உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 2/22 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நாய் ‘தற்கொலைகளின்’ மர்மம்
  • தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகள்
  • விவசாயத்தினால் ஆரோக்கிய ஆபத்து
  • ஆங்கிலிக்கன் பாதிரிகளும் மனிதரால் உண்டாக்கப்பட்ட அவர்கள் கடவுளும்
  • உலகளாவிய பாதுகாப்பின்மை
  • சுற்றித் திரியும் பிட் புல் நாய்கள்
  • ஆஸ்திரேலியாவில் சர்ச்சின் புதிய கூட்டுக்குழு
  • கேட்பாரற்ற பயணமூட்டை
  • ஜாக்பாட் கோயில்
  • மிகப் பழைய சாலை எகிப்தில் உண்டு
  • சில மூர்க்கமாயும் மற்றவை சாந்தமாயும் இருப்பதேன்
    விழித்தெழு!—1989
  • வால்சிங்ஹேம்—இங்கிலாந்தின் சர்ச்சைக்குரிய கோயில்
    விழித்தெழு!—1994
  • பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
    காவற்கோபுரம்: பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1995
விழித்தெழு!—1995
g95 2/22 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

நாய் ‘தற்கொலைகளின்’ மர்மம்

அர்ஜன்டினாவைச் சேர்ந்த ரொஸாரியோவில் நாய் ‘தற்கொலைகளின்’ முயற்சிகள் அலைபோல் தோன்றுகிறது. இங்கு வாழும் மக்கள் இதற்கான நம்பத்தகுந்த ஒரு விளக்கத்தைத் தேடுகின்றனர். இந்தப் பிரச்சினை முக்கியமாக ரொஸாரியோவைச் சேர்ந்த பார்க்கே டெ எஸ்பான்யா என்ற பிரபலமான பூங்காவில் நடப்பதாகக் கவனிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பூங்காவில் உள்ள ஒரு உலாவுமேடை, பரானா ஆற்றிற்குமேல் சுமார் 27 மீட்டர் உயரத்திற்கு நீண்டுள்ளது. ஒரு வருட காலத்தில் சுமார் 50 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இச்சம்பவங்களில் நாய்கள் திடீரென தங்களுடைய எஜமானர்களிடமிருந்து ஓடி, நேரே உலாவுமேடையின் முனைக்குச் சென்று, சாவு ஏற்படுமளவுக்குக் கீழே குதித்தன. இருப்பினும், நிபுணர்கள் சொல்லுகிறபடி, நாய்கள் தங்களைத் தாங்களே கொன்றுகொள்ளக்கூடிய அளவு தீர்மானிக்கும் திறமையற்றவையாக இருக்கின்றன. கால்நடை மருத்துவர்களோ, அதற்குப் பதிலாக, ஆற்றிலிருந்து வரும் நுண்ணொலிகளாலோ, பறவைகள் அல்லது படகுகளின் அசைவுகளாலோ கவர்ந்திழுக்கப்படுகின்றன என்று கருதுகின்றனர். அவை அம்மேடையின் நுனிவரை பாய்ந்து ஓடுகின்றன. ஆனால் அவை உணர்வதற்கு முன்னே கீழே குதித்துவிட்டிருக்கின்றன.

தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகள்

தி டொரன்டோ ஸ்டார் சொல்கிறபடி, கனடாவில் வாழும் மக்களில் அதிகமானோர் பாதுகாப்புக்காக தங்களோடு எடுத்துச் செல்லக்கூடிய பாதுகாப்புக் கருவிகளை வாங்குகின்றனர். பிரபலமான கருவிகளுள் “சத்தமுண்டாக்கிகள்” அல்லது “கூச்சலெழுப்பிகள்” போன்ற உரத்த சத்தம் எழுப்பவல்ல, தனிப்பட்ட எச்சரிப்பு ஒலிக் கருவிகளும் உள்ளடங்கும். தாக்குவோரை விரட்டியடிப்பதற்கென்று தயாரிக்கப்பட்ட, சகிக்கமுடியாத துர்நாற்றம் வீசும் ரசாயன கொள்கலங்களும், பச்சை நிறம் அடித்துவிடப்பட்ட தாக்குபவரைப் பின்னர் அடையாளம் காண உதவும் தெளிப்பான் மைகளும்கூட கிடைக்கின்றன. எனினும், “தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் ஒரு ஆள் வன்முறை குற்றச்செயலுக்கு பலியாகமாட்டார் என்று உறுதியளிக்க முடியாது. போலீஸ் கூறுவதுபோல, பொது அறிவை உபயோகித்து எடுக்கப்படும் முன்னெச்சரிக்கைகள் தொழில்நுட்பத்தைவிட முக்கியமானவையாக இருக்கலாம்,” என்று ஸ்டார் ஒப்புக்கொள்கிறது.

விவசாயத்தினால் ஆரோக்கிய ஆபத்து

காளான்கொல்லிகள், தாவரக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க உதவுகின்றன. எனினும், வேளாண்மை ரசாயனப் பொருட்கள் ஒவ்வொரு வருடமும் சுமார் 40,000 விவசாய தொழிலாளர்கள் மரிப்பதற்கு நேரடியான காரணமாக இருக்கின்றன என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பிலிருந்து வந்த ஒரு அறிக்கை சொல்லுகிறது. இந்த ரசாயனப் பொருட்கள் மேலும் 35 லட்சம் முதல் 50 லட்சம் வரையான ஆட்களை மிக மோசமாக பாதிக்கின்றனவென கணக்கிடப்பட்டிருக்கிறது.

ஆங்கிலிக்கன் பாதிரிகளும் மனிதரால் உண்டாக்கப்பட்ட அவர்கள் கடவுளும்

சமீபத்தில் சர்ச் ஆஃப் இங்லண்ட் தனது பாதிரிகளில் ஒருவரை நீக்கியது. அந்தப் பாதிரி மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுள்மீதும், பைபிளின் அதிகாரத்தின்மீதும், இயேசு ரட்சகர் என்பவர்மீதும் அவிசுவாசத்தைப் பகிரங்கமாகப் போதித்துவந்தார். பைபிள் போதகங்களையும் சர்ச்சின் கொள்கைகளையும் அவர் பகிரங்கமாக மறுதலித்திருந்தபோதிலும், அவரை நீக்கம் செய்ததானது மற்ற பாதிரிகள் மத்தியில் ஒரு இரக்கத்தின் பிரதிபலிப்பையே தூண்டிவிட்டது. சர்ச் ஆஃப் இங்லண்டைச் சேர்ந்த எழுபத்தைந்து பாதிரிகள், கேள்விக்குள்ளான அந்த ஆள் தொடர்ந்து பாதிரியாக இருக்க அனுமதிக்கப்படவேண்டும் என்று கோரி ஒரு பொது மனுவில் கையொப்பமிட்டனர். மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுளில் நம்பிக்கை இல்லாத நூற்றுக்கணக்கான ஆங்கிலிக்கன் சக பாதிரிகள் இருக்கின்றனர் என்று சில பாதிரிகள் வலியுறுத்திக்கூறுகின்றனர்.

உலகளாவிய பாதுகாப்பின்மை

மார்ச் 1995-ல் நடைபெறவிருக்கும் சமுதாய வளர்ச்சிக்கான உலக மாநாடு சம்பந்தமாக, யுஎன்டிபி (ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்) மனித பாதுகாப்பின்மீதான தனது அக்கறையைத் தெரிவித்து ஒரு செய்தி மடலை வெளியிட்டிருந்தது. 1994-ன் மனித வளர்ச்சி அறிக்கையை (ஆங்கிலம்) அடிப்படையாகக் கொண்டிருந்த அதனுடைய செய்தி மடலானது, “இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், போரில் மரித்தவர்களில் சுமார் 90 சதவீதத்தினர் இராணுவத்தினராய் இருந்தனர். இன்றோ, சுமார் 90 சதவீதத்தினர் பொதுமக்களாக இருக்கின்றனர்—சமநிலையில் ஒரு அழிவுக்குரிய மாற்றமாக இருக்கிறது,” என்பதாக குறிப்பிட்டது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் மனித பாதுகாப்பானது ஆபத்துக்குள்ளாக்கப்படுகிறது என்று யுஎன்டிபி ஒத்துக்கொள்கிறது. மனித வளர்ச்சி அறிக்கை மேலும் கூறியதாவது: “பஞ்சங்கள், இனக் கலவரங்கள், சமுதாயப் பிளவுகள், பயங்கரவாதம், தூய்மைக்கேடு, போதைப்பொருள் வர்த்தகம் போன்றவை இனி ஒருபோதும் தேச எல்லைக்குள் மட்டும் ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களல்ல. அவற்றின் விளைவுகள் உலகமுழுவதும் பரவுகின்றன.”

சுற்றித் திரியும் பிட் புல் நாய்கள்

தி நியூ யார்க் டைம்ஸ் சொல்லுகிறபடி ஐக்கிய மாகாணங்களின் கிழக்கத்திய நகரங்கள் அநேகம், தெருக்களில் சுற்றித் திரியும் ஆபத்தான பிட் புல் நாய்களால் அதிக பிரச்சினையை எதிர்ப்படுகின்றன. பிட் புல் நாய்கள் அனைத்துமே ஆபத்தானவையாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று நாய் கட்டுப்பாட்டு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர் டாம் சைமன் விவரிக்கிறார். “அவை தகுந்தமுறையில் பயிற்றுவிக்கப்படுமானால், அமைதியான நாய்களாக இருந்து நல்ல செல்லப் பிராணிகளாகவும் இருக்கும்,” என்று அவர் சொன்னார். ஆனால் கொடூரமான உண்மை என்னவென்றால், மேலே குறிப்பிடப்பட்ட ஆபத்தான நாய்கள் பிறக்கும்போதே கொடூரமானவையாகவும் மூர்க்கமாக சண்டையிடுவதற்குப் பயிற்றுவிக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. சில நாய்களுக்கு “இன்னும் அதிக வெறிபிடிப்பதற்கு” அவை கொடூரமாக சித்திரவதை செய்யப்படுகின்றன என்று நிபுணர் ஒருவர் விளக்கினார். வன்முறையும் மூர்க்கமுமான நாய் சண்டைகளில் பங்குகொண்ட பிறகு, அநேக நாய்களுக்கு மீண்டும் சண்டைபோட முடியாமல் போகிறது. இவ்வாறு சம்பவிக்கும்போது அந்த பிட் புல் நாய்களின் எஜமானர்கள் அந்த நாய்களை அப்படியே தெருவில் அலையும்படி கைவிட்டுவிடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சர்ச்சின் புதிய கூட்டுக்குழு

1946-ல் ஆஸ்திரேலியாவில் உள்ள சர்ச்சுகள் ஆஸ்திரேலிய சர்ச்சுகளின் கவுன்ஸிலை நிறுவின. ரோமன் கத்தோலிக்க சர்ச் அதில் அங்கத்தினராக ஆகவில்லை; ஆனால் பல்லாண்டுகளாக பார்வையாளர் அந்தஸ்தைக் கொண்டிருந்தது. இப்போது கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின்னர், அந்தக் கவுன்ஸிலுக்கு ஆஸ்திரேலிய சர்ச்சுகளின் தேசிய கவுன்ஸில் என்று புதிய பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அங்கத்தினர்களின் எண்ணிக்கையில் ஒன்றே ஒன்றுதான் அதிகரித்து இருக்கிறது—அதுதான் கத்தோலிக்க சர்ச். புதிய குழுவில் சேர்ந்துகொள்ளுமாறு லூத்தரன் சர்ச் அழைக்கப்பட்டது, ஆனால் அது மறுத்துவிட்டது. இதற்குக் காரணம் அதன் சொந்த அங்கத்தினர்களே இந்தத் தீர்மானத்திற்குச் சாதகமாக இருக்கவில்லை. அந்தப் புதிய கவுன்ஸிலின் பொதுச் செயலாளராக இருக்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்ட டேவிட் கில், அவர்கள் “பைத்தியக்காரர்களைப்போல ஜெபம் செய்தனர்,” என்றும் “அதுதானே ஒரு மாற்றமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்,” என்றும் அவர்களைப்பற்றி பேசினதாக தி சிட்னி மார்னிங் ஹெரல்ட் குறிப்பிட்டது. அவர் குறிப்பிட்டுக் கொண்டிருந்தது முந்திய கவுன்ஸிலின், “ஏதோ அரசியல் சாயலை” பற்றித்தான். “நற்செய்தியைப் பரப்புவதைவிட சமூக நிதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தோன்றியது,” என்று சொல்லப்பட்டது. அந்தச் செய்தித்தாள் தொடர்ந்து சொன்னதாவது: “‘சுவிசேஷ பிரச்சினைகள்’ என்று சுவிசேஷகர்கள் எதை அழைக்கின்றனரோ அதை செயல்படுத்தத் தவறியதானது இதுவரை தீர்க்கப்படாதிருக்கும் ஒரு பெரிய பிளவை உண்டுபண்ணிற்று.”

கேட்பாரற்ற பயணமூட்டை

ஐ.மா.-வின் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் கேட்பாரற்று கிடக்கும் பயணமூட்டை அனைத்திற்கும் என்ன நடக்கிறது? அது உரிமை கோரப்படா பயணமூட்டை நிலையம் என்றழைக்கப்படும், அலபாமாவின் ஸ்காட்ஸ்பராவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது. அங்கு அது திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, பணம் ஏதாவது இருக்கிறதா என்று சோதிக்கப்பட்டபின் திரும்பவும் பொதுமக்களுக்கு விற்கப்படுகிறது. “கேட்பாரற்ற பயணமூட்டையினுள் உள்ளவற்றை ஒருமுறை பார்த்தாலும்போதும், எளிதில் நம்பக்கூடிய ஒரு விமானப் பயணியும்கூட லக்கேஜ்களைத் தங்களுடைய கைகளிலேயே எடுத்துச் செல்லும்படி தூண்டப்படுவார்,” என்று சொல்லுகிறது தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல். “நான்கு பெரிய மாடிகளில் விற்பனைக்கான பொருட்கள் சகலமும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மயிர்த்தோலாலான கோட்டுகள் மற்றும் மீன்பிடிக்கும் தூண்டில்களிலிருந்து, T-ஷர்ட்டுகள் மற்றும் கேமராக்கள் வரை இருக்கின்றன. . . . டோஸ்டர்கள், அழகு சாதனங்கள், கடமான் கொம்புகள், ஹங்கேரிய நாட்டுப்புற பாட்டு கேசட்டுகள், சவப்பெட்டிகள் போன்ற பொருட்களையும் நீங்கள் பார்க்கலாம்.” விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 20 லட்ச பயணமூட்டைகளைக் கையாளுகின்றன. அவற்றில் 10,000 முதல் 20,000 பயணமூட்டைகள் தவறான இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன அல்லது தொலைக்கப்படுகின்றன. ஆனால் 200-க்கும் குறைவானவை அவற்றின் சொந்தக்காரர் கைக்குப் போய் சேருவதில்லை. காணாமற்போன பயணமூட்டைகள் விற்கப்படுவதற்குமுன் உரிமை கோருவதற்குப் பயணிகளுக்கு மூன்று மாதகால அவகாசம் கொடுக்கப்படுகிறது. “ஸ்காட்ஸ்பராவுக்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்களுடைய சொந்தக்காரர்களின் விலாசத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை என்று விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் ஸ்காட்ஸ்பராவில் உள்ள கிளார்க்குகளோ கேட்பாரற்ற பயணமூட்டைகளை விற்பனைக்கு வைப்பதற்குமுன் அவற்றிலிருக்கும் பெயர்களையும் விலாசத்தையும் கிழித்து, சுரண்டி எடுப்பதற்கு மணிக்கணக்கில் நேரத்தைச் செலவு செய்வதாக சொல்கின்றனர்,” என்று அந்த ஜர்னல் கூறுகிறது.

ஜாக்பாட் கோயில்

தெற்கத்திய ஜப்பானில் உள்ள யாருக்கும் அவ்வளவாக அறியப்படாத ஒரு சிறிய தீவு அங்குள்ள உள்ளூர் ஷின்டோ கோயில் ஒன்றின் பெயரால் திடீரென்று பிரபலமானது. ஹோட்டோ என்ற அதன் பெயரின் அர்த்தம் “புதையலைப் பெறுங்கள்” என்பதாகும். சமுதாய மேம்பாட்டுக் குழு ஒன்று இதனைப் பயன்படுத்தி, தன்னுடைய உச்சளவு எதிர்பார்ப்பைவிட அதிக பலன்களைப் பெற்றுகொண்டது. மக்கள் தங்களுடைய லாட்டரி சீட்டுகளைப் போட்டு வைக்கக்கூடிய பைகளை இந்தக் கோவில் விற்கும்படி ஏற்பாடு செய்தனர். கோயிலில் வாங்கிய இந்த “அதிர்ஷ்ட பைகளை” உபயோகிப்பதனால் லாட்டரியில் அவர்களுக்கு நல்ல யோகம் அடிக்கிறது என்பதாக அவர்கள் சொன்னார்கள். அதிலிருந்து, “லாட்டரியில் பம்ப்பர் பரிசை பெற ஆசைப்படும் ஜனங்கள் பெருந்திரளாக ஹோட்டோ கோயிலுக்கு வந்து போகின்றனர்,” என்று ஆஸாஹி ஈவ்னிங் நியூஸ் சொல்லுகிறது. ஜாக்பாட் பரிசு அடிப்பது இந்தத் “திரள்கூட்டத்தினருக்கு” அல்ல, ஆனால் ஒரு பைக்கு 10 டாலர், 30 டாலர் என்று விலைவைத்து விற்கிற அந்தக் கோயிலுக்குதான்.

மிகப் பழைய சாலை எகிப்தில் உண்டு

கெய்ரோவிற்குத் தென்மேற்கே 69 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பாலைவனத்தின் குறுக்கே போடப்பட்ட 12 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சாலையைப் புவிவரலாற்றியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். சுண்ணாம்புக்கல் பாளங்கள், மணற்கற்கள், கல்லாகிப்போன சில மரங்கள் போன்றவற்றை உபயோகித்துப் போடப்பட்ட இந்தப் பண்டையகால சாலையானது, பொ.ச.மு. சுமார் 2600 முதல் 2200-ம் ஆண்டுகளில், பழங்கால ராஜாக்களின் காலத்தில் போடப்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் சராசரி அகலம் இரண்டு மீட்டர் ஆகும். ஒரு பெரிய எரிமலைப்பாறை சுரங்கத்தில் இருந்து வெள்ளப்பெருக்குக் காலத்தில் நைல் நதியோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பழங்கால ஏரிக்கரைக்குப் பெரிய பெரிய கற்களை ஏற்றிக்கொண்டு போவதை எளிதாக்குவதற்காக இந்தச் சாலை அமைக்கப்பட்டது. அந்த ஏரி இப்பொழுது இல்லை. கல்லாலான கல்லறைகளுக்கும் கிஸாவிலுள்ள பிணக்கிடங்கு கோயில்களின் உட்சுவர்களுக்கும் இந்தக் கறுப்புக்கல் எகிப்திய மன்னர்களால் விரும்பப்பட்டது. “பண்டைக்கால எகிப்து காரணமாக இருந்த மற்றொரு தொழில்நுணுக்க வெற்றியும் இதில்தான் இருக்கிறது,” என்றார் புவிவரலாற்றியல் பேராசிரியர் டாக்டர் ஜேம்ஸ் ஏ. ஹேரெல். கிரீட்டில் பாவுக்கற்களால் போடப்பட்ட, பொ.ச.மு. 2000-க்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்று கணக்கிடப்பட்ட சாலையே இதற்குமுன் மிகப் பழமையான சாலை என்றறியப்பட்டிருந்தது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்