பைபிளின் கருத்து
வன்முறையை கடவுள் எப்படி கருதுகிறார்?
வன்முறை பரவலாக உள்ளது, பல விதங்களிலும் உள்ளது. போரில் மட்டுமல்லாமல், பள்ளியில், வேலை செய்யும் இடத்தில், விளையாட்டு உலகில், கும்பல்கள் மத்தியில், பொழுதுபோக்கில் என பல இடங்களில் வன்முறை தலைதூக்கியுள்ளது; போதைப் பொருள் துஷ்பிரயோகத்தினால்கூட வன்முறை முகம் காட்டுகிறது. அநேக குடும்பங்களிலும்கூட வன்முறை சர்வசாதாரணமாகி விட்டதாக தெரிகிறது. உதாரணமாக, கனடாவில் 12 லட்சம் ஆண்களும் பெண்களும் அண்மையில் ஓர் ஐந்தாண்டு கால பகுதியில் குறைந்தது ஒரு முறையாவது தங்கள் சொந்த மண துணைகளால் வன்முறை தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக சமீப ஆய்வு ஒன்று குறிப்பிட்டது. மனைவிகளை அடிக்கும் ஆண்களில் சுமார் 50 சதவீதமானோர் தங்கள் பிள்ளைகளையும் அடிக்கிறார்கள் என்று வேறொரு ஆய்வு காண்பித்தது.
நிச்சயமாகவே, அப்படிப்பட்ட வன்முறை செயல்களைக் கண்டு பெரும்பாலோரைப் போலவே நீங்களும் அதிர்ச்சி அடையலாம். என்றாலும், இன்றைய பொழுதுபோக்குகள் பெரும்பாலானவற்றில் வன்முறையே முக்கிய அம்சமாக ஆகியுள்ளது. திரைப்படங்களில் வரும் கற்பனையான வன்முறை காட்சிகள் மட்டுமல்லாமல் நிஜ வாழ்வில் நடக்கும் வன்முறையை படம்பிடித்துக் காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாலும் பார்வையாளர் கவரப்படுகின்றனர். குத்துச் சண்டையும் மற்ற வன்முறை விளையாட்டுகளும் அநேக நாடுகளில் விரும்பி வரவேற்கப்படும் நிகழ்ச்சிகள். ஆனால், கடவுள் வன்முறையை எப்படி கருதுகிறார்?
வன்முறையின் நீண்ட வரலாறு
வன்முறைக்கு நீண்ட வரலாறு உள்ளது. பைபிளில் பதிவான, மனிதனின் முதல் வன்முறைச் செயல் ஆதியாகமம் 4:2-15-ல் விவரிக்கப்பட்டுள்ளது. ஆதாம் ஏவாளின் மூத்த மகன் காயீன் பொறாமையால் தன் சகோதரனாகிய ஆபேலை வேண்டுமென்றே கொலை செய்தான். அப்போது கடவுள் என்ன செய்தார்? தன் சகோதரனை கொன்றதற்காக காயீனை யெகோவா தேவன் கடுமையாக தண்டித்தார் என்பதாக பைபிள் விளக்குகிறது.
அந்த சம்பவம் நடந்து 1,500-க்கும் அதிகமான வருடங்களுக்குப் பின், பூமி “கொடுமையினால் [“வன்முறையால்,” பொது மொழிபெயர்ப்பு] நிறைந்திருந்தது” என்று ஆதியாகமம் 6:11-ல் நாம் வாசிக்கிறோம். அப்போது கடவுள் என்ன செய்தார்? வன்முறை நிறைந்த அந்த சமுதாயத்தை ‘அழித்துப் போட’ பூமியின்மீது ஜலப்பிரளயத்தை கொண்டுவர யெகோவா தீர்மானித்தபோது நீதிமானாகிய நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் பாதுகாக்க ஒரு பேழையை கட்டும்படி அவரிடம் கட்டளையிட்டார். (ஆதியாகமம் 6:12-14, 17) ஆனால் அந்தளவு வன்முறையில் ஈடுபட அம்மக்களைத் தூண்டியது எது?
பேய்களின் செல்வாக்கு
கீழ்ப்படியாத தூதர்களாகிய தேவ குமாரர், மனித உருவெடுத்து வந்து, பெண்களை மணமுடித்து, பிள்ளைகளைப் பெற்றதாக ஆதியாகம பதிவு தெரிவிக்கிறது. (ஆதியாகமம் 6:1-4) அவர்களுக்குப் பிறந்தவர்கள் நெஃபிலிம் எனப்பட்டார்கள். அவர்கள் இராட்சதர்களாகவும் பெயர் பெற்றவர்களாகவும் இருந்தார்கள். தங்கள் பேய்த்தன தகப்பன்களின் பாதிப்பால், வன்முறையாக அடாவடித்தனம் செய்கிறவர்களானார்கள். ஜலப்பிரளயத்தால் தண்ணீர் பெருகி பூமியை நிரப்பியபோது, அடாவடித்தனம் செய்த இந்த பொல்லாதவர்கள் மாண்டனர். ஆனால் அந்த பேய்களோ மனித உருவை களைந்து மீண்டும் ஆவி பிரதேசத்துக்கு சென்றுவிட்டனர்.
அப்போது முதல் இந்தக் கலக தூதர்கள் மனிதர்மீது பலத்த செல்வாக்கு செலுத்துவதாக பைபிள் தெளிவாக சொல்லுகிறது. (எபேசியர் 6:12) அவர்களுடைய தலைவனாகிய சாத்தான் ஆதி ‘மனுஷ கொலைபாதகன்’ எனப்படுகிறான். (யோவான் 8:44) ஆகவே பூமியில் சம்பவிக்கும் வன்முறையை பேய்த்தன அல்லது சாத்தானிய வன்முறை என்றழைப்பது தகுந்ததே.
வன்முறையின் கவர்ந்திழுக்கும் திறனைக் குறித்து பைபிள் எச்சரிக்கிறது. நீதிமொழிகள் 16:29 இவ்வாறு சொல்லுகிறது: “கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.” வன்முறை செயல்களை ஏற்றுக்கொள்ள, முன்னேற்றுவிக்க, அல்லது அவற்றில் ஈடுபட அநேகர் இன்று கவர்ந்திழுக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், வன்முறையை சிறப்பித்து காட்டும் பொழுதுபோக்கை அனுபவிக்க கோடிக்கணக்கானோர் ஆசைகாட்டப்பட்டிருக்கின்றனர். இன்றைய சந்ததியாரை விவரிக்க திருப்பாடல்கள் [சங்கீதம்] 73:6-ல் (பொ.மொ.) காணப்படும் வார்த்தைகளை பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். சங்கீதக்காரன் சொல்லுகிறார்: “மணிமாலைபோல் செருக்கு அவர்களை அணி செய்கிறது; வன்செயல் அவர்களை ஆடைபோல மூடிக்கொள்கிறது.”
கடவுள் வன்முறையை வெறுக்கிறார்
வன்முறை நிறைந்த உலகில் கிறிஸ்தவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? யாக்கோபின் மகன்களான சிமியோனையும் லேவியையும் பற்றிய பைபிள் பதிவு நமக்கு சிறந்த வழிகாட்டுதலை தருகிறது. அவர்களுடைய சகோதரி தீனாள், சீகேமிலிருந்த ஒழுக்கம் கெட்டவர்களுடன் கூட்டுறவு வைத்துக் கொண்டாள். இதனால் சீகேமியன் ஒருவனால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானாள். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக சிமியோனும் லேவியும் சீகேமிலிருந்த ஆண்களை ஈவிரக்கமின்றி வெட்டி வீழ்த்தினார்கள். பின்னர் ஆவியால் ஏவப்பட்ட யாக்கோபு தன் மகன்களின் கட்டுக்கடங்காத கோபத்தை பின்வரும் வார்த்தைகளால் சபித்தார்: “சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.”—ஆதியாகமம் 49:5, 6.
இந்த வார்த்தைகளுக்கு இசைவாக, வன்முறையை தூண்டுவிக்கிறவர்களுடனோ அதில் பங்கெடுக்கிறவர்களுடனோ கூட்டுறவு கொள்வதை கிறிஸ்தவர்கள் தவிர்க்கிறார்கள். வன்முறையை தூண்டுவிக்கிறவர்களை கடவுள் வெறுப்பது தெளிவாக தெரிகிறது. “கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது” என பைபிள் குறிப்பிடுகிறது. (சங்கீதம் 11:5) எந்த விதமான கட்டுக்கடங்காத கோபத்தையும்—பேச்சில்கூட வன்முறையையும்—தவிர்க்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.—கலாத்தியர் 5:19-21; எபேசியர் 4:31.
வன்முறை எப்போதாவது இல்லாமல் போகுமா?
பூர்வ தீர்க்கதரிசி ஆபகூக், “இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்” என யெகோவா தேவனிடம் கேட்டார். (அபக்கூக்கு 1:2, பொ.மொ.) ஒருவேளை இதே போன்ற கேள்வியை நீங்களும் கேட்டிருக்கலாம். ஆபகூக்குக்கு யெகோவா பதிலளிக்கையில் ‘துஷ்டனை’ நீக்கிவிடப் போவதாக வாக்குறுதி அளித்தார். (ஆபகூக் 3:13) ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகமும் நம்பிக்கையை அளிக்கிறது. “இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது” என்பதாக கடவுள் அதில் வாக்குறுதி அளித்தார்.—ஏசாயா 60:18.
எல்லா விதமான வன்முறையையும் அதை தூண்டுவிப்பவர்களையும் கடவுள் சீக்கிரமாக பூமியிலிருந்து நீக்கிப்போடுவார் என்று யெகோவாவின் சாட்சிகள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அப்போது, வன்முறையால் நிறைந்திருப்பதற்கு பதிலாக “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஆபகூக் 2:14. (g02 8/08)
[பக்கம் 16-ன் படம்]
ஆபேலை காயீன் கொன்றதே வன்முறையின் தொடக்கம்