உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 7/8 பக். 7-11
  • அன்பிலே ஒத்திசைந்து வாழ்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அன்பிலே ஒத்திசைந்து வாழ்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அன்பு—‘ஐக்கியத்தின் பூரணக்கட்டு’
  • “நரை மயிரானது மகிமையான கிரீடம்”
  • குடும்ப உறவுமுறையை வளர்ப்பதன் பயன்கள்
  • பரஸ்பர மதிப்பின் பயன்கள்
  • தாத்தாபாட்டியின் பயிற்றுவிக்கும் பாகம்
  • தெய்வீக போதனைக்கு இசைய நடந்துகொள்ளுதல்
  • பிரச்சினைகளில் சில யாவை?
    விழித்தெழு!—1995
  • தாத்தா பாட்டிமார்—சுகங்களும் சுமைகளும்
    விழித்தெழு!—1999
  • தாத்தா பாட்டியோடு அதிக நெருக்கமாவது எப்படி?
    விழித்தெழு!—2001
  • தாத்தா பாட்டிமார் பெற்றோராகையில்
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 7/8 பக். 7-11

அன்பிலே ஒத்திசைந்து வாழ்தல்

பிரியமுள்ள தாத்தாவுக்கும் பாட்டிக்கும்,

நீங்க நல்லாயிருக்கிறீங்களா? எனக்கு சளி பிடிக்கப்போகுதுன்னு நெனக்கிறேன்.

அன்னக்கி என்னோட விளையாண்டதுக்கு நன்றி. என்ன பூங்காவுக்கும் பொது குளியலறைக்கும் கூட்டிக்கிட்டு போனீங்க. அதெல்லாம் எனக்கு ரொம்ப இஷ்டமாயிருந்தது.

அடுத்த வருஷம் பிப்ரவரி 11-ம் தேதி எங்க ஸ்கூல்ல இசையரங்கு நிகழ்ச்சி நடக்கப்போவுது. உங்களால முடிஞ்சா தயவுசெய்து வாங்க.

தாத்தா, பாட்டி, நீங்க இங்க வரும்போது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

உங்க உடம்ப நல்லா கவனிச்சிக்கங்க, எப்போதும் நல்லபடியா இருங்க. இனி குளிர் தொடங்கப்போவுது, அதனால உங்களுக்கும் சளி பிடிக்காம பாத்துக்குங்க.

அடுத்த தடவ நீங்க வந்து என்னோட விளயாடுவீங்கன்னு நான் ஆசையா காத்திருக்கேன். தயவுசெய்து யூமியயும், மாசாகியயும் நான் கேட்டதா சொல்லுங்க.

—மீக்கா (ஜப்பானிய பெண்)

உங்கள் பேரப்பிள்ளை எப்போதாவது இதைப்போன்ற கடிதத்தை உங்களுக்கு எழுதியதுண்டா? ஆம் என்றால், அதைக் கையில் வாங்கியபோது சந்தேகமேயின்றி அது உங்களுக்கு அதிகமான சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும். இத்தகைய கடிதங்கள் தாத்தாபாட்டிக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் இடையில் நிலவியிருக்கும் அழகான பாசமான ஒரு ரத்த பந்தத்தின் அடையாளமாக இருக்கின்றன. ஆனால் இத்தகைய உறவுமுறையை ஏற்படுத்திக்கொள்ளவும், பாதுகாக்கவும், பலப்படுத்தவும் தேவையானது என்ன? மூன்று தலைமுறையினர் அனைவருக்கும் அது எவ்வாறு நன்மை பயக்குவதாக இருக்கலாம்.

அன்பு—‘ஐக்கியத்தின் பூரணக்கட்டு’

“தலைமைத்துவத்தை மதித்தலும், ஒருவரோடு ஒருவர் அன்பாக நடந்துகொள்ளுதலும் முக்கியமான இரண்டு நியமங்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று ராய் மற்றும் ஜீன் என்ற பிரிட்டிஷ் தாத்தாபாட்டி இருவர் சொல்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளாகிய இவர்கள் இருவரும், கிறிஸ்தவ அன்பை, ‘ஐக்கியத்தின் பூரணக்கட்டு’ என்பதாக விவரிக்கும் கொலோசெயர் 3:14-ல் (NW) காணப்படும் வசனத்தை குறிப்பிட்டவகையில் மேற்கோள்காட்டினர். அன்பானது மரியாதை, யோசனையோடுகூடிய கவனம், பாசம், குடும்ப ஐக்கியம் ஆகியவற்றை உருவாக்குகிறது. அப்பா வேலையிலிருந்து வீட்டுக்கு வரும்போது, அவரை அனலாக வரவேற்க முழு குடும்பமுமே ஓடிச் செல்கிறது. குடும்பத்தில் அன்பு இருக்குமானால், தாத்தாபாட்டி வரும்போதும் அதேதான் சம்பவிக்கிறது. “தாத்தாவும் பாட்டியும் வந்துட்டாங்க!” என்று கத்துகிறது கிளர்ச்சியடைந்த ஒரு குழந்தை. அன்று மாலை குடும்பத்தினரும் உறவினரும் இரவு சாப்பாட்டுக்காக உட்காருகின்றனர். உள்ளூர் முறைமைப்படி தாத்தாவுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மேசையின் தலைமை ஸ்தானத்தில் அவர் வந்து உட்காருகிறார். உங்களையும் உங்களுடைய குடும்பத்தினரையும் இந்த அன்பான காட்சியில் உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா? இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் அனுபவித்து மகிழ்கிறீர்களா?

“நரை மயிரானது மகிமையான கிரீடம்”

சந்தேகமேயின்றி, தாத்தாபாட்டிமீது வைத்திருக்கும் அன்பும் மதிப்பும் விசேஷித்த சந்தர்ப்பங்களில் மட்டுமல்லாமல், தொடர்ந்து காண்பிக்கப்படவேண்டும். இந்தக் காரணத்திற்காக பிள்ளைகளுக்குத் தொடர்ந்து போதிப்பது அவசியமாக இருக்கிறது. குடும்பத்திற்குள்ளே பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்கள் வைத்த முன்மாதிரியைப் பின்பற்றி, உறவினர்களையும் மற்றவர்களையும் நேசிக்கக் கற்றுக்கொள்கின்றனர். இந்த விஷயத்திற்காக பேட்டிகாணப்பட்ட பலராலும் குறிப்பிடப்பட்டதுபோல அவர்களுடைய முன்மாதிரியே அடிப்படையானது. நைஜீரியாவிலுள்ள பெனின் நகரத்தைச் சேர்ந்த மக்கையா என்ற ஒரு தகப்பன் இவ்வாறு சொல்கிறார்: “என் மாமனார்மாமியாரை மதிப்பதில் நான் வைத்த முன்மாதிரி என்னுடைய பிள்ளைகள் மனத்தாழ்மை உள்ளவர்களாகவும் மதிப்புக் காண்பிப்பவர்களாகவும் இருப்பதற்கு அவர்களுக்கு உதவி செய்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். என்னுடைய மாமனார்மாமியாரை நான் ‘அப்பா’ ‘அம்மா’ என்றே கூப்பிடுகிறேன். அவர்களை என் சொந்த தாய்தகப்பனைப் போல்தான் கருதுகிறேன் என்பதை அவர்கள் கேட்கிறார்கள், பார்க்கிறார்கள்.”

பேரப்பிள்ளைகள் அவர்களுடைய தாத்தாபாட்டியை மதிக்கத் தவறினால், இவர்கள் சங்கடப்படுகின்றனர், முக்கியமாக அந்தத் தவறுக்காக மட்டுமல்ல, ஆனால் பெற்றோர்கள் அவர்களைக் கண்டிக்காமல் விடுவதற்காகவே ஆகும். “எங்களைக் கனப்படுத்தவேண்டும் என்று எங்களுடைய பேரப்பிள்ளைகளுக்கு கற்றுத்தருவதிலிருந்து என் மகளும் மருமகனும் எங்கள்மீது வைத்திருக்கும் அன்பை என்னால் காணமுடிகிறது,” என்பதாக இத்தாலியிலுள்ள ரோமைச் சேர்ந்த டெமெட்ரியோ என்ற தாத்தா கூறுகிறார். சில சந்தர்ப்பங்களில், பேரப்பிள்ளைகள் தாத்தாபாட்டியிடம், தங்களுடைய வயதுள்ள கூடவிளையாடுகிற பிள்ளைகளிடம் நடந்துகொள்வதைப் போன்றே வரம்புமீறி நடந்துகொள்ளலாம், அல்லது உயர்வு மனப்பான்மையோடு நடந்துகொள்ளலாம். அத்தகைய மனச்சாய்வுகள் ஏதேனும் இருக்குமானால் சரிசெய்யவேண்டியது பெற்றோர்களின் பொறுப்பாக இருக்கிறது. நைஜீரியாவைச் சேர்ந்த பால் என்ற சாட்சி ஒருவர் கூறுகிறார்: “சுமார் ஒரு வருஷத்திற்கு முன்பு, பிள்ளைகள் என்னுடைய அம்மாவை தாழ்வாகக் கருத தொடங்கினர். இதை நான் கவனித்தபோது, ‘நரை மயிரானது மகிமையான கிரீடம்’ என்று சொல்லும் நீதிமொழிகள் 16:31-ஐ அவர்களுக்கு வாசித்துக் காட்டியது மட்டுமல்லாமல், பாட்டி என்னுடைய அம்மா என்பதையும் அவர்களுக்கு ஞாபகப்படுத்தினேன். அவர்கள் என்னை மதிக்கிறது போலவே அவரையும் மதிக்கவேண்டும். மேலும் உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல்a என்ற புத்தகத்தில் ‘உன் பெற்றோரை நீ எவ்வாறு கருதுகிறாய்?’ என்ற தலைப்பைக் கொண்ட 10-ம் அதிகாரத்தை அவர்களோடு படித்தேன். இப்போது, தங்களுடைய பாட்டியை மதிப்பதில் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.”

குடும்ப உறவுமுறையை வளர்ப்பதன் பயன்கள்

குடும்ப அங்கத்தினர்கள் ஒருவரிலிருந்து ஒருவர் தூரமாக வாழ்ந்திருக்கும்போதும்கூட பரஸ்பர பாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும். நைஜீரியாவைச் சேர்ந்த ஸ்டீவன் என்ற தாத்தா ஒருவர் சொல்லுகிறார்: “எங்களுடைய பேரப்பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நாங்கள் எழுதுகிறோம். இது அதிக சமயத்தையும் முயற்சியையும் கவனத்தையும் தேவைப்படுத்தும் ஒரு வேலையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் பேரப்பிள்ளைகளோடு நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ளுவதிலும், அதைக் காப்பதிலும் இது அளிக்கும் பலன் மிகப் பேரளவாக இருந்திருக்கிறது.” இந்த விஷயத்தில் பெற்றோர்களுடைய முயற்சி அத்தியாவசியமானது. மற்றவர்கள் அவர்களுடைய சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு தொலைபேசியில் தொடர்பு வைத்திருக்கலாம்.

இத்தாலியிலுள்ள பாரியைச் சேர்ந்தவரும், 11 பேரப்பிள்ளைகளைக் கொண்டவருமான தாத்தா ஜூஸெப்பே, தனது நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களோடு எவ்வாறு அனலான நட்பை வளர்த்துக்கொள்கிறார் என்பதை விளக்குகிறார்: “என்னுடைய ‘கோத்திரத்தில்’ அடங்கியுள்ள ஆறு குடும்பங்களில் தற்போது மூன்று குடும்பங்கள் வெகு தூரத்தில் வாழ்கின்றன. ஆனாலும் எங்களுக்குள் மகிழ்ச்சியான பரிமாற்றங்களுக்கும் ஒன்றாக கூடிவருவதற்கும் அது தடையாகவே இல்லை. வருடத்திற்கு ஒருமுறையாவது நாங்கள் மொத்தம் 24 பேரும் ஒன்றாக கூடிவரும் பழக்கம் எங்களுக்கு இருக்கிறது.”

தாத்தாபாட்டி தனியாக வாழும்போது, குடும்ப அங்கத்தினர்களோடு சந்திப்பது, ஃபோன் பேசுவது, அல்லது கடிதங்கள் போன்றவற்றை தவறாமல் பரிமாறிக்கொள்ளாவிட்டால், உறவுமுறை அகன்றுபோய்விடக்கூடும். பாசமானது இடைவிடாது காண்பிக்கப்படவேண்டும். நடுத்தர வயதிலுள்ள அல்லது நல்ல ஆரோக்கியமுள்ள சில தாத்தாபாட்டி இன்னும் சுறுசுறுப்புடனும் தன்னிறைவோடும் வாழ்ந்துவருவதனால் யாருடைய உதவியுமின்றி சொந்தமாக வாழ விரும்புகின்றனர். எனினும், அவர்கள் குடும்ப அங்கத்தினர்களிடமிருந்து முற்றிலும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால், பாசத்திற்கான தேவை அவர்களுக்கு அதிகமாக இருக்கும்போது அது உடனடியாக கிடைக்காமல்போகலாம்.

மைக்கேல் என்ற நைஜீரிய தாத்தாவிடமிருந்து மற்றொரு பிரயோஜனமான ஆலோசனை வருகிறது: “இயேசுவின் பொன் விதியை நான் பொருத்திப்பிரயோகிக்கிறேன்—மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். அந்தக் காரணத்திற்காகத்தான் என் பிள்ளைகள் என்னை அதிகம் நேசிக்கின்றனர். எங்களுக்குள் நல்ல பேச்சுத்தொடர்பு இருந்துவருகிறது.” அவர் தொடர்ந்து கூறுகிறார்: “எனது பேரப்பிள்ளைகளில் யாராவது எனக்கு சங்கடத்தைத் தரும் ஏதாவது காரியத்தைச் செய்தால், அவசியமிருந்தால் நான் அவர்களிடம் பேசுகிறேன். ஆனால் நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடிய ஒன்றாக அது இருந்தால், வழக்கமாக அப்படியே விட்டுவிடுவதுண்டு.”

தாத்தாபாட்டி சிறியசிறிய அன்பளிப்புகளைக் கொடுப்பதும், அன்பின் அடையாளமாக சிறிய காரியங்களைச் செய்வதும் சாதகமான பிரதிபலிப்பை உண்டுபண்ணுகின்றன. எப்பொழுது பார்த்தாலும் குறைகூறிக்கொண்டே இருப்பதைவிட, அன்பான, உற்சாகமளிக்கும் வார்த்தைகள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக ஆக்குகின்றன. பேரப்பிள்ளைகளுக்கு நேரத்தை ஒதுக்கி, அவர்களுக்கு ரசனையான விளையாட்டுக்களையும், பயனுள்ள சிறிய வேலைகளையும் கற்றுத் தருதல், பைபிள் கதைகள் அல்லது குடும்பத்தில் நடந்த சம்பவங்களைச் சொல்லுதல் போன்றவை அனலான மற்றும் நீடித்த நினைவுகளை உருவாக்குகின்றன. இத்தகைய சிறியசிறிய ஆனால் முக்கியமான விஷயங்கள் வாழ்க்கையை அதிக மகிழ்ச்சியுள்ளதாக ஆக்குகின்றன.

பரஸ்பர மதிப்பின் பயன்கள்

மருத்துவர் காஸ்பாரே வெல்லா இவ்வாறு சொல்கிறார்: “பிள்ளை வளர்ப்பதற்கான பெற்றோர்களின் அதிகாரத்தை தாத்தாபாட்டி எதிர்க்காமலும், அதற்குப் போட்டி போடாமலும் இருப்பதில் கவனமாய் இருக்கவேண்டும்.” அவர் தொடர்ந்து கூறுகிறார்: “இல்லையென்றால், இவர்கள் தங்கள் செயல் வரம்பைமீறி, தாத்தாபாட்டி-பெற்றோர்களாக ஆகின்றனர்.” இந்த ஆலோசனையானது, தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கும் முதன்மையான பொறுப்பு பெற்றோர்களுக்குத்தான் இருக்கிறது என்று சொல்லும் வேதவசனங்களோடு ஒத்திருக்கிறது.—நீதிமொழிகள் 6:20; கொலோசெயர் 3:20.

வாழ்க்கையில் தாத்தாபாட்டிக்கு இருக்கும் அனுபவத்தின் காரணமாக, அறிவுரை கொடுப்பது அவர்களுக்கு சுலபமானதாக இருக்கிறது. எனினும், அனாவசியமான மற்றும் சிலசமயங்களில் வரவேற்கப்படாத ஆலோசனைகளைக் கொடுக்காதிருக்கும்படி அவர்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். ராயும் ஜீனும் இவ்வாறு சொல்கின்றனர்: “தங்களுடைய பிள்ளைகளைப் பயிற்றுவிக்கவும் கண்டிக்கவுமான பிரதான பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பது முக்கியமானதாக இருக்கிறது. இவர்கள் ஒரேயடியாக கண்டிப்புடன் இருக்கிறார்களே என்பதாக ஒருவர் சில சமயங்களில் நினைக்கலாம்; மற்ற விஷயங்களில் கண்டிப்பாகவே இல்லையே என்றும் நினைக்கலாம். ஆகவேதான், தலையிடுவதற்கான மெய்யான தூண்டுதலை எதிர்த்துப் போராடவேண்டிய தேவையிருக்கிறது.” மைக்கல், ஷீனா என்ற மற்றுமிரண்டு பிரிட்டிஷ் தாத்தாபாட்டிகள் இந்தக் கருத்தையேதான் ஊர்ஜிதப்படுத்துகிறார்கள். அவர்கள் சொல்வதாவது: “பிள்ளைகள் எங்களுடைய அறிவுரையைக் கேட்டார்களானால் நாங்கள் கொடுக்கிறோம், ஆனால் அதை அவர்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் அனாவசியமாக எதிர்பார்ப்பது கிடையாது, அப்படியே அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் போனாலும்கூட நாங்கள் அதற்காக சங்கடப்படுவதுமில்லை.” கல்யாணமான தங்களுடைய மகன்கள் மற்றும் மகள்களில் நம்பிக்கை வைத்திருப்பது வயதான பெற்றோர்களுக்கு நலமானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட நம்பிக்கை இந்த மூன்று தலைமுறைகளுக்கு இடையே உள்ள உறவுமுறைகளை முன்னேற்றுவிக்கிறது.

இங்கிலாந்திற்குத் தெற்கே, மகனோடும் மருமகளோடும் வசிக்கும் விவியனும் ஜேனும் எல்லா சமயங்களிலும் தங்களுடைய மகனும் மருமகளும் தங்களுடைய பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்த சிட்சையை ஆதரிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் சொல்வதாவது: “எங்களுடைய கருத்துக்கள் வேறுபடும் விஷயங்களில் எங்களது சொந்த கருத்தைக்களைத் திணிக்க நாங்கள் முயற்சிப்பதில்லை. அவர்களுடைய அப்பாவையும் அம்மாவையும்தான் ஆதரிப்போம் என்று பிள்ளைகளுக்குத் தெரியுமாதலால், ‘எங்களுக்கிடையே கோள்மூட்ட’ அவர்கள் ஒருபோதும் முயற்சிப்பது கிடையாது.” பெற்றோர்கள் இல்லாதபோதும்கூட, பேரப்பிள்ளைகளை சிட்சிப்பதில் தாத்தாபாட்டி எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். “பெற்றோர்கள் இல்லாதபோது தேவைப்படுவதாக தாத்தாபாட்டி கருதும் எந்த சிட்சையையும்பற்றி பெற்றோர்களிடம் முன்கூட்டியே கலந்துபேசியிருக்க வேண்டும்,” என்று பிரிட்டனைச் சேர்ந்த ஹெரல்ட் சொல்லுகிறார். அன்பாக, ஆனால் உறுதியாக பேசுதலோ, அல்லது “பெற்றோர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்” என்பதை வெறுமனே ஞாபகப்படுத்திவிடுவதோ பெரும்பாலும் போதுமானது என்று ஹெரல்ட் தொடர்ந்து கூறுகிறார்.

கிறிஸ்டோபர் என்ற நைஜீரிய தாத்தா ஒருவர் தன்னுடைய பிள்ளைகள் ஏதாவது தவறு செய்வதைக் கவனிக்கும்போது, தன்னுடைய பேரப்பிள்ளைகள் முன்னிலையில் வைத்து அதைப்பற்றி பேசுவதைத் தவிர்க்கிறார். “தேவையான அறிவுரைகளை பெற்றோர்கள் தனியாக இருக்கும்போது நான் கொடுக்கிறேன்.” அதைப்போலவே, தாத்தாபாட்டியின் பங்கு மதிக்கப்படுகிறதா என்று பார்த்துக்கொள்வதில் பெற்றோர்கள் தங்களுடைய பாகத்தை செய்யவேண்டும். “தாத்தாபாட்டியின் தவறுகளைப் பற்றியோ அல்லது மற்ற குடும்ப அங்கத்தினருடைய தவறுகளைப் பற்றியோ பிள்ளைகள் முன்னிலையில் வைத்து குறைகூறாதிருப்பது பிரதானமாக இருக்கிறது,” என்கிறார் இத்தாலியிலுள்ள ரோமைச் சேர்ந்த கார்லோ என்ற தகப்பன். ஹிரோக்கோ என்ற ஜப்பானிய அம்மா சொல்கிறார்: “என் கணவனின் குடும்பத்தாரோடு ஏதாவது பிரச்சினைகள் எழும்போது, முதலில் அதை என் கணவரோடு கலந்தாலோசிக்கிறேன்.”

தாத்தாபாட்டியின் பயிற்றுவிக்கும் பாகம்

ஒவ்வொரு குடும்பமும் மற்ற அனைத்துக் குடும்பங்களிலிருந்து வேறுபடும், தன்னுடைய சொந்த சரித்திரம், பழக்கவழக்கங்கள், அனுபவங்கள் ஆகியவற்றை உடையதாக இருக்கிறது. பொதுவாகவே தாத்தாபாட்டி குடும்ப வரலாற்று நினைவின் இணைப்பாக இருக்கின்றனர். ஒரு ஆப்பிரிக்க பழமொழி சொல்லுகிறபடி, “இறந்துபோகும் ஒவ்வொரு வயதானவரும், எரிந்து சாம்பலாகும் ஒரு நூலகமாக இருக்கிறார்.” தாத்தாபாட்டி உறவினர்களைப் பற்றிய நினைவுகள், முக்கிய குடும்ப நிகழ்ச்சிகள், குடும்பத்தைப் பெரும்பாலும் அதன் வேறோடு ஐக்கியப்படுத்தக்கூடிய குடும்ப மதிப்பீடுகள் ஆகியவற்றைக் கடத்துகின்றனர். பைபிள் கொடுக்கக்கூடிய தார்மீக வழிநடத்துதலைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், நிபுணர் ஒருவர் சொன்னார்: “இளைஞர் குடும்ப வரலாற்றைப்பற்றி அறிந்திராவிடில், அவர்களுக்கு முன் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படை எதுவுமின்றியும், மதிப்பீடுகள் இன்றியும், தன்னம்பிக்கையின்றியும், பாதுகாப்பின்றியும் வளருகிறார்கள்.”—காயேடானோ பார்லெட்டா, நான்னி ஏ நிப்பாட்டி (தாத்தாபாட்டியும் பேரப்பிள்ளைகளும்).

அப்பாவும் அம்மாவும் மற்ற உறவினர்களும் சிறுபிள்ளைகளாக இருந்தபோது நடந்தவற்றைப்பற்றி கேட்க பேரப்பிள்ளைகள் விரும்புகின்றனர். போட்டோ ஆல்பம் ஒன்றைப் பார்ப்பதுதானே அதிக அறிவூட்டுவதாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கும். போட்டோக்களில் காண்பிக்கப்பட்டுள்ள கடந்தகால நிகழ்ச்சிகளை தாத்தாபாட்டி சொல்லும்போது என்னே ஒரு பரிவும் அனலான அன்பும் உண்டாகிறது.

யெகோவாவின் சாட்சிகளாயிருக்கும் ரெஜ் மற்றும் மால்லி என்ற இரண்டு பிரிட்டிஷ் தாத்தாபாட்டிகள் இவ்வாறு சொல்லுகிறார்கள்: “பேரப்பிள்ளைகளோடு இருக்க முடிவது, அவர்களோடு காரியங்களை செய்வது, அப்பா அம்மாவோடு அவர்கள் கொண்டிருக்கும் நெருங்கிய உறவில் குறுக்கிடாமல், அவர்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிப்பது, ஒன்றுசேர்ந்து விளையாடுவது, சேர்ந்து வாசிப்பது, எழுதுவதெப்படி என்று அவர்களுக்குக் காண்பிப்பது, அவர்கள் வாசிப்பதைக் கேட்பது, அன்போடுகூடிய அக்கறையோடு அவர்களுடைய பள்ளிப்படிப்பில் உதவிசெய்வது ஆகியவற்றின் மூலம் சந்தோஷம் கிடைத்திருக்கிறது.”

அநேக தாத்தாபாட்டிகளும் பெற்றோர்களும் செய்யக்கூடிய மிகப்பெரிய தப்பு என்னவென்றால், பிள்ளைகளின் மற்றும் பேரப்பிள்ளைகளின் சரீரப்பிரகாரமான நலத்தைக் குறித்து மட்டும் கவலைப்படுவதாகும். மேலே குறிப்பிடப்பட்ட ரெஜ் மற்றும் மால்லி சொல்கிறார்கள், “நம்முடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கடவுளுடைய வார்த்தையின் மெய்யான அறிவில் வளர்க்கப்படுகிறார்களா என்று பார்த்துக்கொள்வதே அவர்களுக்கு நம்மால் கொடுக்கமுடிகிற மிகப்பெரிய சுதந்தரமாக இருக்கிறது.”—உபாகமம் 4:10; 32:7; சங்கீதம் 48:13; 78:3, 4, 6.

தெய்வீக போதனைக்கு இசைய நடந்துகொள்ளுதல்

கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிள் மக்கள் மீது ‘வல்லமை செலுத்துகிறது.’ தன்னலம், பெருமை போன்ற பிரிவினை உண்டாக்கும் குணங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது நீக்கிப்போடவோ அவர்களுக்கு உதவி செய்யும் திறமை அதற்கு இருக்கிறது. (எபிரெயர் 4:12) ஆதலால் அதன் போதனைகளைக் கடைப்பிடிப்பவர்கள் குடும்பத்தில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் அனுபவித்து மகிழ்கின்றனர். இம்மூன்று சந்ததிகளுக்கு இடையே இருக்கும் எந்தப் பிளவையும் நீக்க உதவும் அநேக வேதவசனங்களில் ஒன்றாக இருப்பது பிலிப்பியர் 2:2-4 ஆகும். அது அன்பையும் மனத்தாழ்மையையும் வெளிக்காட்டி, ஐக்கியத்தைப் பாதுகாத்து, அனைவரும் ‘தங்களுக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவார்களாக,’ என்று உற்சாகப்படுத்துகிறது.

தெய்வீக போதனைக்கு இசைய நடந்து, பெற்றோர்களும் பேரப்பிள்ளைகளும் “பெற்றோர்களுக்கும் தாத்தாபாட்டிக்கும்,” பொருளாதார ரீதியிலும் உணர்ச்சி சம்பந்தமாகவும், ஆவிக்குரியவிதத்திலும் “நன்றிகடனைச் செய்யவேண்டும்,” என்ற அறிவுரையை ஒரேமாதிரி கவனமாக பொருத்திப் பிரயோகிக்கின்றனர். (1 தீமோத்தேயு 5:4, NW) யெகோவாவுக்குக் காண்பிக்கும் ஆரோக்கியமான பயத்தோடு, “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக,” என்ற அவருடைய வார்த்தைகளை மனதில் கொண்டவர்களாக, தாத்தாபாட்டிக்கு அவர்கள் ஆழ்ந்த மரியாதையைக் காட்டுகின்றனர். (லேவியராகமம் 19:32) தாத்தாபாட்டி தங்களுடைய சந்ததிகளின் நலனுக்காக பாடுபடுவதன்மூலம் தங்களுடைய நற்குணத்தை வெளிக்காட்டுகின்றனர்: “நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்.”—நீதிமொழிகள் 13:22.

தாத்தாபாட்டிகள், பெற்றோர்கள், பேரப்பிள்ளைகள் ஒன்றாய் சேர்ந்து வாழ்கிறார்களோ இல்லையோ, நீதிமொழிகள் 17:6, “பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே,” என்று சொல்லுகிறதுபோல, அன்பையும் மதிப்பையும் ஆதாரமாகக்கொண்ட பாச உணர்ச்சி ததும்பும் உறவுமுறைகளில் பரஸ்பர பலனைக் கண்டடையலாம்.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 8-ன் படம்]

குடும்பத்தினர் மீண்டும் ஒன்றுகூடி வருவது குடும்ப ஐக்கியத்துக்கு உதவியளிக்கும்

[பக்கம் 9-ன் படம்]

உங்களுடைய தாத்தாபாட்டிக்குக் கடிதம் எழுதினால் அவர்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்

[பக்கம் 10-ன் படம்]

உங்களுடைய பேரப்பிள்ளைகளோடு சேர்ந்து குடும்ப ஆல்பத்தைப் புரட்டிப் பார்ப்பது வளமூட்டும் ஒரு அனுபவமாக இருக்கலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்