னித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது
பகுதி 9 மனித அரசாட்சி அதன் உச்சக்கட்டத்தை அடைகிறது!
மேலான தேசீய அரசியல் முறைகள்: சாம்ராஜ்யங்கள், அதிகாரங்கள் அல்லது விருப்பங்களைக் கடந்த பொதுவான நோக்கங்களை நாடும் அடிப்படையில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தேசீய அரசுகளுக்கிடையே உருவான பேரரசுகள், சங்கங்கள், கூட்டணிகள் அல்லது கூட்டரசுகள்.
அக்டோபர் 5, பொ.ச.மு. 539, பாபிலோன் நகரத்தைக் கொண்டாட்ட மனநிலையில் கண்டது. ஆயிரக்கணக்கான மேல்மட்ட அரசாங்க அதிகாரிகள், ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் அழைப்பை ஏற்றுக் கூடியிருந்தனர். மேதிய பெர்சிய ராணுவங்களால் சூழப்பட்டிருந்த அபாயத்திலிருந்தபோதிலும் பெல்ஷாத்சாரும் அவனுடைய உடன் பிரபுக்களும் இதனால் குழப்பமடையவில்லை. அந்த நகரத்தின் மதில்கள் தகர்க்கக்கூடாதவையாயிற்றே. பயப்படுவதற்கான உடனடியான காரணம் ஏதுமில்லை.
பின்னர் எந்த எச்சரிக்கையுமின்றி, கொண்டாட்டங்களின் மத்தியில், மனுஷ கைவிரல்கள் தோன்றி, அரண்மனை சுவற்றிலே கெட்ட செய்தியைக் கொண்ட வார்த்தைகளை எழுதிற்று: மெனே, மெனே தெக்கேல் உப்பார்சின். அப்போது ராஜாவின் முகம் வேறுபட்டது. அவனுடைய முகம் வாட்டமுற்றது.—தானியேல் 5:5, 6, 25.
பெல்ஷாத்சாரும் அவனுடைய உடன் அரசாங்க ஊழியர்களும் அலட்சியப்படுத்திய இஸ்ரவேலனும் தேவனை வணங்குபவனாகிய தானியேல் இதற்கான விளக்கத்தைக் கொடுக்கும்படி அழைக்கப்பட்டான். “இந்த வசனத்தின் அர்த்தமாவது,” என்று தானியேல் ஆரம்பித்தான். “மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டுக் குறைய காணப்பட்டாய் என்றும், பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்று அர்த்தமாம்.” இந்தத் தீர்க்கதரிசனம் எந்த நல்ல செய்தியையும் கொண்டில்லை. இதன் நிறைவேற்றமாக, “அன்று ராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான்.”—தானியேல் 5:26-28, 30.
ஒரே இரவிலே ஒருவகையான மனித ஆட்சி மற்றொன்றால் மாற்றப்பட்டது. கிழக்கு ஐரோப்பாவில் சமீப காலங்களில் தோன்றிய இதேவிதமான அரசியல் கிளர்ச்சிகளை நோக்கும்போது, பெல்ஷாத்சாருக்கு நடந்தது, நம்முடைய நாட்களில் ஏதாவது அர்த்தமுடையதாயிருக்கிறதா என்று நாம் யோசிக்கக்கூடும். இது மனித ஆட்சி முழுமைக்கும் ஏதாவது எச்சரிக்கை கொடுக்கிறதா? இதற்கு நம் கவனத்தைத் திருப்புவது அவசியமாயிருக்கிறது. ஏனென்றால், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், “முழு சமுதாயமும் அழிக்கப்படும்” என்று கூறி, மேலுமாக, “கிரேக்கு மற்றும் ரோமாபுரிக்கு ஏற்பட்ட பயங்கரமான முடிவுகள் ஒரு கட்டுக்கதை அல்ல,” என்று கூறுகிறார்.
மனிதன், தன் மனதில் தோன்றிய எல்லா வகையான அரசாங்க அமைப்புகளையும் திட்டமிட்டுவிட்டான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேற்கொண்ட சோதனைகளுக்குப் பிறகு ஏற்பட்ட முடிவுகள் என்ன? மனித ஆட்சி திருப்தியுள்ளதாயிருக்கிறதா? பெருகிக்கொண்டே போகும் மனிதகுலப் பிரச்னைகளுக்கு முடிவு காணப்படுகிறதா?
வாக்குறுதிகள், வாக்குறுதிகள்!
ஒரு பாரபட்சமான பதில், இந்தியாவில் பம்பாயிலுள்ள ஒரு பெரிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான பாகுல் ரஜினி பட்டேலால் தரப்படுகிறது. அரசியல்வாதிகளை “முழுமையான வேஷதாரிகள்” என்று குற்றஞ்சாட்டும் அவள், “இந்தியாவிலும் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் தலைவர்கள் மேடைகளில் ஏறி நின்றுகொண்டு, ‘முன்னேற்றம்’ மற்றும் ‘அபிவிருத்தி’ பற்றி கிளர்ச்சியூட்டும் பேச்சுகளைக் கொடுப்பது நாகரிகமாகிவிட்டது. என்ன முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி? யாரை நாம் முட்டாள்களாக்குகிறோம்? மூன்றாம் உலகத்தைப் பற்றிய பயங்கரமான புள்ளிவிவரங்களைத்தான் நீங்கள் காண முடியும்: தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து ஒவ்வொரு நாளும் நாற்பதாயிரம் குழந்தைகள் இறக்கின்றனர்.” சுமார் எட்டு கோடி குழந்தைகள் ஒவ்வொரு இரவும் போஷாக்கு குறைந்த உணவோடு அல்லது பசியோடு படுக்கைக்குச் செல்கின்றனர் என்று அவள் மேலுமாகக் கூறுகிறாள்.
‘ஆனால், ஒரு நிமிடம்,’ என்று நீங்கள் ஒருவேளை ஆட்சேபிக்கலாம். ‘அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்காகவாவது அவர்களைக் கெளரவிக்கலாமே? உலகம் எதிர்ப்படும் மோசமான பிரச்னைகளுக்கு முடிவு காண ஏதாவது ஓர் அரசாங்க அமைப்பு தேவை.’ உண்மை, ஆனால் கேள்வி என்னவென்றால்: இது மனித அரசாங்கமாக இருக்கவேண்டுமா அல்லது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டுமா?
அநேக மக்கள் நினைப்பதுபோல், கடவுள் இக்காரியங்களில் தலையிடாமல் இருப்பதையே தெரிந்துகொள்கின்றனர் என்று நீங்களும் நினைத்து, இந்தக் கேள்வியை நிராகரித்து விடாதீர்கள். மனிதர்கள் தங்களைத்தாங்களே ஆட்சி செய்வது சிறந்தது என்று கடவுள் நினைத்து, விட்டுவிட்டார் என்பதாக போப் ஜான் பால் II எண்ணுகிறார். ஏனென்றால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக அவர் கென்யாவில் இவ்விதமாகக் கூறினார், “கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான சவால், அவர்களது அரசியல் வாழ்க்கையாகும்.” அவர் தொடர்ந்து கூறியதாவது, “ஓர் அரசாங்கத்தில் அரசியல் வாழ்க்கையில் பங்குபெறுவது பிரஜையினுடைய உரிமையும் கடமையுமாக இருக்கிறது. . . . இப்படிப்பட்ட வாழ்க்கையில் தனிப்பட்டக் கிறிஸ்தவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது என்று நினைப்பது தவறாகும்.”
மனிதர்கள் இந்தத் தத்துவத்தைப் பின்பற்றி, அநேகமாக மதங்களின் பின்னணியோடு, பரிபூரண அரசாங்கத்தை நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு புதிய அரசாங்க அமைப்பும் பெரிய வாக்குறுதியோடு தொடங்கின. மிகச் சிறந்த வாக்குறுதிகள்கூட அவை நிறைவேற்றப்படாதபோது முரண்பாடாகத் தோன்றியது. (17-ம் பக்கத்திலுள்ள “வாக்குறுதிகளுக்கு எதிராக உண்மை நிலைகள்” என்ற தலைப்பைப் பார்க்கவும்.) தெளிவாகவே, மனிதர்கள் ஒரு சீரிய அரசாங்கத்தை அடைய முடியவில்லை.
ஒன்றுசேர்த்துக் கட்டுதல்
அணுசக்தி விஞ்ஞானியாகிய ஹெரால்டு உரே இதற்கு ஏதேனும் பதிலை வைத்திருக்கிறாரா? “பூமியின் பரப்பு முழுவதற்கும் சட்டத்தை நிறுவக்கூடிய ஓர் உலக அரசாங்கத்தைத் தவிர, உலகத்தின் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவைக் கொண்டுவரக்கூடிய வழி இல்லை,” என்று சொல்வதில் அவர் திருப்தி அடைகிறார். ஆனால் இது செயல்முறைக்கு ஒத்தது என்று எல்லாரும் நிச்சயமாயில்லை. முற்காலத்தில் சர்வதேச சங்கங்களின் உறுப்பினர்களிடையே பயனுள்ள ஒத்துழைப்பைப் பெறுவது கூடாத காரியமானது. ஒரு பிரபல உதாரணத்தைக் கவனியுங்கள்.
முதல் உலக மகா யுத்தத்துக்குப் பிறகு, ஜனவரி 16, 1920 அன்று ஒரு மேலான தேசீய அமைப்பு சர்வதேச சங்கம், 42 நாடுகளை உறுப்பினராகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இது ஓர் உலக அரசாங்கமாக வடிவமைக்கப்படாமல், ஓர் உலக பாராளுமன்றமாகக் கருதப்பட்டு, உலக ஐக்கியத்தை வளர்க்க திட்டமிடப்பட்டு, முக்கியமாக தனியுரிமை தேசீய அரசுகள் வல்லமைவாய்ந்த நாடுகள்—அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளைத் தீர்த்து, யுத்தத்தைத் தவிர்த்தது. 1934-ல் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 58 நாடுகளாக உயர்ந்தது.
இருந்தபோதிலும், இச்சங்கம் ஸ்திரமற்ற அஸ்திபாரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கொலம்பியாவின் உலக சரித்திரம் (The Columbia History of the World) விளக்குவதாவது, “முதல் உலக யுத்தம், பெரிய எதிர்பார்ப்புகளோடு முடிவடைந்தது, ஆனால் அது பிழையான எண்ணம் என்று அறிவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை.” “சர்வதேச சங்கத்தின்மேல் கொண்டிருந்த நம்பிக்கைகள் மாயை என்று நிருபித்தது.”
செப்டம்பர் 1, 1939-ல் ஆரம்பித்த இரண்டாவது உலக யுத்தம் இச்சங்கத்தைச் செயலற்ற குழிக்குள் தள்ளிவிட்டது. ஏப்ரல் 18, 1946 வரையாக, இது கலைக்கப்படாதபோதிலும், அதனுடைய உறுதிகளும் நோக்கங்களும் இருபது ஆண்டுகள்கூட நிரம்பாத ‘வாலிபனாக’ இறந்துவிட்டது. அதன் அதிகாரப்பூர்வமான புதையலுக்கு முன்பாக, இது மற்றொரு மேலான தேசீய அமைப்பால் மாற்றப்பட்டது. அதுதான் ஐக்கிய நாடுகள் சங்கம், அக்டோபர் 24, 1945-ல் 51 உறுப்பினர் நாடுகளோடு ஸ்தாபிக்கப்பட்டது. ஒன்றுசேர்த்துக் கட்டும் இந்தப் புதிய முயற்சி எவ்விதம் செயல்படும்?
இரண்டாவது முயற்சி
சர்வதேச சங்கம் அதன் வடிவமைப்பில் குறைவுபட்டதால் தோல்வி அடைந்தது என்பதாகச் சிலர் சொல்கின்றனர். மற்றொரு கருத்து, இச்சங்கத்தின் மேல் பழியைப் போடாமல், இதற்குச் சரியான ஆதரவு அளிக்க விருப்பமில்லாத தனிப்பட்ட அரசாங்கங்கள்மேல் குற்றம்சுமத்தியது. இரண்டு கருத்துகளிலும் சிறிது உண்மை இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபகர்கள், சர்வ தேச சங்கம் பலன் அளிக்காமல் போனதன் காரணத்தை அறிந்துகொள்ள முயன்று, அதன் சில குறைபாடுகளை நிவர்த்திச் செய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
எழுத்தாளர் R. பால்டுவின் ஐக்கிய நாடுகள் சபையை “உலக அமைதி, ஒத்துழைப்பு, சட்டம் மற்றும் மனித உரிமைகளை உண்டாக்குவதற்காக திறமையில் சர்வதேச சங்கத்தைவிட உயர்ந்தது,” என்று அழைக்கிறார். அதற்கேற்ப, அவற்றில் சில விசேஷ அமைப்புகளாகிய உலக சுகாதார நிறுவனம் (WHO), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி நிறுவனம் (UNICEF), உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO) ஆகியவை போற்றத்தக்க நோக்கங்களை நாடி சிறிதளவு வெற்றியையும் கண்டுள்ளன. பால்டுவின் சொன்னது சரி என்று காண்பிக்கும் ஒரு விஷயம், ஐக்கிய நாடுகள் சங்கம், சர்வதேச சங்கத்தைவிட இரண்டு மடங்குக்கும் மேலாக 45 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஐ.நா.வின் முக்கிய நிறைவேற்றம், அயல்நாட்டு குடியேற்றத்தை தடுப்பதில் அது காட்டிய தீவிரம். ரிச்சர்ட் ஐவர் என்ற பத்திரிகை நிருபரைப் பொறுத்தவரை, “இது அதிக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடந்தது.” அவர் மேலுமாக இந்த அமைப்பு “குளிர் யுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவியதாக” உரிமைப்பாராட்டுகிறார். மேலும் அவர், “பூகோள அளவில் செயல்படுத்தப்படும் ஒத்துழைப்பின் மாதிரியை” உருவாக்கியதற்காகப் போற்றுகிறார்.
இருந்தபோதிலும், சிலர் ஐக்கிய நாடுகள் சபையைவிட அணுசக்தி போரைக் குறித்த பயம் குளிர்யுத்தம் சூடேறாமல் தடுப்பதற்கு அதிகத்தைச் செய்ததாக வாதாடுகின்றனர். அதன் பேரிலேயே பொறிக்கப்பட்டிருக்கும் வாக்கைக் காப்பதைவிட, அதாவது தேசங்களை ஐக்கியப்படுத்துதல் உண்மையில் இந்த அமைப்பு ஒரு மத்தியஸ்தனாக சேவை செய்வதைவிட அதிகத்தைச் செய்யவில்லை, பிரிக்கப்பட்ட தேசங்கள் ஒன்றையொன்று மோதாதிருக்க முயற்சி செய்கிறது. மத்தியஸ்தரைப் போன்ற இந்தப் பங்கும் எப்போதும் வெற்றிகரமாக அமையவில்லை. ஆசிரியராகிய பால்டுவின் விளக்கும் விதமாக, சர்வதேச சங்கத்தைப் போலவே, “ஐக்கிய நாடுகள் சபையும், அதன் குற்றஞ்சாட்டப்பட்ட உறுப்பு நாடுகள் கருணையோடு சம்மதிக்கும் காரியங்களுக்கு மேலாக எதையும் செய்ய சக்தியற்றதாக உள்ளது.”
இந்த முழு இருதய ஒத்துழைப்பு, ஐ.நா. அங்கத்தினர்களிடம் இல்லாததால் சமயங்களில் இது அமைப்பை இயக்குவதற்கான நிதி அளிப்பதில் அவர்களது விருப்பமின்மையில் பிரதிபலிக்கிறது. உதாரணமாக, ஐக்கிய மாநாடு, இஸ்ரேல் மற்றும் பழைய பாலஸ்தீன காரியங்களைக் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதால், உணவு மற்றும் விவசாய நிறுவனம் அந்நாடு தரவேண்டிய கடன்தொகையை நிறுத்திவைத்தது. பின்னர், ஐ.நா.வின் முக்கிய நிதி ஆதரவாளரான இந்நாடு, தன் வாக்குரிமையை தக்கவைத்துக்கொள்ள போதுமான நிதியைக் கொடுக்க சம்மதித்தபோதிலும், கடன்தொகையில் மூன்றில் இரண்டு பாகம் கட்டப்படாமல் விடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியின் முன்னாள் உதவி இயக்குநரான வாரின்டிரா டார்ஸி விட்டாச்சி, ஐக்கிய நாடுகள் சபையை ஏற்றுக்கொள்ளாத “சட்டமுறைப்படாத கொலைக்காரக் கூட்டத்தோடு தாம் சேர” மறுப்பதாக 1988-ல் கூறினார். தன்னைத்தானே, ‘ஒரு விசுவாசமுள்ள விமரிசகராக’ அழைத்துக்கொள்ளும் இவர், “ஐக்கிய நாடுகள் சபை ‘வெளிச்சம் கொடுக்கத் தவறிய விளக்கு,’ என்றும், அதன் சொந்த உயர்ந்த கொள்கைகளுக்கு ஏற்ப நிலைக்கவில்லை என்றும் சமாதானத்தை நிலைநாட்டும் வேலையைச் சரிவரச் செய்ய முடியவில்லை என்றும் அதன் வளர்ச்சிப் பணி அமைப்புகள், சில உயர்ந்த விதிவிலக்குகள்தவிர, தாங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது சரி என நிரூபிக்க முடியவில்லை” என்று மக்களால் விரிவாகத் தாக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பலவீனம் ஆசிரியர் ஐவரால் வெளிப்படுத்தப்படுகிறது. அவர் எழுதுகிறார், “ஐ.நா. எதைச் செய்த போதிலும், பாவத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. இது சர்வதேச பாவத்தை மேலும் கடினமாக்கக்கூடும், என்றாலும், இது பாவிகளைப் பதில் சொல்ல பொறுப்புள்ளவர்களாக ஆக்கும். ஆனால் நாடுகளை வழிநடத்தும் மக்களிடமாகவோ அல்லது அவற்றை உருவாக்கும் மக்களிடமோ அவர்களது இருதயங்களையும் மனங்களையும் மாற்றுவதில் இதுவரை வெற்றிபெற முடியவில்லை.”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.
ஆகவே மனித ஆட்சியின் எல்லா அமைப்புகளிலுள்ள குறைதான், ஐக்கிய நாடுகள் சபையிலும் இருக்கிறது. எந்த ஓர் அமைப்பும் வெற்றிக்குத் தேவையான தன்னலமற்ற அன்பு, அநீதியை வெறுத்தல் மற்றும் அதிகாரங்களுக்கு மரியாதை ஆகியவற்றை மக்களிடையே பதிய செய்ய முடியவில்லை. நீதியுள்ள நியமங்களால் தாங்கள் வழிநடத்தப்பட மக்கள் அனுமதிப்பார்களேயானால், எத்தனை பூகோளப் பிரச்னைகள் குறைக்கப்படும் என்பதை எண்ணிப்பாருங்கள்! உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் தூய்மைக்கேட்டைப்பற்றி ஒரு செய்தி அறிக்கை கூறும்போது, இந்தப் பிரச்னை “அறிவின்மையால் அல்ல, ஆனால் மனப்பாங்கின் மூலம்” ஏற்படுகிறது என்று சொல்லுகிறது. பொறாமையே அடிப்படைக் காரணம் என்று அழைத்துவிட்டு, இந்த அறிக்கை, “அரசியல் கொள்கைத்திட்டம், இப்பிரச்னையைத் தூண்டிவிட்டது,” என்று கூறுகிறது.
அபூரண மனிதர்கள் பரிபூரண அரசாங்கத்தை உருவாக்க முடியாது. எழுத்தாளராகிய தாமஸ் கார்லில் 1843-ல் குறிப்பிட்டது போல, “நீண்ட காலப் பகுதியில் ஒவ்வொரு அரசாங்கமும் அதன் ஞானமுள்ள அல்ல ஞானமற்ற மக்களின் சின்னம்.” இப்படிப்பட்ட தர்க்கத்திற்கு எதிராக யார் விவாதிக்கக்கூடும்?
“முறியடிக்கப்படுவீர்கள்!”
இப்போது, இருபதாம் நூற்றாண்டில் மனித அரசாட்சியின் உச்சக்கட்டம் நெருங்கிவிட்டது. தெய்வீக ஆட்சிக்கு எதிராக மனித அரசாங்கங்கள் பித்தளைப் போன்ற, மற்றும் கட்டுப்பாடற்ற சதித்திட்டங்களைத் தீட்டியிருக்கின்றன. (ஏசாயா 8:11-13 ஒப்பிடவும்.) இதை அவர்கள் ஒரு முறை அல்ல, இரு முறை, முதலில் சர்வதேச சங்கத்தையும், பின்னர் ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்குவதன் மூலமும் செய்திருக்கிறார்கள். வெளிப்படுத்துதல் 13:14, 15 இதை “மிருகத்தின் சொரூபமாக” அழைக்கிறது. இது சரியாகவே இருக்கிறது. ஏனென்றால், இது பூமியின் முழு மனித அரசியல் ஒழுங்குமுறையின் அடையாளமாக இருக்கிறது. மிருகத்தைப் போலவே, இந்த அரசியல் அமைப்பின் பாகங்கள், பூமியின் குடியிருப்புகளைத் தங்களுக்கு இரையாக்கி, சொல்லொண்ணா துன்பத்தைக் கொடுத்திருக்கிறது.
சர்வதேச சங்கம் 1939-ல் மோசமான முடிவைக் கண்டது. பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதே போன்ற ஒரு முடிவு காத்திருக்கிறது: “நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள். இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்.”—ஏசாயா 8:9, 10.
மனித ஆட்சி ஒழுங்குமுறையில் வெளிப்பட்டிருக்கும், ‘மிருகத்தின் சொரூபம்’ கடைசியாக எப்போது முறிக்கப்படும்? யெகோவாவின் அரசுரிமையைச் சவாலுக்குள்ளாக்கிய மனித ஆட்சியை எப்போது அவர் முடிவுக்குக் கொண்டுவருவார்? பைபிள் எந்த ஒரு குறிப்பிட்ட தேதியையும் தரவில்லை. ஆனால், வேதாகம தீர்க்கதரிசனம் மற்றும் உலக நடப்புகள் ‘வெகு சீக்கிரத்தில்’ என்று சொல்கின்றன.—லூக்கா 21:25-32.
அரண்மனை சுவரில் எழுதப்பட்ட அந்த வார்த்தைகள், அதைப் பார்க்கக் கவனமாயிருந்த அனைவருக்கும் தெரிந்தது. பெல்ஷாத்சாரின் ராஜ்யம் தராசிலே நிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டதுபோல நிச்சயமாகவே மனித ஆட்சி முழுவதும் நியாயந்தீர்க்கப்பட்டுக் குறைவுபட காணப்படுகிறது. இது அரசியல் சீர்கேட்டைத் தாங்கிக்கொள்கிறது, யுத்தங்களைத் தூண்டிவிடுகிறது, எல்லா வகையான மாய்மாலத்தையும் தன்னலத்தையும் ஆதரிக்கிறது, அதன் ஆதரவாளருக்குப் போதுமான வீட்டுவசதி, உணவு, பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்வதை அலட்சியப்படுத்துகிறது.
மனித ஆட்சி அழியும்போது, ஒரே இரவில் என்ற வகையில் அழியும். இன்று இருக்கும், நாளை இல்லாமற்போகும்—கடவுளுடைய ராஜ்யத்தால் மாற்றியமைக்கப்படும், கடைசியில் ஒரு பரிபூரண அரசாங்கம்! (g90 12/8)
[பக்கம் 17-ன் பெட்டி]
வாக்குறுதிகளுக்கு எதிராக உண்மை நிலைகள்
அராஜகம் எல்லையற்ற முழுமையான சுதந்திரத்தை வாக்களிக்கிறது; உண்மை நிலையோ அரசாங்கம் இல்லாததால், பரஸ்பர நன்மைக்காக தனிப்பட்டவர்கள் ஒத்துழைப்பதற்கு கொள்கைகளோ நியமங்களோ இல்லை; எல்லையற்ற சுதந்திரம் குழப்பத்தில் முடிவடைகிறது.
முடியரசுகள் ஒரு தனி பிரதிநிதியின் ஆட்சியின் கீழ் ஸ்திரத்தன்மையையும் ஐக்கியத்தையும் வாக்களிக்கிறது; உண்மை நிலையோ, வரம்புக்குட்பட்ட அறிவைக்கொண்ட மனித பிரதிநிதிகள், மனித அபூரணங்களாலும் குறைபாடுகளாலும் தடை செய்யப்பட்டு, சில சமயங்களில் தவறான எண்ணங்களால் உந்தப்படும் இவர்கள் தாமே இறக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே எந்த ஸ்திரத்தன்மையும் ஐக்கியமும் சிறிது காலத்திற்கே.
உயர்குடி அரசுகள் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை உருவாக்குவதாக வாக்களிக்கிறது. உண்மையில், அவர்கள் ஆட்சிக்கு வருவது, ஞானம், உட்பார்வை, மற்றும் மற்றவர்கள் பால் உள்ள கரிசனை, அன்பினால் அல்ல, ஆனால் அவர்களிடம் உள்ள சொத்து, இரத்தப் பரம்பரை அல்லது வல்லமையின் காரணமாகவே; அரசு முறையின் பற்றாக்குறையுள்ள ஆட்சியாளருக்குப் பதிலாக ஓர் உயர்ந்த பிரபு வர்க்கத்தின் பல ஆட்சியாளர்கள்.
குடியரசுகள் எல்லாருடைய நன்மைக்காகவும் எல்லா மக்களும் தீர்மானம் எடுக்கலாம் என்று வாக்களிக்கிறது. உண்மையில், பொது நலத்திற்காக உறுதியான சரியான தீர்மானங்களை எடுப்பதற்குத் தேவையான அறிவிலும் சுத்த நோக்கத்திலும் குடிமக்கள் குறைவுபடுகிறார்கள். பிளேட்டோ குடியரசை “வேறுபாடுகளும் ஒழுங்கின்மையும் நிறைந்த இணையானவர்களுக்கு சமத்துவத்தையும் இணையற்றவர்களுக்கு ஒரே மாதிரியும் வழங்கும் ஒரு வசீகரமான அரசாங்கம்” என்பதாக விவரித்தார்.
ஏகாதிபத்திய அரசுகள் காரியங்கள் உடனடியாக எந்தத் தாமதமுமின்றி நிறைவேற்றப்படும் என்றும் வாக்களித்தது; உண்மையில் பத்திரிகை ஆசிரியர் ஓட்டோ ஃபிரெட்ரிக் எழுதுவது போல “சிறந்த எண்ணங்களைக் கொண்ட மனிதர்கள் கூட, பதவி மோக அரசியல் என்னும் காட்டுக்குள் புகுந்தவுடன், சாதாரண சூழ்நிலைகளில், அவர்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு எதிராக அழியாமையுள்ளவர்கள் என்று அழைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.” ஆக, நல்ல ஏகாதிபதிகள் தங்கள் சொந்த ஆசைகள் மற்றும் விருப்பங்கள் என்னும் பீடத்தில் பிரஜைகளுடைய தேவைகளை பலியிடத் தயங்காத அதிகார மோக ஆட்சியாளர்களாக மாறுகின்றனர்.
ஃபாசிச அரசாங்கங்கள் பொது நன்மைக்காக பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதாக வாக்களித்தது. உண்மையில் அவர்கள் ஒன்றையும் வெற்றிகரமாக செய்யவில்லை மேலும் தனிப்பட்ட உரிமைகளுக்காகவே செய்தனர். யுத்தத்தையும் தேசப்பற்றையும் மகிமைப்படுத்தியதன் மூலம் முசோலினியின் கீழ் இருந்த இத்தாலியைப் போலவும் ஹிட்லரின் கீழ் இருந்த ஜெர்மனியைப் போலவும் கொடுமையான அரசியல் அமைப்புகளை ஏற்படுத்தினர்.
கம்யூனிச அரசாங்கங்கள் ஒரு கற்பனையான சமுதாயத்தைச் சட்டத்துக்கு முன்பாக முழுமையான சமத்துவத்தை அனுபவிக்கக்கூடிய குடிமக்கள் நிறைந்த பிரிவினையற்ற சமுதாயத்தை உருவாக்குவதாக வாக்களித்தது. உண்மையில், பிரிவினைகளும், பேதங்களும் இன்றும் இருக்கின்றன; கறைப்பட்ட ஆட்சியாளர்கள், பொதுமக்களிடமிருந்து அபகரிக்கின்றனர். இதன் முடிவு, கம்யூனிஸ கொள்கைகளுக்குப் பரந்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது, அதன் கோட்டைகள், தேசீய மற்றும் தனித்த இயக்கங்களால் தகர்க்கப்படும் அபாயத்தில் இருக்கிறது.
[பக்கம் 17-ன் பெட்டி]
ஐக்கிய நாடுகள் சபையைப் பற்றி
▪ ஐ.நா. தற்போது 160 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது இதில் சேராத தேசங்கள் இரண்டு கொரியாக்களும் சுவிட்சர்லாந்துமாகும்; 1986 மார்ச் மாதம் நடந்த சுவிஸ் வாக்களிப்பு, 3-க்கு 1 என்ற வித்தியாசத்தில் உறுப்பினராவதை நிராகரித்தது.
▪ இதன் முக்கிய நிறுவனங்கள் தவிர, விசேஷ அமைப்புகள், விசேஷ சங்கங்கள், மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டும் செயல் திட்டங்கள் போன்ற 55 அதிகப்படியான விசேஷ அமைப்புகளை இயக்குகிறது.
▪ பொது சபையில் ஒவ்வொரு உறுப்பின நாட்டுக்கும் ஒரு வாக்குரிமை வழங்கப்படுகிறது, இருந்தாலும் அதிக ஜனத்தொகை கொண்ட நாடான சைனா, மிகக் குறைந்த ஜனத்தொகை கொண்ட உறுப்பின நாடான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸின் ஒரு குடிமகனுக்கு 22,000 குடிமக்களைக் கொண்டிருக்கிறது.
▪ ஐக்கிய நாட்டு சர்வதேச சமாதான ஆண்டாக கொண்டாடப்பட்ட வருடமாகிய 1986-ல் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு மிக அதிகப்படியான 37 இராணுவ போராட்டங்களை உலகம் அனுபவித்தது.
▪ ஐ.நா.வின் எல்லா உறுப்பின நாடுகளிலும், 37 சதவிகிதத்தினர் ஐக்கியப்பட்ட சர்வதேச ‘ஜனமாகிய’ யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கையைவிட குறைந்த ஜனத்தொகையைக் கொண்டிருக்கிறது; 59 சதவீதத்தினர், 1990-ல் இயேசுவின் மரண ஞாபகார்த்தத்தில் ஆஜராயிருந்த எண்ணிக்கையைவிடக் குறைவான பிரஜைகளைக் கொண்டிருக்கிறது.
[பக்கம் 18-ன் படங்கள்]
சர்வதேச சங்கம்
ஐக்கிய நாடுகள்
பரிபூரண அரசாங்கத்தை அளிப்பது அபூரண மனிதரின் சக்திக்கு அப்பாற்பட்டது