நடைமுறையான ஆறுதலளிக்கும் பத்திரிகைகள்
“ஊழியத்தில் பயன்படுத்துவதற்கென்று, விசேஷமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீங்கள் எங்களுக்குக் கொடுத்திருக்கும் அற்புதமான, நடைமுறையான கட்டுரைகளுக்காக உங்களுக்கு அதிகம் நன்றி செலுத்த விரும்புகிறேன். அவற்றில் சிலவற்றைப் பெற்றுக்கொண்ட போது நான் உண்மையாகவே கண்ணீர் விட்டு யெகோவாவுக்கு நன்றி செலுத்தியுள்ளேன். ஏனெனில் நம்முடைய உடன் சாட்சிகளில் அநேகருக்கு இத்தகைய தகவல் மிக அவசியமாக தேவைப்படுகிறது. பிள்ளைத் துர்ப்பிரயோகம், மதுபான துர்ப்பழக்கமுள்ள குடும்பங்களில் வளர்க்கப்படுதல், கற்பழிப்பு, வீட்டில் வன்முறை போன்ற விஷயங்கள் சிந்திக்கப்பட்டுள்ள இதழ்களை நான் குறிப்பிடுகிறேன்.”—லின்டா டபிள்யு. எஸ்., இண்டியானா, அ.ஐ.மா.
உவாட்ச்டவர் சொஸையிட்டியால் வெளியிடப்பட்டு யெகோவாவின் சாட்சிகளால் உலகமுழுவதும் விநியோகிக்கப்படும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளில் அடங்கியிருப்பவற்றைக் குறித்து சமீப ஆண்டுகளில் நாங்கள் பெற்ற அநேக ஊக்கமூட்டும் கடிதங்களில் ஒன்றின் அறிமுக வார்த்தைகளே அவை.
காவற்கோபுரம் பத்திரிகையின் ஒவ்வொரு இதழும் 120 மொழிகளில் 1,60,00,000-க்கும் மேற்பட்ட பிரதிகளாக வெளியாவதையும் விழித்தெழு! பத்திரிகையின் விநியோகம் 75 மொழிகளில் சுமார் 1,30,00000 என்பதையும் நாம் கருதுகையில் இந்தப் பத்திரிகைகளின் உலகளாவிய பாதிப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. யெகோவாவின் சாட்சிகள் இவற்றை தங்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையிலும் பொது மக்களுக்கு அளிக்கின்றனர். இது கடையில் பொருட்களை வாங்கும் போது, பெட்ரோல் நிலையங்களில், பேருந்துகளில், இரயில்களில், விமானங்களில் பிரயாணம் செய்யும் போது அல்லது அன்றாடக வாழ்க்கையின் போது எந்தப் பொருத்தமான சந்தர்ப்பத்தையும் உட்படுத்துகிறது. ஆயினும், சில சாட்சிகள் பத்திரிகைகளை அளிப்பதற்கு பிற வெற்றிகரமான வழிகளைக் கண்டிருக்கின்றனர். இவற்றை நீங்களும் முயற்சி செய்து பார்க்கக்கூடும்.
தொழில் அமைப்புகளை சந்தித்தல்
ஒரு பயண ஊழியர் மற்றொரு சாட்சியின் பலன்தரத்தக்க வேலைகளைக் குறித்து சொஸையிட்டிக்கு பின்வருமாறு எழுதினார்: “மற்ற சாட்சிகளின் வீடுகளில் தேங்கியுள்ள குறிப்பிட்ட விழித்தெழு! பத்திரிகைகளின் பழைய பிரதிகளைச் சேகரித்துக் கொள்வதை அவர்கள் ஒரு நோக்கமாக வைத்துக் கொள்கிறார்கள். பின்பு சில தலைப்புகளின் பேரில் விசேஷ ஆர்வத்தைக் காண்பிக்கக்கூடிய நிறுவனங்களை அவர்கள் சந்திக்கிறார்கள்.” எப்படிப்பட்ட நிறுவனங்களை சந்தித்தார்கள்?
“அவர்கள் சமூக சேவை நிறுவனங்களின் பேரில் கவனம் செலுத்தியுள்ளார்கள். கருக்கலைப்பு எதிர்ப்பு மையங்கள், குடும்பநல அமைப்புகள், மனநல மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள், காவல் துறை இலாக்காக்கள், நன்னடத்தைப் பொறுப்பு அலுவலகங்கள், போதை மருந்து மற்றும் மதுபான துர்ப்பிரயோக சிகிச்சை மையங்கள், பிள்ளைத் துர்ப்பிரயோக சிகிச்சை மற்றும் தடுப்பு மையங்கள், (தொண்டர்களைத் தேடிக்கொண்டிருக்கும்) நலத்துறை இலாக்காக்கள், மாவட்ட சுகாதார இலாக்காக்கள், குழந்தை பராமரிப்பு மையங்கள், மருத்துவமனை நெருக்கடி சிகிச்சை மையங்கள் மற்றும் ஒரு விஷயத்தில் நகர மேயரையும்கூட அவர்கள் சந்தித்தார்கள்.” அவர்கள் எவ்வளவு வெற்றி கண்டிருக்கிறார்கள்?
“இந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த விஷயத்தின் பேரில் அவர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்த கடந்த ஆறு மாதங்களில் குறிப்பிட்ட விஷயங்களின் பேரில் 1784 பழைய பிரதிகளை அவர்கள் அளித்துள்ளார்கள்!”
இத்தகைய தொழில் துறையிலுள்ள நபர்களை சந்திப்பதை எப்படி இந்தச் சாட்சி செய்கிறார்கள்? அவர்கள் சொல்கிறார்கள்: “இந்தச் சந்திப்புகள் அவ்வளவு வெற்றிகரமாக இருந்ததற்கு ஒரு காரணம், இந்த ஜனங்கள் தினந்தோறும் கையாளும் பிரச்சினைகளைப் பற்றி இந்தப் பத்திரிகைகள் கலந்தாலோசித்தன என்பது மட்டுமன்றி, தொழில் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்ற முறையில் உடுத்தியிருந்ததும், நாங்கள் நடந்துகொண்ட முறையுமே என்று நினைக்கிறேன்.” நிச்சயமாகவே நாம் ஒரு நம்பிக்கையுள்ள, அலுவல்முறை போன்ற அணுகுமுறையை கொண்டிருந்து, பொருத்தமான விதத்தில் உடையணிந்து சிகை அலங்காரம் செய்திருந்தால், தொழில் துறையிலுள்ள ஆட்கள் நம்மை மதிப்பர்.
அவர்கள் தன் கூற்றைத் தொடருகிறார்கள்: “நாங்கள் கருக்கலைப்பைப் பற்றிய விழித்தெழு!-வை அளித்துக் கொண்டிருந்தோம். (மே 22, 1993, ஆங்கிலம்) எனவே நான் ஒரு கருக்கலைப்பு எதிர்ப்பு மையத்தை சந்திக்க முடிவு செய்தேன். அரைகுறையாகச் செய்யப்பட்ட கருக்கலைப்பைப் பற்றிய ஒரு செய்தித் துணுக்கின் பேரில் என் உரையாடலை ஆரம்பித்து பிறகு காவற்கோபுரம் பத்திரிகையோடு சேர்த்து அளித்தேன். நாங்கள் அவ்வளவு நேர்த்தியான கலந்துரையாடலை கொண்டிருந்ததால், கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டையும் நான் அளித்தேன். இதை அவர்கள் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டனர்.” அவர்களுடைய அடுத்த சந்திப்பு ஒரு குடும்பநல மையத்திற்கு, அங்கும் அவர்கள் இதே போன்ற வெற்றி கண்டார்கள். a
இப்படிப்பட்ட முயற்சி பத்திரிகைகளை வாசிக்க விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதில் விளைவடையும். நம் பத்திரிகைகளில் காணப்படும் மிகச் சிறந்த எழுத்துநடை, ஆராய்ச்சி ஆகியவற்றால் தொழில் துறையிலுள்ள நபர்கள் கவரப்படுகின்றனர் என்பதை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடிதங்களிலிருந்து நாங்கள் அறிகிறோம். இது அவ்வளவு உண்மையாக இருப்பதால், தென் அமெரிக்காவில் உள்ள சூரினாம் போன்ற தேசங்களில் விழித்தெழு! பத்திரிகை முக்கிய கல்வி சம்பந்தமான பத்திரிகையாக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அங்குள்ள சாட்சிகள் விநியோகம் செய்யும் பத்திரிகைகளின் எண்ணிக்கை மிக உயர்வாக உள்ளது, அக்கறை காண்பிக்கும் நபர்கள் ஒவ்வொரு இதழுக்காகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
“பெண்கள்—மரியாதை பெற தகுதியுள்ளவர்கள்” என்ற (ஜூலை 8, 1992, ஆங்கிலம்) விழித்தெழு! இதழிலிருந்து ஒரு வானொலி நிலையம் சொல்லுக்குச் சொல் மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டிருந்ததாக நைஜீரியாவிலிருந்து பெற்றுக்கொண்ட ஒரு அறிக்கை கூறியது. அது எதை தெரிவிக்கிறது? நாம் வானொலி மற்றும் டிவி நிலையங்களின் இயக்குநர்களுக்கு வெற்றிகரமாக நம் பத்திரிகைகளை அளிக்கலாம். அது ஒவ்வொரு இதழையும் வெறுமனே படித்து, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புகளின் பேரில் நிபுணர்களாய் இருக்கும் உள்ளூர் நபர்களை—வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள், காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் அல்லது மற்ற தொழிலைச் செய்யும் அங்கத்தினர்களை—கண்டுபிடிப்பதேயாகும்.
ஒரு சாட்சி ஒரு வித்தியாசமான அணுகுமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள், “உங்களுக்கு விளையாட்டு வினாவிடையில் விருப்பமா?” என்று கேட்பதன் மூலம் தன் அளிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். அநேக மக்கள் அதை விரும்புகின்றனர். இதோ இந்த விழித்தெழு! இதழில் ‘நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?’ என்ற தலைப்பைக் கொண்டுள்ள ஒன்று உள்ளது. (ஆங்கிலம், ஜனவரி 8, 1994, அல்லது செப்டம்பர் 8, 1994) அக்கேள்விகளுக்கு நீங்கள் உங்கள் பதில்களை எழுதி வையுங்கள், நான் மற்றொரு நாள் திரும்ப வருவேன், அதை நாம் பைபிளின் பதில்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.” இந்த முறையை அடிப்படையாகக் கொண்டு அநேக ஆர்வமுள்ள கலந்துரையாடல்களைக் கொண்டிருந்திருக்கிறார்கள், அநேக பைபிள் படிப்புகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.
தொழில் துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபரிடம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, அவருக்குக் கவர்ச்சியூட்டும் தலைப்புகளையுடைய சமீபத்திய இதழ்களைக் காண்பிப்பது மற்றொரு நடைமுறையான ஆலோசனை ஆகும். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த லின்டா என்பவர், புதுமுறைகளை உபயோகித்து கற்பிக்கும் திட்டங்களைக் கொண்டிருந்த ஒரு பள்ளி நிர்வாகி/அறிவுரை கூறுபவரிடம் பின்வரும் அனுபவத்தைக் கொண்டிருந்தார். “நான் அவர்களிடம் பத்திரிகைகளைக் காண்பித்துக் கொண்டிருக்கையில், ‘அழுத்தத்திற்கு உட்படும் பிள்ளைகள்’ என்ற தலைப்பைக் கண்டு, ‘கடவுள் உங்களை இன்று அனுப்பியிருக்கிறார்!’ என்று அவர் சொன்னார். பிள்ளைகள் எப்படி அழுத்தத்தைத் தவிர்க்கலாம் என்பதைக் குறித்து அன்று தானே அவர் ஒரு கூட்டத்தைக் கொண்டிருந்தார். பத்திரிகையின் கடைசி பக்கத்தில் இருந்த உன் இளமை—அதிலிருந்து மிகச் சிறந்ததைப் பெற்றுக்கொள்ளுதல் என்ற புத்தகத்தைப்பற்றி பிரசுரிக்கப்பட்ட அனுபவத்தை அவர் பார்த்த போது, தனக்கு ஒரு பிரதி வேண்டும் என்று கேட்டார். தற்கொலையைப் பற்றி அப்புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோளை நான் எடுத்துக் காண்பித்த போது, ‘கடவுள் உங்களை இங்கே அனுப்பியிருக்கிறார் என்பதை நான் இப்போது அறிகிறேன்!’ என்று அவர் வியந்துரைத்தார். வாழ்வதற்கு விருப்பமில்லாத ஒரு பையனிடம் அவர் அப்போது தான் அறிவுரை கூறிக் கொண்டிருந்தார். இப்போது அவனுக்கு எடுத்துச் சொல்வதற்கு அவர் அதிகத்தைக் கொண்டிருக்கலாம்.”
முயற்சி, தயாரிப்பு அதோடுகூட உடன்பாடான மனநிலை ஆகியவற்றோடு கடவுளின் ஆறுதலான வார்த்தையை இன்னுமநேக ஜனங்களுக்கு நாம் எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த அனுபவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியது போல்: “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.”—2 கொரிந்தியர் 1:3, 4.
[பக்கம் 23-ன் படம்]
சமூக சேவை நிறுவனங்களுக்கு பத்திரிகைகள் நடைமுறையான தகவலைக் கொண்டிருந்தன
[பக்கம் 24-ன் படம்]
பலதரப்பட்ட சூழ்நிலைமைகளில் காவற்கோபுரமும் விழித்தெழு!-வும் அளிக்கப்படலாம்
[அடிக்குறிப்புகள்]
a லின்டா தன் சந்திப்புகளின் போது கருக்கலைப்பு பிரச்சினையின் அரசியல் அம்சங்களின் பேரில் நடுநிலைமை வகிக்க கவனமுள்ளவராய் இருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிக்கும் தங்கள் பிரதான வேலையிலிருந்து திசைத் திருப்பப்பட அனுமதிப்பதில்லை.