தெளிவான புரிந்து கொள்ளுதலை அடைதல்
“ஒரு பெண்ணின் வாழ்வில் இது அத்தகைய இனிமையான காலம் என்று நான் சொல்லப்போவதில்லை, ஆனால் அதிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய வரம்புகளுக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டுமென்பதை நான் கற்றுக்கொண்டேன். என் தேகத்திற்கு இன்னும் கொஞ்சம் பராமரிப்பும் ஓய்வும் தேவையானால், அதற்கு நான் இணங்கி, உரிய மதிப்பை அளிக்கிறேன்” என மாதவிடாய் முடிவுறும் பருவத்தைக் கடந்துவந்த பெண்மணி ஒருவர் ஒப்புக்கொள்கிறார்.
கனடாவின் குடும்ப மருத்துவர் என்ற ஆங்கில பத்திரிகையில் அறிக்கை செய்த பெண்களின் சுற்றாய்வு காண்பித்ததாவது “எதை எதிர்பார்க்க வேண்டுமென்பதை அறியாமல் இருப்பது” தான் மாதவிடாய் முடிவுறும் பருவத்தைப்பற்றிய வேதனையளிப்பதாய் உள்ளது. என்றபோதிலும் மாதவிடாய் முடிவுறும் பருவம் இயற்கையாக நிகழும் ஒரு நிலைதிரிபு பருவம் தான் என்பதை அறிந்து கொண்ட பெண்கள் “தங்கள் வாழ்க்கையைப்பற்றி சிறிதளவே கவலையையும் மனச்சோர்வையும் எரிச்சலையும் உணர்ந்து, அதிக நம்பிக்கையை உணர்ந்தனர்.”
என்ன தான் அது
மாதவிடாய் முடிவுறும் பருவத்தை வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி இவ்விதமாக வரையறுக்கிறது: “பொதுவாக 45 வயதிலிருந்து 50 வயதுக்கு இடையே நிகழுகிற மாதவிடாய் இயற்கையாக முடிவுறும் காலம்.” ஐயத்திற்கு இடமின்றி மாதவிடாய் முடிவுறும் பருவமானது மாதவிடாய் வெளியேறுதலுக்கு இறுதி முடிவாக அறியப்பட்டுள்ளது.
சில பெண்களுக்கு இறுதி மாதவிடாய் திடீரென்று நிகழ்கிறது, ஒரு மாதவிடாய் காலத்திற்குப் பின்னர் அடுத்தது நிகழவே நிகழாது. மற்றவர்களுக்கோ, மாதவிடாய் காலங்கள் விகாரப்பட்டு, மூன்று வாரங்களிலிருந்து பல மாதங்கள் இடைவெளியில் நிகழ்கின்றன. ஒரு வருடம் முழுவதும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்குமானல், அவள் தன்னுடைய கடைசி மாதவிடாய் சமயத்தில் மாதவிடாய் முடிவுறும் பருவம் நிகழ்ந்தது என்று நிச்சயமாக முடிவுக்கு வரலாம்.
எப்போது மற்றும் ஏன் அது நிகழ்கிறது
சுதந்தரிக்கப்பட்ட போக்கு, வியாதி, அழுத்தம், மருந்து உட்கொள்ளுதல், அறுவை மருத்துவம் முதலியன அது நிகழக்கூடிய காலத்தைப் பாதிக்கலாம். வட அமெரிக்காவில் சராசரியாக சுமார் 51 வயதில் மாதவிடாய் முடிவுறும் பருவம் நிகழ்கிறது. பொதுவாக அது 40-களின் ஆரம்பத்துக்கும் 50-களின் மத்திபத்துக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் நிகழும், அரிதாகவே வெகுமுன்போ பின்போ நிகழலாம். புகைபிடிக்கும் பெண்களுக்கு முன்னதாகவும் பருமனான பெண்களுக்குத் தள்ளியும் மாதவிடாய் முடிவுறும் பருவம் வரும் சாத்தியம் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக்காண்பிக்கின்றன.
பிறக்கும் போது ஒரு பெண்ணின் முட்டைப்பைகள், அவள் என்றுமே கொண்டிரா அளவில் இலட்சக்கணக்கான முட்டைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் 20-திலிருந்து 1,000-வரையான முட்டைகள் முதிர்ச்சியடைகின்றன. பிறகு ஒன்று, அல்லது எப்பொழுதாவது ஒன்றுக்கு மேல், முட்டைப்பையிலிருந்து வெளியேறி கருத்தரிப்பிற்குக் கிடைக்கும். மற்ற முதிர்ச்சியடைந்த முட்டைகள் அழிந்து போகின்றன. மேலும் இந்த வடிவமைப்பில் முட்டை முதிர்ச்சியடையும் படிமுறையோடுங்கூட எஸ்ட்ரஜன் (பெண்மை இயக்குநீர்) மற்றும் ப்ரோஜெஸ்டரோன் ஹார்மோன்களின் அளவுகள் சீராக ஏறவும் இறங்கவும் செய்கின்றன.
ஒரு பெண் தன் முப்பதுகளின் இறுதியைக் கடந்து கொண்டிருக்கும் போது எஸ்ட்ரஜன் மற்றும் ப்ரோஜெஸ்டரோன்களின் அளவுகள் ஒருவேளை படிப்படியாகவோ ஏறுமாறாகவோ குறைய ஆரம்பிக்கின்றன, இனிமேலும் ஒவ்வொரு சுழற்சியின்போதும் முட்டை வெளியேறுவதில்லை. மாதவிடாய் காலம் சற்று ஒழுங்கற்று, பொதுவாக, நீண்ட இடைவெளிவிட்டு நிகழ்கிறது; குறைந்துகொண்டோ அதிகரித்துக்கொண்டோ செல்லத்தக்கதாய் மாதவிடாய் உதிரப்போக்கின் விதம் மாறுகிறது. இறுதியாக இதற்கு மேலும் முட்டைகள் வெளியேறுவதில்லை, மாதவிடாய் காலமும் முற்றுப்பெறுகிறது.
கடைசியான மாதவிடாயானது ஹார்மோன் அளவுகளில் மற்றும் முட்டைப்பையின் செயலில் பத்தாண்டுகாலம் நிகழும் மாற்றத்தின் உச்சநிலையாகும். என்றபோதிலும், மாதவிடாய் முடிவுறும் பருவத்திற்குப் பின்னரும் 10-லிருந்து 20-வது வருடங்கள் வரை, முட்டைப்பைகள் தொடர்ந்து சிறியளவில் எஸ்ட்ரஜனை சுரக்கின்றன. அண்ணீரக (அட்ரீனல்) சுரப்பிகளும் கொழுப்பு செல்களும்கூட எஸ்ட்ரஜன்களை உற்பத்தி செய்கின்றன.
வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்
எஸ்ட்ரஜன்களின் அளவு குறையும்போது எஸ்ட்ரஜனால் தூண்டப்படக்கூடிய அல்லது சார்ந்துள்ள திசுக்களும் பாதிக்கப்படுகின்றன. திடீரென உடல் உஷ்ணமடைவது, உடலின் உஷ்ணத்தை சீரமைக்கும் மூளையின் பாகத்தின் ஹார்மோன் விளைவுகளின் பயனாகக் கருதப்பட்டது. துல்லியமான செயல்பாடு அறியப்படாமலிருக்கிறது, ஆனால் உடலின் உஷ்ணமண்டலம் தாழ்நிலைக்குச் சரிசெய்யப்பட்டு, முன்பு இதமாக இருந்த வெப்பநிலை சடுதியாய் அதிக உஷ்ணமடைகிறது, உடல் வெளியேற்றத் துவங்குகிறது மற்றும் அது தானாகக் குளிர்ச்சியடைய வியர்க்கிறது.
கேயல் ஷீயி, மாதவிடாய் முடிவுறும் பருவம்—அதன் தெரிவித்திராதப் பருவம் என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்: “திடீர் உடல் உஷ்ணத்தை எதிர்ப்படும் பெண்களுள் பாதிப் பேர் இயல்பாக மாதவிடாய் நிகழும் போதே, கூடியவரையில் தங்களுடைய ஆரம்ப நாற்பதுகளிலேயே அவற்றை உணர ஆரம்பிக்கின்றனர். உஷ்ண வெளியேறுதல் அநேகப் பெண்களுக்கு இரண்டாண்டுகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. பெண்களுள் கால்பகுதியினர் அவற்றை ஐந்து வருடங்கள் உடையவர்களாக உள்ளனர். 10 சதவீதத்தினர் எஞ்சிய வாழ்க்கை முழுவதும் உடையவர்களாக உள்ளனர்.”
ஒரு பெண்ணின் இந்த வாழ்நாள் சமயத்தில், எஸ்ட்ரஜனின் அளவு குறைய ஆரம்பிக்கும் போது யோனியின் திசுக்கள் மெலிந்து, ஈரப்பசை குறைந்து விடுகிறது. “இரவில் குறைந்த நேரத்துக்கு வியர்த்தல், தூக்கமின்மை, சிறுநீரை அடக்கயியலாமை, திடீர்நோய்த்தாக்குதலினால் இடுப்புச்சுற்றளவு வீக்கமடைதல், இருதயம் படபடத்தல், காரணமின்றி அழுகைவருதல், கோபம் வெடித்தெழுதல், ஒற்றை தலைவலி, நமைச்சல், தோலில் ஊறும் உணர்வு, [மேலும்] ஞாபகமறதி” ஆகியவற்றைப் பெண்கள் எதிர்ப்படும் மற்ற அறிகுறிகள் உட்படுத்தக்கூடும் என கேயல் ஷீயி கூறுகிறார்.
மனக்கவலையான காலகட்டங்கள்
எஸ்ட்ரஜனின் இழப்புத்தான் மனக்கவலைக்குக் காரணமா? இந்தக் கேள்வி பெரும் சர்ச்சைக்குரிய பொருளாக இருந்திருக்கிறது. விடையானது, மாதவிடாய் காலத்திற்கு முன் மனநிலையில் மாற்றமுறுவோர், இரவு வியர்வையால் தூக்கமின்றி அவதிப்படுவோர் போன்ற சில பெண்களுக்கு இது நிகழ்வதாகத் தோன்றுகிறது. இந்தத் தொகுதியைச் சார்ந்த பெண்கள் ஹார்மோன் ஏற்றயிறக்க உணர்ச்சி செயல்பாடுகளுக்கு அதிகம் தூண்டப்படுவதுபோல் தெரிகிறது. கேயல் ஷீயின் பிரகாரம் இத்தகையப் பெண்கள் பொதுவாக “மாதவிடாய் முடிவுறும் பருவத்தின் காலத்தைக் கடந்தப்பின்னர் பெரும் விடுதலையை அனுபவிக்கிறார்கள்” மற்றும் ஹார்மோன் அளவுகள் சமநிலைப்படுத்தப்படுகின்றன.
கதிர்வீச்சு சிகிச்சை, வேதியியல் மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் இரண்டு முட்டைப்பைகளையும் அகற்றுதல் ஆகியவற்றின் விளைவாகச் சடுதியாய் மாதவிடாய் முடிவுறும் பருவத்துக்குள்ளாகும் பெண்கள் இன்னும் கொடிய அறிகுறிகளை ஒருவேளை எதிர்ப்பட நேரலாம். இத்தகைய முறைகள் எஸ்ட்ரஜனின் அளவில் திடீரென்று குறைகிறது அதனால் மாதவிடாய் முடிவுறும் பருவத்தின் அறிகுறிகள் துவங்குகின்றன. இத்தகைய நிலைமைகளில் பெண்ணின் ஆரோக்கியத்தைச் சார்ந்து எஸ்ட்ரஜன் ஈடுசெய்யும் மருத்துவமுறை ஒருவேளை பரிந்துரை செய்யப்படலாம்.
இதன் கடுமையும் எதிர்ப்படும் அறிகுறிகளும் ஒவ்வொரு பெண்களுக்கிடையேயும், உறவினர்களாக இருக்கும் பெண்களுக்கிடையேயும்கூட குறிப்பிடத்தக்க அளவு வித்தியாசப்படுகின்றன. இது ஏனெனில் ஹார்மோன் அளவுகள் பெண்ணுக்குப் பெண் வேறுபடுகிறது மற்றும் வெவ்வேறு அளவுகளில் குறைகிறது. அதோடுகூட, பெண்கள் மாதவிடாய் முடிவுறும் பருவத்தை நெருங்கும்போது, வேறுபட்ட உணர்ச்சிகள், அழுத்தங்கள், சமாளிக்கும் திறமைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அவர்கள் காண்பிக்கின்றனர்.
வயதானப் பெற்றோரை பராமரித்தல், வேலையில் அழுத்தங்கள், பிள்ளைகள் வளர்ந்து வீட்டைவிட்டுச் செல்லுதல் மற்றும் மற்ற நடுத்தரவயது சரிப்படுத்துதல்கள் போன்ற ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் மற்ற அழுத்தமான சூழ்நிலைமைகள், மாதவிடாய் முடிவுறும் பருவத்தின் காலத்தோடு பெரும்பாலும் இணைந்துவருகின்றன. இத்தகைய அழுத்தங்கள், ஞாபகமறதி, கவனம் குறைதல், கவலை, எரிச்சல், மனச்சோர்வு என்பனவற்றை உள்ளடக்கிய சரீரப்பிரகாரமான மற்றும் உணர்ச்சி சம்பந்தமான அறிகுறிகளை அளிக்கலாம்; இவை ஒருவேளை மாதவிடாய் முடிவுறும் பருவத்திற்குக் காரணமென்று தவறுதலாகக் கருதப்படலாம்.
வாழ்வின் ஒரு காலகட்டம்
மாதவிடாய் முடிவுறும் பருவமானது ஒரு பெண்ணின் பிறப்பிக்கும் ஆற்றலுக்குத்தான் முடிவேதவிர அவளின் ஆற்றல் திறமிக்க வாழ்க்கைக்கு அன்று. ஒரு பெண்ணின் கடைசி மாதவிடாய் காலத்தைக் கடந்தப்பின்னர், மாதாந்தர ஹார்மோன் சுழற்சியினால் ஏற்றயிறக்கமின்றி, பொதுவாகவே மனோநிலை அதிக நிலையாக உள்ளது.
உண்மைதான் நாம் மாதவிடாய் முடிவுறும் பருவத்திற்கு கவனத்தை ஒருமுகப்படுத்தினோம், ஏனென்றால் அது ஒரு வெளிப்படையான மாறுதலாகும், ஒரு பெண் தன்னுடைய இனப்பெருக்க வாழ்வை விட்டுவெளியேறுதலின் வெளிக்காட்டல் மட்டுமே. பூப்புப்பருவம், கர்ப்பந்தரித்தல், பிள்ளைபெறுதல் போன்றவையும் ஹார்மோன், உடல் மற்றும் உணர்ச்சிப்பூர்வ மாற்றங்கள் சேர்ந்து வரும் மாற்றமுறும் காலப்பகுதிகளாகும். எனவே ஒரு பெண்ணின் வாழ்நாளில் ஹார்மோன்களால் தூண்டப்படும் மாற்றங்களுக்கான சமயம், மாதவிடாய் முடிவுறும் பருவம் மட்டுமே அல்ல, ஆனால் அதுவே இறுதியானது.
எனவே மாதவிடாய் முடிவுறும் பருவமானது வாழ்வின் ஒரு காலகட்டமே. ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் விமென்ஸ் அஸோசியேஷனின் முன்னாள் தலைமை பதிப்பாசிரியை, “ஒருவேளை மாதவிடாய் முடிவுறும் பருவத்தை ஆட்கள் ஒரு நெருக்கடி அல்லது அதுமட்டுந்தான் நிகழக்கூடிய ‘மாற்றம்’ என்பதாகவும்கூட நோக்குவதை விட்டுவிட்டு, ‘அதுவுங்கூட மற்றொரு மாற்றம்’ என்று அதிகப் பொருத்தமாக நோக்குவார்கள்,” என்று எழுதினார்.
உறுதியளிக்கும் விதத்தில் விமென் கம்மிங் ஆஃப் ஏஜ் என்ற புத்தகம் பெண்ணின் கருவுறும் திறன் முடிவடைதலைப்பற்றி, “அதன் ஆரம்பம் முதலிலேயே வடிவமைக்கப்பட்டிருப்பதால், அது இயற்கையானது மற்றும் தவிர்க்கமுடியாதது. மாதவிடாய் முடிவுறும் பருவத்தை அடைவது உண்மையில் உடல் ஆரோக்கியத்தின் ஓர் அடையாளம்—[அவள்] உடலினுள் அமைக்கப்பட்ட கடிகாரம் ஓசையொடு சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறியாகும்,” என்று கூறுகிறது.
இருந்தபோதிலும், இந்த மாற்றமுறுதலை எவ்வளவு இலகுவாக ஆக்கமுடியுமோ அவ்வளவு இலகுவாக்க என்ன செய்யலாம்? எவ்வாறு துணைவரும் குடும்ப அங்கத்தினரும் வாழ்நாளின் இந்த மாற்றமுறுதலின் போது ஆதரவளிக்கலாம்? இத்தகைய காரியங்களை அடுத்தக் கட்டுரை கலந்தாலோசிக்கும்.
[பக்கம் 6-ன் படம்]
வயதானப் பெற்றோரை பராமரித்தல் உள்ளடங்கிய மற்ற அழுத்தமான சூழ்நிலைமைகளோடு மாதவிடாய் முடிவுறும் பருவம் பெரும்பாலும் இணைந்துவருகிறது