சர்ச் ஏன் செல்வாக்கை இழந்து வருகிறது?
“ஒவ்வொரு ஸ்தோயிக்கனும் ஒரு ஸ்தோயிக்கனாக இருந்தான்; ஆனால் கிறிஸ்தவமண்டலத்தில் அந்தக் கிறிஸ்தவன் எங்கே இருக்கிறான்?”
ரால்ஃப் வால்டூ எமர்சன், 19-வது நூற்றாண்டு அமெரிக்க கட்டுரையாளர் மற்றும் புலவர்.
“நான் ஒரு கத்தோலிக்—ஆனால் ஒரு மும்முரமான கத்தோலிக் அல்ல” என்பதாக ஓர் இளம் தாய் கூறினார். “மதத்தை ஒரு பொருட்டாக நான் எண்ணுவதில்லை” என்று ஓர் இளைஞன் கூறுகிறான். அவர்களுடைய குறிப்புகள், ஐரோப்பியர்களின் இளைய தலைமுறையினரின் குறிப்புகளை ஒத்ததாகவே இருக்கின்றன. அவர்களுடைய பெற்றோர்—அல்லது பெரும்பாலும் அவர்களுடைய தாத்தா-பாட்டிமார்—இன்னும் சர்ச்சுக்குச் செல்பவர்களாய் இருந்தபோதிலும், மதத்தின்பேரிலுள்ள விசுவாசம் சந்ததிப் பிளவை இணைக்கவில்லை.
ஐரோப்பியர்களின் தலைமுறை தலைமுறையாக மதித்துப் போற்றப்பட்ட மத சம்பந்தமான பழக்க வழக்கங்கள் ஏன் கைவிடப்பட்டுவிட்டன?
பயம் இனிமேலும் ஓர் அம்சமல்ல
பல நூற்றாண்டுகளாக, நரகம் அல்லது உத்தரிக்கும் ஸ்தலம் பற்றிய பயம் ஐரோப்பியர்களின்மீது ஒரு பலமான செல்வாக்கைச் செலுத்தியது. அணைக்கமுடியாத வகையில் எரியும் ஒரு நரகத்தைப் பற்றிய தீப்பொறி பறக்கும் பிரசங்கங்களும், தீட்டப்பட்ட சர்ச் ஓவியங்களும், ஒழுங்காகச் சர்ச்சுக்குச் செல்வதன்மூலமாக மட்டுமே தாங்கள் தண்டிக்கப்படாமல் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று பாமர மக்களை நினைக்கத் தூண்டியது. மேலும், “‘ஞாயிற்றுக்கிழமைகளிலும் புனித தினங்களிலும் தெய்வீக பொது வழிபாட்டு முறையில் பங்கெடுக்க’ விசுவாசிகளை சர்ச் கடமைப்படுத்துகிறது” என்று கேட்டகிஸம் ஆஃப் தி கேத்தலிக் சர்ச் கூறுகிறது.a கிராமப்புறங்களில் சமூக அந்தஸ்து சம்பந்தமான அழுத்தங்களும் கணிசமான அளவு இருந்தன—ஒவ்வொருவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்குச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனால் காலங்கள் மாறிவிட்டன. தாங்கள் விரும்புவதையெல்லாம் செய்வதற்கான சுதந்திரம் தங்களுக்கு இருப்பதாக மக்கள் இப்போது உணருகின்றனர். பயம் என்பது இனிமேலும் ஓர் அம்சமாயில்லை. பெரும்பாலான ஐரோப்பிய கத்தோலிக்கர்களுக்கு எவ்விதத்திலும் நரகத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லாதிருப்பதால் நரகம் அமைதியாக தரை விரிப்புக்கு அடியில் திருப்பிப் போடப்பட்டுள்ளது.
நடைமுறையில், ஞாயிறு பூசையைத் தவறவிடும் “பாவம்” மிக வினைமையான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஸ்பெய்னிலுள்ள மாட்ரிட்டைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க பாதிரியான டிர்ஸோ வாகெர்ரோ ஏற்றுக்கொள்ளுகிறார்: “ஒரு கிறிஸ்தவர் [கத்தோலிக்கர்] ஞாயிற்றுக்கிழமையில் பூசைக்கு வராதிருந்தால், தான் கடவுளோடும், தன் சகோதரர்களோடும் பேச்சுத்தொடர்பு கொள்ளும் இந்தக் கணத்தை அவர் இழந்திருப்பதற்காக நாம் உண்மையிலேயே வருத்தப்படுகிறோம், ஆனால் அவர் ஒரு பாவத்தைச் செய்திருப்பதற்காக நாம் வருத்தப்படுவதில்லை. அது இரண்டாம் பட்சமே.”
ஆகவே பயம் இனிமேலும் பக்தியை படிப்படியாக அறிவுறுத்துவதாயில்லை. ஒழுக்கநெறி சம்பந்தப்பட்ட விஷயத்தில், சர்ச் மற்றும் அதன் தலைவர்களின் அதிகாரத்தைப் பற்றியென்ன—அவர்கள் தங்கள் மந்தைகளின் உண்மைப்பற்றுறுதியின்மீது அதிகாரம் செலுத்த முடியுமா?
அதிகாரத்தின் ஓர் இடர்ப்பாடு
மதம் சார்ந்த பயம் மறைந்து விட்டதனால் சர்ச்சுக்குச் செல்பவர்களின் ஒழுக்க சம்பந்தமான நிலைநிற்கையிலும் குறிப்பிடத்தக்க வகையில் சீர்கேடு அடையப்பெற்றுள்ளது. “பல நூற்றாண்டுகளாக . . . ஒழுக்கநெறி சார்ந்தவற்றை வெறுமனே கற்பிக்கும் மிகப்பல ஆசிரியர்களையும், ஒழுக்க தராதரத்தைப் பின்பற்றும் மிகக் குறைந்தளவு ஆசிரியர்களையும் நாம் உடையவர்களாய் இருந்திருக்கிறோம்” என்பதாக இத்தாலிய வரலாற்று வல்லுநர் ஜோர்டானோ புரூனோ குவேரி குறை கூறுகிறார். ஒழுக்க தராதரத்தைப் பின்பற்றுவதில் முன்மாதிரி வகிப்பதில் குறைபாடு இருந்ததானது, கிறிஸ்தவமண்டலத்தைப் பாழாக்கிய இரு உலகப் போர்களால் அம்பலமாக்கப்பட்டது. விசுவாசிகள் இரத்தம் சிந்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு ஐரோப்பிய சர்ச்சுகள் வலிமையற்றவையாய் இருந்தன. அதைவிட மோசமானது, போர் முயற்சியில்—இரு தரப்பிலும்—சர்ச்சுகள் சுறுசுறுப்பாகப் பங்கேற்றன.
“கிறிஸ்தவப் பிரிவுகளுக்குள்ளேயே ஏற்பட்ட ஓர் உள்நாட்டுப் போராயிருந்த முதல் உலகப் போர், கிறிஸ்தவத்துக்கு சோகத்தையும் வெட்கத்தையும் ஏற்படுத்திய ஒரு காலகட்டத்தைத் திறந்து வைத்தது” என்பதாக வரலாற்று வல்லுநரான பால் ஜான்சன் கண்டுணருகிறார். “கிறிஸ்தவ விசுவாசிகளின் ஒழுக்கநெறி சம்பந்தமான நிலைநிற்கையின்மீது முதல் உலகப் போரைவிட இரண்டாம் உலகப் போர் இன்னும் அதிக விசனகரமான தாக்குதல்களை அனுபவிக்கச்செய்தது. அது சீர்திருத்தத்தின் மூலத்தலமாகிய ஜெர்மனியிலுள்ள சர்ச்சுகளின் வெறுமையையும், போப்பாண்டவரின் நகரத்தினுடைய கோழைத்தனம், சுயநலம் ஆகியவற்றையும் வெளிப்படுத்திக் காட்டியது.”
ஹிட்லரின் நாசி ஆட்சியுடனும், இத்தாலியில் முசோலினியின் பாசிஸ அரசாங்கங்களுடனும், ஸ்பெய்னில் தலைவர் ஃபிராங்கோவுடனும் செய்யப்பட்ட வத்திகனின் ஒப்பந்தங்களும் சர்ச்சின் ஒழுக்கநெறி சம்பந்தப்பட்ட அதிகாரத்தைச் சேதப்படுத்தின. காலப்போக்கில், அத்தகைய அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கான மத சம்பந்தமான விலையானது நம்பத்தக்கத்தன்மையை இழந்ததே ஆகும்.
சர்ச்சும் அரசாங்கமும்—முடிச்சை அவிழ்த்தல்
20-ம் நூற்றாண்டின்போது, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் சர்ச்சையும் அரசாங்கத்தையும் இணைக்கும் முடிச்சை முடிவாக அவிழ்த்துள்ளன. உண்மையில், ஐரோப்பாவின் எந்தவொரு பெரிய நாடும் இப்போது ரோமன் கத்தோலிக்க மதத்தை அதன் அதிகாரப்பூர்வ மதமாக பாவிப்பதில்லை.
செல்வாக்கு மிகுந்த சர்ச்சுகள் இன்னும் அரசாங்கத்தால் உதவியளிக்கப்பட்டாலும், அவை முன்பு செலுத்திவந்த அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டன. இப்புதிய உண்மையை எல்லா சர்ச் ஆட்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. “மனித ‘அதிகார’ மேடையில்லாமல், தங்களது பாதிரித் தொழிலுக்குரிய கடமையைச் செய்ய முடியாது என்று [கத்தோலிக்க] சர்ச் தலைவர்கள்—அவர்களில் பெரும்பாலானோர் மிக உள்ளார்ந்த விதத்தில்—நினைக்கிறார்கள்” என்பதாக பிரபல ஸ்பானிய ஜேஸ்யுட் ஹோஸே மாரியா டியெஸாலெக்ரீயா நம்புகிறார்.
ஆனால் இந்த “மனித ‘அதிகார’ மேடை” தகர்த்தெறியப்பட்டு விட்டது. 1975 வரை ஒரு “தேசிய-கத்தோலிக்” அரசாங்கத்தை உடையதாயிருந்த ஸ்பெய்ன், இச்சூழ்நிலைக்கு உதாரணமாயுள்ளது. சமீப ஆண்டுகளில் ஸ்பானிய குருக்களாட்சி, சர்ச்சின் நிதி சம்பந்தமாக சோஷலிஸ்ட் அரசாங்கத்தோடு தொடர்ச்சியான ரீதியில் சண்டையிட்டிருக்கிறது. ஸ்பானிய அரசாங்கம் சர்ச்சுக்கு போதியளவு நிதி உதவி அளிக்காததால் “ஒரு கத்தோலிக்கராக துன்புறுத்தப்படுவதாய்” தான் உணருவதாக ஸ்பெய்னின் டெரவலைச் சேர்ந்த பிஷப் சமீபத்தில் தன் அங்கத்தினர்களிடம் முறையீடு செய்தார்.
“மனசாட்சி மற்றும் ஒழுக்கநெறியின் கடும் இடர்ப்பாடு” ஒன்று ஸ்பானிய சமுதாயத்தை பாதித்துக் கொண்டிருப்பதாக 1990-ல் ஸ்பானிய பிஷப்புகள் அறிவித்தனர். இந்த ‘ஒழுக்கநெறி இடர்ப்பாட்டிற்கு’ யார் காரணம் என்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்? “பொது நிர்வாகத்தால் [ஸ்பானிய அரசாங்கம்] அடிக்கடி முன்னேற்றுவிக்கப்படும் தெளிவற்ற மனநிலை” முக்கிய காரணங்களுள் ஒன்றாயிருப்பதாக பிஷப்புகள் உறுதியுடன் கூறினர். தெளிவாகவே, அரசாங்கம் கத்தோலிக்கக் கொள்கைகளை முன்னேற்றுவிக்க வேண்டும் என்றும், நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் பிஷப்புகள் எதிர்பார்க்கின்றனர்.
பாதிரிகள் தாங்கள் போதிப்பதை செய்கிறார்களா?
கத்தோலிக்க சர்ச்சிடம் உள்ள ஏராளமான செல்வம், வளம் குன்றிய வட்டாரங்களில் வேலை செய்யும் குருக்களை எப்போதுமே தடுமாற்றமடையச் செய்திருக்கின்றன. வத்திகன் வங்கி, “போருக்குப் பின்னான இத்தாலியில் நடந்த படுமோசமான நிதி சம்பந்தமான அவதூறு” என்று டைம் பத்திரிகையால் குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டபோது அது இன்னும் அதிகமாக தடுமாற்றமடையச் செய்வதாய் இருந்தது. 1987-ல், ஒரு தலைமை பிஷப்பையும் மற்ற இரண்டு வத்திகன் வங்கி அதிகாரிகளையும் கைது செய்வதற்கான ஆணைப்பத்திரங்கள் இத்தாலிய மாஜிஸ்ட்ரேட்டுகளால் வெளியிடப்பட்டன. என்றபோதிலும், வத்திகனின் விசேஷ அரசாதிகார தகுநிலையால், குற்றம் சாட்டப்பட்ட சர்ச் அங்கத்தினர்கள் கைது செய்யப்படவில்லை. தவறு ஏதும் செய்யப்படவில்லை என்பதை வத்திகன் வங்கி வலியுறுத்தியது, ஆனால் அந்த சர்ச் தான் போதிப்பது எதுவோ அதைச் செய்யவில்லை என்ற பதிவை நீக்கத் தவறியது.—மத்தேயு 23:3-ஐ ஒப்பிடுக.
இன சம்பந்தமான தவறான நடத்தையைப் பற்றி செய்தித்தாள் விளம்பரப்படுத்தியதானது இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணத்துறவை ஆதரித்ததற்கு பேர்போனவராயிருந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பிஷப், மே 1992-ல் டயோசிஸிடம் “தன்னை மன்னிக்கும்படியும்,” “தனக்காக ஜெபிக்கும்படியும்” கேட்டுக்கொண்டார். அவர் 17 வயதான ஒரு பையனுக்குத் தந்தை என்றும், அவனது படிப்பிற்காக சர்ச்சின் நிதிகளை பயன்படுத்தியிருந்தார் என்றும் விஷயம் வெளியானபோது ராஜிநாமா செய்யும்படி வற்புறுத்தப்பட்டார். ஒரு மாதத்துக்கு முன்பு, ஒரு கத்தோலிக்க பாதிரி ஜெர்மன் தொலைக்காட்சியில் தன் “தோழியோடும்” அவர்களுடைய இரு குழந்தைகளோடும் தோன்றினார். பல பாதிரிகள் இரகசியமாக வைத்திருக்கும் இந்தத் தவறான பாலுறவு பற்றிய விஷயத்தின்மீது “ஓர் உரையாடலை ஆரம்பிப்பதற்கு” தான் விரும்புவதாக அவர் கூறினார்.
அந்த அவதூறுகள் அவற்றின் தடயத்தை தவிர்க்கமுடியாமல் விட்டுச் செல்கின்றன. வரலாற்று வல்லுநரான கெர்ரி, இலி இட்டாலியான்னி சோடோ லா க்யேஜா (சர்ச்சிற்குட்பட்ட இத்தாலியர்கள்) என்ற தன் புத்தகத்தில், “பல நூற்றாண்டுகளாக இந்த சர்ச் இத்தாலியர்களின் ஒழுக்கநெறி சார்ந்த உணர்வுகளைக் குற்றப்படுத்தியுள்ளது” என்று உறுதியுடன் கூறுகிறார். அதன் ஒரு விளைவானது, “விசுவாசிகள் உட்பட, எங்கும் பரவியுள்ள மதகுருத்துவம் துறத்தலின் அதிகரிப்பு” என்பதாக அவர் கூறுகிறார். கோபமுறும் கத்தோலிக்கர்கள் அப்போஸ்தலன் பவுல் ரோமர்களைக் கேட்டவிதமாக அதே கேள்விகளைத் தங்கள் மதகுருவிடம் கேட்கும்படி தூண்டப்படலாம்: “உதாரணமாக, திருட்டிற்கு எதிராக நீ பிரசங்கிக்கிறாய், ஆனால் உன் நேர்மையைக் குறித்தே நீ நிச்சயமாயிருக்கிறாயா? விபசாரம் செய்வதை நீ கண்டனம் செய்கிறாய், ஆனால் உன் புனிதத்தன்மையைக் குறித்தே நீ நிச்சயமாய் இருக்கிறாயா?”—ரோமர் 2:21, 22, பிலிப்ஸ்.
குருக்களுக்கும் பாமரர்களுக்கும் இடையேயான அகன்று ஆழ்ந்த பிளவு
அவ்வளவாய் வெளிக்குத் தெரியாத ஆனால் அதிக பலவீனப்படுத்தும் சாத்தியமுள்ள பிரச்சினையானது, குருக்களுக்கும் பாமரர்களுக்கும் இடையே உள்ள அகன்று ஆழ்ந்த பிளவாகும். பிஷப்புகளிடமிருந்து வரும் ஆன்மீகக் கடிதங்கள் சர்ச் அங்கத்தினர்களை அறிவுறுத்துவதைக் காட்டிலும் எரிச்சலடையச் செய்வதாய்த் தோன்றுகின்றன. ஒரு ஸ்பானிய சுற்றாய்வில், பேட்டி காணப்பட்டவர்களில் 28 சதவீதத்தினர் மட்டுமே “பிஷப்புகளின் கூற்றுகளை ஒத்துக்கொண்டனர்.” அதே எண்ணிக்கையினர் “முற்றிலும் அசட்டை மனப்பான்மை கொண்டிருந்தனர்,” மேலும் 18 சதவீதத்தினர் “அவர்கள் [பிஷப்புகள்] எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்வதில்லை” என்று கூறினர். ஸ்பெய்னைச் சேர்ந்த மெஜோர்க்காவின் தலைமை பிஷப் யூபெட்டா ஒத்துக்கொண்டார்: “கிறிஸ்தவத்துக்குப் புறம்பே செல்லும் செய்முறையில் எங்கள் பொறுப்பின் பங்கையும் பிஷப்புகளாகிய நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்—அது உண்மையாயிருக்கிறது.”
ஒரு தெளிவான வேதப்பூர்வமான செய்தி அளிக்கப்படாதிருப்பது பாமரர்களை இன்னும் பிரித்து வைக்கிறது. ஆவிக்குரிய விஷயங்களின்மீது அவர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தும்படி பெரும்பாலான சர்ச் அங்கத்தினர்கள் முன்னுரிமை அளித்தபோதிலும், “[பிரான்ஸிலுள்ள] பல குருக்கள் ‘தங்கள் கையிலுள்ள விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் வகையில்’ அரசியல் நடவடிக்கையில் பங்கெடுப்பதைத் தெரிவு செய்துள்ளனர்” என்று கேத்தலிக் ஹெரால்ட் பத்திரிகை கூறுகிறது. இத்தாலிய மதகுருவும் சமூகவியலாளருமான சில்வான்னோ பர்காலாஸ்ஸி ஏற்றுக் கொள்ளுகிறார்: “ஒருவேளை அவர்கள் [இளைஞர்கள்] எங்களுடைய கெட்ட முன்மாதிரியால் கடவுளிடமிருந்து விலகிச் சென்றிருக்கலாம். இணங்கிப்போதல், மதம் மற்றும் வர்த்தகம், சுயநலம் மற்றும் கலப்படம் ஆகியவற்றின் ஒரு ‘கலவையை’ அவர்களுக்கு நாங்கள் அளித்திருக்கிறோம்.” குருக்கள் தங்களது சமூகத் தகுநிலையை இழந்துகொண்டிருக்கின்றனர் என்பதில் ஆச்சரியமில்லை. “நான் ஒரு கத்தோலிக்கன், ஆனால் குருக்களின்மீது எனக்கு நம்பிக்கையில்லை” என்ற கூற்றுதான் ஸ்பானிய கத்தோலிக்கர்களிடமிருந்து பொதுவாக கேட்கப்படுகிறது.
கத்தோலிக்கர்களில் சிலர், குருக்களை நம்புவதைக் கடினமாக உணருகின்றனர், மற்றவர்கள் சர்ச்சின் கொள்கைகளைப் பற்றி கடும் சந்தேகங்களை உடையவர்களாயிருக்கின்றனர்—விசேஷமாக நியாயமற்றதாயும் நடைமுறைக்கு ஒவ்வாததாயும் தாங்கள் எண்ணும் அந்தப் போதனைகளைப் பற்றி சந்தேகங்களை உடையவர்களாயிருக்கின்றனர்.
புரியாத கொள்கைகள்
வேதனை தரும் ஓர் உதாரணமானது, நரகம் என்ற பொருளின்மீது கத்தோலிக்கர்களின் அதிகாரப்பூர்வ போதனையாகும். அந்த கேட்டகிஸம் ஆஃப் தி கேத்தலிக் சர்ச் கூறுகிறது: “நரகம் இருப்பதையும் அதன் முடிவில்லாத தன்மையையும் சர்ச்சின் போதனை உறுதிசெய்கிறது.” இருந்தபோதிலும், பிரெஞ்சு கத்தோலிக்கர்களில் கால் பகுதியினரும் ஸ்பானிய கத்தோலிக்கர்களில் மூன்றில் ஒரு பகுதியினரும் மட்டுமே நரகம் இருப்பதை நம்புவதாக சமீபத்திய சுற்றாய்வுகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
அதைப்போலவே, ஒழுக்கநெறி சார்ந்த விவாதங்களைப் பொறுத்தமட்டில், ஐரோப்பியர்கள் “உங்களுக்கு நலமாகத் தோன்றுவதைச் செய்யுங்கள் என்ற கொள்கையுடைய கிறிஸ்தவர்களாக” இருக்க விரும்புகின்றனர். ஸ்வீடனைச் சேர்ந்த மிமீ என்ற ஓர் இளம் பெண், திருமணத்துக்குப் புறம்பே குழந்தைகள் பெறுவது போன்ற ஒழுக்கநெறி சார்ந்த கேள்விகளெல்லாம், “ஒருவர் தானாகவே முடிவு செய்ய வேண்டிய ஏதோவொன்று” என்று நம்புகிறாள். பெரும்பாலான பிரெஞ்சு கத்தோலிக்கர்கள் அவளைப் போலவே கூறுவர். வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எதிர்ப்படுகையில், தாங்கள் சர்ச்சின் வழிநடத்துதலைக் காட்டிலும் தங்கள் மனசாட்சியின் வழிநடத்துதலையே பின்பற்றுவர் என்பதாக 80 சதவீதத்தினர் கூறினர்.
முற்காலத்தில் கருத்து வேறுபாடு ஏதேனும் இருந்தால் அதை அடக்குவதற்கு, சர்ச்சின் அதிகாரம் போதுமானதாய் இருந்தது. வத்திகனின் நோக்குநிலையிலிருந்து, அதிகம் மாற்றப்படவில்லை. “வேதவசனத்தைப் புரிந்துகொள்ளுவதற்காக சொல்லப்படும் எல்லா விஷயமும் முடிவாக சர்ச்சின் தீர்மானத்திற்குட்பட்டது” என்று அந்த கேட்டகிஸம் பிடிவாதமாகக் கூறுகிறது. அந்த அதிகாரப்பூர்வ அணுகுமுறை, குறைந்த ஆதரவைத்தான் பெறுகிறது. “அதிகாரத்தைப் பற்றிய விஷயம் தடுக்கப்படாமல் ஆட்சி செய்கிறது” என்று அரசியல் கல்விகளின் ஒரு ஸ்பானிய பேராசிரியரான அன்ட்டோனியோ எலோர்ஸா குறை கூறுகிறார். “வரலாற்றோடு ஒப்பிடுகையில், தன் பாரம்பரியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன்மூலம் அந்த சர்ச் ஓர் அரணான கோபுரத்தைக் கட்டுவதற்கு முனைகிறது.” அந்த “அரணான கோபுரத்துக்கு” வெளியே, அந்த சர்ச்சின் செல்வாக்கும் அதன் அதிகாரமும் மறைந்துகொண்டே இருக்கிறது.
ஆவிக்குரிய வீழ்ச்சியைத் தவிர, சமூக அளவில் நடைபெறும் காரியங்களுக்கான காரணங்கள், மத சம்பந்தமான அசட்டை மனப்பான்மையை ஏற்படுத்துவதில் மற்றொரு முக்கிய அம்சமாய் உள்ளன. நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் சமுதாயம், ஏராளமான பொழுதுபோக்கையும் இன்பக்கேளிக்கைகளுக்கான சந்தர்ப்பங்களையும் அளிக்கிறது—ஆகவே, பெரும்பாலான ஐரோப்பியர்கள் அவற்றை ருசிப்பதற்கான மனமும் வழியும் உடையவர்களாயிருக்கின்றனர். ஒப்பிட்டுப் பார்க்கையில், சர்ச்சுக்குச் செல்வது, ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுதை மந்தமாய்ச் செலவிடுவதுபோல் தோன்றுகிறது. அதோடு, சர்ச்சில் அளிக்கப்படும் பிரசங்கமுறைகள் மக்களின் ஆவிக்குரிய தேவைகளைப் புரிந்து, அவற்றிற்குத் தகுந்தவாறு அளிக்கப்படுவதில்லை என்பதாகவே தோன்றுகிறது.
ஐரோப்பிய மந்தையின்மீது பாரம்பரிய மதம் கொண்டிருந்த பிடிப்பை மீண்டும் பெறமுடிவதுபோல் தோன்றுவதில்லை. மதம் என்பது கடந்தகாலத்தில் இருந்துவந்த ஏதோ ஒரு வலிமையா—டைனோசாரைப் போல மறைந்துபோவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளதா?
[அடிக்குறிப்பு]
a கேட்டகிஸம் ஆஃப் தி கேத்தலிக் சர்ச் முதலாவதாக 1992-ல் வெளியிடப்பட்டது, அது உலக முழுவதிலும் உள்ள கத்தோலிக்கர்களுக்கான கொள்கை சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ கூற்றாயிருக்கும் நோக்கத்தை உடையதாய் இருந்தது. அதன் முன்னுரையில், “கத்தோலிக்க கொள்கைகளைப் போதிப்பதற்கு நிச்சயமான மற்றும் நம்பத்தக்க அடிப்படைப் பாடம்” என்பதாக போப் ஜான் பால் II அதை விவரித்தார். அத்தகைய சர்வதேச கத்தோலிக்க வினா-விடை போதனாமுறை ஒன்று கடைசியாக வெளியிடப்பட்டது 1566-ல் ஆகும்.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
நிதானித்துச் செய்வது பற்றிய கருத்து கிறிஸ்தவமண்டலத்தின் முக்கிய தேசத்தைக் கைப்பற்றிவிட்டது
[பக்கம் 7-ன் படம்]
ஒரு பிரசங்கம் அல்லது ஓர் உல்லாசம் இவற்றில் ஒன்றைத் தெரிவு செய்யும்படி எதிர்ப்படுகையில், பெரும்பாலான ஐரோப்பியர்கள் தயக்கமின்றி, உல்லாசமாய்க் கடற்கரைக்குச் செல்வதையே தெரிவு செய்கின்றனர்