வாங்குவோரே ஜாக்கிரதை!—கள்ளத் தயாரிப்பு உயிருக்கே ஆபத்து விளைவிக்கலாம்
பயிற்றுவிக்கப்படாத, சந்தேகப்படாத பலியாட்கள் ஏமாற்றப்படலாம். விலையுயர்ந்ததாகத் தோன்றுகிற கைக்கடிகாரம், தெரு விற்பனையாளரால் வழக்கமான விலையைவிட குறைந்த விலைக்கு அளிக்கப்பட்டால்—அது நிஜமானதா போலியானதா? அதை நீங்கள் வாங்குவீர்களா? இடைத் தெரு ஒன்றில், கார் ஜன்னல் வழியாக உங்களிடம் அளிக்கப்படும் சொகுசான மென்மயிர்த்தோல் கோட்—அது மிங்க் தோல் என்று விற்பனையாளர் உறுதியாகக் கூறுகிறார். அதன் கவர்ச்சியும் மலிவான விலையும் உங்களுடைய சிறந்த பகுத்துணர்வுடன் நீங்கள் செயல்படுவதைக் குறுக்கிடுமா? சமீபத்தில் மணவிலக்கு செய்யப்பட்ட—தற்போது பணமின்றியும் வீடின்றியும், நியூ யார்க் சுரங்கப் பாதை நிலையத்தில் ஒரு ரயிலுக்காக காத்திருக்கிற—மனைவியின் விரலில் இருக்கும் வைர மோதிரம், வெறும் ஒரு சிறிய தொகைக்கு நீங்கள் அதை வைத்துக்கொள்ளலாம். மறுக்கமுடியாத அளவுக்கு மிகவும் மலிவான பேரம் என்று நீங்கள் நினைப்பீர்களா? கள்ளத் தயாரிப்பைப் பற்றிய இந்தக் கட்டுரையில் இந்தக் கேள்விகள் கேட்கப்படுகிறதாலும், கொடுக்கப்பட்டிருக்கிற சூழ்நிலைகளின் காரணமாகவும், நீங்கள் பெரும்பாலும் “ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்!” என்று பதிலளிக்கலாம்.
ஆனாலும், இடங்களையும் சூழ்நிலைகளையும் மாற்றிவிட்டு, உங்கள் பதில்கள் என்னவாக இருக்கும் என்று பாருங்கள். விலையுயர்ந்த, பிரபல நவீன பாணி உற்பத்தியாளரால் உருவாக்கப்பட்ட கைப்பை, ஒழுங்கான தள்ளுபடி விற்பனை கடையில் மிகவும் கவரத்தக்க மலிவான விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்? நன்கு அறியப்பட்ட முத்திரை-பெயர் தாங்கிய விஸ்கி, மூலையிலுள்ள மதுபான கடையில் விற்கப்பட்டால் அப்போது என்ன? நிச்சயமாகவே இங்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது. மேலும், ஒரு மருந்து கடையில் அல்லது காமரா கடையில் குறைந்த விலையில் விற்பனைக்காக இருக்கும் அடையாளங்காணக்கூடிய முத்திரை-பெயரை உடைய ஃபில்ம் ஒன்றையும் கருதுங்கள். இப்போது, ஆயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரம், தெரு விற்பனையாளரால் அல்ல, ஆனால் பெயர்பெற்ற ஒரு கடையில் உங்களுக்கு அளிக்கப்படுகிறது. அதன் விலை மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு விலையுயர்ந்த கடிகாரத்தை வாங்குவதில் நீங்கள் அக்கறையுள்ளவர்களாக இருந்தால், அதை வாங்குவீர்களா? நன்கு அறியப்பட்ட முத்திரை-பெயரை உடைய காலணிகள் கணிசமான மலிவு விலையில், உங்கள் நண்பர்களால் உங்களுக்குச் சொல்லப்பட்ட ஒரு குறிப்பிட்ட கடையில் கிடைக்கின்றன. அவை வெறும் தரம்குறைந்த போலி பொருட்கள் அல்ல என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா?
கலையுலகில், புதுபாணியான கலைப்படக் கூடங்களில், விலையுயர்ந்த கலைப்படங்களைச் சேகரிப்பவர்களுக்காக ஏராளமான ஏல விற்பனைகள் நடத்தப்படுகின்றன. “கவனமாக இருங்கள்,” என்று எச்சரித்தார் கலை நிபுணர் ஒருவர். “வருடக்கணக்கான அனுபவமுள்ள கலைச்சுவைத் திறன் மிக்கவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவ்வாறே கலை வணிகர்களும் ஏமாற்றப்படுகிறார்கள். அருங்காட்சியக காப்பாட்சியர்களும் ஏமாற்றப்படுகிறார்கள்.” கள்ளத் தயாரிப்பாளர்களாய் இருக்கிறவர்களின் தந்திரங்களுக்கு ஈடுகட்டும் அளவிற்கு நீங்கள் அவ்வளவு தேர்ச்சி பெற்றவர்களா? ஜாக்கிரதை! சொல்லப்பட்ட அத்தனை பொருட்களும் போலியானவையாக இருக்கலாம். பெரும்பாலும் அவ்வாறே இருக்கின்றன. ஒரு பொருள் அரியதாகவும் விலைமதிப்புள்ளதாகவும் இருந்தால், எவராவது எங்காவது அதை கள்ளத்தனமாக தயாரிக்க முயலுவார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கள்ளத் தயாரிப்பு தொழில் உலகெங்கிலும் உள்ள $20,000 கோடி அளவிலான துணிச்சலான திட்டம்; “தான் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் பலவற்றை விடவும் அது வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது,” என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை எழுதியது. வாகனங்களின் போலியான பாகங்கள், அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் உலகெங்கிலும் வருமானத்தில் ஒரு வருடத்திற்கு $1,200 கோடி இழப்பை ஏற்படுத்துகின்றன. “போலி பாகங்களை வினியோகிப்பவர்களின் வியாபரத்தை நிறுத்த முடிந்தால், அது இன்னும் 2,10,000 பேரை வேலைக்கு அமர்த்திக்கொள்ளுமென ஐ.மா. வாகன தொழில்துறை சொல்கிறது,” என்று அந்தப் பத்திரிகை சொன்னது. கள்ளத் தயாரிப்பு செய்யும் தொழிற்சாலைகளில் பாதி, ஐக்கிய மாகாணங்களுக்கு வெளியே—உண்மையில் எவ்விடத்திலும்—இருப்பதாக அறிக்கை செய்யப்படுகிறது.
கொல்லக்கூடிய கள்ளத் தயாரிப்புகள்
சில வகையான கள்ளத் தயாரிப்புப் பொருட்கள் கேடுவிளைவிப்பவையாகவே இருக்கின்றன. இறக்குமதி செய்யப்பட்ட நட்டுகளும் போல்ட்டுகளும் ஸ்குரூக்களும் ஐ.மா. சந்தையின் $600 கோடியில் 87 சதவீதத்தை உருவாக்குகின்றன. என்றபோதிலும், இந்த இணைவிக்கும் சாதனங்கள் எல்லாவற்றிலும் 62 சதவீதமானவை போலியாகப் புனைந்த முத்திரை-பெயர்களை அல்லது சட்டவிரோதமான தரநிலை முத்திரைகளைக் கொண்டிருப்பதாக இதுநாள் வரையாகவுள்ள அத்தாட்சி குறிப்பிடுகிறது. பொது கணக்கு வைப்பு அலுவலகத்தின் (General Accounting Office [GAO]) 1990 அறிக்கையின்படி, குறைந்தபட்சம் 72 அமெரிக்க “அணுக்கரு மின் நிலையங்கள் தரக்குறைவான இணைவிக்கும் சாதனங்களை பயன்படுத்தியிருக்கின்றன; அணுக்கரு விபத்து ஏற்பட்டால் அணுக்கரு உலையை மூடுவதற்கான அமைப்புமுறைகளில், சில பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பிரச்சினை மோசமாகி வருவதாக GAO சொல்லுகிறது. . . . அப்பேர்ப்பட்ட [தரம் குறைந்த] பொருட்களைப் பயன்படுத்துவதால் விளைவடைகிற பிரச்சினையின் அளவு, பொது மக்களுக்காகும் நஷ்டம் அல்லது சாத்தியமான ஆபத்துக்கள் ஆகியவை அறியப்படவில்லை,” என்று ஃபோப்ஸ் அறிக்கை செய்தது.
ஸ்டீல் போல்ட்டுகள், அவை பயன்படுத்தப்படும் நோக்கங்களுக்குப் போதிய பலமில்லாதவை, கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்டு எதற்கும் துணிந்த காண்ட்ராக்டர்களால் ஐக்கிய மாகாணங்களுக்குள் கடத்திக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அமெரிக்கன் வே சொல்லுகிறபடி, “அலுவலக கட்டடங்கள், மின் நிலையங்கள், பாலங்கள், ராணுவ சாதனங்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு அவை அச்சுறுத்தலாக இருக்கலாம்.”
பல வருடங்களுக்கு முன்பு 15 பேரின் உயிரைக் கொள்ளைகொண்ட பஸ் விபத்து ஒன்றிற்கு போலியான பிரேக் லைனிங்குகளே காரணமாகக் காட்டப்பட்டன. ராணுவ ஹெலிகாப்டர்கள், ஒரு ஐ.மா. விண்வெளி ஓடம் போன்ற எதிர்பாரா இடங்களில் போலியான பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக அறிக்கை செய்யப்படுகிறது. “போலி கார்டியா அல்லது ரோலக்ஸ் கைக்கடிகாரத்தைக் குறித்து நீங்கள் பேசும்போது சராசரியான நுகர்வோர் அதை அவ்வளவு சட்டைசெய்வதில்லை, ஆனால் உங்கள் உடல்நலமும் பாதுகாப்பும் ஆபத்தில் இருக்கும்போது அது நிலைமையையே மாற்றிவிடுகிறது,” என்பதாக கள்ளத் தயாரிப்பு குறித்த பிரபல புலனாய்வாளர் கூறினார்.
சாத்தியமாக இருக்கும் ஆபத்தான கள்ளத் தயாரிப்புகளின் பட்டியல் உட்படுத்துகிறவை, 266 ஐ.மா. மருத்துவமனைகளுக்கு விற்கப்படும் இதய இயக்க ஊக்கிகள் (pacemakers); 1984-ல் அமெரிக்க சந்தையைச் சென்றெட்டிய போலியான பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள்; 1979-ல் கென்யாவின் காப்பி பயிரை நாசமாக்கிய, முக்கியமாக சுண்ணாம்பாலான பூஞ்சணக்கொல்லிகள். நுகர்வோரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய போலி மருந்துகளும் பரவலாக உள்ளன. கள்ளத் தயாரிப்பு மருந்துகளின் காரணமாக உலகெங்கிலும் ஏற்படும் மரணங்கள் திகைப்பூட்டுகிறவையாக இருக்கக்கூடும்.
வீட்டில் பயன்படுத்தக்கூடிய சிறிய மின் சாதனங்களைக் குறித்தும் அதிகரித்துவரும் கவலை ஏற்பட்டுள்ளது. “இந்தப் பொருட்களில் சில, போலியான வியாபார அடையாளப் பெயர்களைத் தாங்கியிருக்கின்றன அல்லது அண்டர்ரைட்டர்ஸ் லபாரட்டரி தராதரங்களுக்கு இசைவாகச் செய்யப்பட்டது என்பதுபோன்ற உரிமைபெற்ற முத்திரைகளைக் கொண்டிருக்கின்றன,” என்பதாக அமெரிக்கன் வே அறிக்கை செய்தது. “ஆனால் அவற்றின் பாதுகாப்புத் தராதரங்களுக்கு இசைவாக அவை செய்யப்படவில்லை, ஆகவே அவை வெடித்து, வீட்டில் தீ விபத்துக்களை ஏற்படுத்தி, முழு அமைப்பையுமே பாதுகாப்பற்றதாக்குகின்றன,” என்று ஒரு பாதுகாப்பு பொறியாளர் கூறினார்.
ஐக்கிய மாகாணங்களிலும் ஐரோப்பாவிலும், விமான போக்குவரத்து நிறுவனங்களும் இதைப் போலவே அஞ்சுகின்றனர். உதாரணமாக, ஜெர்மனியில், விமான போக்குவரத்துத் துறையினர் தங்கள் பொருள் விவரப் பட்டியலில் போலி எஞ்சின் மற்றும் பிரேக் பாகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆய்வுகள், “ஐரோப்பாவிலும், கனடாவிலும், சமீபத்தில் உயிர்சேதம் விளைவித்த ஹெலிகாப்டர் மோதலுக்கு அங்கீகரிக்கப்படாத பாகங்கள் (வால் பாகத்தின் சுழல்தண்டு நட்டுகள்) காரணமாகக் கருதப்பட்ட பிரிட்டிஷ் கூட்டரசிலும் நடத்தப்பட்டு வருகின்றன,” என்று போக்குவரத்து அதிகாரிகள் சொன்னார்கள். “விமானப் பயண பாதுகாப்புக்கு முக்கியமான ஜெட் என்ஜின் பாகங்கள், பிரேக்கின் பாகங்கள், மோசமான தரமுடைய போல்ட்டுகள் மற்றும் இணைவிக்கும் சாதனங்கள், குறைபாடுள்ள எரிபொருள் மற்றும் பறக்கும் அமைப்புமுறை பாகங்கள், ஏற்பளிக்கப்படாத விமானி அறை உபகரணங்கள், பறப்பதைக் கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர் பாகங்கள் ஆகியவற்றின் எண்ணற்ற போலியான சாதனங்களை ஏஜன்டுகள் கைப்பற்றியிருக்கின்றனர்,” என்பதாக ஃப்ளைட் ஸேஃப்டி டைஜஸ்ட் அறிக்கை செய்தது.
1989-ல், நார்வேயிலிருந்து ஜெர்மனி செல்லும் வாடகை விமானம் ஒன்று, 6,600 மீட்டர் உயரத்தில் அதன் மிகத் திறம்பட்ட வேகத்தில் பறந்துகொண்டிருக்கும் நிலையிலிருந்து திடீரென்று ஒரு செங்குத்தான பாய்ச்சலை மேற்கொண்டது. அதன் வால் பகுதி துண்டிக்கப்பட்டு, அந்த விமானத்தை ஒரு பாய்ச்சலுக்குள் அவ்வளவு தீவிரமாகத் தள்ளியதால் அதன் இரண்டு இறகுகளும் உடைந்துபோயின. அதிலிருந்த 55 பேரும் கொல்லப்பட்டனர். மூன்று வருட புலன்விசாரணைக்குப்பின், அதன் வால் பகுதியை உடல் பகுதியுடன் இணைத்துப்பூட்டும் பின்கள் என்றழைக்கப்படும் போல்ட்டுகள் குறைபாடுள்ளவையாக இருந்ததன் காரணமாக அந்த மோதல் ஏற்பட்டதாக நார்வேயைச் சேர்ந்த விமான போக்குவரத்து நிபுணர்கள் கண்டுபிடித்தார்கள். பறத்தலின் மோதல் விசைகளைத் தாக்குப்பிடிக்க முடியாத அளவான மிகவும் பலவீனமான உலோகத்தால் போல்ட்டுகள் உண்டாக்கப்பட்டிருந்ததாக தகைவு ஆய்வுகள் காண்பித்தன. குறைபாடுள்ள இணைத்துப்பூட்டும் பின்கள் கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்டவை—எங்குமுள்ள வானூர்தி பாதுகாப்பு நிபுணர்களால் இது நன்கு அறியப்பட்டதே, ஏனென்றால், வானூர்தி பணியாளர் தொகுதிகள் மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது, அதிகரித்து வரும் பிரச்சினையாக இருக்கிறது.
ஐக்கிய மாகாணங்களின் போக்குவரத்துத் துறையின் பொது ஆய்வாளரை தேசிய தொலைக்காட்சி பேட்டி கண்டபோது அவர் சொன்னார்: “எல்லா விமான கம்பெனிகளும் போலி பாகங்களைப் பெற்றிருக்கின்றன. அவையனைத்துமே அவற்றைக் கொண்டிருக்கின்றன. அவையனைத்துமே பிரச்சினையைக் கொண்டிருக்கின்றன.” “கணக்கிடப்பட்ட இருநூறிலிருந்து முந்நூறு கோடி டாலர் வரையான மதிப்புள்ள பயன்படுத்தமுடியாத பொருட்களை ஒருவேளை அவை அனைத்துமே கொண்டிருக்கலாம்,” என்பதாக விமான போக்குவரத்துத் துறை ஒத்துக்கொள்கிறதென அந்தப் பெண்மணி மேலுமாகத் தெரிவித்தார்.
போலி பாகங்களை உட்படுத்தும் பல்வேறு மறைமுகமான செயல்பாடுகளைக் குறித்து FBI-க்குக் கருத்துத் தெரிவித்திருக்கும் வானூர்தி பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர், போலி பாகங்கள் மெய்யான ஆபத்தைக் குறிப்பதாக அதே பேட்டியில் எச்சரித்தார். “அதன் விளைவாக, அண்மை எதிர்காலத்தில் நாம் ஒரு பெரிய விமான பேரழிவை காணும்படி நிச்சயமாகவே எதிர்பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் சொன்னார்.
தங்களுடைய பேராசை தங்கள் சொந்த தன்னல விருப்பத்தை மற்றவர்களுடைய வாழ்க்கையைவிடவும் மேலாக வைக்கும்படி அனுமதிப்பவர்களுக்கு, பழிவாங்குதலுக்குரிய நாள் சீக்கிரத்தில் வரவிருக்கிறது. பேராசைக்காரர் கடவுளுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டார்கள் என்று கடவுளால் ஏவப்பட்ட அவருடைய வார்த்தை உறுதியாகக் குறிப்பிடுகிறது.—1 கொரிந்தியர் 6:9, 10, NW.
[பக்கம் 9-ன் படங்கள்]
ஆடைகள், நகைகள், ஓவியங்கள், மருந்துகள், விமான பாகங்கள் —மதிப்புள்ள எதுவுமே கள்ளத் தயாரிப்பாளருக்கு லாபகரமானதே
[பக்கம் 10-ன் படம்]
போலியான என்ஜின் பாகங்கள், மோசமான தரமுடைய போல்ட்டுகள், விமானி அறை உபகரணங்கள், கம்ப்யூட்டர் பாகங்கள் ஆகியவையும் மற்ற போலி பாகங்களும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துக்களை உண்டுபண்ணியிருக்கின்றன