பைபிளா அல்லது பாரம்பரியமா?—உண்மை மனமுள்ள கத்தோலிக்கருக்கு ஒரு மனக்குழப்பம்
கத்தோலிக்க தேசங்களில், சமீப ஆண்டுகளிலே பைபிள் அதிகளவில் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, ஸ்பெயினில், 500 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததைவிட கடந்த 50 ஆண்டுகளில் வேத வசனங்கள் காஸ்டீலியன் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு ஏராளமாக பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அதுபோன்று பிரெஞ்சு கத்தோலிக்கர்கள் சர்ச் அங்கீகரித்திருக்கும் மூல மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட அநேக பைபிள் மொழிபெயர்ப்புகளைக் உடையவர்களாயிருக்கின்றனர்.
எனவே இன்று கத்தோலிக்கர் ஒருவர் பைபிளை படிக்க விரும்பினால், அப்படிச் செய்யலாம். ஆனால் விளக்கமான குறிப்புரைகளைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பைதான் அவன் வாசிக்க வேண்டும். ஆனால் கத்தோலிக்க சர்ச் ஏன் இப்படிப்பட்ட ஓர் ஏற்பாட்டை செய்கிறது? ஏனெனில் அது தெய்வீக வெளிப்படுத்துதலின் மற்றொரு ஊற்று மூலத்தைக் குறித்து உரிமைப்பாராட்டுகிறது—பாரம்பரியம்—ஒன்றுக்கொன்று இசைந்து செல்லுதலுக்கு அவ்வகையான குறிப்புரைகள் தேவையாக இருக்கிறது. இந்த இரண்டு ஊற்றுமூலங்களில்—பைபிளா அல்லது பாரம்பரியமா—எது சர்ச்சால் முக்கியமானதாக கருதப்படுகிறது?
அனுமதிக்கப்படுகிறது ஆனால் அவசியமற்றது
பரிசுத்த வேதாகமத்தின் பேரில் ஒரு கத்தோலிக்க குறிப்புரை என்ற புத்தகம் பின்வரும் கேள்வியைக் கேட்கிறது: “இரட்சிப்பைப் பெற பைபிள் வாசிப்பு அவசியமா?” அதற்கு விடையாக அது விளக்குவதாவது: “உண்மை மனமுள்ள கத்தோலிக்கர் அனைவரும்—ஒவ்வொரு ஆணும், பெண்ணும் பிள்ளையும்—தனிப்பட்ட விதமாக பைபிளை படிக்க வேண்டும் என்ற எந்த ஒரு சர்வலோக தேவையும் கிடையாது, தெய்வீக அல்லது அப்போஸ்தல ஆணையும் கிடையாது.”
எனவே கத்தோலிக்க சர்ச் அதன் அங்கத்தினர்களை பரிசுத்த வேதாகமத்தை படிக்க அனுமதித்திருக்கிறபோதிலும், “அரை மணி நேரமாவது வாசிப்பு தொடர்ந்தால்” என்ற முழுமையான ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், அவ்வகையான பைபிள் வாசிப்பை இன்றியமையாததாக அது கருதவில்லை.a அது ஏன் என்று, பிரெஞ்சு கத்தோலிக்க அகராதி டி லா பைபிள் குறிப்பிடுவதாவது: “பாரம்பரியம்தான் விசுவாசத்தைக் குறித்த எல்லா உபதேசமும் மனிதவர்க்கத்தை சென்றெட்டியிருக்கும் ஒரு பொது வழிமுறையாக இருந்திருக்கிறது. புதிய ஏற்பாடு வசனங்களின் உபயோகம் பின்பு வந்தது. அவை முழு விசுவாசத்தின் சேர்மானமாக இல்லை, அவற்றின் உபயோகம் அவசியமற்றது.”
பைபிளுக்கு மேலாக பாரம்பரியம்
கத்தோலிக்கர் பைபிளை படிப்பது அவசியமான ஒரு காரியமல்ல. அவர்கள் அவ்வாறே வாசித்தாலுங்கூட அது தங்களுடைய பாரம்பரியத்திற்குப் பின் இரண்டாவது இடத்தைத்தான் எடுத்துக்கொள்கிறது. எழுதப்பட்ட வார்த்தையைப் பெறுவதற்கு முன்பு பூர்வ கிறிஸ்தவர்கள் வாய்வழியாய்க் கடத்தப்பட்ட பாரம்பரியத்தையே சார்ந்திருந்தனர், எனவே சர்ச் பாதுகாத்து வந்திருக்கும் பாரம்பரியத்தின் வெளிச்சத்தில் தான் வேத வசனம் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று கத்தோலிக்க சர்ச் உரிமைப்பாராட்டுகிறது.
இந்த நோக்கத்தை உறுதி செய்யும் விதமாக, பிரெஞ்சு பேசும் கத்தோலிக்கர்கள் பைபிளை படிக்க உதவி செய்ய அமைக்கப்பட்டிருக்கும் ஒரு புத்தகம் பின்வருமாறு கூறுகிறது: “வேத வசனங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றிடும் தெய்வீக வெளிப்படுத்துதல், உண்மையுள்ள ஒரு சமுதாயத்திற்கு, சர்ச்சுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது பைபிள், பாரம்பரியம் சர்ச் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள உறவைக் குறித்து ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது. . . . அப்பொழுது கொடுக்கப்பட்டது [வசனங்களிலுள்ள] இந்தக் கூடுதலான வெளிச்சம், பாரம்பரியத்தின் பொக்கிஷத்துடன் இணைந்து முழுமையாக்குகிறது. . . . எனவே வேதவசனங்கள் முற்றிலும் பாரம்பரியத்தின் மீதே சார்ந்திருக்கிறது.”—Initiation Biblique, பக்கங்கள் 963, 971. தடித்த எழுத்துகள் எங்களுடையது.
“பாரம்பரியம் வேதவசனங்களுக்கு மேலாக, அதற்கு முன் செல்லுகிறது, அதை மூடிவிடுகிறது, அதோடு சேர்ந்து செல்கிறது, அதையும் மிஞ்சி செல்கிறது,” என்று உண்மை மனதுள்ள கத்தோலிக்க பேராசிரியரால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் இப்படியாக வாசிக்கும்போது அவனுக்கு பைபிளில் எவ்வளவு நம்பிக்கை ஏற்படும்?b “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய வார்த்தை என்று ஏற்றுக்கொள்கிறது. அதே சமயத்தில் வேத வசனங்களுக்கு மேலாக எழுதப்படாத கடவுளுடைய வார்த்தை ஒன்று இருக்கிறது என்றும் உரிமைபாராட்டுகிறது” என்று ஒரு கத்தோலிக்க அகராதியில் வாசிக்கும்போது அவர் என்ன நினைப்பார்?
பைபிள் வாசிக்கும் கத்தோலிக்கர்களுக்கு இருக்கும் மனக்குழப்பம்
பல நூற்றாண்டுகளாக, கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண ஆள் சர்ச்சின் போதனையைக் கேள்வி கேட்காமலேயே நம்பி வந்தான், ஏனென்றால் சர்ச் போதனைகளின் உண்மைத் தன்மையை அளந்து பார்ப்பதற்கு பாமர மனிதனிடம் அளவுகோல் இல்லாமலிருந்தது. அநேக கத்தோலிக்கர்கள் தங்கள் நம்பிக்கைகளை மத போதனை வகுப்புகளில் மனப்பாடமாகக் கற்றுக்கொள்கிறார்கள். கத்தோலிக்க மதத்தை கற்றுக்கொடுப்பவர் அல்லது அவர்களுடைய பாதிரியிடம் புரிந்துகொள்ள கடினமாயிருக்கும் கோட்பாடுகளாகிய திரித்துவம் அல்லது மரியாள் கருதரிப்பின் புனிதத் தன்மை போன்ற கோட்பாடுகளை விளக்கும்படி கேட்டால் அதற்குக் கிடைக்கும் விடை: “அது ஒரு தேவ ரகசியம்” என்று சொல்லிவிடுகின்றனர்.
இரண்டாவது வாட்டிகன் குழு காரியங்களை மாற்றியது. ரோமன் கத்தோலிக்க சர்ச் நவீன மயமாவதை மேற்கொண்டது, இருதயப்பூர்வமாக தேடிக் கொண்டிருக்கும் கத்தோலிக்கர்களுக்கு வழியை திறந்தது. வத்திகன் II கூடுதலாக “தகுந்த மற்றும் சரியான பைபிள் மொழிபெயர்ப்புகளை” வெளியிடுவதற்கு பச்சை விளக்கு காட்டியது, மேலும் கத்தோலிக்க மேற்றிராணியர்கள் “தெய்வீக புத்தகங்களை தகுந்த விதத்தில் பயன்படுத்துவதற்குரிய அறிவுரையை அவர்கள் கொடுக்கும்படி ஒப்படைத்தது.” எனவே நல்ல அந்தஸ்துடைய கத்தோலிக்கர்கள், தற்சமயத்தில் பைபிளை பெற்று, அதை வாசித்து, அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட காரியங்களை தாங்கள் வாசித்தவற்றோடு ஒப்பிடும் நிலையிலிருந்தார்கள்.
என்றபோதிலும், இந்த முக்கியமான மாற்றம் பிரச்னைகளை உண்டுபண்ணாமல் இருந்ததில்லை. சர்ச்சின் சமய கோட்பாடுகளில் அநேகம் பைபிளில் இல்லை என்பதை கத்தோலிக்கர்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அவற்றில் சில மரியாள் வணக்கம், “அர்ச்சியசிஷ்டர்களிடம்” அல்லது “புனிதர்களிடம்” செய்யப்படும் ஜெபங்கள், நினைவுப்பொருட்களை பூஜித்தல், பாவ அறிக்கை, உத்தரிக்கும் ஸ்தலம் மற்றும் ‘லிம்போ’ அல்லது நரக வட்டம் ஆகியவை.
மேற்கூறப்பட்ட ‘லிம்போ’வைக் குறித்து ஒரு கத்தோலிக்க அகராதி பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “பாவம் செய்யாதவர்களும் நரகத்தில் வாதிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்து வந்ததது. இதிலிருந்து வெளியேறுவதற்காக குருமார்கள் வெவ்வேறு போதனைகளை அமலாக்க வேண்டியதாயிருந்தது.“ இவற்றில் லிம்போ அல்லது நரக வட்டம் நம்பிக்கையும் ஒன்று.
என்றபோதிலும், மரித்தோர் கல்லறையில் நித்திரையிலிருப்பதாகவும், உயிர்த்தெழுப்பப்படுவதற்கு காத்துக்கொண்டிருப்பதாகவும் பைபிள் விளக்குகிறது. (பிரசங்கி 9:5, 10; யோவான் 5:28, 29) அழியாத ஆத்துமா ஒன்று இல்லாததால் நரக வாதிப்பு இருக்க முடியாது! அந்த மதநிலையிலிருந்து வெளியேறுவதற்காக இப்படிப்பட்ட லிம்போ அல்லது நரக வட்டம் போதனையைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. பைபிளை வாசிக்கும் கத்தோலிக்கர்கள் எதிர்படும் மனக்குழப்ப நிலைமைகளில் இது ஒரு உதாரணம் மட்டுமே. மனிதன் ஏற்படுத்திய பாரம்பரியங்களையா அல்லது பைபிளையா? அவர்கள் எதை நம்ப வேண்டும்?
கத்தோலிக்க சர்ச் எதிர்ப்படும் ஒரு போராட்டம்
பிரச்னை அதைவிட ஆழமாக இருக்கிறது. தனிப்பட்ட கத்தோலிக்கர் மேலே சொல்லப்பட்ட மனக்குழப்பத்தை எதிர்படுகையில் ஒரு பாதிரியார் பின்வருமாறு சொல்லி காரியத்தை முடித்துவிடக்கூடும்: “இது ஒரு பிரச்னை கிடையாது. பைபிளிலிருக்கும் வெளிப்படுத்துதல் பாரம்பரிய ரீதியில் முடிக்கப்பட்டிருக்கிறது. சர்ச்சின் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.’ என்றாலும் காரியங்கள் அவ்வளவு சுலபமானதல்ல.
பாரிஸிலிருக்கும் கத்தோலிக்க ஜெசுவிட் பேராசிரியராகிய பால் ஹென்ரி பின்வருமாறு எழுதினார்: “வாழ்க்கைக்கு, வணக்கத்திற்கு, ஒழுக்கத்திற்கு, மற்றும் சர்ச்சின் இறைமை நூல் கோட்பாட்டிற்கு வேதவசனங்கள் [அதிகாரப்பூர்வமான ஒரு தராதரத்தை ஸ்தாபிக்கிறது] கடவுளால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அல்லது விரும்பப்படும் எல்லாமே வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்ற கருத்தில் அப்படி இல்லை, ஆனால் சர்ச்சால் குறையற்ற விதத்தில் செய்யப்படும் அல்லது கற்றுக்கொடுக்கப்படும் எதுவுமே வேத வசனத்திற்கு முரணாக இருக்க முடியாது.”
பரிசுத்த வேதாகமத்தை முழுமைக்கு முடிப்பது பாரம்பரியம் என்று உரிமைப் பாராட்டுவது தவறாகும். கத்தோலிக்கர் தங்களுடைய பைபிளில் 1 கொரிந்தியர் 4:6-ல் வாசிப்பதற்கு முரணாக இருக்கிறது. ஆனால் எரிநரகம், உத்தரிக்கும் ஸ்தலம் மற்றும் நரக வட்டம் போன்ற பைபிளில் இல்லாத சமய கோட்பாடுகள் கற்பிப்பது மட்டுமல்லாமல், இவை “வேதவசனத்திற்கு முரணாக இருப்பது”தானே கத்தோலிக்க சர்ச்சை ஒரு குழப்பத்தின் உச்சக் கட்டத்தில் வைக்கிறது.—எசேக்கியேல் 18:4, 20; ரோமர் 6:23.
பாரம்பரியத்தை பைபிளை கொண்டு அளவிடுங்கள்
இரண்டாவது வத்திக்கன் ஆலோசனைக்குழு கூட்டத்தில், “உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லோரும்” “தெய்வீக வேத வசனத்தை ஒழுங்காக படிக்க” வேண்டுமென்று கத்தோலிக்க சர்ச் வெளியரங்கமாக ஊக்கமளித்தது. மேலும் ஒரு கத்தோலிக்க அகராதி பின்வருமாறு விவரிக்கிறது: “சர்ச் வேத வசனத்திற்கு எதிர்மாறாக எந்த ஒரு கோட்பாட்டையும் கற்பிக்காது என்பதை பூரணமாக நம்புவதில் கத்தோலிக்கர் நியாயமாக இருக்கின்றனர்.” உண்மையான கத்தோலிக்கர், பைபிளை வாசித்து, அவர்கள் தானே தங்களுடைய கத்தோலிக்க கோட்பாடு ஏதாவது “வேதவசனத்திற்கு முரணாக இருக்கிறதா என்று பார்க்கும்”படியாக தங்கள் சர்ச் அளிக்கும் உற்சாகத்திற்கு செவிகொடுக்கும்படி நாங்கள் அழைக்கிறோம்.
பைபிள் அப்போஸ்தலத்துக்குரிய கத்தோலிக்க உலக கூட்டிணைப்பின் மூன்றாவது பொது மாநாட்டில் கொடுக்கப்பட்ட அழைப்புக்கு—கத்தோலிக்கர்கள் யாவரும் பைபிள் போதகர்களாக இருக்க வேண்டும் என்ற அழைப்புக்கு செவிகொடுக்க விரும்பினால் இப்படிச்செய்வது அதிக முக்கியம். இந்த அழைப்பும் அதில் உட்பட்டிருப்பதும் அடுத்து வரும் கட்டுரையில் சிந்திக்கப்படும். (w86 6/8)
[அடிக்குறிப்புகள்]
a Enchiridion Indulgentiarum, 1968, no. 50.
b La Parole de Dieu, Page 26.
[பக்கம் 18-ன் சிறு குறிப்பு]
“வேத வசனங்களுக்கு மேலாக, எழுதப்படாத கடவுளுடைய வார்த்தை ஒன்று” உண்டா?
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
“சர்ச்சால் குறையற்றவிதத்தில் செய்யப்படும் அல்லது கற்றுக் கொடுக்கப்படும் எதுவுமே வேத வசனத்திற்கு முரணாக இருக்க முடியாது” என்பது உண்மையா?
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
இரண்டாம் வத்திக்கான் ஆலோசனைக் குழு காரியங்களை மாற்றியது