உலகத்தைக் கவனித்தல்
கத்தோலிக்க ஒழுக்க இறைமையியலும் இளம் இத்தாலிய பெண்களும்
இளம் இத்தாலிய பெண்கள், கத்தோலிக்கராக இருந்தாலும் சரி அவ்வாறு இல்லாவிட்டாலும் சரி, பாலுறவு ஒழுக்கநெறி குறித்ததில் போப்பைச் சட்டைசெய்வதே இல்லை. உண்மையில், இத்தாலிய தினசரி செய்தித்தாளாகிய லா ரிப்பப்லிக்காவில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பேட்டிகாணப்பட்ட 15 மற்றும் 24 வயதுக்கு இடைப்பட்ட இளம் பெண்களில், 90.8 சதவீதமானவர்கள், “பெண்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு உறுதியளிக்கப்பட வேண்டும்,” என்று நம்பினர்; 66.7 சதவீதத்தினர், “‘தேவையற்ற கருத்தரிப்பு ஒன்றை’ கருச்சிதைவு செய்யும் உரிமையை” ஆதரித்தனர். மேலுமாக, அவர்களில் 80.2 சதவீதத்தினர், “ஒத்தப்பாலின புணர்ச்சிக்காரரின் உரிமைகள் உறுதியளிக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும்” என்று நம்பினர்.
பச்சிளம் குழந்தையின் முடியில் நச்சுப்பொருட்கள்
புகைப்பவர்கள் விடும் புகையை கருவுற்றிருக்கும் புகைபிடிக்காத ஒரு பெண் சுவாசிக்கையில், அது சிசுவைச் சென்றெட்டுகிறது என்பதை நிரூபிக்க இப்போது உயிரியல் சார்ந்த அத்தாட்சி இருக்கிறது என்று கனடாவிலுள்ள டோரன்டோவின் தி க்ளோப் அண்ட் மெய்ல் சொல்லுகிறது. டோரன்டோவிலுள்ள ஹாஸ்பிட்டல் ஃபார் சிக் சில்ரன் என்பதில் ஒரு மருந்தியல் வல்லுநராக இருக்கும் டாக்டர் கிடியன் காரன் என்பவரால் வழிநடத்தப்பட்ட ஆராய்ச்சிக் குழு ஒன்றின் புதிய கண்டுபிடிப்புகள், பச்சிளம் குழுந்தைகளின் முடிகளில் நிகோட்டினும் அதன் விளைவுப்பொருளாகிய கோட்டினினும் இருப்பதைக் காண்பிக்கின்றன. புகைபிடிக்காத தாய்மார் ஒரு நாளில் குறைந்தது இரண்டு மணிநேரங்களாவது, வீட்டிலோ வேலை செய்யுமிடத்திலோ மற்றவர்கள் புகைத்துவிடும் புகைக்கு வெளிப்படுத்தப்பட்டார்கள். டாக்டர் காரனின்படி, மற்றவர்கள் புகைத்துவிடும் புகையை வழக்கமாகச் சுவாசிப்பது “ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து நான்கு சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு” ஒத்ததாக இருக்கக்கூடும். இந்தப் புதிய ஆராய்ச்சி “புகைத்துவிடப்படும் புகைக்கு வெளிப்படுத்தப்பட்டிருப்பது, பிள்ளைகளின் நடத்தை மற்றும் அறிவாற்றலின் வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்ற கருத்தை வெளியிட்ட முந்தின ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பதாய் இருக்கிறது,” என்று தி க்ளோப் மேலுமாகச் சொல்லுகிறது. “நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வழக்காடும் சூழலில், இன்னும் 10-லிருந்து 20 வருடங்களுக்குள், புகைபிடித்தலின் காரணமாகக் குறைகளுடன் பிறந்ததற்காகக் குழந்தைகள் தங்கள் பெற்றோர்மீது வழக்குத் தொடராமல் இருப்பார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது” என்று டாக்டர் காரன் எச்சரித்தார்!
சர்வதேச அளவில் கடைத்திருட்டு
சிலியின் சான்டியாகோவிலுள்ள ஒரு “திருட்டு பள்ளி”யைச் சேர்ந்த “பட்டதாரிகள்,” கனடாவிலுள்ள மான்ட்ரீல் மற்றும் டோரன்டோவிலும் சில ஐ.மா. நகரங்களிலும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர் என்று ஒரு கனடாவின் செய்திப் பத்திரிகையாகிய லக்டுயலிடே அறிக்கைசெய்கிறது. ஜேப்படி செய்வதற்கும் கடைத்திருட்டுக்குமான வழிமுறைகளை அந்தப் “பள்ளி” கற்பிக்கிறது; மேலும் கனடாவின் சட்டங்களையும் போலீஸ் செயல்முறைகளையும் பற்றி கல்வி அளிக்கிறது. “பட்டதாரிகள்” தொகுதிகளாக வேலை செய்கிறார்கள்; போலி சான்றுப்பத்திரங்களை எடுத்துச் செல்கிறார்கள்; தங்கள் கொள்ளைப் பொருள்களை மறைப்பதற்காக உள்துணிவைத்துத் தைக்கப்பட்ட விசேஷித்த உடைகளோடும் வெகுமதி அலங்கரிப்பு பொதித்தாள்களோடும் தயாராக வருகிறார்கள். இந்த வலைப்பின்னல்போன்ற உட்தொடர்பை மான்ட்ரீல் அர்பன் கம்யூனிட்டி போலீஸ் கண்டுபிடித்து, 1991 முதல், திருடப்பட்ட துணிகளைப் பலமுறை கைப்பற்றியிருக்கிறது. சமீபத்தில், அவர்கள் கைப்பற்றிய மிகப் பெரியளவான கொள்ளை, சிலியைச் சென்றெட்டும்படி, துணிகளால் நிரப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு கொள்கலமாகும். என்றபோதிலும், போலீஸாருக்கும் கடை வைத்திருப்பவர்களுக்கும், இந்தக் கடைத்திருட்டு சர்வதேச வலைப்பின்னல் ஓர் அச்சுறுத்தும் சவாலாக இருக்கிறது. சர்வதேச போலீஸாருக்கு “இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாததால்” அவர்களை இதில் ஒத்துழைக்கச் செய்வது கஷ்டம் என்று லக்டுயலிடேயில் மேற்கோள் காட்டப்பட்ட மான்ட்ரீலில் துப்பறிபவர் ஒருவர் சொன்னார்.
உலகளாவ அகதிகள் நெருக்கடி
1992-ல், கிட்டத்தட்ட 10,000 மக்கள் ஒவ்வொரு நாளும் அகதிகளானார்கள். இவ்வாறு, ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர் ஆணையரின் (UNHCR) உலக அகதிகளின் நிலை (The State of the World’s Refugees) என்ற புதிய புத்தகம் வலியுறுத்துகிறது. 1992-ல் உலகெங்கும் 1 கோடியே 82 லட்சம் அகதிகள் இருந்தனர்; இது 20 வருடங்களுக்கு முன் இருந்ததைவிட எட்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையாகும். கூடுதலாக, 2 கோடியே 40 லட்சம் பேர் தங்கள் சொந்த நாடுகளிலேயே குடியிழந்தவர்களாகி இருக்கின்றனர். மொத்தத்தில், உலகில் சுமார் ஒவ்வொரு 130 பேருக்கும் ஒருவர் கட்டாயமாக அகதியாக்கப்படுகிறார். அகதிகள் என்ற UNHCR பத்திரிகை குறிப்பிடுகிறது: “உண்மையான அகதிகள் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை தணியாமல் அதிகரிப்பது, 3,500-வயது சென்ற அடைக்கலம்புகும் பாரம்பரியத்தின்மீது கடுமையான அழுத்தத்தைக் கொண்டுவந்து, அதைக் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகச் செய்திருக்கிறது.”
தூங்கிவழிகிறீர்களா?
நீங்கள் இரவில் போதுமான அளவு தூங்குகிறீர்களா? அதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி என்னவென்றால், அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு, பின்னர் ஊக்கமற்ற ஒரு பேச்சை ஒரு அனலான அறையிலிருந்து கேட்பதற்குச் செல்லுங்கள் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார். நீங்கள் நன்கு ஓய்வெடுத்திருந்தால் சோர்வாகவும் அமைதியற்றவராகவும் உணருவீர்கள், ஆனால் தூங்கிவழிய மாட்டீர்கள். இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் சொல்லுகிறபடி, 10 கோடி அமெரிக்கர்கள் போதுமான அளவு தூங்குவதில்லை என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு இரவில், எட்டிலிருந்து எட்டரை மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது; 17-லிருந்து 25 வயதுகளில் இருப்பவர்களுக்கு இன்னும் கூடுதலாகத் தேவைப்படுகிறது. அநேகர் தங்களுக்கு உண்மையில் தேவைப்படுவதைவிட குறைந்த அளவு தூக்கத்தோடே சமாளித்தாலும், தூக்கம் கிடைக்காத மக்கள் தவறுகளைச் செய்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் ஒரு “தூக்கக் கடனை”யும் சேகரிக்கிறார்கள். ட்ரிப்யூன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பெற்றோர் தங்களுடைய பருவயதினரின் ‘சோம்பலை’ பற்றி வருந்துகின்றனர், ஏனென்றால் வார இறுதிகளில் அவர்கள் மதியம் வரையாகத் தூங்குகிறார்கள்; ஆனால் இந்த இளைஞரில் பெரும்பாலானோர், அந்த வார முழுவதிலும் சேர்ந்திருந்த தங்களுடைய தூக்கக் கடனில் கொஞ்சத்தைச் சரியீடுசெய்யவே முயலுகிறார்கள்.”
மதகுருக்களின் துர்ப்பிரயோகம் அம்பலப்படுத்தப்பட்டது
கனடாவில் பாலின துர்ப்பிரயோகம் சம்பந்தமான பெரிய விசாரணைகள் ஒன்றில் காத்தலிக் கிறிஸ்டியன் பிரதர்ஸை உட்படுத்திய முடிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது. ஒன்டாரியோவில் அக்ஸ்பிரிஜிலுள்ள St. ஜான் பள்ளியிலிருந்தும் ஒன்டாரியோவில் ஆல்ஃப்ரட்டிலுள்ள “St. ஜோசப் [பள்ளி]யிலிருந்தும் 700-க்கும் மேலான தாக்கப்பட்டவர்கள் புகார் செய்ய முன்வந்திருக்கின்றனர்” என்று தி டோரான்டோ ஸ்டார் அறிக்கை செய்கிறது. “கிறிஸ்டியன் ஸ்கூல்களிலுள்ள பிரதர்ஸில் 29 அங்கத்தினர் உட்பட 30 ஆண்களுக்கு எதிராக” புகார்கள் செய்யப்பட்டன. “இன்னும் உயிரோடிருந்தால் மற்றும் 16 பேர்மீது குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கும்,” என்று ஸ்டார் மேலுமாகச் சொல்லுகிறது. தாக்கப்பட்டவர்கள் “தாங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்த ரோமன் கத்தோலிக்க அமைப்புகளின் கறுப்புக் கச்சை அணிந்த அங்கத்தினர்களிடமிருந்து பிள்ளைப்பருவத்தில் பட்ட அடிகள் மற்றும் பாலின தாக்குதல்களை” பற்றிய கவலைக்குரிய ஞாபகங்களை இன்னும் அனுபவிக்கின்றனர். கடவுளுக்குச் சேவை செய்வதாக உரிமைபாராட்டும் மனிதர்கள் இளம் பையன்களை பாலின துர்ப்பிரயோகத்திற்கு ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு பொது விசாரணையின்றி கனடா நாட்டினர் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டார்கள் என்று ஸ்டார் சொல்லுகிறது.
வெப்பமானி வெட்டுக்கிளிகள்
நீங்கள் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்தால், ஒரு வெப்பமானியின் உதவியின்றி வெப்பத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்று விலங்கியல் சார்ந்த அறிவியல் இதழ் ஒன்று சொல்கிறது. இது எவ்வாறென்றால், ஆப்பிரிக்க மர வெட்டுக்கிளி (Oecanthus karschi) ஆறு வினாடிகளில் எத்தனை முறை இசைபாடுகிறதோ அந்த மொத்த எண்ணிக்கையுடன் 12-ஐ கூட்டுவதன்மூலம், செல்சியஸில் அதைப் பெறலாம். அல்லது நீங்கள் தென் ஆப்பிரிக்காவின் கேப் வகைக்கு (Oecanthus capensis) செவிகொடுத்தால், மூன்று வினாடிகளில் அது இடும் சத்தத்தை எண்ணி, மொத்தத்துடன் 11-ஐ கூட்டுவதன்மூலம் பெறலாம். மர வெட்டுக்கிளியின் இந்த இரண்டு வகைகளின் சத்தமும் எண்ணும் அளவிற்கு வேகங்குறைவாக இருக்கிறது. போதுமான அளவுக்குச் சத்தமாகவும் இருக்கிறது; ஏனென்றால் அந்தச் சத்தம் ஒலிப்பெருக்கியின் வாயிலாக ஒலிப்பெருக்கம் செய்யப்படும் வகையில் அவை தங்களை இலைகளில் அமர்த்திக்கொள்கின்றன. இரவு தட்பவெப்ப நிலை குறைகையில், இசைபாடுதலும் குறைகிறது. ஆப்பிரிக்க வனவாழ்வு (African Wildlife) என்ற இதழ் இவ்வாறு விவரிக்கிறது: “வெட்டுக்கிளிகள் ‘குளிர்ந்த இரத்தமுள்ளவை’; அதனால் அவற்றின் வளர்சிதை மாற்றம் காற்றின் தட்பவெப்ப நிலையால் பாதிக்கப்படுகின்றன. இது கிட்டத்தட்ட அவற்றின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும், அவை பாடும் அளவு உட்பட எல்லாவற்றையும் பாதிக்கிறது.”
புறஊதா கதிர் தொந்தரவுகள்
உங்கள் விடுமுறைகளை சூரியனுக்குக்கீழ் ஓய்வெடுத்துச் செலவிட விரும்புகிறீர்களா? அவ்வாறு செய்வீர்களானால், எச்சரிக்கையாயிருங்கள்! சூரியனின் புறஊதா (UV) கதிர்கள் மிதமான அளவில் பயனுள்ளவையாக இருந்தாலும், அதிகமாக அவற்றிற்கு வெளிப்படுத்தப்பட்டிருப்பது தோல் புற்றுநோய்கள், கண் நோய்கள், தோல் அகாலமாகச் சுருங்குதல், வேகமாகத் தொற்றி பரவும் கட்டிகள் வளருதல், நோயை எதிர்த்துப் போராடுவதற்கான உடலின் சக்தியைக் குறைத்தல் ஆகியவற்றிற்குக் காரணமாக இருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின்படி, ஓசோன் படலம் குறைவதால் புறஊதா அளவுகள் அதிகரிக்கின்றன. இப்போது, ஆஸ்திரேலியா, நியூ ஜீலாந்து, ஐக்கிய மாகாணங்கள் உட்பட உலகின் பல பகுதிகளில், புறஊதா கதிர்களால் உடல்நல பிரச்சினைகள் சீக்கிரமாகவும் வேகமாகவும் வளருகின்றன. வெப்பமான தட்பவெப்ப நிலைகளில் உங்களை எப்படிப் பாதுகாக்க முடியும்? பாதுகாப்பான உடைகளை அணியுங்கள், புறஊதா கதிர்களை ஈர்க்கும் கண்ணாடிகளை அணியுங்கள், புறஊதா கதிரியக்கம் பலமாக இருக்கும் மதியவேளையில் உள்ளே இருங்கள்.
மதம்சார்ந்த பெரிய வியாபாரம்
இத்தாலிய பொருளாதாரத்தில் லாபத்தைச் சம்பாதிக்கும் ஒருசில பிரிவுகளில் ஒன்றும், பின்னடைவைத் தாக்குப்பிடிக்கும் ஒரே பிரிவாகவும் ஒருவேளை இருப்பது, “சர்ச்சின் போர்வையில் நடத்தப்படும்” வியாபாரமே என்று லா ரிப்பப்லிக்காவின் நிதிசம்பந்தமான பிற்சேர்க்கை சொல்கிறது. உண்மையில், பாம்பேயில் நடத்தப்பட்ட மத சம்பந்தமான பொருட்களின் ஆறாவது கண்காட்சியின்போது, அந்தத் துறையில் செயல்படும் 1,400 நிறுவனங்களின் மொத்த கைமாறும் பணத்தொகை “400 பில்லியன் லையர் [$2400 லட்சம், ஐ.மா.] என்றும், விற்பனையளவில் வருடாந்தர அதிகரிப்பு 15 சதவீதமென்றும் கணக்கிடப்பட்டது.” மேலுமாக, 1993-ல், இத்தாலியிலுள்ள பல்வேறு வழிபாட்டு ஸ்தலங்களுக்கு, சுமார் 3 கோடியே 50 லட்சம் யாத்திரிகர்களைக் கவர்ந்த மதசம்பந்தமான சுற்றுலா, அதைவிட பத்து மடங்கு அதிகரிப்பைக் கண்டிருக்கிறது. “சர்ச்சால் ‘ஆசீர்வதிக்கப்பட்ட’ வியாபாரங்கள் வளர்ச்சியடைகின்றன,” என்று அந்த அறிக்கை சொல்கிறது; “இத்தாலிய கத்தோலிக்க படிநிலை அமைப்பு, பிஷப்புகளின் மாநாடு, போப்பின் அதிகாரக் குழு ஆகிய அனைத்தும் சில காலம் அதை இன்பமாக அறிந்திருந்தன.” இந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்வை கையாளுவதற்காக, உயர் நிலையிலுள்ள சர்ச் அதிகாரிகளால் உரையாற்றப்பட்ட மாநாடுகளையும்கூட சர்ச் படிநிலை அமைப்பு ஒழுங்கமைத்தும் ஏற்பாடு செய்தும் இருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் உயர் தற்கொலை விகிதம்
ஆஸ்திரேலியாவில் தற்கொலை விகிதம் அவ்வளவு அச்சுறுத்துவதாக அதிகரிப்பதால், பொது சுகாதார சங்கம் தன்னுடைய தேசிய பொது சுகாதார திட்டத்தில் தற்கொலை தடுத்தலையும் தற்போது உட்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக வாகன விபத்துக்களைவிட தற்கொலை எண்ணிக்கைகள் அதிகரித்தபடியால், குறிப்பாகவும் அவசரமாகவும் ஏதோவொன்று செய்யப்படவேண்டும் என்பதை பொது சுகாதார சங்கம் உணர்ந்தது. சங்கத்தின் சார்பு பேச்சாளர் ஒருவர் பின்வருமாறு கூறுவதாக தி ஆஸ்ட்ரேலியன் செய்தித்தாள் மேற்கோள் காட்டுகிறது: “இப்போது வரையாக, தற்கொலையானது பொது சுகாதார சமுதாயத்தால் கையாளப்படவில்லை; இருந்தாலும் மற்ற பொது சுகாதார அக்கறைகளின் பண்புகளை அது கொண்டிருக்கிறது. பொது சுகாதாரத்தின் அக்கறையையும் வளங்களையும் ஈர்க்கும் மற்ற பிரச்சினைகளைப் போலவே அது அவ்வளவு அடிக்கடி நிகழ்வதாகவும் அவ்வளவு பரவலாக கேடு விளைவிப்பதாகவும் இருக்கிறது.” தற்போதைய தற்கொலை விகிதம், நோயின் காரணமாக அல்லாத மரணங்களில் அதிர்வுறச்செய்யும் 31 சதவிகிதமாக இருக்கிறது; இது வாகன விபத்துக்களால் ஏற்படுத்தப்பட்ட மரணங்களைக் காட்டிலும் மூன்று சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.