அவன் ‘தன் வாலிபப் பிராயத்திலே தன்னுடைய சிருஷ்டிகரை நினைத்தான்’
“ஏட்ரியன் எப்போதுமே அதிகமான கவனிப்பைப் பெற்றோரிடமிருந்து பெற்றான்,” என்று அவனுடைய அப்பா சொன்னார். “அவன் நான்கு வயதாயிருந்தபோது, குடும்பக் காரை ஒரு மரத்தின்மீது மோதச் செய்து, எல்லாரையும் தாமதமாகச் சபைக் கூட்டத்திற்குப் போகும்படி செய்தான். ஐந்து வயதாக இருந்தபோது, டஜன்கணக்கான தவளைகளைப் பிடித்து, வீட்டிற்குக் கொண்டுவந்தான். அவற்றை விட்டு ஓய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. பைபிளில் சொல்லப்பட்ட தவளைகள் வாதை வந்தபோது இருந்த எகிப்தியர்களின் குடும்பத்தைப் போல் நாங்கள் உணர்ந்தோம்.
“அவன் 11 வயதானபோது, அமெரிக்க இளம் கரடிகள் (young raccoons) மூன்றை நெடுஞ்சாலையின் ஓரத்தில் கண்டு, அவற்றை அவனுடைய புத்தகப் பையில் பள்ளிக்குக் கொண்டுசென்றான். ஆசிரியை உள்ளே வந்தபோது, வகுப்பறை ஒரு பெருங்கலவரத்தில் இருந்தது—பிள்ளைகள் ஏட்ரியனின் புத்தகப் பையைச் சுற்றி கூட்டங்கூடி, ஆரவாரத்தோடு அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். ஆசிரியை அந்தக் கரடிகளை எட்டிப் பார்த்தார். அவனையும் அவனுடைய செல்லப்பிராணிகளையும் காரில் கூட்டிக்கொண்டு அனாதை விலங்குகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு காப்பகத்திற்குப் போனார். ஏட்ரியன் தன் குட்டிகளை இழப்பதை நினைத்து அழுதான். ஆனால் காப்பகத்தையும், நன்கு கவனிக்கப்படுகிற நரிக்குட்டிகளையும், மற்ற அனாதை விலங்குகளையும் சுற்றிப் பார்த்தபிறகு, அவனுடைய கரடிக்குட்டிகளையும் அங்கு விட்டுவந்தான்.”
அவனுடைய அப்பா தொடர்ந்தார்: “ஏட்ரியன் ஒரு மோசமான பையன் அல்ல. எப்பொழுதும் துருதுருவென்று இருப்பான். வாழ்க்கையை இன்பமயமாக்கிய ஓர் உயிர்த்துடிப்பான கற்பனையெண்ணம் கொண்டவன்.”
ஏட்ரியனுடைய அம்மா அவனுடைய மறுபக்கத்தை எடுத்து விளக்கினார்கள்—அவன் குடும்பத்தோடு ஒட்டியிருப்பவன், வீட்டுக்குள் அடைந்துகிடப்பவன், அதிக அன்புள்ள ஒரு நல்ல பையன். அவர்கள் சொல்கிறார்கள்: “யாரையும் துன்புறுத்தாதவன் என்று பள்ளியிலுள்ள பிள்ளைகள் அவனை விவரித்தனர். அவனுடைய வகுப்பிலுள்ள ஒரு பெண்பிள்ளை சிறிது மந்தபுத்தி உள்ளவளாக இருந்தாள், ஆனால் மூளைவளர்ச்சி குன்றியவள் அல்ல. அவள் ஏட்ரியனோடு பள்ளி பஸ்ஸில் போகிறவள். மற்றக் குழந்தைகள் அவளைக் கேலிசெய்தனர், ஆனால் அவளுடைய அம்மா, தன்னுடைய மகளை ஏட்ரியன் எப்பொழுதும் மரியாதையோடும் விசேஷித்த தயவோடும் நடத்தியதாக எங்களிடம் சொன்னாள். ஆழமான உணர்ச்சிகளுடன், சமயம் அறிந்துசெயல்படுபவனாக இருக்கும், ஒரு சீரியஸானவனாகவும் இருந்தான். தன் உணர்ச்சிகளை எப்போதும் வெளிப்படுத்துபவனாக இல்லை. ஆனால் அவ்வாறு அவன் செய்தபோது, விஷயங்களின் ஆழமான உட்கருத்தைக் குறிக்கும் வார்த்தைகளால் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.”
அவர்கள் தன் மகனைப் பற்றிய மதிப்புரையை இவ்வாறு முடித்தார்கள்: “அவனுடைய உடல்நலமின்மை அவனை விரைவாக முதிர்ச்சியுள்ளவனாக ஆக்கியது, மேலும் அவனுக்குள் ஓர் ஆழமான ஆவிக்குரிய தன்மையை உண்டாக்கியது.”
அவன் பிடிவாதமாக மறுத்தான் —ரத்தம் வேண்டாம்!
அவனுக்கு வியாதியா? ஆம். அது மார்ச் 1993-ல் ஆரம்பித்தது. அப்போது ஏட்ரியன் 14 வயதுடையவனாய் இருந்தான். அவனுடைய வயிற்றில் ஒரு கட்டி விரைவாக வளர்ந்துகொண்டிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர்கள் திசுப்பரிசோதனை (biopsy) செய்ய விரும்பினர். ஆனால் அதிகமான ரத்தம் வெளியேறும் என்று பயந்து, ரத்தமேற்றுதல் ஒருவேளை தேவைப்படலாம் என்று சொன்னார்கள். ஏட்ரியன் மறுத்தான். அவன் பிடிவாதமாக மறுத்தான். தன் கண்களில் கண்ணீர்வடிய அவன் சொன்னான்: “எனக்கு ரத்தம்கொடுக்கப்பட்டால், நான் தன்மானத்தோடு வாழமுடியாது.” அவனும் அவனுடைய குடும்ப அங்கத்தினர்களும், லேவியராகமம் 17:10-12, அப்போஸ்தலர் 15:28, 29 போன்ற பைபிள் ஆதாரங்களின்பேரில் ரத்தமேற்றுதல்களை மறுக்கின்ற யெகோவாவின் சாட்சிகள்.
நியூபெளண்ட்லாந்தில் செயின்ட் ஜான்ஸ் நகரத்திலுள்ள டாக்டர் சார்ல்ஸ் A. ஜேன்வே குழந்தை உடல்நல மையத்தில் (Child Health Centre) திசுப்பரிசோதனைக்காக—ரத்தமில்லாமல் செய்யப்படுவதற்காக—காத்துக்கொண்டிருக்கையில், கட்டி நிபுணர் (oncologist) டாக்டர் லாரன்ஸ் ஜார்டின், ஏட்ரியனிடம் ரத்தம்பற்றிய அவனுடைய கருத்தைப் பற்றி அவனே விளக்கும்படி கேட்டுக்கொண்டார்.
“பாருங்க டாக்டர், என் பெற்றோர் யெகோவாவின் சாட்சிகளா இல்லையா என்பது முக்கியமல்ல. எப்படியும் நான் ரத்தம் ஏற்றுக்கொள்ள மாட்டேன்,” என்று ஏட்ரியன் சொன்னான்.
“இரத்தமேற்றுதலை ஏற்கவில்லையென்றால் நீ செத்துப்போவாய் என்பதை அறிந்திருக்கிறாயா?” என்று டாக்டர் ஜார்டின் கேட்டார்.
“ஆம்.”
“நிஜமாகவே சாகவா விரும்புகிறாய்?”
“அப்படி நடந்தால், நடக்கட்டும்.”
அங்கிருந்த அவனுடைய அம்மாவும் அவனிடம், “நீ ஏன் அந்த நிலைநிற்கையை எடுக்கிறாய்?” என்று கேட்டார்கள்.
ஏட்ரியன் பதிலளித்தான்: “அம்மா, அது நல்ல பதிலீடு அல்ல. இப்போது நான் கடவுளுக்குக் கீழ்ப்படியாததால், என் வாழ்நாளை இப்பொழுது சில வருஷங்கள் அதிகரித்துவிட்டு, பின்னர் கடவுளுக்குக் கீழ்ப்படியாததன் காரணமாக உயிர்த்தெழுதலையும் அவருடைய பரதீஸான பூமியில் என்றும் வாழும் வாழ்க்கையையும் பெறாமல் போவது, உண்மையிலேயே ஞானமற்ற காரியம்!”—சங்கீதம் 37:10, 11; நீதிமொழிகள் 2:21, 22.
மார்ச் 18-ல் திசுப்பரிசோதனை நடத்தப்பட்டது. ஏட்ரியனுக்கு ஒரு பெரிய நிணநீர் கட்டி இருந்ததை அது காண்பித்தது. அதைத் தொடர்ந்து செய்த எலும்பு மஜ்ஜை திசுப்பரிசோதனை, அவனுக்கு வெள்ளணுப் புற்றுநோய் இருந்தது என்ற சந்தேகத்தை உறுதிசெய்தது. டாக்டர் ஜார்டின் இப்போது, மிக தீவிர வேதியியல் சிகிச்சைத் திட்டமும், ரத்தமேற்றுதலுமே ஏட்ரியன் ஒருவேளை உயிர்வாழ்வதற்கான ஒரேவழி என விளக்கினார். எனினும், ஏட்ரியன் இன்னும் ரத்தமேற்றுதலை மறுத்தான். இரத்தமேற்றுதல்கள் இல்லாமல், வேதியியல் சிகிச்சைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனாலும், இப்போது இந்தக் கவலைக்கிடமான சிகிச்சைக் கொடுக்கப்படும் சமயத்தில், குழந்தை நலத்துறை (Child Welfare Department) குறுக்கிட்டு, பாதுகாப்புக்கான நீதிமன்ற ஆணையையும் ரத்தமேற்றுதல்களைக் கொடுப்பதற்கான அதிகாரத்தையும் பெற்றுவிடுமோ என்ற பயம் இருந்தது. சட்டம், 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள எவரும் சிகிச்சை சம்பந்தமான தங்கள் சொந்த தீர்மானத்தை எடுக்க அனுமதித்தது. 16 வயதுக்குக் கீழான எவரும் இந்த உரிமையைப் பெறக்கூடிய ஒரேவழி, முதிர்ச்சியுள்ள சிறுவன் (mature minor) என்ற வகுப்பைச் சேர்ந்தவர் என்று பிரிக்கப்படவேண்டியதுதான்.
நியூபெளண்ட்லாந்தினுடைய உச்சநீதிமன்றத்தில்
எனவே, ஞாயிறு காலை, ஜூலை 18-ல், குழந்தை நலத்துறையின் தற்காலிக இயக்குநர், பாதுகாப்புரிமையைப் பெறுவதற்கு நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்தார். உடனே, நியூபெளண்ட்லாந்து செயின்ட் ஜான்ஸி நகரத்திலுள்ள, Q. C. ஆக இருக்கும் பிரபலமான, உயர்வாக மதிக்கப்பட்ட வழக்கறிஞர் டேவிட் C. டே, ஏட்ரியனை பிரதிநிதித்துவம் செய்ய அமர்த்தப்பட்டார். அந்தப் பிற்பகல் 3:30 மணிக்கு, நியூபெளண்ட்லாந்து உச்சநீதிமன்றம் அவையைக் கூட்டியது. நீதிபதி ராபர்ட் வெல்ஸ் தலைமைதாங்கினார்.
பிற்பகல் கூட்டத்தின்போது டாக்டர் ஜார்டின், ஏட்ரியனை ரத்தம் பயன்படுத்துவதற்கு எதிரான, ஓர் ஆழமான நம்பிக்கையையுடைய, ஒரு முதிர்ச்சியுள்ள சிறுவனாகக் கருதுவதாக மிகத் தெளிவுபடக்கூறினார். டாக்டர் ஜார்டின் மேலும், எந்தச் சிகிச்சையிலும் ரத்தம் ஏற்றுதலை உட்படுத்தமாட்டார் என்று ஏட்ரியனுக்கு உறுதிகொடுத்ததாகச் சொன்னார். நீதிபதி வெல்ஸ் டாக்டரிடம், அது நீதிமன்றம் ஆணையிட்ட ரத்தமேற்றுதலாக இருந்தால், அவர் அதைச் செய்வாரா என்று கேட்டார். டாக்டர் ஜார்டின் பதிலளித்தார்: “இல்லை, என்னைப் பொருத்தவரையில் நான் அதைச் செய்யமாட்டேன்.” ஏட்ரியன் நித்திய ஜீவன் சம்பந்தமான தன் பைபிள் நம்பிக்கை பாதிக்கப்படும் என்று உணர்ந்ததாக அவர் சொன்னார். இந்தப் பிரத்தியேகமான டாக்டரின் உள்ளப்பூர்வமான சாட்சி ஆச்சரியமூட்டுவதாயும் ஆறுதலளிப்பதாயும் இருந்தது. ஏட்ரியனின் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் சிந்தும்படி செய்தது.
“என்னையும் என் விருப்பங்களையும் தயவுசெய்து மதியுங்கள்”
திங்கட்கிழமை, ஜூலை 19-ம் தேதி அன்று, நீதிமன்றம் மீண்டும் கூடினபோது, ஏட்ரியன் தயாரித்து கையெழுத்திட்டிருந்த வாக்குமூலத்தின் பிரதிகளை டேவிட் டே அளித்தார். ஏனென்றால், நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதளவிற்கு அவன் மிகவும் சுகவீனமாய் இருந்தான். இரத்தமில்லாமல் அல்லது ரத்தம் கலக்கப்பட்ட பொருள்கள் இல்லாமல் தன் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிக்கப்படவேண்டும் என்ற அவனுடைய சொந்த விருப்பங்களைப் பற்றி அவன் குறிப்பிட்டிருந்தான். அதில், ஏட்ரியன் இவ்வாறு சொல்லியிருந்தான்:
“சுகமில்லாதிருக்கும்போது காரியங்களைப் பற்றி அதிகமாக நீங்கள் சிந்திப்பீர்கள். புற்றுநோயால் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, நீங்கள் சாகக்கூடும் என்று உங்களுக்கே தெரியும், அதைப் பற்றிச் சிந்திப்பீர்கள். . . . ரத்தமேற்றுவதையோ அது பயன்படுத்தப்பட அனுமதிப்பதையோ நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்; நிச்சயமாக ஒத்துக்கொள்ளமாட்டேன். இரத்தமே பயன்படுத்தப்படாவிட்டால், நான் செத்துப்போகக்கூடும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதுவே என் தீர்மானம். யாரும் நான் இவ்வாறு பேசும்படி என்னை வற்புறுத்தவில்லை. டாக்டர் ஜார்டினை நான் மிகவும் நம்புகிறேன். அவர் தான் சொன்னதைச் செய்பவர் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இரத்தம் எந்தச் சமயத்திலும் பயன்படுத்தப்படாத தீவிர சிகிச்சையை எனக்குத் தரப்போவதாக அவர் என்னிடம் சொன்னார். உட்பட்டிருக்கும் அபாயங்களை என்னிடம் சொன்னார். அவற்றை நான் புரிந்துகொள்கிறேன். எனக்கு நடக்கப்போகும் மோசமான நிலையை நான் அறிந்திருக்கிறேன். . . . எனக்கு ஏதேனும் ரத்தம் கொடுக்கப்பட்டால், அது என்னைக் கற்பழித்து, என் உடலைப் பாலியல் சார்ந்த வகையில் துன்புறுத்துவதற்குச் சமமாக உணருகிறேன். அது நடந்தால் என் உடல் எனக்குத் தேவையில்லை. அதைக்கொண்டு என்னால் வாழமுடியாது. இரத்தம் பயன்படுத்தப்படப்போகிறது அல்லது பயன்படுத்தப்படவேண்டிய தேவையை ஒருவேளை உட்படுத்தும் என்றால், எனக்கு எந்தச் சிகிச்சையும் அவசியமில்லை. இரத்தம் பயன்படுத்தப்படுவதை நான் எதிர்ப்பேன்.” ஏட்ரியனின் வாக்குமூலம் இந்த வேண்டுகோளுடன் முடிவடைந்தது: “என்னையும் என் விருப்பங்களையும் தயவுசெய்து மதியுங்கள்.”
நீதிமன்ற விசாரணையின்போதெல்லாம், ஏட்ரியன் தன் மருத்துவமனை அறையிலேயே இருந்தான். நீதிபதி வெல்ஸ், மிகவும் கரிசனையோடு அவனைப் பார்க்க டேவிட் டேயுடன் அங்கு வந்தார். அந்தப் பேட்டியைப் பற்றி டே சொன்னபோது, இந்த ஒரு காரியத்தைப் பற்றி ஏட்ரியனின் ஆணித்தரமான மற்றும் உறுதியான வார்த்தைகளைப் பற்றி நீதிபதியிடம் சொன்னார். சுருக்கமாகச் சொன்னால்: “நான் மிகவும் சுகமில்லாமல் இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும்; நான் சாகக்கூடும் என்றும் எனக்குத் தெரியும். சில மருத்துவ ஆலோசகர்கள் ரத்தம் உதவிசெய்யும் என்று சொல்கிறார்கள். அதன் ஆபத்துக்களைப் பற்றி நான் படித்தவரை, நான் அவ்வாறு நினைக்கவில்லை. அது உதவிசெய்கிறதோ இல்லையோ, என் விசுவாசம் ரத்தத்திற்கு எதிரானது. என் விசுவாசத்தை மதியுங்கள், அப்போது என்னை நீங்கள் மதிக்கிறவர்களாக இருப்பீர்கள். என் விசுவாசத்தை மதிக்கவில்லையென்றால், நான் வற்புறுத்தப்பட்டதாக உணர்வேன். நீங்கள் என் விசுவாசத்தை மதித்தால், என் சுகவீனத்தை நான் மேம்பட்ட உணர்வுடன் எதிர்ப்படமுடியும். எனக்கு இருக்கிறதெல்லாம் விசுவாசம் மட்டுமே, இப்போது அது எனக்கு மிக மிக முக்கியமான ஒன்று. நோயை எதிர்த்துப் போராட உதவுவதற்கு எனக்கு அது அவசியம்.”
ஏட்ரியனைக் குறித்து, திரு. டே தன் சொந்தக் கருத்துக்கள் சிலவற்றை உடையவராக இருந்தார்: “அவன் தன் கடுமையான சுகவீனத்தை அமைதலாக, மன உறுதியோடு, தைரியமாகக் கையாளுபவனாக இருந்தான். அவன் கண்களில் தீர்மானவுணர்வு தென்பட்டது; அவனுடைய குரலில் உறுதியான நம்பிக்கை இருந்தது; அவன் நடத்தையில் துணிவு இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவனுடைய வார்த்தை மற்றும் சைகை மொழி எனக்குக் கீழ்ப்படிதலுள்ள விசுவாசத்தைச் சுட்டிக்காட்டியது. அவனை வித்தியாசப்படுத்திக் காட்டும் பண்பு, விசுவாசமாக இருந்தது. தீராத சுகவீனம், அவனுடைய இளவயது கனவுகளுக்கும் முதிர்ச்சியின் உண்மைத்தன்மைக்கும் இடையே பாலங்களைக் கட்டும்படி அவனைச் செய்தது. அவ்வாறு செய்யும்படி விசுவாசம் அவனுக்கு உதவிசெய்தது. . . . அவன் தயக்கமின்றி வெளிப்படையாய் பேசுபவனாக இருந்தான்; என் மனதுக்கு உண்மையுள்ளவனாய் இருந்தான். . . . அவனுடைய மருத்துவ சிகிச்சையில் ரத்தம் பயன்படுத்தக்கூடாது என்று அவனுடைய பெற்றோர் அவனை [கட்டாயப்படுத்தினரோ] என்ற கருத்தைக் குறித்து நான் எச்சரிக்கையாயிருந்தேன். . . . அவன் ரத்தமில்லாத மருத்துவ சிகிச்சையைப் பற்றிய தன் சொந்த விருப்பத்தைச் சொல்வதில் தனிப்பட்ட தீர்மானத்தோடு செய்தான் என்பதைக் குறித்து நான் திருப்தியடைந்தேன்.”
மற்றொரு சந்தர்ப்பத்தில், ஏட்ரியனின் நம்பிக்கைகளைப் பற்றி திரு. டே குறிப்பிட்டார். அவர் சொன்னார், அவை “உயிரைவிட அதிக அருமையானதாக அவனுக்கு இருந்தன.” மேலும் சொன்னார்: “அப்படிப்பட்ட பிரச்னைகளை எதிர்ப்பட்டபோதிலும் இந்தத் திடமனதுள்ள இளம் மனிதன், என் வாழ்க்கையின் கஷ்டங்கள் எல்லாம் ஒன்றுமில்லை என நான் உணரும்படி செய்தான். அவன் என் ஞாபகத்தில் என்றும் செதுக்கிப் பதிக்க வைக்கப்பட்டிருப்பான். அவன் அதிகத் தைரியமிக்க, உட்பார்வையுள்ள, புத்திசாலியான, ஒரு முதிர்ச்சியுள்ள சிறுவன்.”
அந்தத் தீர்மானம்—ஏட்ரியன் ஒரு முதிர்ச்சியுள்ள சிறுவன்
ஜூலை 19, திங்கட்கிழமையில், விசாரணை முடிவடைந்தது. நீதிபதி வெல்ஸ் தன் தீர்ப்பைக் கொடுத்தார். அது பின்னர் செப்டம்பர் 30, 1993 தேதியிட்ட மனித உரிமைகள் சட்டப் பத்திரிகையில் (Human Rights Law Journal) பிரசுரிக்கப்பட்டது. சுருக்கம் பின்தொடர்கிறது:
“பின்வரும் காரணங்களுக்காகக் குழந்தை நலத்துறையின் இயக்குநருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன; அந்தக் குழந்தை, பாதுகாப்பை அவசியப்படுத்தும் நிலையில் இல்லை; ரத்தமேற்றும் அல்லது ஊசிபோடும் நோக்கங்களுக்காக ரத்தம் அல்லது ரத்தம்கலந்த பொருள்களின் உபயோகம் அத்தியாவசியமானதாக நிரூபிக்கப்படவில்லை; இந்த நோயாளியினுடைய விஷயத்தின் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அது தீங்குவிளைவிப்பதாக இருக்கக்கூடும்.
“சூழ்நிலைகளில் ஒரு மாற்றம் மீண்டும் ஒரு ஆணையைத் தேவைப்படுத்தினால் தவிர, ரத்தம் அல்லது ரத்தம்கலந்த பொருள்களை அவனுடைய சிகிச்சையில் பயன்படுத்த அனுமதி கிடையாது: அந்தப் பையன் முதிர்ச்சியுள்ள சிறுவன் என்று அறிவிக்கப்படுகிறான். இரத்தம் அல்லது ரத்தம்கலந்த பொருள்கள் இல்லாமல் மருத்துவ சிகிச்சையைப் பெற விரும்பும் அவனுடைய விருப்பம் மதிக்கப்படவேண்டும். . . .
“இந்த ‘இளம் ஆள்’ மிகவும் தைரியமாய் இருக்கிறான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அவன் அன்பான, அக்கறைகாட்டும் குடும்பத்தினரின் ஆதரவைப் பெற்றிருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். அவனுடைய பெருந்துன்பத்தை மிகத் தைரியத்தோடு எதிர்ப்படுகிறான் என்று நான் நினைக்கிறேன். அவனுடைய மத நம்பிக்கைகளில் ஒன்றின் பிரகாரம், எந்த நோக்கங்களுக்கும் ரத்தம்கலந்த பொருள்கள் அவனுடைய உடம்புக்குள் செலுத்தப்பட அனுமதிப்பது தவறானது ஆகும் . . . ஏட்ரியன் தயாரித்திருந்த வாக்குமூலத்தைப் படிக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். நேற்று, சான்றளித்த அவனுடைய அம்மாவிடமிருந்து விஷயங்களை நேரடியாக கேள்விப்பட்டேன். ஏட்ரியன் உடனும்கூட பேசும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன்.
“இரத்தம் ஏற்றுவது தவறு என்று அவன் தன் மனமார நம்புகிறான் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை. நாம் பேசிக்கொண்டிருக்கும் சூழ்நிலைகளில் ரத்தம் எடுக்கும்படி வற்புறுத்தப்படுவது, அதன் விளைவு என்னவாக இருந்தாலும், அவனுடைய உடல், அவனுடைய அந்தரங்கம், முழு உயிர்வாழ்தலின் வரம்புமீறுதலாக இருக்கும். இது அவ்வளவு தூரத்திற்குப் பாதிப்பதால், அவன் உட்படவேண்டிய பயங்கரமான வேதனையைச் சமாளிக்க தேவையான அவனுடைய சக்தியையும் திறமையையும் மிகக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
“வேதியியல் சிகிச்சையில் அல்லது மற்ற புற்றுநோய் சிகிச்சைகளைக்குறித்து நோயாளி, ஒத்துழைக்கும் மற்றும் சாதகமான மனப்பாங்கில் இருக்கவேண்டும். இதை வெற்றியடைவதற்கான ஏதேனும் நம்பிக்கை, உண்மையான நம்பிக்கை இருப்பதற்காக செய்யவேண்டும். ஒரு நோயாளி ஆழமாக பின்பற்றும் நம்பிக்கைகளுக்கும் எதிராக ஏதேனும் வற்புறுத்தப்படும்போது, சிகிச்சையை ஏற்றுக்கொள்ளும் தன்மை படுவேகமாகக் குறைந்துவிடுகிறது. மேற்கண்டவாறு டாக்டர் சொன்னது அதிக அர்த்தமுள்ள ஒன்றாக இருந்தது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். . .
“ஏட்ரியனுக்கு என்ன நடந்ததோ அது 15-வயதடைந்த ஒரு பையன் வாழாத நிலையில் வாழ்ந்து, எதிர்ப்படாததை எதிர்ப்படுவது மற்றும் எதிர்ப்பட்டுக்கொண்டிருப்பது, நினைத்தும்கூட பார்க்கமுடியாத அளவிற்கு ஏட்ரியனை முதிர்ச்சியுள்ளவனாக ஆக்கியிருக்கிறது. என்னால் எந்தளவு கற்பனை செய்யமுடியுமோ அந்தளவு கடினமான அனுபவமாக அவனுடைய அனுபவம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவனும் அவன் குடும்பத்தினரும் சகித்திருப்பதற்கு உதவிசெய்கிறதில் ஒன்று அவர்களின் விசுவாசம் என நான் நினைக்கிறேன். என்ன நடந்ததோ அது ஏட்ரியனை சாதாரண எதிர்பார்ப்பைவிட அல்லது ஒரு 15 வயது பையனிடமுள்ள முதிர்ச்சியைவிட அதிக முதிர்ச்சியுள்ளவனாக ஆக்கியிருக்கிறது. இந்தத் துயர்நிறைந்த அனுபவத்தின் காரணமாக, நான் இன்று காலையில் பேசின பையன் ஒரு சாதாரண 15 வயது பையனைவிட மிக வித்தியாசமானவனாக இருந்தான்.
“ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள வைக்குமளவுக்கு விளக்கும் முதிர்ச்சியுள்ளவனாக அவன் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். அதை அவன் என்னிடத்தில் விளக்கினான் . . . அவனுடைய விருப்பங்களை அனுசரித்து நான் போகவேண்டியது சரியானதுதான் என்று நானும் திருப்தியடைந்தேன், மேலும் அவ்வாறு நான் செய்கிறேன். இரத்தம்கலந்த பொருள்கள் ஏற்றப்படக்கூடாது என்பது அவனுடைய விருப்பம். மேலும் இந்த நீதிமன்றத்தின் ஆணையின்கீழ் செயல்படும் இயக்குநர் ஏதாவது ஒரு வகையில் என் விருப்பங்களுக்கு எதிர்த்துக் கட்டளையிட்டால், அவனுடைய மேலான விருப்பங்கள் வெளிப்படையாகவே, உண்மையான அர்த்தத்தில் படுமோசமாக பாதிக்கப்படும் என்றும் நான் தெளிவாகவே உணர்கிறேன். . . . கூடுதலாக, அவன் இந்த நோய்க்குப் பலியானால், அவனுடைய மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, அவன் வருந்தத்தக்க, நடக்கக்கூடாத, என்றைக்கும் விருப்பப்படாத ஒரு மனநிலையில் மரிப்பான். ஆனால் அதுவே பெரும்பாலும் நடக்கும். இவற்றையெல்லாம் நான் கருத்தில்கொண்டு செய்கிறேன். . . .
“இந்த எல்லா சூழ்நிலைகளின் மத்தியிலும், ஏட்ரியன் சிகிச்சையில் ரத்தம்கலந்த பொருள்கள் பயன்படுத்தப்படுவதற்கான வேண்டுகோளை நிராகரிப்பது எனக்குச் சரியாகத் தோன்றுகிறது.”
நீதிபதி வெல்ஸுக்கு ஏட்ரியனின் செய்தி
தான் செத்துக்கொண்டிருந்ததாக உணரும் இந்த இளம் பையன், நீதிபதி ராபர்ட் வெல்ஸுக்கு குறிப்பிடத்தக்க கருத்துள்ள ஒரு செய்தியை அனுப்பினான். இந்தச் செய்தி, திரு. டேவிட் டேயின் மூலமாக அனுப்பப்பட்டது. அது பின்வருமாறு வாசிக்கிறது: “நான் உங்களுக்கு அவனுடைய இருதயப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கவில்லையென்றால் கடமை தவறியவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன். இன்று நீங்கள் மருத்துவமனையைவிட்டு வந்தவுடன் சிறிதுநேரமே நான் பேசின அந்தக் கட்சிக்காரர் சார்பில் இதைச் சொல்கிறேன். அவன் பெரிய மனதுள்ளவன். இந்த விஷயத்தை நீங்கள் தாமதமின்றி, மட்டுமீறிய கூருணர்வுடன், நடுநிலைதவறாமல் கையாண்டதற்காக அவன் உங்களுக்கு நன்றிகூறுகிறான். அவன் மிக மிக நன்றியுணர்வுடனிருக்கிறான், கனம் நீதிபதியவர்களே. பதிவு அதைக் காட்டும்படி நான் விரும்புகிறேன். நன்றி.”
சம்பவத்தின் இறுதி நிகழ்ச்சிகளை ஏட்ரியனின் தாய் நினைவுகூருகிறார்கள்.
“நீதிமன்ற விசாரணைக்குப் பின்பு, ஏட்ரியன் டாக்டர் ஜார்டினைக் கேட்டான், ‘இன்னும் எவ்வளவு காலம் நான் உயிரோடிருப்பேன்?’ டாக்டருடைய பதில்: ‘ஒன்று அல்லது இரண்டு வாரங்கள்.’ இறுக்கமாக மூடப்பட்ட இமைகளுக்கு இடையே பிதுங்கிக்கிட்டுவரும் ஒருதுளி கண்ணீரை என் மகனின் கண்களில் கண்டேன். அவனைக் கட்டித்தழுவ நான் போனேன். அவன் சொன்னான், ‘இல்லை அம்மா. நான் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.’ சிறிது நேரம்கழித்து, ‘எப்படி உணர்கிறாய், ஏட்ரியன்?’ என்று நான் கேட்டேன். அவன், ‘நான் இறந்தாலும், நான் எப்படியும் வாழப்போகிறேன். இரண்டு வாரம்தான் நான் உயிர்வாழப்போகிறேன் என்றால், அவற்றை நான் அனுபவிக்க விரும்புகிறேன். எனவே, நீங்கள் சந்தோஷப்பட வேண்டும்,’ என்று சொன்னான்.
“கனடாவின் ஜார்ஜ்டெளனில் உள்ள உவாட்ச் டவர் கிளை அலுவலகத்துக்கு விஜயம்செய்ய விரும்பினான். அவன் விஜயம் செய்தான். தன் நண்பர்களில் ஒருவனோடு அங்கு நீச்சல்குளத்தில் நீந்தினான். புளூ ஜேய்ஸ் பேஸ்பால் டீம் விளையாட்டு ஒன்றுக்குப் போனான். சில விளையாட்டு வீரர்களோடு தன் ஃபோட்டோவை எடுத்துக் கொண்டான். மிக முக்கியமாக, தன் இருயத்தில் யெகோவா தேவனுக்கு ஊழியம் செய்ய தன்னை ஒப்புக்கொடுத்திருந்தான். இப்போது அதைத் தண்ணீர் முழுக்காட்டுதல்மூலம் அடையாளப்படுத்த விரும்பினான். இப்போது அவனுடைய நிலைமை மிக மோசமாகி இருந்தது. மருத்துமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டான். இனிமேலும் அவன் அதைவிட்டு வெளியேற முடியவில்லை. எனவே, நர்ஸ்கள் உடற்பயிற்சி மருத்துவ அறையில் உள்ள ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தொட்டி ஒன்றை அவன் பயன்படுத்த கனிவுடன் ஏற்பாடு செய்தனர். அவன் அங்கு செப்டம்பர் 12-ம் தேதி முழுக்காட்டப்பட்டான்; அடுத்த நாள் செப்டம்பர் 13-ம் தேதி அவன் இறந்துபோனான்.
“சவ அடக்க இடம் ஒருபோதும் காணாத மிகப் பெரிய கூட்டத்தை அவனுடைய சவ அடக்கம் கொண்டிருந்தது. நர்ஸ்கள், டாக்டர்கள், நோயாளிகளின் பெற்றோர், பள்ளிசகாக்கள், அக்கம்பக்கத்துக்காரர்கள், மேலும் அவனுடைய சொந்த மற்றும் மற்ற சபைகளிலிருந்து வந்த பல ஆவிக்குரிய சகோதரர்களும் சகோதரிகளும் கூடிவந்திருந்தனர். அவன் தன் சோதனைகளைச் சகித்தபோது எங்கள் மகனில் வெளிப்பட்ட அதிசயமான குணங்களெல்லாம், அல்லது அவனுடைய வளரும் கிறிஸ்தவ ஆளுமையின் பாகமாக இருந்த தயவு மற்றும் புரிந்துகொள்ளும் தன்மை போன்றவற்றை, பெற்றோராக என்றைக்கும் நாங்கள் உணராதவர்களாய் இருந்தோம். ஏவப்பட்ட சங்கீதக்காரன் சொன்னார்: ‘பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்.’ இவன் நிச்சயமாகவே அவ்வாறு இருந்தான். பரதீஸான பூமியில் இப்பொழுது சீக்கிரத்தில் நிறுவப்படும் யெகோவாவின் நீதியான புதிய உலகத்தில் அவனை மறுபடியும் காணும் எதிர்பார்ப்போடு நாங்கள் இருக்கிறோம்.”—சங்கீதம் 127:4; யாக்கோபு 1:2, 3.
ஏட்ரியன் சம்பந்தமாக யோவான் 5:28, 29-ல் உள்ள இயேசுவின் வாக்குறுதியின் நிறைவேற்றத்தை நாம் எதிர்பார்ப்போம்: “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.”
இரத்தமேற்றுதல்கள் அவனுடைய வாழ்நாட்காலத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு அதிகரித்திருக்கலாம். அதை மறுத்ததன்மூலம் ஏட்ரியன் கடவுளை முதலாவதாக வைத்த பல இளைஞரில் அவனும் ஒருவன் என்பதை நிரூபித்தான்.
[பக்கம் 5-ன் பெட்டி]
‘உயிர் இரத்தத்தில் இருக்கிறது’
இரத்தம் வியப்பில் ஆழ்த்தும்வகையில் சிக்கலானதாக இருக்கிறது. உடலில் ஒவ்வொரு உயிரணுவையும் அது சென்றெட்டுகிறது. ஒரே ஒரு துளியில், 25,00,00,000 சிவப்பு ரத்த அணுக்கள் பிராணவாயுவை எடுத்துச்சென்று கரியமிலவாயுவை வெளியேற்றுகின்றன. 4,00,000 வெள்ளையணுக்கள் தேவையில்லாத உட்பிரவேசகர்களைத் தேடி, அழிக்கின்றன; ஒரு வெட்டுக்காயம் உண்டாகிய இடத்தில் உடனே 1,50,00,000 ரத்தவட்டுகள் (blood platelets) கூடி, இடைவெளியை மறைப்பதற்கு அங்கு உறைய ஆரம்பிக்கின்றன. இவையெல்லாம் தெளிவான, தந்தவர்ண பிளாஸ்மாவில்தானேயும் (ivory-colored plasma) மிதக்கின்றன. இந்தப் பிளாஸ்மாவும் ரத்தத்தின் செயல்களைப் பற்றிய பெரிய பட்டியலில் முக்கியமான பாகங்களை வகிக்கும் நூற்றுக்கணக்கான அடிப்படை பொருள்களினால் ஆகியிருக்கிறது. ரத்தம் செய்யும் எல்லா செயல்களையும் அறிவியல் வல்லுநர்கள் புரிந்துகொள்வதில்லை.
ஆச்சரியத்திற்கிடமின்றியே, இந்த அபூர்வமான திரவத்தை உண்டாக்கிய யெகோவா தேவன், ‘உயிர் இரத்தத்தில் இருக்கிறது’ என்று அறிவிக்கிறார்.—லேவியராகமம் 17:11, 14.
[பக்கம் 7-ன் பெட்டி]
இரத்தமில்லாமல் இருதய மாற்றம்
கடந்த அக்டோபரில், மூன்று வயது சந்திரா ஷார்ப், அ.ஐ.மா., ஒஹாயோ, கிளீவ்லாண்ட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளுடைய இருதயம் பெரியதாகி மட்டுமல்ல, செயலற்றும் போய்க்கொண்டிருந்தது. அவள் ஊட்டச்சத்து குறைவுடையவளாக இருந்தாள். அவளுடைய வளர்ச்சி தடைசெய்யப்பட்டிருந்தது. அவளுடைய எடை வெறும் ஒன்பது கிலோகிராம்தான். அவளுக்கு இருதய மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. அவள் ஒருசில வாரங்கள் மட்டுமே உயிர்வாழமுடியும். அவளுடைய பெற்றோர் மாற்று சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டனர், ஆனால் ரத்தமேற்றுதலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை; அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கின்றனர்.
அறுவை மருத்துவர், டாக்டர் சார்ல்ஸ் ஃபிரேஸருக்கு இது ஒரு பிரச்னைக்குரிய காரியமல்ல. மிச்சிகனிலிருந்து வரும் தி ஃபிளின்ட் ஜர்னல் டிசம்பர் 1, 1993 இதழ் இவ்வாறு அறிக்கையிட்டது: “கிளீவ்லாண்ட் கிளினிக்கும் மற்ற மருத்துவ மையங்களும், மற்ற மக்களின் ரத்தத்தை நோயாளிக்குக் கொடுக்காமலே உறுப்பு மாற்று சிகிச்சைகள் உட்பட பல அறுவைசிகிச்சைகளைச் செய்வதில் திறமைப்பெற்றவையாக ஆகி வருகின்றன. ‘இரத்தக் கசிவை எப்படித் தவிர்ப்பது, இருதய-நுரையீரல் இயந்திரத்தை ரத்தமில்லாத வேறு திரவத்தால் எப்படி நிரப்புவது என்பதைப் பற்றி நாங்கள் அதிகத்தைக் கற்றிருக்கிறோம்,’ என்று ஃபிரேஸர் சொன்னார்.” பிறகு அவர் தொடர்ந்து சொன்னார்: “சில விசேஷித்த மருத்துவமனைகள் ரத்தமேற்றாமலேயே பல பத்து ஆண்டுகளாக மிகச் சிக்கலான இருதய அறுவைசிகிச்சைகளைச் செய்து வருகின்றன. . . . (ஏற்றப்பட்ட) ரத்தம் இல்லாமலே அறுவைசிகிச்சை செய்வதற்கு நாங்கள் எப்போதும் முயற்சிசெய்கிறோம்.”
அக்டோபர் 29-ல், அவர் சந்திராவின் இருதய மாற்று சிகிச்சையை இரத்தமேற்றாமல் செய்தார். ஒரு மாதம் கழித்து, சந்திரா நன்றாக இருப்பதாக அறிக்கை செய்யப்பட்டது.