குடும்பத்தில் வன்முறையைத் தூண்டுவது எது?
“வெளி சமுதாயத்தின் அழுத்தங்கள், மனத்தாங்கல்கள், முரண்பாடுகள் போன்றவற்றிலிருந்து ஓர் அடைக்கலமாக இருப்பதற்குப் பதிலாக, குடும்பம் அடிக்கடி இம்மனத்தாங்கல்களைக் கடத்துவதாக அல்லது பெரிதுபடுத்துவதாகத் தோன்றுகிறது.” —நெருங்கிய சூழமை—திருமணத்தையும் குடும்பத்தையும் ஆய்வுசெய்தல் (The Intimate Environment—Exploring Marriage and the Family).
குடும்பத்தில் வன்முறை என்ற தலைப்பின்மீதான ஆராய்ச்சி ஒப்பிடுகையில் ஒரு புதிய முயற்சியேயாகும். சமீப பத்தாண்டுகளில்தான் விரிவான சுற்றாய்வுகளும் நடத்தப்பட்டன. அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவுகள் எப்போதுமே இசைவாய் இல்லாமலிருக்கலாம். ஆனால் குடும்பத்தில் வன்முறையைத் தூண்டுவிக்கும் சில அடிப்படை காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சிலவற்றை நாம் கவனிக்கலாம்.
குடும்ப பின்னணி வகிக்கும் பங்கு என்ன?
அநேக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறினர்: “நாங்கள் பேட்டி கண்ட தம்பதிகள் எந்தளவு வன்முறையானவர்களாய் இருக்கின்றனரோ, அந்தளவுக்கு அவர்களுடைய குழந்தைகள் ஒருவரோடொருவரும் தங்களுடைய பெற்றோரோடும் வன்முறையாய் நடந்துகொள்கின்றனர்.”
குடும்பத்தில் நடக்கும் வன்முறையை வெறுமனே நேரில் காண்பதுதானே ஓர் இளைஞன்மீது அதிக பாதிப்பைக்கொண்டிருக்கிறது. “ஒரு குழந்தை தன் தாய் தாக்கப்படுவதைக் காண்பது அந்தக் குழந்தையே தாக்கப்படுவதற்குச் சமம்,” என்று மருத்துவர் ஜான் ப்ராட்ஷா குறிப்பிடுகிறார். எட் என்ற ஓர் இளைஞன் தன் தந்தை தன்னுடைய தாயை அடிப்பதைக் காண வெறுத்தான். இருப்பினும், ஆண்கள் பெண்களைக் கட்டுப்படுத்தவேண்டும், அவ்வாறு செய்வதற்கு, ஆண்கள் அவர்களைப் பயப்படுத்தி, புண்படுத்தி, தாழ்வுபடுத்தவேண்டும் என்று நம்புவதற்கு அவன் பக்குவப்படுத்தப்பட்டான். அவன் இதை ஒருவேளை அப்போது உணராதிருந்திருக்கலாம். அவன் பெரியவனானபோது, எட் இந்தத் துர்ப்பிரயோக, வன்முறை தந்திரங்களைத் தன் மனைவியிடம் உபயோகித்துவந்தான்.
சில பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் தொலைக்காட்சியில் வன்முறையைப் பார்ப்பதிலிருந்து எச்சரிக்கையாய்த் தடுக்கின்றனர். இது ஒரு நல்ல காரியமே. ஆனால் எதுவும் உள்ளத்தில் எளிதில் பதிகிற தங்களுடைய குழந்தைகள் பின்பற்றவேண்டிய முன்மாதிரிகளாக, பெற்றோர் தங்களுடைய சொந்த நடத்தையில் கவனம் செலுத்துவது வரும்போது அவர்கள் இன்னும்கூட அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அழுத்தம் வகிக்கும் பங்கு என்ன?
கருத்தரிப்பு, வேலையின்மை, ஒரு பெற்றோரின் மரணம், இடம்பெயர்தல், உடல்நலக்குறைவு, பணப்பிரச்னைகள் போன்றவை மற்ற காரியங்களைப் போலவே அழுத்தங்களைக் கொண்டுவருகின்றன. பெரும்பாலானோர் அழுத்தங்களை வன்முறையின் துணையின்றி கையாளுகின்றனர். எனினும் சிலருக்கோ, முக்கியமாக மற்ற காரணங்களோடு சேரும்போது, அழுத்தம் வன்முறைக்கு முன்விளைவாக இருக்கலாம். உதாரணமாக, வயதான பெற்றோர் ஒருவரை—குறிப்பாக அவர் உடல்நலமின்றி இருக்கும்போது—பராமரித்தல், பராமரிப்பவர் மற்ற குடும்ப பொறுப்புகளால் பாரம் சுமத்தப்படும்போது அடிக்கடி துர்ப்பிரயோகத்திற்கு வழிநடத்துகிறது.
குழந்தைகளை வளர்த்தலும் அழுத்தத்தை உண்டுபண்ணுகிறது. இதன் விளைவாக, குடும்பத்தின் அளவு பெருகப் பெருக குழந்தை துர்ப்பிரயோகத்திற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. குழந்தைகள், துணைவர் துர்ப்பிரயோகத்தில்கூட அதிகரிப்பைக் கொண்டுவரலாம். ஏனென்றால், “குழந்தைகளின்பேரில் ஏற்படும் சச்சரவுதான் பெரும்பாலும் சண்டையைத் தொடங்கிவைக்க தம்பதிகளை வழிநடத்துகிறது,” என பிஹைன்ட் க்ளோஸ்ட் டோர்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது.
பாலினத்தைப்பற்றிய தவறான நோக்குநிலை
கனடாவில் ஓர் ஆலோசனை குழுவை நடத்திவரும் டேன் பஜாரக், துர்ப்பிரயோகம் செய்யும் ஆண்கள் பெண்களைப்பற்றி ஒரு தவறான கருத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்: “அவர்கள் என்னவகையான பண்பாட்டிலிருந்து வந்தவர்களானாலுஞ்சரி, ஆண்கள் முதல்தரத்தினர் என்று நம்பும்படி அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றனர்.” தாங்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள், எனவே “அவர்களைத் தண்டித்து, கண்டித்து, அல்லது மிரட்டி அடக்குவது” தங்களுடைய உரிமை என நம்பும்படி ஆண்கள் பயிற்சியளிக்கப்பட்டிருக்கின்றனர், என்று துர்ப்பிரயோகம் செய்யும் ஆண்களுக்கான ஒரு சிகிச்சை திட்டத்திற்குத் தலைமைதாங்கும் ஹாமிஷ் சிங்க்ளேர் சொல்கிறார்.
அநேக தேசங்களில் தன் மனைவியை ஒரு சாதாரண பொருளாகவும் வெறுமனே தன்னுடைய உடைமைகளின் மற்றொரு பாகமாகவும் நடத்தும் அதிகாரத்தைக் கொண்டவனாக ஆண் கருதப்படுகிறான். தன்னுடைய மனைவியின்மீதான அவனுடைய கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம் அவனுடைய ஆண்மை மற்றும் மகிமையின் அளவாகக் கருதப்படுகிறது. அடிக்கடி மனைவிமார் பயங்கரமாக அடிக்கப்பட்டு மற்றும் வேறுவழிகளில் துர்ப்பிரயோகப்படுத்தப்படுகின்றனர். இதைக்குறித்து அங்குள்ள சட்ட அமைப்பு அதிகத்தைச் செய்யமுடிவதில்லை, ஏனென்றால் அந்தத் தேசங்களில் உள்ள சட்டங்கள் அவ்வாறு உள்ளன. ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள்; அவன் எவ்வளவுதான் மதிக்கத்தகாதவனாயும் வன்முறையில் நடந்துகொள்பவனாயும், ஒழுக்கங்கெட்டவனாயும் அல்லது சுயநலக்காரனாயும் இருந்தாலும் அவள் முழு கீழ்ப்படிதலைக் காட்டவேண்டும்.
CBS தொலைக்காட்சியின் நிருபர் மோர்லி சேஃபர் ஒரு தென்னமெரிக்க நாட்டைப்பற்றி அறிக்கை செய்தார்: “லத்தீன் அமெரிக்காவில் வேறெங்கும் ஆண் என்ற பெருமிதக் கொள்கை இவ்வளவு தெளிவாக இல்லை . . . இது முழு சமுதாயத்தையுமே ஊடுருவிப்பரவி இருக்கிறது. இங்கு ஓர் ஆண் தன் மகிமையைக் காத்துக்கொள்ள—குறிப்பாக பலியாள் தன்னுடைய காதலியாகவோ மனைவியாகவோ இருந்தால்—கொலை செய்துவிட்டுக்கூட தப்பித்துக்கொள்ளக்கூடும். நீதிமன்றத்திலுங்கூட இதுவே உண்மையாக இருக்கிறது.” இந்த நாட்டைப்போல “இந்த உலகில் வேறு எந்த இடத்திலும் பெண்கள் இவ்வளவு தாழ்த்தப்படுவதில்லை” என்று அவர் உறுதிப்படுத்தினார். ஆனால் ஆண்களின் ஆதிக்கமும் பெண்களின் தரங்குறைப்பும் பரவலானதாக இருக்கிறது. அங்கு எவ்வளவுதான் கொடூரமானதாக இருந்தாலும் அது ஒரு நாட்டுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாயில்லை.
ஒரு பெண்மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டவும் பலத்தையும் அதிகாரத்தையும் காட்டவும் ஆண்கள் வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர், என்பதாக நியூ யார்க்கில் உள்ள குடும்பத்தில் வன்முறை மற்றும் சட்ட அமல்படுத்தும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் மினா ஷூல்மன் கூறினார். “குடும்பத்தில் வன்முறை பலம், கட்டுப்பாடு ஆகியவற்றின் ஒரு துர்ப்பிரயோகமாகவே காண்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
மனைவியை அடிப்பவர்களில் சிலர் தன்மதிப்புக் குறைவினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் இதே குணத்தையே பலியானோருக்குள்ளும் புகுத்துகின்றனர். அவர்களால் அதைச் செய்ய முடிந்ததென்றால், அவர்களுடைய தன்மதிப்பு திருப்திப்படுத்தப்பட்டு, மற்றொரு மனிதரின்மீது ஓரளவு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளவர்களாகவும் உயர்வுபடுத்தப்பட்டதாகவும் உணர்வர். இவ்வாறாக தங்களுடைய ஆண்மையை நிரூபிப்பதாக அவர்கள் உணர்கின்றனர். எனினும், அவ்வாறு நிரூபிக்கிறார்களா? அவர்கள் சரீரப்பிரகாரமாகப் பலவீனமான பெண்களின்மீது இந்த வன்முறையைச் செய்கிறதனால், அவர்கள் உண்மையிலேயே வலிமைமிகுந்த ஆண்கள் என்பதைக் காட்டுகிறதா, அல்லது அதற்குப்பதில் அவர்கள் நியாயமற்றவர்கள் என்பதை நிரூபிக்கிறதா? பலவீனமான தற்காப்பற்ற ஒரு பெண்ணை அடிப்பது பலமுள்ள ஓர் ஆணுக்கு உண்மையிலேயே ஆண்மையாகுமா? உறுதியான ஒழுக்க நடத்தையுள்ள ஒரு மனிதன் பலவீனமுள்ள அதிக தற்காப்பற்றவர்களைத் தன் சொந்த நலனுக்காக நியாயமற்ற வகையில் நடத்தாமல் சலுகையும் இரக்கமும் காட்டுவான்.
அடிக்கும்படி தன்னைக் கோபமூட்டியது தன்னுடைய மனைவியே என்று அடிக்கடி தன் மனைவியின்மீது பழிசுமத்தும் உண்மை, துர்ப்பிரயோகிப்பவரின் நியாயமற்ற எண்ணத்துக்கு மற்றொரு சான்று. ‘நீ இதைச் சரியாகச் செய்யவில்லை. எனவேதான் நான் உன்னை அடிக்கிறேன்.’ அல்லது: ‘உணவு தாமதமாகிவிட்டது, எனவே உனக்குத் தகுதியானதைத்தான் நீ பெறுகிறாய்,’ இதுபோன்ற காரியங்களை அவளிடத்தில் சுட்டிக்காட்டலாம், அல்லது சொல்லலாம். துர்ப்பிரயோகிப்பவனின் மனதில், அது அவளுடைய குற்றமாகும். எனினும், துணையின் எந்தத் தவறும் தாக்குதலை நியாயப்படுத்தி காட்டுவதில்லை.
மதுபானம் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதா?
மதுபானம் கட்டுப்பாட்டைக் குறைத்துத் திடீர் உணர்ச்சியால் தூண்டப்பட்டுச் செயல்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே துர்ப்பிரயோகத்திற்கு இது ஒரு தூண்டுதலாக இருக்கக்கூடும் என்று சிலர் உணர்வதில் ஆச்சரியமில்லை. பெரும்பாலும் ஓர் ஆள் குடிமயக்கமில்லாமல் இருக்கும்போது வன்முறை உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கமுடிகிறது. ஆனால் மதுபானம் குடித்தப்பின் அவன் துர்ப்பிரயோகிப்பவனாக ஆகிறான். மதுபானம் அவனுடைய அறிவை மந்தப்படுத்துவதுடன் கோபத்தைக் கட்டுப்படுத்தும் அவனுடைய திறமையையும் குறைத்துவிட்டது.
எனினும், மற்றவர்கள், பிரச்னை மதுபானத்திலிருப்பதைவிட அழுத்தத்தில் அதிகம் வேரூன்றியிருக்கிறது என்பதாக வலியுறுத்துகின்றனர். அழுத்தத்தைக் கையாள மதுபானத்தை உபயோகிக்கும் ஒரு நபரும் அதே நோக்கத்திற்கு வன்முறையை உபயோகிக்கும் நபரும் ஒரே வகையானவர்கள் என அவர்கள் கூறுகின்றனர். இது குடிப்பவன் போதையிலிருக்கும்போது இருப்பதைப்போலவே குடிக்காமலிருக்கும்போதும் வன்முறையாக நடந்துகொள்வான் என அர்த்தப்படுத்துகிறது. இருப்பினும், இந்தக் காரியத்தில் என்னதான் நியாயவிவாதம் செய்தாலும், ஒருவருடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த நிச்சயமாகவே மதுபானம் உகந்ததல்ல. ஆனால் அது வழக்கமாகவே அதற்கு எதிர்மாறானதைச் செய்யும்.
செய்தித்துறை எவ்வாறு செயல்களைப் பாதிக்கிறது
தொலைக்காட்சியும் திரைப்படமும், ஆண்கள் ஒரு மூர்க்கத்தனமுள்ள ஆள்தன்மையைக் கொண்டிருக்கும்படி உற்சாகப்படுத்துகின்றன, மேலும் முரண்பாடுகளையும் கோபத்தையும் கையாள சரியான வழி வன்முறையே என்பதாகக் கற்பிக்கின்றன என்று சிலர் வாதாடுகின்றனர். “ரேம்போ திரைப்படத்திற்கான என்னுடைய சொந்த ஆழ்ந்த பிரதிபலிப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். சட்டத்திற்குக் கீழ்ப்படியும் என்னுடைய வயதுவந்த [உள்] ஆள் ரேம்போ கூட்டங்களைக் கொலைசெய்வதைக் கண்டு அதிர்ச்சியடையும்போது, என்னுடைய [உள்] குழந்தைத்தனமோ அவனை ஊக்குவிக்கிறது,” என்பதாக ஒரு குடும்ப ஆலோசகர் ஒப்புக்கொள்கிறார்.
அநேக குழந்தைகள் எண்ணிலடங்கா வன்முறை செயல்கள், கற்பழிப்பு, மற்ற மனிதர்களை, குறிப்பாக பெண்களை, இழிவுபடுத்துதல் ஆகியவை நிறைந்த நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான மணிநேரங்கள் தொலைக்காட்சியில் காணும்படி செய்யப்படுகிறார்கள். எனவே அநேகர் வளர்ந்தபின் இதே சமூகவிரோத குணங்களைத் தங்கள் செய்கைகள் மூலம் பிறரிடத்தில் காண்பிக்கலாம் என்பதில் ஆச்சரியமில்லை. குழந்தைகள் மட்டுமல்ல ஆனால் வளர்ந்தவர்களுங்கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், குறிப்பாக சமீப ஆண்டுகளில், கவனத்தைக்கவரத்தக்க வன்முறை, ஒழுக்கக்கேடு, தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் சித்தரிப்பதைப்போன்று பெண்களைத் தரங்குறைத்தல், போன்றவற்றின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்கிறது. இது குடும்பத்தில் வன்முறை காட்சியை நிச்சயமாக இன்னும் மோசமாக்கிவிடுகிறது. ஓர் ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்ததைப்போல, “வன்முறை காட்சிகளைப் பார்ப்பதற்கும் சண்டையிடும் சுபாவத்திற்கும், ஒரு தெளிவான . . . தொடர்பு இருக்கிறது.”
தனிமையின் விளைவு
வாழ்க்கை இன்று அநேகருக்குப் பொதுமுறையானதும் தனிமையானதுமாக இருக்கிறது. பேரங்காடிகளும் தள்ளுபடி விற்பனைக்கடைகளும் அயலகத்திலேயுள்ள வாடிக்கை மளிகைக் கடைகளை மாற்றீடு செய்திருக்கின்றன. நகர்ப்புற புதுப்பிப்பு, பொருளாதாரப் பிரச்னைகள், வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை குடும்பங்கள் உறுதியற்றவையாய்ப் போகும்படி கட்டாயப்படுத்துகின்றன. நெருங்கிய சமுதாய தொடர்புகள் இல்லாதவர்கள் மத்தியில் குடும்ப வன்முறை மிக உயர்ந்த வீதத்தில் காணப்படுகிறது.
ஜேம்ஸ் C. கோல்மேன், நெருங்கிய உறவுமுறைகள், திருமணம், மற்றும் குடும்பம் (Intimate Relationships, Marriage, and the Family) என்ற தனது புத்தகத்தில் இது இவ்வாறு இருப்பதாக தான் ஏன் நினைக்கிறார் என்பதைப்பற்றி விவரிக்கிறார். மற்றவர்களைத் தவிர்த்துத் தனிமையிலிருப்பது அர்த்தமுள்ள உரையாடலைக் குறைக்கிறது. எனவே துர்ப்பிரயோகம் செய்யும் ஒருவன் தன்னுடைய நிலைமையை உள்ளபடி பார்த்து ஒரு நம்பிக்கைக்குரிய நண்பனிடம் உதவி தேடுவதைக் கடினமாக்குகிறது. தலையிட்டுத்தடுக்கும் சக்தியாக இருக்கக்கூடிய நண்பர்களோ நெருங்கிய உறவினரோ இல்லாதது ஒரு நபர் தன்னுடைய சுயநலத்தை எளிதில் தன் செயலில் வெளிக்காட்ட சாத்தியமாக்குகிறது. ஏனென்றால் அவனுக்கு நெருங்கியவர்களால் அவனுடைய தவறான எண்ணம் தினமும் எதிர்த்துத் தடைசெய்யப்படுவதில்லை. நீதிமொழிகள் 18:1 சொல்லுகிறதுபோல: “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.”
வன்முறை குடும்பத்திலுள்ளவர்களுக்கு உதவி
குடும்பத்தில் வன்முறைக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களின் ஒரு பாகத்தை மட்டுமே நாம் ஆலோசித்தோம். மற்றவையும் உள்ளன. காரணங்களில் சிலவற்றை அடையாளம் கண்டுபிடித்துவிட்ட பிறகு, நாம் இப்பொழுது தீர்வுகளை ஆராயும் தேவையிருக்கிறது. ஒருவர் ஒரு வன்முறை குடும்பத்தில் இருப்பாரேயானால், துர்ப்பிரயோகம் எவ்வாறு நிறுத்தப்படலாம்? பைபிளின் கருத்து என்ன? குடும்பத்தில் வன்முறை எப்போதாவது முடிவடையுமா? பக்கம் 10-ல் உள்ள கட்டுரை இந்தக் கேள்விகளை ஆராயும்.
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
உணர்ச்சிசம்பந்தப்பட்ட வன்முறை
வார்த்தைகளால் கடுந்தாக்குதல்
சரீரப்பிரகாரமான துர்ப்பிரயோகத்தில் தாக்குதல் கைகளைக் கொண்டு; ஆனால் உணர்ச்சிசம்பந்தப்பட்ட துர்ப்பிரயோகத்திலோ தாக்குதல் வார்த்தைகளால் ஆகும். தெரிந்தெடுக்கும் கருவிதான் ஒரே ஒரு வித்தியாசம். நீதிமொழிகள் 12:18 சொல்லுகிறதுபோல: “பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.”
இந்தப் “பட்டயக்குத்துக”ளையும் உட்படுத்தும் உணர்ச்சிசம்பந்தப்பட்ட வன்முறை எவ்வளவு ஆபத்தானது? டாக்டர் சூசன் ஃபார்வட் எழுதுகிறார்: உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னால் “விளைவு அதைப் [சரீரப்பிரகாரமான துர்ப்பிரயோகத்தைப்] போன்றதேயாகும். நீங்கள் அதேபோல் பீதியுற்று இருக்கிறீர்கள், உதவியின்றி உணருகிறீர்கள், மற்றும் அதே அளவு வேதனையிலிருக்கிறீர்கள்.”
துணைவரிடமாக உணர்ச்சிசம்பந்தப்பட்ட வன்முறை: “கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் வன்முறை வெறுமனே சரீரப்பிரகாரமானதல்ல. ஒரு பெரும்பகுதி, ஒருவேளை மிகப்பெரும்பகுதிகூட, வார்த்தைகளாலான மற்றும் உணர்ச்சிசம்பந்தப்பட்ட வன்முறையாகும்,” என்று வெகுகாலமாக பலியான ஒரு பெண்மணி கூறினாள். துர்ப்பிரயோகம், இழிபெயரிட்டழைத்தல், கத்துதல், இடைவிடாமல் குறைகாணுதல், தரக்குறைவாக அவமானப்படுத்துதல், மற்றும் சரீரப்பிரகாரமான வன்முறையின் பயமுறுத்தல்கள் போன்றவற்றை உட்படுத்தலாம்.
சிறுமைப்படுத்தும், தாழ்வுபடுத்தும், அல்லது பயமுறுத்தும், தீயநோக்கோடு சொல்லப்படும் குறிப்புகள் துயரகரமான தீங்கிழைக்கக்கூடும். ஒரு பாறையிலிருந்து வடியும் நீரைப்போல, நற்பெயரைக் கெடுக்கும் மறைமுகக் குத்துப்பேச்சுகள் முதலில் தீங்கற்றதாய்த் தோன்றலாம். ஆனால் விரைவில் தன்மதிப்பு அரிக்கப்பட்டுப்போகிறது. “சரீரப்பிரகாரமான மற்றும் வார்த்தைகளினாலான துர்ப்பிரயோகம், இவை இரண்டில் ஒன்றைத் தெரிந்தெடுக்கவேண்டுமானால், நான் எந்நேரத்திலும் ஓர் அடியையாவது வாங்கிக்கொள்வேன்,” என ஒரு பெண் கூறினாள். “அந்த அடையாளங்களை நீங்கள் பார்க்கமுடியும்,” அவள் விவரித்தாள், “அதனால் மக்கள் உங்களுக்காக வருத்தமாவது தெரிவிப்பார்கள். ஆனால் வார்த்தை துர்ப்பிரயோகமோ உங்களை நிலைகுலைந்துபோகச்செய்யும். காயங்கள் காணக்கூடாதவை. எனவே யாரும் அக்கறை காண்பிப்பதில்லை.”
ஒரு குழந்தையினிடமாக உணர்ச்சிசம்பந்தப்பட்ட வன்முறை: இது ஒரு குழந்தையின் தோற்றம், அறிவு, தகுதி, அல்லது ஓர் ஆளாக மதிப்பு, போன்றவற்றில் இடைவிடா குறைகாணுதலையும், சிறுமைப்படுத்துதலையும் உட்படுத்தலாம். வசைகூறுதல் குறிப்பாக தீங்கிழைப்பதாய் இருக்கிறது. குழந்தைகள் பெரும்பாலும் வசைகுறிப்புகளை அது மனமார சொல்லப்பட்டதா, “விளையாட்டாக” சொல்லப்பட்டதா என வேறுபடுத்திப் பார்க்காமல், அதன் மேலீடான அர்த்தத்தை அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள். குடும்ப மருத்துவர் ஷான் ஹோகன்-டெளனி குறிப்பிடுகிறார்: “குழந்தை புண்படுத்தப்பட்டு உணருகிறது, ஆனால் அனைவரும் சிரிக்கின்றனர், எனவே தன்னுடைய உணர்ச்சிகளை நம்பக்கூடாது என அது கற்றுக்கொள்கிறது.”
இவ்வாறு அநேக காரியங்களில், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரும் கட்டுரையாளருமாகிய தாமஸ் கார்லில் ஒருமுறை இவ்வாறு சொன்னதில் உண்மையிருக்கிறது: “பொதுவாக வசை பிசாசின் மொழி என்பதாகவே நான் இப்பொழுது கருதுகிறேன்; இதன் காரணமாக, நான் வெகு காலமாக அதை மெய்யாகவே ஒதுக்கித் தள்ளிவிட்டிருக்கிறேன்.”
குழந்தை-துர்ப்பிரயோக நிபுணர் ஜாய் பையர்ஸ், கூறுகிறார்: “சரீரப்பிரகாரமான துர்ப்பிரயோகம் ஒரு குழந்தையைக் கொல்லும், ஆனால் மனநிலை மற்றும் நற்குணங்களைக்கூட உங்களால் கொல்லமுடியும். பெற்றோரிடமிருந்து இடைவிடாதுவரும் எதிர்மறை குறிப்புகள் இதைத்தான் செய்யக்கூடும்.” குடும்ப வாழ்க்கை போதகர் (FLEducator) என்ற பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “அடையாளங்காணப்பட்டு மறைந்துபோகக்கூடிய காயத்தைப்போலில்லாமல், உணர்ச்சிசம்பந்தப்பட்ட துர்ப்பிரயோகம் ஒரு குழந்தையின் மனதிலும் ஆளுமையிலும் காணக்கூடாத மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இம்மாற்றங்கள் குழந்தையின் மெய்யியல்பையும் மற்றவரோடு கொள்ளும் செயல்விளைவையும் நிரந்தரமாக மாற்றியமைக்கிறது.”
[பக்கம் 7-ன் படம்]
வன்முறைக்கு உட்படுத்தப்படுதல் ஒரு குழந்தையின் பிற்கால நடத்தையில் ஒரு பலமான செல்வாக்கைக் கொண்டிருக்கிறது