இளைஞர் கேட்கின்றனர்
எதிர்பாலாரை நினைக்காதிருக்க முடியவில்லையே, ஏன்?
“நீங்கள் வாலிபராக இருக்கும்போது பாலுணர்ச்சியைப் பற்றிய உங்களுடைய ஆர்வம் மிக முக்கியமான ஒரு காரியமாக இருக்கிறது,” என்று விவரித்தாள் வாலிபப்பெண் லரேன். “நீங்கள் எப்பொழுது பார்த்தாலும் பாலுணர்ச்சி சம்பந்தமான காரியங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.”
நீங்கள் விழித்திருக்கும் நேரத்தில்—பெரும்பாலான நேரத்தை இல்லையென்றாலும்—அதிகப்படியான நேரத்தை, எதிர்பாலாரைப்பற்றி நினைப்பதிலும், பேசுவதிலும், அல்லது அவர்களைப் பார்ப்பதிலும் செலவிடுகிறீர்களா? உங்களுடைய வீட்டுப்பாடத்தைச் செய்துதீர்க்க உட்கார்ந்துவிட்டு, அன்று பிற்பகல் நீங்கள் பார்த்த ஒரு மன்மதப் பையனையோ கட்டழகுப் பெண்ணையோ பற்றிய கனவுலகில் ஆழ்ந்துவிடுகிறீர்களா? உங்களுடைய உரையாடல்கள் வழியில்செல்லும் கவர்ச்சியானவர்கள்மீது வீசுகிற கள்ளப்பார்வையால் இடைநிறுத்தம் செய்யப்படுகின்றனவா? எதிர்பாலார்களை நினைப்பதிலிருந்து உங்கள் எண்ணத்தைத் திருப்பவே முடியவில்லை என்பதனால்—வாசிப்பதும் படிப்பதும் அல்லது கிறிஸ்தவ கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கவனம் செலுத்துவதும்கூட கடினமாக இருக்கிறதா?
ஆம் என்றால், உங்களுக்குக் கிறுக்குப் பிடிக்கிறது என்று நீங்கள் பயப்படலாம்! வாலிபன் ஒருவன் ஒப்புக்கொண்டான்: “நான் ஒரு பாலுணர்வு பித்தனாகவோ அதைப்போன்றவனாகவோ இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதாவது, அடிக்கடி நான் பெண்களைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன், கற்பனை செய்கிறேன் . . . நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா?” எழுத்தாசிரியை லிண்டா மாடேரஸ் குறிப்பிடுவதுபோல, நீங்கள் இளைஞராயிருக்கும்போது, “மோகம் அல்லது பாலுணர்ச்சிகள் மிகவும் தீவிரமாக இருக்கலாம். சிலசமயங்களில், மோகத்தையும் பாலுணர்வையும்பற்றி மட்டுமே உங்களால் நினைக்க முடிகிறது என்றும்கூட தோன்றலாம்!”a
பாலுணர்ச்சிகள்தாமே கெடுதி விளைவிப்பவையாக இல்லை. ஒருவரோடொருவருக்கு ஏற்படும் பலமான கவர்ச்சியோடு கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்தார். இது அவர்கள் திருமணம் செய்துகொண்டு, நீதியான சந்ததியைக்கொண்டு ‘பூமியை நிரப்புவதற்கான’ கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக இருந்தது. (ஆதியாகமம் 1:28) திருமணமான தம்பதிகளுக்கு பாலுறவானது பேரின்பத்தின் ஒரு ஊற்றுமூலமாக இருக்கக்கூடும் என்பதை பைபிளும் ஒளிவுமறைவின்றி கூறுகிறது.—நீதிமொழிகள் 5:19.
பிரச்சினை என்னவென்றால், அபூரண மனிதர்களாக நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது நமக்கு அடிக்கடி கடினமானதாக இருக்கிறது. (ஆதியாகமம் 6:5-ஐ ஒப்பிடவும்.) “மாம்சத்தின் இச்சை” கட்டுக்கடங்காமல் பலமானதாக இருப்பதாக தோன்றலாம்! (1 யோவான் 2:16) மேலும் நீங்கள் இளைஞராயிருப்பதால், எதிர்பாலாரைப்பற்றி நினைக்காதிருப்பது உங்களுக்கு குறிப்பாக கடினமானதாக இருக்கலாம். ஏன் அப்படி?
பூப்புப்பருவத்தின் அழுத்தங்கள்
ஒரு காரணம் என்னவென்றால், நீங்கள் ‘இளமையின் மலர்ச்சியை’—பாலின ஆசைகள் அவற்றின் சிகரத்தை எட்டும் பருவத்தை—நெருங்குகிறீர்கள். (1 கொரிந்தியர் 7:36, NW) டாக்டர் பெட்டி B. யங்ஸ் விவரிக்கிறார்: “பூப்புப்பருவத்தின்போது ஹார்மோன் அளவுகள் திடீரென அதிகரிக்கின்றன. ஒரு பிள்ளையின் உடலை பருவமடைந்தவரின் உடலாக மாற்றும் சரீர மாற்றங்களைத் தொடங்கி வைப்பதற்கு இவையே காரணமாக இருக்கின்றன. வளரிளமைப் பருவத்தோடு சேர்ந்து வருகிற அதிகரித்துவரும் ஹார்மோன் அளவுகள் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் நடத்தைச் சம்பந்தமான அநேக மாற்றங்களைக் கொண்டுவருகின்றன.”
எவ்வகையான மாற்றங்கள்? மிகப் பெரிய மாற்றங்கள் பெரும்பாலும் எதிர்பாலாரிடமான ஒருவருடைய உணர்ச்சிகளை உட்படுத்துகின்றன. எழுத்தாசிரியை ரூத் பெல் சொல்கிறார்: “பூப்புப்பருவத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள் அடிக்கடி தீவிரமான பாலுணர்ச்சிகளைக் கொண்டுவருகின்றன. பாலினத்தைப்பற்றி அதிகம் யோசித்துக் கொண்டிருப்பதையும், பாலுணர்ச்சிகள் மிகச் சுலபமாக தூண்டிவிடப்படுவதையும், சிலசமயங்களில் பாலின எண்ணங்களிலேயே மூழ்கிவிடுவதையும்கூட நீங்களே அனுபவித்திருக்கலாம். [நாங்கள் பேட்டிகண்ட] அநேக பருவவயதினர் பாலின சக்தியாலும் கிளர்ச்சியாலும் தங்களுடைய முழு உடலும் பற்றியெரிவதைப் போல் உணர்ந்துகொண்டு தெருவில் நடப்பதாகவும் அல்லது பஸ்ஸில் உட்கார்ந்திருப்பதாகவும் விவரித்தனர்.” எதிர்பாலாரைப் பற்றிய எண்ணங்களில் இவ்வாறு மூழ்கியிருப்பது இளைஞர் சமாளிக்கவேண்டிய “பாலியத்துக்குரிய இச்சை”கள் பலவற்றில் ஒன்றாக இருக்கிறது.—2 தீமோத்தேயு 2:22.
தகவல்தொடர்பு மூலங்களின், நண்பர்களின் செல்வாக்கு
எனினும், இந்த ஆசையின் தீக்கொழுந்து, பெரும்பாலும் வெளியிலிருந்து செலுத்தப்படும் செல்வாக்குகளால் விசிறிவிடப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள், இசை, திரைப்படங்கள் போன்றவற்றின் வாயிலாக பாலுறவு செய்கையைத் தூண்டிவிடுவதற்கு கங்கணம்கட்டிக்கொண்டு இருக்கிற ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். முறைகெட்ட பாலுறவு நடத்தையில் விழுந்த ஒரு கிறிஸ்தவ இளைஞன் அறிவிக்கிறான்: “பள்ளியில் ஆபாசம் சர்வசாதாரணமாக இருக்கிறது. ஆகவே இது பாலுறவுக்கான ஒரு உண்மையான வேட்கையை ஏற்படுத்தியிருக்கிறது. சரியானது எது என்பது எனக்குத் தெரிந்திருந்தது, ஆனால் என்னுடைய பாலுணர்ச்சிகள் பலமானவையாக இருந்தன.”
ஆகவே பெற்றோருக்கென்று எழுதப்பட்ட புத்தகம் ஒன்று சொல்கிறது: “தகவல்தொடர்பு மூலங்கள் வல்லமையான ஆதிக்கத்தைக் [கொண்டிருக்கின்றன]. நம்முடைய பருவவயதினர் தங்களுடைய வயதிலிருக்கும் மாடல்களாக இருக்கும் வாலிபர்கள் ஆபாசமாக நடிப்பதையும் ஆபாசமான துணிகளை விற்பதையும் பார்க்கிறார்கள்; திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் வளரிளமைப் பருவ பாலுறவு ஊக்கப்படுத்தப்படுவதைக் காண்கிறார்கள்.” உண்மையில் கேபிள் டெலிவிஷனும் வீடியோ கேசட் ரெக்கார்டர்களும் அநேக இளைஞர் அப்பட்டமான ஆபாசங்களை எளிதில் காண வழிவகுத்திருக்கின்றன. “தகவல்தொடர்பு மூலங்கள் ஒரு இளைஞனின் ஆர்வத்தையும் ஆசைகளையும் தூண்டிவிடுகின்றன,” என்று ஒப்புக்கொள்கிறான் ஒரு இளைஞன்.
எனினும், ஒரு புத்தகம் கெட்ட பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்க அதன் ஒவ்வொரு பக்கமும் ஆபாசமாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. கிறிஸ்தவ இளம்பெண் ஒருத்தியின் அனுபவத்தைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவள் ஞாபகப்படுத்திப் பார்க்கிறாள்: “அதுவும் கண்ணியமான ஒரு புத்தகத்தைத்தான் நான் வாசித்தேன்; அதில் ஏதோ ஒன்று அல்லது இரண்டு பாராக்கள் மட்டுமே பால்சம்பந்தப்பட்ட காரியங்களை விவரித்தன. நான் அந்தப் பாராக்களையெல்லாம் படிக்காமல் விட்டுவிட்டுப் போக தொடங்கினேன். ஆனால் ஏதோவொன்று அவற்றிற்குத் திரும்பிப்போய் படிக்கச்செய்தது. அது என்னே ஒரு தப்பாகிவிட்டது! அதன் விளைவாக நான் பயங்கரமான கனவுகளைக் கண்டேன்.”
உங்களுடைய நண்பர்களும் கூட்டாளிகளும்கூட உங்களுடைய சிந்தனையின்மீது அதிக செல்வாக்கைச் செலுத்தமுடியும். வளரிளமைப் பருவ வளர்ச்சியின் பேரிலான ஒரு புத்தகம் சொல்கிறது: “தெரு முனைகள், பள்ளிக்கூட ஹால்கள், சிற்றுண்டிச் சாலைகள், தெருவோரக் கடைகள் போன்ற இடங்களில் இருந்துகொண்டு பையன்களையும் பெண்களையும் நோட்டம்விடுவது பொதுவான ஒரு பொழுதுபோக்காக இருக்கிறது.” மேலும் இளைஞர் எதிர்பாலாரைப் பார்க்காதபோது அவர்களைப்பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருக்கின்றனர். “நான் சிறுவனாக இருந்தபோது, பாலுறவுகொள்ளும்படி ஏற்பட்ட அழுத்தங்கள் மிகவும் பலமானவையாக இருந்தன . . . பள்ளியில் உள்ள உடைமாற்றும் அறையில், பேசப்படுவதெல்லாம் இதைப்பற்றிதான்,” என்று ஒப்புக்கொள்கிறான் 18-வயது ராபர்ட். “சக பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசப்படக்கூடிய நம்பர் 1 விஷயம் பால் சம்பந்தப்பட்ட காரியங்களே. ஆகவே நீங்கள் அதைப்பற்றி அடிக்கடி சிந்திக்கும்படி வற்புறுத்தப்படுகிறீர்கள்,” என்று ஒப்புக்கொள்கிறாள் மற்றொரு வாலிபப்பெண்.
வித்தியாசமானவர்களாக இருப்பது கடினம்தான். உங்களுடைய சகாக்கள் எப்போதும் எதிர்பாலாரைப் பற்றியே—ஒருவேளை கீழ்த்தரமாக, ஒழுக்கம்கெட்ட விதத்தில்—பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்களோடு சேர்ந்து பேசவேண்டும் போலத் தோன்றலாம். ஆனால் பைபிள் எச்சரிக்கிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
சமநிலைக்கான தேவை
எதிர்பாலாரைப் பார்ப்பதோ அவர்களைப்பற்றி பேச விரும்புவதோ தப்பு என்று இதெல்லாம் அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, சில ஆண்களும் பெண்களும் பார்ப்பதற்குக் கவர்ச்சியானவர்களாக இருந்தனர் என்ற உண்மையை பைபிள் எழுத்தாளர்கள்கூட கவனத்தில் கொண்டிருந்தனர். (ஒப்பிடவும்: 1 சாமுவேல் 9:2; எஸ்தர் 2:7.) ஆகவே, ஒரு பெண் அழகாய் இருக்கிறாள் என்று வெறுமனே பார்த்ததற்காக ஒருவரை இயேசு கண்டனம் செய்யவில்லை. ஆனால் ‘ஒரு ஸ்திரீயை இச்சையோடு தொடர்ந்து பார்க்க’ வேண்டாம் என்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார். (மத்தேயு 5:28, NW) அதைப்போலவே, குருட்டுத்தனமான மோகக் காற்று உங்களை அடித்துக்கொண்டுபோக விட்டுவிட முடியாது. “தேவனை அறியாத அஞ்ஞானிகளைப் போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து” கொள்ளவேண்டும் என்று 1 தெசலோனிக்கேயர் 4:4, 5-ல் நாம் சொல்லப்படுகிறோம்.
பாலின எண்ணங்கள் அவ்வப்போது நம்முடைய மனதில் தோன்றலாம். ஆனால் அவற்றையே சிந்தித்துக்கொண்டிருப்பது வெறித்தனத்திற்கு சமமானதாக மாறலாம், மேலும் பின்னர் சிக்கலான பிரச்சினைகளும் எழும்பலாம். “சிந்தனைகளின் மிகுதியினால் கனவு நிச்சயமாக உண்டாகிறது,” என்று பிரசங்கி 5:3 (NW) சொல்கிறது. ஆம், சொந்த ஆசைகளைப்பற்றிய யோசனையில் அமிழ்ந்துகிடக்கும் ஒருவன் அடிக்கடி ஆரோக்கியமற்ற கற்பனைகளையும் பகல்கனவுகளையும் வளர்க்க ஆரம்பிக்கிறான்.b
பாலின எண்ணங்கள் அவ்வப்போது வருவது சாதாரணமானதாக இருந்தாலும், அவற்றைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பது வித்தியாசமான காரியமாக இருக்கிறது. “சிலசமயங்களில் அவனோ அவளோ கிட்டத்தட்ட முழு இரவும் பகலும் தான் கற்பனையுலகில் மிதப்பதாக காண்பார். அவை நிஜத்தைவிட மெய்யானவையாக தோன்றத் தொடங்கும்,” என்று குறிப்பிடுகிறார் எழுத்தாசிரியை ரூத் பெல். மோகத்தில் சிக்குண்ட ஒரு வாலிபப் பெண்ணைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவள் சொல்கிறாள்: “எனக்கு வயது 12 1/2, என்னுடைய ராஜ்ய மன்றத்துக்கு வருகிற ஒரு பையன் மேல் எனக்கு அதிக ஆசையாக இருக்கிறது. திருமணம் செய்துகொள்வதற்காக பழகும் வயதை நான் அடையவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் அவன்மேல் உள்ள என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதைக் கடினமாகக் காணும் ஒரு கட்டத்தில் இருக்கிறேன்.” இதே ரீதியில், சில இளைஞர் தங்களுடைய மனது மோகத்தாலும் பாலுணர்ச்சியைத் தூண்டிவிடும் எண்ணங்களாலும் நிறைந்திருக்கும்போது, வாசிப்பதையும் படிப்பதையும் வகுப்பில் பாடத்தைக் கவனிப்பதையும் அல்லது கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தயார் செய்வதையும் கடினமாக காண்கின்றனர்.
அத்தகைய தூண்டுதல்களை சுயபுணர்ச்சியின் மூலம் தணிக்க முற்பட்டாலும் சிக்கலான பிரச்சினைகள் விளைவடையும். “ஆகையால், விபசாரம், அசுத்தம், [பாலுணர்ச்சிப் பசி, NW], துர்இச்சை, . . . பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை [மரத்துப்போகச் செய்யுங்கள், NW],” என்று பைபிள் கிறிஸ்தவர்களைத் தூண்டுவிக்கிறது. (கொலோசெயர் 3:5) சுயபுணர்ச்சி என்பது கிறிஸ்தவர்களால் தவிர்க்கப்படவேண்டிய அசுத்தமான பழக்கமாகவும், ‘பாலுணர்ச்சிப் பசியை மரத்துப்போகச் செய்வதற்கு’ (NW), நேரெதிரானதாகவும் இருக்கிறது. அதற்கு மாறாக, அது அதைத் தூண்டிவிட்டு வளர்த்துவிடுகிறது. அடிக்கடி அத்தகைய ஆசை நிஜமாக மாறுகிறது. பைபிள் எழுத்தாளர் யாக்கோபு விவரிக்கிறார்: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்.”—யாக்கோபு 1:14, 15.
அப்படியானால், எதிர்பாலாரை நினைக்காதிருக்க நீங்கள் என்ன செய்ய முடியும்? இந்தத் தொடரில் வரும் அடுத்த கட்டுரையை தயவுசெய்து படியுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a மறுபட்சத்தில், எழுத்தாசிரியர் ஆல்வின் ரோஸன்பாம் இளைஞருக்கு இவ்வாறு நினைவூட்டுகிறார்: “பாலுணர்ச்சிகளும் மனப்பான்மைகளும் அதிக வித்தியாசப்படுகின்றன. சிலர் பாலுணர்ச்சியைப்பற்றி நினைக்காதிருக்க முடியாமல் தோன்றுகையில், மற்றவர்களோ பாலுணர்ச்சியே அற்றவர்களாக இருக்கின்றனர். . . . இந்த இரண்டு பிரதிபலிப்புகளுமே இயல்பானவைதான்.” அவர் தொடர்ந்து கூறுகிறார்: “ஒவ்வொரு நபரும் வித்தியாசப்பட்ட வீதத்தில் வளர்கின்றனர்.”
b பகல்கனவு காணுதல் பேரில், இந்தப் பத்திரிகையின் ஜூலை 8 மற்றும் ஜூலை 22, 1993-ன் ஆங்கில பிரதிகளில் தோன்றிய கட்டுரைகளைப் பார்க்கவும்.
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
“மோகம் அல்லது பாலுணர்ச்சிகள் மிகவும் தீவிரமாக இருக்கலாம்”
[பக்கம் 26-ன் படம்]
டிவி காட்சிகளும் பத்திரிகை விளம்பரங்களும் அடிக்கடி எதிர்பாலினத்தவர்மீது ஒரு கீழ்த்தரமான அக்கறையை ஊக்குவிக்கின்றன