரையறையற்ற விடுப்பு அளிக்கப்பட்டார். (g90 7/8)
கார் கடத்தல்கள்
திருட்டுக்குப் பாதுகாப்பாகச் செய்யப்படும் வாகனங்கள் அத்தனை இருப்பதால், திருடர்கள் இப்பொழுது இன்னொரு முறையைப் பயன்படுத்துகின்றனர். “கவனிக்கப்படாத ஒரு வாகனத்தின் சன்னலை உடைத்து அதை ஓட்டிச் செல்ல முடியாததால், அநேக கார் திருடர்கள், மற்றவர்கள் தங்கள் வாகனத்தில் பயணம் செய்துகொண்டுபோகையில், அல்லது அதில் உட்கார்ந்து கொண்டிருக்கையில் அப்படியே அதைக் கடத்திச்செல்வதைத் தெரிந்துகொள்கின்றனர்,” என்று தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜோஹனஸ்பர்கின் சாட்டர்டே ஸ்டர் அறிக்கை செய்கிறது. நீல விளக்குகளுடைய வாகனங்களில் திருடர்கள் தங்களைப் போலீஸ் அதிகாரிகளாகப் பாவனை செய்துள்ளனர். தாங்கள் தீர்மானிக்கும் காரை நிறுத்தி, துப்பாக்கி முனையில் அதைக் கடத்திச் செல்கின்றனர். ஓட்டுநர்கள் சாலை விளக்கு மையங்களில் கார்களை நிறுத்தியபோது அல்லது தங்களுடைய கார்களின் பூட்டைத் திறக்கும்போது அவற்றைத் திருடியிருக்கின்றனர். சரக்குகள் ஏற்றப்பட்டுச் செல்லும் வாகனங்களிலுள்ள பொருட்களைத் திருடிக்கொள்வதற்கும், அந்த வாகனத்தையே திருடிக்கொள்வதற்கும் அவை கடத்தப்பட்டிருக்கின்றன என்று போலீஸ் அறிக்கை செய்திருக்கிறது. வாகன உரிமையாளர்களைத் தங்களுடைய வாகன கதவுகளைப் பூட்டும்படிக்கும், சன்னல் கண்ணாடிகளைத் தாழ மூடிவிடாதபடிக்கும், சாலை சந்திப்பு விளக்குகளிலும் அல்லது நிறுத்தங்களிலும் அதிக கவனமாக இருக்கும்படிக்கும் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். (g90 7/8)
நேர்மையற்ற போட்டி?
1928 முதல் கலிஃபோர்னியாவிலுள்ள கோலவெராஸ் மாகாணம் தவளை-குதித்தல் போட்டியை ஆண்டுதோறும் நடத்திவந்திருக்கிறது. அதில் கலந்துகொண்ட தவளைகளில் பெரும்பாலும் கலிஃபோர்னிய பெருந்தவளைகளாகும். அவை ஒரு பவுண்டுக்கும் அதிக எடையுடையவையாய் இருப்பது அரிது. ஆனால் பிறநாட்டு விலங்கினங்களை இறக்குமதி செய்யும் ஒருவர் தன்னுடைய சொந்த தவளைகளைப் போட்டியில் சேர்க்க முயன்றிருக்கிறார்: மேற்கு ஆப்பிரிக்காவின் கோலியாத் தவளைகள். அவை 15 பவுண்டுகள் எடையும் 3 அடி நீளமும் உடையவை. போட்டிக்குத் தற்போதைய பதிவு, ஏறக்குறைய மூன்று தாவுகளில் 21.5 அடி; கோலியாத் தவளைகளை இறக்குமதி செய்திருக்கும் இவர், தன்னுடைய தவளைகள் அந்தத் தூரத்தை ஒரே குதியில் கடந்துவிடும் என்று சொல்லுகிறார். நேர்மையற்ற போட்டி என்று சொல்லி அந்தக் கோலியாத் தவளைகள் போட்டியில் சேர்வதைப் போட்டியின் நிர்வாகிகள் தடைசெய்தனர். கோலியாத்துகள் சிறிய தவளைகளை சாப்பிட்டுவிடக்கூடும் என்றும் சில 35 அடி போட்டி அரங்கிலிருந்து வெளியே குதித்து பார்வையாளரைத் தாக்கவும்கூடும் என்றும் அவற்றை மறுத்திருக்கின்றனர். (g90 7/8)
குரங்குகள் வாடகைக்கு
கூலியாட்கள் கிடைப்பது மிகவும் கடினமாக இருப்பதைக் கண்ட சியோலுக்குச் சற்றே புறம்பே வசிக்கும் ஒரு கொரியா நாட்டு விவசாயி, தன்னுடைய பண்ணையில் பைன் கொட்டைகளைச் சேகரிப்பதற்கு குரங்குகளை வேலையில் அமர்த்தியிருக்கிறார். வேலையில் அமர்த்தப்பட்ட 20 குரங்குகள் “சற்று நேர பயிற்றுவிப்புக்குப் பின்னர், ஒவ்வொரு குரங்கும், பண்ணையில் ஒரு நாள் வேலை செய்யும் ஐந்து வேலையாட்களின் வேலையை அவ்வளவு ஊக்கமாக செய்வது கவனிக்கப்பட்டது,” என்று ஜப்பானின் மெய்னிச்சி டெய்லி நியுஸ் அறிக்கை செய்தது. மற்ற பண்ணைகளில் வேலை செய்வதற்காக தாய்லாந்தில் இருந்து இன்னும் அதிகமான குரங்குகள் இறக்குமதி செய்யப்படும் என்று உள்ளூர் அரசு அதிகாரிகள் சொல்லுகின்றனர். அயல்நாட்டுப் பணியாளர் கொரியா குடியரசில் வேலை செய்வது தடை செய்யப்பட்டிருக்கிறது என்றாலும், அயல் நாட்டுக் குரங்குகள் தடை செய்யப்பட்டில்லை என்பது தெளிவாக இருக்கிறது. (g90 8/8)
அவர்களுடைய காதுகளில் ‘கண்களை’ வைக்கின்றனர்
பார்வை இழந்தவர்கள் சினிமா, தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்திலிருந்து கூடுதல் மகிழ்ச்சியைப் பெற்றிட ஒரு புதிய வகை பொழுதுபோக்கு முறை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவில் இந்த முதல் முயற்சியின் பேரில் அறிக்கை செய்கிற வகையில், பாரீஸின் இன்டர்நேஷனல் ஹெரல்டு ட்ரிபியூன் கூறுகிறதாவது, அந்த முறை “சித்தரிப்பு வகையில் பேசும்” கலையைப் பயன்படுத்துகிறது. எப்பொழுதும் பயன்படுத்தப்படும் ஒலிமுறைத் திட்டத்துடன்கூட, விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தலையில் மாட்டிக்கொள்ளப்படும் திறந்த ஒலிவாங்கிகள், உரையாடலின் இடையிடையே செயல்களை விவரிக்கும் இன்னொரு ஒலிப்பதிவைப் பார்வை இழந்தவர்கள் கேட்கமுடிகிறது. அது அந்தப் பாத்திரங்களையும், அவர்கள் அணிந்திருக்கும் உடையையும், அவர்களுடைய சைகைகளையும், அவர்களுடைய முக பாவனைகளையும் விவரிக்கிறது, இப்படியாக, பார்வை இழந்தவர்கள், தாங்கள் பார்க்க முடியாதவற்றைக் கற்பனைசெய்துபார்க்க உதவுகிறது. இந்த அமைப்புமுறை விசேஷமாக அமைக்கப்பட்ட திரையரங்குகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடுகூட FM ரேடியோ ஒலிபரப்பு மூலமும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். (g90 8/8)
மிகவும் விலையுயர்ந்த விமானம்
ஐக்கிய மாகாணங்களின் அதிபர் விரைவில் “போக்குவரத்துக்கு இதுவரை உற்பத்திச் செய்யப்பட்டிராத மிக விலையுயர்ந்த விமானத்தை” பயன்படுத்துவார் என்று டைம் பத்திரிகை அறிக்கை செய்கிறது. “பறக்கும் தாஜ் மஹால்” என்று பெருமையாகச் சொல்லப்படுவதை விமானப் படை அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்தது. இது இட வசதி மிகுந்ததும், பாதுகாப்பானதும், மிகச் சிறந்ததும், “கூடுதல் சுய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதும், நல்ல தூரம் செல்லக்கூடியதும் (7,140 மைல்கள்), உருவாக்கப்பட்ட வேறு எந்த ஒரு விமானத்தைக் காட்டிலும் சொகுசும் வசதியும் கொண்டதுமாக வடிவமைக்கப்பட்டது.” இந்த விமானத்தில் இரு படுக்கைகளையுடையதும், ஒரு துவலை குளியல் தொட்டியுமுடைய அதிபர் அறையும், ஆறு கூடுதல் கழிவறைகளும், 85 தொலைபேசிகளும், ஒரு சிறிய மருத்துவமனைக்குரிய வசதிகளும், ஓர் ஆறு கன-அடி அலமாரியும், ஒரே சமயத்தில் எட்டு அலைவரிசைகளைக் கையாளக்கூடிய ஒரு தொலைக்காட்சி அமைப்பும், 23 அதிபர் உறுப்பினர்களுக்கும் 70 பயணிகளுக்கும் ஒரு வாரத்துக்கு வேண்டிய உணவுப்பொருட்களை வைக்க முடிந்த குளிர்சாதனப் பெட்டிகளடங்கிய இரண்டு பகுதிகளும், ஏவுகணைகளை எதிர்த்து தாக்கும் நவீன அமைப்பு முறையும், தகவல் தொடர்பு ஏற்பாடும், மற்றும் அநேக செயல்திறன் வசதிகளும் இருக்கிறது. “அமெரிக்கர் தங்களுடைய நூறு கோடி டாலரின் மேன்மையான பகுதியைத் தங்கள் அதிபர் வானில் பறந்துகொண்டிருக்க செலவழிக்கின்றனர். அப்படியென்றால் அவரை உயரத்தில் வைத்திருக்க மணிக்கு ஏறக்குறைய $6,000 செலவாகும்,” என்று டைம் கூறுகிறது. அந்தத் தொக கிரீன்லாந்தின் தேசிய வருமானத்தைவிட அதிகமாக இருக்கிறது.” (g90 8/8)
நாய்கள் நிறங்களைப் பார்க்க முடியுமா?
நாய்களுக்கு நிறங்களைப் பார்க்கும் திறமை குறைவே என்ற முடிவுக்கு சான்டா பார்பேரியாவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் வந்தார்கள். ஓராண்டு ஆய்வுக்குப் பின்னர், நாய்கள் வண்ண அமைப்பில் சிவப்பு, நீலம் ஆகிய எதிர் முனை வண்ணங்களைத்தான் வித்தியாசப்படுத்த முடிகிறது, ஆனால் மஞ்சள், பச்சை, செம்மஞ்சள் ஆகியவற்றுக்கும் இடையே வித்தியாசம் காண முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டார்கள். (g90 8/8)
இந்தியாவில் எய்ட்ஸ்
1990-களின் தொடக்கத்தில், இந்தியாவில் முழு அளவிலான எய்ட்ஸ் நோயாளிகள் 41 மட்டுமே என்று அறிக்கை செய்யப்பட்டது; என்றபோதிலும் தி டொரான்டோ ஸ்டர் பத்திரிகை பிரகாரம், எய்ட்ஸ் நோய் தொத்துநோயாகப் பரவி அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகும் நாடு ஆசியாவிலேயே அந்த நாடுதான். பம்பாயிலுள்ள 1,00,000 விபசாரிகளில் ஏற்கெனவே 10,000 பேர் இந்தக் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று இந்திய அரசு கணக்கிட்டுள்ளது. அந்தத் தொகுதிப் பெண்கள் மட்டும் ஓர் ஆண்டில் 20,000 ஆண்களுக்கு அந்த நோயைக் கடத்தக்கூடிய திறமையைப் பெற்றிருக்கிறார்கள். தாங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறியவந்தும் அநேக விபசாரிகள் தங்கள் விபசாரத் தொழிலை விட்டுவிட மறுக்கின்றனர். தாங்கள் வாழ்வதற்குப் பணம் சம்பாதிக்க வேறு வழி இல்லை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். இரத்தத்தை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஆட்களுங்கூட எய்ட்ஸ் வைரஸைத் தாங்கியிருக்கின்றனர்; என்றாலும், வாழ்க்கையை நடத்துவதற்காக அநேகர் தங்கள் இரத்தத்தை விற்றுவருகிறார்கள். அந்த வைரஸ் நாடு முழுவதும் பரவிவருகையில், பம்பாயின் ஒரு மருத்துவ அதிகாரி அந்த நகரத்தின் நிலையை இப்படியாக சுருங்கக் கூறுகிறார்: “இது நேரம் கணித்துச் செயல்படும் ஓர் அணுகுண்டு.” (g90 6/8)
இரத்தமேற்றுதல்கள் பேரில் மறு யோசனைகள்
வளர்ந்து வரும் நாடுகளில், உயிரை அச்சுறுத்தும் இரத்தச்சோகை ஏற்பட்டுள்ள இளம் மலேரியா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இரத்தமேற்றுதல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக 1986-ல், ஜாயீரில் கின்ஷசாவிலிருக்கும் மாமா யெமோ மருத்துவமனையில் அதுபோன்று 16,352 இரத்தமேற்றுதல் செய்யப்பட்டன. என்றபோதிலும் 1987-ல் இரத்தமேற்றுதல் எண்ணிக்கை குறைந்தது. ஏன்? மாமா யெமோவிலுள்ள மருத்துவர்கள் 13 சதவீத பிள்ளைகளைக் கொண்ட ஒரு தொகுதிக்கு மலேரியா நோய்க்கு சிகிச்சையாக இரத்தமேற்றப்பட்டது, அவர்கள் எய்ட்ஸ் நோயைக் கடத்தும் HIV வைரஸைப் பெறக்கூடியவர்களாயிருந்தனர் என்பதை கண்டுபிடித்த பின்னர், மருத்துவமனையினர் “இரத்த சோகயுள்ள பிள்ளைகளுக்கு இயல்பாக இரத்தமேற்றும்” கொள்கையை மாற்றியமைத்தனர் என்கிறது லண்டனின் பேனோஸ்கோப் பத்திரிகை. மாறாக, கின்ஷசா மருத்துவமனையிலுள்ள இளம் நோயாளிகள் தங்கள் இரத்த அளவைப் பெருக்குவதற்கு உதவியாக இரும்புச் சத்து மாத்திரை மருந்துகள் கொடுக்கப்பட்டனர். இப்படியாக, பேனோஸ்கோப் சொல்லுகிறது, “இரத்தமேற்றுதல்கள் 4,531-ஆக 73% குறைக்கப்பட்டது—ஒரு பிள்ளையின் உயிர்கூட இழக்கப்படவில்லை.” (g90 5/8)
“போலி மதிப்பீடுகள்”
22-வது வயதில் போரீஸ் பெக்கர் உலகின் மிகச் சிறந்த டென்னிஸ் (வரிப்பந்து) ஆட்டக்காரன்; அவன் மிகப் பெரிய பணக்காரர்களிலும் ஒருவன்—அவனுடைய உடைமைகளின் மதிப்பு $7.5 கோடி (யு.எஸ்). டென்னிஸ் போட்டிகளில் விளையாடியே இதனைச் சம்பாதித்தான். என்றபோதிலும், தனக்கு அளவுக்குமிஞ்சி கொடுக்கப்படுகிறது என்பதாக இந்த இளம் ஜெர்மானிய விளையாட்டு வீரன் நம்புகிறான்: “அதைப் பற்றி யோசித்துப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது—ஒரு டென்னிஸ் பந்தை வெறுமென வலைக்கு அந்தப் பக்கம் அடிப்பதற்காக எனக்கு எவ்வளவு கொடுக்கப்படுகிறது.” பெரேட் மாகஜீன் குறிப்பிடுகிறபடி, இன்றைய சமுதாயத்தில் “எவருமே பசிபட்டினியாகவோ அல்லது வீடு இல்லாதவர்களாகவோ இருக்க முடியாதளவுக்குப் பணம் இருக்கிறது. போலி மதிப்பீடுகளுக்கு மக்கள் அளவுக்கு மிஞ்சி கொடுக்கிறார்கள்” என்று அவன் சொன்னான். (g90 5/22)