உலகத்தைக் கவனித்தல்
சிக்கல் எங்கே தோன்றுகிறது?
பூர்வகாலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் எளிமையானவையாய் இருந்தன என்றும், ஆனால் பின்னர் இயற்கைத் தேர்வினால் அவை காலாகாலமாக அதிகமதிகம் சிக்கலானவையாய் மாறிக்கொண்டேயிருக்கும்படி தூண்டுவிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று அநேக பரிணாமக் கொள்கையினர் ஊகிக்கின்றனர். அண்மைக்கால ஆராய்ச்சிகள் அதிகமான சிக்கலை நோக்கிய அத்தகைய ஒரு முன்னேற்ற தூண்டுவித்தலைக் காண தவறியிருக்கின்றன. டாக்டர் டேன் மக்ஷே, புதைபடிவ உயிரியல் வல்லுநர் ஒருவர், பல்வேறு பாலூட்டிகளின் புதைபடிவ முதுகெலும்புகளை ஆராய்ந்துபார்த்தார்; மற்றொரு ஆராய்ச்சி மெல்லுடலிகளின் புதைபடிவங்களுக்குக் கவனம் செலுத்தியது. இரண்டு ஆராய்ச்சிகளுமே அதிகமான சிக்கலை நோக்கிய அத்தகைய ஒரு பரிணாம முன்னேற்ற தூண்டுவித்தலுக்கான எந்த ஆதாரத்தையுமே காணவில்லை. அதிகமான சிக்கல்களும் பிழைத்திருப்பதற்கான எந்த அனுகூலத்தையும் கொண்டுவருவதாகவும் அவை காண்பதில்லை. தி நியூ யார்க் டைம்ஸ் கூறுகிறபடி, “அத்தகைய போக்குமுறைகளைப்பற்றி எண்ணிப் பழகிப்போன பல உயிரியல் வல்லுநர்களுக்கு,” இந்தக் கண்டுபிடிப்புகள் “ஆச்சரியத்தை உண்டுபண்ணும்,” என வல்லுநர்கள் கூறுகின்றனர். டைம்ஸ் குறிப்பிடுகிறதாவது: “டாக்டர் மக்ஷே சொல்லுகிறபடி, சிக்கலை நோக்கியுள்ள முன்னேற்ற தூண்டுவித்தல்களைப்பற்றிய புரிந்துகொள்ளுதலானது, பெரும்பாலும் ஏதேனும் உயிரியலின் உண்மையின் ஒரு பிரதிபலிப்பைவிட பரிணாமத்தில் ஒரு சில முன்னேற்றத்தைக் காண்பதற்கான விஞ்ஞானிகளுடைய விருப்பத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கலாம்.” (g93 9/22)
உடற்பயிற்சியும் வயதும்
உடற்பயிற்சி செய்யத் துவங்குவது எப்போதாவது தாமதமாகிவிடுகிறதா? சமீபத்தில் கிழக்கத்திய ஐக்கிய மாகாணங்களில் நடத்திய ஓர் ஆராய்ச்சியின் பிரகாரம் அப்படியல்ல. தங்களுடைய வயது என்னவாக இருந்தாலும் “மிதமானளவு சுறுசுறுப்புடன்” அவர்கள் உடற்பயிற்சி செய்தபோது, தங்களுடைய சராசரி ஆயுசுகாலத்தைக் கூட்டினர் என்பதாக 10,000-க்கும் மேற்பட்ட ஆண்களை வைத்து நடத்திய ஒரு சுற்றாய்வு கண்டுபிடித்தது. உடற்பயிற்சி தொடங்கியபோது அதிகபட்ச பலனடைந்தவர்கள் 45 முதல் 54 வயதுக்குட்பட்டவரே. அவர்கள் தங்களுடைய ஆயுசுகாலத்தில் சுமார் பத்து மாதங்களைக் கூட்டினர். 65 முதல் 74 வயதுக்குட்பட்டோர் ஆறு மாதங்களையும், 75 முதல் 84 வயதுக்குட்பட்டோர் இரண்டு மாதங்களையும் கூட்டினர். இவையெல்லாம் சராசரிகள்தான் என்று அழுத்திக்காட்டுகிறார், அந்த ஆராய்ச்சியை நடத்தியவரான டாக்டர் ரால்ஃப் S. பெஃபன்பெர்கர். ஆகவே, சுற்றாய்வு செய்யப்பட்ட சிலர் உடற்பயிற்சியிலிருந்து மற்றவர்களைவிட மிக அதிக நன்மையைப் பெற்றனர். முக்கியமான நன்மை மாரடைப்புகளைத் தவிர்ப்பதில் அடங்கியுள்ளதாகத் தோன்றியது. இருப்பினும், உடற்பயிற்சி செய்தவர்கள் மற்ற காரணங்களால் மரிப்பதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. (g93 9/22)
புலி எலும்புகள்
பண்டைய கிழக்கத்திய மருந்து தயாரிப்பதில் பயன்படுத்துவதற்காக புலி எலும்புகளின் கிராக்கி, குறைந்துகொண்டுவரும் உலக புலித் தொகைக்கு ஓர் அச்சுறுத்தலை விளைவிக்கிறது என்பதாக பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை தி லேன்செட் குறிப்பிடுகிறது. புலிப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்க சர்வதேசிய முயற்சிகள் இருந்தபோதும், ஒயின்களிலும், மருந்துகளிலும், இனிப்புப் பண்டங்களிலும் (தேனுடன் அல்லது பாகுடன் கலந்த மருந்து பொடி) புலி எலும்பு பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1991-ல் மட்டும், ஆசிய நாடு ஒன்று புலி எலும்பு அடங்கியுள்ள 15,079 பெட்டி மாத்திரைகளையும், 5,250 கிலோகிராம் இனிப்புப் பண்டங்களையும், 31,500 பாட்டில்கள் ஒயினையும் ஏற்றுமதி செய்ததாக அறிக்கை செய்யப்பட்டது. உலகமுழுவதும் மீதியிருக்கும் புலிகளின் எண்ணிக்கை சுமார் 6,000 மட்டுமே என்று கணக்கிடப்பட்டுள்ளது. (g93 9/22)
பாலினத்து ஊனம்
“மூன்றாம் உலகில் மிகவும் அடிக்கடி, ஒரு பெண்ணின் வாழ்க்கை வாழத் தகுதியே இல்லாததாக இருக்கிறது,” என்று தொடங்கியது தி உவாஷிங்டன் போஸ்ட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் ஒரு தொடர்வரிசை. போஸ்ட்டின் நிருபர்கள் ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா போன்ற தேசங்களின் பிற்பட்ட பகுதிகளில் உள்ள அநேக பெண்களைப் பேட்டி கண்டனர். அதன் பிறகு “பண்பாடு, மதம், சட்டம் போன்றவை அடிக்கடி பெண்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பறித்தெடுக்கின்றன, மேலும் சிலவேளைகளில் அவர்களை ஏறக்குறைய மனிதரைவிட கீழ்ப்பட்ட நிலைக்குத் தாழ்த்துகின்றன” என்று கண்டுபிடித்தனர். உதாரணமாக, இமாலய கிராமம் ஒன்றில், பெண்கள் வேலையில் 59 சதவீதத்தைச் செய்தனர், நாளொன்றுக்கு 14 மணிநேரம் கடினமாக உழைத்தனர், அடிக்கடி தங்களுடைய சொந்த எடையைவிட 1.5 மடங்குகள் அதிகம் எடையுள்ள சுமைகளைச் சுமந்தனர். “இரண்டு அல்லது மூன்று . . . கருத்தரிப்புகளுக்குப்பின், அவர்கள் தாக்குப்பிடிக்கும் திறனை இழந்து, பலவீனப்பட்டு, முப்பதுகளின் பிற்பகுதியில் முழுபலமிழந்து, வயதானவர்களைப்போல் சோர்வுற்று, விரைவில் மரிக்கின்றனர்,” என ஓர் ஆராய்ச்சி கண்டுபிடித்தது. பெண் குழந்தைகள் பொதுவாகவே பையன்களைவிட குறைவாக போஷிக்கப்பட்டு, பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டு, இளவயதிலேயே வேலைக்கு அனுப்பப்பட்டு, குறைந்த மருத்துவ கவனம் கொடுக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளை செலவுவைக்கும் பாரமாகக் கருதி அநேக தாய்மார்கள் அவர்களைக் கொன்றுவிடுகின்றனர். தென்னிந்தியாவின் கிராமப்புறங்களில், கொதிக்கும் கோழி சூப்பைக் குழந்தையின் தொண்டைக்குள் ஊற்றிவிடுவது, சிசுக்கொலையின் ஒரு பொதுவான முறையாகும் என்று அந்த நிருபர்கள் குறிப்பிட்டனர். அப்படிப்பட்ட குற்றச் செயல்களுக்குத் தண்டனை அளிக்கப்படுகின்றனவா என்று கேட்டபோது, காவல்துறை அதிகாரி ஒருவர்: “அவசர கவனம் தேவைப்படும் அதிக பிரச்னைகள் இருக்கின்றன. வெகு சில சம்பவங்களே எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன. வெகு சிலரே அக்கறை கொள்கின்றனர்,” என்று பிரதிபலித்தார். (g93 9/22)
அத்தியாவசிய சந்திரன்
பூகோளத்தை உயிர்வாழ்வதற்கேற்ற தனித்தன்மை வாய்ந்ததாக்கும் காரணிகளின் ஏற்கெனவே உள்ள முனைப்பான பட்டியலில் வானியல் வல்லுநர்கள் மற்றொன்றையும் சேர்க்கவேண்டியிருக்கும்: சந்திரன். நம்முடைய துணைக்கோள் அலைகளை உருவாக்கி வான்வெளியில் அலங்கார இரவு ஒளி படைப்பதோடு மட்டுமல்லாமல் அதிகத்தைச் செய்கிறது. பிரெஞ்சு வானியல் வல்லுநர்கள் நடத்திய கம்ப்யூட்டர் ஆராய்ச்சிகளின் பிரகாரம், இது பூமியின் சாய்வை (obliquity), அதாவது, அது சுழலும் அச்சின் சாய்வு பாகையைச் சீர்படுத்துவதற்கும் உதவுகிறது. அத்தகைய ஒரு பெரிய துணைக்கோளைக் கொண்டிராத செவ்வாய், காலாகாலமாக தனது சாய்வு பாகையில் 10 முதல் 50 டிகிரிகள்வரை மாறியிருக்கிறது. இந்நிலையற்ற தன்மை துருவ பனிமூடிகள் உருகி பின்னர் மீண்டும் உறைவதோடு ஒருவேளை அழிவுக்கேதுவான சீதோஷ்ணநிலை மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கலாம். கட்டுப்படுத்தும் சக்தியை உண்டுபண்ணும் சந்திரனில்லையெனில், பூமியின் சாய்வு சுமார் 85 டிகிரியளவு மாறியிருக்கக்கூடும் என்று அந்தக் கம்ப்யூட்டர் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தின. இதன் காரணமாக, பிரெஞ்சு வானவியல் வல்லுநர்கள்: “சந்திரன் பூமியின் ஒரு திறம்பட்ட சீதோஷ்ணநிலையைச் சமநிலைப்படுத்தும் பொறியாக (climate regulator) செயல்படுகிறது என ஒருவர் கருதலாம்,” என்று கூறி முடிக்கின்றனர். (g93 9/22)
இல்லாமற்போன பெண்கள்
பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்ஸர்லாந்து, ஐக்கிய மாகாணங்கள் போன்ற முன்னேற்றமடைந்த நாடுகளில், பெண்கள் ஆண்களைவிட 105-க்கு 100 என்ற விகிதத்தில் அதிகம் இருக்கின்றனர். ஆனால் ஆசியாவில் லட்சக்கணக்கான பெண்கள் இல்லாமற்போயிருக்கின்றனர் என்று ஐநா புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. உதாரணமாக, ஆப்கானிஸ்தானமும் வங்காள தேசமும் ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் வெறும் 94 பெண்களையும், இந்தியா 93 பெண்களையும், பாகிஸ்தான் வெறும் 92 பெண்களை மட்டுமே கொண்டுள்ளது. ஒவ்வொரு 100 பெண்பிள்ளைகளுக்கும் ஒன்று மற்றும் இரண்டு வயதுக்கிடையேயுள்ள 114 பையன்கள் இருப்பதாக சீன அரசாங்க தரப்பிலிருந்துவரும் புள்ளிவிவரங்கள் காட்டின. ஏன் இந்த வித்தியாசம்? “பெண்கள் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகளை ஆண்களுக்கிருப்பதைவிட குறைக்கும், அவர்கள் சகிக்கவேண்டிய உயிரை அச்சுறுத்தும் ஓரவஞ்சனையை வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்: பாலின தெரிந்தெடுப்புக் கருக்கலைத்தலும் சிசுக்கொலையும், ஊட்டச் சத்துக் குறைவும் உடல்நல பராமரிப்பும், அதிக எண்ணிக்கையில் கருத்தரித்தலும் முதுகெலும்பு உடையுமளவு கடின உழைப்பும்,” என்று தி உவாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், சில பண்பாடுகளில், மக்கள்தொகை கணக்கெடுக்கும் ஆண்கள் பெண்களை அசட்டை செய்துவிடுகிறார்கள் அல்லது பெண்களோடு பேச அனுமதிக்கப்படுவதில்லை. சில தந்தைமார்கள், தங்களுக்கு மகன்களைவிட மகள்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு தங்களுடைய பிள்ளைகளின் பாலினத்தைப்பற்றி பொய் சொல்லிவிடுகின்றனர். (g93 10/8)
சீனாவின் குறைந்துவரும் பிறப்புவீதம்
சீனாவில் எக்காலத்திலும் பதிவு செய்யப்பட்டதைவிட மிகக் குறைந்த பிறப்புவீத அளவை 1992-க்கான புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன—1,000 ஆட்களுக்கு 18.2 பிறப்புகள்; இது 1987-ல் இருந்த 23.33 பிறப்புகளைவிட குறைவானது என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கையிடுகிறது. 2010-ம் வருடம் வரை அடையமுடியாது என்று எதிர்பார்த்திருந்த இலக்கு நிறைவேற்றப்பட்டது. “காரணம், கட்சியும் அரசாங்க அதிகாரிகளும் எல்லா மட்டங்களிலும் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு அதிக கவனம் செலுத்தி மிகவும் கடும் நடவடிக்கைகளை எடுத்தனர்,” என்று கூறுகிறார் தேசிய குடும்பக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அமைச்சர், பங் பேயூன். அத்திட்டத்தின்கீழ், வட்டார அலுவலர்கள் தங்களுடைய அதிகார எல்லைகளில் பிறப்புக்களைக் குறைக்க தனிப்பட்டவகையில் பொறுப்பாளிகளாக்கப்பட்டனர். அவ்வாறு குறைக்க தவறியவர்கள் தண்டிக்கப்படலாம். அநேகருடைய விஷயங்களில் இது ஏற்கெனவே ஒரு குழந்தை பெற்றெடுத்த பெண்களைக் கட்டாயமாக மலடாக்குதலையும், அனுமதியின்றி பிள்ளை பெற்றெடுத்தவருக்குப் பெரும் அபராதங்களையும் அர்த்தப்படுத்திற்று. கிராமவாசிகளுக்கு அபராதங்களைக் கட்ட முடியவில்லையென்றால், அவர்களுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன அல்லது அடித்துநொறுக்கப்படுகின்றன. அவர்களுடைய வீடுகள் அடிக்கடி இடித்துத் தகர்க்கப்படுகின்றன. சீனாவின் 117கோடி குடிமக்கள் ஏற்கெனவே உலக மக்கள்தொகையின் சுமார் 22 சதவீதத்தை உருவாக்குகின்றனர். (g93 10/8)
கம்ப்யூட்டரால் மொழிபெயர்க்கப்பட்டது
முதன்முறை என்று விவரிக்கப்பட்ட ஒரு சம்பவத்தில், ஜப்பானிலும் ஜெர்மனியிலும் ஐக்கிய மாகாணங்களிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒரு கம்ப்யூட்டர் சமீபத்தில் மொழிபெயர்த்துத் தந்தது. பேசும்போது, கியோடோ, ம்யூனிச், பிட்ஸ்பர்க் போன்ற நகரங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தங்களுடைய பேச்சை மாநாடு மற்றும் விடுதி முன்பதிவுகள் துறையிலிருந்து 550 அனுதின வார்த்தைகளுக்கும் கூடுதலாக 150 விசேஷ பதங்களுக்கும் மட்டும் வரையறுத்துக்கொண்டனர். இந்த வார்த்தைகளை மட்டுமே கம்ப்யூட்டரின் வழித்திட்டமிடும் முறை (program) புரிந்துகொண்டு மொழிபெயர்க்கக்கூடும். விஞ்ஞானிகள் “பல்வேறு நாடுகளிலிருந்து பங்கெடுப்பவர்களிடமிருந்து வரும் மாநாட்டு முன்பதிவுகளைக் கையாண்டு எளிய கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய ஒரு மொழிபெயர்ப்புக் கம்ப்யூட்டரை உருவாக்குவதில் சேர்ந்து ஆராய்ச்சி நடத்திவருகின்றனர்,” என்று ம்யூனிச்சின் ஸூடட்சே ட்ஸைடுங் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. (g93 9/22)
புத்தமதத்தினரின் தேறல்கூடம்
அலைந்து திரியும் தங்களுடைய மந்தையிடம் புத்தமதத்தைத் திரும்பக் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சியில், புத்தமத குருக்கள் ஜப்பானின் ஒசாகாவில் ஒரு தேறல்கூடத்தை (bar) திறந்திருக்கின்றனர். “பழங்காலத்தில், எல்லா வகை ஜனங்களும் கோயில்களில் ஒன்றுகூடிவந்து, புசித்துக் குடிக்கும்போது பேசிக்கொண்டனர். நூற்றுக்கணக்கான வருடங்கள் கடந்துபோனதால், புத்தமதம் மக்களிலிருந்து தனிப்பட்டதாக ஆயிற்று,” என்று குருக்களில் ஒருவர் கூறியதாக ஆஸாஹி ஈவ்னிங் நியூஸ் மேற்கோள் காட்டியது. அவர்களில் பெரும்பாலானோர் இளைஞராக இருக்கும், பதினைந்து குருக்கள் அந்தத் தேறல்கூடத்தில் உபசரிப்பாளராக சுழற்சிமுறையில் சேவைபுரிந்து, வாடிக்கையாளர்களோடு சேர்ந்து குடிக்கின்றனர். “அப்பதத்தின் உண்மையான அர்த்தத்தில் எங்களுடைய தேறல்கூடம் ஒரு கோயிலாகவே இருக்கிறது. இங்கு ஒரு குருவோடு நீங்கள் மனம்திறந்து பேசலாம்,” என்கிறார் அதன் மேலாளர். தூபம் எழும்புகிறது, மதச் சின்னங்கள் சுவரில் தொங்குகின்றன. பின்னணி இசையோ ராக் இசை. (g93 9/22)
உங்கள் இருதயத்திற்குச் சிறிது ஒயின்
சிவந்த திராட்சைமதுவை மிதமான அளவில் குடித்தல் மாரடைப்பின் அபாயத்தைக் குறைக்கலாம். “பிரெஞ்சு முரண்பாடு” என்று சொல்லப்படுவதன் பேரில் விஞ்ஞானிகள் சில காலமாகவே குழப்பமுற்றிருந்தனர். சராசரி பிரெஞ்சு மனிதனின் உணவு இருதய பிரச்னைகளை உண்டாக்க துணைபுரியும் செரிவுற்ற கொழுப்புகளில் குறைந்ததல்லவென்றாலும், தொழில்மயமாக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளில் பிரெஞ்சுக்காரர்கள் இதயத்தமனி நோயால் (coronary heart disease) ஏற்படும் இறப்பு வீதங்களில் மிகக் குறைந்த வீதத்தைக் கொண்டிருக்கின்றனர். தி லேன்செட் என்ற பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிக்கைகளைக் குறிப்பிட்டுக்காட்டிய லா ஃபிகாரோ என்ற பாரிஸ் செய்தித்தாளின்படி, இது பிரெஞ்சுக்காரர்கள் தங்களுடைய உணவுகளோடு பொதுவாக சேர்த்து உட்கொள்ளும் சிவந்த திராட்சைமதுவோடு ஏதாவது தொடர்புள்ளதாய் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சிவந்த திராட்சைமதுவில் அடங்கியிருக்கும், ஃபினால்கள் என்றழைக்கப்படும், அமில கூட்டுப்பொருட்கள், மாரடைப்புகளை ஏற்படுத்தும் கொழுப்புப் படிவுகளால் தமனிகளில் அடைப்பு ஏற்படுத்தாதபடி ஆரோக்கியமற்ற கொழுப்பினி (LDL) என்றழைக்கப்படுபவற்றைத் தடைசெய்வதாகக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஃபினால்கள் ஒயினின் மதுவற்ற ஆக்கக்கூறுகளாகும்; நாளொன்றுக்கு 0.25 லிட்டருக்கு மேல் அதிகரிக்குமானால், மது நன்மையைவிட அதிக கேடுவிளைவிக்கிறது என்று லா ஃபிகாரோ மேலுமாகக் கூறுகிறது. (g93 9/22)