பிரச்சினைகளில் சில யாவை?
தாத்தாபாட்டிகள், பெற்றோர்கள், பேரப்பிள்ளைகள்—மூன்று தலைமுறைகளும் வயதில் ஒருசில பத்தாண்டுகளால் மட்டுமே பிரிக்கப்பட்டிருக்கின்றன; எனினும், உள்ளத்திலோ பெரும்பாலும் ஒரு பெரும் பாதாளத்தினால் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
தாத்தாபாட்டிகளில் அநேகர் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்திய இரண்டாம் உலகப்போரின் கொடூரமான அனுபவத்தைக் கடந்து சென்றனர். 60-களின் எதிர்ப்புகளின்போதும் பொருளாதார அபிவிருத்தியின்போதும், அவர்களுடைய பிள்ளைகள் ஒருவேளை சிறுவயதினராக இருந்திருப்பர். அவர்களுடைய பேரப்பிள்ளைகள் இன்று மதிப்பீடுகளே இல்லாத ஒரு உலகில் வாழ்கின்றனர். லட்சிய மாதிரிகளாக இருக்கும் பெருந்தகைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்களின் காரணமாக, ஒரு தலைமுறையினர் தங்களுடைய சொந்த அனுபவத்திற்கான போற்றுதலை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திவிடுவது சுலபமல்ல. ஏதோவொன்று, வெவ்வேறு தலைமுறையினரையும் ஒத்துழைக்கச்செய்து ஒருவருக்கொருவர் மதிப்புக் காண்பிப்பதற்குமான தூண்டுதலாக இருக்கும் ஏதோவொன்று குறைவுபடுகிறது. ஆனால் அது என்னவாக இருக்கமுடியும்?
அடிக்கடி, நல்லெண்ணம்கொண்ட தாத்தாபாட்டி திருமணமான தங்களுடைய பிள்ளைகள் பேரப்பிள்ளைகளிடம் ஒரேயடியாக கண்டிப்பாக இருக்கின்றனர் அல்லது யாதொரு கண்டிப்புமின்றி நடந்துகொள்கின்றனர் என்று முறையிட்டு, அவர்களுடைய குடும்ப விவகாரங்களில் தலையிடுகின்றனர். மறுபட்சத்தில், ஸ்பானிய பழமொழி ஒன்று சொல்லுகிறது: “தாத்தாபாட்டி கொடுக்கும் தண்டனை நல்ல பேரப்பிள்ளைகளை உருவாக்குவதில்லை.” ஏனென்றால், தாத்தாபாட்டி கட்டுப்பாடின்றி செல்லம்கொடுக்கும் மனச்சாய்வை உடையவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய சொந்த அனுபவத்தின் காரணமாக, அவர்களால் தெளிவாகக் காணமுடிகிற சில தப்புகளை தங்களுடைய பிள்ளைகள் தவிர்க்கவேண்டும் என்று விரும்புவதால் அவர்கள் ஒருவேளை தலையிடலாம். என்றபோதிலும், திருமணமான தங்களுடைய பிள்ளைகளிடமாக உள்ள உறவை அவர்களால் சமநிலையோடு மீண்டும் மதிப்பிட்டு விளங்கிக்கொள்ள முடியாமல்போகலாம். திருமணத்தின் மூலம் பெற்றோர்களிடமிருந்து தனித்து செயல்படுவதற்காக ஏக்கத்தோடு காத்திருந்த பிள்ளைகள், பெற்றோர் தலையிடுவதை சகித்துக்கொள்ள தயாராக இல்லை. இப்போது அவர்கள் தங்களுடைய குடும்பத்தைக் கட்டிக்காப்பதற்கு உழைப்பதால், சொந்த தீர்மானங்களை எடுப்பதற்கான தங்களுடைய உரிமை ஆக்கிரமிக்கப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏற்கெனவே தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று ஒருவேளை நினைத்துக்கொண்டிருக்கும் பேரப்பிள்ளைகள், சட்டதிட்டங்களை எதிர்த்து, தங்களுடைய தாத்தாபாட்டி தற்கால வாழ்க்கைக்கு ஒவ்வாதவர்கள் என்று ஒருவேளை கருதலாம். நவீன சமுதாயத்தில், தாத்தாபாட்டிகள் தங்களுடைய கவர்ச்சியை இழந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அவர்களுடைய அனுபவம் அடிக்கடி அசட்டை செய்யப்படுகிறது.
பேச்சுவார்த்தைகள் நிற்கும்போது
சில வேளைகளில் பரஸ்பர புரிந்துகொள்ளுதல் இல்லாமை என்ற துளைக்கமுடியாத மதில், தாத்தாபாட்டி தங்களுடைய பிள்ளைகளோடு வாழ்ந்திருந்தாலும்கூட, அவர்களை குடும்பத்தின் மீதி அங்கத்தினர்களிடமிருந்து தனிப்படுத்திவிடுகிறது. விசனகரமாக, முதிர்வயது கொண்டுவரும் அதிக அழுத்தத்தின் காரணமாக தாத்தாபாட்டிக்கு இன்னுமதிக பாசம் தேவையாயிருக்கும் இந்தச் சமயத்தில்தான் இது சம்பவிக்கிறது. தனிமையாக உணர ஒரு நபர் தனிமையில்தான் இருக்கவேண்டும் என்பது கிடையாது. பேச்சுவார்த்தைகள் நிற்கும்போது, மதிப்பும் பாசமும் தாழ்வு மனப்பான்மையால் அல்லது எரிச்சலால் மாற்றீடு செய்யப்படும்போது, தாத்தாபாட்டி தங்களையே முழுவதுமாக தனிமைப்படுத்திக்கொள்வதும், பெருத்த ஏமாற்றமடைவதும்தான் அதன் விளைவுகளாக இருக்கின்றன. அவர்களுடைய உள்ளுணர்ச்சிகள் புண்படுத்தப்படுகின்றன. கல்வி நிபுணர் ஜாகோமோ டாக்வினோ இவ்வாறு எழுதுகிறார்: “யாரோ சமீபத்தில் பழங்கால மாடல் காருக்கு ஒப்பிட்ட, குடும்பத்தில் காண்பிக்கப்படும் அன்பானது, இன்னும்கூட மிகச் சிறந்த வயோதிப மருந்தாக இருக்கிறது. புரிந்துகொள்ளுதலை வெளிக்காட்டும் ஒரு முகபாவனை, கனிவான ஒரு புன்னகை, தெம்பளிக்கும் வார்த்தை, அல்லது பாசத்தோடு தட்டிக்கொடுத்தல் ஆகியவை ஏராளமான மருந்துகளைவிட அதிகம் உதவுகின்றன.”—லிபெர்ட்டா டி இன்வெக்யாரா (முதிர்வயதடைவதற்கான சுதந்திரம்).
உங்களுடைய முன்மாதிரி வித்தியாசத்தை உண்டாக்கலாம்
குடும்ப உறவுமுறை சீர்கெடுவதன் விளைவாக ஏற்படும் மன இறுக்கம் ஒரு தலைமுறை மற்றொன்றுக்கு எதிராக தொடர்ந்து முறையிட்டுக்கொண்டே இருக்கவும்செய்யும். குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் மற்ற அங்கத்தினர் செய்கிற எதுவும் தவறு என்பதாக நினைக்கலாம். ஆனால் அதன் தீய விளைவுகள் அனைவராலும் உணரப்படுகின்றன. தங்களுடைய பெற்றோர்கள் தங்கள் தாத்தாபாட்டியை எப்படி நடத்துகிறார்கள் என்பதையும், அதற்கு தாத்தாபாட்டி எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதையும் பிள்ளைகள் கவனிக்கிறார்கள். வயதானவர்கள் தங்களுடைய பாகத்தில் பெரும்பாலும் வெளியில் சொல்லாமல் மனம் புழுங்கினாலும், பேரப்பிள்ளைகள் அவற்றைக் கேட்டு, கண்டு, ஞாபகத்திலும் வைத்திருக்கின்றனர். இவ்வாறு அவர்களுடைய சொந்த எதிர்கால நடத்தை முறைகள் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன. அவர்கள் வளர்ந்தபின் தங்களுடைய பெற்றோர்கள் தாத்தாபாட்டியை எப்படி நடத்தினார்களோ அதேவிதத்தில்தான் அவர்களையும் நடத்தலாம். “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்,” என்ற பைபிள் நியமத்திலிருந்து தப்பிக்கவே முடியாது.—கலாத்தியர் 6:7.
பெற்றோர்கள் தாத்தாபாட்டியை கிண்டல் பண்ணுவது, அதட்டி வாயடைக்கச்செய்வது, சுயநலத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக்கொள்வது போன்ற தாழ்வான முறைகளில் நடத்துவதைப் பேரப்பிள்ளைகள் பார்த்தால், அதைத் தொடர்ந்து, இவர்களும் தங்களுடைய பெற்றோர்கள் தாத்தாபாட்டியாகும்போது இதேவகையில்தான் நடத்துவார்கள். தாத்தாபாட்டியின் போட்டோவை சுவற்றில் மாட்டிவைத்துக் கொண்டால்மட்டும் போதாது. அவர்களை ஆட்களாக மதிக்கவும் நேசிக்கவும் வேண்டும். நாளடைவில், பேரப்பிள்ளைகளும் அதேபோலவே நடத்தலாம். தாத்தாபாட்டியைக் கொடுமைப்படுத்தும் பழக்கம் மிகப் பரவலாகிக்கொண்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது. சில ஐரோப்பிய நாடுகளில், குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவசர தொலைத்தொடர்புத் தடங்களைப்போலவே, கொடுமைப்படுத்தப்படும் வயதானவர்களின் சார்பில் குறுக்கிடுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளன.
சுயநலம், பெருமை, அன்பில்லாமை ஆகியவை புரிந்துகொள்ளுதல் இல்லாமையை வளர்த்து நிலைமையை மோசமாக்கிவிடுகின்றன. இதன் காரணமாக, தாத்தாபாட்டியை முதியோர் இல்லங்களில் சேர்ப்பதன்மூலம் அவர்களை விட்டொழிக்க முயற்சிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சிலர் வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றனர். அதற்காக அவர்களை அனைத்து நவீன வசதிகள் உள்ள விசேஷ மையங்களிலோ அல்லது ஐ.மா.-வின் ஃப்ளாரிடாவில் அல்லது கலிபோர்னியாவில் இருப்பதைப்போன்ற ஓய்வுபெற்றோருக்கான கிராமங்களிலோ ஒப்படைத்துவிடுகிறார்கள். அங்கு அவர்களுக்குச் சேவைசெய்ய ஏராளமான சூப்பர் மார்க்கெட்டுகளும் பொழுதுபோக்குகளும் இருக்கின்றன. ஆனாலும் அன்பானவர்களின் புன்சிரிப்பும் தொடுதலும், பேரப்பிள்ளைகளின் அரவணைப்பும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. விடுமுறைக் காலங்களில் குறிப்பாக தாத்தாவையும் பாட்டியையும் “விட்டுவிட்டு” போவதற்காக ஒரு இடத்தை அநேகர் தேடி அலைகின்றனர். இந்தியாவில் சிலவேளைகளில் இந்த நிலைமை இதைவிட மோசமாகவும்கூட இருக்கலாம். சில தாத்தாபாட்டிகள் கைவிடப்பட்டு தாங்களாகவே சமாளித்துக்கொள்ளும்படி விடப்படுகிறார்கள்.
நெருங்கிய குடும்ப உறவுமுறையை காத்துக்கொள்ள உள்ள இடர்பாடுகள் மணவிலக்கினால் மோசமாக்கப்படுகின்றன. நான்கிலொரு பிரிட்டிஷ் குடும்பத்தில் மட்டுமே இரண்டு பெற்றோர்களும் இன்னும் சேர்ந்து வாழ்கின்றனர். உலகமுழுவதும் மணவிலக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு வருடமும் பத்து லட்சத்துக்கும் அதிகமான மணவிலக்குகள் செய்துகொள்ளப்படுகின்றன. இவ்விதமாக தாத்தாபாட்டி எதிர்பாராமல் தங்களுடைய பிள்ளைகளின் திருமண நெருக்கடியையும் அதன் விளைவாக தங்களுடைய பேரப்பிள்ளைகளோடுள்ள உறவுமுறைகளில் ஏற்படும் திடீர்த்திருப்பங்களையும் நேருக்குநேர் எதிர்ப்படவேண்டியிருக்கிறது. முன்னாள் மருமகன் அல்லது மருமகளோடு உறவுமுறை கொள்ளவேண்டிய தர்மசங்கடத்தோடு, கோரியெரெ சாலூட்டெ என்ற இத்தாலிய செய்தித்தாளில் அறிக்கையிட்டிருந்ததுபோல, “அவர்களுடைய மகனுக்கோ மகளுக்கோ வருகிற புது துணைக்கு முந்தைய கல்யாணத்தில் பிறந்த பிள்ளைகள் இருப்பார்கள்,” என்றால் “‘இயல்பாய் பெறாத’ பேரப்பிள்ளைகளின் திடீர் வருகையின்” பிரச்சினையும் சேர்க்கப்படுகிறது.
‘நமது வாழ்க்கைக்குச் சுடரொளி’
எனினும், ஒருவருடைய தாத்தாபாட்டி குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களோடு வாழ்கின்றனரோ இல்லையோ, அவர்களோடு ஒரு அனலான பாசம் நிறைந்த ஒரு உறவுமுறையை வைத்திருப்பது அனைவருக்குமே அதிக பலனுள்ளதாக இருக்கும். “நம் பிள்ளைகளுக்கும் நம் பேரப்பிள்ளைகளுக்கும் ஏதாவதொன்றைச் செய்வது நமது வாழ்க்கையில் சுடரொளி பிரகாசிக்கசெய்ய போதுமானதாக இருக்கிறது,” என்கிறார் ஜப்பானின் ஃபூக்கூயிலிருந்து வரும் ரியோக்கோ என்ற பாட்டி. கோரியெரெ சாலூட்டெயில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஆராய்ச்சி முடிவுகளின்படி, ஐ.மா.-வின் நிபுணர்குழு ஒன்று இவ்வாறு சொன்னதாக தெரிவிக்கப்பட்டது: “தாத்தாபாட்டிகளும், பேரப்பிள்ளைகளும் நெருக்கமும் நேசமும் நிறைந்த உறவுமுறையின் நல்ல அனுபவத்தை உடையவர்களாக இருப்பார்களேயானால், பிள்ளைகளுக்கு மட்டுமல்ல ஆனால் முழுக் குடும்பத்துக்குமே அதிக நன்மை பயக்குவதாய் இருக்கும்.”
அப்படியானால், குடும்ப உறவுமுறைகளின்மீது கெடுதியான பாதிப்பைக் கொண்டிருக்கும் தனிப்பட்ட எண்ண முரண்பாடுகள், சந்ததிப் பிளவுகள், நம் ரத்தத்தோடு பிறந்த சுயநல மனச்சாய்வுகள் ஆகியவற்றை மேற்கொள்ள என்ன செய்யலாம்? இந்த விஷயத்தை நாம் அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“காதுகொடுத்து கேட்கப்படாதிருப்பது, முதிர்வயதடைவதன் படுபயங்கரமான காரியம்.” —ஆல்பர் கேமஸ், பிரெஞ்சு நாவல் எழுத்தாளர்