உலக முடிவைப்பற்றிய முன்னறிவிப்புகள்
“இருண்ட நிலைமைகளைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்பவர்கள் உலகம் முடிவடையும் தறுவாயில் இருக்கிறது என்று ஆயிரக்கணக்கான வருடங்களாக முன்னறிவித்து வந்திருக்கின்றனர்.”—முன்னெச்சரிக்கைகள்: எதிர்காலத்திற்குள் தாவுதல் (ஆங்கிலம்).
கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின் 1,000 வருடங்கள் கழித்து, 1033-ம் ஆண்டில், பிரான்ஸிலுள்ள பர்கண்டியில் வாழும் மக்கள் பீதியடைந்தனர். ஏனென்றால், அந்த வருடத்தில்தான் உலகம் முடிவடையப்போகிறது என்று முன்னறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கத்துக்கு மாறான எண்ணிக்கையில் சேதத்தை விளைவித்த இடிமழையோடுகூடிய புயலும், ஒரு கொடும் பஞ்சமும் ஏற்பட்டபோது அழிவைப்பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போயின. மனம்திரும்பியதைப் பகிரங்கமாக காட்டும் செயல்களில் திரளான மக்கள் ஈடுபட்டனர்.
அதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து ஆயிரமாவது வருடம் அணுகுகையில், (அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக் கணக்கின்படி), உலகத்தின் முடிவு சீக்கிரத்தில் ஏற்படப்போகிறது என்று அநேகர் நம்பினர். ஐரோப்பிய குருமடங்களில் நடந்துகொண்டிருந்த கலை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நின்றுபோய்விட்டதாக சொல்லப்படுகிறது. சோதிடமும் முன்னறிவிப்பும் என்ற தனது ஆங்கில புத்தகத்தில் எரிக் ரஸல் இவ்வாறு எழுதினார்: “பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியின்போது எழுதப்பட்ட உயில்களிலெல்லாம், ‘உலகத்தின் முடிவு தற்போது நெருங்கிவருகிறதைக் கண்கூடாகக் காண்பதால்’ என்று எழுதுவது சர்வ சாதாரணமான ஒரு வாசகமாகிவிட்டது.”
பதினாறாம் நூற்றாண்டில் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்த மார்ட்டின் லூத்தர், தன்னுடைய வாழ்நாளிலேயே உலகத்தின் முடிவு அருகாமையில் இருப்பதாக முன்னறிவித்தார். எழுத்தாசிரியர் ஒருவர் குறிப்பிடுவதுபோல, அவர் சொன்னதாவது: “என்னுடைய அபிப்பிராயத்தில், நியாயத்தீர்ப்பு நாள் வெகு சீக்கிரம் வரும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.” மற்றொரு எழுத்தாசிரியர், “வரலாற்று நிகழ்ச்சிகளை பைபிள் தீர்க்கதரிசனங்களோடு தொடர்புபடுத்திப் பார்த்ததன் மூலம், அந்த இறுதிப் பேரழிவு சமீபத்தில் இருக்கிறது என்று லூத்தரால் அறிவிக்க முடிந்திருக்கிறது,” என்று விவரித்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், அட்வென்டிஸ்ட் சர்ச்சை ஸ்தாபித்த பெருமைக்குரியவராக பொதுவாகவே குறிப்பிடப்படும் வில்லியம் மில்லர் என்பவர், மார்ச் 1843-க்கும் மார்ச் 1844-க்கும் இடைப்பட்ட ஏதோவொரு சமயத்தில் கிறிஸ்து திரும்பவருவார் என்று முன்னறிவித்தார். அதன் விளைவாக, சிலர் அப்போது தாங்கள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என்று எதிர்பார்த்தனர்.
சமீப காலங்களில், உக்ரேனில் உருவெடுத்த க்ரேட் உவைட் ப்ரதர்ஹுட் (Great White Brotherhood) என்றழைக்கப்பட்ட ஒரு மதம், நவம்பர் 14, 1993 அன்று உலகம் முடிவடையும் என்று முன்னறிவித்தது. அ.ஐ.மா.-வில், ஹெரல்ட் கேம்ப்பிங் என்ற வானொலி பிரசங்கிப்பாளர் ஒருவர் செப்டம்பர் 1994-ல் உலகம் முடிவுக்கு வரும் என்று சொன்னார். தெளிவாகவே, உலக முடிவுக்கென்று முன்னறிவிக்கப்பட்ட இந்தத் தேதிகளெல்லாம் தவறிப்போயின.
இது உலகம் முடிவடையும் என்பதில் மக்களை இனியும் நம்பிக்கை வைக்காதவர்களாக்கியதா? அதற்கு நேர்மாறாக மாற்றியது. “2000-ம் ஆண்டில் புது ஆயிரவருடம் நெருங்கி வருவது, அழிவு நாள் பற்றிய தீர்க்கதரிசனங்களை மடைதிறந்து பாயச்செய்கிறது,” என்று டிசம்பர் 19, 1994 தேதியிட்ட யு.எஸ்.நியூஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்ட் குறிப்பிட்டது. “எதிர்காலத்தில் ஏதோவொரு சமயத்தில் உலகம் முடிவுக்கு வரும் என்பதாக அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் யோசிக்கின்றனர்; இவர்களில் அநேகமாக மூன்றிலொருவர் இன்னும் ஒருசில பத்தாண்டுகளில் அது முடிவடையும் என்று நினைக்கின்றனர்,” என்பதாக இந்தப் பத்திரிகை அறிவித்தது.
உலக முடிவைப்பற்றி ஏன் இவ்வளவு முன்னறிவிப்புகள் இருந்திருக்கின்றன? இது முடிவடையும் என்று நம்புவதற்கு நியாயமான காரணம் இருக்கிறதா?