உலகத்தைக் கவனித்தல்
இரயில்வே வந்தவழியே திருப்பிவிடப்பட்டது
பிரேஸிலில் உள்ள பெரிய ரயில்வே நிறுவனம் ஒன்று சுடுவதற்கான ஆயுதங்களை உபயோகிப்பதில் தனது காவலாளர்களுக்குப் பயிற்சியளிக்க புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கிவைத்தது. அப்போது அதன் பணியாளர்களில் இருவருடைய மனச்சாட்சி குத்திற்று. ‘இனியும் யுத்தத்தைக் கற்பது கூடாது’ என்ற பைபிள் கட்டளைக்கு இணங்க வாழும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிற இவர்கள், உயிரை மாய்க்கக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சிப் பெறுவது தவறு என்று உறுதியாக உணர்ந்தனர். (ஏசாயா 2:4) அத்தகைய நிலைநிற்கையை எடுத்ததனால் அவர்கள் காண்பித்த “கீழ்ப்படியாமை”யின் காரணமாக உடனடியாக வேலைநீக்கம் செய்யப்பட்டனர். தங்களுக்கு அந்தப் பயிற்சியையும் அதனோடுகூட வரும் பதவி உயர்வையும் கொடுக்காமல், தாங்கள் இருந்துவந்த பழைய ஸ்தானங்களிலாவது தொடர்ந்து சேவைசெய்ய அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்ட அவர்களுடைய வேண்டுகோளையும்கூட ரயில்வே நிராகரித்துவிட்டது. எனினும், “மனச்சாட்சி மற்றும் வணக்கத்திற்கான உரிமைகள் மீறப்படக்கூடாதவை. இஷ்டம்போல் வணங்குவதற்கான உரிமை சட்டத்தின் வடிவில் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது,” என்றுதான் பிரேஸிலின் சட்டம் கூறுகிறது. “நியாயமான காரணம்” எதுவுமின்றி அந்நபர்களை வேலைநீக்கம் செய்தது, ரயில்வே இழைத்த குற்றம் என்று மண்டல தொழிலாளர் நீதிமன்றம் கண்டுபிடித்தது. ஆகவே அந்நிறுவனம் அவர்களுக்குத் தகுந்த நஷ்ட ஈடு கொடுக்கும்படி நீதிமன்றத்தால் வற்புறுத்தப்பட்டது.
ஷாகஸ் நோயும் இரத்த வியாபாரமும்
ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படுத்தப்படும் ஷாகஸ் நோய் வருடக்கணக்கில் செயலற்றுக் கிடந்து இறுதியில் மாரடைப்புக்கு வழிநடத்துகிறது. இந்நோய் லத்தீன் அமெரிக்காவில் தற்போது சுமார் 1 கோடியே 80 லட்சம் பேருக்குத் தொற்றுகிறது. இது பெரும்பாலும் சரிவர பரிசோதிக்கப்படாத இரத்தத்தை ஏற்றிக்கொள்வதன்மூலம் கடத்தப்படுகிறது. பொலிவியன் டைம்ஸ் சமீபத்தில் இவ்வாறு விளக்கிற்று: “அனைத்து நோயாளிகளுக்கும் ஏற்றப்படும் இரத்தம் ஒருவேளை பரிசோதிக்கப்படாததற்கான காரணங்களில் ஒன்று, அது வர்த்தகமயமாக்கப்பட்டு உலகளாவ நடைபெற்று வருவதாக இருக்கலாம். இரத்தத்தை எந்த நோய்க்காகவும் பரிசோதித்துத் தடைசெய்வது அதிலிருந்து கிடைக்கக்கூடிய லாபத்தைக் குறைக்கிறது.” டிசம்பர் 24, 1993-ல் லா பாஸின் எல் டியார்யோ கூறியதாவது: “இந்த நாட்டில் ஏற்றப்பட்ட இரத்தத்தின் 50 சதவீதம் கீழ்க்கண்ட நோய்க் கிருமிகளைக் கொண்டிருக்கிறது: ஷாகஸ், மலேரியா, ஈரல் அழற்சி (hepatitis), மேகப்புண் (syphilis), மற்றும் எய்ட்ஸ் என்று பொலிவியாவின் செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்தது.”
குழந்தை விபத்துக்கள்
சமீபத்தில், ஜப்பானில் விஷங்களை விழுங்கும் “தவழும் பருவ” குழந்தைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருக்கிறது என்று சுகாதார நல அமைச்சகம் அறிவிக்கிறது. 1992-ல் குழந்தைகளால் விழுங்கப்பட்ட அனைத்து விஷப்பொருட்களிலும் சுமார் பாதியளவு சிகரெட்டுகளோடு சம்பந்தப்பட்டதாய் இருந்தன. சில குழந்தைகள் திரவத்தைக் கொண்டிருந்த மதுபான பாட்டில்களிலோ சாம்பற் படிக்கங்களிலோ (ash trays) எறியப்பட்டிருந்த குடித்துமீந்த சிகரெட்டு மற்றும் சாம்பல் கலந்த கலவையைக் குடித்தன. குழந்தைகளால் விழுங்கப்பட்ட மற்ற ஆபத்தான பொருட்கள், அதிக தடவைகள் உட்கொள்ளப்பட்டவற்றிலிருந்து குறைவான தடவைகள் உட்கொள்ளப்பட்டவை என்ற வரிசையில், மருந்துகள், விளையாட்டுச் சாமான்கள், காசுகள், உணவுப்பொருட்கள், அழகுசாதனங்கள் போன்றவற்றை உள்ளடக்கும். அநேகக் குழந்தைகள் ஆபத்தான நோய்க்கு ஆளானார்கள். ஆச்சரியத்திற்குரிய வகையில், இந்த விபத்துக்களில் பெரும் சதவீதம் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 9:00 வரை நிகழ்கின்றன என்றும், அச்சமயத்தில்தான் குடும்பத்தினரில் அநேகர் வீட்டில் இருக்கின்றனர், ஆகவே அவர்களால் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியவேண்டும் என்றும் அந்த அமைச்சகம் எச்சரிக்கிறது.
முழுக்காட்டுதல் முரண்பாடு
கிறிஸ்தவ மண்டலத்தின் பிரசங்க மையங்களின் முன்னணியில் இருந்துவந்த அ.ஐ.மா.-வின் கொலராடோ ஸ்ப்ரிங்ஸ், சமீபத்தில் பிள்ளைகளை மதமாற்றும் முறைகளைக் குறித்த முரண்பாட்டில் சிக்குண்டது. தி டென்வர் போஸ்ட் சொல்லுகிறபடி, கார்னர்ஸ்டோன் பேப்டிஸ்ட் சர்ச் அப்பகுதிகளில் உள்ள குழந்தைகளைத் தேடிப்பிடித்துக் கொண்டுவர 16 பேருந்துகளை பயன்படுத்துகிறது. மிட்டாய், சோடா தருவதாகவும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி காண்பிப்பதாகவும் சொல்வதானது பிள்ளைகள் ஆசையுடன் பேருந்துகளில் ஏறும்படி செய்கிறது. அநேகப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் போகும்படி அனுமதிக்கின்றனர். ஆனால் தாங்கள் முழுக்காட்டப்பட்ட கதைகளோடு பிள்ளைகள் வீடுதிரும்பும்போது வெறுப்பு கலந்த ஆச்சரியமடைகின்றனர். இந்தப் “பிரசங்கிகள்” பிள்ளைகளுக்கு முழுக்காட்டுதல் கொடுக்குமுன்பு சாதாரணமாக ஒப்புதல் படிவத்தில் பெற்றோரின் கையெழுத்தைப் பெறுகின்றனர். ஆனால் அந்தக் கொள்கை அவ்வப்போது தளர்த்தப்பட்டு வந்திருக்கிறது. போஸ்ட் சொல்கிறபடி, அந்த ஒப்புதல் படிவத்தைப்பற்றி சொல்லும்போது அதைப் “பெறுவதற்கு எங்களுக்கு அதிக சமயமாகிறது,” என்பதாக அந்தச் சர்ச்சின் ஊழியர் கூறுகிறார்.
கால்பந்தாட்ட மோகம்
இங்கிலாந்தில் உள்ள கால்பந்தாட்ட பிரியர்களில் சிலர் தங்கள் பிரியத்தை மட்டுக்குமீறி காண்பித்தனர்: தாங்கள் மரித்தப்பின் தங்களுடைய சாம்பலை தங்களுக்கு விருப்பமான அணி விளையாடும் மைதானத்தில் தூவிவிடவேண்டும் என்று வேண்டுகின்றனர். பிரபலமான ஒரு அணி ஒவ்வொரு வருடமும் 25 வேண்டுகோள்களைப் பெறுகிறது. அத்தகைய மனித சாம்பல் சரியாக எப்படித் தூவப்படலாம் என்பதன்பேரில் இங்லிஷ் ஃபுட்பால் அசோஸியேஷன், கால்பந்தாட்டச் சங்கங்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை அனுப்பவேண்டியிருந்த அளவுக்கு அத்தகைய வேண்டுகோள்கள் அதிகமாக பெறப்பட்டன. தி மெடிக்கல் போஸ்ட் சொல்லுகிறபடி, அவர்களுடைய அறிவுரை பின்வருவனவற்றையும் உள்ளடக்குகிறது: “எல்லா சாம்பலையும் தூவவேண்டிய அவசியம் இல்லை. பெயருக்கு மட்டும் கொஞ்சம் தூவிவிடுங்கள். ஒரு பெரிய குவியலாக குவித்துவைப்பது புற்களைக் கொன்றுவிடக்கூடும். . . . மெல்லிய மற்றும் சமமான ஒரு படலத்தைப் பெறுவதற்காக அந்தச் சாம்பலை ஒரு துடைப்பத்தை வைத்து பரப்பிவிடுங்கள்.”
டாவோ மதம் பரவுகிறது
“வரலாற்றிலேயே கோலாகலமானது.” செப்டம்பர் 1993-ல் கொண்டாடப்பட்ட டாவோ மத கொண்டாட்டமாகிய லோஷென் பிரார்த்தனை பெருவிழாவை சைனா டுடே இவ்வாறுதான் விவரித்தது. இந்த விழா பீஜிங்கிலுள்ள வெள்ளை மேக கோயிலில் கொண்டாடப்பட்டது. இதில் பங்குகொண்டவர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், தைவான் மற்றும் ஐக்கிய மாகாணங்கள் போன்ற நாடுகளில் உள்ள டாவோ மதக் கோயில்களிலிருந்து வந்தனர். இந்தப் பத்திரிகை கூறுகிறபடி, “இந்த உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தருளும்படி சொர்க்கத்தை வேண்டிக்கொள்வதே” இந்தத் திருவிழாவின் “முக்கிய நோக்க”மாக இருந்தது. பதினொரு பலிபீடங்கள் அமைக்கப்பட்டன, மந்திரங்கள் ஓதப்பட்டன, வாழ்க்கையின் துயரத்திலிருந்து மக்களை விடுதலை செய்வதாக சொல்லப்படும் “மீட்பர்” கடவுளையும் உட்படுத்திய—நூற்றுக்கணக்கான கடவுட்களுக்கு வணக்கங்கள் செலுத்தப்பட்டன. டாவோ மதம் உலகப்பிரகாரமாக இருப்பதற்கும் மேலானது; ஆகவே அரசியலோடு அதற்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று ஹாங்காங் கோயில் மடத்தலைவர் ஒருவர் கூடியிருந்தவர்களிடம் சொன்னார். டாவோ மதம் நாட்டுப்பற்றையும் சகோதரத்துவத்தையும் முன்னேற்றுவிக்கிறது என்று தைவானில் உள்ள ஒரு டாவோ கோயிலின் தலைவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
பேரழிவைத் தவிர்ப்பதற்கான செலவு
உலகளாவிய சீதோஷ்ண நிலையில் ஏற்படும் பேரழிவை உண்டாக்கும், அநேக விஞ்ஞானிகளைப் பயப்படவைக்கும் மாற்றங்களைத் தவிர்க்க எவ்வளவு செலவு ஆகும்? தற்கால தொழில்நுட்பத்தை உபயோகித்து அதைச் செய்யமுடியும் என்பதாக ஜெர்மனியின் ஹனோவரில் உள்ள எட்வார்ட் பெஸ்டெல் இன்ஸ்டிட்யூட் ஃபார் சிஸ்டம் ரிஸர்ச்சின் தலைவர் கிளாஸ் பீட்டர் மோல்லர் கணக்கிட்டார். ஸுயெடோய்ச்ச ட்ஸைடுங் என்ற ஜெர்மானிய செய்தித்தாள் கூறுகிறபடி, மோல்லரின் திட்டம் நிலக்கரி, எண்ணெய், வாயு போன்ற புதைப்படிவ எரிபொருட்களின் (fossil fuels) உபயோகத்தில் 75 சதவீதத்தைக் குறைத்து, கரியமில வாயுவை வெளியிடாத மாற்று எரிபொருட்களைக்கொண்டு அவற்றை மாற்றீடு செய்வதைத் தேவைப்படுத்துகிறது. அதற்கு எவ்வளவு செலவு ஆகும்? மோல்லர் போட்ட கணக்குகளின்படி, அதன் மொத்தத் தொகை $22.5 லட்சம் கோடியாகும் அல்லது இன்று உயிரோடிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தைக்கும் சுமார் $4,000 ஆகும். செய்தித்தாள் சொல்லி முடிப்பதுபோல, அந்த வேலையை, “அசாதாரணமான அளவுள்ள அந்தச் சாதனையை செய்து முடிக்க முழு மனிதவர்க்கத்தையுமே தேவைப்படுத்தும்.”
அவரை முதலில் பார்த்தது யார்?
“இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, தேவதூதர்கள் அந்தப் பெண்களுக்கு அறிவிப்பதற்கு முன், எல்லாரையும்விட கன்னிமரியாளுக்கே முதன்முதல் தரிசனம் கொடுத்தார்” என்பதாக ஊகிக்கும் ஒரு பாரம்பரியத்திற்கு ஆதரவாக போப் ஜான் பால் II சமீபத்தில் பேசினார் என்று கோரியரே டேல்லா சேரா கூறுகிறது. சுவிசேஷத்தால் கொஞ்சம்கூட ஆதரிக்கப்படாத இந்தக் கருத்து, சிலர் மத்தியில் பயங்கர குழப்பத்தை உண்டுபண்ணியிருக்கிறது. போப்பின் கருத்துக்களின்பேரிலும், கத்தோலிக்க பாரம்பரியத்தில் மரியாளுக்கு இருக்கும் பங்கின்பேரிலும் குறிப்பு சொல்பவராக, இத்தாலிய கத்தோலிக்க எழுத்தாளர் செர்ஷோ குவின்ட்ஸியோ, மேரிக்குக் காண்பிக்கப்படும் “பரவலான பக்தி,” கத்தோலிக்கர்களை எப்போதும் “பரிசுத்த வேதாகமங்கள் நமக்குக் கற்பித்தவற்றிற்கு அப்பாலும்கூட,” வழிநடத்திச் செல்வதாய் இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டார். வெகு சமீபத்திய இந்த “எதிர்க்கமுடியாத கருத்து, வேதாகமங்கள் சொல்வதற்கு அப்பாற்பட்ட விளக்கத்தை அளிக்கிறது,” என்று அவர் மேலுமாக கூறினார்.
“தேரை-நக்குதலை” தொடர்கிறது “தேரை-புகைத்தல்”
அறிக்கை செய்யப்பட்டுள்ளபடி, மயக்கமருந்து பண்பாட்டில் இருந்துவரும் சிலர் வெகுகாலமாக அறிந்திருக்கிறதுபோலவே, ஒரு சில தேரைகள் தங்களுடைய தோலிலிருந்து பையூஃபடெனின் என்று அழைக்கப்படும் மயங்கவைக்கும் ரசாயனப் பொருளைக் கசியச்செய்கின்றன. எனினும், இந்த ரசாயனப் பொருள்—தேரைகளைப் பிடித்துத் தின்னுகிற நாய்களைச் சிலசமயங்களில் கொல்லக்கூடிய அளவுக்கு—நச்சுத்தன்மை வாய்ந்ததாய் இருக்கிறது. ஆகவே, மயக்கமருந்தை உபயோகிக்கும் சிலர் “தேரை-நக்குதலில்” இருந்து பயந்து விலகியோடும்படி செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக “தேரை-புகைத்தலில்” நாட்டம் கொண்டிருக்கின்றனர் என்று தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை செய்கிறது. அந்தப் பசையிலிருக்கும் (slime) நச்சுக்களை வெப்பம் போக்கிவிடும் என்று யோசித்து, அவர்கள் தேரையின் நச்சுத்தன்மையுடைய பசையை உலரவைத்துப் புகைக்கின்றனர். என்னவானாலும் தேரையைத் தவறாக உபயோகிப்பது இப்போது சட்டவிரோதமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் பையூஃபடெனின் ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான மருந்துகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. குறைந்தது ஒரு விற்பனையாளராவது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய தேரைகள் சட்டப்பூர்வமாக கைப்பற்றப்பட்டன என்று ஜர்னல் அறிக்கை செய்கிறது.
பிரெஞ்சு பெண்கள் மத்தியில் புற்றுநோய் அதிகரிப்பு
பிரான்ஸில் முன்பு ஒருபோதும் இல்லாத அளவு அதிக பெண்கள் புகைக்கின்றனர். புகைப்பவர்களில் வளரிளமைப் பருவத்தினர் மத்தியில், இப்போது பையன்களைவிட பெண்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றனர். மேலும், அவர்களில் அளவுக்குமீறி (நாளொன்றுக்கு 20-க்கும் அதிகமான சிகரெட்டுகள்) புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை 1977-ல் இருந்து இரண்டு மடங்கைவிட கூடுதலாக அதிகரித்திருக்கிறது. புகைத்தல் சம்பந்தமான புற்றுநோய்கள் உருவாகிவரும் பெண்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதில் எந்தவொரு ஆச்சரியமுமில்லை. பிரான்ஸில் ஒவ்வொரு வருடமும் 20,000 பேருக்கும், பூமி முழுவதும் 8,00,000-க்கும் அதிகமானோருக்கும் புதிதாக நுரையீரல் புற்றுநோய் உண்டாகிறது என்று பாரிஸ் செய்தித்தாள் லா ஃபிகாரோ அறிவிக்கிறது. மூச்சுக்குழாய் புற்றுநோயினால் மரிக்கும் பெண்களின் எண்ணிக்கை ஐக்கிய மாகாணங்களிலும் கனடாவிலும் மூன்று மடங்கும் பிரிட்டன், ஜப்பான், ஸ்வீடன் போன்ற நாடுகளில் இரண்டு மடங்குக்குக் கூடுதலாகவும் அதிகரித்துள்ளது. சுவாசமண்டல புற்றுநோய்களின்பேரில் சமீபத்தில் பாரிஸில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில், “புகைத்தலோடு சம்பந்தப்பட்டிருக்கும் புற்றுநோய்களுக்கு எதிரான” எல்லாவற்றையும்விட “மிக வல்லமைவாய்ந்த ஆயுதம் புகைத்தலை நிறுத்துவதே” என்று டாக்டர்கள் அழுத்தம் திருத்தமாக கூறினர்.
நெதர்லாந்தில் சர்ச் அங்கத்தினர்கள் குறைகின்றனர்
டச்சு அரசாங்க அதிகாரப்பூர்வ செய்தித்தாள், ஸ்டாட்ஸ்கூரான்ட் சொல்கிறபடி, தற்போதைய போக்கு தொடர்ந்து நிலைக்குமானால், 2020-ம் ஆண்டில் டச்சு மக்களில் முக்கால் பாகத்தினர் எந்தச் சர்ச்சையுமே சேர்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள். டச்சு மக்கள் மத்தியில் நான்கு முக்கிய தொகுதிகள் இருப்பதாக “செக்குலரைசேஷன் இன் நெதர்லேண்ட்ஸ் 1966-1991” என்று தலைப்பிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆராய்ச்சி காண்கிறது: 28 சதவீதத்தினர் எந்த மதத்திலும் வளர்க்கப்படவில்லை; 33 சதவீதத்தினர் மதத்தில் வளர்க்கப்பட்டிருந்தனர், ஆனால் வெகுகாலத்திற்கு முன்பே சர்ச்சைவிட்டு வெளியே வந்தனர்; 28 சதவீதத்தினர் மதத்தில் வளர்க்கப்பட்டனர் ஆனால் இப்போது அபூர்வமாகவே சர்ச்சுக்குப் போகின்றனர், அல்லது ஒருபோதும் போவது கிடையாது; மற்றும் 11 சதவீதத்தினர் மட்டுமே அடிக்கடி சர்ச்சுக்குப் போகின்றனர். இவ்வாறு சர்ச்சுகளைவிட்டு விலகிப்போதல் ரோமன் கத்தோலிக்கர்கள் மத்தியில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது என்பதாகக் குறிப்பிட்டு, ஸ்டாட்ஸ்கூரான்ட் இவ்வாறு கூறுகிறது: “ரோமன் கத்தோலிக்கர்களின் கருத்துக்கள் அவர்களுடைய ஆவிக்குரிய தலைவர்களின் கருத்துக்களிலிருந்து மாறுபட்டவையாகத் தோன்றுகின்றன. அவர்களுடைய அதிகாரம் சர்ச் அங்கத்தினர்களால் அசட்டை செய்யப்படுகிறது என்ற எண்ணமே ஒருவருக்குக் கிடைக்கிறது.”