இளைஞர் கேட்கின்றனர்
வச்சிரப்பசை முகர்தல்—அது உண்மையில் எனக்குக் கெடுதல் விளைவிக்க முடியுமா?
“கேலிச் சித்திர திரைப்படம் பார்ப்பது போல அத்தனை அருமையாக இருக்கிறது.” ரஷ்யாவில், மாஸ்கோவிலிருந்து வரும் 13 வயது நிரம்பிய பெண் ஸ்வீத்தா சொல்கிறாள்.a ஆனால் ஸ்வீத்தா, அத்தனை உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பது சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அல்லது வீடியோவைப்பற்றி அல்ல. உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான இளைஞர் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒருவகை போதைப்பொருள் துர்ப்பிரயோகத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவள் விவரித்துக்கொண்டிருக்கிறாள்.—வச்சிரப்பசை முகர்தல்.
ஆனால் வச்சிரப்பசை என்பது ஒருசில இளைஞர் முகர்ந்துகொள்ளும் அநேக பொருட்களில் ஒன்றாக மாத்திரமே இருக்கிறது. உதாரணமாக, இப்போது இளைஞர் (Young People Now)
பத்திரிகையின்படி, பிரிட்டனில், காற்றைச் சுத்தப்படுத்தும் ரசாயனத் தயாரிப்புகள், தீக்கொழுத்தித் திரவம் மற்றும் “வீட்டில் பயன்படுத்தப்படும் 20 முதல் 30 பொருட்கள் . . . வரையாக துர்ப்பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.” இவற்றில் “வலி நிவாரண தெளிப்புகள், தட்டுமுட்டு சாமான் பாலிஷ்கள் மற்றும் பஞ்சர் பார்க்க பயன்படுத்தப்படும் பசைகளும்” அடங்கும். ஏன், தீயணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் புகைகளையும்கூட சில இளைஞர் முகர்கின்றனர்! ஆகவே இந்தத் தீமையான ஆனால் பிரபலமான பழக்கத்தை சில நிபுணர்கள் அழைப்பது போல “கரைமம் துர்ப்பிரயோகம்” அல்லது “விரைந்து ஆவியாகிற பொருட்களின் துர்ப்பிரயோகம்,” என்றழைப்பது அதிக திருத்தமாக இருக்கிறது.
வச்சிரப்பசையை அல்லது தட்டுமுட்டு சாமான் பாலிஷ்களை துர்ப்பிரயோகம் செய்தாலும் சரி, முகருகிறவர்கள் அதே விளைவுகளையே நாடுகின்றனர். மூல ஆதார ஏடு ஒன்றின்படி, அவர்கள் “மதுபானங்கள் உண்டுபண்ணுவதற்கு ஒப்பாக, ‘கிளர்ச்சிகொள்ள’” விரும்புகின்றனர். கொக்கேய்ன் போன்ற ஆபத்தான போதைப்பொருட்களைவிட கரைமங்கள் மலிவாகவும் அதிக எளிதில் கிடைப்பவையாகவும் இருக்கின்றன. பிரிட்டனின் நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை இவ்விதமாக அறிக்கைச் செய்தது. “கரைமங்கள் மறுபடியுமாக ஏழைகள், இளைஞர் மற்றும் சொத்துக்களைப் பறிகொடுத்தவர்கள், அதாவது குவாதமாலாவின் தெரு பிள்ளைகள், வட அமெரிக்காவின் ஒதுக்கி வைக்கப்பட்ட உள்ளூர்வாசிகள், பிரிட்டனில் விடுதிகளிலும் இரவு தங்குமிடங்களிலுமுள்ள இளைஞர் ஆகியோரின் போதைப்பொருட்களாக உள்ளன.” பிரிட்டனில், 10 பருவ வயது பெண்கள் மற்றும் ஆண்களில் ஒருவர் கரைமங்களை முகர்ந்திருக்கிறார். விளைவுகள் நிச்சயமாகவே தீங்கற்றவையாக இல்லை.
போதைப்பொருள் துர்ப்பிரயோகம் (Drug Misuse) சிறுபுத்தகம், “உள்ளிழுக்கப்பட்ட கரைமங்களின் ஆவிகள் நுரையீரல் வழியாக உறிஞ்சிக்கொள்ளப்பட்டு வேகமாக மூளையை வந்தடைகின்றன,” என்று விளக்குகிறது. கரைமங்கள் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்து, மதுபானங்களைப் போலவே, அவை தற்காலிகமான கிளர்ச்சி உணர்வை உண்டுபண்ணக்கூடும். பயன்படுத்துகிற சிலரில், அவை பல்வேறு குறுகிய காலம் நீடிக்கின்ற பிரமைகளை உண்டுபண்ணக்கூடும்—அனைத்துமே ஆரம்பத்தில் ஸ்வீத்தா விவரித்தபடி அத்தனை இன்பம் தருபவையாக இருப்பதில்லை. “நான் ஏராளமான எலிகளைப் பார்த்தேன்,” என்பதாக 14 வயதில் வச்சிரப்பசையை முகர்ந்த டேவிட் என்ற பெயர்கொண்ட ஓர் இளைஞன் சொல்கிறான். “அங்கே அவை ஆயிரக்கணக்கில் இருந்தன—சிறியவை பெரியவற்றிலிருந்து வந்துகொண்டிருந்தன. அவை என்னுடைய நண்பனைச் சாப்பிடுவதாக நான் எண்ணினேன்.” 17 வயதில் வச்சிரப்பசை முகர ஆரம்பித்த காசூஹிக்கோ என்ற பெயருடைய ஜப்பானிய இளைஞன் ஒருவன் இவ்வாறு நினைவுபடுத்திச் சொல்கிறான்: “நிலம் பிளந்து மிருகங்கள் என்னைத் தாக்குவதை நான் பார்த்தேன்.”
அப்படியென்றால், கரைமம் முகர்தல் சில இளைஞருக்கு ஏன் அத்தனை கவர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது? 13 வயதாயிருக்கையில் வச்சிரப்பசை முகர ஆரம்பித்த லீ சொல்கிறான்: “அடிப்படையில், மக்கள் இதைச் செய்வதற்குக் காரணம் நிஜத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சியாகும்.” ஆம், சில இளைஞருக்கு, கரைமங்களில் வெறித்திருப்பது கஷ்டங்களை மறப்பதற்கு ஒரு வழியாகும். மற்றவர்கள் அந்தக் கிளர்ச்சிக்காக ஏங்குகின்றனர்; பயங்கரமான பிரமை மகிழ்வூட்டும் ஒரு திகில் படம் போல இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். “மற்ற காரணங்களில், தெரிந்துகொள்ள ஆர்வம், சகாக்களின் அழுத்தத்துக்குப் பிரதிபலிப்பு, அந்தஸ்தைப் பெற முயற்சிகள், தாழ்ந்த தன்மதிப்பு மற்றும் இயலாமை உணர்வுகளை ஈடுசெய்வது அடங்கும்,” என்பதாக ஐயர்லாந்தின் சுகாதார இலாக்கா தெரிவிக்கிறது.
திடீர் மரணம்
அதன் கவர்ச்சி என்னவாக இருந்தபோதிலும், கரைமம் முகர்தல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பழக்கமாகும்! அது பிரிட்டனில் 149 மரணங்களை 1990-ல் ஏற்படுத்தியது, அது சில சமயம் ஒருசில நிமிடங்களில் கொன்றுவிடுகிறது. “திடீர் மோப்ப மரணம்” என்று அது அழைக்கப்படுகிறது. உதாரணமாக, ரேச்சல் தட்டச்சு பிழைகளைத் திருத்துவதற்கு பயன்படுத்தப்படும் ரசாயன திரவத்தை வழக்கமாக தன் சட்டையில் ஊற்றி பள்ளியில் அதை முகர்ந்து வந்தாள். ஒரு நாள் அதை அவள் பேருந்து ஒன்றில் பிரயாணம் செய்கையில் முகர்ந்தாள். அவள் பேருந்தைவிட்டு இறங்கி, கீழே விழுந்தாள். ஒரு கணம் எழுந்தாள், மறுபடியும் விழுந்துபோனாள்—உயிரிழந்தாள்! ரேச்சல் 15 வயதினளாக இருந்தாள்.
கரைமங்கள் நீங்கள் அவற்றை துர்ப்பிரயோகிக்கும் முதல் முறையே உங்களைக் கொன்றுவிடக்கூடும் என்ற உண்மையே விசேஷமாக அச்சுறுத்துவதாக உள்ளது! கரைமம் துர்ப்பிரயோகத்தை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் தரும ஸ்தாபனமான ரி-சால்வ், “1971 மற்றும் 1989-க்கு இடையே ஏற்பட்ட எல்லா கரைம துர்ப்பிரயோக மரணங்களிலும் 18 சதவீதத்தினர் முதல் முறையாக ‘முகர்ந்தவர்கள்’” என்பதாக அறிவிப்பு செய்கிறது. மரித்தவர்களில் மிகவும் இளைஞனாக இருந்தவன் ஒன்பது வயதுடையவனாக இருந்தான். மதுபான துர்ப்பிரயோகத்தைப் போல, கரைமம் துர்ப்பிரயோகம் ‘பாம்பைப்போல் கடிப்பதாகவும் விரியனைப்போல் தீண்டுவதாகவும்’ சொல்லப்படலாம்.—நீதிமொழிகள் 23:32.
முகருபவர்கள் கரைமங்களின் செல்வாக்கின்கீழ் இருக்கையில் ஏற்படக்கூடிய விபத்துக்களின் விளைவாகவும்கூட உயிரிழக்கக்கூடும். சிலர் கட்டடங்களிலிருந்து விழுந்திருக்கின்றனர் அல்லது மூழ்கிப்போயிருக்கின்றனர். மற்றவர்கள் உணர்விழந்தவர்களாகி தங்கள் சொந்த வாந்தியில் மூச்சுத் திணறியிருக்கின்றனர். சிலர் தங்கள் தலைகளைப் ப்ளாஸ்டிக் பையை வைத்து மூடியவர்களாய் முகர்ந்ததன் விளைவாகவும்கூட உயிரிழந்திருக்கின்றனர்; பையை அகற்ற முடியாதபடி அவர்கள் அளவுக்கு அதிகமாக வெறித்துவிட்டு மூச்சுத் திணறிவிட்டிருக்கிறார்கள். இன்னும் மற்றவர்கள் கரைமங்கள் தீப்பற்றிக்கொண்ட போது எறிந்து மாண்டிருக்கின்றனர்.
சரீர தூய்மைக்கேடும் மற்ற அபாயங்களும்
இப்படிப்பட்ட தீவிரமான பின்விளைவுகளை எல்லாரும் அனுபவியாதிருந்த போதிலும், நிபுணர் ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்: “வழக்கமாக துர்ப்பிரயோகம் செய்பவர் தன்னுடைய ‘தேகத்துக்கு’ தூய்மைக்கேட்டை விளைவிப்பதை அறிவார், அவர் மார்பு வலி, சமநிலை இழப்பு, தலைவலி, ஞாபகசக்தி குறைபாடு இன்னும் ஏராளமான மற்ற நோய்க்குறிகளை அனுபவித்தாலும் அவை அவரால் அபூர்வமாகவே ஒப்புக்கொள்ளப்படுகின்றன.” (முன்னால் குறிப்பிடப்பட்ட) லீ சொல்கிறான்: “நான் என் வாழ்க்கையில் எக்காலத்திலும் அனுபவித்திராத மிக மோசமான தலைவலி எனக்கு வந்தது.” ரி-சால்வ் அமைப்பு, கரைமங்களை முகருதல் சிறுநீரகத்துக்கும் கல்லீரலுக்கும் சேதத்தை உண்டுபண்ணி, மனபலத்தை அழிக்கவும் மனச்சோர்வை ஏற்படுத்தவும்கூடும் என்று சொல்கிறது.
பின்பு, ஒழுக்க சம்பந்தமான அபாயங்கள் இருக்கின்றன. முகரும் பழக்கமுள்ள சிலர், தங்கள் பழக்கத்தைத் தொடர திருடர்களாகியிருக்கின்றனர். அல்லது ஜப்பானின் டெய்லி யோமியூரி-ல் அறிவிக்கப்பட்டதைச் சிந்தித்துப் பாருங்கள்: “ஒரு பருவ வயது பெண்ணின் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூன்று இளைஞரில் ஒருவன் அந்தப் பெண்ணைக் கொலைச் செய்கையில் தான் அந்தச் சமயத்தில் [கரைமங்களின்] செல்வாக்கின்கீழ் இருந்தபடியால் எந்தக் குற்றவுணர்ச்சியும் தனக்கு ஏற்படவில்லை என்று [சொன்னான்].”
கடைசியாக, கரைமம் துர்ப்பிரயோகம் கரைமங்களின் மேல் உணர்ச்சிப்பூர்வமான சார்புநிலையில் விளைவடையக்கூடும்—பழக்கத்துக்கு அடிமையாதல். “கரைமங்களைத் துர்ப்பிரயோகம் செய்தவர்களில் சுமார் 10 சதவீதத்தினர் வழக்கமாக முகருபவர்களானார்கள்,” என்று ஸ்காத்லாந்தின் க்ளாஸ்கோ ஹெரால்ட் சொல்கிறது. இதனால் ஒருவருடைய உணர்ச்சி சம்பந்தமான மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சி தடைபடவே முடியும். 1 கொரிந்தியர் 14:20-லுள்ள பைபிளின் வார்த்தைகளைச் சிந்தியுங்கள்: “நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; . . . புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.” ஒருவர் இந்த விஷயத்தில் எவ்வாறு வளருகிறார்? பைபிள் எபிரெயர் 5:14-ல் (கத்.பை.) விளக்குகிறது: “பெரியவர்களுக்குத் தகுந்ததோ கெட்டி உணவு. அவர்களுக்கு நன்மை தீமை அறிவதற்குப் பயிற்சி பெற்ற பகுத்தறிவு இருக்கிறது.” பழக்கத்துக்கு அடிமையானவர் தன் பகுத்தறிவுத் திறன்களை வளர்க்க தவறுகிறார். பிரச்னைகளை எதிர்ப்படுவதற்குப் பதிலாக, போதைப்பொருள் உண்டாக்கும் மயக்கத்துக்குள் செல்வதன் மூலம் அவற்றிலிருந்து தப்பிக்கொள்ள முயற்சிசெய்கிறார். வழக்கமாக முகருகிறவர்கள் “முதிர் பருவத்துக்குள் செல்ல இயலாதவர்களாய் பருவ வயதினராகவே அடைத்து வைக்கப்படுகிறார்கள்,” என்பதாக இப்போது இளைஞர் பத்திரிகை சொன்னது.
அதை முயற்சி செய்ய வேண்டாம்!
கரைமம் முகர்வதை முயற்சித்திருக்கும் சகாக்களை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம், முகர்ந்தறிய ஆர்முள்ளவராய் இருப்பது இயற்கையே. ஆனால் பைபிள் சொல்கிறது: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) உங்கள் சரீரத்தைக் கறைப்படுத்தி அல்லது தற்காலிகமாகவும்கூட உங்கள் மனக்கட்டுப்பாட்டை இழக்கச்செய்கின்ற ஏதோவொன்றை ஏன் பரிசோதிக்க வேண்டும்? நமக்குக் கடவுளுடைய வார்த்தையின் புத்திமதி ‘தெளிந்தவர்களாயிருக்க’ வேண்டுமென்பதே. (1 தெசலோனிக்கேயர் 5:6) “நாம் நிதான புத்தியுள்ளவர்களாயிருப்போமாக,” என்பதே இந்தச் சொற்றொடரின் நேர்ப்பொருளாகும். தன்னுடைய அருமையான சிந்திக்கும் திறமைகளை அசுத்தப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக ஒரு கிறிஸ்தவன் ஞானமாக அவற்றைப் பாதுகாக்கிறான்.—நீதிமொழிகள் 2:11; 5:2.
காசூஹிக்கோ சொல்கிறான்: “இந்தப் பழக்கத்தை ஆரம்பித்ததற்காக நான் வருந்துகிறேன்.” லீ இவ்விதமாகச் சொல்வதன் மூலம் ஒப்புக்கொள்கிறான்: “அது மடத்தனமானது. அது செய்வதற்கு மிக மிக ஆபத்தான ஒரு காரியமாகும்.” அந்தப் பழக்கத்தை ஆரம்பிக்கவே முயற்சிசெய்யாமல், அதிகமான வேதனையிலிருந்தும் துயரத்திலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பைபிள் சொல்கிறவிதமாக நடந்துகொள்ளுங்கள்: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.”—நீதிமொழிகள் 22:3.
ஆனால் இந்த ஆலோசனையைப் பொருத்துவது ஒருவேளை சுலபமாயிராது. கரைமம் துர்ப்பிரயோகத்தில் இளைஞர் சிக்கிக்கொள்வதற்கு அதிக பொதுவான காரணங்களில் ஒன்று “சகாக்களின் அழுத்தம்” என்பதாகச் சொல்லப்படுகிறது. “வச்சிரப்பசை முகருவதில் எனக்கு ஆர்வமூட்டியது என் அண்ணன்,” என்பதாக இளைஞன் டேவிட் சொல்கிறான். “என்னுடைய நண்பர்கள் எனக்கு அதை அறிமுகப்படுத்தினார்கள்,” என்று காசூஹிக்கோ கூடுதலாகச் சொல்கிறான். ஆம், 1 கொரிந்தியர் 15:33 (NW) சொல்கிறவிதமாகவே, “கெட்ட கூட்டுறவுகள் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுக்கும்.” சகாக்கள் ஏன் உங்கள் வாழ்க்கையை நாசமாக்கிட நீங்கள் அனுமதிக்க வேண்டும்? நம்முடைய பரலோக தந்தை யெகோவா தேவன் அறிவுரைகூறுகிறார்: “என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.”—நீதிமொழிகள் 1:10.
போதைப்பொருட்களை உபயோகிக்கும்படி மற்றவர்கள் உங்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்தால் ஞானமாக அதை உங்கள் பெற்றோருக்குத் தெரியப்படுத்துங்கள். முடியாது என்று சொல்லும் உங்கள் தீர்மானத்தை உறுதியாக்க அவர்கள் உதவிசெய்ய முடியும். மறுபட்சத்தில், நீங்கள் அழுத்தப்படுவதாக உணருவதால் அல்லது பிரச்னைகளில் திணறிக்கொண்டிருப்பதால் கரைமம் முகர்தலை முயற்சிசெய்ய தூண்டப்படலாம். உங்கள் பிரச்னைகளைக் குறித்து உங்கள் பெற்றோரிடம் அல்லது முதிர்ச்சியுள்ள, பரிவிரக்கமுள்ள வயதுவந்த ஒருவரிடம் பேசுவதே அழுத்தத்திலிருந்து விடுபட மிக மேம்பட்ட வழியாகும். உங்களுக்கு வழிநடத்துதல் தேவை, போதைப்பொருள் உண்டாக்கும் தப்பியோடுதல் அல்ல. சமாளிப்பதற்கு உங்களுக்கு உதவிசெய்ய ஜெபத்தின் ஏற்பாட்டையும்கூட நீங்கள் அனுகூலப்படுத்திக்கொள்ளலாம். “எக்காலத்திலும் [கடவுளை] நம்புங்கள்,” என்று சங்கீதக்காரன் சொல்கிறார். “அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.”—சங்கீதம் 62:8.
கரைமம் முகர்தல் கிளர்ச்சியூட்டுவதாய் தோன்றக்கூடும், ஆனால் அது உங்கள் பிரச்னைகளைத் தீர்க்காது. ஆம், அது உங்கள் வாழ்க்கையை நாசமாக்கிடக்கூடும். புத்திசாலியாக இருங்கள். அதை ஒருபோதும் முயற்சிசெய்துகூட பார்க்க வேண்டாம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒருசில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 13-ன் படம்]
சகாக்களின் அழுத்தம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பழக்கத்துக்குள் உங்களைக் கவர்ந்திழுக்க அனுமதியாதேயுங்கள்