பைபிளின் கருத்து
விவாகமின்மை ஒரு வரமாயிருக்கையில்
நான் தனிமையிலிருக்கிறேன்,’ என்று பல வருடங்களாக விதவையாயிருக்கும் ஒரு கிறிஸ்தவப் பெண் புலம்புகிறார். ‘நான் ஒரு துணைவருக்காகக் காத்திருந்திருக்கிறேன். வேலைகள் செய்துகொண்டிருப்பது தனிமையைப் போக்க உதவியாயிருக்கிறது. நண்பர்களை வைத்திருப்பது உதவியாயிருக்கிறது. ஆனால், நான் விவாகம் செய்ய விரும்புகிறேன்.’
நீங்கள் விவாகம் செய்யவேண்டும் என்று ஊக்கமாக விரும்பி ஒரு துணைவருக்காகத் தேடுவது வெற்றிகரமாக இருக்கவில்லையென்றாலும், விவாகமின்மை ஒரு வரமாக இருப்பதுபோல் தெரியவில்லை—அயர்வடையவும் மனச்சோர்வடையவும் வைக்கக்கூடிய எதிர்மறையான உணர்ச்சிகள் நிறைந்த ஒரு சிறைக்குள் அவதிப்படுவதைப் போன்று பெரும்பான்மையாக அது உணர வைக்கும். அல்லது ஏற்கெனவே உங்களுக்கென்று ஒரு குடும்பம் இருந்தும் நீங்கள் தனிமைப்பட்டவராக இருந்தால், பிள்ளைகளின் தேவைகள் எல்லாவற்றையும் அளிப்பதற்கான தனிப்பட்ட பொறுப்பு உங்களுக்கு இருக்கலாம்.
அப்படியென்றால், உங்களுடைய விவாகமின்மையை நீங்கள் ஒரு வரமாகக் கருதமாட்டீர்கள். என்றாலும், வேறு சிலர் விவாகமின்மையை மிகவும் அருமையானதாகக் கருதி, தனிமையில் வாழ்வதைத் தெரிந்துகொள்கின்றனர். ஆகவே விவாகமின்மை ஒரு வரமாக இருக்கிறதா, அவ்வாறெனில் எப்போது, ஏன்? பைபிள் என்ன சொல்கிறது?
மகிழ்ச்சிக்குத் தடங்கலா?
விவாகம் பெரும் மகிழ்ச்சிக்கு ஊற்றுமூலமாக இருக்கலாம். (நீதிமொழிகள் 5:18, 19) சிலர் “பக்கப்பாதையினூடே நடப்பது மகிழ்ச்சிக்கும் நிறைவிற்குமான ஒரே மார்க்கமாக இருக்கிறது என்று நம்பச்செய்யப்பட்டிருக்கின்றனர்,” என்று லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் குறிப்பிடுகிறது. விவாக லைசன்ஸ் மாத்திரமே மகிழ்ச்சிக்கான “டிக்கெட்டா”?
லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் பிரகாரம், மனநல மருத்துவத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட ரூத் லூபன் சொல்கிறார்: “ஓர் ஆண் [அல்லது பெண்] விவாகமற்ற வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவிக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் பெண்கள் [ஆண்கள்] வாழ்வதை நிறுத்தினால் எவ்வளவு நிறைவைக் கண்டடையலாம் என்றறியும்போது ஆச்சரியப்படுவர்.” ஆம், மகிழ்ச்சியான, நிறைவளிக்கும் வாழ்க்கையை விவாகமின்மை வழிமறிப்பது கிடையாது. விவாகம் தானாகவே மகிழ்ச்சிக்கான பாதையாக இல்லை என்று விவாக விலக்குச் செய்துகொண்ட அநேகர் நம்புவார்கள். மெய்யான மகிழ்ச்சி கடவுளுடன் கொண்டிருக்கும் நல்லுறவின் பலனாகும். இவ்வண்ணம், ஒரு கிறிஸ்தவன் விவாகமின்றியும் விவாகமாகியும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.—சங்கீதம் 84:12; 119:1, 2.
தானாக ஊக்குவிக்கப்பட்ட இடைஞ்சல்களைக் குறிப்பிடுவதைத் தவிர, மரீ எட்வர்ட்ஸும் எலனர் ஹுலரும் எழுதிய விவாகமின்றி இருப்பதன் சவால் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், மகிழ்ச்சிக்கான இன்னொரு சாத்தியமான தடங்கலுக்குக் கவனத்தைத் திருப்புகின்றனர்; அது சமுதாய அழுத்தமாகும். “ஊகமானது, நீங்கள் விவாகம் செய்யவில்லை என்றால், ஏதோவொரு ஆழமான, கொடிய உணர்ச்சிப்பூர்வ நோயினால் அவதிப்படுகிறீர்கள். . . . நிச்சயம் உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது,” என்று அவர்கள் சொல்கின்றனர்.
நல்நோக்கங்கொண்ட நண்பர்களுங்கூட, ‘எப்போது நீ விவாகம் செய்யப்போகிறாய்?’ அல்லது ‘அழகான மனிதனாகிய உனக்கு எப்படி இதுவரை ஒரு மனைவி கிடைக்கவில்லை?’ என்று ஓயாது நச்சுப்படுத்தும் விதமாகக் கேட்டு, தெரியாத்தனமாக விவாகமற்ற ஆட்களின்பேரில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்கலாம். விளையாட்டாக இத்தகைய குறிப்புகள் சொல்லப்பட்டாலுங்கூட, அவை ‘பட்டயத்தைப்போல் குத்தக்’கூடியதாக, புண்பட்ட உணர்ச்சிகளிலோ சங்கட உணர்ச்சியிலோ விளைவடையக்கூடும்.—நீதிமொழிகள் 12:18.
அவரவருடைய வரம்
மிஷனரியாகப் பயணஞ்செய்த சமயத்தில் அப்போஸ்தலன் பவுல் விவாகமாகாதவராக இருந்தார். விவாகத்தை எதிர்ப்பவராக இருந்ததினால் இப்படியிருந்தாரா? இல்லவே இல்லை. ‘சுவிசேஷத்தினிமித்தம்’ விவாகமாகாமல் தொடர்ந்திருக்க தெரிந்துகொண்டதன் காரணமாக அப்போஸ்தலன் பவுல் விவாகம் செய்யவில்லை.—1 கொரிந்தியர் 7:7; 9:23.
விவாகத்திலிருந்து விலகியிருக்க பவுலுக்கு வல்லமை இருந்தது, எனினும் எல்லாரும் அவரைப்போல் இருக்க முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் சொன்னார்: “அவனவனுக்குத் தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.”—1 கொரிந்தியர் 7:7.
நீங்கள் பயணஞ்செய்யும்படி எண்ணாத பாதையாக இருந்தாலும், விவாகமின்மையானது மகிழ்ச்சிக்குரிய பாதையாக அமையலாம். நிச்சயமாகவே, யெகோவாவிடமிருந்து பெற்ற அநேக வரங்களில் விவாகமும் உள்ளடங்கியிருக்கிறது. ஆனால் உங்களால் ‘விவாகமின்மையை ஏற்றுக்கொள்ள’ முடிந்தால் அதுவும் ஒரு ‘வரமாக’ இருக்கலாம் என்று பைபிள் காட்டுகிறது. (மத்தேயு 19:11, 12; 1 கொரிந்தியர் 7:36-39, NW) அவ்வாறெனில், விவாகமின்மையின் நன்மைகளில் சில யாவை?
விவாகமான தம்பதிகள் தங்கள் துணைவர்களின் “பிரிய”த்தைப்பெறும் கவலையோடு இருக்கின்றனர். விவாகமாகாதவர்கள் “கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகி”ன்றனர் என்று பவுல் சொன்னார். விவாகமின்மையின் நன்மைகளில் ஒன்றை இது சிறப்பித்துக் காட்டுகிறது; அதுவே யெகோவாவை “கவலையில்லாமல்” சேவிக்கும் வாய்ப்பாகும்.—1 கொரிந்தியர் 7:32-35.
விவாகமாகாத நபர் முற்றிலும் கவலைகள் இல்லாமல் வாழ்கிறான் என்று பைபிள் சொல்வதில்லை. என்றபோதிலும், தனியாக வாழும் நபர் ஒரு குடும்பத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிற நபரைக் காட்டிலும் பொதுவாக ஒருசில கவலைகளையே கொண்டிருக்கிறான், ஏனெனில் தீர்மானத்தை எடுக்கையில் அவன் தன்னை மாத்திரம் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக, ஆபிரகாமிடம், ஆரானை விட்டு கானான் தேசத்துக்குப் போகும்படியாகக் கடவுள் அவருக்கு உத்தரவிட்டபோது, பைபிள் சொல்கிறது: “ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் . . . புறப்பட்டுப்போ”னார்கள். (ஆதியாகமம் 12:5) தன் குடும்ப சூழ்நிலைமை ஆபிரகாமைப் பின்வாங்கச் செய்யவில்லை என்றாலும், அத்தகைய பணிக்குத் தன் வீட்டாரை ஒழுங்குப்படுத்துவதற்கு அவர் நிச்சயமாகவே கணிசமான நேரத்தைச் செலவழித்தார்.
ஆபிரகாம் இடமாறிச் சென்றதை அப்போஸ்தலன் பவுலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பவுலும் சீலாவும் தெசலோனிக்கேயா நகரத்தில் நற்செய்தியைப் பிரசங்கித்தபோது, அவர்களுக்கு எதிராகக் கோபாவேசங்கொண்ட கலகக்கார கும்பல் உருவானது. அதே இரவில், சகோதரர்கள் பவுலையும் சீலாவையும் உடனடியாகப் பெரோயாவிற்கு அனுப்பி வைத்தனர். வேறொரு சந்தர்ப்பத்தில், துரோவாவில், “மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு [அவர்களுக்கு] உதவிசெய்யவேண்டுமென்று” பவுல் தரிசனம் பெற்றார். இப்போது தரிசனத்தைக் கண்டமாத்திரத்தில் மக்கெதோனியாவுக்கு அவர் போனார். தெளிவாக, பவுல் மனைவியில்லாதிருந்தது, குறுகிய காலப்பகுதியில் இடமாறிச் செல்வதற்கான அதிக சுதந்திரத்தைக் கொடுத்தது, குடும்பமிருந்திருந்தால் இது மிகவும் கடினமாயிருந்திருக்கும்.—அப்போஸ்தலர் 16:8-10; 17:1-15.
விவாகமின்மை அளிக்கும் வேறொரு நன்மை தனிப்பட்ட தெரிவுக்கு அதிகப்படியான சுதந்திரமாகும். நீங்கள் தனியாக வாழ்ந்தால், எங்கு வசிப்பது, எதைச் சாப்பிடுவது எப்போது சாப்பிடுவது, அல்லது எந்தச் சமயத்திற்கு படுக்கைக்குப் போகலாம் என்பதையுங்கூட தீர்மானிப்பது எப்போதும் சுலபமாயிருக்கிறது. இந்தச் சுதந்திரம் ஆவிக்குரிய நடவடிக்கைகளையும் உள்ளடக்குகிறது. கடவுளுடைய வார்த்தையின் தனிப்பட்ட படிப்பில் ஈடுபடவும் பொது ஊழியத்தில் பங்குகொள்ளவும் மேலும் பிற மக்களுக்கு உதவியாயிருப்பதற்கான வாய்ப்புகளை அனுகூலப்படுத்திக் கொள்ளவும் அதிகப்படியான நேரம் இருக்கிறது.
ஆகையால், தெரிவினிமித்தமாகவோ சூழ்நிலைகள் நிமித்தமாகவோ நீங்கள் விவாகமாகாதவர்களாயிருந்தால், உங்கள் நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துவதற்கு உறுதிபூண்டவர்களாக இருங்கள். உங்களுடைய விவாகமாகாத வாழ்க்கையைப் பிறருக்கு உதவி செய்வதில் பயன்படுத்தினால், மகிழ்ச்சிகரமான வாழ்க்கை உங்களுடையதாகும். (அப்போஸ்தலர் 20:35) விவாகம் செய்துகொள்ள ஆசைப்பட்டால், எதிர்மறையான உணர்ச்சிகளால் உங்களை நீங்களே அடைத்துக்கொள்வதையோ அந்த ‘விசேஷித்த நபர்’ இன்னும் வராததால் முழுமையற்ற மனிதனைப்போலவோ உங்களுடைய வாழ்க்கையை வாழாமல் இருங்கள். கடவுளுடைய சேவையில் உங்களைத்தானே சுறுசுறுப்புள்ளவர்களாக வைத்துக்கொள்வதால், பவுல் சொன்னதுபோல விவாகமின்மை ஒரு வரமாக இருக்கலாம்.