இந்தியப் பெண்கள்—21-ம் நூற்றாண்டிற்கு செல்லுதல்
இந்தியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
அவர்கள் உயரமானவர்கள், அவர்கள் குட்டையானவர்கள். அவர்கள் ஒல்லியானவர்கள், அவர்கள் பருமனானவர்கள். அவர்கள் நகைச்சுவை உடையவர்கள், அவர்கள் சிடுசிடுப்பானவர்கள். அவர்கள் பெரும் செல்வந்தர்கள், அவர்கள் முற்றிலும் வறுமையால் தாக்கப்பட்டவர்கள். அவர்கள் அதிகம் படித்தவர்கள், அவர்கள் முற்றிலும் எழுத்தறிவற்றவர்கள். அவர்கள் யார்? இந்தியப் பெண்கள். அவர்கள் எதை நோக்கி செல்கிறார்கள்? அவர்கள் 21-ம் நூற்றாண்டிற்கு செல்கிறார்கள்.
இந்தியாவிற்கு வெளியே உள்ளவர்களுக்கு இனியப்பண்பு, அழகு, புதிர்நிலை, கவர்ச்சி போன்றவையே இந்தியப் பெண்களைப்பற்றிய கற்பனைத் தோற்றம். அநேக ஆண்கள் இந்தியாவில் மனைவியைத் தேடுகிறார்கள். இதற்கு ஓரளவு காரணம் என்னவென்றால், இந்தியப் பெண்கள் அதிக தன்னிச்சையாகச் செயல்படும் மேற்கத்திய சகோதரிகளைக்காட்டிலும் மிகவும் கீழ்ப்படிந்திருக்கும் மனச்சாய்வை உடையவர்களாகவும் கணவன்மார்களை பிரியப்படுத்துகிறவர்களாகவும் வீட்டைக் கட்டிக்காப்பவர்களாகவும் கருதப்படுவதே ஆகும். என்றபோதிலும் பரந்தப் பரப்பிலுள்ள மக்கள்தொகை, பல்வேறுபட்ட இன, மத, சமுதாய பின்னணியைக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்க இந்தியப் பெண்ணை விவரிக்க இயலாது. அனைத்து வகைப் பெண்களும் ஆர்வத்தைத் தூண்டும் இந்த நாட்டில் வாழ்கிறார்கள்.
அமைதியாகவோ பலாத்காரமாகவோ கலந்து வந்த பல கலாச்சாரங்களில் ஒன்றுதான் இந்திய வரலாறு. ஆதியில் குடியேறிய திராவிடர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதில் ஊகம் நிலவுகிறது. அவர்களின் உதயம், கிரீட்டுடன் குறிப்பிட்ட தொடர்புகளையுடைய, ஆஸ்திரேலிய மற்றும் தென் மத்தியதரைக்கடல் மக்களின் கலப்பினமாகத் தோன்றுகிறது. ஆரியர்களும் பெர்சியர்களும் வடமேற்கிலிருந்தும் மங்கோலியர்கள் வடகிழக்கிலிருந்தும் இந்தியாவிற்குள் வர வர, திராவிடர்கள் தென்பகுதிக்குப் பின்வாங்கினார்கள். எனவே, தென்னிந்தியப் பெண்கள் வடக்கில் இருக்கும் பெண்களைக்காட்டிலும் உருவத்தில் சிறியவர்களாகவும், கருத்த நிறமுடையவர்களாகவும் இருப்பதாகவும், வடக்கில் உள்ளவர்கள் உயரமானவர்களாகவும், செந்நிறமுடையவர்களாகவும் ஆயினும் அவர்களுடைய கண்களும் கூந்தலும் கரிய நிறத்திலும் இருப்பதாகவும் நாம் காண்கிறோம். வடமேற்கில் வாழும் மக்கள் பெரும்பாலும் கீழை நாட்டவரின் உருவத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிலுள்ள பெண்களின் அந்தஸ்தை நிலைநாட்டுவதில், மதமானது பெரும் பங்கு வகிக்கிறது. நவீன இந்தியா தனிநாடாக இருப்பதன் காரணமாக பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த பாரம்பரிய கருத்துக்களை மாற்ற அனைத்து முயற்சியும் செய்யப்படுகிறது. பணக்கார அல்லது செல்வாக்கு உள்ள பெண்கள் மட்டும் இன்றி, ஆனால் எல்லாருக்கும் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கச்செய்ய பெரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் பாட வகுப்புகள், வேலைவாய்ப்பு பயிற்சி, பெண்களுக்கு இலவசக்கல்வி ஆகியவை இந்தியப் பெண்ணின் பெருமையை முன்னேற்றுவிக்கின்றன.
பெண்கள் பேரில் அரசாங்க கொள்கை வெளியிடப்பட்டபோது, ஜூன் 22, 1994-ல், மகாராஷ்டிர மாநிலம் முன்னேற்றத்திற்கு ஒரு பெரும்படியை எடுத்தது. இந்தியத் துணை ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் அவர்களால் “முக்கியமானது,” “புரட்சிகரமானது” என்று விளக்கப்பட்டது. அது பெண்களின் அடிப்படை பிரச்சினைகளாகிய கூட்டு-முதலாளித்துவ உரிமைகள், பாதுகாவலர் உரிமை, வீட்டுவசதி நிதியுதவி, சம வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு நடவடிக்கைகள் எடுத்தது.
கல்லூரிகளில் அதிகமான பெண்கள் பயின்று, வேலைவாய்ப்பு சந்தையில் நுழைகையில், இனிமேலும் வீட்டில் கட்டுப்படுத்தப்படுவதில்லை. ஒழுக்கநெறியில் மாற்றங்களைப்பற்றி கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. கல்லூரிகளில் போதைப்பொருள் உபயோகம், ஒழுக்கத்தில் சீரழிவு பற்றிய செய்திகள் வருகின்றன. சில இளம்வயது இந்தியப் பெண்களின் வளர் இளம் பருவத்தில், மக்கள்தொடர்பு சாதனம் முக்கிய பங்குவகிக்கிறது. 30 வருடங்களுக்கு முன் வந்த திரைப்படங்களுடன் இன்றைய திரைப்படங்களை ஒப்பிட்டு, பெண்களைப்பற்றிய விவரிப்பு பெருமளவில் மாறிவிட்டதை பலர் காண்கின்றனர். ஒரு இந்தியப் பெண்மணி இவ்வாறு கருத்துத்தெரிவித்தார்: “நான் பள்ளியில் இருந்த காலத்தில் அடக்கமான, கனிவான, சுயதியாகம் செய்த திரைப்படக் கதாநாயகி, மகிழ்ச்சியற்று இருக்கும்போது கணவனையும் கணவன் வீட்டாரையும் விட்டுச்சென்று, தன் உரிமைகளுக்காகவும் சுதந்தரத்திற்காகவும் வழக்காடும் இன்றைய கதாநாயகியால் மாற்றீடு செய்யப்பட்டுள்ளார்.”
ஆனால், இத்தகைய நிலையிலும், மொத்தத்தில் இந்தியா மற்ற பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், நடையிலும் உடையிலும் கட்டுப்பாடுடன்தான் உள்ளது. மிகப் பரவலாக அணியப்படும் சேலை, அடக்கமாக உடல் முழுவதையும் மூடுகின்றது. விசேஷமாக வடக்கில் இளம்பெண்கள் மத்தியில் ஷல்வார்கமிஸ், அதாவது பைஜாமா போன்ற கால்சட்டையின் மேல் அணியப்படும் தொளதொளவென்ற ஆடை பிரபலமாக உள்ளது. மேல்நாட்டு பாணிகள், முக்கியமாக பம்பாய், கோவா, கல்கத்தா போன்ற இடங்களில், பெரும்பாலும் அடக்கமான பாணியிலும் நீளத்திலும் காணப்படும்.
புதிய வேலை வாய்ப்புகள்
21-ம் நூற்றாண்டை நோக்கி சென்றுகொண்டிருக்கையில், இந்தியப் பெண்களுக்கு எத்தகைய வேலைவாய்ப்பு கிடைக்கும்? இந்திய மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் கிராமங்களில் வாழ்கிறார்கள், அவர்களின் தொழில் விவசாயம். கோடிக்கணக்கானோர் வயலில் வேலை செய்கிறார்கள். ஆண்களுடன் சேர்ந்து, எல்லாவகையான விவசாய வேலைகளைப் பெண்கள் செய்கிறார்கள். நீண்ட தூரத்திலுள்ள ஆறுகள், கிணறுகளிலிருந்தும் தண்ணீர் எடுத்துச்செல்கின்றனர். மேலும் அடுப்பெரிக்க கட்டைகளைக் கடினப்பட்டு சேகரிக்கின்றனர். வேலை செய்யும்போது, குழந்தையை இடுப்பில் கட்டிக்கொள்வர் அல்லது மரங்களில் கட்டப்பட்டத் தொட்டிலில் கிடத்தி வைப்பார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, கிராமப்புற இந்தியக் குடும்பங்கள், வேலை வாய்ப்பைத்தேடி நகர்ப்புறங்களுக்குப் படையெடுத்துள்ளனர். பெண்கள் ஜவுளி மில்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலைப்பார்த்திருக்கின்றனர். ஆயினும், தொழிற்சாலையை நவீனமயமாக்குதல், ஆண் தொழிலாளர்களைவிட பெண் தொழிலாளர்களை அதிகம் பாதித்துள்ளது. இயந்திரங்களை இயக்குவதற்கு ஆண்கள் பயிற்றுவிக்கப்பட்டனர், ஆனால் பெண்கள் இல்லை. இது பெண்களுக்கு அதிக இடையூறைக் கொடுத்துள்ளது. அவர்கள் கட்டிடம் கட்டுமிடங்களில் சித்தாள் வேலைக்கும், பளுவான மூட்டைகளை கைவண்டியில் வைத்து இழுப்பதற்கும், பழையத்துணிகளை விற்பதற்கும் அல்லது மற்ற குறைந்த ஊதியம் கிடைக்கும் வேலையை எடுத்துக்கொள்ளவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
பெண்களின் வாழ்க்கை முறையை முன்னேற்றுவிக்க சமூக சீர்திருத்தவாதிகள் முயற்சிகள் எடுத்துள்ளனர். SEWA (பெண்கள் சுய-தொழில் கூட்டாண்மை) போன்ற அமைப்புகள் திடீரென தோன்றியுள்ளன. படிக்காதப் பெண் தொழிலாளர்கள் தாங்கள் வேலைசெய்ய முடியும்படி தங்களுடைய தேக ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவி செய்வதற்கும், தொழிலிலுள்ள மோசடியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கும், தொழில் திறமையை வளர்த்துக்கொள்வதற்கும், பணத்தைச் சேமிக்க கற்றுக்கொள்வதற்கும், தொழில் மூலதனத்தைச் சுயமாக ஈட்டுவதற்கும், உயர்விகித வட்டியைப் பறிக்கும் வட்டித்தொழிலாளரைத் தவிர்ப்பதற்கும் உதவுவதே அவர்களுடைய நோக்கமாகும். பெண்ணுரிமைக் கோட்பாட்டை ஒரு சமுதாய கோட்பாடாக பயன்படுத்துவதைப்பற்றி, பிரபல சமூகவியல் வல்லுநர் ஜரினா பாத்தியிடம் கேட்டபோது கூறியதாவது: “இந்தியாவில் பெண்ணுரிமைக்கோட்பாடு என்பது பெண்களின் பிரச்சினைகளைக் கேட்பது, அவர்களை ஒழுங்கமைப்பது, உடலாரோக்கியம், ஊட்டச்சத்து இவற்றுடன்கூட தொழிற்நுட்பக் கல்வி புகட்டுவதற்கு முயற்சிப்பதாகும்.”
அதே சமயத்தில், சமுதாயத்தில் உயர்வாகக் கருதப்பட்ட செல்வந்தக் குடும்பங்களிலிருந்தும் நடுத்தரக் குடும்பங்களிலிருந்தும்கூட வரும் படித்தப் பெண்களைப் பற்றிய கருத்துக்கள் மாறிக்கொண்டு இருக்கின்றன. இப்போது, இரண்டு பின்னணிகளிலிருந்தும் வரும் பெண்கள், வெறும் கல்விபுகட்டுதல், மருத்துவம் என இவற்றில் மட்டும் அன்றி, எல்லா துறைகளிலும் காணப்படுகிறார்கள். அவர்கள் விமானிகளாக, விளம்பரபாவையாக, விமானப் பணிப்பெண்களாக, காவல் மற்றும் உயர் மேலதிகாரிகள் பதவிகளையும் வகிக்கிறார்கள். பல வருடங்களுக்கு உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதமரை இந்தியா கொண்டிருந்தது. இந்தியப் பெண்கள் இராணுவத்திலும் அதிகாரத்தையுடையவர்களாக இருக்கிறார்கள்; வழக்கறிஞர்களாகவும், தலைமை நீதிபதிகளாகவும் இருக்கிறார்கள்; ஆயிரக்கணக்கானோர் தொழில் முனைவோர்களாக தொழிலில் நுழைந்துள்ளனர்.
திருமண சுற்றுவட்டாரத்தில் மாற்றங்கள்
சுயமாக வேலை செய்யக்கூடிய நிலையை நோக்கிச் செல்கையில், நவீன இந்தியப் பெண்கள் திருமணத்தைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகள், திருமணமான இந்தியப் பெண்களிடையே பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தன. ஒரு விதவை தானாகவே முன்வந்து கணவனுடைய ஈமத்தீயில் இறங்கி தன் உயிரை போக்கிக்கொள்ளும் உடன்கட்டை ஏறுதல் என்றழைக்கப்பட்ட பழைய பழக்கம் பிரிட்டிஷ் அரசால் நீக்கப்பட்டது. பாலிய விவாகம் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது, எனவே 18 வயதுக்கு குறைவானப் பெண்கள் சட்டப்படி திருமணம்செய்ய முடியாது. பெண் வீட்டாரிடமிருந்து வரதட்சணை கேட்பதுகூட சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்தத் தீயபழக்கம் இன்னும் நிலவுகிறது. குடும்பத்தினரால் போதுமான வரதட்சணைக் கொடுக்கமுடியாமல் போனால் அல்லது இரண்டாவது திருமணத்தின் மூலம் அதிகமாகக் கிடைக்கிறது என்னும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக, எப்படியாவது பல ஆயிரக்கணக்கான இளம் மணப்பெண்கள் கொலைசெய்யப்படுகிறார்கள்.
வரதட்சணை சாவுகளின் அடிப்படையான காரணங்களுக்கு படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாரம்பரியமாக, திருமணமானதும், இந்தியப் பெண் கணவனுடன் அவருடைய பெற்றோரின் வீட்டிற்கு சென்று, சாகும்வரைக்கும் அங்கேயே இருந்து விடுவாள். எந்தச் சூழ்நிலைமையின்கீழும் அவளுடைய பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாது. அடிப்படையான கல்வியின்மையினால், பெருவாரியான பெண்கள் கணவனின் வீட்டை விட்டுவர மற்றும் தங்களை ஆதரித்துக்கொள்ள வேலைசெய்ய முடிவதில்லை. ஆகவே, இளம்பெண்கள் பெரும்பாலும் கொடுமை செய்யப்பட்டு, மரண பயத்தால் பீடிக்கப்பட்டிருப்பார்கள், ஒருவேளை பெற்றோரால், பேராசைபிடித்த கணவர் வீட்டாரைத் திருப்திசெய்ய இன்னும் அதிக பணத்தையும் பொருட்களையும் கொடுக்க முடியவில்லை என்றால், அவள் தன்னுடைய இறுதி முடிவுக்காக அமைதியாகக் காத்திருப்பாள். அது பெரும்பாலும் திட்டமிட்ட விபத்தாகிய ஸ்டவ் வெடிப்பாக அல்லது மெல்லிய சேலையில் தீ பிடித்து அவளை எரித்து சாகடிப்பதாக இருக்கும்.
இப்போது சட்டம், பெண் காவலர் தொகுதிகள், பெண்கள் நீதி மன்றங்கள் மற்றும் ஆதரவு தொகுதிகள், உயிருக்கு ஆபத்தில் இருக்கும் திருமணமான ஒரு பெண், உதவியை நாடிச்செல்ல இடமளிக்கின்றன. அதிகமான கல்வி வாய்ப்பு, அவர்களுக்காகத் திறந்துள்ள வேலைவாய்ப்புகள் காரணமாக சில பெண்கள் தாங்களாகவே தொழிலை அமைத்துக்கொண்ட பின்னர் திருமணம் செய்யாதிருப்பதற்கு அல்லது காலம் தாழ்த்தி திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இவ்வாறாக பெரும்பாலும் கொடூரமான அடக்குமுறைக்கு வழிநடத்தும் ஆண்களை அதிகமாக சார்ந்திருத்தல் அவ்வளவாக இல்லை.
பெண் குழந்தைகள் அதிக கவனிப்பைப் பெறுகின்றன
பெண்களைப் பாதிக்கும் மற்றொரு பிரச்சினையானது, ஆண்குழந்தையிடமாக அடக்கமுடியாத ஆசை. இது 21-ம் நூற்றாண்டு நெருங்கி வர வர மாறிக்கொண்டிருக்கிறது. தொன்மையான சமய போதனைகளை அடிப்படையாக கொண்டதோடுகூட, பொருளாதாரக் காரணங்களும், பெண் சிசு கொலைக்கும், ஆண் பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகளுக்கு உணவு, கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு குறைவாகக்கொடுத்து, அவர்களைத் தவறாக நடத்துவதற்கும் பெரும்பாலும் வழிநடத்திவருகிறது.
நவீன காலங்களில், பனிகுடதுளைப்பின் (amneocentesis) உபயோகத்தால், கருவின் இனம் கண்டுபிடிக்கப்படுகிறது, பெரும்பாலும் இது பெண் பிள்ளைகளின் கருச்சிதைவுக்கு வழிநடத்துகிறது, இது மிகப்பரவலாக பரவியுள்ளது. சட்டத்தால் சரிசெய்யப்பட்டாலும், இச்செயல் இன்னும் பொதுவான பழக்கமாக இருக்கிறது. ஆண் குழந்தை மட்டும் விரும்பப்படும் கருத்தை மாற்றுவதற்காக கடும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
மனித தத்துவங்கள் பெண்களை பல வழிகளில் தாழத்தள்ளிவிட்டுள்ளது. விதவைகள் நடத்தப்படும்விதம் ஓர் உதாரணம். தொன்மை இந்தியாவில் விதவைகள் மறுமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் சுமார் ஆறாம் நூற்றாண்டில், சட்டத்தை இயற்றியவர்கள் இதை எதிர்த்தார்கள், விதவைகளின் நிலை பரிதாபகரமானது. மறுமணம் மறுக்கப்பட்டதாலும், பெரும்பாலும், இறந்த கணவரின் சொத்துக்களை உறவினர்கள் கொள்ளையடித்ததாலும், குடும்பத்தில் ஒரு சாபமாக கருதப்பட்டதாலும் பல விதவைகள் கொடுமையாகவும் அவமரியாதையாகவும் நடத்தப்படும் வாழ்க்கையை எதிர்ப்படுவதைக்காட்டிலும், கணவனுடைய ஈமத்தீயில் பலியாக மரிப்பதையே தெரிந்துகொண்டனர்.
பெண்களின் இந்தப் பாரத்தை நீக்க, 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, சீர்திருத்தவாதிகள் முயற்சி செய்தார்கள். ஆனால் ஆழமாக ஊறிப்போன உணர்ச்சிகள் மடிவது மிகக்கடினமாக இருந்தது. பல சமுதாயங்களில் அநேக விதவைகளின் நிலை, சில சமயங்களில் தன் வயதான கணவன் இறந்துபோனதால் மிக இளம் விதவையின் நிலை, உண்மையிலேயே பரிதாபத்துக்குரிய ஒன்றாகும். முன்னேற்றக் கல்வி ஸ்தாபனத்தின் டாக்டர் சாரதா ஜெயின் கூறுகிறார்: “பெண்களின் முழு ஆள்தன்மையானது, கணவனின் அந்தஸ்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ளதால், அதிலிருந்துதான் விதவைக்கோலத்தின் வேதனைக்காயம் அரும்புகிறது.” விதவைகள் 21-ம் நூற்றாண்டை கண்ணியமாக சென்றடைய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
கிராமம் நகரம் வித்தியாசங்கள்
நகர்ப்புற பெண்களுக்கும் கிராமப்புற பெண்களுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. கிராமப்பெண்களில் 25 சதவிகிதத்தினர் படிப்பறிவில்லாதவர் என்றும், நகரங்களில் பெரும் சதவிகிதத்தினர் பள்ளிக்கூடங்களிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் பயனடைகிறார்கள் என்றும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கிராமப் பெண்களுக்கு உதவுவதற்காக சமூகச்சேவகர்கள், பாடவகுப்புக்களையும், உடலாரோக்கிய-பராமரிப்பு பயிற்சியும், வேலைவாய்ப்பு திட்டங்களையும் ஏற்பாடு செய்கிறார்கள். சில மாநில அரசாங்கங்கள் 30 சதவிகிதம் வேலைவாய்ப்பை பொதுத்துறையிலும், கூட்டுறவுச் சங்கங்களிலும், உள்ளூர் பெண்கள் தன்னாட்சியிலும் ஒதுக்கிவைத்துள்ளன. இந்தியாவில் கோடிக்கணக்கில் மலிந்துக்கிடக்கும் வேதனையையும் துயரத்தையும் குறைத்திட பெண்விடுதலை அமைப்புகள் முயற்சிக்கின்றன. ஓரளவுக்கு இவை வெற்றியடைந்துள்ளன. ஆகவே, இந்தியப் பெண்களின் எதிர்காலத்தைப்பற்றி என்ன சொல்லலாம்?
21-ம் நூற்றாண்டை நோக்கிச்செல்லுதல்!
இந்தியப் பெண்ணின் கதாபாத்திரம், அவர் 21-ம் நூற்றாண்டை நோக்கிச் செல்லச் செல்ல மாறிக்கொண்டிருக்கிறதா? ஆம், வெகு விரைவாக. ஆனால் இந்தியப் பெண்களும் உலகமுழுவதிலும் உள்ள தங்களுடைய சகோதரிகளைப்போன்றே ஒரேவிதமான நிலைமையை எதிர்ப்படுகிறார்கள். முன்னேற்றங்கள் இருக்கின்றன, ஆனால் இடையூறுகளும் உள்ளன. நம்பிக்கை இருக்கிறது, ஆனால் மனமுறிவும் இருக்கிறது. அழகான வீடுகளும் ஆடம்பரமான வாழ்க்கைமுறையும் உண்டு, ஆனால் சேரிகளும் கடுமைதணியாத வறுமையும், உணர்விழக்கச்செய்யும் பசிக்கொடுமையும் உள்ளன. கோடிக்கணக்கானோருக்கு அத்தியாவசியமானவையைக் காட்டிலும் மற்ற எதுவும் எட்டாதவை. மற்றவர்கள் உலகம் அளிக்கும் எல்லாவற்றையும் வைத்திருப்பதுபோல் தோன்றுகின்றனர். பெரும்பாலனவருக்கு எதிர்காலம் நிச்சயமற்றது, அவர்கள் கனவுகளைச் சுமந்துள்ளனர், ஆனால் அதோடுகூட ஐயங்களையும் கொண்டுள்ளனர்.
என்றபோதிலும், சிலருக்கு வாக்குறுதியோடு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது, விசேஷமாக கிறிஸ்து இயேசுவின் மூலம் யெகோவாவின் ராஜ்ய ஆட்சியின்கீழ் வரவிருக்கும் பரதீஸிய பூமியில் நம்பிக்கையுடையோருக்கு. (வெளிப்படுத்துதல் 21:1, 4, 5) பெண்கள் முழுமையாக வாழ்க்கையை அனுபவிக்கும் 21-ஆம் நூற்றாண்டை முழு நம்பிக்கையுடன் இவர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
[பக்கம் 16-ன் படம்]
கட்டடம் கட்டுமிடங்களில் செங்கற்களைத் தூக்கிச் செல்லுதல்
[பக்கம் 17-ன் படம்]
வீட்டுத்தேவைக்குத் தண்ணீர் எடுத்தல்
[பக்கம் 18-ன் படம்]
ஆடவருடன் கலந்தாய்வு
[பக்கம் 18-ன் படம்]
கணிப்பொறியை இயக்குதல்