எமது வாசகரிடமிருந்து
கல்வி நான் இப்போதுதானே நைஜீரியா பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றேன், 2 சதவீதத்தில் உயர்படி நிலையை தவறவிட்டிருந்தேன். நான் ஓரளவு மனச்சோர்வாயிருந்தேன். ஆகவே “கல்வியை அதனிடத்தில் வைப்பது” (ஆகஸ்ட் 22, 1994) கட்டுரையை நீங்கள் பிரசுரித்து, கல்வி என்பது மேதையாக விளங்க வேண்டும் என்பதற்காக அல்ல என்பதைக் காண்பித்தபோது காரியங்களைச் சரியான நோக்கில் காண ஆரம்பித்தேன். என்னுடைய பேராசிரியர்கள் முதுநிலைக் கல்வியை நாடும்படியாக என்னை ஊக்குவிக்கையில், நான் கற்றுக்கொண்டிருப்பதன் அடிப்படையில் காரியங்களைப் பொறுப்புணர்ச்சியுடன் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
ஜி. ஜே., நைஜீரியா
எனக்கு 14 வயதாகிறது, உயர் கல்வியைத் தொடரும்படியாக அதிகமான அழுத்தத்தின்கீழ் இருக்கிறேன். உங்கள் கட்டுரையின் உதவியோடு என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைத் தீர்மானித்துவிட்டேன். நான் ஒரு பயனியராக [முழுநேர சுவிசேஷ ஊழியனாக] விரும்புகிறேன், ஒரு வேலையைப் பெறுவதற்கு எனக்குக் கூடுதலான பயிற்சி தேவைப்பட்டால், நான் தொழில் கல்வி பள்ளிக்குச் சென்று புகைப்படக் கலையைக் கற்பேன்.
ஹெச். ஓ., ஐக்கிய மாகாணங்கள்
நான் துணைக்கல்வியைப் பெற்றுக்கொள்ள தெரிவுசெய்யவில்லை. அந்த நேரத்தை நம்முடைய படைப்பாளரைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் செலவழிக்க விரும்புகிறேன். பல்வேறு பொருள்களைப் பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறேன் என்பதைக் குறித்து மக்கள் பொதுவாக ஆச்சரிப்படுவதுண்டு. அவர்கள் “நீ கல்லூரியில் படிக்கிறாயா?” என்று கேட்கிறார்கள். நான் அறிந்திருப்பதை பைபிளிலிருந்தும் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்களிலிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதாக அவர்களுக்குச் சொல்லுகிறேன்.
எம். எல்., ஐக்கிய மாகாணங்கள்
உங்களுடைய கட்டுரை துணைக்கல்வியின் பலாபலன்களைச் சிந்திப்பதனுடைய தேவையைக் காண்பித்தது. நான் மறுபடியுமாக பள்ளி செல்ல வேண்டிய தேவையை உணர்ந்தேன், ஆனால் ஆவிக்குரிய காரியங்களை அசட்டைசெய்ய விரும்பவில்லை. என்னுடைய கிறிஸ்தவக் கூட்டங்களின் அட்டவணையை என்னுடைய பள்ளிச் செயலரிடம் விளக்கினேன், என்னுடைய எல்லா கூட்டங்களுக்கும் செல்லக்கூடிய வகையில் அவர் என்னுடைய வகுப்புகளை ஏற்பாடுசெய்து கொடுத்தார்.
எம். எஃப். எஸ்., பிரேஸில்
பெலவீன பாண்டம்? “பைபிளின் கருத்து: ‘அதிக பெலவீன பாண்டம்’—பெண்களுக்கு அவமதிப்பா?” (அக்டோபர் 8, 1994) என்ற அறிவொளியூட்டும் கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. அது அத்தனை அழகாக கவனத்தோடு விளக்கமாக விவரிக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு ஆணும் அதைப் படிக்கவேண்டும்.
ஜி. பி., ஐக்கிய மாகாணங்கள்
1 பேதுரு 3:7-லுள்ள பெண்கள் ‘அதிக பெலவீன பாண்டம்’ என்ற பைபிளின் சொற்றொடரை நான் ஒருபோதும் தெளிவாக புரிந்துகொண்டது கிடையாது. பெண்கள் குறைந்த முக்கியத்துவமுள்ள ஜீவன்களே என்பதாக எப்போதும் நினைத்து வந்தேன், ஆண்கள் பெண்களை மரியாதை குறைவாக நடத்துவதைப் பார்த்தே நான் வளர்ந்துவந்தேன். ஆனால் அந்தக் கட்டுரை என்னுடைய சிந்தனையை சரி செய்தது.
டி. சி., ஐக்கிய மாகாணங்கள்
எதிர்பாலார் “எதிர்பாலாரை நினைக்காதிருக்க முடியவில்லையே, ஏன்?” மற்றும் “எதிர்பாலாரை நான் நினைக்காதிருப்பது எப்படி?” (ஜூலை 22, 1994; ஆகஸ்ட் 8, 1994) என்ற “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளுக்காக உங்களுக்கு மிக்க நன்றி. எனக்குக் கிறுக்குப் பிடிக்கவில்லை என்பதை அறிய வந்தது மகிழ்ச்சியாக இருந்தது, ஏனென்றால் 12 வயது முதற்கொண்டு எனக்குத் தெரிந்த ஒரு பையனிடம் தீவிரமான உள்ளுணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறேன். இரண்டாவது கட்டுரை அவனைப்பற்றி அதிகம் நினைக்காதிருப்பதற்கு எனக்கு உதவியது. என்னுடைய சபையிலுள்ள ஒரு மூத்த கிறிஸ்தவ சகோதரியிடம் நான் சொன்னேன், அவர்கள் எனக்கு உதவினார்கள்.
பி. ஸெட்., ஐக்கிய மாகாணங்கள்
தற்புணர்ச்சியைப் பற்றிய பகுதியில் தகவல் எனக்கே நேரடியாக பொருந்துவதாக உணர்ந்தேன். தற்புணர்ச்சியானது கொழுந்துவிட்டெறியும் பால் சம்பந்தமான ஆசைகளைத் தணிக்க எனக்கு உதவிசெய்யும் என்பதாக நினைத்தேன், ஆனால் அது அதை இன்னும் மோசமாகவே ஆக்குகிறது. இந்த அருவருப்பான பழக்கத்தில் ஈடுபட்டிருப்பதற்காக யெகோவா என்னை மன்னித்துவிடுவார் என்று ஜெபிக்கிறேன்.
பி. எம்., ஐக்கிய மாகாணங்கள்
கட்டுரையை ஏற்ற நேரத்தில் பெற்றேன். பள்ளியில் அதிகமாக பேசப்படும் விஷயம் பால் சம்பந்தப்பட்டதாகும். நான் போகும் அதே சபைக்கு வரும் ஒரு பெண் பள்ளியில் இருக்கிறாள். அவள் அதிக புத்திசாலியாகவும், திறமையுள்ளவளாகவும் அழகாகவும் இருப்பதாக காண்கிறேன். எப்போதும் அவளைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பதையும் கவனித்துக்கொண்டிருப்பதையும் தவிர்ப்பதற்குக் கட்டுரை எனக்கு உதவியது.
எம். எஃப்., ஜெர்மனி