நயமுடைய கிமோனோ அது நீடித்திருக்குமா?
ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர்
இளம் கியோகோவுக்கு இன்று ஒரு விசேஷமான நாள். அவள் தன் புதிய பட்டு கிமோனோவை முதல் முறையாக அணியப் போகிறாள். அது இளஞ் சிவப்பு நிறத்தில் பளிச்சிடும் சிவப்பு பூக்கள் போட்டதாய் இருக்கிறது.
ஃபூரிசோடு என்றழைக்கப்படும் மடிப்புகளாகத் தொங்கும் சட்டைக்கை உடையின் கீழ் ஓரம் வரை தொங்குகிறது. அவளுடைய முடி ஒரு சுருளாக சுருட்டிக் கட்டப்பட்டிருக்கிறது, அவளுடைய கிமோனோவின் நிறத்துக்கு ஒத்திசைவாக இருக்கும் சிவப்பு நிற கச்சைகளால் அவளுடைய முடி கட்டப்பட்டிருக்கிறது. சரிகை வேலைப்பாடுடைய சோரி அல்லது செருப்புகள் அணிந்து கொண்டு நேர்த்தியாக அவள் நடந்து செல்கையில், அழகிய நயத்தின் உருவமாக அவள் திகழ்கிறாள்.
“கிமோனோவை அணிந்து கொண்டிருப்பது ஒரு சீமாட்டியைப் போல் என்னை உணரச் செய்கிறது” என்று கியோகோ சொல்கிறாள். உண்மையிலேயே அது அவளை காண்பதற்கு இனியவளாக ஆக்குகிறது.
தேசிய உடை
கிமோனோ ஜப்பான் நாட்டு ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேசிய உடையாகும். அந்த வார்த்தை வெறுமென “அணியும் பொருள் (பொருட்கள்)” என்று அர்த்தப்படுகிறது.
என்றபோதிலும், ஜப்பானியர்களுக்கு கிமோனோ வெறும் ஓர் அழகான ஆடை மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறையை பிரதிநிதித்துவம் செய்கிறது, அவர்களுடைய கலாச்சாரத்தின் ஒரு பாகமாக இருக்கிறது. பூ அலங்காரம், தேயிலை சடங்கு போன்ற அவர்களுடைய பாரம்பரிய கலைகளோடு கிமோனோவை உடுத்திக் கொள்வது அனுதின வாழ்க்கையில் அழகு, அன்பு, அடக்கம், ஒத்திசைவு போன்ற குணங்களை உள்ளடக்குவதாக சொல்லப்படுகிறது.
கிமோனோ உடம்போடு இறுக்கமாய் ஒட்டியிருக்கும் உடையாயிருக்கிறது. ஓபி என்றழைக்கப்படும் அகலமான, விறைப்பான கச்சையால் அது இடுப்பில் இறுக்கமாக கட்டப்படுகிறது. கைகளை விரித்து வைக்கும்போது ஒரு ஜோடி சிறகுகளைப் போன்று சட்டைக் கைகள் இறுக்கமற்றதாக தளர்வாகவும், முழு அளவானதாகவும் இருக்கின்றன. அந்த உடைதானே ஒடுக்கமாயும் நீளமாயும் இருக்கிறது, கணுக்கால் வரை சென்றெட்டுகிறது, அதில் திறப்புகள் கிடையாது. கிமோனோக்களை அணிந்திருக்கும்போது பெண்கள் அவ்வளவு நேர்த்தியாக அங்குமிங்கும் செல்வதைக் காண்பது ஆச்சரியமாயில்லை!
கிமோனோக்களை அணிந்து கொள்ளும் பெண்களின் வயதுக்கேற்ப, அவைகளின் நிறமும் உருவமைப்பும் பாரம்பரியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பகட்டான நிறங்களும், புதுமையான உருவமைப்புகளும், மடிப்புகளாகத் தொங்கும் நீண்ட சட்டைக் கைகளும் இளம் பெண்களின் எழிலுக்குப் பொருத்தமானதாய் இருக்கின்றன. அவர்களுக்கு வயதாகையில், அவர்கள் அந்தத் துணியின் சாயத்தை நீக்கி, அவர்களுடைய வயதுக்கேற்ப அதை சாயந்தோய்த்துக் கொள்ளலாம். இருபதாம், முப்பதாம் வயதுகளில் இருக்கும் பெண்கள் பொதுவாக மென்னயமான நிறங்களில் நுட்பமான வேலைப்பாடுகளமைந்த கிமோனோக்களை அணிகின்றனர். திருமணமான பெண்களுக்கு கறுப்பு நிற கிமோனோக்களும், அதை முனைப்பாக வேறுபடுத்திக் காட்டும் ஓபியும், பாவாடைகளில் பல வண்ண தினுசுகளும் அதிக பொருத்தமானதாய் இருக்கிறது.
இப்போதெல்லாம் வெகு சில ஆட்களே தினந்தோறும் கிமோனோக்களை அணிந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கிமோனோக்களை அணிந்து கொள்வதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றன, அச்சமயங்களில் சில ஆட்கள் அவற்றை அணிந்து கொள்கின்றனர். அவைகளில் ஒன்று ஜனவரி 15-ம் தேதி, Seijin no Hi அல்லது வயதுவந்தவர்களின் தினம் என்றழைக்கப்படுகிறது, அந்த வருடத்தின் போது 20 வயதை அடைபவர்களுக்காக அது கொண்டாடப்படுகிறது. பட்டதாரிகளாக ஆகும் சமயத்திலும் அல்லது புத்தாண்டு தினம் (Shogatsu) போன்ற மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் சிலர் கிமோனோவை அணிந்து கொள்கின்றனர். ஆம், உலக முழுவதிலுமுள்ள பெண்களுக்கு உடுத்திக் கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்தால் சந்தோஷம் தானே!
திருமணங்கள், ஈமச் சடங்குகள் போன்ற சமயங்களின் போதும், அச்சம்பவங்களுக்குப் பொருத்தமான கிமோனோக்கள் உபயோகிக்கப்படுவதை காணலாம். மற்ற சம்பவங்களின்போது ஆண்களும்கூட சில சமயங்களில் கிமோனோக்களை அணிந்து கொள்கின்றனர், அதோடு ஹயோரி என்றழைக்கப்படும் முக்கால்-அளவு நீளமுள்ள மேற்சட்டையையும் அணிந்து கொள்கின்றனர். ஓர் ஆணின் கிமோனோ பொதுவாக சாம்பல் நிறம், நீலம் அல்லது பழுப்பு நிறம் போன்ற மென்மையான நிறங்களில் இருக்கும். வழக்கமான உடையாக ஹக்காமா என்றழைக்கப்படும் இரு பாகமாகப் பிரியும் பாவாடை ஹயோரியோடு அணியப்படுகிறது.
நவம்பர் மாதத்தில் shichi-go-san (ஏழு-ஐந்து-மூன்று) பண்டிகையின் போது பிள்ளைகள் கிமோனோக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றனர். இந்நாளில் ஏழு, ஐந்து அல்லது மூன்று வயதுள்ள சிறுவர்களும் சிறுமிகளும் தங்கள் முதல் கிமோனோக்களை அணிந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். முக்கியமான நிறம் சிவப்பு, ஆனால் பின்னணி வண்ணம் நீலம் அல்லது கருஞ்சிவப்பு நிறமாக இருக்கலாம், ஜப்பானிய தினுசு பூக்கள், பறவைகள், மடிக்கப்பட்ட விசிறிகள் அல்லது முரசுகள் அதில் இருக்கும். தன் சோரியில் தத்து நடை போட்டுச் செல்லும் சிறுவனை கவனியுங்கள், கடற்படைத் துறையினர் அணியும் ஆழ்ந்த நீலநிறமும், வெள்ளைக்-கோடுகளும் உடைய ஹகாமாவையும், அதற்கேற்ற ஹயோரியையும் குஷியாக அணிந்திருக்கிறான். நேற்று அவன் தன் ஜீன்ஸ், T-ஷர்ட், ஷுக்கள் ஆகியவற்றில் நிச்சயமாகவே இதைவிட அதிக செளகரியமாக இருந்தான்! ஆனால் தன் shichi-go-san புகைப்படங்களை பின்னர் பார்க்கும் போது, சந்தோஷ உணர்ச்சியே கொள்ளுவான்.
சில ஜனங்கள் தாங்கள் விசேஷமாக கருதும் சமயங்களின் போது கிமோனோவை அணிய விரும்பினாலும், இது ஒருபோதும் ஒரு கட்டாயமாக இல்லை. தங்களுடைய நம்பிக்கைகள் அல்லது மனச்சாட்சியின் காரணமாக, மற்ற ஜனங்கள் அப்படிப்பட்ட ‘விசேஷமான சமயங்களுக்கு’ மதிப்பு கொடுக்காமலிருக்க விரும்புவர். அதன் காரணமாக அவர்களுடைய நோக்குநிலையில் போதுமான அளவு பொருத்தமாயிருக்கும் என்று அவர்கள் கருதும் உடையை அணிந்து கொள்வர்.
கிமோனோவை அணிந்துகொள்ளுதல்
ஒரு கிமோனோவை அணிந்து கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? சிலர் நினைப்பது போல் அது அவ்வளவு எளிதானது அல்ல. நகஜூபான் என்றழைக்கப்படும் நீளமான உள் ஆடையோடு நாம் ஆரம்பிக்கலாம். அதை சரியாக, தக்கவாறு அமைத்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் கிமோனோ நன்றாக பொருந்தாது. இந்த ஆடையின் குறுக்காக மேற்கவிந்து இருக்கும் கழுத்துப் பட்டை விறைப்பானதாய் இருக்கிறது, இது கிமோனோவின் மேல் பாகத்தை அதன் இடத்தில் பிடித்து வைக்கிறது. கழுத்தின் பின்புறம் கழுத்துப்பட்டை முழுவதுமாக கழுத்தின் மேல் படியாமல் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணாக இருந்தால் உங்களுடைய தளர்சட்டை அல்லது மேற்சட்டையை மூடுவது போல் ஆடையின் முன்பாகத்தை இடது புறத்தின் மேல் வலது புறத்தை வைத்து நீங்கள் ஒருவேளை மூடுவீர்கள். “இல்லை! இல்லை!” என்று நம்முடைய ஜப்பானிய சிநேகிதி சொல்கிறார்: “இங்கு செத்த உடல்கள் மட்டும் தான் இடதுபுறத்தின் மேல் வலதுபுறத்தை வைத்து சுற்றப்படுகின்றன!” ஆகையால் உங்கள் நகஜூபானை நீங்கள் வலதுபுறத்தின் மேல் இடதுபுறத்தை வைத்து சுற்றி மூடுவீர்கள், பின்பு அதை ஓர் ஒடுக்கமான கச்சையைக் கொண்டு பொருத்துவீர்கள்.
இப்போது நீங்கள் கிமோனோவுக்கே தயாராக இருக்கிறீர்கள். அது அதிக நீளமானதாயிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? “பிரச்னை ஒன்றுமில்லை, நாம் இப்போது தான் ஆரம்பிக்கிறோம்” என்று நம்முடைய சிநேகிதி சொல்கிறார். கிமோனோவை உங்களைச் சுற்றி சுற்றுங்கள்—வலதுபுறத்தின் மேல் இடதுபுறத்தை வைத்து என்பதை நினைவில் வையுங்கள்—அதை ஒரு கச்சையைக் கொண்டு கட்டுங்கள். கூடுதலான துணியை கச்சையின் மேலாக இழுப்பதன் மூலம், மடித்த ஓரம் தரையில் புரளாத வரை நீளத்தை இப்போது சரி செய்யுங்கள். கழுத்துப்பட்டையை நேராக்குங்கள், சட்டையை சுருக்கமின்றி சரி செய்யுங்கள். கூடுதலான துணி நேர்த்தியாக தொங்கட்டும், அதை கீழே மற்றொரு கச்சையைக் கொண்டு கட்டுங்கள்.
இப்போது அதிக சிக்கலான பாகம் வருகிறது—ஓபி. விறைப்பான துணியால் செய்யப்பட்டிருக்கும் இது ஏறக்குறைய 30 சென்டிமீட்டர் அகலமும், 4 மீட்டர் நீளமுமாய் இருக்கிறது. பின்புறம் அணிமுடிச்சு கட்டுவதற்கு சொல்லர்த்தமாகவே நூற்றுக்கணக்கான வழிகள் இருக்கின்றன. எந்த உதவியுமின்றி அதை போட்டுக் கொள்வது ஒரு சவாலாக இருக்கிறது. ஆனால் நம்முடைய ஜப்பானிய சிநேகிதி உதவி செய்வதற்கு சந்தோஷப்படுகிறார்கள். ஓபியை ஒழுங்கமைப்பதற்கு ஒவ்வொரு படியிலும் அதை அவ்விடத்தில் பிடித்து வைப்பதற்கு ஒரு நூல்கயிறு அல்லது ஒரு கச்சை தேவைப்படுகிறது. அணிமுடிச்சை அதன் இடத்தில் வைப்பதற்கு கடைசி படியானது முன்புறம் நேர்த்தியாக கட்டப்படுகிறது.
முதல் முறையாக கிமோனோவை அணிந்திருப்பது எப்படி உணரச் செய்கிறது? ‘உண்மையில் நேர்த்தியாக இருக்கிறது, ஆனால் நடமாடுவதற்கு இறுக்கமாக இருக்கிறது’ என்று நீங்கள் சந்தேகமின்றி சொல்வீர்கள்.
துணியும், நெசவு பாணியும்
கிமோனோ செய்வதற்கு எப்போதுமே அதிக விரும்பத்தக்க துணியாக கலப்பற்ற தூய பட்டுதுணி இருந்திருக்கிறது. மிருதுவான தன்மை, பளபளப்பு, நீடித்து உழைக்கக்கூடிய தன்மை ஆகியவற்றில் அதை விஞ்ச முடியாது. பல்வேறு மாவட்டங்கள் தங்கள் குறிப்பிட்ட நெசவுக்கும், சாயமிடும் முறைக்கும் பெயர்பெற்றவையாய் இருக்கின்றன.
உதாரணமாக, கியுஷு என்ற இடத்துக்கு தென் பகுதியில் இருக்கும் அமாமி-ஒ-ஷிமா என்ற தீவில் டெகி மரப்பட்டையையும், அத்தீவின் இரும்புச் சத்துள்ள மண்ணையும் உபயோகித்து ஒரு தனித்தன்மை வாய்ந்த சாயமிடும் வழிமுறை உபயோகிக்கப்படுகிறது. அரசாங்கம் அதை ஒரு “தேசிய கலாச்சார புதிரான பொக்கிஷம்” என்றழைக்கிறது.
ஓகிநாவா என்ற தீவிலிருந்து பிங்காட்டா என்றழைக்கப்படும் ஒரு படிவம் வருகிறது. பின் என்றால் சிவப்பு என்று அர்த்தம், ஆனால் மற்ற பகட்டான நிறங்களையும் ஒன்றுசேர்த்து பூக்கள், பறவைகள், ஆறுகள், மரங்கள் போன்ற பொங்கி வழியும் தினுசுகள் போடப்படுகின்றன. ஜப்பானின் பழைய தலைநகரமான கியோட்டோவும் அதனுடைய கிமோனோ துணிக்கு புகழ்பெற்றதாயிருக்கிறது.
இக்காலத்தில் நெசவு பெரும்பாலும் இயந்திரங்களால் செய்யப்பட்டாலும், திரைச்சீலை படிவங்கள் இன்னும் கையால் தான் செய்யப்படுகிறது. படிவங்கள் துணியின் மீது உள்வெட்டுத் தகடு மூலம் ஒப்பனை செய்த பிறகு, மிக நேர்த்தியான ஓவியத்தை வரைவது போல் எடுக்கும் கவனத்துடன் நிறங்களை கையால் பூசுகின்றனர். உடை ஓரத்தை நேர்த்தியாக்குவதற்கு தங்க நிறமும், வெள்ளி நிறமும் சேர்க்கலாம். படிவத்தின் சில பாகங்கள் கையால் பூத்தையல் வேலைப்பாடு செய்ய வேண்டி இருக்கும். அதன் விளைவு உண்மையிலேயே கலைநயத்துடன் உருவாக்கப்பட்டதாக இருக்கிறது.
மாறும் காலங்கள்
என்றபோதிலும், சமீப ஆண்டுகளில் கிமோனோக்களுக்கான தேவை வெகுவாக குறைந்திருக்கிறது. வாக்கெடுப்பு எடுத்ததில் 64 சதவிகிதத்தினர் புத்தாண்டு தினத்தன்று கிமோனோவை அணிந்தனர், ஆனால் 3 சதவிகிதத்தினர் மட்டுமே அன்றாடகம் அதை உபயோகித்தனர் என்று Yomiuri என்ற செய்தித்தாளால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காண்பிக்கிறது. மேலும் “கிமோனோக்களுக்கான தேவை அந்தளவுக்கு குறைந்திருப்பதால் நேர்த்தியான பட்டு துணிகளை நெசவு செய்வதற்கு உபயோகப்படுத்தின இயந்திரத் தொகுதிகளை” வேலையாட்கள் “தகர்ப்பதை காண்பிக்கும்” ஒரு செய்தித்தாள் புகைப்படமும் அந்தச் சரிவை சுட்டிக்காட்டுகிறது.
ஏன் இந்தச் சரிவு? மேற்கத்திய நாடுகளின் உடை பிரபலமாகவும், செளகரியமானதாகவும் இருப்பதாலும், நல்ல தரமுள்ள பட்டு கிமோனோக்களின் விலை அதிக உயர்வாக இருப்பதாலும் ஆகும். அவைகளின் விலை ஐந்து லட்சம் யென் (2,000 ஐ.மா. டாலர்கள்) அதற்கு ஏற்றாற் போல் இருக்கும் ஓபி, அந்த விலையில் பாதி விலையாக இருக்கும். சோரி, டபி (சோரியோடு சேர்ந்து அணிந்துகொள்ளப்படும் காலுறை), பணப்பை, முடி அழகுப் பொருட்கள் இவையெல்லாவற்றின் விலையையும் அதோடு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பட்டு கிமோனோவை அணிந்து கொள்வது ஏன் ஓர் உண்மையான சொகுசு வாழ்க்கைப் பொருள் என்பதை நீங்கள் காணலாம்.
சில குடும்பங்கள் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் சேமிப்பு கணக்கு ஒன்றை ஆரம்பிக்கின்றனர், அப்போதுதான் அவள் ஓர் இளம் பெண்ணாக ஆகும்போது மிகவும் நேர்த்தியான ஒரு கிமோனோவை வாங்க முடியும். அப்படிப்பட்ட கிமோனோ ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்குக் கொடுக்கப்படுகிறது.
ஆனால் மற்றொரு காரியமும் இருக்கிறது. சோடோ கிமோனோ சங்கத்தின் தலைவரான நோரியோ யமநாக்கா என்பவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “நம்முடைய அன்றாடக வாழ்க்கை அதிக வேலைகள் நிறைந்ததாய் இருக்கிறது. . . . ஜப்பானியர்கள், குறிப்பாக ஆண்கள், போருக்குப் பின்னான காலங்களில் பிழைப்புக்காக உழைப்பதில் அதிக மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். கிமோனோக்களுக்காக செலவு செய்ய அவர்களுக்கு நேரமில்லை.” தங்களுடைய பழங்கால முன்னோர்களிடமிருந்து தொன்றுதொட்டு வந்த பாரம்பரியங்களை கடைப்பிடிப்பதற்கு அதி-வேகமான நவீன சமுதாயம் அவர்களை அனுமதிப்பதில்லை.
நவீன-நாளைய சமுதாயத்தின் அழுத்தங்களை சமாளித்து நயமான கிமோனோ நிலைத்திருக்குமா என்பதை காலம் மட்டும் தான் சொல்லும். ஆனால் ஜப்பானின் இந்தப் பலவண்ண தேசிய உடை உலக முழுவதிலும் காணப்படும் கவர்ச்சியான, பல்வேறு வகையான ஆடை பாணியோடு அதிகத்தை கூட்டியிருக்கிறது. (g91 2/8)