அதிகரிக்கும் எண்ணிக்கையான அகதிகள்
மனித சரித்திரத்தின் பெரும்பகுதி போர்களாலும் பஞ்சங்களாலும் துன்புறுத்துதலாலும் பாழ்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, புகலிடம் தேவைப்படும் ஜனங்கள் எப்போதுமே இருந்திருக்கின்றனர். முற்காலத்தில், தேவையிலிருப்போருக்கு தேசங்களும் ஜனங்களும் புகலிடம் அளித்திருக்கின்றனர்.
மெக்ஸிகோ பழங்குடி இனத்தவரும் அசீரியர்களும் கிரேக்கர்களும் எபிரெயர்களும் இஸ்லாமியர்களும் மற்றவர்களும் புகலிடம் அளிக்கும் சட்டங்களை மதித்தனர். 23-க்கும் அதிகமான நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிரேக்க தத்துவஞானியான ப்ளேட்டோ இவ்வாறு எழுதினார்: “தனது உடன் நாட்டவர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் பிரிக்கப்பட்டிருக்கும் அயல்நாட்டவர், மனிதர்களாலும் கடவுட்களாலும் அதிகமாக நேசிக்கப்படும் நபராக இருக்க வேண்டும். ஆகவே அயல்நாட்டவருக்கெதிராக எந்தத் தவறும் செய்யப்படாமல் இருக்க எல்லா முன்னெச்சரிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.”
20-வது நூற்றாண்டில், அகதிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருக்கிறது. இரண்டாவது உலகப் போரினால் உருவான 15 லட்சம் அகதிகளைப் பராமரிப்பதன் முயற்சியில், UNHCR 1951-ல் ஸ்தாபிக்கப்பட்டது. அப்போதிருந்த அகதிகள், தஞ்சம் புகுந்திருந்த சமுதாயங்களில் சீக்கிரத்தில் ஒன்றிப்போய்விடுவார்கள் என்ற கருத்தின் அடிப்படையில், UNHCR மூன்று வருடங்களுக்கு நீடித்திருக்கும் என்பதாக எண்ணப்பட்டது. அதன் பிறகு அந்த அமைப்பு கலைக்கப்படும் என்பதாக கருதப்பட்டது.
எனினும், பல பத்தாண்டுகளாக, அகதிகளின் எண்ணிக்கை தளராது உயர்ந்தது. 1975-க்குள் 24 லட்சம் என்ற எண்ணிக்கையை அது எட்டியது. 1985-ல் அந்த எண்ணிக்கை ஒரு கோடியே ஐந்து லட்சமாக இருந்தது. 1995-க்குள் UNHCR-ரிடமிருந்து பாதுகாப்பையும் உதவியையும் பெற்றுக்கொள்ளும் ஜனங்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே எழுபத்தி நான்கு லட்சமாக உயர்ந்தது!
பனிப் போருக்கு பின்னான சகாப்தம், உலகளாவிய அகதிகள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியைத் திறக்கும் என்பதாக அநேகர் எதிர்பார்த்தனர்; ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை. அதற்கு மாறாக, சரித்திர அடிப்படையிலோ இன அடிப்படையிலோ தேசங்கள் பிளவுற்றிருக்கின்றன. இது சண்டையை விளைவித்திருக்கிறது. போர்கள் தீவிரமானபோது, தங்கள் அரசாங்கங்களால் தங்களைப் பாதுகாக்க முடியவில்லை அல்லது அவை தங்களைப் பாதுகாக்காது என்பதை அறிந்து ஜனங்கள் தப்பி ஓடினர். உதாரணத்திற்கு, 1991-ல், கிட்டத்தட்ட 20 லட்சம் ஈராக் மக்கள் அண்டை நாடுகளுக்குத் திரளாக தப்பி ஓடினர். அது முதற்கொண்டு, கணக்கிடப்பட்டிருக்கும் 7,35,000 அகதிகள் முந்நாளைய யுகோஸ்லாவியாவிலிருந்து தப்பி ஓடியிருக்கின்றனர். அதன்பின், 1994-ல், ருவாண்டாவில் நடந்த உள்நாட்டுப் போர், நாட்டின் 73 லட்சம் ஜனங்களில் பாதிக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு தப்பி ஓடும்படி வற்புறுத்தியது. சுமார் 21 லட்சம் ருவாண்டா மக்கள் அருகாமையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
ஏன் பிரச்சினை மோசமாகிக்கொண்டே செல்கிறது?
அகதிகளுடைய எண்ணிக்கையின் அதிகரிப்பிற்குப் பங்களிக்கும் காரணக்கூறுகள் அநேகம் இருக்கின்றன. ஆப்கானிஸ்தானம் மற்றும் சோமாலியா போன்ற சில இடங்களில் தேசிய அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. இவை, குடிப்படையினரின் கைகளில் காரியங்களை விட்டிருக்கின்றன; இவர்கள் கட்டுப்பாடின்றி நாட்டுப்புறத்தைச் சூறையாடி பீதியையும் தப்பி ஓடுதலையும் உண்டாக்கியிருக்கிறார்கள்.
மற்ற இடங்களில், சிக்கலான இன அல்லது மத வேறுபாடுகளின்மீது சண்டை சார்ந்திருக்கிறது. அதில் சண்டையிடும் கட்சிகளின் ஒரு முக்கிய குறிக்கோள் உள்நாட்டினரை வெளியே விரட்டுவதுதான். 1995-ன் மையப்பகுதியில், முந்நாளைய யுகோஸ்லாவியாவைக் குறித்து ஐநா பிரதிநிதி இவ்வாறு புலம்பினார்: “அநேக ஜனங்களுக்கு இந்தப் போரின் காரணங்களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது: யார் போரிடுகிறார்கள், போரிடுவதற்கான காரணங்கள். ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் கும்பலாக வெளியேறுகிறார்கள், பின்பு மூன்று வாரங்களுக்குப் பிறகு மற்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் கும்பலாக வெளியேறுகிறார்கள். புரிந்துகொள்ள வேண்டிய நபர்களுக்கும்கூட புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.”
பேரழிவூட்டும் நவீன ஆயுதங்கள்—மல்டிப்பிள்-லாஞ்ச் ராக்கெட்டுகள், ஏவுகணைகள், பீரங்கி மற்றும் அவற்றைப் போன்றவை—படுகொலையை அதிகரித்து, போரின் செயலெல்லையையும் உயர்த்தியிருக்கிறது. விளைவு: இன்னுமதிக அகதிகள். சமீப காலங்களில் உலக அகதிகளில் சுமார் 80 சதவீதத்தினர் வளர்முக நாடுகளை விட்டு அண்டை நாடுகளுக்கு ஓடிப் போயிருக்கின்றனர். அவையும், வளர்முக நாடுகளாகவும் புகலிடம் நாடுபவர்களைப் பராமரிக்க ஆயத்தமாயிராத நாடுகளாகவும் இருக்கின்றன.
அநேக போர்களில், உணவுப் பஞ்சம் பிரச்சினையை அதிகரிக்கிறது. ஒருவேளை, நிவாரண பொருட்களை எடுத்துச்செல்லும் சரக்குவண்டிகள் தடை செய்யப்படுவதன் காரணமாக ஜனங்கள் பட்டினியால் வாடும் சமயத்தில், அவர்கள் அங்கிருந்து சென்றுவிடும்படியான நிர்ப்பந்தத்திற்குள்ளாகிறார்கள். தி நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மிகத் தொலைவான ஆப்பிரிக்க கிழக்குப் பகுதிகள் போன்ற இடங்களில், வறட்சியும் போரும் சேர்ந்து நிலத்தை அந்தளவுக்கு பண்படாததாய் ஆக்கியிருப்பதன் காரணமாக அது இனியும் ஜீவாதாரத் தொழிலுக்கு ஏற்றதாய் இல்லை. அவ்விடத்தை விட்டுச்செல்லும் லட்சக்கணக்கானோர் பட்டினியின் காரணமாக ஓடிப்போகிறார்களா அல்லது போரின் காரணமாக ஓடிப்போகிறார்களா என்பது முக்கியத்துவமில்லாதது.”
வேண்டப்படாத கோடிக்கணக்கானோர்
புகலிடம் பற்றிய எண்ணம் சொல்லளவில் மாத்திரமே மதிக்கப்பட்டிருக்கும் சமயத்தில், அகதிகளின் மாபெரும் எண்ணிக்கை தேசங்களைக் கலக்கமடைய செய்திருக்கிறது. சூழ்நிலைமை பூர்வ எகிப்தில் இருந்ததற்கு ஒத்திருக்கிறது. ஏழுவருட பஞ்சத்தின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பதற்கு யாக்கோபும் அவரது குடும்பமும் எகிப்தில் புகலிடம் நாடியபோது, அவர்கள் வரவேற்கப்பட்டனர். வசிப்பதற்கு ‘தேசத்திலுள்ள நல்ல இடத்தை’ பார்வோன் அவர்களுக்குக் கொடுத்தான்.—ஆதியாகமம் 47:1-6.
எனினும், காலங்கள் கடந்துசென்ற பின்னர், இஸ்ரவேலர் மிகுதியாய் பலுகினர்; “தேசம் அவர்களால் நிறைந்தது.” இப்போது எகிப்தியர் கொடூரமாக பிரதிபலித்தனர், ஆனாலும் “அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ [எகிப்தியர்] அவ்வளவாய் அவர்கள் [இஸ்ரவேலர்] பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.”—யாத்திராகமம் 1:7, 12.
அதே விதமாக, இன்றும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதைக் குறித்து தேசங்கள் “எரிச்சல்” அடைகின்றன. அவற்றின் கவலைக்கு முக்கிய காரணம் பொருளாதாரம் ஆகும். கோடிக்கணக்கான அகதிகளுக்கு உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பை அளிப்பதில் அதிக பணம் செலவாகிறது. 1984 மற்றும் 1993-க்கு இடைப்பட்ட காலத்தில், UNHCR-ன் வருடாந்தர செலவு $44.4 கோடிகளிலிருந்து $130 கோடிகளுக்கு அதிகரித்தது. பெரும்பான்மையான பணம், அதிக செல்வந்த நாடுகளால் நன்கொடை அளிக்கப்படுகிறது. அவற்றில் சில நாடுகள் சொந்த பொருளாதார பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கின்றன. நன்கொடை அளிக்கும் தேசங்கள் சிலசமயம் இவ்வாறு முறையிடுகின்றன: ‘எங்களது சொந்த தெருக்களில் உள்ள வீடில்லாத ஜனங்களுக்கு உதவுவதற்கே முடியாத நெருக்கடியான நிலையில் நாங்கள் இருக்கிறோம். இந்த முழு கிரகத்திலிருக்கும் வீடில்லாத ஜனங்களுக்கு எங்களால் எவ்வாறு பொறுப்பேற்க முடியும், அதுவும் பிரச்சினை குறைவதற்குப் பதிலாக அநேகமாய் இன்னும் அதிகரிக்கும் விதத்தில் இருக்கும்போது?’
காரியங்களைச் சிக்கலாக்குவது எது?
செல்வந்த நாட்டிற்கு வந்தடையும் அகதிகள், பொருளாதார காரணங்களுக்காக அதே நாட்டிற்கு இடம்பெயர்ந்திருக்கும் மற்ற அநேக ஆயிரக்கணக்கான ஜனங்களால் தங்கள் சூழ்நிலை சிக்கலாகியிருப்பதை அடிக்கடி காண்கின்றனர். இப்படிப்பட்ட பொருளாதார இடம்பெயர்வோர், போரிலிருந்தோ துன்புறுத்துதலிலிருந்தோ பஞ்சத்திலிருந்தோ தப்பி ஓடி வந்திருக்கும் அகதிகள் அல்ல. அதற்கு மாறாக, அவர்கள் மேம்பட்ட ஒரு வாழ்வைத் தேடி—வறுமை இல்லாத ஒரு வாழ்வைத் தேடி—வந்திருக்கிறார்கள். போலியான உரிமைகளை வலியுறுத்துவதன் மூலம் புகலிடமளிக்கும் அமைப்புகளைத் தொந்தரவுபடுத்தி அடிக்கடி அகதிகளைப் போல் அவர்கள் பாசாங்கு செய்வதன் காரணமாக, உண்மையான அகதிகள் நியாயமாக விசாரிக்கப்படும் வாய்ப்பைப் பெறுவதைக் கடினமாக்குகின்றனர். a
அகதிகள் மற்றும் இடம்பெயர்வோரின் தஞ்சமடைதல், பல வருடங்களாக செல்வந்த நாடுகளுக்குள் அருகருகே பாய்ந்தோடியிருக்கும் இரண்டு நதிகளுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், பொருளாதார இடம்பெயர்வோரின் நதியை, அதிக கண்டிப்பான இடப்பெயர்ப்பு சட்டங்கள் அடைத்திருக்கின்றன. இவ்வாறு, அவர்கள் அகதிகளுடைய நதியின் ஒரு பாகமாக ஆகியிருக்கிறார்கள். இந்த நதி, வெள்ளப்பெருக்கை உருவாக்குமளவுக்கு வழிந்தோடியிருக்கிறது.
பொருளாதார இடம்பெயர்வோர், புகலிடம் சம்பந்தமான தங்களது வேண்டுகோளை விசாரிக்க பல வருடங்கள் எடுக்கலாம் என்பதை அறிந்தவர்களாக, பூ விழுந்தாலும் தலை விழுந்தாலும் வெற்றியடையும் நிலையில் தாங்கள் இருப்பதாக நியாயப்படுத்துகின்றனர். புகலிடத்திற்கான அவர்களது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவர்கள் வெற்றியடைகிறார்கள்; ஏனெனில், அவர்கள் வளமான பொருளாதார சுற்றுச்சூழலில் தொடர்ந்து இருக்கலாம். அவர்களது வேண்டுகோள் மறுக்கப்பட்டால், அப்போதும் அவர்கள் வெற்றியடைகிறார்கள்; ஏனெனில், அவர்கள் தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்குக் கொஞ்சம் பணத்தையும் சம்பாதித்திருப்பார்கள், சில திறமைகளையும் கற்றிருப்பார்கள்.
அகதிகளில் அதிகரிக்கும் எண்ணிக்கையானோர், போலி அகதிகளையும் சேர்த்து, மற்ற நாடுகளுக்குத் திரண்டு செல்கையில், அநேக நாடுகள் வரவேற்பு கால்மிதியை உள்ளே இழுத்து, கதவை இழுத்து மூடுகின்றன. சில நாடுகள், தப்பி ஓடிவருவோரை தங்கள் எல்லைகளுக்குள் அனுமதிப்பதை நிறுத்திவிட்டன. மற்ற நாடுகள், அகதிகளின் வருகையைத் தடை செய்வதற்கு ஒத்த வலிமையான சட்டங்களையும் செய்முறைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இன்னும் மற்ற நாடுகள், விட்டோடிவந்திருக்கும் நாடுகளுக்கே அகதிகளைத் திரும்பவும் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்திருக்கின்றன. UNHCR-ன் பிரசுரம் ஒன்று இவ்வாறு சொல்கிறது: “உண்மையான அகதிகள் மற்றும் பொருளாதார இடம்பெயர்வோர் ஆகிய இரு தொகுதிகளின் எண்ணிக்கையிலும் ஏற்பட்டிருக்கும் தளராத அதிகரிப்பு, 3,500 வருடங்கள் பழமையான புகலிட பாரம்பரியத்தைக் குறித்ததில் கடுமையான பதற்றநிலையை ஏற்படுத்தி, வீழ்ந்துவிடும் நிலைக்கு அதைக் கொண்டு சென்றிருக்கிறது.”
வெறுப்பும் பயமும்
அகதிகளின் பிரச்சினைகளை அதிகப்படுத்துவது மனதைக் கலக்கும் செனோஃபோபியா—அன்னியர்களின் பேரில் பயமும் வெறுப்பும்—ஆகும். அநேக நாடுகளில், தங்களது தேசிய தனித்துவத்தையும் பண்பாட்டையும் வேலைகளையும் வெளியாட்கள் அச்சுறுத்துவதாக ஜனங்கள் நம்புகின்றனர். அப்படிப்பட்ட பயங்கள் சிலசமயம் வன்முறையாக வெளிப்படுகின்றன. அகதிகள் (ஆங்கிலம்) பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “ஐரோப்பிய கண்டம் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் இன சம்பந்தமான தாக்குதல் ஒன்றை எதிர்ப்படுகிறது—புகலிடம் நாடுவோருக்குத் தற்கால இடவசதி அளிக்கும் மையங்கள் மிக அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகின்றன.”
மத்திய ஐரோப்பாவிலுள்ள ஒரு போஸ்டர் ஆழ்ந்த பகைமையை வெளிக்காட்டுகிறது. அது, பூமியிலுள்ள அநேக நாடுகளில் அதிகமாக எதிரொலிக்கும் பகைமையாகும். வன்மம் நிறைந்த அதன் செய்தி அன்னியரைத் தாக்குகிறது: “நம் தேசத்தின் உடலில் அவர்கள் அருவருப்பான, வேதனையூட்டும் ஒரு சீழ்க்கட்டி. எந்த விதமான பண்பாடு, ஒழுக்கம் அல்லது மத குறிக்கோள்கள் இல்லாத ஓர் இனத் தொகுதி, வெறுமனே திருடிக்கொண்டும் களவாடிக்கொண்டும் இருக்கும் ஒரு நாடோடிக் கும்பல். அழுக்கு நிறைந்த, பேன்கள் நிரம்பிய அவர்கள், தெருக்களிலும் இரயில் நிலையங்களிலும் வசிக்கின்றனர். தங்களது அழுக்குக் கந்தல்களை மூட்டைக் கட்டிக்கொண்டு என்றென்றுமாக இந்த இடத்தைவிட்டுச் செல்லட்டும்!”
சந்தேகமில்லாமல், பெரும்பான்மையான அகதிகள், அவ்விடத்தை “என்றென்றுமாக விட்டுச்செல்ல” மிகவும் விரும்புவார்கள். வீடுகளுக்குச் செல்ல அவர்கள் ஏங்குகிறார்கள். குடும்பத்தோடும் நண்பர்களோடும் சமாதானமான, இயல்பான வாழ்க்கையை வாழ அவர்களது இருதயம் ஆவலோடு ஏங்குகிறது. ஆனால் செல்வதற்கு அவர்களுக்கு வீடு இல்லை.
[அடிக்குறிப்பு]
a 1993-ல், மேற்கு ஐரோப்பாவிலுள்ள அரசாங்கங்கள் மாத்திரமே, புகலிடம் நாடுவோரை சட்ட நடவடிக்கை எடுத்து ஏற்றுக்கொள்வதற்கு $1,160 கோடி செலவிட்டன.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
அகதிகளின் துன்பநிலை
“ஒவ்வொரு இரவும் அகதிகளின் லட்சக்கணக்கான பிள்ளைகள் பசியோடு தூங்கச்செல்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது, எட்டில் ஒரு அகதி பிள்ளைதான் பள்ளிக்குச் சென்றிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பெரும்பான்மையான இந்தப் பிள்ளைகள் சினிமாக்களுக்கோ பூங்காக்களுக்கோ நிச்சயமாகவே அருங்காட்சியகத்திற்கோகூட ஒருபோதும் சென்றதே இல்லை. அநேகர் முட்கம்பிக்குப் பின்னாலோ ஒதுக்குப்புறமான முகாம்களிலோ வளர்கின்றனர். ஒரு மாட்டையோ ஒரு நாயையோ அவர்கள் ஒருபோதும் பார்த்ததே இல்லை. வருந்தத்தக்க அளவில் அநேக அகதி பிள்ளைகள், பச்சைப் புல்லை ஓடி விளையாடுவதற்கான ஒன்றாக நினைக்காமல் உண்பதற்கான ஒன்றாக நினைக்கின்றனர். என் வேலையின் மிகத் துயரமான அம்சம் அகதி பிள்ளைகளைப் பார்ப்பது.”—சாடாகோ ஓகாடா, ஐநா அகதிகள் ஹை கமிஷன்.
[படத்திற்கான நன்றி]
U.S. Navy photo
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
இயேசு ஓர் அகதியாக இருந்தார்
யோசேப்பும் மரியாளும் தங்களது மகனான இயேசுவோடு பெத்லகேமில் வசித்துவந்தனர். கிழக்கிலிருந்து வான சாஸ்திரிகள் பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் பரிசாக கொண்டுவந்தனர். அவர்கள் சென்ற பிறகு, யோசேப்பிடம் ஒரு தூதன் தோன்றி இவ்வாறு சொன்னார்: “ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு.”—மத்தேயு 2:13.
விரைவில் அவர்கள் மூவரும் அயல்நாடு ஒன்றிலே புகலிடம் நாடினர்—அவர்கள் அகதிகளாக ஆயினர். யூதர்களின் எதிர்கால ராஜாவாக முன்னறிவிக்கப்பட்ட அக்குழந்தை இருக்கும் இடத்தைக் குறித்து வான சாஸ்திரிகள் தன்னிடம் அறிக்கை செய்யாததால் ஏரோது கோபமடைந்தான். இயேசுவைக் கொல்வதற்கான அவனது பயனற்ற முயற்சியில், பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள இளவயது ஆண்பிள்ளைகளைக் கொல்லும்படி தன் ஆட்களுக்கு அவன் கட்டளையிட்டான்.
கடவுளுடைய தூதன் யோசேப்பின் கனவில் மறுபடியும் தோன்றும்வரையாக யோசேப்பும் அவரது குடும்பமும் எகிப்தில் தங்கியிருந்தனர். தூதன் சொன்னார்: “நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள்.”—மத்தேயு 2:20.
தெளிவாகவே, எகிப்துக்கு ஓடிப் போவதற்கு முன்பு அவர்கள் வாழ்ந்துவந்த யூதேயாவில் குடியேற யோசேப்பு உத்தேசித்திருந்தார். ஆனால் அவ்வாறு செய்வது ஆபத்தானது என்பதாக கனவில் எச்சரிக்கப்பட்டார். இவ்வாறு வன்முறையின் அச்சுறுத்தல் மறுபடியும் அவர்களது வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தியது. யோசேப்பும் மரியாளும் இயேசுவும் வடக்கே கலிலேயாவிற்குப் பயணம் செய்து நாசரேத் பட்டணத்தில் குடியேறினர்.
[பக்கம் 7-ன் படங்கள்]
சமீப ஆண்டுகளில் கோடிக்கணக்கான அகதிகள் தங்கள் உயிருக்காக மற்ற நாடுகளுக்கு தப்பி ஓடியிருக்கிறார்கள்
[படத்திற்கான நன்றி]
Top left: Albert Facelly/Sipa Press
Top right: Charlie Brown/Sipa Press
Bottom: Farnood/Sipa Press
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
Boy on left: UN PHOTO 159243/J. Isaac