கள்ளத் தயாரிப்பு—உலகெங்கிலுமுள்ள ஒரு பிரச்சினை
18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையாக, பிரான்ஸில் ஆண்கள் இந்தக் குற்றத்திற்காக உயிருடன் வேகவைக்கப்பட்டனர். 1697-லிருந்து 1832 வரையாக இங்கிலாந்தில் இது மரண தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது; அந்த செயல் நம்பிக்கை துரோகமாகக் கருதப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்கள் அந்த காரணத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்; மேலும் எண்ணற்றோர் அதற்குத் தண்டனையாக கடும் உழைப்பிற்காக ஆஸ்திரேலியாவில் குற்றவாளிகளை ஒதுக்கி வைத்திருக்கும் இடத்திற்கு (penal colony) நாடுகடத்தப்பட்டனர்.
நூற்றுமுப்பது வருடங்களுக்கு மேலாக, ஐ.மா. அரசு அந்தக் குற்றம் செய்தவர்களாகத் தீர்க்கப்பட்டவர்களுக்கு மத்திய சிறைகளில் 15 வருடங்கள் வரையாகச் சிறைத் தண்டனை விதித்து வந்திருக்கிறது. மேலுமாக, அந்தத் தண்டனையோடுகூட ஆயிரக்கணக்கான டாலர் தண்டத் தொகையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இன்றும்கூட அது ரஷ்யாவிலும் சீனாவிலும் மரண தண்டனைக்குரியதாக இருக்கிறது.
அநேக நாடுகளில் அதற்காகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டபோதிலும், அந்தக் குற்றம் தொடர்கிறது. அவசியமான தொழில்நுட்ப திறன்களை உடையவர்களின் விரைவில்-பணக்காரராகும் திட்டங்களை முறியடிப்பதற்கு மரண பயம்கூட போதுமானதாக இருக்கவில்லை. அரசாங்க அதிகாரிகள் குழப்பமடைந்திருக்கிறார்கள். “நூற்றாண்டுகளாக இருந்ததுபோலவே, அதைத் தடுத்துநிறுத்துவதற்கான ஒரு நல்ல வழியைக் கண்டுபிடிப்பது கடினமாகவே இருக்கும்,” என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
கள்ளத் தயாரிப்பு! வரலாற்றிலேயே மிகப் பழமை வாய்ந்த குற்றச்செயல்களில் ஒன்று. இந்த 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அது ஓர் உலகளாவிய பிரச்சினையாகி, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐ.மா. தலைமை நீதிமன்ற துணை நீதிபதியாகிய ராபர்ட் ஹெச். ஜாக்ஸன் அதைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “கள்ளத் தயாரிப்பு என்பது ஒருபோதுமே தற்செயலாகவோ, அறியாமையினாலோ, உணர்ச்சிவேகத்தினாலோ, கடும் வறுமையின் காரணமாகவோ செய்யப்படுகிற குற்றம் அல்ல. அது தொழில்நுட்ப திறம்படைத்தவரும் உபகரணங்களுக்காக அதிக பணத்தை செலவிடுகிறவருமான ஒருவரால் திறம்பட்ட முறையில் திட்டமிடப்பட்ட ஒரு குற்றச்செயலாகும்.”
உதாரணமாக, அமெரிக்க தாள் நாணயம், உலகெங்கிலும் சட்டவிரோதமாக முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகப்படியாக தயாரிக்கப்பட்டு வருகிறது. “ஐ.மா.-வின் தாள் நாணயம் உலகிலேயே மிகவும் விரும்பப்படுகிற தாள் நாணயம் மட்டுமல்ல. அதுவே மிகவும் எளிதாகக் கள்ளத் தயாரிப்பு செய்யப்படுகிறதாயும் இருக்கிறது,” என்று கருவூலத் துறையின் சார்பு பேச்சாளர் ஒருவர் சொன்னார். அமெரிக்க அரசைக் குழப்பியிருப்பது என்னவென்றால், புழக்கத்திலிருக்கும் கள்ள நோட்டுகளில் பெரும்பாலானவை ஐக்கிய மாகாணங்களுக்கு வெளியே தயாரிக்கப்படுகின்றன.
இதைக் கவனியுங்கள்: 1992-ல், $3 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கடல்கடந்த நாடுகளில் கைப்பற்றப்பட்டன என்பதாக டைம் பத்திரிகை அறிக்கையிட்டது. “கடந்த வருடம் மொத்த தொகை $12 கோடியை எட்டியது, மேலும் 1994-ல், அதற்கும் மேலான பதிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைவிட அதிகப்படியான பணம், கண்டுபிடிக்கப்படாமலேயே புழக்கத்தில் இருக்கிறது,” என்பதாக அந்தப் பத்திரிகை அறிக்கை செய்தது. இந்த எண்ணிக்கைகள் விஷயத்தின் பகுதியளவையே தெரிவிக்கின்றன. ஐக்கிய மாகாணங்களுக்கு வெளியே புழக்கத்திலிருக்கும் கள்ள நோட்டுகளின் தொகை நிஜத்தில் 1,000 கோடி டாலர் அளவு அதிகமானவையாக இருக்கும் என்று கள்ளத் தயாரிப்புகளைக் குறித்து ஆராயும் நிபுணர்கள் நம்புகிறார்கள்.
அமெரிக்க தாள் நாணயம் அநேக நாடுகளால்—தங்கள் சொந்த தாள் நாணயத்தை விடவும்கூட—அதிகமாக விரும்பப்படுகிறதாலும், அவற்றைப் போன்றவற்றை மீண்டும் தயாரிப்பது அதிக சிக்கலற்றதாக இருப்பதாலும், பல நாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் குற்றமிழைக்கும் தொகுதிகளும் அந்நிலையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. தென் அமெரிக்காவில், கொலம்பியாவில் போதை மருந்து வியாபாரத்தை இயக்கும் அமைப்புகள் தங்கள் சட்டவிரோதமான வருமானத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்க தாள் நாணயத்தை கள்ளத் தயாரிப்பு செய்திருக்கின்றன. உலகளாவிய கள்ளத் தயாரிப்பு வியாபாரத்தில் தற்போது சில மத்திய கிழக்கு நாடுகளும் பெரும் பங்காளிகளாகி வருகின்றனர் என்பதாக ஐ.மா.செய்தியும் உலக அறிக்கையும் (ஆங்கிலம்) அறிக்கை செய்தது. “ஐ.மா. கருவூல துறையால் பயன்படுத்தப்படுவதை ஒத்திருக்கும் நுட்பச் சிக்கல்வாய்ந்த அச்சடிக்கும் செய்முறைகளை” அந்த நாடுகளில் ஒன்று “பயன்படுத்துவதாக வதந்தி இருக்கிறது,” என்று அந்தப் பத்திரிகை மேலுமாக சொன்னது. “அதன் விளைவாக, ‘சூப்பர் நோட்டுகள்’ என்று அழைக்கப்படுகிற, நடைமுறையில் கண்டுணரமுடியாத போலியான $100 நோட்டுகளை [அது] தயாரிக்க முடியும்.”
ரஷ்யா, சீனா, மற்றும் மற்ற ஆசிய நாடுகளிலுள்ள மக்களும் கள்ள நோட்டு உற்பத்தியில்—பெரும்பாலும் ஐ.மா. தாள் நாணய உற்பத்தியில்—கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். இன்று மாஸ்கோவில் புழக்கத்திலிருக்கும் ஐ.மா. தாள் நாணயத்தில் 50 சதவீதம் போலியானதென சந்தேகிக்கப்படுகிறது.
வளைகுடா போருக்குப் பின், 1991-ல், கோடிக்கணக்கான ஐ.மா. டாலர் புழக்கத்தில் இருந்தபோது, “அதன் $100 நோட்டுகளில் சுமார் 40 சதவீதமானவை கள்ள நோட்டுகளாக இருந்ததைக் கண்டு சர்வதேச வங்கியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியுற்றனர்,” என்பதாக ரீடர்ஸ் டைஜஸ்ட் கூறியது.
மற்றுமநேக ஐரோப்பிய நாடுகளைப் போலவே, பிரான்ஸும் அதற்குரிய சொந்த கள்ள நோட்டுப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறது. பணத்தைக் கள்ளத்தனமாகத் தயாரிப்பது அமெரிக்க பிரச்சினை மட்டுமல்ல என்பதற்கு உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளும் சான்றுபகரும்.
கள்ளத் தயாரிப்பு எளிதாக்கப்பட்டிருத்தல்
ஒருசில வருடங்களுக்கு முன்பு வரையாக, இரகசியமான கைவினைஞர்களுக்கு—கலைஞர்கள், திறம்பட்ட செதுக்குத் தொழிலாளர்கள், பொறிப்பாளர்கள், அச்சடிப்பவர்கள் ஆகியோருக்கு—எந்தவொரு நாட்டு பணத்தின் நகலை தயாரிப்பதற்கும் நீண்ட மணிநேரங்கள் சிரத்தையுடன் உழைக்க வேண்டியிருந்தது; அவ்வாறு உழைத்தும், கூடியவரை அந்த நிஜ பண மாதிரியை அவ்வளவு நன்றாக ஒத்திராத நகல் ஒன்றையே முடிவில் பெற முடிந்தது. என்றபோதிலும், இன்று, உயர் தொழில்நுட்பம் வாய்ந்த பலநிற நகல் எடுக்கும் இயந்திரங்கள், காகிதத்தின் இரு பக்கமும் அச்சு பதிக்கும் லேசர் பிரின்ட்டர்கள், ஸ்கேனர்கள் ஆகியவை அலுவலகங்களிலும் வீடுகளிலும் பயன்படுத்தக்கூடியவையாய் இருப்பதால், ஏறக்குறைய எவர் வேண்டுமானாலும் தனக்கு இஷ்டமான எந்தவொரு தாள் நாணயத்தையும் ஒத்திருக்கும் நகலை உருவாக்குவது தொழில்நுட்பரீதியில் சாத்தியமானதாக இருக்கிறது.
மேசைமீதே (டெஸ்க்டாப்) கள்ளத் தயாரிப்பு செய்யும் சகாப்தம் இப்போது வந்திருக்கிறது! செதுக்குகிற மற்றும் அச்சுப்பதிப்பு செய்கிற தொழிலர்களின் திறமைகளை ஒருகாலத்தில் தேவைப்படுத்தியதெதுவோ அது இப்போது அலுவலக வேலையாட்கள் மற்றும் வீட்டிலேயே கம்ப்யூட்டரை வைத்து செயல்படுகிறவர்களின் திறமையுடன் அடையப்படக்கூடியதாயிற்று. $5,000-க்கும் குறைவான விலையுள்ள தனிநிலை-கம்ப்யூட்டர் (பர்ஸனல்-கம்ப்யூட்டர்) உதவியுடன் அச்சடிக்கும் திட்டமைப்பு முறைகள்தாமே, பயிற்றுவிக்கப்பட்ட நிபுணர்கள்கூட கண்டுணருவதைக் கடினமாகக் காணக்கூடிய போலி தாள் நாணயங்களை தற்போது உற்பத்தி செய்யலாம். பணம் அவசியப்படுகிற ஒருவர், தன் சொந்த தாள் நாணயத்தை—தன் தேவைகளைத் திருப்தியாக்கும் மதிப்பளவில்—அச்சடிப்பதன்மூலம், தனக்கு மிகவும் அருகாமையிலிருக்கும் தானியங்கி காசாளர் இயந்திரம் வரையாகச் செல்லும் பயணத்தை மிச்சப்படுத்தக்கூடும் என்பதை இது அர்த்தப்படுத்தலாம்! இன்றைய கள்ளத் தயாரிப்பாளர்களின் கைகளில் இந்தத் திட்டமைப்பு முறைகள் ஏற்கெனவே வல்லமைவாய்ந்த கருவிகள். “இதைச் செய்கையில், இந்த சாமர்த்தியமுள்ள குற்றவாளிகள் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரங்கள்மீது மீண்டும்மீண்டுமான வெற்றிகளைப் பெறுகின்றனர், என்றாவது ஒருநாள் உலகின் பெரிய தாள் நாணயங்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகலாம்,” என்று ஐ.மா.செய்தியும் உலக அறிக்கையும் எழுதியது.
உதாரணமாக, 1992-ல், பிரான்ஸில் கைப்பற்றப்பட்ட Fr3 கோடி ($50 லட்சம் ஐ.மா.) போலி பணத்தில் 18 சதவீதம் அலுவலக இயந்திரங்களில் உற்பத்தி செய்யப்பட்டவையே. பொருளாதார அமைப்புக்கு மட்டுமல்லாமல் பொது மக்களின் நம்பிக்கைக்கும் இது ஓர் அச்சுறுத்தல் என்பதாக பாங்க் டி ஃப்ரான்ஸின் அதிகாரி ஒருவர் கருதுகிறார். “மக்களில் பெரும்பாலானோருக்குக் கிடைக்கக்கூடிய தொழில்நுட்பத்தை வைத்து, ஒரு நல்ல வங்கி நோட்டிற்கு ஒத்திருக்கும் நகல் ஒன்றை உருவாக்கலாம் என்று அவர்கள் அறிந்துகொள்ளுகையில், நம்பிக்கை இழப்பு ஏற்படலாம்,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
போலி தாள் நாணயத்தின் பெருவெள்ளத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியின் பாகமாக அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும், வங்கி நோட்டுகளில் புதிய வகைமாதிரிகள் வளர்ச்சியடையும் நிலையிலும், இன்னும் சில நாடுகளில் புதிய மாதிரியான நோட்டுகள் ஏற்கெனவே புழக்கத்திலும் இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்க தாள் நாணயத்தில், $100 நோட்டில் பெஞ்சமின் ஃப்ராங்க்லினின் படம், அளவில் பாதி மடங்கு பெரிதாக்கப்பட்டு, இடது பக்கமாக முக்கால் அங்குலம் நகர்த்தப்படும். “எழுத்துப் பொறிப்புகளிலும் மறைவான பாதுகாப்பு அம்சங்களிலும் மேலும் பதினான்கு மாற்றங்களும் செய்யப்படும்,” என்பதாக ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிக்கை செய்தது. நீர்வரிக்குறிகள், வெவ்வேறு கோணங்களிலிருந்து நோக்கும்போது நிறம் மாறுகிற மைகள் ஆகியவை போன்ற மற்றும் பல மாற்றங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
பிரான்ஸும் தன் வங்கி நோட்டுகளின் மாதிரியைத் திட்டமிடுகையில் புதிய தடுப்பு ஏதுக்களை சில காலமாக உட்படுத்தி வந்திருக்கிறது; இது கள்ளத் தயாரிப்பாளர்களை ஓரளவுக்கு தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றபோதிலும், “கள்ளத் தயாரிப்பாளர்களாக ஆகப்போகிறவர்களை முறியடிப்பதற்கு தொழில்நுட்ப ரீதியில் எவ்வித முறையும் இன்னும் இல்லை,” என்பதாக பாங்க் டி பிரான்ஸின் சார்பு பேச்சாளர் ஒருவர் ஒத்துக்கொண்டு, “ஆனால், அது [கடினமான] வேலையாகவும் மிகவும் செலவுள்ளதாகவும் இருக்கும் வகையில் அந்த வங்கி நோட்டுக்குள்ளேயே நாம் இப்போது எத்தனையோ தடைகளை வைக்க முடிகிறது,” என்று அவர் மேலுமாகச் சொன்னார். “கள்ளத் தயாரிப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை” என்பதாக அவர் இந்தத் தடைகளை விவரிக்கிறார்.
இப்போது கொஞ்ச காலமாக ஜெர்மனியும் க்ரேட் பிரிட்டனும் தங்கள் தாள் நாணயத்தைப் போன்ற நகலை உருவாக்குவதை அதிக கடினமாக்கும் வகையில் பாதுகாப்பு நூலிழைகளைத் தங்கள் தாள் நாணயத்தில் இழைத்து வைப்பதன்மூலம் பாதுகாப்பு மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். கனடாவின் $20 நோட்டில், ஒரு ஒளியியல் பாதுகாப்புக் கருவி எனப்படும் ஒரு சிறிய பளபளக்கும் சதுரம் இருக்கிறது; இது நகல் இயந்திரங்களால் நகல் எடுக்க முடியாததாக இருக்கிறது. 1988-ல் ஆஸ்திரேலியா, காகிதத்தில் சாத்தியமற்றதாக இருக்கும் பாதுகாப்பு அம்சங்களை உட்படுத்துவதற்காக பிளாஸ்டிக் வங்கி நோட்டுகளை அச்சிட ஆரம்பித்தது. ஒளிக்கதிர் நிறச் சிதைவு ஏற்படும் மெல்லிய உலோக தகடுகளை காகித நாணயத்தில் பின்லாந்தும் ஆஸ்திரியாவும் பயன்படுத்துகின்றன. இவை ஒரு ஹோலகிராம் செய்வதைப் போல மினுமினுத்து நிறம் மாறுகின்றன. என்றபோதிலும், சரிப்படுத்தும் படிகள் எவ்வளவுதான் எடுக்கப்பட்டாலும் அரசாங்கத்தின் புதுப்புனைவான முயற்சிகள் அனைத்தும், கடந்த காலத்தில் நிரூபித்தது போலவே, முடிவில் பயனற்றவையாக ஆகிவிடக்கூடிய அளவிற்கு கள்ளத் தயாரிப்பாளர்கள் தங்கள் குற்றச்செயலைத் தொடர்வதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள, அவர்களுக்கு அதிக காலம் எடுக்காது என அரசாங்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர். “நீங்கள் 8-அடி சுவர் ஒன்றைக் கட்டினால், அந்த மோசமானவர்கள் 10-அடி ஏணியை அமைக்கிறார்கள், என்ற பழங்கூற்றைப்போலவே அது இருக்கிறது,” என்று கருவூலத் துறை அதிகாரி ஒருவர் சொன்னார்.
அடுத்த கட்டுரைகள் காண்பிக்கப்போகிறபடி, கள்ள நோட்டு அடித்தல், கள்ளத் தயாரிப்பாளரின் புதுப்புனைவுத் திறனின் ஒரே ஒரு அம்சம் மட்டுமே.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
$5,000-க்கும் குறைவான விலையுள்ள தனிநிலை-கம்ப்யூட்டர் உதவியுடன் அச்சடிக்கும் திட்டமைப்பு முறைகள்தாமே, பயிற்றுவிக்கப்பட்ட நிபுணர்கள்கூட கண்டுணருவதைக் கடினமாகக் காணக்கூடிய போலி தாள் நாணயங்களை தற்போது உற்பத்தி செய்யலாம்