யெகோவாவின் சாட்சிகள் இருதய அறுவைமருத்துவ மேம்பாட்டிற்குக் காரணர்
ஆகஸ்ட் 27, 1995 தேதியிட்ட நியூ யார்க் டெய்லி நியூஸ், தனது அறிக்கையை, “இரத்தமேற்றப்படாத அறுவை சிகிச்சை” என்று தலைப்பிட்டிருந்தது. நியூ யார்க் ஹாஸ்பிட்டல்-கார்னல் மெடிக்கல் சென்ட்டர், “ஒரு சொட்டு இரத்தத்தைக்கூட இழக்காமல் தமனி மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை செய்ய ஒரு புரட்சிகரமான வழியை—முன்னாள் மேயர் டேவிட் டின்கன்ஸுக்கு சமீபத்தில் தேவைப்பட்ட அதே அறுவைமருத்துவ முறையை—வெளிப்படுத்த” இருந்தது.
அச்செய்தித்தாள் கூறினது: “யெகோவாவின் சாட்சிகளுடைய அக்கறைகளால் தூண்டப்பட்ட, இந்தப் புதிய செய்முறையின் விந்தையானது . . . மருத்துவமனைகளுக்கு இலட்சக்கணக்கான டாலர்களை மிச்சப்படுத்துவதிலும் நோயாளிகளுக்கு இரத்தம் மாசுபடுத்தப்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைப்பதிலும் பிரதிபலிக்கப்படும்.” மருத்துவமனையின் இரத்தமேற்றப்படாத அறுவைமருத்துவத் திட்டத்தின் இயக்குநரான டாக்டர் டாட் ரோஜென்கார்ட் கூறினார்: “இந்த அறுவை மருத்துவத்தின்போது ஒரு நோயாளிக்குத் தேவைப்படும் இரத்தமேற்றுதலின் வழக்கமான அளவாகிய இரண்டு முதல் நான்கு யூனிட்டுகளிலிருந்து பூஜ்ஜியமாக இப்போது எங்களால் குறைக்க முடிகிறது.”
முதலாவதாக இச்செய்முறையைக் கண்டுபிடிக்க உதவியவரான இம்மருத்துவமனையின் இருதய அறுவைமருத்துவர் டாக்டர் கார்ல் க்ரீகர் கூறினார்: “தானம்செய்யப்படும் இரத்தம் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட பொருட்களின் தேவையை நீக்குவதன்மூலம், பொதுவாக இரத்தமேற்றுதலோடு தொடர்புடைய அறுவைக்குப்பின் ஏற்படும் குறிப்பிட்ட வகையான காய்ச்சல்கள் மற்றும் தொற்றுநோய்களின் அபாயத்தை நாங்கள் குறைக்கவும் செய்கிறோம்.”
“இரத்தமேற்றப்படாத மாற்றுப்பாதை அறுவையானது, அறுவைமருத்துவத்துக்குப் பிறகு தீவிர சிகிச்சைப்பகுதியில் செலவிடப்படும் நேரத்தை—24 மணிநேரத்திலிருந்து வெறும் ஆறு மணிநேரத்திற்கு—குறைக்கிறது. இரத்தமேற்றப்படாத அறுவைக்குட்படுத்தப்படும் நோயாளிகள் தங்கள் உடல்நலத்தை மீண்டும் அடையப்பெற்று 48 மணிநேரத்திற்கு முன்னதாகவே மருத்துவமனையிலிருந்து வெளியேறுகின்றனர்,” என்று மற்ற நிபுணர்கள் கூறுகின்றனர். அது மருத்துவமனைகளுக்கு, அரசாங்கத்திற்கு, மற்றும் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களுக்கு அதிகப் பணசேமிப்பை அர்த்தப்படுத்துகிறது. டாக்டர் ரோசன்கார்ட், “இந்த அறுவைமருத்துவம் குறைந்தபட்சம் ஒரு நோயாளிக்கு $1,600 பணத்தை மிச்சப்படுத்தக்கூடும்” என்று மதிப்பிட்டார்.
டெய்லி நியூஸ் விவரிப்பு தொடர்ந்து சொல்வதாவது:
“எதிர்பார்க்கப்படுவதற்கு முரணாக, இப்புதிய அறுவைமருத்துவம் பொருளாதார நெருக்கடியால், அல்லது மருத்துவ அவசரநிலையாலும்கூட உத்வேகப்படுத்தப்படவில்லை, ஆனால் மதத்தின்மீதுள்ள பற்றால் உத்வேகப்படுத்தப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் சமுதாயம்—இரத்தமேற்றுதலைத் தடைசெய்யும் நம்பிக்கைகளைக் கொண்ட சமுதாயம்—இருதய நோய்க்கு ஆளாகி இறக்கும் வயோதிப அங்கத்தினருக்கு உதவிசெய்யத் தேடிக்கொண்டிருந்தது. . . .
“யெகோவாவின் சாட்சிகள் சமுதாயம் கேட்டுக்கொண்டதன் பேரில், மருத்துவர்கள் இரத்தம் முற்றிலும் இழக்கப்படுதலிலிருந்து காப்பாற்றும் தங்கள் கைத்திறமைகளைப் புதிய மருந்துகளோடு சேர்த்தனர். இருதய அறுவைமருத்துவத்தின்போது நோயாளிகளை உயிருடன் வைக்க உதவும் வழக்கமான இதய நுரையீரல் பொறியைப் பயன்படுத்தும் ஒரு புதிய முறையையும் கண்டுபிடித்தனர்.
“தொடக்கக் கட்டத்தில் நடத்தப்பட்ட இரத்தமேற்றப்படாத அறுவையில் உள்ளடக்கும் 40 யெகோவாவின் சாட்சிகள் நோயாளிகளோடு சேர்த்து ஆறு மாதங்களுக்கு முன்பாக நியூ யார்க்-கார்னல் குழுவினர் அந்த அறுவைசிகிச்சையை பொது நோயாளி சமுதாயத்திலும் அறிமுகப்படுத்தினர். ‘அப்போதிலிருந்து, இறப்பு எதுவுமின்றி அடுத்தடுத்து 100 இரத்தமேற்றப்படாத மாற்றுப்பாதை அறுவை சிகிச்சைகளை அவர்கள் முடித்திருக்கின்றனர்,’ என்றார் க்ரீகர். வழக்கமான மாற்றுப்பாதை அறுவை சிகிச்சையின்போது இறப்புவீதம் சுமார் 2.3%.”
உலகளவில் 102 மருத்துவமனைகள் இரத்தமேற்றப்படாத அறுவைமருத்துவ திட்டங்களைத் தங்கள் வசதிகளோடு சேர்த்திருக்கின்றன, இதன்மூலம் இந்தப் பாதுகாப்பான அறுவைசிகிச்சை முறைகள் பூமி முழுவதிலுமுள்ள பொது நோயாளி சமுதாயத்திற்குக் கிடைக்கும்படி செய்திருக்கின்றன.