உலக வல்லரசுகளின் நெடுந்தூர அணிவகுப்பு முடிவை நெருங்குகிறது
முதல் உலக மகா யுத்தத்தின் அந்தப் பயங்கரமான நான்கு ஆண்டுகள் முடிவுக்கு வருகையில் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் லாயிட் ஜார்ஜும் ஒரு சர்வதேச சங்கத்தை சிபாரிசு செய்தனர். அதன் இலக்கு “சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் சாதித்தலாகவும்,” இப்படியாக அப்படிப்பட்ட ஒரு போரின் பயங்கரம் மீண்டும் நிகழாது தடுத்திடுவதாகவும் இருந்தது.
இந்தக் காரியத்தை ஆரம்பித்தது யார் என்பதைக் கவனிப்பது அக்கறைத் தூண்டுவதாயிருக்கிறது. இந்த இரண்டு தலைவர்களும் பைபிள் சரித்திரத்தின் ஏழாவது வல்லரசாகிய ஆங்கிலம் பேசும் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின் இருபாகங்களின் தலைவர்களாவர். இதுவும் இந்தச் சர்வதேச சமாதான, பாதுகாப்பு அமைப்பைப் பற்றிய மற்ற உண்மைகளும் நம்முடைய நாளில் எழும்பி விழுந்திடும் குறுகிய கால ‘எட்டாவது ராஜா’வைக் குறித்து பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் கூறியிருப்பதற்கு ஆச்சரியமான விதத்தில் பொருந்துகின்றன. இந்த இணைப் பொருத்தங்களில் சில யாவை?—வெளிப்படுத்துதல் 17:11.
“ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்த” ஒரு “மிருகம்” பைபிள் சரித்திரத்தின் ஏழு மகா உலக வல்லரசுகளைத் தலையாகக் கொண்டிருந்த அந்த மூர்க்க மிருகத்துக்கு “ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச்” சொல்லும் என்று வெளிப்படுத்துதலிலுள்ள தீர்க்கதரிசனம் வெளிப்படுத்தியது.
ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு இதைத்தான் செய்தது. பெரிய அரசாங்கங்களைப் போல காணப்பட்டதும் செயல்பட்டதுமான ஒரு சர்வதேச சங்கத்தை ஏற்படுத்துவதற்காக “பூமியின் குடிகளைத்” துரிதப்படுத்தியது. ஆனால் உண்மையில் அந்த மூர்க்க மிருகத்திற்கு “ஒரு சொரூபமாக” மட்டுமே அது இருந்தது. அதற்கென்று எந்த ஓர் அதிகாரமும் இல்லை, அதன் உறுப்பு நாடுகளால் கொடுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே இருந்தது. உலக வல்லரசுகளைப் போல ஏதோ பெரிய இராணுவ வெற்றியின் மூலமாக அது அதிகாரத்துக்கு அல்லது வல்லமைக்கு வருவதாக விளக்கப்பட்டில்லை. மாறாக, அது ஏழு உலக வல்லரசுகளிலிருந்து தோன்றுகிறது. அதன் தோற்றத்திற்கு ஏழாவது உலக வல்லரசுக்கு மட்டும் கடமைப்பட்டில்லை, ஆனால் அதற்கு முன்பு இருந்த ஆறு வல்லரசுகளின் எஞ்சியவற்றையும் உட்படுத்தும் மற்ற உறுப்பு நாடுகளுக்கும் கடமைப்பட்டிருக்கிறது. இந்த அரசியல் சொரூபம் அதன் ஸ்தாபகர்கள் நம்பியிருக்கும் உயர்ந்த இலக்குகளை அடைந்திடுமா?—வெளிப்படுத்துதல் 17:11, 14.
சர்வதேச சங்கத்தின் தோல்வி
சர்வதேச சங்கம் சமுதாயக் களத்தில் ஏராளமான காரியத்தைச் சாதித்தது. என்றபோதிலும், “சர்வதேச சங்கத்தின் ஒப்பந்தம்” என்ற அதன் அதிகாரப்பூர்வ உடன்பாட்டில் விவரிக்கப்பட்டபடி, “சர்வதேச ஒற்றுமையை விருத்தி செய்வதும், சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் சாதிப்பதும்” அதன் உண்மையான இலட்சியமாக இருந்தது. இதில் அது தோல்வி கண்டது.
1931-ல் ஜப்பான் மன்சூரியா மீது படையெடுப்பதைத் தடை செய்வதில் சர்வதேச சங்கம் வெற்றிபெறவில்லை. 1933-ல் பொலிவியாவும் பராகுவேயும் போரில் இறங்குவதை அது தடை செய்யமுடியவில்லை. 1936-ல் முசோலினி எத்தியோப்பியாவை வெற்றிகொண்ட காரியத்தைத் தடுக்கத் தவறியது. என்றபோதிலும் சர்வதேச சங்கத்துக்கு மரண அடி இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பித்ததில், செப்டம்பர் 1, 1939-ல் வந்தது. எப்படிப்பட்ட மொத்த அழிவையும் வேதனையையும் தடைசெய்ய வேண்டும் என்பதற்காக சர்வதேச சங்கம் ஏற்படுத்தப்பட்டதோ அப்படிப்பட்ட ஒரு காரியமே சம்பவித்தது. அந்தப் போரின் உயிர்ச்சேதம்? 1.6 கோடி இராணுவ வீரர்களும் 3.9 கோடி இராணுவம் சாராத பொதுமக்களும், ஆக மொத்தத்தில் 5.5, கோடி மக்கள், அதாவது முதல் உலக மகா யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட ஏறக்குறைய நான்கு மடங்கு அதிகமாக இருந்தது!
என்றபோதிலும், 1919-ல் சர்வதேச சங்கத்தின் ஒப்பந்தம் அமலாவதற்கு முன்பு யெகோவாவின் சாட்சிகள் (பைபிள் மாணாக்கர்கள் என்று அப்பொழுது அழைக்கப்பட்டவர்கள்) சர்வதேச சங்கம் தோல்வியுறும், ஏனென்றால் அப்படிப்பட்ட மனித முயற்சிகள் மூலம் சமாதானம் வரமுடியாது என்று வெளியரங்கமாக அறிக்கை செய்தனர். பின்னால் 1926-ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் குறிப்பாகக் காண்பிக்கப்பட்டது என்னவெனில், வெளிப்படுத்துதல் 17-ன்படி உலக வல்லரசுகளின் அணிவரிசையின் “எட்டாவது ராஜா” கடைசியானவனாகத் தோன்றுகிறான். பேச்சாளர் குறிப்பிட்டதுபடி, “ஆண்டவர் அதன் பிறப்பையும், குறுகிய கால வாழ்க்கையையும், அதன் நித்திய முடிவையும் முன்னறிவித்தார்.”
அது மீண்டும் தோன்றுகிறது!
இந்த எட்டாவது அரசனைக் குறித்து தேவாவியால் ஏவப்பட்ட தீர்க்கதரிசனம் சொன்னதாவது: “நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது.”—வெளிப்படுத்துதல் 17:8.
1942-ன் இடைப்போர் ஆண்டுமுதல் அப்பொழுது செயலற்றிருந்த அந்தச் சமாதான பாதுகாப்பு அமைப்பு அதன் செயலற்ற நிலையிலிருந்து எழும்பிவரும் என்பதை யெகோவாவின் சாட்சிகள் உணர்ந்திருந்தார்கள். அந்த ஆண்டில்தானே காவற்கோபுர சங்கத்தின் தலைவர் 52 பட்டணங்களில் தன்னுடைய பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் சொன்னார்: “சர்வதேச சங்கத்துக்கு நாற்பது உறுப்பினர்கள் செவிகொடுப்பதாக இன்னும் உரிமைப்பாராட்டிக் கொண்டிருந்தாலும், சர்வதேச சங்கம் உயிர்ப்பில்லா நிலையிலிருக்கிறது . . . அது ‘இல்லை.’” ஆனால் அது “பாதாளத்திலிருந்து ஏறி” வருமா? தன்னுடைய வார்த்தைகளை இந்தப் பைபிள் தீர்க்கதரிசனத்தில் ஆதாரம் கொண்டு அவர் கூறினார்: “உலக தேசங்களின் இந்தச் சங்கம் திரும்பவும் எழும்பும்.”
தீர்க்கதரிசனம் அறிவித்தபடியே, இந்த எட்டாவது ராஜா 1920 முதல் 1939 வரை “இருந்தது.” 1939 முதல் 1945-ல் இரண்டாம் உலக மகா யுத்தம் முடிய “இராமற்போனது.” பின்பு அது சர்வதேச சங்கத்தின் வாரிசாக செயல்படுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் சங்கமாக “பாதாளத்திலிருந்து ஏறி” வந்தது.
உயர்ந்த நம்பிக்கைகள் நிறைவேறவில்லை
ஜூன் 26, 1945 அன்று சான் ஃபிரான்சிஸ்கோவில் 50 நாடுகளிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் கையொப்பமிட்டனர். அதன் முகப்புரை துவங்கியது: “ஐக்கிய நாடுகளின் மக்களாகிய நாம் எதிர்கால மக்கள் தலைமுறையை நம்முடைய வாழ்நாட்காலத்தில் சொல்லொண்ணா துயரத்தை இருமுறை ஏற்படுத்தியிருக்கும் போரின் வாதையிலிருந்து மீட்டுக்கொள்ள தீர்மானமாயிருக்கிறோம் . . .
ஐ.நா.-வின் பேரில் வளர்க்கப்பட்ட நம்பிக்கைகள் எல்லா உண்மை நிலையையும் கடந்தது. ஐக்கிய மாகாணங்களின் முன்னாள் செயலாளர் கார்டல் ஹல் சொன்னதாவது, அது “நம்முடைய நாகரிகம் தப்பிப் பிழைப்பதற்கான” திறவுகோலைக் கொண்டிருக்கிறது. ஐ.மா. அதிபர் ஹாரி ட்ரூமன் அதைக் “கடவுளுடைய வழிநடத்துதலின் கீழ் நிலையான சமாதானத்தை உண்டாக்க . . . ஓர் உன்னத வாய்ப்பு,” என்று அழைத்தார். ஐ.நா. சாசனம் பெரும்பாலும் “மனிதன் இதுவரை ஏற்படுத்தியிராத, உருவாக்கியிராத பெருஞ் சிறப்பு வாய்ந்த ஆவணம்” என்றும், “நாகரிகச் சரித்திரத்தில் ஒரு திருப்பு முனை,” என்றும் அழைக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அரசு துறை சேர்ந்த கிரெகரி J. நெவெல் சொன்னார்: “நோக்கம் அளவுக்கு மிஞ்சி மதிப்பிடப்பட்டது: ஏமாற்றம் தவிர்க்கப்பட முடியாதது.”
சர்வதேச சங்கத்தைப் போன்றே, சமுதாயக் களத்தில் ஐ.நா. ஏராளம் சாதித்திருக்கிறது. ஆனால் அது சமாதானத்தை உறுதிப்படுத்திடவுமில்லை, அல்லது போரை நிறுத்திடவுமில்லை. பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ஹாரல்டு மேக்மில்லன் 1962-ல் பிரிட்டிஷ் மக்கள் சபையில் பேசும்போது, “ஐக்கிய நாடுகள் கட்டப்பட்டிருக்கும் முழு அஸ்திவாரமே அறியப்படாத வகையில் அடியறுக்கப்பட்டிருக்கிறது,” என்றார்.
ஆரம்பத்தில் அநேகர் இந்தச் சபையை மதபக்தியோடு நோக்கக் கூடியவர்களாயிருந்தனர். கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே ஏற்படுத்த வல்லது என்று பைபிள் கூறுவதை, அதாவது நிலையான சமாதானமும் நீதியும் உண்மையிலேயே ஐக்கியப்பட்ட ஓர் உலகையும், இந்தச் “சொரூபம்” ஏற்படுத்திடும் என்று அவர்கள் நம்பினர். மனிதனின் முயற்சிகள் சமாதானத்துக்கான உண்மையான ஊற்றுமூலமாயிருக்க முடியாது என்பதைக் காட்டும் பைபிள் தீர்க்கதரிசனங்களை ஏற்றுக்கொள்ள அவர்கள் பலமாக மறுத்தனர். என்றபோதிலும் ஐ.நா. சபை தனது 40-வது வயதை எட்டியபோது, சரித்திராசிரியரான தாமஸ் M. ஃப்ராங்க் சொன்னார்: “நாம் 1945-ல் எதிர்பார்த்திருந்ததைவிட அதிகக் குறைந்த திறம்படைத்ததாயிருக்கிறது.” ஐ.மா. செயலாளர் ஜார்ஜ் P. ஷுல்ட்ஸ் குறிப்பிட்டார்: “ஐக்கிய நாடுகள் சங்கத்தின் பிறப்பு உலகை நிச்சயமாகவே ஒரு பரதீஸாக மாற்றிடவில்லை.”
ஐ.நா. வெற்றிகொள்ளாததற்குக் காரணம், சமாதானத்துக்கு உண்மையான தடைகளாக இருக்கும் இக்காரியங்களை மனித அரசாங்கங்கள் அழித்திடவில்லை: தேசாபிமானம், பேராசை, வறுமை, இனவெறி, வல்லாட்சி மற்றும் உலகில் சாத்தானின் செல்வாக்கு. மக்கள் இந்த அரசாங்கங்களைப் பற்றிக் கொண்டிருப்பதற்குக் காரணம், எதிர்பார்ப்பு ஒளிமயமானதாக இருப்பதால் அல்ல, ஆனால் அவர்களுக்கு இதைவிட மேன்மையான நம்பிக்கை இல்லாமலிருப்பதே.—வெளிப்படுத்துதல் 12:12.
ஐக்கிய நாட்டு சபை உயிரோடிருப்பதும் அதில் உட்படுத்தப்பட்டிருக்கும் அநேகருடைய முயற்சியும், பூமியிலிருக்கும் மக்கள் ஒரு மாற்றத்துக்கான தேவையை எவ்வளவு ஆழமாக உணருகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அந்த மாற்றம் நிச்சயமாய் வரும், ஆனால் வித்தியாசமான, அதிக பலனுள்ள வழியில் வரும். எந்த வழியில்?
நிரந்தர ஆட்சி
தொடர்ச்சியாக ஏழு “ராஜாக்கள்” அல்லது உலகவல்லரசுகள் மட்டுமே இருப்பவர்கள் என்று பைபிள் சொல்வதை நினைவிற்கொள்ளுங்கள். அதற்கு பின்பு வேறு எந்த ஒரு மகா பெரிய வல்லரசைக் குறித்தும் குறிப்பிடப்படவில்லை. தற்காலிகமான “எட்டாவது ராஜாவும் நாசமடையப்போகிறான்” என்று பைபிள் கூறுகிறது.—வெளிப்படுத்துதல் 17:10, 11.
ஆனால் ஒரு மேன்மையான நம்பிக்கை இருக்கிறது என்றும் பைபிள் கூறுகிறது. மக்கள் அதிகக் கடுமையாக நாடித்தேடும் சமாதானத்தையும், நீதியையும், ஐக்கியப்பட்ட உலகத்தையும் வேறொரு காரியம் கொண்டுவரும் என்று பைபிள் வாக்களிக்கிறது. அது கூறுகிறது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
இயேசு பேசின ஆட்சி இதுதான். இதற்காகத்தான், “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” என்று அவரைப் பின்பற்றியவர்கள் ஜெபித்திருக்கிறார்கள். (மத்தேயு 6:10) இந்த ராஜ்யம் மனிதருடைய இருதயங்களில் நல்லதுக்காக இருக்கும் ஒரு செல்வாக்கு அல்ல. மாறாக, இது உண்மையான ஒரு பரலோக ஆட்சி, பூமியை ஆவிப் பிரதேசத்திலிருந்து ஆளப்படும் ஒரு காரியம். நாம் பூமியில் வாழும் விதத்தை மாற்றிடும்.—வெளிப்படுத்துதல் 21:1-4.
அந்தக் கிளர்ச்சியூட்டும் புதிய ஆட்சியைக் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது, அது எப்படி இயங்கும், அது உண்டுபண்ணும் சமாதானமும் நீதியும் ஐக்கியப்பட்ட உலகமும் என்பவை இந்தத் தொடர் கட்டுரைகளின் அடுத்ததும் கடைசியானதுமான கட்டுரையின் பொருளாக இருக்கும். (w88 6/1)
பைபிள் ஏழு மகா உலக வல்லரசுகளைக் குறித்துப் பேசுகிறது—இவை உலக சரித்திரத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளினூடே ஒன்றையொன்று பின்தொடர்ந்த மகா வல்லரசுகள். இந்தத் தொடர்க் கட்டுரைகளின் முன் கட்டுரைகள் அவற்றின் கடைசி வல்லரசின் காலப்பகுதியில் நாம் வாழ்கிறோம் என்பதைக் காட்டியிருக்கிறது—நம்முடைய நாளின் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு.a—வெளிப்படுத்துதல் 17:9, 10.
இதே ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு ஏற்கனவே வெளிப்படுத்துதல் புத்தகத்தில் “இரண்டு கொம்புகள் கொண்ட ஒரு மூர்க்க மிருகமாக” விளக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு-பகுதி உலக வல்லரசு, எல்லா ஏழு உலக வல்லரசுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அந்த அரசியல் மிருகத்துக்கு “ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.”—வெளிப்படுத்துதல் 13:11, 14.
இந்தத் தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறின? இவை நமக்கு இன்று எதை அர்த்தப்படுத்துகின்றன? இவற்றிற்குரிய அக்கறை தூண்டும் விடை பின்வரும் கட்டுரையின் பொருளாகும்.
[அடிக்குறிப்புகள்]
a இந்த உலக வல்லரசுகள் இந்தப் பத்திரிகையின் முன் இதழ்களில் சிந்திக்கப்பட்டன: (1) எகிப்து, மார்ச் 1, 1989; (2) அசீரியா, ஆகஸ்ட் 1, 1989; (3) பாபிலோன், செப்டம்பர் 1, 1989; (4) மேதியா-பெர்சியா, அக்டோபர் 1, 1989; (5) கிரீஸ், நவம்பர் 1, 1989; (6) ரோம், டிசம்பர் 1, 1989; (7) ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு, ஜனவரி 1, 1990.
[பக்கம் 28-ன் பெட்டி]
யுத்த பாதிப்பின் அளவு
சர்வதேச சங்கத்தின் மறைவைக் குறித்த இரண்டாம் உலக மகா யுத்தம் வியந்திடுமளவுக்கு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (1954 பதிப்பு), யுத்தத்தின்போது உயிரிழந்த இராணுவத்தினரின் எண்ணிக்கையை 1940-களிலிருந்து பல்வேறு நாடுகளின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு போரில் உயிரிழந்தவர்களின் புள்ளிவிவரத்தைக் கொடுத்தது. அந்தப் புள்ளிவிவரங்களில் உட்பட்டிருந்தவை: ஐக்கிய மாகாணங்கள் தனது 1940-களின் மக்கள் தொகையில் 500 பேருக்கு ஓர் இராணுவ வீரனைப் போரில் இழந்தது; சீனா, 200-க்கு ஒருவர்; ஐக்கிய ராஜ்யங்கள், 150-க்கு ஒருவர்; ஃபிரான்ஸ், 200-க்கு ஒருவர்; ஜப்பான், 46-க்கு ஒருவர்; ஜெர்மனி, 25-க்கு ஒருவர்; சோவியத் ரஷ்யா, 22-க்கு ஒருவர். இராணுவத்தைச் சாராத மக்களின் உயிர்ச்சேதம் இராணுவத்தினரின் உயிர்ச்சேதத்தைவிட பெரும்பாலும் அதிகமாக இருந்தது என்பதைக் கவனிக்கும்போது, உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதில் மனிதமுயற்சிகள் எப்படித் தோல்வியடைந்திருக்கின்றன என்பதை நாம் நேரடியாகக் காணமுடிகிறது.
[பக்கம் 26-ன் படம்]
‘ஐ.நா. சங்கம் ஏற்படுத்தப்பட்டது முதல் போர்களில் இரண்டு கோடி மக்கள் மாண்டிருக்கின்றனர், அதன் தோல்விக்கான விலையை உறுதிசெய்யும் ஒரு துக்ககரமான உண்மை.’—தாமஸ் M. ஃப்ராங்க் எழுதிய “தேசங்களுக்கு விரோதமாய்த் தேசம்.”