உவகையூட்டும் —சர்வதேச பழம் ஒன்று
மெக்ஸிகோவிலுள்ள விழித்தெழு! நிருபர்
கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் மற்றும் அவருடைய குழுவினர்தாம், 1493-ல் மேற்கு இந்தியத் தீவுகளில் ஆய்வுப்பயணம் செய்கையில் இந்தப் பழத்தை சுவைத்த முதல் ஐரோப்பியர்களாக ஒருவேளை இருக்கலாம். இது ஸ்பெய்ன் அரசருக்கு அனுப்பப்பட்டது, அவரும்கூட அதன் சுவையால் உவகையடைந்தார். மாலுமிகள் அமெரிக்காக்கள் முழுவதும் இதை பிரபலமாக்கினர், 1548-ல் பிலிப்பீன்ஸ் தீவுகளுக்குப் பயிரிடுவதற்காக கொண்டுசென்றார்கள்.
பிறகு, சுமார் 1555-ல் இந்த உவகையூட்டும் பழம் பிரான்ஸுக்குப் பயணமானது. 1700-களுக்குள்ளாக சில ஐரோப்பிய அரசர்களின் மேசைகளில் விலையுயர்ந்த பழமாக ஏற்கெனவே பெருமையோடு காட்சியளித்தது. இது அவ்வளவு பிரபலமானதால், எஞ்சிய ஐரோப்பாவிலும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலும் பிறகு பரவியது. தற்போது இது முக்கியமாக தாய்லாந்து, பிரேஸில், பிலிப்பீன்ஸ், மெக்ஸிகோ, ஹவாய் மற்றும் ஏற்ற சீதோஷ்ணமும் மண்ணும் நிலவும் சில நாடுகளிலும் அறுவடை செய்யப்படுகிறது.
இவ்வாறாக, சுமார் ஐந்து நூற்றாண்டுகள் பயணத்தின்போது, தன் தாயகமாகிய அமெரிக்காவிலிருந்து வெகு தூரத்திலுள்ள இடங்களை அடைந்தது. நாம் பேசிக்கொண்டிருக்கும் பழத்தைப்பற்றி உங்களுக்குத் தெரிகிறதா? அதுதான் உவகையூட்டும் அன்னாசி.
இது மெக்ஸிகோவில் மாட்ஸாட்லி என்றும் கரிபியனில் ஆன்னணா என்றும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் நாணா என்றும் அறியப்பட்டது. இதனுடைய தோற்றம் பைன் மரத்தின் பழத்தைப்போல் (குவி செதிற்கூடு) காணப்படுவதால் ஸ்பானியர்கள்தாம் இதை பின்யா என்று அழைத்திருப்பார்கள் என தோன்றுகிறது. இன்று இது ஸ்பானிய மொழியில் பின்யா அல்லது ஆன்னணா என்று அறியப்படுகையில் தமிழில் அன்னாசி என்று அறியப்படுகிறது. பெயர் எதுவாக இருந்தாலும், இதை சுவைத்தவர்கள் இதன் சுவை உவகையூட்டும் என்பதை ஒத்துக்கொள்வர்.
அன்னாசியும் அதன் செடியும்
அன்னாசி பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது? இது நீண்ட கோள வடிவத்தில் செடியின் மத்தியில் அமைந்திருக்கிறது. பழமானது கெட்டியான செதிற்தோலால் மூடியிருக்கிறது, அதன் உச்சியில் எண்ணற்ற சிறிய மற்றும் கொஞ்சம் கெட்டியான பசும் இலைகளால் ஆன மேற்பகுதி இருக்கிறது. அன்னாசி செடியும் அதன் காம்பிலிருந்து பல திசைகளில் வளரும் நீண்ட கத்தி-வடிவ இலைகளைக் கொண்டுள்ளது. செடி 60-லிருந்து 90 சென்டிமீட்டர் உயரம் வரை வளர்கிறது, பழத்தின் எடை இரண்டு முதல் நான்கு கிலோகிராம் வரை இருக்கும்.
அது பிஞ்சாக இருக்கையில் பைன் மரத்தின் குவி செதிற்கூடு போலவே இருக்கிறது மற்றும் தோல் ஊதா நிறத்திலிருக்கிறது. அது முற்றியதும் பச்சை நிறமாக மாறுகிறது, அது கனிந்தவுடன் சற்றே மஞ்சளான-பச்சையாகவும் சற்றே பசுமையான-ஆரஞ்சாக அல்லது சற்றே சிவப்பாக பொதுவாக மாறும். பழச்சதை கனிந்திருக்கும்போது அது இனிய மணத்தைக் கொண்டிருக்கும், அதாவது வாசனையோடு சாறு நிறைந்திருக்கும்.
எவ்வாறு பயிரிடப்படுகிறது?
அன்னாசியை நீங்கள் எவ்வாறு பயிரிடுவீர்கள்? முதலாவதாக, வெப்பமண்டல சீதோஷ்ணம் நிலவும் இடங்களில் காணப்படும் மண்ணைப்போன்று—மணலாகவும் கரிமப் பொருட்கள் நிறைந்ததாகவும் அமிலத்தன்மையுள்ளதாகவும் தாது உப்பு குறைந்ததாகவும் அதிகளவு ஈரப்பதம் உடையதாகவும்—இருப்பது அவசியம். பிறகு, பழத்திற்கு அடியில் சுற்றி வளரும் சிறு கொப்புகளில் ஒன்றை நடவேண்டும், இவை பழம் அறுவடை செய்தபின்னர் செடியிலேயே விடப்பட்டிருக்கும். அல்லது அன்னாசியின் மேற்பகுதியையும்கூட வெட்டி செடியாக நடலாம். ஆயினும் இதன் கனியைச் சுவைத்து மகிழ ஒருவர் பொறுமையுடன் இருக்கவேண்டும், ஏனென்றால் அது முற்றி அறுவடைக்குத் தயாராக ஒரு வருடம் ஆகும்.
அன்டோனியோ, 25 வருடங்களுக்கும் மேலாக அன்னாசிகளைப் பயிரிட்டுக்கொண்டிருக்கும் அவர் தான் கையாளும் குறிப்பிட்ட உத்தியை விளக்குகிறார்: “பிஞ்சு வளர ஆரம்பிப்பதற்கு முன்பே செடியின் மத்தியில் சிறிதளவு கால்சியம் கார்பைடை போடுவது அவசியம். எல்லா அன்னாசிகளையும் ஒரே சமயத்தில் அறுவடை செய்வதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. இயற்கையாகவே வளரவிட்டால் சில பழங்கள் மற்றதைக்காட்டிலும் வேகமாக வளர்ந்துவிடுவதால் அறுவடை மிகவும் கடினமாக இருக்கும்.”
அன்னாசி முற்றியதும், ஆனால் இன்னும் பழுக்காததுமாயிருக்கையில், வெயிலால் கருகிவிடாமல் இருக்க, அதை மூடி வைக்கவேண்டும். அது காகிதத்தால் அல்லது அதே செடியின் இலைகளால் மூடப்படுகிறது. போதியகாலம் கடந்தவுடன், அன்னாசி அறுவடைக்குத் தயார். செதில்களை வெட்டிக் களைந்து, துண்டுகளாக சுவைத்து மகிழுங்கள்! ஆனால் ஜாக்கிரதை. பழத்தின் மத்திய பாகத்தை சாப்பிடுவது நாக்கில் எரிச்சலை உண்டாக்கலாம். இதன் காரணமாகத்தான் சிலர் சதையை மட்டும் சுவைத்துவிட்டு, மத்திய பாகத்தை எறிந்துவிடுவர்.
இனிப்பான சாறூறும் அன்னாசியைச் சுவைக்க விரும்பினால், அதன் வெளித்தோற்றத்தைக் கண்டு பாதிக்கப்படாதீர்கள். பழங்களில் ஒன்றை எங்களுக்குக் காட்டி, அன்டோனியோ விவரிக்கிறார்: “சிலர் தோலின் நிறம் பச்சையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்த்து அன்னாசியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் தோல் பச்சையாக இருந்தாலும் கனியானது கனிந்திருக்கும். உங்கள் விரல்களால் தட்டிப்பார்க்க வேண்டும். ஒருவேளை துவாரமான அல்லது காலியான சத்தம் வந்தால் சதையானது வெண்மையாகவும் அதன் சுவை குறைந்தும் இருக்கும். ஆனால் தண்ணீர் நிறைந்துள்ளதைப்போல், கெட்டியான சத்தம் வந்தால் அது இனிப்பாக, சாறூற சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கிறது.” இந்தப் பழத்தில் பல ரகங்கள் உள்ளன, ஆனால் ஸ்மூத் கையென் (கையென்னை) என்று அழைக்கப்படும் ரகம்தான் மிகவும் பிரபலமானது.
உண்மையிலேயே உவகைதான்
பழத்தின் உவகையூட்டும் சுவையான சாற்றை அல்லது பழத்தை துண்டுகளாக சுவைத்து மகிழ்வதைத் தவிர, அதனை சர்க்கரைப் பாகுடனும் நீங்கள் சுவைத்து மகிழலாம், சில நாடுகளில் இவ்வாறு தயாரிக்கப்பட்டே இது கிடைக்கிறது. மேலும், அன்னாசியில் சில ஊட்டச்சத்துகளான கார்போஹைட்ரேட்டுகளும் நார்சத்தும் மற்றும் வைட்டமின்களும் முக்கியமாக A-ம் C-ம் உள்ளன.
மெக்ஸிகோவில் நீங்கள் அன்னாசித் தோலிலிருந்து தயாரிக்கப்படும் புத்துயிரளிக்கும் பானத்தை அருந்தி மகிழலாம். நீங்களாக தயாரிக்க வேண்டுமென்றால், தோலையெல்லாம் கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை இவற்றுடன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைக்கவும். இது நொதித்ததும் குளிர்பானமாக ஐஸ்மிதக்க பரிமாறலாம். மிகவும் புத்துயிர் அளிக்கும் பானமாகிய இது டெப்பாச்ச என்று அழைக்கப்படுகிறது. இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையோடு இருக்கும். நீங்களும் ஒரு டம்ளர் சுவைக்க விரும்புகிறீர்களா? பிலிப்பீன்ஸில் அன்னாசி அதன் இலைகளிலிருந்து நார்கள் எடுப்பதற்காகப் பயிர்செய்யப்படுகிறது. மங்கிய வெண்மையாகவும் சல்லாவாகவும் மிகவும் மென்மையாக இருக்கும் துணி தயாரிக்க இவை உபயோகிக்கப்படுகின்றன. இது கைக்குட்டைகள், துண்டுகள், பெல்ட்டுக்கள், சட்டைகள், சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆடைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
முன்பு சில நூற்றாண்டுகளாக அன்னாசி அது விளைவிக்கப்படாத பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது உலகமுழுவதும் தொடர்ந்து உலாவரவேண்டும், மனிதவர்க்கத்தை உவகையூட்டவேண்டும் என்று இதன் சுவையை மகிழ்ந்து அனுபவிக்கும் அனைவருமே விரும்புகிறார்கள்.