வாழைப்பழம்—குறிப்பிடத்தக்க ஒரு கனி
ஹாண்டுராஸிலுள்ள விழித்தெழு! நிருபர்
கிரேக்கர்களும் அரேபியர்களும் அதை “குறிப்பிடத்தக்க ஒரு கனி மரம்” என்றழைத்தனர். பொ.ச.மு. 327-ல், இந்தியாவில் மகா அலெக்ஸாந்தருடைய படைகளால் அது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பழங்கதையின்படி, இந்திய சாதுக்கள் அதன் நிழலில் ஓய்வெடுத்து, அதன் கனியை சாப்பிட்டனர். எனவே, அது “ஞானிகளுடைய கனி” என்றழைக்கப்பட்டிருக்கிறது. அது என்ன? வேறெதுவும் அல்ல, அது வாழைப்பழமே!
ஆனால் ஆசியாவிலிருந்து கரிபியனுக்கு வாழைப்பழம் எப்படி வந்தது? பூர்வீக அரேபிய வியாபாரிகள் வாழை மரத்தின் வேர்களை ஆசியாவிலிருந்து ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரைக்குக் கொண்டுசென்றனர். 1482-ல், போர்ச்சுகீஸிய ஆய்வுப் பயணிகள் அங்கு வாழை மரம் வளருவதைக் கண்டுபிடித்தனர். அவற்றின் வேர்கள் சிலவற்றையும் அதன் ஆப்பிரிக்கப் பெயராகிய பனானா என்பதையும் எடுத்துக்கொண்டு, கானரித் தீவுகளிலுள்ள போர்ச்சுகீஸிய குடியேற்ற நாடுகளுக்குச் சென்றனர். அடுத்த படியானது அட்லான்டிக்கைக் கடந்து மேற்கத்திய அரைக்கோளத்திற்குப் பயணம் செய்வதாக இருந்தது. அது 1516-ல், கொலம்பஸின் கடற்பயணங்களுக்குச் சில ஆண்டுகளுக்குப் பின்பாக இருந்தது. ஸ்பானிய மிஷனரிகள் வாழை மரத்தை தீவுகளுக்கும் கரிபியனின் வெப்பமண்டல நிலப்பரப்புக்கும் கொண்டுசென்றனர். இவ்வாறாக, இந்தக் குறிப்பிடத்தக்க கனி மரம் மத்திய மற்றும் தென் அமெரிக்காவை அடைவதற்கு உலகைச் சுற்றி பாதிதூரம் பயணப்படவேண்டியதாயிற்று.
1960-ல், வாழைப்பழம் கரிபியன் தீவுகளிலிருந்து நியூ இங்கிலாந்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது என்பதாகக் கூறப்படுகிறது. தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் முன் அறிந்திராத அந்தப் பழத்தை வேகவைத்தனர், ஆனால் அதை விரும்பவில்லை. இருப்பினும், தென் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளிலும் வேறுசில வெப்பமண்டல நாடுகளிலும், லட்சக்கணக்கான மக்கள் வாழைக்காயை வேகவைத்து அவற்றை உவகையோடு சாப்பிடுகின்றனர்.
வாழைத் தோப்புகள்
1870-க்கும் 1880-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியம் பல்வேறுபட்ட ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க வியாபாரிகளுக்கு அக்கறையூட்ட ஆரம்பித்தது. அவர்கள் கம்பெனிகளை ஏற்படுத்தி, ஃபிங்கா என்றழைக்கப்பட்ட வாழைத் தோப்புகளை நட்டனர். இந்த நோக்கத்திற்காக, வேலையாட்களும் பொறியாளர்களும் காடுகளை அழிக்கவும், சாலைகளை அமைக்கவும், ரயில் பாதை மற்றும் தகவல்தொடர்பு முறைகளை ஏற்படுத்தவும் வேண்டியதாயிற்று. கிராமங்களில் வீடுகள், பள்ளிகள், வேலையாட்களுக்காகவும் அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் மருத்துவமனைகள் ஆகியவையும்கூட கட்டப்பட்டன. உலகமுழுவதும் வாழைப்பழங்களை அனுப்புவதற்காக நீராவிக் கப்பல் வழித்தடங்களும் நிறுவப்பட்டன. தொழில்துறை வளர்ந்தபோது, வாழை மரம் வளரக்கூடிய நாடுகளிலுள்ள அதிகமான நிலம் கம்பெனிகளால் வாங்கப்பட்டது.
இன்று, வட அமெரிக்காவில் உண்ணப்படுகிற 90 சதவிகிதத்திற்கும் அதிகமான வாழைப்பழங்களை லத்தீன் அமெரிக்க தேசங்கள் அனுப்பிவைக்கின்றன. பிரேஸில் முன்னணியில் இருக்கும் ஏற்றுமதி நாடாக விளங்குகிறது. இந்தப் பட்டியலில் ஹாண்டுராஸ் ஆறாவது வரிசையில் இருக்கிறது, ஆண்டொன்றுக்கு சுமார் நூறுகோடி கிலோகிராம் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்கிறது.
வாழை எவ்வாறு வளருகின்றன
வாழை ஒரு மரமல்ல. அதில் மரக்கட்டை நார்கள் இல்லை. பதிலாக, ஒரு பனை மரத்தைப்போல தோன்றும் மிகப் பெரிய ஒரு செடியினமாக இருக்கிறது. மரத்தின் வளர்ச்சியையும் அளவையும் சீதோஷ்ணமும் மண்வளமும் தீர்மானிக்கின்றன. வாழை மரங்கள் வெப்பமான, ஈரப்பதமான சீதோஷ்ண நிலைகளில் மிக நன்றாக வளர்கின்றன. நல்ல வடிகால் வசதியுடைய வளமான, களிமண் நிறைந்த நிலத்தில் செழித்தோங்குகின்றன. மிக மேம்பட்ட வளர்ச்சிக்கு, எந்தக் கால கட்டத்திலும் வெப்பநிலை 20 டிகிரி செல்ஸியஸிற்குக் குறையக்கூடாது.
பயிரை வளர்க்க ஆரம்பிப்பதற்கு, பக்கக் கன்றுகள் என்றழைக்கப்படுகிற தூரடிகளை நடவேண்டும். இவை முதிர்ந்த கன்றுகளின் அடிநிலத் தண்டுகளிலிருந்து வெட்டியெடுக்கப்படுகின்றன. ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பாகமான ஆழமும் 5 மீட்டர் தள்ளியும் குழிகள் தோண்டப்படுகின்றன. மூன்றுமுதல் நான்கு வாரங்களில், பசுங்கிளைகள் தோன்றுகின்றன, இறுக்கமாகச் சுருட்டப்பட்ட பச்சிலைகள் முளைத்து, அவை வளருகையில் விரிகின்றன. வாழை மரங்கள் மிக வேகமாக, ஒரு நாளைக்கு சுமார் மூன்று சென்டிமீட்டர் வளருகின்றன. பத்து மாதங்கள் கழிந்தப் பின்பு, ஒரு மரம் முழு வளர்ச்சியடைந்தாக ஆகிறது. அது மூன்று முதல் ஆறு மீட்டர் உயரமாக நிற்கிற ஒரு பனை மரத்தைப்போல இருக்கிறது.
முழு வளர்ச்சியடைந்த மரத்தில், சிறிய ஊதா நிற இலைகளைக்கொண்ட ஒரு பெரிய அரும்பு வளர்கிறது. இது கட்டாக சுருண்டிருக்கிற இலைகளிலிருந்து வளருகிறது. பின்பு கொத்தான சிறுபூக்கள் தோன்றுகின்றன. ஒரு மரம் ஒரேவொரு குலையையே தள்ளுகிறது, அது 30-லிருந்து 50 கிலோகிராம் வரையுள்ள எடையுடன் இருக்கிறது. மேலும் 9-க்கும் 16-க்கும் இடையிலான வாழைச் சீப்புகளைக் கொண்டிருக்கிறது. ஒரு கை என்றழைக்கப்படுகிற ஒவ்வொரு சீப்பும், 10 முதல் 20 வாழைப்பழங்களை கொடுக்கிறது. இதனால் வாழைப்பழங்கள் விரல்கள் என்றழைக்கப்படுகின்றன.
முதலாவது வாழைப்பழங்கள் கீழ்நோக்கி, நிலத்தை நோக்கியவாறு வளருகின்றன. பின்பு வெளிப்புறமாகவும் மேல்நோக்கியும் நன்கு அறியப்பட்ட வாழைப்பழ வளைவாக உருவாகின்றன. வளர்ச்சியின்போது கொடுக்கப்படும் ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் பற்றியதென்ன? ஒரு வேலையாள் காலாகாலத்தில் வந்து அரும்பை நீக்கிவிடுகிறார். இதனால் மரத்திலிருந்து வருகிற சத்துக்கள் அனைத்தையும் வாழைப்பழங்கள் பெறுகின்றன. பின்பு பூச்சிகளிலிருந்து பாதுகாப்பதற்காக பழத்தை பாலிஎத்திலீன் பையால் அவர் மூடிவிடுகிறார். வாழைப்பழங்கள் மேல்நோக்கி வளர்ந்து மிகக் கனமானதாக ஆகிறபடியால், காற்று அல்லது பழத்தின் சுமை அதைச் சாய்ப்பதிலிருந்து தடுப்பதற்காக, மரமானது அருகிலுள்ள மரங்களின் அடியோடு கட்டப்படுகிறது. கடைசியாக, அந்த உறையோடு ஒரு வண்ண ரிப்பன் கட்டப்படுகிறது. அறுவடைக்குப் பழம் எப்போது தயாராய் இருக்கும் என்பதை அது குறிக்கிறது.
ஒவ்வொரு நாளும், மரங்களின் இலைகளின்மீது மருந்து தெளிப்பதற்காக விமானங்கள் தோப்புகள்மீது பறக்கின்றன. இது மூன்று முக்கியமான நோய்களிலிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. ஒன்று பனாமா நோய், அதன்மூலம் பூஞ்சைகள் சில மரங்களை அழித்துவிடுகின்றன. ஆனால், அதை எதிர்க்கக்கூடியவற்றால் இவை மாற்றீடுசெய்யப்படுகின்றன. மற்றொன்று பாக்டீரியாவினால் ஏற்படுகிற மாகோ நோயாகும். பாதிக்கப்பட்ட மரங்களையும் குறிப்பிட்ட சில நோயைப் பரப்புகிற பூச்சிகளைக் கவருகிற பூக்களையும் களைந்துபோடுவதன்மூலம் இது கட்டுப்படுத்தப்படுகிறது. அடுத்ததாக சிகடோகா என்ற நோய் இருக்கிறது. அது மரத்தின் இலைகளை அழித்துவிடுகிறது, ஆனால் வெகுசீக்கிரத்தில் இரசாயனத் தெளிப்பான்களைப் பயன்படுத்தினால் வாழைப்பழங்களைப் பாதிப்பதில்லை. வாழை மரங்களுக்கு நிறைய தண்ணீர் தேவை, இது நீர்ப்பாசன வசதி மற்றும் அதிகழுத்தமுள்ள தெளிப்பு முறைகள்மூலம் அளிக்கப்படுகிறது. புற்கள் மற்றும் களைகளிலிருந்தும்கூட தோப்புகள் பாதுகாக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிடலாம்.
தோப்பிலிருந்து உங்களுடைய மேஜை வரை
வாழைப்பழங்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன என்பதை ரிப்பனின் நிறம் குறித்துக்காட்டும் சமயத்தில், அறுப்பதற்கு சரியான அளவுடன் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவை முதலாவதாக அளவெடுக்கப்படுகின்றன. மற்றொரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவென்றால், வாழைப்பழங்கள் மரத்திலேயே பழுக்கும்படி விடப்படுவதில்லை; உள்ளூரில் உண்பதற்காகக்கூட அவ்வாறு செய்யப்படுவதில்லை. இது ஏன்? ஏனென்றால் அவற்றினுடைய சுவையை அவை இழந்துவிடும். பயிரை எப்பொழுது அறுவடை செய்வது என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்பாக, ஏற்றுமதிசெய்வதற்கான தூரத்தையும் எந்தவிதமான வாகனம் என்பதையும் சிந்திக்கவேண்டும். பின்பு ஒரு வேலையாள் வெட்டுக்கத்தியால் குலைகளை வெட்டுகிறார், பின்பு பேக்செய்யும் (packing) தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன. அறுவடைக்குப் பின்பு வாழை மரம் என்ன செய்யப்படுகிறது? அதனிடத்தில் வளருகிற புதிய மரங்களைச் செழிப்பாக்க அது வெட்டப்படுகிறது.
பேக்செய்கிற தொழிற்சாலையில், வாழைப்பழங்கள் கழுவப்படுகின்றன. நசுங்கிய எந்தப் பழமும் நீக்கப்படுகிறது. அது வேலையாட்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்களால் உண்ணப்படுகிறது. சிறிய வாழைப்பழங்கள் சுவையூட்டுவதற்காகவும் குழந்தை உணவிற்காகவும் பயன்படுத்தப்படும். மிகச் சிறந்த வாழைப்பழங்கள் ஒரு பெட்டியில் 18 கிலோகிராம் அளவாக பேக்செய்யப்பட்டு, குளிர்சாதன வசதிசெய்யப்பட்ட ரயில்களிலும் கப்பல்களிலும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
துறைமுகத்தில், பழத்தின் தரமானது பரிசோதிக்கப்பட்டு, அதன் வெப்பநிலை அறியப்படுகிறது. ஒருமுறை வெட்டப்பட்ட பிறகு, சந்தையை சென்றடையும்வரை அந்தப் பழம் காயாக இருக்கவேண்டும். வாழைப்பழம் அழுகிப்போகக்கூடிய பொருளாகையால், 10 முதல் 20 நாட்களுக்குள்ளாக அது எடுக்கப்பட்டு, கப்பலில் ஏற்றப்பட்டு, கடைகளில் விற்கப்படவேண்டும். பழம் பழுத்துவிடுவதை தவிர்ப்பதற்காக, அது 12 முதல் 13 டிகிரி செல்ஸியஸில் குளிர்ந்த நிலையில் வைக்கப்படுகிறது. நவீன போக்குவரத்து சாதனத்தைக்கொண்டு, வாழைப்பழங்கள் மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து கனடா மற்றும் ஐரோப்பா வரை உள்ள தூரமுள்ள இடங்களுக்கும் எந்தப் பிரச்னையுமில்லாமல் அனுப்பப்படலாம்.
நடைமுறை மதிப்பும் ஊட்டச்சத்தும்
வாழைப்பழங்களில் நூற்றுக்கணக்கான அல்லது அதற்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. குட்டையான வாழைப்பழம் பொதுவான வகையாகும். இது முக்கியமாக ஐரோப்பா, கனடா, ஐக்கிய மாகாணங்கள் ஆகிய இடங்களுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகின்றன. ஏற்றுமதிக்கான மிகவும் மெல்லிய தோலையுடைய சற்று சிறிய வகைகளை, ஹாண்டுராஸில் ஏராளமாகக் காணலாம். இவை மான்ஸானா (ஆப்பிள்) என்றும் ரெட் ஜமைகா என்றும் அறியப்படுகின்றன.
வாழை இலைகளில் பயனுள்ள நார்ப் பொருட்கள் அடங்கியுள்ளன, இவை வெப்பமண்டல தேசங்களில் பல்வேறுபட்ட நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. திறந்தவெளி சந்தையை பார்வையிடும்போது, சூடான டமேல்களைச் (tamale) சுருட்டிக் கொடுப்பதற்காக தெருவில் இந்த இலைகள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை ஒருவர் அடிக்கடி காணலாம். இது பல்வேறு தேசங்களில் மிகப் பிரபல்யமாக இருக்கிற உணவாகும்.
ஹாண்டுராஸிலுள்ள மக்கள் அநேகர் தங்களுடைய சாப்பாட்டுடன் வாழைப்பழத்தைச் சாப்பிட விரும்புகிறார்கள். ஹாண்டுராஸின் வடக்கு கடற்கரையோரத்திலுள்ள ஒரு சுவையான உணவு மாச்சூகா என்று அழைக்கப்படுகிறது. அதைத் தயார்செய்வதற்கு, பழுக்காத வாழைப்பழம் செக்கினால் கூழாக்கப்படுகிறது. அதோடு வாசனைப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அந்தக் கலவை நண்டுடன் தேங்காய் எண்ணெயில் சமைக்கப்படுகிறது.
ஐக்கிய மாகாணங்களில், வருடத்திற்கு 1,100 கோடி வாழைப்பழங்கள் சாப்பிடப்படுகின்றன. பேரளவானவை கனடாவுக்கும் பிரிட்டனுக்கும் ஐரோப்பாவின் மற்ற தேசங்களுக்கும் செல்கின்றன. இந்தப் பழத்தை உண்பதில் ஊட்டச்சத்துக்குரிய நன்மைகள் என்ன இருக்கின்றன? வாழைப்பழங்களில் வைட்டமின்கள் எ மற்றும் சி, கார்போஹைட்ரேட்டுகள், பாஸ்பரஸ், பொட்டாஷியம் ஆகியவை அதிகளவில் இருக்கின்றன.
வாழைப்பழங்களில் மிக ஏராளமான பயன்கள் இருக்கின்றன! சிற்றுண்டி, கூலவகை தானிய உணவுகள், பழரசம், பை பலகாரங்கள் (pie), கேக்குகள், மேலும் வாழைப்பழ துண்டுகளுக்கிடையில் ஐஸ் கிரீம் வைக்கப்பட்ட பிரபலமான பழவகை உணவு ஆகியவற்றில் அது இருக்கிறது. ஆனால் நீங்கள் அடுத்தமுறை பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுகையில், அதனுடைய குறிப்பிடத்தக்க பண்புகளைப்பற்றி சிந்தியுங்கள். இந்தப் பழம் அதனுடைய சொந்த உறையைக் கொண்டிருக்கிறது. இதில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் ஏராளாமாக இருக்கின்றன. ஆம், வாழைப்பழம் உங்களுடைய மேஜையை அடைவதற்கு உலகத்தின் பாதிதூரத்தைக் கடந்து வந்திருக்கலாம்.