உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 9/8 பக். 28-29
  • உலகைகவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகைகவனித்தல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • விண்வெளியிலுள்ள ரேடியோ தொலைநோக்கி
  • சிறுபிள்ளைகளுக்கு டிவியா?
  • இன்டர்நெட் அடிமை கோளாறு
  • புலி பாதுகாப்புத் திட்டம் தோல்வியடைகிறது
  • பார்வைக்கோ முதியவராக, மரிப்பதோ இளைஞராக
  • மின்னல் அபாயம்
  • முதியோர் மனச்சோர்வு
  • தங்கச் சுரங்கம் வெட்டும் கரையான்கள்
  • செல்லுலார் தொலைபேசி இங்கிதங்கள்
  • ‘அறிவுள்ள திரவங்கள்’
  • புலி! புலி!
    விழித்தெழு!—1996
  • நேப்பாளத்தின் பொக்கிஷங்களாகிய விலங்குகளைப் பார்வையிடுதல்
    விழித்தெழு!—1989
  • இன்டர்நெட் ஞானமாய் உபயோகியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • இன்டர்நெட்—ஏன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 9/8 பக். 28-29

உலகைகவனித்தல்

விண்வெளியிலுள்ள ரேடியோ தொலைநோக்கி

ஜப்பானின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் அண்டு அஸ்ட்ரோநாட்டிகல் சையன்ஸ் சமீபத்தில் எட்டு மீட்டர் விட்டமுள்ள ஒரு ரேடியோ தொலைநோக்கியை விண்வெளியில் செலுத்தியது என்று சையன்ஸ் நியூஸ் அறிக்கையிடுகிறது. இந்தப் புதிய தொலைநோக்கியின் தனித்தன்மை என்னவென்றால், அது பூமியின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள ஏறக்குறைய 40 நிலம்சார்ந்த ரேடியோ தொலைநோக்கிகளுடன் இணைக்கப்பட்டிருப்பதேயாகும். இந்த முறையானது தொலைதூரங்களில் அமைந்திருக்கும் ஒலிவாங்கிகள் விண்வெளி ஆய்வகம் (Very Long Baseline Space Observatory) என்று அழைக்கப்படுகிறது. குவாசர்கள் (quasars) மற்றும் கருந்துளைகள் (black holes) போன்ற விண்ணிலுள்ள ரேடியோ சமிக்கைகளின் ஊற்றுமூலங்களிலிருந்து வரும் ரேடியோ அலைகள், விரிவாக பரவியிருக்கும் இந்த சாதனங்களால் பெறப்பட்டு, ஒரே நிழலுருவம் உண்டாகும்படி ஒன்றாக சேர்க்கப்படுகின்றன. ரேடியோ தொலைநோக்கிகள் மத்தியிலுள்ள தூரம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்தளவு முடிவான நிழலுருவத்தின் பிரிப்புத்திறன் (resolution) அதிகமாக இருக்கும். இந்த தொலைநோக்கியின் நீள்வட்டமான கோளப்பாதை, அதன் நீள்வட்டத்தின் மிகத் தொலைவான இடத்தில் அதை பூமியிலிருந்து சுமார் 20,000 கிலோமீட்டர் தூரம் வரை கொண்டுசெல்லும். கண்ணுக்குப் புலப்படும் ஒளியில் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் பிரிப்புத்திறனைவிட இந்த புதிய விண்வெளி தொலைநோக்கி 1,000 மடங்கு அதிகமான பிரிப்புத்திறனை கொடுக்கிறது. “அந்தளவு பிரிப்புத்திறனில் லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள ஒரு பார்வையாளர் டோக்கியோவிலுள்ள ஒரு அரிசி மணியை தெளிவாக கண்டுணரலாம்” என்று சையன்ஸ் நியூஸ் அறிவிக்கிறது.

சிறுபிள்ளைகளுக்கு டிவியா?

முக்கியமான வேலைகளுக்கு நேரம் கண்டுபிடிப்பதற்காக சிறுபிள்ளைகளையுடைய களைப்படைந்த பெற்றோர், அவர்களை டிவி முன்பாக உட்காரவைக்க விரும்பலாம். ஆனால் பெற்றோர் என்ற ஆங்கில பத்திரிகையின்படி இது குழந்தைக்கு ஆபத்தை கொண்டுவரும். அநேக கார்டூன்கள் உட்பட “வன்முறையான டிவி நிகழ்ச்சிகள், இளம் பார்வையாளர்கள் மத்தியில் அதிகப்படியான வலியத்தாக்கும் இயல்பை ஏற்படுத்தியிருப்பது தெளிவாக இருக்கிறது” என்று அது சொல்கிறது. கூடுதலாக, யேல் பல்கலைக்கழகத்தின் டாரத்தி சிங்கரால் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள், “பள்ளிசெல்லும் வயதிற்குமுன் தொடர்ச்சியாக டிவி பார்க்கும் பழக்கமானது” பின்னர் “கெட்ட நடத்தையோடும், படிக்கும் ஆர்வத்தில் குறைவுபடுவதோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது” என்று காட்டுகின்றன. ஒரு வயது குழந்தைகளை ஒரு நாளில் 30 நிமிடங்களுக்குமேல் டிவி பார்க்க அனுமதிக்கக்கூடாது என சிங்கர் பரிந்துரைக்கிறார். மற்றோரு பிரச்சினை குழந்தை தனியாக டிவி பார்க்கும்போது ஏற்படக்கூடிய விபத்துகளாகும். ஆசிரியர் மில்டன் சென் இவ்வாறு கூறுகிறார்: “கவனிக்கப்படாத, துறுதுறுப்பான சிறுபிள்ளை ஆபத்தில் மாட்டிக்கொள்ள அதிக நேரம் ஆகாது.” நீங்கள் சமையல் செய்யும்போது அல்லது ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும்போது உங்கள் குழந்தையை உங்கள் பார்வைபடும்படி உள்ள ஒரு விளையாட்டுக் கூண்டில் சில பாதுகாப்பான பொம்மைகளைக் கொடுத்து உட்கார வைக்கும்படி பெற்றோர் பத்திரிகை அறிவுரை கூறுகிறது.

இன்டர்நெட் அடிமை கோளாறு

“கம்ப்யூட்டர் சகாப்தத்தின் நவீன பாதிப்பு இன்டர்நெட்டுக்கு அடிமையாதலாக இருக்கலாம்” என்று கனடியன் மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னல் அறிவிக்கிறது. டாக்டர் கிம்பர்லி யங் இன்டர்நெட்டை மிகவும் அதிகமாக பயன்படுத்தும் 496 பேரை சுற்றாய்வு செய்தார்; அவர்களில் 396 பேர் இன்டர்நெட் உபயோகத்திற்கு அடிமைகளாக அடையாளம் காணப்பட்டனர். இன்டர்நெட் அடிமைத்தனத்தின் விளைவுகள் “சமூக தொடர்பின்மை, திருமணத்தில் பூசல், பள்ளியில் தோல்வி, அதிகப்படியான கடன்கள் [மற்றும்] வேலையிலிருந்து நீக்கப்படுதல்” ஆகியவற்றையும் உட்படுத்தும் என்று அந்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. “குடிபோதை அல்லது வலுக்கட்டாயமான சூதாட்டம்போல உண்மையான ஒரு அடிமைத்தனம்”தான் இந்தக் கோளாறு என்று டாக்டர் யங் கூறுகிறார். “வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் அதிக ஆபத்தில் இருக்கிறார்கள்” என்று அந்தப் பத்திரிகை தொடர்ந்து சொன்னது. எவரும் இன்டர்நெட்டால் எளிதில் வசப்படுத்தப்படலாம் என்றாலும், “குறைவான படிப்பறிவுடைய நடுத்தர வயதான பெண்ணே அதிகம் அடிமையாகலாம்” என்று டாக்டர் யங் கூறுகிறார். அபாய அறிகுறிகளில் சில, அதிகரிக்கும் மணிநேரம் ஆன்-லைனில் செலவிடுவது, இன்டர்நெட்டை பயன்படுத்த “முக்கியமான சமூக அல்லது வேலை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை விட்டுவிடுவது” போன்றவை.

புலி பாதுகாப்புத் திட்டம் தோல்வியடைகிறது

1973-ல் இந்தியாவின் தேசீய விலங்கான புலியை அழிவிலிருந்து பாதுகாக்க புலி பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஏற்கெனவே 1,827-க்கு குறைந்திருந்தது. அந்த திட்டம் சர்வதேச அங்கீகரிப்பையும், நல்ல வெற்றியையும் பெற்றது. 1989-ற்குள்ளாக இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையானது 4,000-த்தையும்விட அதிகமாக ஆனது. என்றபோதிலும், இந்தியா டுடேவின்படி இப்போது மீண்டுமாக புலி ஆபத்திலிருக்கிறது. இந்தியாவிலுள்ள புலிகளின் எண்ணிக்கை 3,000-த்திற்கும் குறைவாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒரு புலியையாவது வேட்டையாடும் சட்ட விரோத வேட்டையாடிகளே என்று சிலர் கூறுகின்றனர். புலிக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக புலி பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது அதன் நோக்கத்தை சேவிப்பதாய் தெரியவில்லை. “சட்டவிரோத வேட்டையாடிகளால் அநேக சமயங்களில் துப்பாக்கியால் சுடப்படும் வனக்காவலர், ஊக்கமிழந்தவராக, போதுமான கருவிகள் இல்லாதவராக இருக்கிறார்” என்று அந்த அறிக்கை கூறுகிறது. புலியை பொருத்தவரை “உயிர்வாழ்தல், அழிந்துபோவதற்கு இடமளித்துக் கொண்டிருக்கிறது.”

பார்வைக்கோ முதியவராக, மரிப்பதோ இளைஞராக

பின்வரும் அறிக்கைகள் காட்டுகிற வண்ணம், புகைபிடிப்பது முதிர்வயதடைவதை வேகமாக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். பிரிட்டனின் லாண்செட்-ன்படி நீண்டகாலமாக புகைபிடிப்பவர்களுக்கு இளநரை ஏற்படுவதற்கு நான்கு மடங்கும், வழுக்கையாயிருப்பதற்கு அல்லது வழுக்கை விழுவதற்கு இரண்டு மடங்கும் அதிக சாத்தியம் இருக்கிறது. இதை பற்றி அறிவிப்பதாய் யூசி பெர்க்லே வெல்னஸ் லெட்டர், புகைபிடிக்காதவர்களைவிட புகைபிடிப்பவர்களுக்கு முகத்தில் அதிகமான சுருக்கங்களும் பல் விழுந்துபோவதும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியது. காலமுழுவதும் புகைபிடிப்பவர்கள் 73 வயதை அடைவதற்கு, புகைபிடிக்காதவர்களைவிட பாதியளவு சாத்தியத்தையே கொண்டிருக்கின்றனர் என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் காணப்பட்ட ஒரு சமீபத்திய ஆராய்ச்சியை அந்த அறிக்கை மேற்கோள் காட்டுகிறது. மேலுமாக நல்ல வீட்டுப்பராமரிப்பு (ஆங்கிலம்) என்ற பத்திரிகை, “புகைபிடிப்பவர்களுடன் வாழும் புகைபிடிக்காதவர்கள் இருதய நோயால் பாதிக்கப்படுவதற்கு 20 சதவீதம் அதிக வாய்ப்பு இருக்கிறது” என்று அறிக்கையிடுகிறது.

மின்னல் அபாயம்

“மின்னல் தாக்கி ஜனங்கள் இறப்பது, மக்கள் நினைப்பதைவிட அதிக அடிக்கடி ஏற்படுகிறது” என்று த ஆஸ்டிரேலியன் செய்தித்தாள் அறிவிக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு வருடமும் மின்னல் ஐந்து முதல் பத்து பேரை கொல்லுகிறது, மேலும் 100-க்கும் அதிகமானவர்களுக்கு காயங்களை ஏற்படுத்துகிறது என்று அந்த அறிக்கை விளக்குகிறது. ஏற்படப்போகும் தாக்குதலை பற்றிய எந்த எச்சரிப்பும் இருப்பதில்லை, என்றபோதிலும் “மின்னலால் தாக்கப்படவிருந்த சிலர் தங்கள் மயிர்க்கூச்செறிய உணர்ந்ததாக அறிவித்திருக்கின்றனர்” என்று மெல்போர்னின் வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஃபில் ஆல்ஃபர்ட் கூறுகிறார். இடிமின்னலோடு கூடிய புயலின்போது நீங்கள் ஒரு உறுதியான கட்டடத்திற்குள் அல்லது உலோக பொருட்களிலிருந்து விலகியிருக்கும் உறுதியான மேற்கூரையுடைய வண்டிக்குள் செல்வதன் மூலம், மின்னலால் தாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்று ஆல்ஃபர்ட் பரிந்துரை செய்கிறார்.

முதியோர் மனச்சோர்வு

“முதியவர்கள் மத்தியில் வெளிப்படும் மனச்சோர்வு, இளைஞர் மத்தியில் வெளிப்படுவதிலிருந்து வித்தியாசப்படுகிறது” என்று ஜார்னல் டோ ப்ராசில் அறிவிக்கிறது. வேதனை அல்லது கவலையாக வெளிப்படுவதற்கு மாறாக, அப்படிப்பட்ட மனச்சோர்வு “அறிவாற்றல் சார்ந்த திறமைகள்—நினைவாற்றல், கவனம் செலுத்துதல் மற்றும் சிந்தனை சக்தி—குறைவுபடுவதில் விளைவடைகிறது.” அதுமட்டுமல்ல, ரியோ டி ஜனீரோவின் ஃபெடரல் பல்கலைக்கழக பேராசிரியர் பவுலூ மட்டோஸின்படி “பொருத்தமற்ற விஷயங்கள் குறித்து மிகவும் அதிகமான குற்ற உணர்வை மனச்சோர்வடைந்த வயதானவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் முன்பு செய்த அல்லது அவர்களுக்கு சந்தோஷம் கொடுத்த காரியங்களில் அக்கறை இழந்துவிடுகின்றனர்,” இது பேச்சுத்தொடர்பையும் உட்படுத்தும். இப்படிப்பட்ட அறிகுறிகள் முதிர்வயதின் இயல்பான பாகம் என்று சில சமயங்களில் தவறாக கருதப்படுகின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது. பழக்கவழக்கத்தில் இப்படிப்பட்ட மாற்றங்களை உணருவதற்கும், மனச்சோர்வை கண்டுபிடிப்பதற்கும் “மற்றவர்கள் வயதான குடும்ப அங்கத்தினர்களுடன் தொடர்ந்து கூட்டுறவு கொள்ளவேண்டியது மிக அவசியம்” என்று டாக்டர் மட்டோஸ் கூறுகிறார்.

தங்கச் சுரங்கம் வெட்டும் கரையான்கள்

1984-ல் ஆப்பிரிக்க தேசமாகிய நைஜரில் ஒரு கிராமவாசி தங்கத்தை கண்டுபிடித்தார். அதைத் தொடர்ந்த தங்க வேட்டையானது அநேக தேசங்களிலிருந்த சுரங்க தொழிலாளிகளை அந்த பகுதிக்கு அழைத்து வந்தது. கனடாவின் நிலவியல் நிபுணரான கிரிஸ் கிலீசன், பூர்வ ஆப்பிரிக்க நாகரிகங்கள் கரையான் புற்றுகளை வைத்து தங்கம் இருந்த இடங்களை கண்டுபிடித்தன என்பதை நினைவுகூர்ந்தார். 1.8 மீட்டர் உயரமும், 1.8 மீட்டர் விட்டமும் கொண்ட பெரிய புற்றுகளை கட்டும் ஒருவகை கரையான்கள் நைஜரில் காணப்படுகின்றன. தண்ணீரை தேடி கரையான்கள் தோண்டிக்கொண்டே—சில சமயங்களில் 75 மீட்டர் ஆழம் வரைகூட—செல்லும்போது இந்த புற்றுகள் பெரிதாகும் என்று நேஷனல் ஜியோக்ரஃபிக் பத்திரிகை விளக்குகிறது. தான் எங்கே தோண்டவேண்டும் என காட்டும் என்ற நம்பிக்கையில் கிலீசன் அநேக புற்றுகளிலிருந்து மண் மாதிரிகளை எடுத்தார். பெரும்பாலான மாதிரிகளில் தங்கம் இல்லை, ஆனால் சிலவற்றில் இருந்தது! “தங்கத்தின் தடயம் காணப்பட்ட எந்த புற்றிலும், முழுவதுமாக தங்கம் இருந்தது” என்று அவர் கண்டார். என்ன நடக்கிறது என்றால், தண்ணீரை தேடி கரையான்கள் தோண்டும்போது அவை எதிர்ப்படும் எதுவும் மேலே கொண்டுவரப்படுகிறது, தங்கம் உட்பட.

செல்லுலார் தொலைபேசி இங்கிதங்கள்

ஃபார் ஈஸ்டர்ன் எக்கனாமிக் ரிவ்யூவின்படி போர்டபிள் செல்லுலார் தொலைபேசிகளின் வருகையானது சில பழங்கால இங்கிதங்களின் தேவையை வலியுறுத்தியிருக்கிறது. ஹாங்காங் நாட்டின் வியாபார ஆலோசகரான டீனா லியூ, மறுமுனையில் பேசிக்கொண்டிருப்பவருக்கும் உங்கள் அருகிலிருக்கும் மற்றவர்களுக்கும் மரியாதையும் கவனமும் செலுத்தும்படி உற்சாகப்படுத்துகிறார். தொலைபேசியில் பேசும்போது சப்தமாக இல்லாமல் தெளிவாகவும், தொலைபேசியை பயன்படுத்தும்போது சாப்பிடவோ குடிக்கவோ கூடாது எனவும் அவர் ஆலோசனை கூறுகிறார். வியாபார கூட்டங்களின்போது ஒருவர் பெரும் தொலைபேசி அழைப்புகளை குறைவாக வைப்பதையும், ஆஸ்பத்திரிகள், நூலகங்கள் மற்றும் ஆடிட்டோரியங்களில் இருக்கும்போது வரும் அழைப்புகளை வேறொரு இடத்திற்கு மாற்றிவிடுவது அல்லது சப்தமில்லா அதிர்வு சமிக்கையை பயன்படுத்துவது போன்றவற்றையும் லியூ பரிந்துரை செய்கிறார். சமூக நிகழ்ச்சிகளின்போது தொலைபேசி அழைப்புகளை கொண்டிருப்பது, நண்பர்கள் அல்லது உறவினர்களை புறக்கணிக்கப்பட்டவர்களாக உணரும்படி செய்யும். ஹோட்டலில் உணவருந்துவதை பற்றி லியூ கூறுவதாவது, “ஒரு பெண்ணோடு காதல் சந்திப்பில் இருக்கும் ஒரு வாலிபன் தொலைபேசியில் பேசினால், அவன் மலர்கள் கொடுத்து ஏற்படுத்திய நல் அபிப்பிராயம் மறைவதற்குள் அவன் பேச்சை முடித்துக்கொள்வது நல்லது.”

‘அறிவுள்ள திரவங்கள்’

துகள்களைக்கொண்ட சில திரவங்களில் மின்சாரம் செலுத்தப்படும்வரை, அந்தத் துகள்கள் சிறிய சங்கிலிகளாக ஒன்றுசேர்ந்து, அத்திரவத்தை அதிக பாகுத்தன்மை உடையதாக்கும். இந்த நிகழ்ச்சி, 1940-ல் இதை கண்டுபிடித்தவரான டாக்டர் டபிள்யு. எம். வின்ஸ்லோவின் நினைவாக வின்ஸ்லோவ் விளைவு என்று பெயரிடப்பட்டது. அப்போதிலிருந்து மோட்டார் வாகன தொழில்துறையும் மற்றவையும், இப்போது 93 வயதாக இருக்கும் டாக்டர் வின்ஸ்லோவ் உட்பட, இப்படிப்பட்ட ‘அறிவுள்ள திரவங்களின்’ நடைமுறை உபயோகத்தை பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகின்றனர். ஐக்கிய மாகாணங்களிலுள்ள மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், உருக்கி வார்க்கப்பட்ட மில்க் சாக்லேட் ‘அறிவுள்ள திரவங்களின்’ சில குணங்களை கொண்டிருக்கிறது என்று அறிந்திருந்தார்கள். எதிர்பார்த்தபடியே ஒரு சமீபத்திய ஆராய்ச்சியில், உருக்கப்பட்ட சாக்லேட் துண்டு சக்திவாய்ந்த மின்சார ஆற்றல் எல்லையில் வைக்கப்பட்டபோது, ஏறக்குறைய உடனடியாக விறைப்பாக, ஓரளவு திண்மமாக ஆனது. மற்றொரு ‘அறிவுள்ள திரவமாகிய’ மண்ணெண்ணெயில் மிதக்கும் மக்காச்சோள மாவு, செலுத்தப்படும் மின்சக்தியின் அளவை பொறுத்து, பால் மற்றும் வெண்ணெயின் அடர்த்தி நிலைகளுக்கிடையில் மாறுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்