தற்சிந்தனை நோய்—வினோதமான கோளாறின் சவால்களை எதிர்ப்படுவது
கிறிஸ்டஃபர் அழகுமிக்க, நல்லொழுக்கமுள்ள சிறுவனாக இருந்தான்; 18 மாதமாயிருந்தபோது, அவனுடைய பெயரைக்கொண்டு கூப்பிடுகையில் அவன் பிரதிபலிக்கவில்லை. தொடக்கத்தில், காது கேட்காததுபோலத் தோன்றியது, ஆனால், மிட்டாய்ப் பேப்பரின் சலசலவென்ற சப்தத்தை எப்போதும் அவனால் கேட்க முடிந்தது.
நாளடைவில், இதர வினோதமான நடத்தைகள் தானாகவே புலப்பட்டன. வழக்கமான விதத்தில் தன் பொம்மைகளோடு விளையாடிக்கொண்டில்லாமல், அவற்றின் சக்கரங்களைத் திரும்பவும் திரும்பவும் சுற்றிக்கொண்டே இருப்பான். திரவங்களின்பேரில் அசாதாரண நாட்டமுடையவனானான், நினைத்தபோதெல்லாம் அவற்றை வெளியே ஊற்றிவிடுவான். இந்தக் காரியமும் ஏறுவதற்கு அவனுக்கிருந்த ஆசையும், அநேக ஆபத்தான சூழ்நிலைகளுக்கும் அவனுடைய தாய் மிகவும் கவலைப்படுவதற்கும் வழிநடத்தின.
எல்லாவற்றையும்விட மிகவும் கலக்கமுறச் செய்தது என்னவென்றால், அவனுக்கு ஆட்கள் இருப்பதே தெரியாது; யாருமே இல்லை என்பதுபோல, அவர்கள் இருப்பதை முற்றிலுமாக உணரமாட்டான். இரண்டு வயதாவதற்குள், அவன் பேசுவதையே நிறுத்திவிட்டான். தானாக முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டு பெரும்பான்மையான நேரத்தைக் கழித்தான்; எதற்காக அவன் கோபப்படுகிறான் என்பது பெரும்பாலும் பெற்றோரால் புரிந்துகொள்ளவே முடியாத அளவுக்கு, கடும் கோபவெழுச்சிகளையும் கொண்டிருக்கத் தொடங்கினான். ஒன்றும் புரியாமல், அவர்கள் பரிகாரம் காணத் தொடங்கினார்கள்.
கிறிஸ்டஃபருக்கு என்ன ஆனது? செல்லம் கொடுத்துக் கெடுக்கப்பட்டானா, அசட்டையாக விடப்பட்டானா, அவனுக்கு மன வளர்ச்சித் தடைப்பட்டதா அல்லது உளச் சிதைவு நோய் ஏற்பட்டதா? இல்லை, ஐக்கிய மாகாணங்களில் தற்சிந்தனை நோயைக் கொண்டிருக்கும் குறைந்தபட்சம் 3,60,000 ஆட்களில், கிறிஸ்டஃபர் ஒருவனாக இருந்தான். இந்த வினோதமான கோளாறு, உலகமுழுவதிலுமுள்ள ஒவ்வொரு 10,000 பிள்ளைகளிலும் 4 அல்லது 5 பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது, இதனால் வாழ்க்கை சவால் நிறைந்ததாகிறது.
தற்சிந்தனை நோய் என்றாலென்ன?
தற்சிந்தனை நோய் ஒரு மூளைக் கோளாறாகும், சமூக நடத்தை, தொடர்புகொள்ளும் திறன்கள், யோசிக்கும் திறன் ஆகியவை எப்போதும்போல வளர்ச்சியடைவது கிடையாது. புலன்கள்சார்ந்த உள்ளீடு செய்முறைப்படுத்தப்படும் முறையை அது பாதிக்கிறது, தற்சிந்தனை நோயுடைய ஆட்களை, சில புலனுணர்வுகளுக்கு (காட்சிகள், ஒலிகள், மணங்கள் போன்றவை) மிதமிஞ்சி பிரதிபலித்து, இதர உணர்ச்சிகளுக்குக் குறைவாகப் பிரதிபலிக்கும்படி செய்கிறது. தற்சிந்தனை நோயின் குறைபாடுகள் பல்வகையான, அசாதாரண நடத்தைப்பண்புகளை உண்டுபண்ணுகின்றன. மூன்று வயதுக்கு முன்பாகச் சாதாரணமாய்க் காணப்படும் அறிகுறிகள், பிள்ளைக்குப் பிள்ளை அதிகம் வேறுபடலாம். பின்வரும் உதாரணங்களைச் சிந்தியுங்கள்.
உங்களுடைய அழகான பிள்ளையைப் பாசத்துடன் சென்றெட்ட முயற்சிக்கையில், எவ்விதத்திலும் பாசத்துக்குப் பிரபலிக்காததுபோல் கற்பனை செய்துபாருங்கள். ஒரு பிள்ளைக்குத் தற்சிந்தனை நோயிருந்தால் இது பெரும்பான்மையாக நேரிடும். மக்களின் செயல்களுக்குப் பிரதிபலிப்பதற்கு மாறாக, தற்சிந்தனை நோய்க்கொண்ட பெரும்பான்மையான பிள்ளைகள் தனிமையிலிருக்க விரும்புகின்றனர். கட்டித்தழுவுவது அவர்களுக்குப் பிடிக்காமலிருக்கலாம், கண்தொடர்பை அவர்கள் தவிர்க்கலாம், பொருட்களைப்போல மக்களைப் பயன்படுத்தலாம்—பிறரின் உணர்ச்சிகளைக் குறித்துச் சற்றே அறிந்திருப்பதாகக் காட்டலாம். இந்நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் சிலரால், குடும்ப அங்கத்தினர்களுக்கும் அறிமுகமற்றவர்களுக்கும் வித்தியாசத்தைக் காண முடியாததாகத் தோன்றுகிறது. பார்ப்பதற்கு அவர்கள் தங்களுடைய சொந்த உலகில் வாழ்வதுபோல, தங்களைச் சுற்றியிருக்கிற மக்களையும் சுற்றி நடக்கிற காரியங்களையும் அறியாதவர்களாக இருக்கின்றனர். “சுய” என்று பொருள்படும் ஆட்டோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வரும் தற்சிந்தனை நோய்க்கான “ஆட்டிஸம்” என்ற ஆங்கிலப் பதம் இந்தச் சுய-நாட்டப் பண்பைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
மக்களைக் குறித்து அசட்டையாயிருப்பதற்கு மாறாக, தற்சிந்தனை நோயுடைய பிள்ளைகள் குறிப்பிட்டவொரு பொருளோடோ நடவடிக்கையோடோ ஆழ்ந்திருந்து, மிகைப்பட, திரும்பத் திரும்ப செய்கிற முறையில், ஒரே சமயம் அதே காரியத்தில் மணிக்கணக்காக மூழ்கியிருக்கலாம். உதாரணமாக, பொம்மைக் கார்களை மெய்யான கார்கள் என்று பாசாங்குச் செய்வதற்குப் பதிலாக, அவர்கள் நேர்த்தியான, நேரான வரிசைகளில் அக்கார்களை நிறுத்தலாம், அல்லது அவற்றின் சக்கரங்களை ஓயாது சுற்றிக்கொண்டே இருக்கலாம். வேறு வழிகளிலும் அவர்கள் ஒரே காரியத்தை மீண்டும் மீண்டும் செய்யும் மனப்பான்மையை வெளிக்காட்டுகின்றனர். தங்கள் அன்றாட வேலைக் கிரமங்களில் மாற்றத்தைப் பொறுக்காதவர்களாக, அநேகர் ஒவ்வொரு முறையும் காரியங்களை ஒரே விதமாகச் செய்யும்படி வற்புறுத்துகின்றனர்.
தற்சிந்தனை நோயுடைய பிள்ளைகள் தாங்கள் எதிர்ப்படும் நிகழ்ச்சிகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் விசித்திரமான முறைகளில் பிரதிபலிக்கவுங்கூடும். அவர்களுடைய பிரதிபலிப்புகள் குழம்புவதாக இருக்கலாம், ஏனெனில் பெரும்பான்மையர் தாங்கள் அனுபவிப்பதை விவரிக்க இயலாதவர்களாக இருக்கின்றனர். கிட்டத்தட்ட பாதிப்பேர் ஊமையர்களாக இருக்கின்றனர்; பேச முடிந்தவர்கள் அசாதாரண வழிகளில் வார்த்தைகளை உபயோகிக்கின்றனர். ஒரு கேள்விக்கு விடையாக ஆம் என்று சொல்வதற்கு மாறாக, கேட்ட கேள்வியையே திரும்பவும் கேட்பர் (சொல்வதைச் சொல்லல் என்ற காரியம்). சிலர் தகுந்ததாயிராத சொற்றொடர்களை உபயோகிப்பதாகத் தெரிகிறது, அவர்களுடைய “சங்கேத”ங்களோடு பரிச்சயமான ஆட்களாலேயே அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, “ஜன்னல்” என்பதற்கு ஒரு பிள்ளை “வெளியில் எல்லாமே இருட்டாயிருக்கிறது” என்ற பதத்தை உபயோகித்தது. மேலும், அநேகர் சைகைகள் உபயோகிப்பதைக் கடினமாகக் கண்டு, குறிப்பிட்ட ஒரு காரியம் தேவைப்படுகிறது என்பதைச் சமிக்கை காட்டும்வண்ணம் கூச்சல் போடவோ ஒருவிதமான கோபத்தை வெளிக்காட்டவோ கூடும்.
சரியான சிகிச்சையைப் பெறுவது
1940-களிலும் 50-களிலும் 60-களிலும், இந்த நோய்க்குச் சிகிச்சை கொடுப்பதை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட அநேகரால், பிற ரீதிகளில் சுகமாயிருக்கும் பிள்ளையில் உள்ள உணர்ச்சிப்பூர்வ பின்வாங்கலாகத் தற்சிந்தனை நோயைக் கருதினர். பெற்றோர், விசேஷமாகத் தாய்மார், தங்கள் பிள்ளைக்குண்டான பிரச்சினைகளுக்குப் பெரும்படியான பழியைச் சுமந்தனர். 1960-களில், தற்சிந்தனை நோய், நுட்பமான விதங்களில் உண்டாகும் மூளை சிதைவினால் (இவையென்னவாக இருக்கும் என்று சரியாக இதுவரை தெரியாவிட்டாலுங்கூட) விளைவடைகிறது என்று உறுதிப்படுத்திக் கூறும் சான்றுகள் குவியத் தொடங்கின. தற்சிந்தனை நோய்க்குச் சிகிச்சையளிக்க உள மருத்துவத்தை வலியுறுத்துவதற்கு மாறாக, கல்வி புகட்டுவதில் அழுத்தம் அளிக்கப்படுவதற்கு இது வழிநடத்தியது. விசேஷ போதனா உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டன; இவை பிரச்சினை உண்டாக்கும் நடத்தைகளைக் குறைப்பதிலும் அவசியமான திறன்களைப் போதிப்பதிலும் பயன் நிறைந்தவையாக நிரூபித்திருக்கின்றன. இந்த முன்னேற்றத்தாலும் பிற முன்னேற்றங்களின் விளைவாகவும் தற்சிந்தனை நோயுடையவர்களில் அநேகர், நல்ல முன்னேற்றம் செய்திருக்கின்றனர்; போதுமான உதவியாலும் ஆதரவாலும் வேலையிடங்களில் வேலைசெய்யவும் பாதியளவு தற்சார்பான வாழ்க்கை நடத்தக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
என்றபோதிலும், தற்சிந்தனை நோயுடைய பிள்ளைக்குச் சரியான சிகிச்சை கிடைக்கச் செய்வது ஒரு போராட்டமாயிருக்கலாம். பல்வேறு காரணங்களுக்காக, தற்சிந்தனை நோய், மாதக்கணக்காக, சிலருடைய விஷயத்தில், வருடக்கணக்காகத் தெரியாமலேயே இருந்துவிடலாம் அல்லது தவறாக நிர்ணயிக்கப்படலாம். பிற குறைபாடுகளுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள கல்வித் திட்டங்கள் தற்சிந்தனை நோயுடைய பிள்ளைகளின் தனிப்பட்ட தேவைகளைப் போதியளவு பூர்த்திசெய்யாமலிருக்கலாம். ஆகவே, தங்களுடைய பிள்ளைக்கு வேண்டிய சேவைகளைப் பெற முயற்சிக்கையில், அநேக பெற்றோர், மருத்துவர்கள், கல்வி நிபுணர்கள் ஆகியோரையும் சமூக நிறுவனங்களையும் உள்ளடக்கும் பரிச்சயமற்ற உலகிற்குள் மீண்டும் மீண்டும் இறங்குவதாகத் தங்களைக் காண்கின்றனர்.
அன்றாட வாழ்க்கை
பெரும்பான்மையான இளைஞரைப்போல் இல்லாமல், தற்சிந்தனை நோயுடைய பிள்ளைகள் தங்கள் சுற்றுப்புறங்களிலிருந்து தகவல்களை உடனடியாகக் கிரகிப்பதில்லை. வீட்டிலோ சமுதாயத்திலோ தேவைப்படுகிற அடிப்படை திறன்களைக் கற்றுத்தருவது சவாலானதாகவும் மெதுவான படிப்படியான செய்முறையாகவும் இருக்கிறது. ஒரு நாளின் வழக்கமுறையானது, பெற்றோர் ஒரு வேலையை முடித்து வேகமாக இன்னொரு வேலைக்குச் செல்லும்படி வைக்கலாம்; டிரெஸ் பண்ணிவிடுவது, உணவளிப்பது, கழிவிருக்கச் செய்வது; ஒழுங்கீன அல்லது தகுதியற்ற நடத்தைகளிலிருந்து கவனத்தைத் திருப்பிவிடுவது; கருதிச் செய்யப்பட்டிராத செயல்களுக்குப் பின்பு துப்புரவு செய்து ஒழுங்குபடுத்தி வைப்பது போன்ற வேலைகளோடு உதவுவதாகும். “[என் பையனுக்குப்] பத்து வயதாகும் வரை ஒரு நாளை ஓட்டுவதே மிகக் கடினமாக இருந்தது” என்று பெற்றோர் ஒருவர் நினைவுபடுத்துகிறார்.
இந்த மனவழுத்தத்தோடு, பிள்ளையை தொடர்ந்து கவனிப்பதற்கான தேவையும் இருக்கிறது. “டாமியைத் தொடர்ந்து கவனிக்கவேண்டும், ஏனெனில் ஆபத்து என்றால் அவனுக்குக் கொஞ்சந்தான் தெரியும்,” என ரீடா என்ற அவனுடைய தாய் சொல்கிறார். மேலும் தற்சிந்தனை நோயுடைய பிள்ளைகளில் அநேகர் ஒழுங்கற்ற தூக்கப் பழக்கங்களைக் கொண்டிருப்பதன் காரணமாக, அடிக்கடி இரவெல்லாம் விழித்திருந்து கவனிக்க வேண்டியதாயிருக்கிறது. ஃப்லாரன்ஸ்—இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டிருந்த கிறிஸ்டஃபர் என்ற மகனின் தாய்—என்ன சொல்கிறாரென்றால், “நான் அரைகுறையாகவே தூங்கினேன்.”
பிள்ளைகள் வளர வளர, இப்பேர்ப்பட்ட சில தேவைகள் குறைந்தாலும் இதர காரியங்கள் மிகையாகலாம். முன்னேற்றம் காணப்பட்டாலும், ஏறத்தாழ தற்சிந்தனை நோய்க்கொண்ட எல்லாருக்குமே தங்கள் வாழ்க்கை முழுவதும் ஓரளவு விடா கவனிப்புத் தேவைப்படுகிறது. தற்சிந்தனை நோய்க்கொண்ட பெரியவர்களுக்குத் தகுந்த வசதிகளுள்ள இல்லங்கள் இருப்பது கடினமாக இருப்பதால், தற்சிந்தனை நோய்க்கொண்ட பிள்ளைகளையுடைய பெற்றோர், வீட்டிலேயே வைத்து காலமெல்லாம் பராமரிப்பு அளிப்பதன் எதிர்பார்ப்பையோ, அல்லது இது முடியாவிடில், தங்களது வளர்ந்த பிள்ளைகளை விடுதிகளில் சேர்ப்பதன் எதிர்பார்ப்பையோ எதிர்ப்படுகின்றனர்.
பொது மக்களை எதிர்ப்படுவது
“ஜோயி இப்போது 18 வயதாயிருப்பதால், அவனை வெளியில் கொண்டுசெல்வதே மிகவும் கஷ்டம். பெரும்பான்மையான தற்சிந்தனை நோயுடைய பிள்ளைகளைப்போல், அவன் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறான், ஆனால் அவனுடைய நடத்தையின் காரணமாக, மக்கள் அவனை ஒரு மாதிரி பார்த்து, சிரித்து, கேலி பண்ணுகின்றனர். சிலசமயத்தில் அவன் நடுத்தெருவில் நின்றுகொண்டு, தன் விரலினால் ஆகாயத்தில் எழுதத் தொடங்குவான். கார் ஒலிப்பான்கள் அல்லது மக்களின் இருமல் போன்ற சப்தமான இரைச்சல்களைக் கேட்டானானால், ஆத்திரம் வந்து, ‘வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்!’ என்று உரக்கக்கத்துவான். இது எங்களைச் சங்கடநிலைக்குள்ளாகச் செய்கிறது, ஏனெனில் இது எந்த நேரத்திலும் நடக்கலாம்,” என்று ரோஸ்மாரீ சொல்கிறார். இன்னொரு பெற்றோர் கூடுதலாகச் சொல்கிறார்: “மக்களுக்கு இதை விளக்கிச் சொல்வது கடினம். ‘அவன் தற்சிந்தனை நோயுடையவன்’ என்று நீங்கள் சொன்னால், அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
இக்கஷ்டங்களினிமித்தம், அதிக-பராமரிப்பு அளிக்கும் பெற்றோர் (சாதாரணமாகத் தாய்) எளிதில் தனிமைப்படுத்தப்படலாம். “அடிப்படையாக நான் கூச்ச சுபாவமுள்ளவள், பொது மக்களுக்கு வேடிக்கையாளாக இருப்பதை விரும்புவது கிடையாது. எனவே, சிலசமயங்களில் விடியற்காலையிலோ சாப்பாட்டு நேரங்களிலோ சாதாரணமாக ஆட்கள் இல்லாதபோது நான் ஜிம்மியை விளையாட்டு மைதானத்துக்குக் கூட்டிக்கொண்டு செல்வேன்,” என்று மேரி ஆன் சொல்கிறார். (சங்கீதம் 22:6, 7-ஐ ஒப்பிடுக.) இதர பெற்றோருக்கு வீட்டை விட்டு வெளிவருவதே சவாலாயிருக்கிறது. ஷீலா குறிப்பிடுகிறார்: “சிலசமயங்களில் என்னுடைய வீட்டிலேயே அடைக்கப்பட்ட ஒரு சிறைக்கைதியைப்போல நான் உணர்ந்ததுண்டு.”
குடும்பத்தை ஒருங்கே வைப்பது
தற்சிந்தனை நோயுடைய பிள்ளைகள் (ஆங்கிலம்) என்பதில் மைக்கல் டி. பவ்வர்ஸ் எழுதுகிறார்: “தற்சிந்தனை நோயுடைய பிள்ளைக்குச் செய்யவேண்டிய அதிமுக்கியமான காரியம் என்னவென்றால் . . . பிள்ளையின் குடும்பமானது ஒருங்க இருப்பதாகும்.” இது சுலபமான ஒரு சவாலாக இல்லை. தற்சிந்தனை நோயுடைய பிள்ளையை வளர்ப்பதன் கஷ்டங்கள், சிந்தித்துப் பார்க்க முடியாத உணர்ச்சிப்பூர்வ அதிர்ச்சியினால் மேலுமாகப் பாரமேற்றப்படுகின்றன. அதிகப்படியான, வேதனைமிகுந்த அச்ச உணர்வுகள் எழும்பி, மணத் துணைவர்களிடையே இருக்கிற பேச்சுத்தொடர்பைத் தடைப்பட்டுப்போகச் செய்யலாம். இருவருக்கும் கூடுதலான அன்பும் ஆதரவும் தேவைப்படுகிற சமயத்தில், இருசாராராலும் அதிகத்தைச் செய்ய முடியாது. இத்தகைய மிதமீறிய அழுத்தங்களின் மத்தியிலும், ஆயிரக்கணக்கான தம்பதிகள் இந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்ப்பட்டிருக்கின்றனர்.
அப்படி வெற்றிகண்ட தம்பதிகளின் அனுபவங்களிலிருந்து பின்வரும் மூன்று ஆலோசனைகளை ராபின் சைமன்ஸ் எழுதிய அழுகைக்குப் பிற்பாடு (ஆங்கிலம்) என்ற புத்தகம் தருகிறது. முதலாவதாக, “மிகவும் வேதனைதரும் உணர்ச்சிகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பகிர்ந்துகொள்வதற்கு” வழிப்பாருங்கள். இரண்டாவதாக, வீட்டு வேலைகளையும் முன்னேற்பாடுகளையும் மறு ஆய்வு செய்து, வேலைச் சுமை சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு வேண்டிய சரிப்படுத்தல்களைச் செய்யுங்கள். மூன்றாவதாக, நீங்கள் இருவருமாக மாத்திரம் சேர்ந்து காரியங்களைச் செய்ய ஒழுங்கான நேரங்களைத் திட்டமிடுங்கள். டாக்டர் பவ்வர்ஸ் மேலுமாகச் சொல்கிறார்: “முன்னுரிமைகள் வைப்பதிலும் உங்கள் நேரத்தைப் பகுப்பதிலும் அனைவருடைய தேவைகளைச் சமப்படுத்துவதிலும் எந்தளவு மட்டுந்தான் ஏற்க முடியும் என்பதைத் தீர்மானிப்பதில், உங்கள் பிள்ளையின் தேவைகளோ அவளுக்கு நீங்கள் செய்யும் அர்ப்பணமோ உங்கள் குடும்ப வாழ்க்கையை அச்சுறுத்துவதற்கு ஒருக்காலும் இடங்கொடாதீர்கள்.”—ஒப்பிடுக: பிலிப்பியர் 1:10, NW; 4:5, NW.
தற்சிந்தனை நோயின் பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், இதனால் பாதிக்கப்பட்ட தனிநபர்களால் உதவியைப் பெற முடியும். முக்கியமான காரியம் என்னவென்றால், ஆரம்பத்திலேயே கண்டுணர்வது, சரியான சிகிச்சையிடமாக வழிநடத்தும். அதற்குப் பின்னர் முயற்சிகளைப் பயன்தரக்கூடிய போக்கில் திருப்பலாம். நல்ல பேச்சுத்தொடர்பும் உதவியாதாரங்களின் சமநிலையான பயன்பாடும் இருந்தால் குடும்பமானது வீணாகத் தொய்வடையாது. (நீதிமொழிகள் 15:22-ஐ ஒப்பிடுக.) உறவினர்களும் நண்பர்களும் காட்டுகிற புரிந்துகொள்ளுதலும் சுறுசுறுப்பான உதவியும் அதிதேவைப்பட்ட ஆதரவைப் பெற்றோருக்கு அளிக்கின்றன. தற்சிந்தனை நோயைப் பற்றி மக்கள் அறிந்திருப்பதும், தற்சிந்தனை நோய்க்கொண்ட நபர்களைச் சமுதாயத்திற்குள் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும், இந்தக் குடும்பங்களின் சுமைகளை முன்யோசனையில்லாமல் மிகைப்படுத்துவதிலிருந்து தடைசெய்யும். இவ்வாறு தற்சிந்தனை நோயின் சவால்களை எதிர்ப்படுவதில் நாம் அனைவருமே பங்குகொள்ளலாம்.—1 தெசலோனிக்கேயர் 5:14-ஐ ஒப்பிடுக.
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
“[என் பையனுக்குப்] பத்து வயதாகும் வரை ஒரு நாளை ஓட்டுவதே மிகக் கடினமாக இருந்தது” என்று பெற்றோர் ஒருவர் நினைவுபடுத்துகிறார்
[பக்கம் 22-ன் பெட்டி]
விசேஷ திறன்கள்
தற்சிந்தனை நோய்க்கொண்ட பிள்ளைகள் சிலசமயங்களில் விசேஷ திறன்களைக் காண்பிக்கின்றனர்; விவரங்களையும் மிகச் சாமானிய காரியங்களையும் வியக்கத்தக்க விதத்தில் ஞாபகத்தில் வைத்திருக்கின்றனர். சிலருக்குப் பாட்டுப் பாடத் தெரியாவிட்டாலுங்கூட, தேர்ச்சிபெற்ற பாட்டுத் திறன் படைத்தவர்களாக, சிக்கலான பாட்டு வரிகளை இசைக்கருவியில் வாசிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். எந்தக் கடந்தகால அல்லது பிற்கால தேதிக்கும் ஒத்திருக்கிற வார நாளை உடனடியாகச் சிலரால் உங்களுக்குச் சொல்ல முடியும். சிலர் கணிதப்புலமை வாய்க்கப்பெற்றவர்களாக இருக்கின்றனர்.
[பக்கம் 23-ன் பெட்டி]
பிற ஆட்கள் எவ்வாறு உதவலாம்
தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்: ஆரம்பத்தில் ஒரு குடும்பம் மிகுந்த உணர்ச்சி மேலீட்டால், பிறருடன் தங்களுடைய உணர்ச்சிகளைப் பரிமாற முடியா நிலையில் இருக்கலாம். பொறுமையோடும் பகுத்தறிவோடும் விடாது தொடர்வதாலும் அவர்களைச் சென்றெட்ட பாருங்கள். அதைக் குறித்துப் பேச அவர்கள் தயாராயிருந்தால், நிதானமாக, சொல்வதைக் கேளுங்கள்.
புத்திமதி அளிப்பதற்கு அவசரப்படாதீர்கள்: தற்சிந்தனை நோயுடைய பிள்ளைகள் பார்ப்பதற்குச் செல்லம் கொடுத்துக் கெடுக்கப்பட்ட பிள்ளைகளாக, அதிதிறம்பட்ட சிட்சையையே தேவைப்படுவதன் காரணமாக, அடிக்கடி பெற்றோர் பிறரிடமிருந்து நல்லெண்ணத்தால் தூண்டப்பட்ட, பரந்த அறிவு குன்றிய ஆலோசனைகளைப் பெறும் நிலையிலிருப்பதாகத் தங்களைக் காண்கின்றனர். அத்தகைய ‘எளிதான பரிகாரங்கள்’ போராடிக்கொண்டிருக்கும் பெற்றோர் மனத்தை ஒடுக்குவதாக இருக்கலாம்; யாருக்கும் புரிவது கிடையாது என்று உணரும்படி செய்யலாம்.
நடவடிக்கைகளில் குடும்பத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள்: பிற குடும்பங்கள் அனுபவித்து மகிழும் சமூக மற்றும் பொழுதுபோக்குச் சார்ந்த நடவடிக்கைகளிலிருந்து விலக்கப்பட்டவர்களாக, தற்சிந்தனை நோய் பிள்ளைகளையுடைய குடும்பங்கள் அடிக்கடி எண்ணுகின்றன. உங்கள் குடும்பத்தோடு கூட்டுறவைக் கொண்டிருக்க அவர்களுக்கு அழைப்பு விடுங்கள். விசேஷ கவனத்துக்குரிய தேவைகள் இருந்தால், அவற்றிற்கு இடமளிக்க முயலுங்கள். குறிப்பிட்ட ஓர் அழைப்புக்குக் குடும்பத்தால் இசைவளிக்க முடியாவிட்டாலும், அழைத்ததற்காக அவர்கள் போற்றுவார்கள்.
பிள்ளையைக் கவனித்துக்கொள்வதற்கு முன்வந்து அளியுங்கள்: குடும்பத்தின் முக்கியமான தேவைகளில் ஒன்று, தற்சிந்தனை நோயின் தொடர் தேவைகளிலிருந்து இளைப்பாறுவதாகும். ஒரு வேளையில் ஒருசில நிமிடங்கள் மாத்திரம் பிள்ளையைக் கவனித்துக்கொள்ள முற்படுவதோடு துவங்குங்கள். முடிவில், சாயங்கால நேரத்தில் வெளியே சென்று சாவதானமாக நேரத்தைச் செலவழிக்கவோ வாரயிறுதி நாட்களில் விடுமுறையாகச் செல்லவோகூட உங்களால் அக்குடும்பத்தை அனுமதிக்க இயலும். அத்தகைய ஓய்வுநேரங்கள் குடும்பங்கள் தங்கள் சக்தியைப் புதுப்பித்துக்கொள்வதற்கு சாலத் துணைபுரியும்.
குடும்பம் பெறக்கூடிய குறிப்பிட்ட சில சேவைகளைவிட மிக முக்கியமானது என்னவென்றால், பிற ஆட்களால் நேசிக்கப்பட்டு, மதிக்கப்படுகின்றனர் என்ற உணர்வாகும். சுருங்கச் சொன்னால், தற்சிந்தனை நோயுடைய பிள்ளையைக் கொண்டிருக்கிற ஒரு குடும்பத்திற்குச் செய்யக்கூடிய சிறந்த காரியமானது அவர்களுடைய நண்பராகத் தொடர்ந்திருப்பதாகும்.