உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 4/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • குழந்தை கொரில்லாப் போராளிகள்
  • ஸைகட் பாதுகாப்பு
  • புதைச்சாக்கடை இறங்குதுவார அடைப்புகள் காணமற்போதல்
  • புதிய பைபிள் மொழிபெயர்ப்புகள்
  • பெயர் பிரச்சினைகள்
  • ருவாண்டாவின் பெண்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்கள்
  • இயற்கையான துப்புரவு பொருட்கள்
  • தங்கள் தலைகளைப் பயன்படுத்துதல்
  • “எருசலேம் நோய்க் குறித்தொகுப்பு”
  • பெண்ணின் எதிர்காலம் என்ன?
    விழித்தெழு!—1998
  • பெண்ணுக்கும் அவள் செய்யும் வேலைக்கும் மதிப்பு
    விழித்தெழு!—1998
  • யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிற பெண்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • கடவுளுடைய பார்வையில் பெண்கள் மதிப்புக்குரியவர்கள்
    காவற்கோபுரம்: பெண்கள்மேல் கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 4/8 பக். 28-29

உலகை கவனித்தல்

குழந்தை கொரில்லாப் போராளிகள்

உலகெங்குமுள்ள கொரில்லாப் படைகளில் குழந்தைகள் சாதாரணமாகக் காணப்படுகின்றனர். இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் சொல்லுகிறபடி, எப்படிக் கொல்லுவது என்று குழந்தைகள் சீக்கிரமாகக் கற்றுக்கொள்கிறார்கள், மேலும் சரி மற்றும் தவறைப் பற்றிய அவர்களுடைய உணர்வானது, தாங்கள் கூட்டுறவு கொள்கிற போர்ப்படைத் தொகுதியால் ஏற்கப்பட வேண்டும் என்பதற்கான அவர்களது விருப்பத்தைவிட பலமானதாக இல்லை. “ருவாண்டாவிலும் மற்ற இடங்களிலும், மிக மோசமான அட்டூழியங்கள் சிலவற்றைச் செய்பவர்கள் குழந்தைகளே,” என்று ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி ஒருவர் கூறினார். “அவர்கள் ஒரு தொகுதியின் பாகமாக இருக்கவும் பாராட்டப்படவும் விரும்புகின்றனர்; வயதுவந்தவர்களைவிட அதிக தைரியமாக அல்லது முரட்டுத்தனமாக நடந்துகொள்வதன் மூலமாகவே அவர்கள் எதிர்பார்க்கும் சகாக்களின் அங்கீகாரம் அவர்களுக்குக் கிடைக்கக்கூடும்.” ஆப்பிரிக்க சண்டை ஒன்றில், எட்டு வயதுள்ள இளம் பையன்கள் பயிற்றுவிக்கப்பட்டு, தங்கள் சொந்த பெற்றோரைச் சுட்டுக்கொல்லுதல் மற்றும் அவர்களுடைய கழுத்துகளை வெட்டுதல் போன்ற அட்டூழியங்களைச் செய்யும்படி வற்புறுத்தப்பட்டனர். கடத்திச் செல்லப்பட்ட பெண் பிள்ளைகள் சமைக்கும்படியும், துப்புரவு செய்யும்படியும், ஆண்களுக்கு பாலியல் கிளர்ச்சியளிக்கும்படியும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். “தற்போது எத்தனை குழந்தைகள் போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய கணக்குகள், 24 சண்டைகளில், 50,000-லிருந்து 2,00,000 என்றளவுக்கு அதிகமான எண்ணிக்கை வரையாக இருக்கின்றன,” என நியூஸ்வீக் பத்திரிகை சொல்லுகிறது.

ஸைகட் பாதுகாப்பு

ஸைகட் வகையான என்ஸெஃபலார்டஸ் உட்டீ என்பதை உலகிலேயே அரிய செடியாக அநேக தாவரவியலாளர்கள் கருதுகின்றனர். சென்ற வருடம், பனைபோன்ற இந்த வெப்பமண்டல செடியில் ஒன்றை ஒரு மாதிரியாக லண்டனின் செல்ஸி மலர் கண்காட்சிக்கு அனுப்பும்படி தென் ஆப்பிரிக்கா தீர்மானித்தபோது, திருட்டுக்குத் தடையான நுண்ணுயிர் எதிர்ப்பு க்ரீம் பூசப்பட்ட மைக்ரோசிப் ஒன்றை அதன் தண்டில் முன்னெச்சரிக்கையாகத் திணித்து வைத்தார்கள். தென் ஆப்பிரிக்காவில் அனுப்பப்படும் எல்லா ஸைகட்டுகளும் தற்போது இவ்விதமாகவே பாதுகாப்பு செய்யப்படுகின்றன என்று நியூ ஸையன்டிஸ்ட் அறிக்கை செய்கிறது. திருடர்களைச் சமாளிப்பதற்காக, தென் ஆப்பிரிக்க பாதுகாப்பாளர்கள் தற்போது துணைக்கோள் வைத்து தடம் கண்டறியும் முறையைப் பயன்படுத்தி காட்டு ஸைகட்டுகளையும் அதேவிதமாகப் பாதுகாக்கிறார்கள்.

புதைச்சாக்கடை இறங்குதுவார அடைப்புகள் காணமற்போதல்

1994-ல், பீஜிங்கில் குடியிருப்பவர்களில் 200-க்கும் அதிகமானோர், திறந்திருக்கும் புதைச்சாக்கடை இறங்குதுவாரங்களுக்குள் விழுந்துவிட்டதாக எக்கனாமிக் டெய்லி செய்தித்தாள் அறிக்கை செய்தது. அதற்கான காரணம்? அந்த வருடத்தில் சீனத் தலைநகரின் தெருக்களிலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட புதைச்சாக்கடை இறங்குதுவார அடைப்புகளை திருடர்கள் திருடியிருந்தனர். சீனாவில் சுற்றி அலையும் மக்கள் எனப்படும் குடிபெயர்ந்து வந்திருப்பவர்களாலேயே பெரும்பாலானவை திருடப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டன. கடந்த பத்தாண்டு காலத்தில் நகரில் குடிபெயர்ந்து வருகிறவர்களின் எண்ணிக்கையின் வளர்ச்சியுடன்கூட இந்த அடைப்புகளின் திருட்டும் அதிகரித்து வந்திருக்கிறது. இந்த 60 கிலோகிராம் அடைப்புகள் 100 யூயன்-க்கும் ($12, ஐ.மா.) அதிகமான தொகைக்கு விற்கப்படலாம். காயப்பட்ட அந்நகரவாசிகளில் பாதசாரிகளும் சைக்கிளில் செல்பவர்களும் அடங்கினர்.

புதிய பைபிள் மொழிபெயர்ப்புகள்

“நவீன ஆங்கிலத்தில் அதிகப்படியான புதிய பைபிள் பதிப்புகள் புத்தகக்கடைகளைச் சென்றெட்டிக்கொண்டிருக்கின்றன,” என்பதாக ஐ.மா.செய்தியும் உலக அறிக்கையும் குறிப்பிடுகிறது. பிள்ளைகள், விளையாட்டு வீரர்கள், வயதானவர்கள், வீட்டிலிருக்கும் தாய்மார், தகப்பன்மார், இன்னும் மற்ற தொகுதியினருக்காக பைபிள்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, கறுப்பருக்கான பைபிள் விவரப்பதிவுகள் (Black Bible Chronicles) என்பது, “ஆப்பிரிக்க-அமெரிக்க பருவ வயதினருக்காக பைபிள் தொடர்களுக்கு உயிரோட்டம் அளிக்கும்படி கொச்சையையும் நாடக உரை வடிவத்தையும் எடுத்தாள்கிறது.” மற்றொன்று, புதிய ஏற்பாடும் சங்கீதமும்: ஒரு உள்ளடக்கமான மொழிபெயர்ப்பு (The New Testament and Psalms: An Inclusive Version), பால் வேறுபாடற்ற நடுநிலையான மொழியைக் கையாள முயற்சிக்கிறது. கடவுள், “தந்தை-தாய்,” என்று அழைக்கப்படுகிறார்; மனுஷகுமாரன் என்ற பதம் “ஒரு மனிதன்” என்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இடதுகைப் பழக்கமுள்ளவர்களைச் சங்கடப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, கடவுளுடைய வலது கரத்தை அவருடைய “பலத்த கை” என்பதாகவும் இனசம்பந்தப்பட்டதில் வேறுவிதமான அர்த்தங்களைக் கொடுக்காதபடிக்கு, இருள் இனிமேலும் தீமைக்குச் சமானமாய் பேசப்படுவதில்லை. மேலும் மூன்றாவது, புதிய சர்வதேச வாசகர் மொழிபெயர்ப்பு புதிய ஏற்பாடு (New International Reader’s Version), “2.9-கிரேட் வாசிப்பு அளவில் எழுதப்பட்ட முதல் பைபிள், கிடைக்கக்கூடியவற்றில் மிகக் குறைந்த கிரேட் அளவு வாசகர்களுக்கு எழுதப்பட்டது இதுவே,” என்று அதன் பிரசுரிப்பாளரால் விவரிக்கப்படுகிறது. அந்தக் கட்டுரை முடிவில் இவ்வாறு கூறுகிறது: “மொத்தத்தில், ஆங்கிலத்தில் மட்டும் இன்று 450-க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. புதிய பதிப்புகள் அனைத்தும் புத்தக நிலையங்களை சென்றடைந்துகொண்டிருப்பதுடன், பைபிள் எக்காலத்திலுமே மிக அதிகமாக விற்பனையாகும் நூல் என்ற தன் நிலையான ஸ்தானத்தை பெரும்பாலும் விரைவில் விட்டகலாது.”

பெயர் பிரச்சினைகள்

சீனா, 120 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்டிருந்து, பொதுவான குடும்பப் பெயர்கள் சுருங்கிவரும் பிரச்சினையை எதிர்ப்படுகிறது. ஆய்வாளர்களின்படி, கடந்த காலத்தில் சுமார் 12,000 பெயர்கள் என்பதுடன் ஒப்பிடுகையில் தற்போது 3,100 குடும்பப் பெயர்கள் மட்டுமே அங்கு பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 35 கோடி மக்கள்—ஐக்கிய மாகாணங்கள் மற்றும் ஜப்பானின் மொத்த மக்கள்தொகைக்கு ஒத்திருக்கும் எண்ணிக்கை—இந்த ஐந்து மிகப் பொதுவான குடும்பப் பெயர்களை உடையவர்களாய் இருக்கிறார்கள்: லி, வாங், ஜாங், லியூ, சென். மேலுமாக, ஒரே முதற்பெயர்களும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, டியான்ஜின்னில், 2,300-க்கும் அதிகமானோர் ஜாங் லி என்ற பெயரை உடையவர்களாய் இருந்து, ஒரே அட்சரங்களைக் கொண்டு எழுதுகிறார்கள்; இன்னும் அநேகர் ஒரே உச்சரிப்பைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அதை வித்தியாசப்பட்ட அட்சரங்களைக் கொண்டு எழுதுகிறார்கள். இந்தக் குழப்பத்தின் விளைவாக, பலர் தவறாகக் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர், வங்கி கணக்குப் பதிவுகள் தவறுதலாக வெறுமையாக்கப்பட்டிருக்கின்றன, மருத்துவமனைகளில் தவறான நபர்களின்மீது அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன. கொரிய குடியரசும் அதையொத்த ஒரு பிரச்சினையைப் பகிர்ந்துகொள்கிறது. அங்கிருக்கும் ஒவ்வொரு 5 பேருக்கும் 1 நபர் கிம் என்ற குடும்பப் பெயரிடப்பட்டிருக்கிறார் என்பதாக 1987-ன் சுற்றாய்வு ஒன்று காண்பித்தது. நெருங்கிய உறவுமுறை உள்ளவர்கள் திருமண இணைவுக்குள்ளாவதற்கு எதிராகப் பாதுகாப்பதற்காக ஒரே குடும்பப் பெயரை உடைய நபர்களுக்கிடையே திருமணங்கள் செய்யக்கூடாதென கட்டளையிடப்பட்டிருந்தது. இது, ஆயிரக்கணக்கான தம்பதிகள் தங்கள் திருமணங்களைப் பதிவுசெய்யாமல், ஆனால் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதில் விளைவடைந்தது; இதனால் அவர்கள், காப்பீடு இன்னும் மற்ற நன்மைகளையும் பெறுவதற்கு தகுதியற்றவர்களாகிறார்கள். என்றபோதிலும், அப்படிப்பட்ட தம்பதிகள் முதலில் அயல் நாட்டில் திருமணம் செய்துவிட்டால், அந்த ஒரே-குடும்பப்பெயர் திருமணங்கள் சட்டப்பூர்வமானதாகக் கருதப்படும் என்று அந்தத் தேசத்தின் உச்சநீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ருவாண்டாவின் பெண்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்கள்

1994-ல், ருவாண்டாவில் குறைந்தது 5,00,000 மக்களின் கொலைக்கு பெண்களும் ஆண்களும் பொறுப்பேற்க வேண்டும் என்பதாக லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிரிக்கா உரிமைகள் (Africa Rights) அமைப்பு குறிப்பிடுகிறது. “ஆயிரக்கணக்கான பெண்கள் மற்ற பெண்களால் கொல்லப்பட்டனர்,” என்று அவர்களுடைய அறிக்கை சொல்கிறது. “கொலைகளில் பெண்கள் எவ்வளவு மும்முரமான பங்கை வகித்தனர் என்பது முன் சம்பவித்திராத அளவில் இருந்தது. இது தற்செயலாக நடந்ததல்ல. இந்தப் படுகொலைக்காகத் திட்டம்வகித்தவர்கள் முடிந்தவரை அங்குள்ள மக்களில் எவ்வளவு பேரை உட்படுத்த முடியுமோ அத்தனை பேரையும்—ஆண்கள், பெண்கள், எட்டே வயதான இளம் பிள்ளைகளையும்கூட—உட்படுத்த முயன்றார்கள். இனப் படுகொலையின் இரத்தத்தால் ஒன்றிணைக்கப்பட்ட தீவிரவாதிகளாலான ஒரு நாட்டை உருவாக்க அவர்கள் உத்தேசித்தனர்.” அதில் உட்பட்டிருந்த அநேக பெண்கள் நம்பிக்கைக்குரிய பதவிகளில் இருந்தனர்—அமைச்சர்குழு அமைச்சர்கள், மண்டல ஆட்சியாளர்கள், கன்னியாஸ்திரீகள், ஆசிரியர்கள், தாதிகள். சிலர் வெட்டுக்கத்திகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்தி அந்தப் படுகொலையில் மும்முரமாகப் பங்கெடுத்தபோது, மற்றவர்கள் கொல்லும் ஆண்களை ஊக்குவித்தல், வீடுகளுக்கும் மருத்துவமனைக்கும் அவர்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்தல், வீடுகளைக் கொள்ளையடித்து இறந்தவர்களின் உடைகளையும் உடைமைகளையும் எடுத்தல் ஆகியவற்றைச் செய்வதன்மூலம் ஆதரிக்கும் பாகத்தை வகித்தனர்.

இயற்கையான துப்புரவு பொருட்கள்

எண்ணெயால் மாசுபடுத்தப்பட்ட பாலைவன மண்ணைத் துப்புரவு செய்வதற்கான வியக்கத்தக்க திறமையை சில பூக்கும் செடிகள் வெளிக்காட்டுவதாக தி டைம்ஸ் ஆஃப் லண்டன் அறிக்கை செய்கிறது. எடையில் மண்ணில் 10 சதவீதத்தைவிட குறைவானதாக எண்ணெய் இருக்கும் இடங்களில், இந்தத் தாவரங்கள் செழித்தோங்குகின்றன என்றும் அவற்றின் வேர்கள் முழுமையாக சுத்தமாக இருக்கின்றன என்றும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அதற்கான காரணம்? அந்தத் தாவரங்களின் வேர்களைச் சுற்றி வாழ்கிற லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் எண்ணெயை உட்கொண்டு, அதை கேடுவிளைவிக்காத பொருட்களாக சிதைவுற செய்கின்றன. தாவர குடும்பங்களில் மிகப் பெரியவற்றில் ஒன்றாகிய காம்பஸிட்டே குடும்பத்தைச் சேர்ந்தவை இந்தத் தாவரங்கள்; இவை டெய்ஸிகளையும், சாமந்திகளையும், அநேக களைகளையும் உட்படுத்துகின்றன. குவைத்தில் பாலைவன துப்புரவாக்கலைத் துரிதப்படுத்துவதற்காக இவற்றை நடும்படி அறிவியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர். ஈராக்குடன் நடந்த போருக்கு நான்கு வருடங்களுக்குப் பின், சுமார் 50 சதுர கிலோமீட்டர் பாலைவனம் இன்னும் மாசுபடுத்தப்பட்டதாகவே கிடக்கிறது.

தங்கள் தலைகளைப் பயன்படுத்துதல்

“ஆப்பிரிக்க பெண்கள் கனமான தண்ணீர் கூஜாக்களை அல்லது உணவு பானைகளை எடுத்துக்கொண்டு ஒன்றுமே எடுத்துச்செல்லாததுபோல் மைல்கணக்கில் நடந்து செல்கிறார்கள்,” என்று டிஸ்கவர் பத்திரிகை சொல்லுகிறது. “கூடுதலான எவ்வித சக்தியையும் பயன்படுத்தாமல் அந்தப் பெண்கள் ஏராளமான கனத்தை எடுத்துச்செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கின்றனர்.” கென்யாவைச் சேர்ந்த சில பெண்களால் தங்கள் எடையில் 20 சதவீத கனத்தைக் கூடுதலான முயற்சியின்றி எடுத்துச்செல்ல முடியும். அவர்கள் எப்படி அதைச் செய்கிறார்கள்? “சாமான்களை வைத்து முதுகில் கனமான பைகளைத் தூக்கிச் செல்லும் மக்களைவிட அல்லது அவற்றைத் தூக்கிச்செல்ல தங்கள் தலைகளைப் பயிற்றுவிக்காத மக்களைவிட திறம்பட்ட விதத்தில் தங்கள் பாரங்களை” எடுத்துச் செல்வதன்மூலமே என்று நியூ ஸையன்டிஸ்ட் பதிலளிக்கிறது. “பெண்களின் ஊசற்குண்டு போன்ற அசைவிலேயே அதன் இரகசியம் இருக்கிறது என்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.” நாம் நடக்கும்போது, அடுத்து அடியெடுப்பிற்கு கொஞ்சம் சக்தியைக் கொண்டுசெல்கிற ஊசலாடும் ஒரு ஊசற்குண்டைப்போல் நாம் இருக்கிறோம். பாரம் கனமடைய கனமடைய ஐரோப்பியர்களுக்கு இந்தச் சக்தி-மாற்றத்தின் திறமை குறைகிறது. ஆனால் தங்கள் தலைகளில் பாரங்களைக் கொண்டுசெல்லும் ஆப்பிரிக்க பெண்களைப் பொறுத்தவரையில், அந்தத் திறமை உண்மையில் கூடுகிறது; அதனால் அவர்களுடைய தசைகள் கூடுதலான வேலை செய்ய வேண்டியதில்லை. என்றபோதிலும், இந்த உத்தியை முழுமையாகப் பயில வருடங்கள் எடுக்கும்.

“எருசலேம் நோய்க் குறித்தொகுப்பு”

அது என்னவென்றால், “அங்கு வருகிற சுற்றுலா பயணிகளை, அந்த நகரின் ஆவிக்குரிய பலமான உள்ளுணர்ச்சி தூண்டுதல்களின் காரணமாக, தாங்கள்தான் அந்த மீட்பர் என்றோ, அல்லது வேறு ஏதாவதொரு பைபிள் பாத்திரம் என்றோ, அல்லது தங்களுக்கு ஒரு விசேஷித்த செய்தி அல்லது கட்டளை கடவுளிடமிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்றோ உறுதியாக நம்பவைக்கும் உணர்ச்சி பாதிப்பு,” என்பதாக டைம் பத்திரிகை சொல்லுகிறது. “அநேகம் பேர் மனம்சார்ந்த பிரச்சினைகளின் ஒரு வரலாற்றையே கொண்டிருக்கின்றனர்.” தாடிவைத்த இத்தாலியர் ஒருவர், தன்னை இயேசு என்பதாக உரிமைப் பாராட்டிக்கொண்டு, அங்கி தரித்தவராய் பெத்லகேமுக்கு அருகிலுள்ள மலைகளில் சுற்றித்திரிபவராய் காணப்பட்டார். நிர்வாணமாக இருந்து, கத்தி வைத்திருந்து, பழைய நகர பகுதியினூடே ஓடிக்கொண்டிருக்கும் ஒருவர், குருடர்களைக் குணப்படுத்தும் வேலை தனக்கிருப்பதாக சொல்லுகிறார். கனடாவைச் சேர்ந்த திடகாத்திரமான ஒருவர், தான் சிம்சோன் என்பதாகக் கூறி, தானிருக்கும் மருத்துவ வார்டின் ஜன்னலின் உலோக பின்னல் வேலைப்பாட்டை பிளந்தெறிந்து தப்பிச்செல்வதன் மூலம் அதை “நிரூபிக்கிறார்.” இந்த நோய்க் குறித்தொகுப்பால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமாக எருசலேமின் க்ஃபார் ஷாவ்ல் உளநோய் மருத்துவமனைக்குக் கொண்டுபோகப்படுகிறார்கள்—அவர்களைக் குணப்படுத்துவதற்காக அல்ல, ஆனால் அவர்கள் சிகிச்சைக்காக வீடுதிரும்புவதற்கு ஏற்றவகையில் அவர்களை அமைதிப்படுத்துவதற்காக. பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவிலிருந்தும் ஐக்கிய மாகாணங்களிலிருந்தும் ஒவ்வொரு வருடமும் அந்த மருத்துவமனைக்கு சுமார் 50 நோயாளிகள் வருகிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்