உயிர் காக்கும் பெல்ட்
“மோட்டார் வாகன விபத்துக்களில் காயமடைபவர்களின் எண்ணிக்கையையும், ஏற்படும் காயங்களின் கடுமையையும் குறைப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று பாதுகாப்பு பெல்ட்டை உபயோகிப்பதாகும்,” என்கிறது மார்பிடிட்டி அண்ட் மார்ட்டாலிட்டி வீக்லி ரிப்போர்ட் (MMWR). ஆராய்ச்சி ஒன்று கூறுவதுபோல, பயணிகள் பாதுகாப்பு பெல்ட்களை சரிவர உபயோகிக்கும்போது மோட்டார் வாகன விபத்தில் மரிப்பதற்கான ஆபத்து 43 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மோசமாக காயமடைவதற்கான ஆபத்து சுமார் 50 சதவீதம் குறைக்கப்படுகிறது.
பாதுகாப்பு-பெல்ட்-உபயோக சட்டம் முதன்முதலாக ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் 1970-ல் அமல்படுத்தப்பட்டது. இப்போது சுமார் 35 நாடுகள் பாதுகாப்பு-பெல்ட்-உபயோகத்தைக் கட்டாயமாக்கியிருக்கின்றன. இச்சட்டத்தை மீறுபவர்கள் பெரும்பாலும் அபராதம் விதிக்கப்படுகின்றனர்; சிலர் வாகனம் ஓட்டும் தங்களுடைய சலுகைகள் ரத்து செய்யப்படும் அபாயத்திற்கு உள்ளாகின்றனர். சில அரசாங்கங்கள் (முன் சீட்டோ பின் சீட்டோ) எந்தச் சீட்டில் உட்கார்ந்திருந்தாலும் பாதுகாப்பு பெல்ட்களை அணிவதை அவசியமாக்கும் சட்டங்களை அமல்படுத்தியிருக்கின்றன.
“உலக முழுவதும் போக்குவரத்து மோதல்களில் ஒவ்வொரு வருடமும் 3,00,000 பேர் மரிப்பதாகவும், 10-15 மில்லியன் ஆட்கள் காயமடைவதாகவும் கணக்கிடப்பட்டிருப்பதாக” MMWR அறிக்கை செய்கிறது. அத்தனை பேரும் சீட் பெல்ட்களை அணிந்திருந்தார்களேயானால் அந்த எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டிருக்கும்.