உலகத்தைக் கவனித்தல்
ரோம பொக்கிஷம் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது
இங்கிலாந்திலுள்ள சஃபோல்க் பண்ணை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14,780 தங்கம், வெள்ளி, மற்றும் பித்தளை காசுகளோடு 90-சென்டிமீட்டர் தங்கச் சங்கிலியும், 15 தங்க காப்புகளும் ஏறக்குறைய 100 வெள்ளி ஸ்பூன்களும் கண்டுபிடிக்கப்பட்டன. காணாமற்போன ஒரு சுத்தியலைக் கண்டுபிடிப்பதற்காக உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவி (metal detector) ஒன்றை பயன்படுத்திக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற தோட்டக்காரர் ஒருவரால் அந்தப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட பொருளின் மதிப்பு குறைந்தபட்சம் 1.5 கோடி டாலர்களாக இருக்கும் என்று வல்லுநர் ஒருவர் மதிப்பிட்டிருக்கிறார். அந்தப் பொக்கிஷம் முடியரசின் சொத்து என்பதாக நீதிபதிகளில் ஒருவர் தீர்மானித்தார். அந்தப் பொருட்குவியலை கண்டுபிடித்த 70 வயது எரிக் லாஸ், புதையலினுடைய சந்தை விலைக்குச் சமமான மானியத்தொகையை பெற்றுக்கொள்வார் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அந்தப் பொக்கிஷம் பொதுமக்களுடைய பார்வைக்காக பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்று கார்டியன் வீக்லி அறிக்கைசெய்கிறது.
இந்தியாவின் சாவுக்கேதுவான பூகம்பம்
“புதுத் தொடக்கத்திற்கும் அதிர்ஷ்டத்திற்கும் கடவுளான யானையின் தலையையும் தொந்தியுள்ள மனித உடலையும்கொண்ட கணேசப் பெருமான் இந்து மதத்தின் அதிக நேசிக்கப்படத்தக்க தெய்வங்களில் ஒருவர்,” என்பதாக டைம் பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆனால், இந்த அதிர்ஷ்ட கடவுளுக்கு மகிமை சேர்க்கும் வகையிலான பத்து நாள் பண்டிகை முடிவடைந்த சில மணிநேரங்கள் கழித்து, இந்தியாவின் தென்மேற்கு பகுதி பூகம்பத்தால் தாக்கப்பட்டது. அது 50-க்கும் மேற்பட்ட கிராமங்களும் பட்டணங்களும் தகர்ந்து விழும்படிச் செய்தது. ரிக்டர் அளவுமுறையில் 6.4 என்பதாக அளவிடப்படுகிற, பூமியதிர்ச்சி முனைக்கு வெகு அருகிலிருந்த கில்லாரி கிராமம் 90 சதவிகிதம் தரைமட்டமாக்கப்பட்டது. சாவு எண்ணிக்கை 20,000-ற்கும் மேல் என்பதாக சில மதிப்பீடுகள் சொல்லுகின்றன. 58 ஆண்டுகாலத்தில் இந்திய துணைக்கண்டத்தைத் தாக்கிய பூகம்பத்திலேயே மிக மோசமான பூகம்பமாக இது இருந்தது. பெரும்பாலான சாவுகளுக்குக் காரணம், பூகம்பத்தின் ஆற்றலினால் அல்ல, களிமண் அல்லது சாந்து அப்பி கட்டப்பட்ட பெரும்பாலான வீடுகளின் பழங்காலத்திய கட்டுமானமே என்று சொல்லப்படுகிறது. இவையே இடிந்து விழுந்து அவற்றினுடைய குடிமக்களை மூடிக்கொண்டன. உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய சான் பிரான்ஸிஸ்கோ பூகம்பம், ரிக்டர் அளவுமுறையில் 6.9 ஆகும். இருப்பினும், மாரடைப்பு காரணமாக மரித்தவர்கள் உட்பட, 67 ஆட்கள் மட்டுமே மரித்ததாக அறிவிக்கப்பட்டது.
கனடாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் படிப்பறிவு பிரச்னைகள்
“தேசத்திலுள்ள 19 கோடியே 10 லட்சம் வயதுவந்த குடிமக்களில் ஏறக்குறைய பாதிப்பேர் ரசீதில் ஏற்பட்ட தவறைப்பற்றி ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதவோ அல்லது பிரசுரிக்கப்பட்ட அட்டவணையிலிருந்து ஒரு பேருந்து பயணத்தின் தூரத்தைக் கணக்கிடுவதற்கோ போதிய படிப்பறிவுள்ளவர்களாய் இல்லை” என்பதை ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஒரு படிப்பறிவு குழுவின் நான்கு வருட ஆராய்ச்சி காண்பித்திருக்கிறது என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. ஒரு செய்தித்தாளிலிருந்து சரியாக தகவலைப் புரிந்துகொள்ளுதல், வங்கி வைப்புத்தொகைச் சீட்டை எழுதுதல், பேருந்து அட்டவணை ஒன்றை வாசித்தல், அல்லது ஒரு பிள்ளைக்குக் கொடுக்கவேண்டிய சரியான அளவு மருந்தை லேபிலிலிருந்து தீர்மானித்தல் போன்ற அன்றாட காரியங்களில் அவர்கள் பிரச்னையை எதிர்ப்படுகிறார்கள் என்பதை இது குறிக்கிறது. தி குளோப் அன்ட் மெயில் சொல்லுகிற பிரகாரம், “கனடாவிலுள்ள வயதுவந்தோரில் 16 சதவிகிதத்தினரின் வாசிக்கும் திறமைகள், அன்றாட வாழ்க்கையில் எதிர்ப்படுகிற பெரும்பாலான எழுதப்பட்ட விஷயத்தைக் கையாள அனுமதிக்க முடியாதளவுக்கு அதிக மட்டுப்பட்டதாய் இருக்கின்றன” என்பதையும் கூடுதலான 22 சதவிகிதத்தினர் சாதாரண வேலையை தெளிவாகக் குறிப்பிடுகிற, பழக்கப்பட்ட வாசகமாயிருக்கிற அச்சிடப்பட்ட பொருளையே வாசிக்கமுடியும் என்பதையும் கனடாவில் நடத்தப்பட்ட இதுபோன்ற அதிகாரப்பூர்வமான ஆராய்ச்சி சுட்டிக்காட்டியது. எழுதப் படிக்கும் திறமையில் மோசமாயிருப்பதன் காரணமாக உற்பத்தி திறனை இழத்தல், பிழைகள், விபத்துக்கள் ஆகியவை அநேக கோடிக்கணக்கான டாலர்களை வியாபார நிறுவனங்கள் இழுக்கும்படிச் செய்திருக்கின்றன.
பாதிரிமாரைப் பற்றிய பொதுமக்கள் மதிப்பு குறைகிறது
“1988 முதற்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மதத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவதைவிட மதம் செல்வாக்கை இழந்துவருகிறது என்பதாக அநேக மக்கள் நினைக்கிறார்கள் என்பதை பெரியளவில் நடத்தப்படும் சுற்றாய்வுகள் காண்பித்திருக்கின்றன,” என்று லாஸ் ஏஞ்ஜலிஸ் டைம்ஸ் குறிப்பிடுகிறது. ஒரு காரணமானது, வாழ்க்கைத் தொழிலாகக்கொண்ட பாதிரிமார் பொதுமக்களின் மதிப்பை இழந்துவருகிறார்கள். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநிலை எண்ணிக்கையான 67 சதவிகித அமெரிக்கர்கள், நேர்மை மற்றும் நன்னெறி தராதரங்களில் பாதிரிமார் “உயர்வானவர்கள்” அல்லது “மிகவும் உயர்வானவர்கள்” என்றும்கூட மதிப்பிட்டார்கள். 53 சதவிகிதத்திற்கு வீழ்ந்துவிட்டது என்பதை 1993 சுற்றாய்வு ஒன்று காண்பித்தது. ஏன்? டிவி சுவிசேஷகர்களின் ஒழுக்கங்கெட்ட நடத்தையை உட்படுத்துகிற பழிதூற்றல்கள், நிதியை உயர்த்துவது சம்பந்தமான உரிமைகள்மீது வாக்குவாதங்களைக் கொண்டிருப்பது ஆகியவை புராட்டஸ்டன்ட் பாஸ்ட்டர்கள் மற்றும் கத்தோலிக்க குருமார்களின் மதிப்பை கப்பலேற்றிவிட்டிருக்கின்றன. 1988-க்குள்ளாக பொதுமக்களின் நோக்குநிலையில் மிக உயர்ந்த நன்னெறிக்காக மருந்தியலர்கள் பாதிரிமாரை மாற்றீடுசெய்திருந்தனர். தன்னிச்சையாக நடத்தப்படும் வியாபார ஸ்தாபனங்கள், மேலும் கம்ப்யூட்டர்கள், தொழில்நுட்பவியல் ஆகியவை நல்ல பாதிப்பை செலுத்துவதில் சர்ச்சுகளைவிட உயர்வானவையாக வகைப்படுத்தப்பட்டன என்பதையும்கூட மற்றொரு சுற்றாய்வு காண்பித்தது. ஆனால் அரசியல்வாதிகளையும் பத்திரிகையாளர்களையும்விட பாதிரிமார் அதிக நேர்மையானவர்கள் என்று இன்னும் பொதுமக்கள் கருதுகிறார்கள்.
இந்திய வனவிலங்குகள் அச்சுறுத்தப்படுகின்றன
கடந்த வருடத்தில் இந்திய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரவையிலுள்ள அதிகாரிகள் அனைவரும் இந்திய புலியை பாதுகாப்பதில் பெற்ற சாதனைகளை அறிவிக்க ஆயத்தமாயிருந்தார்கள். ஆனால் அதற்கு நேர் எதிர்மாறானதே உண்மையாய் இருப்பதாய் அவர்கள் கண்டுபிடித்தார்கள்: புலி முற்றிலும் அழியக்கூடிய நிலையை நெருங்கிக்கொண்டிருக்கிறது. காட்டிலுள்ள 4,500 புலிகளில் சுமார் 1,500 புலிகள், 1988 முதற்கொண்டு வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்டிருக்கின்றன. கொல்லப்பட்ட புலிகளின் எல்லா பாகங்களும்—தோல்கள், எலும்புகள், இரத்தம் மற்றும் பிறப்புறுப்புகளும்கூட—கள்ளச் சந்தைகளில் லாபகரமான விலைகளுக்கு உண்மையில் விற்கப்படுகின்றன. சட்டவிரோதமான தொழில், இந்தியாவிலுள்ள மற்றநேக விலங்குகளையும் முற்றிலும் அழியக்கூடிய நிலைக்கு தள்ளிக்கொண்டிருக்கிறது. காண்டாமிருகங்களை அதன் கொம்புகளுக்காகக் கொல்லப்படும் எண்ணிக்கையும் இரண்டுமடங்காக அதிகரித்துவிட்டிருக்கிறது. ஆண் யானைகள் அதன் தந்தங்களுக்காக பெருமளவான எண்ணிக்கையில் மீண்டும் வெட்டித்தள்ளப்பட்டுவருகின்றன. எல்லா வகையான சிறுத்தைப் புலிகளும் அதன் தோல்களுக்காக கொல்லப்பட்டுவருகின்றன. கஸ்தூரி மான்களும் அவற்றினுடைய வயிறுகளுக்கு அடியிலுள்ள வாசனையான பைகளுக்காக பலியாக்கப்படுகின்றன. கருங்கரடிகள் அதன் பித்தநீர் பைகளுக்காக வெட்டித்தள்ளப்படுகின்றன. மேலுமாக, பாம்புகளும் பல்லிகளும் அதன் தோல்களுக்காகவும் கீரிப்பிள்ளைகள் சிலிர்ப்பான மயிருக்காகவும் கொல்லப்பட்டுவருகின்றன, அது பிரஷ்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. நட்சத்திரம்போன்ற ஆமைகள், வல்லூறுகள் போன்ற மற்ற விலங்குகள் சட்டவிரோதமான செல்லப்பிராணி வியாபாரத்தில் ஏற்றுமதிசெய்யப்படுகின்றன. பயங்கரமான ஆயுதந்தரித்த வேட்டையாடுபவர்களின் காரணமாக, வனக் காவலாளிகள் தங்களுடைய உயிருக்காக பயப்படுகின்றனர்.
உலக சுகாதார அறிக்கை
உலக சுகாதார நிறுவனம், அதனுடைய உலக சுகாதார நிலைமையின்பேரில் எட்டாவது அறிக்கையில் நோய்க்கு எதிரான போராட்டத்தின் மங்கலான ஒரு நிலையையே வருணித்து, இவ்வாறு குறிப்பிடுகிறது: “வெப்பமண்டலப் பிரதேச நோய்கள் தீவிரமடைந்துவிட்டதாகத் தோன்றுகின்றன. இந்த நூற்றாண்டில் முதல் தடவையாக அமெரிக்காக்களுக்கு காலரா பரவிவருகிறது. மஞ்சள் காய்ச்சல் மற்றும் பெருவாரியாகத் தொற்றுகிற டெங்கியூ காய்ச்சல் மிகுதியான எண்ணிக்கையானோரை பாதிக்கின்றன. மேலும் மலேரியாவின் நிலைமை சீர்கேடடைந்துவருகிறது . . . பெருவாரியாகப் பரவுகிற எய்ட்ஸ் கொள்ளைநோய் பூகோள அளவில் பரவிக்கொண்டிருக்கிறது . . . நுரையீரல் சார்ந்த காசநோய் அதிகரித்துக்கொண்டிருக்கிறது . . . வளரும் உலகில், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையை முதல் தடவையாக எட்டிவிட்டிருக்கிறது. நீரிழிவு நோய்கள் எங்கும் அதிகரித்துவருகின்றன.” 1985-90 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்குவதாய், ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிற 5 கோடி சாவுகளில் 4 கோடியே 65 லட்சம் சாவுகள் உடல்நலமின்மையாலும் வியாதியினாலுமாகும் என்று அறிக்கை காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கிற 14 கோடி குழந்தைகளில் ஏறக்குறைய 40 லட்சம் அவற்றின் பிறப்புக்கு சில மணிநேரங்களுக்குள்ளாகவோ நாட்களுக்குள்ளாகவோ மரிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் எழுபது லட்சம் பேர் புதிதாக புற்றுநோயால் பீடிக்கப்படுகின்றனர். மேலும் ஓர் ஆண்டில் பத்து லட்சத்திற்கும் மேலான மக்கள் எய்ட்ஸ் உண்டுபண்ணுகிற HIV தொற்றப்பெற்றவர்களாக ஆகின்றனர். நம்பிக்கையான கோணத்தில், தட்டம்மை, கக்குவான் இருமல் போன்ற குழந்தைப்பருவ வியாதிகள் சில குறைந்துவருகின்றன. மேலும் வாழ்க்கை எதிர்பார்ப்பு ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளுக்கு அதிகரித்திருக்கிறது. இப்பொழுது உலகளாவிய சராசரி 65 ஆண்டுகளாகும்.
ஐக்கிய மாகாணங்களில் புகைபிடித்தல் சம்பந்தப்பட்ட மரணங்கள் குறைந்துவருகின்றன
ஐ.நா. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) புகைபிடித்தல் சம்பந்தப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை—1985-ல் பதிவுகள் வைக்கப்பட்டது முதற்கொண்டு முதலாவதாக—வீழ்ச்சியடைந்திருப்பதை அறிவித்திருக்கிறது. சிகரெட் புகைப்பதால் ஒவ்வொரு ஆண்டும் மரிக்கிற அமெரிக்கர்களின் எண்ணிக்கை, 1990-ல் 4,19,000-ல் இருந்து 15,000-க்கு வீழ்ந்துவிட்டது; இது முக்கியமாக புகைபிடிப்பதால் தூண்டப்படுகிற இருதயநோய் குறைந்திருப்பதன் காரணமாகும். 1965-ல் அமெரிக்க வயதுவந்ததோரில் ஏறக்குறைய 42.4 சதவிகிதத்தினர் புகைபிடித்தனர். 1990-க்குள்ளாக அது 25.5 சதவீதமாக இருந்தது. என்றபோதிலும், புகைபிடித்தலானது தடுக்கக்கூடிய வியாதிக்கும் மரணத்திற்கும் இன்னும் மிகப் பெரிய மூலகாரணமாக இருக்கிறது. மேலும் ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய 2,000 கோடி டாலர் மதிப்பான சுகாதாரச் செலவுகளை அதிகப்படுத்துகிறது. புகைபிடித்தலுக்கு எதிரான விளம்பரத்திற்கு அரசாங்கம் சுமார் 10 லட்சம் டாலர் செலவழிக்கிறது, அதேசமயத்தில் புகையிலை தொழிற்சாலை புகைபிடித்தலை முன்னேற்றுவிப்பதற்கும் அதிகரிப்பதற்கான விளம்பரங்களுக்கும் 400 கோடி டாலர் பணத்தொகையை செலவுசெய்கிறது. புகைபிடித்தலானது, புகைபிடிக்கும் ஒருவருக்கு சராசரி வாழ்க்கை எதிர்பார்ப்பை ஐந்தாண்டுகள் இழக்கும்படிச் செய்கிறது என்று CDC அறிக்கைசெய்கிறது.
மனமுறிவும் இதயமும்
“தொடர்ந்து தொல்லைப்படுத்துகிற மனமுறிவும் உணர்ச்சிசம்பந்தமான மன இறுக்கமும் ஓர் ஆளின் இருதய நோய் அதிகமாவதற்கான மற்றும் அதன் பின்விளைவுகளால் மரிப்பதற்கான வாய்ப்பை குறிப்பிடத்தக்க விதமாக அதிகரிக்கச்செய்கிறது” என்று சயன்ஸ் நியூஸ் குறிப்பிடுகிறது. பல ஆண்டுகளாக நீடித்திருக்கிற மனமுறிவும் கவலையும், ‘கடுமையான மனச்சோர்வாக’ இல்லாமலிருந்தாலும், இருதயம் இயங்குவதை பலவீனப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள் 45 முதல் 77 வரையிலான வயதுகளிலுள்ள 2,832 வயதுவந்தோரை, சராசரியாக 12 ஆண்களாக ஆய்வுசெய்தனர். அனைவரும் இருதய நோய் மற்றும் தீராத வியாதிகளிலிருந்து விடுபடத் தொடங்கினார்கள். இருதய நோயினால் வரும் மரணம் எந்தவித மனமுறிவையும் அறிக்கைசெய்யாதவர்களின் மத்தியில் இருந்ததைவிட கடுமையான மனமுறிவை அறிக்கைசெய்த ஆட்களில் நான்கு மடங்குகள் அதிகப் பொதுவாக இருந்தன என்பதை கண்டுபிடிப்புகள் காண்பித்தன. மனச்சோர்வடைந்தவர்களில் சாவுக்கேதுவல்லாத இருதய நோய்களும்கூட மிக அடிக்கடி மன இறுக்கமடைந்தவர்களில் தோன்றின. எந்தவிதமான மனமுறிவையும் அறிக்கைசெய்யாதவர்களோடு ஒப்பிடுகையில், கடுமையற்ற மனச்சோர்வு மற்றும் மிதமான மனமுறிவினால் துன்பப்படுகிறவர்களின் மத்தியில்கூட, இருதய நோயினால் வரும் மரணம் குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகளவாக இருந்தது.
முடிவே தென்படவில்லை
1989-ல், கிரேக் ஷெர்கோல்ட் என்ற ஏழு வயதுடைய பிரிட்டிஷ் சிறுவன் மூளை கட்டியால் (brain tumor) துன்பப்பட்டுக்கொண்டிருந்தான். அவன் வாழ்வான் என்று எதிர்பார்க்கவில்லை. நலம்பெறுவதற்கு மிக அதிகமான வாழ்த்திதழ்களைப் பெற்றதற்கான உலகப் பதிவை முறியடிக்கவேண்டும் என்பதே அவனுடைய விருப்பமாய் இருந்தது. செய்தித்துறை மற்றும் அட்லான்டாவை மையமாகக்கொண்டு செயல்படுகிற பிள்ளைகளின் விருப்ப சர்வதேச ஸ்தாபனத்தின்மூலம் (Children’s Wish Foundation International) அறிக்கை செய்யப்பட்டதால், அந்தப் பதிவு சில மாதங்களுக்குள்ளாகவே முறியடிக்கப்பட்டுவிட்டது. முதல் ஆண்டில் 1 கோடியே 60 லட்சத்திற்கும் மேலான வாழ்த்திதழ்களும், 1992-க்குள்ளாக 3 கோடியே 30 லட்சமும் பெறப்பட்டன. இனிமேலும் அனுப்பவேண்டாம் என்று இரண்டாண்டுகளுக்கு முன்பே வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதிலும்கூட, ஒரு வாரத்திற்கு 3,00,000 வாழ்த்திதழ்கள் என்ற வீதத்தில் அவை இன்னும் பெறப்பட்டுவருகின்றன. எண்ணுவது 6 கோடிகளுடன் நிறுத்தப்பட்டது. “900 சதுர மீட்டர் அளவான ஒரு பண்டகசாலையை நாங்கள் வாங்கியிருக்கிறோம். அதில் இன்னும் திறக்கப்படாத தபால்கள் கூரைவரையாக குவியலாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன” என்று அந்த ஸ்தாபனத்தின் தலைவராகிய ஆர்தர் ஸ்டைன் சொல்கிறார். நன்கொடை அளித்தவர்களின் உதவியின்மூலமாக, 1991-ன் ஆரம்பத்தில் கிரேக்-க்கு அறுவைசிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. அந்தக் கட்டியின் 90 சதவீதம் நீக்கப்பட்டுவிட்டது.